மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது! காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர். முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.
காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்! விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.
தமிழ் மரபுக் கட்டளை நடத்தும் மரபு விக்கியில் 2ஆவது, இந்த வலைத் தளத்தில் 7ஆவது கட்டுரை, இந்த போனி அமரேஸ்வரர் கோவில், விசாகபட்டிணம் அருகேயுள்ள அழகிய கோவில் பற்றிய கட்டுரை.
புதுவை அரிக்கமேடு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுக் களம். மத்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து நிற்கும் அரிக்கமேடு ஆய்வுக் களம் இன்று அழகிய மாந்தோப்பாக வேலியிட்டு நிற்கிறது. தொல்லியல் அறிஞர் தியாக.சத்திய மூர்த்தி அவர்கள் சொல்வது படி, “மிக அதிகமான இடங்கள் அரிக்கமேட்டைச் சுற்றி ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ, செலவு செய்ய எத்தனிக்கவில்லை. எனவே என் காலத்தில் என்னாலான பணி, வேலியிட்டு அந்த இடத்தைக் காப்பாற்ற முற்பட்டேன்,” என்கிறார். மின் தமிழ் குழும நண்பர் அ.சுகுமாரனும் நானும் அங்கே ஒரு ASI (மத்திய தொல்லியல் துறை அலுவலர்) நண்பருடன் வேலிக் கதவு திறந்து மாந்தோப்பு அடங்கிய நிலத்தினூடே நடந்தோம். சரியான வழி காட்டுதல் இன்றி, கால் போன போக்கிலே நடந்தோம். ஒரே புராதனச் சின்னம் அங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்ததற்கான செங்கல் மிச்சங்கள்.
இங்கே அருகில் துறைமுகம் இருந்ததாகவும், துளையிட்ட இயற்கைக் கற்களாலான பாசிகள் பெரிய அளவில் ஏற்றுமதியானதாகவும் செய்திகள் சொல்கின்றன. பொறுமையாக தேடிப்பார்த்ததில், துளையிட்ட பாசிகளும், அதற்கான மூலப் பொருட்களான கற்கள் சிலவும் கிடைத்தன.
சுற்றி வரும் பாதை ஆராய்ச்சிப் பயணம் (expedition) போவது போல மிகவும் அபாயகரமாக இருந்தன. நண்பர் சுகுமாரனை நடக்கவிட்டு எடுத்த படங்கள் காண்க.
மறுபுறம், ஒரு அதள பள்ளத்தில் கீழிறங்கி, கடலின் நீர் நிலையைத் தொடலாம். (Back waters). முன்பு பண்டங்கள் விற்கையில், இந்த சிறு சிறு படகுத் துறைகள்தான், கடலுள் பொருட்களை எடுத்துச் செல்லத் தோதாக படகுகளை நிறுத்த உபயோகப்பட்டன.
இன்றோ, பலான வேலைகள் செய்ய இளசுகள் இந்த வழியை நாடுகின்றனர். இந்த திடலுக்கு நடுவே ஒரு மேட்டை (பள்ளத்தை?) காட்டினார் ASI அலுவலர். அதற்குள் ஒரு பெரிய கட்டிடமே இருப்பதாகவும், அகழ்வாராய்ச்சிக்கு போதிய நிதிவரத்தின்மையால் அந்த பணி கைவிடப்பட்டதாகவும் சொன்னார்.
மொத்த பரப்பளவையும் பார்த்துக் கொள்ள ஒரே ஒரு அலுவலர். பாதுகாப்பு என்பது பூஜ்யம் - இடத்துக்கும், அதை பார்த்துக் கொள்ளும் ஆளுக்கும்! என்னமாய் உறங்குகிறது நம் புராதன பூமி!
மீண்டும் வெளியே வரும் வழியிலேயே, அரிக்கமேட்டின் எல்லையில் இருந்த ஒரு சிறிய கோயில் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அருகில் குழவியில் வெற்றிலை இடித்துக் கொண்ட இரண்டு கிழவிகளை விசாரித்ததில், ‘கடன் வாங்கின சாமி கோவில்' என்றார்கள்! பின்ன?
‘பின்ன என்ன? அதான் வெளியே நிற்கிற இரண்டு பேரும் கடன் கொடுத்தவங்க. வாங்கின பிரம்மா(?!) வெளியே வர்றப்ப பிடிச்சு கடனை திருப்பி வசூல் பண்ணத்தான் இங்க நிற்கிறாங்க,” என்றார் ஒரு கிழவி!
அப்படிப் போடு!
உள்ளே சென்று பார்த்தால், மூலவராய் பரிதாபமாய் கடன் பட்ட நெஞ்சத்துக்கு சொந்தக்காரனாய் ஒரு அழகிய ஜைன சிலை! சுமார் 6 அடி உயரம் இருக்கும் இந்த சிலை, நிச்சயமாக 2-3 ஆம் நூற்றாண்டின் ஜைன தீர்த்தங்கரரின் சிலை. அவருக்கு பட்டை விபூதி, மாலை எல்லாம் போட்டு (கடன் வாங்கின ஆளுக்கு இவ்வளாவு மரியாதையா, பரவாயில்லையே!) வைத்திருந்தனர். சரி, வெளியே வசூலுக்கு நிற்கும் இருவரின் சிலைகளையும் சரியாக ஆய்ந்து பார்த்தோம். பாவம், கோயில் கட்டவும், கொடை கொடுத்த வள்ளலான முதலியாரும், அவர்தம் மனைவியும் கைகூப்பி நிற்கும் சிலை இன்று தவறான ஊராரின் கதைப்புக்கு ஆளாகி, கடன் வாங்க வெளியில் நிற்பவர்களாக மாற்றிவிட்டது. சமுதாயத்தில் தவற்றை பரப்புவது எவ்வளவு பெரிய அசிங்கம்? அதுவும் வரலார்றுச் செய்திகளை திரித்துக் கூறல்? யாரை குறை சொல்வது?
அந்த இருவருக்கும் மானசீகமாக வணங்கிவிட்டு, நம் கட்டுரையேனும் அவர்தம் அவப்பெயரை நீக்கும் என்ற நம்பிக்கையில் வெளிவந்தோம்.
அந்த கோயிலுக்கு சிறிது முன்னரேயே, மற்றொரு தனியார் கோயிலும் உள்ளது. ரெங்கராஜு எனும் பொன்னுச்சாமி என்பவர் வணங்கி வந்த அம்பாளின் காலடியிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என்றௌ அங்கே இருந்த அவர்தம் குடும்பத்தார் தெரிவித்தனர். 1950ல் அவர் இறந்ததும் அவருக்கு ஒரு நினைவுச் சிலை மிகவும் தத்ரூபமாக செய்து நிறுவப்பட்டுள்ளது. அதையும் படத்தில் காண்க. கல்வெட்டுகளில் பிழைகள் ஏற்பட்டுள்ளதும் ஒரு சரித்திர வெளிப்பாடே.
சரித்திரத் தேர்ச்சி கொள் என்று முண்டாசுக் கவி. சரியான சரித்திரத்தை திரித்துச் சொல்பவர்கள் உலகில் ஏராளம், உஷார்!
சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம். மறுநாள் ரீச் பவுண்டேஷன் நடத்திய உழவாரப்பணி அன்பர்களுக்கான பழங்கால கோயில்கள் பாதுகாப்பது எப்படி என்பதன் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் ஆருத்ரா தரிசனம் மற்றும் களி தனக்குக் கிடைக்காமல், சிதம்பரம் வழியாக அழைத்துச் செல்லாமல் சென்றேன் என்ற புகார் என் மேல் ஒரு ரீச் உறுப்பினர் வை(த்)தார்! எனக்கு ஆருத்ரா என்ற விஷயம் தெரியாது. மாலை வரை புலம்பித் தீர்த்துவிட்டார் அன்பர்! பின்னர் மாலையில் திருப்பிறம்பியம் மற்றும் இன்னாம்பூர் கோயில்களுக்கு எல்லாரும் போவதாக முடிவு செய்து, முதலில் இன்னாம்பூர் சென்றோம். இன்னாம்பூர் கிராமம்,
சுவாமிமலை கும்பகோணம் பாதையில், திருப்பிறம்பியம் போகுமுன் வரும். அங்குள்ள எழுத்தறிவித்த நாதர் திருக்கோயில் நடராஜர் காண்பதற்கு அரிய ஒரு நடராஜர். திருவாச்சி எனும் வட்டம் எல்லா நடராஜ உற்சவ மூர்த்திகளில் இருக்கும். சிலை அமைப்பில் திருவாச்சி இன்றியமையாதது. ஆனால் இன்னாம்பூர் உற்சவ மூர்த்தியான நடராஜரின் ஜடை வரிகளே இருபக்கமும் விரிந்து இருக்க, அதில் ஒருபக்கம் கங்கையும், மறுபக்கம் நாகராஜனும் இருக்க, வசீகரனாய் இருப்பார் இந்த இன்னாம்பூர் எழுத்தறிவித்த நாதர் நடராஜர். நாங்கள் கோயிலுக்கு போன பொது, இரவு கடைசி பூஜை முடிந்து கோயில் ச்சர்த்தும் நேரம். அவசரமாக ஓடி வந்த ஊர் பெரியவர் ஒருவர், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளை பத்திரமாக ஸ்வாமிமலை கோயிலில் சேர்த்துவிடுவது வழக்கம்
என்றும் அன்று ஊர் மக்கள் யாரும் சிலைகளை தூக்க வரவில்லையென்றும், எங்களை கை கொடுக்கச் சொல்ல்லி, இர்ய் விக்ரஹங்களையும் தூக்கி மாட்டு வண்டியில் வைக்கச்சொன்னார்.” புகார் சொன்ன அன்பர் அப்போதுதான், ஆர்வக் கோளாறால், நடராஜரைத் தொட்டு, திட்டு வாங்கிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அதிசயம் நடராஜரே ஊர்ப் பெரியவரின் மூலம் தன்னை தொட்டுத்தூக்கி வண்டியில் வைக்கச் சொல்கிறார். எனக்கும் சந்தோஷம்! காலையிலிருந்து புகார்களை சுமந்த எனக்கு நடராஜரை சுமக்க ஒரு வரம்! பத்திரமாய் 6-7 பேர்சேர்ந்து விக்ரஹங்களை வண்டியில் ஏற்றி ஸ்வாமிமலைக்கு
அனுப்பி வைத்தோம்.
இம்முறை 01-01-2010 அன்று ஆருத்ரா (திரு ஆதிரை). திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம்
போயே ஆகவேண்டும் என்று மனதுள் திட்டம். ஆனால் காரோட்டி அன்பர், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் மோசமாய் இருக்கும் என்று போவதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ஸ்வாமிமலையில் வருடக் கடைசி மற்றும்
புத்தாண்டு தினங்களில் தங்குவதை கடந்த 4 ஆண்டுகளாக
எங்கள் கூட்டுக் குடும்பம் கடைபிடித்து வருகிறது. ``சரி இருக்கவே இருக்கிறார் அருகிலேயே இன்னாம்பூரார், என்று அவரைப் பார்க்க சென்றேன்.
அதே ஊர் பெரியவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ``வாங்க சார்
பரவாயில்லையே இந்த ஆருத்ரா தரிசனத்துக்கும் வந்துவிட்டீர்களே,” என்று கேட்டு, உடனிருந்த இளைஞர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் கோயிலில் நந்தவனம் அமைத்து எல்லா நன்னாட்களிலும் கோயிலில் விழாக்கள் செய்து வருவதாக தெரிவித்தனர். பாரம்பரியம் காக்க இளைஞர்கள் முன்வருவது கண்டு
மகிழ்ந்து, சென்ற வருடானுபவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, ``என்னவோ இம்முறை காலையில் வந்துவிட்டேன். இரவானால் நடராஜரைத் தொட்டு சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்” என்று சொல்லி, தரிசனம் முடிந்து
ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு வைடை பெற்றேன்.
புத்தாண்டு அன்று மாலை சுமார் 7.30 மணிக்கு ஸ்வாமிமலையில் எங்கள் குடும்பத்தார் தங்கத்தேர் இழுப்பது முன்னேற்பாடு செய்த நிகழ்வு. தங்கத்தேர் இழுத்துவிட்டு சற்று அமர்ந்தேன்!
திடீரென தேரோடும் வெளிப்ரகாரத்துள் ஒரு ட்ராக்டர் வண்டி உட்பிரவேசித்தது! என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு
குரல்!
“சார்! வாங்க சார், என்ன இங்க இருக்கீங்க? வந்து கை கொடுங்க! இன்னாம்பூரார் உங்களை தூக்கக் கூப்பிடறார்,” என்று பரிச்சியமான அந்த இன்னாம்பூர் பெரியவரின் குரல் ட்ராக்டரிலிருந்து வந்தது!!! அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் கண்டு உள்ளம் பூரித்தது, கண்கள் பனித்தன. திருநல்லம் போனால் என்ன, இங்கேயே கடைசி நிமிட ஏற்பாடாக இன்னாம்பூர் வந்தால் என்ன? நான் ஒருவனே”, என்று சொல்லாமல் சொல்லி இன்முறுவலை தந்த அந்த இன்னாம்பூரானின் விளையாட்டில் நான் அடிமையாகி, ஆனந்தக் கண்ணீரோடு, சிலையைத் தொட்டு வணங்கி, தூக்கி வைக்கக் கை கொடுத்தேன். சென்ற முறை சிறிது சுமையாக இருந்த இன்னாம்பூரார் இன்று லேசாக மிதந்தார்! அதே இன்முறுவலோடு என்னைப் பார்த்துக் கொண்டே ஸ்வாமிமலை கருவூல
ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் 1988 மாணவப் பத்திரிகையாளர்களாய் நானும், நண்பன் சு. கணேசன் என்ற இன்றைய பிரபல இயக்குநர் சுசி. கணேசனும் மற்றும் ஒரு மாணவி (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) மதுரை மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். காலத்தில் கோலத்தில், நான் மும்பை, பரோடா நகரங்களில் ப்ளாஸ்டிக் நிபுணனாய், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து, கடந்த 3 ஆண்டுகளாய் என்னால் முடிந்த சமூக சேவை செய்ய எண்ணியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை எங்கள் குழந்தைகளுக்கு எடுத்து இயம்ப என்ணியும் சென்னையில் வசித்து வருகிறேன். புராதனக் கோவில்களை சீரமைக்க ரீச் பவுண்டேஷன் (www.conserveheritage.org) எனது முக்கியப் பணிக் களம். அதனால் பல கிராம மக்களை சந்தித்து வருகிறேன்.
திரைப்படங்கள், தொ(ல்)லைக் காட்சி இரண்டையும் தவிர்த்து விட்டது எங்கள் குடும்பம். ஆனால், முதன் முதலாய் ஒரு திரைப்படத்தோடு என்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு, சுசி. கணேசனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளக் காரணம் மனித நேயத்தின் ஒரு பரிணாமத்தை நண்பன் சுசி தொட்டதுதான்!
சுசி.கணேசனுடனான தொடர்பை மிகுந்த சிரமங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டேன். சினிமா வட்டத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கஷ்டம். அதுவும் இயக்குநருடன்! துணை இயக்குநர்கள், உதவியாளர்கள் சமுத்திரத்தில் பழைய கல்லூரி நட்பைக் கூறி யார் உள்ளே விடுவார்கள்? அழைப்பிதழ் இல்லாமலேயே, பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பது கிராமங்கள் தத்தெடுப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஏன்? சினிமா வட்டத்துள் பணமே பிரதானம். அடுத்தவர் துயர் துடைக்கவோ, அல்லது சாமானியனைப் பற்றி எண்ணிப் பார்க்கவோ பிரபலங்களுக்கு நேரம் இருப்பதில்லை. மாணவ நிருபராய் இருந்த கணேசன், கிராமத்திலிருந்து வந்த கணேசன், பி.டெக் படித்த கணேசன், கனவுத் தொழிற்சாலையில் கோலோச்சும் கணேசன், திரைப்பட வரலாற்றிலேயே (உலக,இந்திய) யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எண்ணி, அதை நனவாக்கியுள்ளார். கந்தசாமி பட பூஜையின் போதே, 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதை அவரது தயாரிப்பாளர் கலைப் புலி தாணு அவர்களின் ஊக்குவிப்பால் அறிவித்தார். அது பாடல் வெளியீட்டு விழாவின் போது நிறைவேறியுள்ளது. 17/05/2009 மாலை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், முக்கியமாக பங்கேற்றவர்கள் அந்த 30 கிராமத்தினர்.சொந்த செலவில், பஸ்களில் நிரம்பி வந்தனர். சேர்த்த கூட்டமில்லை, தானாய் சேர்ந்த கூட்டம்!
கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆனந்த பவன், நல்லி அதிபர்கள் உட்பட 20 பேர், அதில் பெயர் சொல்ல விரும்பாத 8 பேர்கள்,அந்த 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். ராமசந்திரா, ஏ.சி.சண்முகம் மற்றும் அகர்வால் கண் - மருத்துவ நிலையங்கள் இந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் தருவதாக அறிவித்துள்ளன. வந்த விண்ணப்ப மடல்கள் 998. தத்தெடுத்ததோ, 30! எனவே மேலும் பல ஆர்வலர்கள் இந்தப் பணியை ஊக்குவித்து எடுத்துச் செய்ய வேண்டும் என்று எல்லாரும் வேண்டுகோள் விடுத்தனர். சினிமா செட்டிங் போடவே பலகோடிகள் செலவு ஆகும்.அந்தப் பணத்தை நிரந்தர செலவாக கிராமங்களில் செய்து, அவற்றை மாற்ற முயற்சிக்கும் சுசி.கணேசன், கலைப்புலி தாணு போன்றோரிடம் நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன், மீண்டும் கோருவதும் இதுதான்: நண்பா, என்னை இப்பணியில் நிரந்தரமாய் இணைத்துக் கொள்! நண்பா, கை கொடுக்கிறேன், தூக்கிவிடு, என் சேவை எண்ணத்தை, அதன் மூலம் பல காலப் பொக்கிஷங்கள் நிறைந்த,சிதிலமடைந்த கோவில்கள் கொண்ட பல கிராமங்களை! " பார்க்க படங்கள்
கும்பகோணம் உழவாரப் பணி அன்பர்களுக்கான பயிற்சிப்பட்டறை நன்கு நடந்தது என்பதற்கும், மக்களைப் போய் சேர்ந்தது என்பதற்கும் ஒருசாட்சி:
இந்த நிகழ்ச்சி நடந்த (11-1-2009) ஓரிரு நாட்களில், எங்கள் ரீச் பவுஃண்டேஷன் ஸ்தாபகர் திரு. சத்தியமூர்த்தி அவர்களூக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் மறு பதிப்பு இங்கே:
ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டுக் கழகம்
நன்னிலம், திருவாரூர் மாவட்டம்
தலைவர்: ச. வெங்கடேசன், எம்.எஸ்.சி.
85/34, கடைத் தெரு, நன்னிலம் – 610 105
பெருமதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’. தங்கள் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்ற ‘உழவாரப்பணி பட்டறையில் நான் செவிமடுத்த சில முக்கிய செய்திகளை ஒரு கட்டுரையாக எழுதி, ஞான ஆலயம், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமலர் பக்திமலர், ஆகிய இதழ்களுக்கு அனுப்பியுல்ளேன். அதன் நகல் ஒன்றினை தங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். மற்றவி தங்கள் கடிதம் கண்டு.
நன்றி
சிவசிந்தனையுடன்
(ஒப்பம்)
வெங்கடேசன்.
கட்டுரை: (இதில் விடுபட்ட செய்தியை நீல நிறத்தில் அடியேன் நிரப்பியுள்ளேன்)
திருக்கோவில்கள் – புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு
– ஒரு கண்ணோட்டம்
(மீண்டும் புதிதாய் பிறக்கும், காலத்தால் அழியா புராதன கட்டுமானக் கலைகள் என்று தலைப்பு இருந்திருக்கலாம் J)
`கோபுரம் சூழ் மணிக்கோயில்’- என சம்பந்தரும்
‘கறைக் கண்டன் உறைக் கோயில் கோலக் கோபுர
கோகர்ணம் சூழாக் கால்களால் பயன் என்’- என அப்பரும்
‘மண்டபமும், கோபுரமும் மாளிகையும், சூழிகையும்
மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரீகப் பொய்கைக்
காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர்கானே’ - என சுந்தரரும்
திருகோயில், திருக்குளம், கோயில்களில் மறைகள், திருமுறை ஓதியது, நடனம் மற்றும் சிற்பக் கலைகள், வளர்ந்த தரத்தினை இயம்புகின்றனர்.
இத்தகைய திருக்கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டும் அல்ல, தமிழ்மக்களின் பண்பாடு, கலை உணர்வு, கலாச்சாரம், நாகரீகம், ஆகியவற்றை உணர்த்தும் புராதன்ச் சின்னங்களாக விளங்குகின்றன. இந்த கலைப் பொக்கிஷங்களை பாதுகாத்து அடுத்ததலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எனவே, ஆலயப் புனரமைப்பு செய்வோர்கள், உழவாரப் பணி செய்யும் அன்பர்கள், கலைகளைவளர்க்கும் சிற்பிகள், ஆன்மநேய, ஆன்மீக அன்பர்களிடையே திருக் கோவில்களின் புனிதத் தன்மை, பாரம்பரியம் இவர்றை போற்றிப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.
அத்தகைய விழிப்புணர்வு பட்டறை, உழவாரப்பணி மக்களுக்காக, கும்பகோணம் பக்தபுரி தெருவிலுள்ள ‘பவளம்’ திருமண மண்டபத்தில், 2009, ஜனவரி 11ஆம் தேதி ரீச் பஃவுண்டேஷனால் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட உழவாரப்பணி, கலாச்சார ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் வரவேற்றுப் பேசிய ரீச் நிறுவனர், டாக்டர். சத்திய மூர்த்தி அவர்கள்,`அரசர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருக்கக் காரணம், அவை கட்டப்பட்ட விதம், அமைப்பு, பயன்படுத்திய பொருட்களின் தன்மையே காரணம். ‘தஞ்சை கோவிலின் அடித்தளம் எத்தனை ஆழம் இருக்குமென்று மேல்நாட்டு வல்லுநர்கள் விவாதித்து, சுமார் ‘130 அடி’ என்றார்கள். அது 15 அடியிலிருந்து 30 அடிக்குள் அடங்கிய அடித்தளம் என்றதும் வியந்து போனார்கள்! எனவே, அடித்தளம் சிதந்து போனதாக சரித்திரமே இல்லை. சரியாக பராமரிப்பில்லாமலும், மரங்கள், செடிகளை கோபுரங்களில் வளர்வதைத் தடுக்காமல் விட்டதே இந்த பெரும்பாலான கோவில்களின் சிதைவுக்குக் காரணம். எனவே, பாரமரிப்பது, பராமரித்ததை எப்படி காப்பது, சிதிலமடைந்ததை எப்படி பழம்பொருட்களைக் கொண்டு, அந்த வடிவழகும் நுட்பமும் மாறாமல் கட்டுவது என்பதி விளக்குவதே எங்கள் நோக்கம்,” என்று பேசினார்.
தலைமை வகித்துப் பேசிய தொல்பொருள் ஆய்வாளர், கலைமாமணி வித்யவாசஸ்பதி, சிலை மீட்ட செம்மல், டாக்டர். நாகசாமி அவர்கள், “கும்பகோணத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் உழவாரப்பணிக் குழுக்கள் அமைத்து கோவில்களை சீரமைக்க முற்பட்டதையும், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரசின் ஆதரவோடு நாட்டியக் கலை விழா நடத்தியும் நமது கோவில்களைப் பிரபலப் படுத்த முயன்றதையும் நினைவு கூர்ந்து, மக்கள் இன்னமும் கோவில்களை நமது கலாச்சாரச் சின்னங்களாய் பாவித்து, அவற்றை பராமரிக்கக் கூடிய விழிப்புணர்வு வரவில்லை, ஆயினும் ரீச் பஃவுண்டேஷன் ’ என்று வேதனையைப் பகிர்ந்து கொண்டார். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல சிறந்த கோவில் கலைகள் பற்றியும் கூறினார். அவற்றுள் சில:
§குடந்தை நாகேஸ்வரர் கோவில் தேர் காலில் 12 சூரியர்கள் சிற்பங்களும், முன்னே இரண்டு யானைகள்,இரண்டு குதிரைகள் , இத்தனியும் பூட்டிய ரதத்துள் ஆடல்வல்லான் இருப்பது போன்ற கோவிலமைப்பு, குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் நடன மாதர் சிற்பங்களும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.
§கோனேரிராஜபுரம் கோவிலின் மேல்விதானத்தில் அத்தலத்தில் நடைபெறும் விழாக்களையும், நடன கர்ணங்களையும் சிறப்பாக வரைந்து வைத்துள்ளனர்.
கருங்கல், சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், வச்சிரம் கலந்த சாந்தால் உருவாக்கப்பட்டவை, நம் திருக்கோவில்கள். இந்தக் கட்டிடங்களும் மனிதர்கள் போலவே சுவாசிக்கின்றன. அதனால்தான் அவை காலத்தல் அழியாதனவாக உள்ளன. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் பயன்படுத்திவரும் பொருட்கள் நீண்ட காலம் பலன் அளிக்கத்தக்க வகையில் அமையவில்லை என்பதே உண்மை. அரசர்கள் காலத்தில் கட்டிட கலைக்கு சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தப்பட்ட காரணாம் அதன் சுழற்சியால், அது அதிக பலம் பெறுகிறது என்பதால்தான்
சுண்ணாம்புச் சுழற்சி
CaCO3
சுண்ணாம்புக்கல்(-) CO2
(-)H2O (நீர்)
(-)CO2 கரிமல வாயுகரிமலவாயு
இரண்டும் வெளியேற்றம்CaOவெளியேற்றம்
மணல் சேர்ந்து, நீர், சண்ணாம்புக்கலவைகால்சியம் ஆக்ஸைடு
Ca (OH)2நீர் சேர்ந்து
கால்சியம் ஹைட்ராக்ஸைடு
சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்) பதப்படுத்தப்படும் போது, அதிலிருந்து கார்பண்டை ஆக்ஸைடு வெளியேறி அது கால்சியம் ஆக்ஸைடாக மாறுகிறது. அதனுடன் நீர் சேரும்போதுகால்சியம் ஹைட்ராக்ஸிடு கிடைக்கிறது. மணலுடன் சேர்ந்து கலவையாகிப் பூசப்பெற்றதும், அந்த பூச்சு உலறும் போது நீர் ஆவியாகி வெளியேறிவிடுகிறது. மீண்டும் கார்பண்டை ஆக்ஸைடு உட்புகுவதால் அது மீண்டும் சுண்ணம்புக் கல்லாக பாறி, பலம் அதிகரிக்கிறது. எனவே, மழைக் காலங்களில் நீரை உள்வாங்கி, வெயிலில் ஆவியாக வெளியேற்றுவதால், சுவாசத்தால், நீர் கசிவின்றி, இந்த சுழற்சி அதிகரிக்க, அதிகரிக்க காலங்கள் ஆக ஆக, சுண்ணாம்பால் கட்டபட்ட சுவர் அதிக வலு பெற்றுக் கொண்டே போகிறது.
எனவே புதிதாக புனரமைப்பு செய்பவர்கள் சிமெண்டுக்குப் பதிலாக சுண்ணாம்புச் சாந்தையே பயன்படுத்தினால், கோவில்கள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்பது உறுதியாகும். இந்த தொழில் நுட்பம் குறித்து ஆலோசனை வழங்க ரீச் (Rural Education And Conservation of Heritage) பஃவுண்டேஷன் போன்ற அமைப்புகள் முன் வந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் ப்ரத்யேகமாக கலந்து கொள்வதற்காக, சுண்ணாம்பு சுதை அறிவியல் வல்லுநர் டாக்டர். தபன் பட்டாசார்யா கல்கத்தாவிலிருந்து வந்திருந்து, இச்செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
மனிதர்களின் நோயை குணப்படுத்த மருத்துவர்கள் உள்ளதுபோல், இந்த திருக்கோவில்களின் புராதன அமைப்பு, புனிதத்தன்மை, பாரம்பரியம் கெடாமல் புதுப்பிக்க நிபுணர்கள் பலர் இப்போது ரீச் பஃவுண்டேஷன் மூலம் செயல் படுகின்றனர். புனரமைப்பு செய்பவர்கள் இவர்களைக் கலந்தாலோசித்து இப்பணிகளை செவ்வனே செய்யலாம்.
அடுத்து ‘தேவாரம் தந்த திருச் செல்வங்கள்’ என்ற தலைப்பில் பேசிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன், `அரசர்கள் காலத்து சிற்பிகளும், கட்டிடக்கலை வல்லுநர்களும் பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்களை நிர்மாணித்துள்ளனர். உதாரணமாக
§கங்கை கொண்ட சோழபுரத்தில் வடக்கு வாயிலினருகே சண்டேசுவர நாயனார் கதை மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
§தாராசுரம் கோவிலில் திருச்சுற்றில் அப்பர் கைலாயக் காட்சியும், “மாதர் பிறை கன்னியானை,’ பதிகக் காட்சிகளும், 108 ஓதுவார்களின் சிற்பங்கள், அவர்கள் பெயர்களோடு வரிசையாக அமைத்த நன்றியுணர்வையும் காணலாம்.
§மேலப்பெரும்பள்ளம் கோவிலில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மான் சிவபெருமானின் வலது கரத்தை தடவுவது போலவும், சிவபெருமான் வீணை வாசிக்க, அருகில் ஒரு பூதம் கேட்பது போல் சிற்பங்கள் அமைத்துள்ள அழகை அப்பர் சுவாமிகள்,
‘வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி, வலம் புரமே புக்காங்கே மன்னினாரே,’ என்றும்,
‘வட்டாணை யாடாலாடி வராணீ வாய் முரடிகள் வருவாரே,’ என சம்பந்தரும் போற்றிப் பாடியுள்ளனர்.
இப்படிப்பட்ட கலையுணர்வு மிக்க சிற்பங்கள், சிலைகள் கோபுரங்கள், விதானங்களில் பெயிண்ட் பூசுவதால், ரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த அழகு மாசு படுகின்றன. அதேபோல் காலச் சரித்திர பட்டயங்களான, வார்ப்புகளான கல்வெட்டுக்கள், கல் பிரித்துக் கட்டுகையில், மாற்றிக் கட்டப்பட்டு, கல்வெட்டுச் செய்திகள் தொடர்ச்சியற்றுப் போய் சிதைத்துவிடுகின்றனர். எனவே, கல் கோவில்கள் செப்பனிடுகையில், பழைய கற்களை வரிசை மாறாமல் எடுத்துக் கட்டுவது அவசியமாகும். உதாரணத்துக்கு, குடவாஇயில் அவர்கள் சொன்ன வேதனை தரும் ஒரு செய்தி:
திருவிடைவாய் கோவிலில் (குடவாயிலுக்கு அருகே, குறடாச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள கோவில்) முழுவதுமாய் தேவாரப் பதிகம் ஒன்று கல்வெட்டாய் கிடைத்த ஒரே ஒரு பதிவு, திருஞான சம்பந்தர் பாடிய
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1.1
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே. 1.2
கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே. 1.3
கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே. 1.4
திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 1.5
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 1.6
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. 1.7
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே.1.8
புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே. 1.9
உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 1.10
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே. 1.11
என்ற கல்வெட்டே,முதல் முதல் 1917ல் கல்வெட்டாக கண்டெடுக்கப்பட்ட ஆவணம். ஆனால்,மீண்டும் கோவிலை செப்பனிட்டுக் கட்டியவர்கள், கற்களை வரிசை மாற்றிப் பூசிவிட்ட படியால், ஒரு காலச்சுவடு, சரித்திரத்தில் அரிய பாடல், தேவாரம் கல்வெட்டாய் உள்ள ஆதாரம், சிதைந்துவிட்டது!
எனவே, விழிப்புணர்வோடும், விஷய ஞானத்தோடும் கோவில்களை புனரமைப்பது அவசியம். விமானங்களில் செடிகள் வளரவிடாமல், அவ்வப்போது பிடுங்கிவிட வேண்டும். பிடுங்கிய துவாரத்தில், சுண்ணாம்புக் கரைசலையோ, ஆசிடையே ஊற்றி மீண்டும் செடிகள் வளராமல் தடுக்க வேண்டும். திருக்கோவில் செப்பனிடும் பணியில் ஈடுபடும் அன்பர்கள் அனைவரும், இத்தகைய முறைகளை கடைபிடித்து பணி செய்வார்களானால், நனது காலச்சின்னங்கள் என்றென்றும் நம்மோடு இருக்கும். வரும் சந்ததியினருக்கு வரலாற்றின் படிமங்கள் மீஞ்சப் பெறும்.