காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.
முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.
காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.