17 July 2007

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - விழா

கந்தர்வன் பெயரில் ஒரு பரிசு அல்லது அங்கீகாரம் என்றதும், நமக்கு ஒரு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதுதான் எனக்கும் ஏற்பட்டது. 07-07-07 அன்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில், கந்தர்வன் பெயரில் நடத்திய சிறுகதை போட்டியில் எனது கதை "கருப்பய்யா" பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடியேனையும் அழைத்திருந்தார்கள். கதை இங்கே!


கந்தர்வன் @ நாகலிங்கம், அரசு ஊழியர். கம்யூனிச சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர். கதை கவிதை எழுதி, மக்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். முக்கியமாக புது எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தி, முன்னே கொண்டு வருபவர். எந்த விழா நடந்தாலும், அவர் மேடையில் வரமாட்டார். அருகிலுள்ள வேப்பமரத்து நிழலில், இளைஞர்கள் புடை சூழ, பேசிக்கொண்டிருப்பார்.
அவரது பெயரில் நடந்த இந்த விழாவின் ஒரே ஆறுதல், அவரது குடும்பத்தார் அதில் பங்கு கொண்டு, சிறுகதைகளில் முதல் மூன்று கதைகளுக்கு உண்டான பரிசுத் தொகையை அவர்களே தந்ததுதான். மற்றபடி, கந்தர்வன் அங்கு இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்ய மாட்டாரோ, அவை அமோக மாக நடந்தது தான் மனதுக்கு வருத்தம் தருவதாக அமைந்திருந்தது.


1) நேரம் கடைபிடிக்காமை. : கருத்தரங்கம் காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை என்று அறிவித்துவிட்டு, பகல் 12.40 மணிக்குத்தான் தொடங்கியது. மாலை கிட்டத்தட்ட 5.00 மணிவரை இழுத்துக்கொண்டு போனது.


2) மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் பேசவேண்டியதுதான் நிகழ்ச்சியில் முக்கிய முதல் நிகழ்வு. எல்லாரையும் உட்கார வைக்கவே, இழுத்தடித்து, கடைசியில் அவரை பேச வைத்து, மற்றவர்கள் பேசுவதையும், கம்யூனிச சிந்தனை கொண்ட பாடகர்கள் பாடுவதையும் நிர்பந்தத்தால் கேட்க வேண்டியதையும் என்ன என்று சொல்வது?


3) அதேபோல், மாலை கலை நிகழ்ச்சி, சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர்களை கவுரவப் படுத்தவேண்டிய நிகழ்ச்சி. தெரியாத்தனமாக, ஜெயகாந்தனும், கவிஞர் நா. முத்துகுமார் இன்ன பிற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல மணி நேரமாக காத்திருந்து, வேண்டாத கலை (கொலை) நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டிய துற்பாக்கிய சாலிகள் ஆயினர்.


கடைசியில் நன்கு பேசி இருக்க வேண்டிய ஜெயகாந்தன் ரத்தின சுருக்கமாக் பேசிவிட்டு போய்விட்டார். நா.முத்துக் குமார், தனது கவியுலக ஆசானாக கந்தர்வனை போற்றி வணங்குவது, அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சினிலேயே தெரிந்தது. அதனால், கால தாமதமான நிகழ்வுகளை பொறுத்து தனது அஞ்சலியை தெரிவித்துவிட்டு, அன்னாரது குடும்பத்தாரின் அருகிலேயே அமர்ந்திருந்து பேசிவிட்டுப் போனார்.


அந்த சிறுகதைப் போட்டியின் கதைகளுள் ஒரு கதையாக எனது கதை தேர்வானதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால், கேட்பாரற்று அங்கே சுற்றி திரிந்திருந்து, கடைசியில் ஜெயகாந்தன் கைகளிலோ, அல்லது வேறு விதமாகவோ அங்கீகாரம் கிடைக்கப்படாமல், பின்னிரவு, 12.30 மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும், அவமானமாவது செய்யாமலாவது இருக்கலாமில்லையா எனக்கேட்டு வற்புறுத்தி வெளியான சிறுகதை புத்தகத்தை கேட்டு வாங்கி வந்தேன்.


கந்தர்வன் எனும் பேருக்குள்ள மரியாதை, புது எழுத்தாளர்களை அவர் எப்படி உற்சாகப் படுத்துவார் எனும் சிந்தனை என்னுள் மீண்டும் எழுவதனாலேயே, நான் எனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை மனதுள் பூட்டி வைத்து, வெளியேறினேன்.


வருகையில், வாசலருகே உள்ள வேப்பமரத்துனருகே யாரோ அழைப்பது போலிருந்தது. போனேன். என்ன ஆச்சரியம்! கந்தர்வன் தான்! கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தேன். சந்தேகமேயில்லை அவர்தான்! "என்ன நீ சொன்னமாதிரி நான் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்க இந்த மரத்தடியில் தானே இருப்பேன்.


மேடையில் எனக்கென்ன வேலை? என் பேரைச்சொல்லி அவர்கள் காலம் தாழ்த்தி நடத்து கூத்து மனதுக்கு வேதனையை தருகிறது. இங்குதான், ஜெயகாந்தனையும், அன்பன் முத்துகுமாரையும் சந்தித்து, "இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த முறை எல்லாம் நேரத்தில் நடக்கும்" என்று கூர, அவர்களும், "கந்தர்வா, உன் காந்த சக்திக்கு நாங்கள் இழுபட்டே இங்கு வந்தோம். இனியும் வருவோம்" எனச் சொல்லி சென்றனர். நான் எதிர்ப்பார்த்த கதையின் ஆசிரியன் நீ. இளைஞன் நீ. மனதில் எதையும் கொள்ளவேண்டாம்," என்றார்!


"அட, நான் புதியவன். உங்கள் பெயர் கொண்ட மோதிரக்கை குட்டு பெற்றுவிட்டேன். இனி நான் எழுத்துப்பணியை என்றும் தொடர்வேன். கந்தர்வனுக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். என்பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கதை புத்தகத்தின் பெயர் "எச்சங்கள்"; யார் எச்சம்? மிச்சம்? கந்தர்வனுடையது. எனவே, நான் எந்த பிழைகளையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், நான் உண்மையையே சுவாசிக்கும் ஒரு பத்திரிகையாளன், கதாசிரியன். எனவேதான், இதை பதிவு செய்யாமல் எனது மனம் ஆறாது," என்றேன். அவரும், " அப்படியே நான் எதிர்பார்க்கும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமுள்ள இளைஞனாக இருக்கிறாய், மகிழ்ச்சி! மனதுக்கு பட்டதை பட்டென சொல்லும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது. மேடையில் ஏறிச் சொல்லாமல், மெதுவாக முத்து நிலவனிடம் நீ போய் சொன்னதையும் நான் பார்த்தேன். அதுதான் அழகு. மீண்டும் சந்திப்போம்," என்றார். இனி வரும் காலங்களில் அந்த வேப்பமர சந்திப்பு நிகழும் நாளை எதிர்நோக்கி மன நிறைவோடு நான் புதுக் கோட்டையை விட்டு கிளம்பினேன்.