வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
02 March 2008
சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி...
என்னை தள்ளிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தவர்கள் கணேஷ். வசந்த்! சுஜாதாவின் ஆதர்ஸ புருஷர்கள், கதை நாயகர்கள்! வசந்தை இதுபோல் சிரிப்பு கலைந்து நான் பார்ப்பது இதுவே முதல் முறை! கணேஷின் சீரியஸ் முகம், முதல் முறை வெளிரிப் போயிருந்தது! இனி இவர்கள் ப்ரதாபத்தை யார் அரங்கேற்றுவார்கள்?
ஆம், அங்கு நடந்த நிகழ்ச்சி, சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி செட்டியார், பார்த்திபன், இயக்குநர் வசந்த், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி!
எல்லார் பேசியதிலிருந்து சில சாராம்சம்:
சத்யராஜும், பத்திரிகையாளர் சுதாங்கனும், பெருமை பட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயற்பெயரும் ரங்கராஜன் என்பதால்! தன் மனைவியின் பெயரில் அவர் பிற்காலத்தில் தான் எழுதினாராம். முதலில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதமும், கணையாழியும்தான் கதைகள் பிரசுரித்துள்ளன!
திரு. கஸ்தூரி ரங்கனுடன் இணைந்து அவர் நடத்திய கணையாழி இதழில், சுஜாதாவின் 'கடைசி பக்கம்' எத்தனை எத்தனை பேருக்கு தமிழ் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ரா.கி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, எஸ்.ராம்கிருஷ்னன், மதன், சுதாங்கன், இரா.முருகன், போன்றோரின் சொற்களில் வெளிப்பட்டன!
அவர் தம்பி பேசும்போது, சுஜாதா தமிழ் சொற்களை கணினிமயமாக்கியதில் சுஜாதாவின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். பேடண்ட் வாங்கியிருந்தால், அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரார் ஆகியிருப்பார், ஆனால் தமிழை நவீன மயமாக்குதலில் இருந்த ஆர்வத்திலும், இன்றைய இளைஞர்களுக்கு தமிழின் ஆழ அகலதை சுட்டிக் காட்ட அவர் கணினி தமிழைத் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.
அவரது தங்கையார் பேசுகையில், சுஜாதாவுக்கு புல்புல்தாரா, மாண்டொலின் அருமையாக வாசிக்கவும், திறம்பட ஓவியம் வரையத் தெரியும் என்றும், எல்லாரும் அவர் ஒரு இசைக்கலைஞராகவோ அல்லது ஒரு ஓவியனாகவோ வருவார் என எண்ணியிருக்கையில், விஞ்ஞானியாகவும் (பெங்களூரூ பாரத் எலக்ட்ரிகலில் உயரதிகாரி - மின் ஓட்டுப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த குழுவின் தலைவர்), கவிஞராகவும் (சுதாங்கன் வாசித்துக் காட்டிய வேலை செய்யும் சிறுவனைப்பார்த்து சுஜாதா எழுதிய கவிதை கண்களில் நீர் வரவழைத்தது!), வசன கவியாகவும் (கவிஞர் தமிழச்சி வாசித்துக் காட்டினார்), நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் (எல்லாரும் இதை குறிப்பிட்டு பல மேற்கோள் காட்டினர்), எல்லாரும் அறிந்த கதை, கட்டுரை, நாவல் ஆசிரியராகவும் எப்படி ஆனார்," என அதிசயித்தார். என்று அவர் வீட்டுக்குச் சென்றாலும், சுற்றி பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருப்பதால், இவர் உள்ளே செல்ல தயங்குகிறார் என்றால், நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தமக்கையை மட்டும் பார்த்தவாரே நலம் விசாரித்து, இருக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்!
மதன் மற்றும் கமலஹாசன் பேசுகையில் எழுத்தாளர்களையும், திரைக் கதை எழுத்தாளர்களையும் சில தயாரிப்பாளர்கள் எத்தணை மோசமாக நடத்துவார்கள், பணம் பட்டுவாடா செய்யாமல், என்பதையும் சற்று காட்டமகவே சுட்டிக் காட்டினார்கள் !
பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், கள்ளழகர் மலையில்தான் ஆண்டாளின் ஜீபசமாதியிருக்கிறது என்பதை மதுரைக்காரரான தமக்கு சுஜாதாவுடன் அக்கோவிலுக்கு செல்லுகையில்தான் தெரிந்தது என்று, செய்வன திருந்தச் செய்யும் பண்பாளர்களில் சுதாதாவை மிஞ்ச ஆள்கிடையாது என்று அடித்துச் சொன்னார்.
ஆம், கமல், பார்த்திபன், பேசமுடியாமல் கண்ணீர் விட்ட பாலு மகேந்திரா, சிவசங்கரி, வைரமுத்து, சுஜாதாவின் நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிவரும் பூர்ணம் விஸ்வநாதனின் நாடகக் குழுவினர், திருப்பூர் கிருஷ்ணன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர் நடராஜன் போன்றோர் பேசுகையில்தான் சுஜாதா எனும் மனிதன், கோபமே காட்டாத மனிதன், பல்கலை வித்தகன்(multi tasking), இசைக் கலைஞன் சுஜாதா, என்கின்ற அவரது பல புதிய பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன!
பத்து வருடங்களாக அவரை நோய்களினூடே, காலனின் வரவைத் தள்ளி வைத்து தமிழ் சேவை செய்ய அவரது மனைவியார் சுஜாதா எத்தனை மெனக்கட்டிருக்கிறார் என்பதும், பெற்றோரை தனியே விட்டு வெளிநாடுகளில் வாழ் இளைஞர்களினால் அவருக்கு இருந்த மனபாரமும், பற்பல கலைஞர்களுக்கு அவர் ஒரு சுமைதாங்கிக் கல்லாகவும் (தங்கர் பச்சான் பேசியதிலிருந்து) இருந்த செய்தியும் புதிது!
இனி ஒரு சுஜாதா வருவாரா? கலையுலகத்து விருதுகளான ஏகப்பட்ட "பத்ம.., சாகித்ய.." விருதுகளை இவருக்கு தந்து, நல்ல வேளை இவர் தரத்தை அரசாங்கம் ஜால்ரா அடிக்கும் மற்றும் பலராக்கிவிடவில்லை! சிவாஜிக்கு தேசிய விருதும், சுஜாதாவுக்கு சாகித்ய, பத்ம.. விருதுகளைவிட, அரங்கமே நிறைந்த மக்கள் கூட்டம், இந்த அஞ்சலி நாள் நிகழ்வே,பெரியதொரு விருது.
ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் வண்ண ஓவியம் அவரது மகன்களிடம் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் தீர்க்கமான பார்வையும், அவரது பிரத்யேகமான முன் முடிக் கற்றையும் என் கண்களில் பிம்பமாக இன்னும் நிலைத்து நிற்கிறது!
வெளியே வரும் போது யாரோ தோளைத் தொட்டனர்! திரும்பிப் பார்த்தால், கணேஷ¤ம், வசந்த்தும்! "ஸாரி, ப்ரதர், அவசரத்துல கொஞ்சம் இடிச்சுட்டு போய்ட்டேன்.." என ஆரம்பிக்க, "பரவாயில்லை" என நட்புரிமையோடு கைகுலுக்கி வந்தேன். இந்தத் காலத்தில் யார் இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அதும் 4 மணி நேரம் கழித்து? என்ன இருந்தாலும் சுஜாதாவின் வளர்ப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான்!
05 October 2007
இதுதாண்டா பாக்டீரியா!
பூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா!
இந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க!) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.
தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்!
அதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன! எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது!
லிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், "நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை! நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன," என்று ஆச்சரியப் படுகிறார்!
சுரங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன! நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.
அதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்!
அதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது! இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, "என் வழித் தனிவழி" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது!
இவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை! எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது!
26 September 2007
கணபதி பப்பா, மோரியா!!!
விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.
கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம்
வெளியூருக்கு அனுப்புவது போல்!பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு
அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா,
லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத்
தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக்
கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?
04 September 2007
ஆத்ம விசாரம்!
பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.
சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?
அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!
எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!
நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.
மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!
மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!
இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?
(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.
மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!
10 August 2007
உழவாரப் பணி-Heritage Wardens!
கடந்த June 16 ம் நாள், எங்கள் இணையதளமான conserveheritage.org யின் திறப்பு விழாவும், இணையத்தின் மூலம் கல்வெட்டுப் படிப்பை நடத்தத் துவக்க விழாவும், ஆளுநர் மாளிகையில், திரு. சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக தகவல்கள் உள்ளன. எங்கே அவை? யார் அவற்றை கண்டுபிடித்து சொல்வார்கள்? யாரிடம் சொல்வார்கள்? சொல்லி என்ன பயன்? ஒரே தொகுப்பாக, வணமாக, கோவில்கள் தொகுப்பு மஞ்சரியாக, இணையதளத்தில் இந்த செய்தி உலகம் முழுதும் போனால்தான், மண்ணின் மைந்தர்கள் பலர், அவற்றை சீர் செய்ய பொருளுதவியோடும், அருளுதவியோடும் ஓடிவருவர். அரசாங்கத்துக்கும், பொது மக்களுக்கும் இந்த பிரச்னையின் ஆழம் தெரியும். அதை நோக்கித்தான் இந்த முதல் படி.
மாணிக்கவாசகர் ஆரம்பித்து, ஆண்டாண்டு காலமாய் இன்றும் தொடரும் கோவில்களை சுத்தம் செய்துவரும் மாபெரும் பணியை ஆற்றிவரும் அன்பார்ந்த அடியார் நீங்கள். உங்களுடன், அடியார்க்கு அடியாராய் இன்று அறிவியலும், தொழில்நுட்பமும், வரலாறும் கைகோர்க்கக் காத்திருக்கின்றன! ஆம், REACH என்பதற்கு போய்ச் சேருதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
எங்கெல்லாம், பாழடைந்த கோவில்கள் உள்ளன எனும் தகவல் நம்மிடம், ஏன் அரசிடமும் இல்லை. அதேபோல், சீர்செய்யும் நல்லெண்ணம் இருந்தாலும், தவறான அணுகுமுறையால், பழங்கலைகள், ஆகம விஞ்ஞான வழிமுறைகள், செலவுகள் ஆகியவை நிலையில்லாமல் போய்விடுகின்றன. உழவாரப்பணி செய்பவர்களுக்குத் தான் தெரியும், எங்கெங்கே, பாழடைந்த கோவில்கள் உள்ளது என்று!
REACHன் தலைவர் தொல்பொருள் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார்.
கேரள அரசின் முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராய் இருந்தவரும், இந்திய தொல்பொருள் துறையில் தலைவராக இருந்தபோது, சமீபத்து சுனாமித் தாக்குதலில், மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள புலிக்குகைக்கு அருகே வெளிவந்த சங்க காலத்து முருகன் கோவிலை மீட்டவரும், 4000 வருடங்களுக்கு முன்பே தமிழ் பிராம்மி எழுத்துக்கள் இருந்ததை திச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியால் கண்டெடுத்தவரும், தஞ்சை கோவில் கோபுரத்தினுள்ளே இருந்த சோழர் கால fresco ஓவியங்களையும், அதன் மேல் இருந்த நாயக்கர் கால ஓவியங்களையும் ஒரு சேர மீட்டு, வெளியே பிரகாரத்தில் நிரந்தரமாக அவற்றை போலவே அதே அளவில் ஒரு கண்காட்சியையும் ஏற்படுத்தித் தந்தவரும், சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவரும், இன்னும் எத்தனையோ தொல்பொருளாராய்ச்சிகளை செய்தவரும், செய்து வருபவர் REACH foundationனின் தலைவர் டாக்டர்.திரு. தியாக.சத்தியமூர்த்தி.
விழாவின் சிறப்பு விருந்தினரான சுற்றுலாத் துறை செயலர் திரு. ஸ்ரீதரன் IAS அவர்கள்,
"கடவுளின் சொந்த நாடு என்று கேரளத்தை மட்டுமின்றி, மொத்த நாட்டையே சொல்லலாம், அத்தனை கோவில்கள் உள்ளவை நம் நாடு," என்று பேசினார்.விழாவை தொகுத்து வழங்கிய சந்திரசேகரன் நல்ல தமிழில் பேசினார். மேற்கோள்கள் காட்டி, பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரீச் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. சுந்தர் பரத்வாஜ் நன்றி கூர, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
17 July 2007
கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - விழா
கந்தர்வன் பெயரில் ஒரு பரிசு அல்லது அங்கீகாரம் என்றதும், நமக்கு ஒரு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதுதான் எனக்கும் ஏற்பட்டது. 07-07-07 அன்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில், கந்தர்வன் பெயரில் நடத்திய சிறுகதை போட்டியில் எனது கதை "கருப்பய்யா" பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடியேனையும் அழைத்திருந்தார்கள். கதை இங்கே!
கந்தர்வன் @ நாகலிங்கம், அரசு ஊழியர். கம்யூனிச சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர். கதை கவிதை எழுதி, மக்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். முக்கியமாக புது எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தி, முன்னே கொண்டு வருபவர். எந்த விழா நடந்தாலும், அவர் மேடையில் வரமாட்டார். அருகிலுள்ள வேப்பமரத்து நிழலில், இளைஞர்கள் புடை சூழ, பேசிக்கொண்டிருப்பார்.
அவரது பெயரில் நடந்த இந்த விழாவின் ஒரே ஆறுதல், அவரது குடும்பத்தார் அதில் பங்கு கொண்டு, சிறுகதைகளில் முதல் மூன்று கதைகளுக்கு உண்டான பரிசுத் தொகையை அவர்களே தந்ததுதான். மற்றபடி, கந்தர்வன் அங்கு இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்ய மாட்டாரோ, அவை அமோக மாக நடந்தது தான் மனதுக்கு வருத்தம் தருவதாக அமைந்திருந்தது.
1) நேரம் கடைபிடிக்காமை. : கருத்தரங்கம் காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை என்று அறிவித்துவிட்டு, பகல் 12.40 மணிக்குத்தான் தொடங்கியது. மாலை கிட்டத்தட்ட 5.00 மணிவரை இழுத்துக்கொண்டு போனது.
2) மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் பேசவேண்டியதுதான் நிகழ்ச்சியில் முக்கிய முதல் நிகழ்வு. எல்லாரையும் உட்கார வைக்கவே, இழுத்தடித்து, கடைசியில் அவரை பேச வைத்து, மற்றவர்கள் பேசுவதையும், கம்யூனிச சிந்தனை கொண்ட பாடகர்கள் பாடுவதையும் நிர்பந்தத்தால் கேட்க வேண்டியதையும் என்ன என்று சொல்வது?
3) அதேபோல், மாலை கலை நிகழ்ச்சி, சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர்களை கவுரவப் படுத்தவேண்டிய நிகழ்ச்சி. தெரியாத்தனமாக, ஜெயகாந்தனும், கவிஞர் நா. முத்துகுமார் இன்ன பிற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல மணி நேரமாக காத்திருந்து, வேண்டாத கலை (கொலை) நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டிய துற்பாக்கிய சாலிகள் ஆயினர்.
கடைசியில் நன்கு பேசி இருக்க வேண்டிய ஜெயகாந்தன் ரத்தின சுருக்கமாக் பேசிவிட்டு போய்விட்டார். நா.முத்துக் குமார், தனது கவியுலக ஆசானாக கந்தர்வனை போற்றி வணங்குவது, அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சினிலேயே தெரிந்தது. அதனால், கால தாமதமான நிகழ்வுகளை பொறுத்து தனது அஞ்சலியை தெரிவித்துவிட்டு, அன்னாரது குடும்பத்தாரின் அருகிலேயே அமர்ந்திருந்து பேசிவிட்டுப் போனார்.
அந்த சிறுகதைப் போட்டியின் கதைகளுள் ஒரு கதையாக எனது கதை தேர்வானதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால், கேட்பாரற்று அங்கே சுற்றி திரிந்திருந்து, கடைசியில் ஜெயகாந்தன் கைகளிலோ, அல்லது வேறு விதமாகவோ அங்கீகாரம் கிடைக்கப்படாமல், பின்னிரவு, 12.30 மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும், அவமானமாவது செய்யாமலாவது இருக்கலாமில்லையா எனக்கேட்டு வற்புறுத்தி வெளியான சிறுகதை புத்தகத்தை கேட்டு வாங்கி வந்தேன்.
கந்தர்வன் எனும் பேருக்குள்ள மரியாதை, புது எழுத்தாளர்களை அவர் எப்படி உற்சாகப் படுத்துவார் எனும் சிந்தனை என்னுள் மீண்டும் எழுவதனாலேயே, நான் எனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை மனதுள் பூட்டி வைத்து, வெளியேறினேன்.
வருகையில், வாசலருகே உள்ள வேப்பமரத்துனருகே யாரோ அழைப்பது போலிருந்தது. போனேன். என்ன ஆச்சரியம்! கந்தர்வன் தான்! கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தேன். சந்தேகமேயில்லை அவர்தான்! "என்ன நீ சொன்னமாதிரி நான் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்க இந்த மரத்தடியில் தானே இருப்பேன்.
மேடையில் எனக்கென்ன வேலை? என் பேரைச்சொல்லி அவர்கள் காலம் தாழ்த்தி நடத்து கூத்து மனதுக்கு வேதனையை தருகிறது. இங்குதான், ஜெயகாந்தனையும், அன்பன் முத்துகுமாரையும் சந்தித்து, "இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த முறை எல்லாம் நேரத்தில் நடக்கும்" என்று கூர, அவர்களும், "கந்தர்வா, உன் காந்த சக்திக்கு நாங்கள் இழுபட்டே இங்கு வந்தோம். இனியும் வருவோம்" எனச் சொல்லி சென்றனர். நான் எதிர்ப்பார்த்த கதையின் ஆசிரியன் நீ. இளைஞன் நீ. மனதில் எதையும் கொள்ளவேண்டாம்," என்றார்!
"அட, நான் புதியவன். உங்கள் பெயர் கொண்ட மோதிரக்கை குட்டு பெற்றுவிட்டேன். இனி நான் எழுத்துப்பணியை என்றும் தொடர்வேன். கந்தர்வனுக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். என்பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கதை புத்தகத்தின் பெயர் "எச்சங்கள்"; யார் எச்சம்? மிச்சம்? கந்தர்வனுடையது. எனவே, நான் எந்த பிழைகளையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், நான் உண்மையையே சுவாசிக்கும் ஒரு பத்திரிகையாளன், கதாசிரியன். எனவேதான், இதை பதிவு செய்யாமல் எனது மனம் ஆறாது," என்றேன். அவரும், " அப்படியே நான் எதிர்பார்க்கும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமுள்ள இளைஞனாக இருக்கிறாய், மகிழ்ச்சி! மனதுக்கு பட்டதை பட்டென சொல்லும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது. மேடையில் ஏறிச் சொல்லாமல், மெதுவாக முத்து நிலவனிடம் நீ போய் சொன்னதையும் நான் பார்த்தேன். அதுதான் அழகு. மீண்டும் சந்திப்போம்," என்றார். இனி வரும் காலங்களில் அந்த வேப்பமர சந்திப்பு நிகழும் நாளை எதிர்நோக்கி மன நிறைவோடு நான் புதுக் கோட்டையை விட்டு கிளம்பினேன்.
05 April 2007
விளம்பர படம் -முதல் முயற்சி!
திரைப்படம் எடுத்தலில் என்னுடைய கன்னி முயற்சி. தலைப்பு - மரபு சார் இந்தியா (Generic India)
கொடுத்த நேரம்: 1 நிமிடம். கோவிலுக்கு வரும் பெண் குழந்தை தானாக, நாட்டிய சிற்பங்களைக் கண்டு, ஆட முயல்கிறாள். அதிசயங்கள் நிறைந்த நம் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறு முயற்சி. பரதநாட்டியம், நமது பெண்கள் தானாக கற்றுக் கொள்தல், கோவில் (கதை தளம்) மற்றும் சிற்பங்கள் என இந்த படப்பிடிப்பில் யாவும் பாரம்பரியமிக்கவையே!