05 October 2007

இதுதாண்டா பாக்டீரியா!

பூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா!

இந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க!) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.

தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்!

அதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன! எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது!

லிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், "நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை! நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன," என்று ஆச்சரியப் படுகிறார்!

சுரங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன! நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.

அதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்!

அதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது! இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, "என் வழித் தனிவழி" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது!

இவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை! எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது!