http://duraipics.blogspot.in/2014/05/blog-post_16.html
வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
17 May 2014
தமிழர் தலை நிமிர இன்னொரு ஓட்டு போடுங்கள் -19-5-2014 க்குள்
http://duraipics.blogspot.in/2014/05/blog-post_16.html
15 May 2014
WATER FOR ALL (SANITATION) தமிழர் செயிக்க அதிக ஓட்டுக்கள் தேவை
ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் அற்ற குறைந்த விலைக் குடிநீர் வடிகட்டி செய்யும் தமிழர் ஒரே ஒருவர் ஆசியாவின் மிகப்பெரிய (பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களுக்கான) போட்டியில் செமி பைனலில் வந்துள்ளார்.
அவர் இறுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி ,பெற அவரது சேவைக்கு அதிக ஓட்டுக்கள் தேவை . அவரை செயிக்க வைக்க, கீழ் காணும் உரலிக்கு செல்லவும்.
http://socialventurechallenge.asia/vote/#top
ஓட்டு இடும் முறை
1: உரலியில் உள்ள WATER FOR ALL (SANITATION) எனும் வீடியோவைக் கிளிக்கவும் :)
2. கீழே மவுசை இறக்கிப் பார்த்தால் பக்கத்தின் கீழ் பாகத்தில் சென்ற இ மெயில் அல்லது முகநூல் (Facebook) கணக்கை வைத்து உள்நுழையவும்.
3. கமெண்ட்ஸ் அருகே தெரியும் vote buttonஐ (இரட்டை இலை சின்னம் காண்பிப்பதுபோல் தெரியும் விரல்கள் ) கிளிக் செய்யவும்.
ஆரஞ்சு நிறத்தில் ஓட் பட்டன் தெரிந்தால் ஓட் விழவில்லை என்று அர்த்தம். அதுவே சாம்பல் நிறத்துக்கு மாறிவிட்டால் உங்கள் ஓட் விழுந்துவிட்டது என்று அர்த்தம்.
(An orange icon indicates ready to vote, grey indicates that you have already voted for that video.)
4. இந்த உரலியையும் இந்த போட்டி பற்றியும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு அதிக ஓட்டுகளைப் பெறச் செய்து ஏழை மக்களின் குடிநீர் வடிகட்டியை மேலும் மக்களுக்குக் கொண்டு போய் சேர்க்கும் கரத்தை வலுப்படுத்துங்கள் .நன்றி
கடைசி நாள் 19ஆம் தேதி மாலை 6 மணி. அதற்குள் அவரது WATER FOR ALL (SANITATION) வீடியோவிற்கு அதிக ஓட்டுகள் வரவேண்டும். எனவே உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து இதை வெற்றிபெறச் செய்யுங்கள்.
மக்களின் குடிநீர் வடிகட்டி
www.terafilwater.in
01 October 2012
மணல் கயிறு-சிறுகதை
04 September 2012
கழிப்பறைகள் அமைப்போம்!
அதை செயலாக்க என் திட்டம்
தமிழகம் நிமிருமா? என் தாய் நாடு தலை தூக்குமா?
மக்களே விடை சொல்லுங்கள்!
30 March 2012
National award for innovation in Health Care

தேசிய விருது!
மத்திய ரசாயன மற்றும் உரத்துறையினரால், ப்ளாஸ்டிக் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கான விருது பெற்றோர் பட்டியலில் நானும் ஒருவன்!
குழந்தைகளை பராமரிக்கும் தந்தையர்கள்,செவிலியர்கள், ஆயாக்களுக்கான நான் கண்டுபிடித்து தயார் செய்த disposable feeding bottles க்கு இந்த runner up விருது! தில்லியில் 26ஆம் தேதி ஏப்ரலில் நடக்கும் விழாவில் பரிசுகள் தரவிருப்பதாக தகவல்.
13 January 2012
கோயில் கதைகள் -2
கோவில் கதைகள் என்ற தலைப்பில் வல்லமை.காம் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் வெளிவருகின்றன.
இம்மாதக் கட்டுரை, திருவையாறு ஐயாறப்பர் கோயில் புனரமைப்புப் பற்றியது.
மேலே படிக்க இங்கே சொடுக்கவும்.
09 September 2011
வலைதள தொலைக்காட்சியில் நான்
30 July 2011
வல்லமையில் கோவில் கதைகள்
நிஜ நிகழ்வுகள்:
கோவில் புனரமைப்புகளுக்கு போகும்போது நடக்கும் நிஜக் கதைகள்.
வல்லமை இணையதளத்தில் முதல் கதை இதோ
08 July 2011
குறைந்த செலவில் தூய குடிநீர்
மேலும் Nano technologyயின் மூலம் 100% கிருமிகள் வடிகட்டுதலும், உப்பை நீக்கும் பணியிலும், இந்த களிமண்ணாலான வடிகட்டியை மேம்படுத்த சிந்தனை மனதில் உள்ளது. Nano technology நிபுணர்கள் கட்டாயம் நம் மின் தளத்தில் உள்ளனர்.இருந்தால், என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டால், மேற்கொண்டு இன்னும் சிறப்பாக இதை வடிவமைக்க முடியும். தொடர்புக்கு: naturalfilter@gmail.com

29 April 2011
Sand blasting தடை செய்ய வேண்டும் - உயர்த்துங்கள் போர்க்கொடி
புராதன சின்னங்கள், ஆலயங்களில் ஆபத்துமிக்க sand blasting எனும் சுத்தம் செய்யும் முறையை கண்டித்து பல இடங்களில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழ்ஹிந்து.காமில் எனது கட்டுரை
அதற்கு உரமூட்ட எழுத்தாளர் ஜயமோஹனின் கட்டுரைகள்-1, 2 மற்றும் 3
பிறந்த நாளை விட, எனது திருமண நாளை விடவும் மிக, மிக மகிழ்ச்சி அளிக்கும் நாள் இன்று. (29.04.2011). ஏனெனில், நான் இதுவரை தேடி கிடைக்காத sand blastingஐ தடை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையின் நகல் இன்று ஒரு அன்பர் மூலம் என் கைகளில் கிடைத்தது. இதோ அதன் நகல் இங்கே:

இதன் படி பார்த்தால், 2002க்கு பிறகு sand blasting செய்யப்பட்ட கோயில்களின் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படலாம், அல்லவா?
இனி எங்கேனும் sand blasting நடந்தால், இதன் நகலை அந்த கோயில் நிர்வாகிகளிடன் தரவும். Sand blasting செய்யும் கைகளுக்கு இரும்புக் காப்பிடவும்
உடன் எடுத்துச் செல்ல வசதியாக உள்ள படியெடுக்க உதவியாக ஹை ரெஸொலுஷன் நகல் இங்கே
05 November 2010
சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா!
அதன் முழு வடிவம் இங்கே கேளுங்கள்
15 August 2010
கொடி காத்த கிழவி!
மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.
முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.
காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.
29 May 2010
தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 7
19 May 2010
தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 6
தெரிந்த ஊர் தெரியாத செய்தி - அரிக்கமேடு, புதுவை.
புதுவை அரிக்கமேடு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுக் களம். மத்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து நிற்கும் அரிக்கமேடு ஆய்வுக் களம் இன்று அழகிய மாந்தோப்பாக வேலியிட்டு நிற்கிறது. தொல்லியல் அறிஞர் தியாக.சத்திய மூர்த்தி அவர்கள் சொல்வது படி, “மிக அதிகமான இடங்கள் அரிக்கமேட்டைச் சுற்றி ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ, செலவு செய்ய எத்தனிக்கவில்லை. எனவே என் காலத்தில் என்னாலான பணி, வேலியிட்டு அந்த இடத்தைக் காப்பாற்ற முற்பட்டேன்,” என்கிறார். மின் தமிழ் குழும நண்பர் அ.சுகுமாரனும் நானும் அங்கே ஒரு ASI (மத்திய தொல்லியல் துறை அலுவலர்) நண்பருடன் வேலிக் கதவு திறந்து மாந்தோப்பு அடங்கிய நிலத்தினூடே நடந்தோம். சரியான வழி காட்டுதல் இன்றி, கால் போன போக்கிலே நடந்தோம். ஒரே புராதனச் சின்னம் அங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்ததற்கான செங்கல் மிச்சங்கள்.
இங்கே அருகில் துறைமுகம் இருந்ததாகவும், துளையிட்ட இயற்கைக் கற்களாலான பாசிகள் பெரிய அளவில் ஏற்றுமதியானதாகவும் செய்திகள் சொல்கின்றன. பொறுமையாக தேடிப்பார்த்ததில், துளையிட்ட பாசிகளும், அதற்கான மூலப் பொருட்களான கற்கள் சிலவும் கிடைத்தன.
சுற்றி வரும் பாதை ஆராய்ச்சிப் பயணம் (expedition) போவது போல மிகவும் அபாயகரமாக இருந்தன. நண்பர் சுகுமாரனை நடக்கவிட்டு எடுத்த படங்கள் காண்க.
மறுபுறம், ஒரு அதள பள்ளத்தில் கீழிறங்கி, கடலின் நீர் நிலையைத் தொடலாம். (Back waters). முன்பு பண்டங்கள் விற்கையில், இந்த சிறு சிறு படகுத் துறைகள்தான், கடலுள் பொருட்களை எடுத்துச் செல்லத் தோதாக படகுகளை நிறுத்த உபயோகப்பட்டன.
இன்றோ, பலான வேலைகள் செய்ய இளசுகள் இந்த வழியை நாடுகின்றனர். இந்த திடலுக்கு நடுவே ஒரு மேட்டை (பள்ளத்தை?) காட்டினார் ASI அலுவலர். அதற்குள் ஒரு பெரிய கட்டிடமே இருப்பதாகவும், அகழ்வாராய்ச்சிக்கு போதிய நிதிவரத்தின்மையால் அந்த பணி கைவிடப்பட்டதாகவும் சொன்னார்.
மொத்த பரப்பளவையும் பார்த்துக் கொள்ள ஒரே ஒரு அலுவலர். பாதுகாப்பு என்பது பூஜ்யம் - இடத்துக்கும், அதை பார்த்துக் கொள்ளும் ஆளுக்கும்! என்னமாய் உறங்குகிறது நம் புராதன பூமி!
மீண்டும் வெளியே வரும் வழியிலேயே, அரிக்கமேட்டின் எல்லையில் இருந்த ஒரு சிறிய கோயில் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அருகில் குழவியில் வெற்றிலை இடித்துக் கொண்ட இரண்டு கிழவிகளை விசாரித்ததில், ‘கடன் வாங்கின சாமி கோவில்' என்றார்கள்! பின்ன?
‘பின்ன என்ன? அதான் வெளியே நிற்கிற இரண்டு பேரும் கடன் கொடுத்தவங்க. வாங்கின பிரம்மா(?!) வெளியே வர்றப்ப பிடிச்சு கடனை திருப்பி வசூல் பண்ணத்தான் இங்க நிற்கிறாங்க,” என்றார் ஒரு கிழவி!
அப்படிப் போடு!
உள்ளே சென்று பார்த்தால், மூலவராய் பரிதாபமாய் கடன் பட்ட நெஞ்சத்துக்கு சொந்தக்காரனாய் ஒரு அழகிய ஜைன சிலை! சுமார் 6 அடி உயரம் இருக்கும் இந்த சிலை, நிச்சயமாக 2-3 ஆம் நூற்றாண்டின் ஜைன தீர்த்தங்கரரின் சிலை. அவருக்கு பட்டை விபூதி, மாலை எல்லாம் போட்டு (கடன் வாங்கின ஆளுக்கு இவ்வளாவு மரியாதையா, பரவாயில்லையே!) வைத்திருந்தனர். சரி, வெளியே வசூலுக்கு நிற்கும் இருவரின் சிலைகளையும் சரியாக ஆய்ந்து பார்த்தோம். பாவம், கோயில் கட்டவும், கொடை கொடுத்த வள்ளலான முதலியாரும், அவர்தம் மனைவியும் கைகூப்பி நிற்கும் சிலை இன்று தவறான ஊராரின் கதைப்புக்கு ஆளாகி, கடன் வாங்க வெளியில் நிற்பவர்களாக மாற்றிவிட்டது. சமுதாயத்தில் தவற்றை பரப்புவது எவ்வளவு பெரிய அசிங்கம்? அதுவும் வரலார்றுச் செய்திகளை திரித்துக் கூறல்? யாரை குறை சொல்வது?
சிலைகளின் கீழே உள்ள கல்வெட்டில் அழகாக, “சாவிடி மணியம் அழகப்ப முதலியார்” (சாவிடி என்பது வீட்டுப் பெயர்) என்று ஆண் சிலை கீழேயும், சாவிடி மணியம் முதலியார் பொஞ்சாதி” (அப்படித்தான் கல்வெட்டில் உள்ளது. மனைவிமார் பெயரோ, பெண்கள் பெயரோ, வெளிப்படையாக பொறிக்கவில்லை என்பதைக் காண்க!) என்று பெண்சிலையின் கீழேயும் பொறிக்கப் பட்டிருந்தன.
அந்த இருவருக்கும் மானசீகமாக வணங்கிவிட்டு, நம் கட்டுரையேனும் அவர்தம் அவப்பெயரை நீக்கும் என்ற நம்பிக்கையில் வெளிவந்தோம்.
அந்த கோயிலுக்கு சிறிது முன்னரேயே, மற்றொரு தனியார் கோயிலும் உள்ளது. ரெங்கராஜு எனும் பொன்னுச்சாமி என்பவர் வணங்கி வந்த அம்பாளின் காலடியிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என்றௌ அங்கே இருந்த அவர்தம் குடும்பத்தார் தெரிவித்தனர். 1950ல் அவர் இறந்ததும் அவருக்கு ஒரு நினைவுச் சிலை மிகவும் தத்ரூபமாக செய்து நிறுவப்பட்டுள்ளது. அதையும் படத்தில் காண்க. கல்வெட்டுகளில் பிழைகள் ஏற்பட்டுள்ளதும் ஒரு சரித்திர வெளிப்பாடே.
சரித்திரத் தேர்ச்சி கொள் என்று முண்டாசுக் கவி. சரியான சரித்திரத்தை திரித்துச் சொல்பவர்கள் உலகில் ஏராளம், உஷார்!
03 January 2010
ஆருத்ரா அதிசயம்
சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம். மறுநாள் ரீச் பவுண்டேஷன் நடத்திய உழவாரப்பணி அன்பர்களுக்கான பழங்கால கோயில்கள் பாதுகாப்பது எப்படி என்பதன் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் ஆருத்ரா தரிசனம் மற்றும் களி தனக்குக் கிடைக்காமல், சிதம்பரம் வழியாக அழைத்துச் செல்லாமல் சென்றேன் என்ற புகார் என் மேல் ஒரு ரீச் உறுப்பினர் வை(த்)தார்! எனக்கு ஆருத்ரா என்ற விஷயம் தெரியாது. மாலை வரை புலம்பித் தீர்த்துவிட்டார் அன்பர்! பின்னர் மாலையில் திருப்பிறம்பியம் மற்றும் இன்னாம்பூர் கோயில்களுக்கு எல்லாரும் போவதாக முடிவு செய்து, முதலில் இன்னாம்பூர் சென்றோம். இன்னாம்பூர் கிராமம்,
சுவாமிமலை கும்பகோணம் பாதையில், திருப்பிறம்பியம் போகுமுன் வரும். அங்குள்ள எழுத்தறிவித்த நாதர் திருக்கோயில் நடராஜர் காண்பதற்கு அரிய ஒரு நடராஜர். திருவாச்சி எனும் வட்டம் எல்லா நடராஜ உற்சவ மூர்த்திகளில் இருக்கும். சிலை அமைப்பில் திருவாச்சி இன்றியமையாதது. ஆனால் இன்னாம்பூர் உற்சவ மூர்த்தியான நடராஜரின் ஜடை வரிகளே இருபக்கமும் விரிந்து இருக்க, அதில் ஒருபக்கம் கங்கையும், மறுபக்கம் நாகராஜனும் இருக்க, வசீகரனாய் இருப்பார் இந்த இன்னாம்பூர் எழுத்தறிவித்த நாதர் நடராஜர். நாங்கள் கோயிலுக்கு போன பொது, இரவு கடைசி பூஜை முடிந்து கோயில் ச்சர்த்தும் நேரம். அவசரமாக ஓடி வந்த ஊர் பெரியவர் ஒருவர், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளை பத்திரமாக ஸ்வாமிமலை கோயிலில் சேர்த்துவிடுவது வழக்கம்
என்றும் அன்று ஊர் மக்கள் யாரும் சிலைகளை தூக்க வரவில்லையென்றும், எங்களை கை கொடுக்கச் சொல்ல்லி, இர்ய் விக்ரஹங்களையும் தூக்கி மாட்டு வண்டியில் வைக்கச்சொன்னார்.” புகார் சொன்ன அன்பர் அப்போதுதான், ஆர்வக் கோளாறால், நடராஜரைத் தொட்டு, திட்டு வாங்கிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அதிசயம் நடராஜரே ஊர்ப் பெரியவரின் மூலம் தன்னை தொட்டுத்தூக்கி வண்டியில் வைக்கச் சொல்கிறார். எனக்கும் சந்தோஷம்! காலையிலிருந்து புகார்களை சுமந்த எனக்கு நடராஜரை சுமக்க ஒரு வரம்! பத்திரமாய் 6-7 பேர்சேர்ந்து விக்ரஹங்களை வண்டியில் ஏற்றி ஸ்வாமிமலைக்கு
அனுப்பி வைத்தோம்.
இம்முறை 01-01-2010 அன்று ஆருத்ரா (திரு ஆதிரை). திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம்
போயே ஆகவேண்டும் என்று மனதுள் திட்டம். ஆனால் காரோட்டி அன்பர், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் மோசமாய் இருக்கும் என்று போவதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ஸ்வாமிமலையில் வருடக் கடைசி மற்றும்
புத்தாண்டு தினங்களில் தங்குவதை கடந்த 4 ஆண்டுகளாக
எங்கள் கூட்டுக் குடும்பம் கடைபிடித்து வருகிறது. ``சரி இருக்கவே இருக்கிறார் அருகிலேயே இன்னாம்பூரார், என்று அவரைப் பார்க்க சென்றேன்.
அதே ஊர் பெரியவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ``வாங்க சார்
பரவாயில்லையே இந்த ஆருத்ரா தரிசனத்துக்கும் வந்துவிட்டீர்களே,” என்று கேட்டு, உடனிருந்த இளைஞர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் கோயிலில் நந்தவனம் அமைத்து எல்லா நன்னாட்களிலும் கோயிலில் விழாக்கள் செய்து வருவதாக தெரிவித்தனர். பாரம்பரியம் காக்க இளைஞர்கள் முன்வருவது கண்டு
மகிழ்ந்து, சென்ற வருடானுபவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, ``என்னவோ இம்முறை காலையில் வந்துவிட்டேன். இரவானால் நடராஜரைத் தொட்டு சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்” என்று சொல்லி, தரிசனம் முடிந்து
ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு வைடை பெற்றேன்.
புத்தாண்டு அன்று மாலை சுமார் 7.30 மணிக்கு ஸ்வாமிமலையில் எங்கள் குடும்பத்தார் தங்கத்தேர் இழுப்பது முன்னேற்பாடு செய்த நிகழ்வு. தங்கத்தேர் இழுத்துவிட்டு சற்று அமர்ந்தேன்!
திடீரென தேரோடும் வெளிப்ரகாரத்துள் ஒரு ட்ராக்டர் வண்டி உட்பிரவேசித்தது! என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு
குரல்!
“சார்! வாங்க சார், என்ன இங்க இருக்கீங்க? வந்து கை கொடுங்க! இன்னாம்பூரார் உங்களை தூக்கக் கூப்பிடறார்,” என்று பரிச்சியமான அந்த இன்னாம்பூர் பெரியவரின் குரல் ட்ராக்டரிலிருந்து வந்தது!!! அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் கண்டு உள்ளம் பூரித்தது, கண்கள் பனித்தன. திருநல்லம் போனால் என்ன, இங்கேயே கடைசி நிமிட ஏற்பாடாக இன்னாம்பூர் வந்தால் என்ன? நான் ஒருவனே”, என்று சொல்லாமல் சொல்லி இன்முறுவலை தந்த அந்த இன்னாம்பூரானின் விளையாட்டில் நான் அடிமையாகி, ஆனந்தக் கண்ணீரோடு, சிலையைத் தொட்டு வணங்கி, தூக்கி வைக்கக் கை கொடுத்தேன். சென்ற முறை சிறிது சுமையாக இருந்த இன்னாம்பூரார் இன்று லேசாக மிதந்தார்! அதே இன்முறுவலோடு என்னைப் பார்த்துக் கொண்டே ஸ்வாமிமலை கருவூல
அறையிலும், என் மனதுள்ளும் ஒருசேர உட்புகுந்தார்.
முதலில் இருப்பது சென்ற ஆண்டு எடுத்த படம்.
அடுத்தது 01-01-2010வில் எடுத்த படம்!
அலகிலா விளையாட்டுடையாரவர்க்கே சரண் நாங்களே!
30 September 2009
Very good way to enhance your loving life
17 May 2009
மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் - சுசி கணேசன்
ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் 1988 மாணவப் பத்திரிகையாளர்களாய் நானும், நண்பன் சு. கணேசன் என்ற இன்றைய பிரபல இயக்குநர் சுசி. கணேசனும் மற்றும் ஒரு மாணவி (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) மதுரை மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். காலத்தில் கோலத்தில், நான் மும்பை, பரோடா நகரங்களில் ப்ளாஸ்டிக் நிபுணனாய், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து, கடந்த 3 ஆண்டுகளாய் என்னால் முடிந்த சமூக சேவை செய்ய எண்ணியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை எங்கள் குழந்தைகளுக்கு எடுத்து இயம்ப என்ணியும் சென்னையில் வசித்து வருகிறேன். புராதனக் கோவில்களை சீரமைக்க ரீச் பவுண்டேஷன் (www.conserveheritage.org) எனது முக்கியப் பணிக் களம். அதனால் பல கிராம மக்களை சந்தித்து வருகிறேன்.
திரைப்படங்கள், தொ(ல்)லைக் காட்சி இரண்டையும் தவிர்த்து விட்டது எங்கள் குடும்பம். ஆனால், முதன் முதலாய் ஒரு திரைப்படத்தோடு என்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு, சுசி. கணேசனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளக் காரணம் மனித நேயத்தின் ஒரு பரிணாமத்தை நண்பன் சுசி தொட்டதுதான்!
சுசி.கணேசனுடனான தொடர்பை மிகுந்த சிரமங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டேன். சினிமா வட்டத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கஷ்டம். அதுவும் இயக்குநருடன்! துணை இயக்குநர்கள், உதவியாளர்கள் சமுத்திரத்தில் பழைய கல்லூரி நட்பைக் கூறி யார் உள்ளே விடுவார்கள்? அழைப்பிதழ் இல்லாமலேயே, பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பது கிராமங்கள் தத்தெடுப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஏன்? சினிமா வட்டத்துள் பணமே பிரதானம். அடுத்தவர் துயர் துடைக்கவோ, அல்லது சாமானியனைப் பற்றி எண்ணிப் பார்க்கவோ பிரபலங்களுக்கு நேரம் இருப்பதில்லை. மாணவ நிருபராய் இருந்த கணேசன், கிராமத்திலிருந்து வந்த கணேசன், பி.டெக் படித்த கணேசன், கனவுத் தொழிற்சாலையில் கோலோச்சும் கணேசன், திரைப்பட வரலாற்றிலேயே (உலக,இந்திய) யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எண்ணி, அதை நனவாக்கியுள்ளார். கந்தசாமி பட பூஜையின் போதே, 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதை அவரது தயாரிப்பாளர் கலைப் புலி தாணு அவர்களின் ஊக்குவிப்பால் அறிவித்தார். அது பாடல் வெளியீட்டு விழாவின் போது நிறைவேறியுள்ளது. 17/05/2009 மாலை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், முக்கியமாக பங்கேற்றவர்கள் அந்த 30 கிராமத்தினர்.சொந்த செலவில், பஸ்களில் நிரம்பி வந்தனர். சேர்த்த கூட்டமில்லை, தானாய் சேர்ந்த கூட்டம்!
கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆனந்த பவன், நல்லி அதிபர்கள் உட்பட 20 பேர், அதில் பெயர் சொல்ல விரும்பாத 8 பேர்கள்,அந்த 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். ராமசந்திரா, ஏ.சி.சண்முகம் மற்றும் அகர்வால் கண் - மருத்துவ நிலையங்கள் இந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் தருவதாக அறிவித்துள்ளன. வந்த விண்ணப்ப மடல்கள் 998. தத்தெடுத்ததோ, 30! எனவே மேலும் பல ஆர்வலர்கள் இந்தப் பணியை ஊக்குவித்து எடுத்துச் செய்ய வேண்டும் என்று எல்லாரும் வேண்டுகோள் விடுத்தனர். சினிமா செட்டிங் போடவே பலகோடிகள் செலவு ஆகும்.அந்தப் பணத்தை நிரந்தர செலவாக கிராமங்களில் செய்து, அவற்றை மாற்ற முயற்சிக்கும் சுசி.கணேசன், கலைப்புலி தாணு போன்றோரிடம் நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன், மீண்டும் கோருவதும் இதுதான்: நண்பா, என்னை இப்பணியில் நிரந்தரமாய் இணைத்துக் கொள்! நண்பா, கை கொடுக்கிறேன், தூக்கிவிடு, என் சேவை எண்ணத்தை, அதன் மூலம் பல காலப் பொக்கிஷங்கள் நிறைந்த,சிதிலமடைந்த கோவில்கள் கொண்ட பல கிராமங்களை! "
பார்க்க படங்கள்
30 April 2009
கோவில்களைப் பராமரிப்பது எப்படி
கும்பகோணம் உழவாரப் பணி அன்பர்களுக்கான பயிற்சிப்பட்டறை நன்கு நடந்தது என்பதற்கும், மக்களைப் போய் சேர்ந்தது என்பதற்கும் ஒருசாட்சி:
இந்த நிகழ்ச்சி நடந்த (11-1-2009) ஓரிரு நாட்களில், எங்கள் ரீச் பவுஃண்டேஷன் ஸ்தாபகர் திரு. சத்தியமூர்த்தி அவர்களூக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் மறு பதிப்பு இங்கே:
ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டுக் கழகம்
நன்னிலம், திருவாரூர் மாவட்டம்
தலைவர்: ச. வெங்கடேசன், எம்.எஸ்.சி.
85/34, கடைத் தெரு, நன்னிலம் – 610 105
பெருமதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’. தங்கள் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்ற ‘உழவாரப்பணி பட்டறையில் நான் செவிமடுத்த சில முக்கிய செய்திகளை ஒரு கட்டுரையாக எழுதி, ஞான ஆலயம், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமலர் பக்திமலர், ஆகிய இதழ்களுக்கு அனுப்பியுல்ளேன். அதன் நகல் ஒன்றினை தங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். மற்றவி தங்கள் கடிதம் கண்டு.
நன்றி
சிவசிந்தனையுடன்
(ஒப்பம்)
வெங்கடேசன்.
கட்டுரை: (இதில் விடுபட்ட செய்தியை நீல நிறத்தில் அடியேன் நிரப்பியுள்ளேன்)
திருக்கோவில்கள் – புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு
– ஒரு கண்ணோட்டம்
(மீண்டும் புதிதாய் பிறக்கும், காலத்தால் அழியா புராதன கட்டுமானக் கலைகள் என்று தலைப்பு இருந்திருக்கலாம் J)
`கோபுரம் சூழ் மணிக்கோயில்’ - என சம்பந்தரும்
‘கறைக் கண்டன் உறைக் கோயில் கோலக் கோபுர
கோகர்ணம் சூழாக் கால்களால் பயன் என்’ - என அப்பரும்
‘மண்டபமும், கோபுரமும் மாளிகையும், சூழிகையும்
மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரீகப் பொய்கைக்
காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர்கானே’ - என சுந்தரரும்
திருகோயில், திருக்குளம், கோயில்களில் மறைகள், திருமுறை ஓதியது, நடனம் மற்றும் சிற்பக் கலைகள், வளர்ந்த தரத்தினை இயம்புகின்றனர்.
இத்தகைய திருக்கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டும் அல்ல, தமிழ்மக்களின் பண்பாடு, கலை உணர்வு, கலாச்சாரம், நாகரீகம், ஆகியவற்றை உணர்த்தும் புராதன்ச் சின்னங்களாக விளங்குகின்றன. இந்த கலைப் பொக்கிஷங்களை பாதுகாத்து அடுத்ததலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எனவே, ஆலயப் புனரமைப்பு செய்வோர்கள், உழவாரப் பணி செய்யும் அன்பர்கள், கலைகளை வளர்க்கும் சிற்பிகள், ஆன்மநேய, ஆன்மீக அன்பர்களிடையே திருக் கோவில்களின் புனிதத் தன்மை, பாரம்பரியம் இவர்றை போற்றிப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.
அத்தகைய விழிப்புணர்வு பட்டறை, உழவாரப்பணி மக்களுக்காக, கும்பகோணம் பக்தபுரி தெருவிலுள்ள ‘பவளம்’ திருமண மண்டபத்தில், 2009, ஜனவரி 11ஆம் தேதி ரீச் பஃவுண்டேஷனால் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட உழவாரப்பணி, கலாச்சார ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.
விழாவில் வரவேற்றுப் பேசிய ரீச் நிறுவனர், டாக்டர். சத்திய மூர்த்தி அவர்கள், `அரசர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருக்கக் காரணம், அவை கட்டப்பட்ட விதம், அமைப்பு, பயன்படுத்திய பொருட்களின் தன்மையே காரணம். ‘தஞ்சை கோவிலின் அடித்தளம் எத்தனை ஆழம் இருக்குமென்று மேல்நாட்டு வல்லுநர்கள் விவாதித்து, சுமார் ‘130 அடி’ என்றார்கள். அது 15 அடியிலிருந்து 30 அடிக்குள் அடங்கிய அடித்தளம் என்றதும் வியந்து போனார்கள்! எனவே, அடித்தளம் சிதந்து போனதாக சரித்திரமே இல்லை. சரியாக பராமரிப்பில்லாமலும், மரங்கள், செடிகளை கோபுரங்களில் வளர்வதைத் தடுக்காமல் விட்டதே இந்த பெரும்பாலான கோவில்களின் சிதைவுக்குக் காரணம். எனவே, பாரமரிப்பது, பராமரித்ததை எப்படி காப்பது, சிதிலமடைந்ததை எப்படி பழம்பொருட்களைக் கொண்டு, அந்த வடிவழகும் நுட்பமும் மாறாமல் கட்டுவது என்பதி விளக்குவதே எங்கள் நோக்கம்,” என்று பேசினார்.
தலைமை வகித்துப் பேசிய தொல்பொருள் ஆய்வாளர், கலைமாமணி வித்யவாசஸ்பதி, சிலை மீட்ட செம்மல், டாக்டர். நாகசாமி அவர்கள், “கும்பகோணத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் உழவாரப்பணிக் குழுக்கள் அமைத்து கோவில்களை சீரமைக்க முற்பட்டதையும், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரசின் ஆதரவோடு நாட்டியக் கலை விழா நடத்தியும் நமது கோவில்களைப் பிரபலப் படுத்த முயன்றதையும் நினைவு கூர்ந்து, மக்கள் இன்னமும் கோவில்களை நமது கலாச்சாரச் சின்னங்களாய் பாவித்து, அவற்றை பராமரிக்கக் கூடிய விழிப்புணர்வு வரவில்லை, ஆயினும் ரீச் பஃவுண்டேஷன் ’ என்று வேதனையைப் பகிர்ந்து கொண்டார். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல சிறந்த கோவில் கலைகள் பற்றியும் கூறினார். அவற்றுள் சில:
§ குடந்தை நாகேஸ்வரர் கோவில் தேர் காலில் 12 சூரியர்கள் சிற்பங்களும், முன்னே இரண்டு யானைகள்,இரண்டு குதிரைகள் , இத்தனியும் பூட்டிய ரதத்துள் ஆடல்வல்லான் இருப்பது போன்ற கோவிலமைப்பு, குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் நடன மாதர் சிற்பங்களும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.
§ கோனேரிராஜபுரம் கோவிலின் மேல்விதானத்தில் அத்தலத்தில் நடைபெறும் விழாக்களையும், நடன கர்ணங்களையும் சிறப்பாக வரைந்து வைத்துள்ளனர்.
கருங்கல், சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், வச்சிரம் கலந்த சாந்தால் உருவாக்கப்பட்டவை, நம் திருக்கோவில்கள். இந்தக் கட்டிடங்களும் மனிதர்கள் போலவே சுவாசிக்கின்றன. அதனால்தான் அவை காலத்தல் அழியாதனவாக உள்ளன. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் பயன்படுத்திவரும் பொருட்கள் நீண்ட காலம் பலன் அளிக்கத்தக்க வகையில் அமையவில்லை என்பதே உண்மை. அரசர்கள் காலத்தில் கட்டிட கலைக்கு சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தப்பட்ட காரணாம் அதன் சுழற்சியால், அது அதிக பலம் பெறுகிறது என்பதால்தான்
சுண்ணாம்புச் சுழற்சி
CaCO3
சுண்ணாம்புக்கல் (-) CO2
(-)H2O (நீர்)
(-)CO2 கரிமல வாயு கரிமலவாயு
இரண்டும் வெளியேற்றம் CaO வெளியேற்றம்
மணல் சேர்ந்து, நீர், சண்ணாம்புக்கலவை கால்சியம் ஆக்ஸைடு


Ca (OH)2 நீர் சேர்ந்து
கால்சியம் ஹைட்ராக்ஸைடு
சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்) பதப்படுத்தப்படும் போது, அதிலிருந்து கார்பண்டை ஆக்ஸைடு வெளியேறி அது கால்சியம் ஆக்ஸைடாக மாறுகிறது. அதனுடன் நீர் சேரும்போது கால்சியம் ஹைட்ராக்ஸிடு கிடைக்கிறது. மணலுடன் சேர்ந்து கலவையாகிப் பூசப்பெற்றதும், அந்த பூச்சு உலறும் போது நீர் ஆவியாகி வெளியேறிவிடுகிறது. மீண்டும் கார்பண்டை ஆக்ஸைடு உட்புகுவதால் அது மீண்டும் சுண்ணம்புக் கல்லாக பாறி, பலம் அதிகரிக்கிறது. எனவே, மழைக் காலங்களில் நீரை உள்வாங்கி, வெயிலில் ஆவியாக வெளியேற்றுவதால், சுவாசத்தால், நீர் கசிவின்றி, இந்த சுழற்சி அதிகரிக்க, அதிகரிக்க காலங்கள் ஆக ஆக, சுண்ணாம்பால் கட்டபட்ட சுவர் அதிக வலு பெற்றுக் கொண்டே போகிறது.
எனவே புதிதாக புனரமைப்பு செய்பவர்கள் சிமெண்டுக்குப் பதிலாக சுண்ணாம்புச் சாந்தையே பயன்படுத்தினால், கோவில்கள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்பது உறுதியாகும். இந்த தொழில் நுட்பம் குறித்து ஆலோசனை வழங்க ரீச் (Rural Education And Conservation of Heritage) பஃவுண்டேஷன் போன்ற அமைப்புகள் முன் வந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் ப்ரத்யேகமாக கலந்து கொள்வதற்காக, சுண்ணாம்பு சுதை அறிவியல் வல்லுநர் டாக்டர். தபன் பட்டாசார்யா கல்கத்தாவிலிருந்து வந்திருந்து, இச்செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
மனிதர்களின் நோயை குணப்படுத்த மருத்துவர்கள் உள்ளதுபோல், இந்த திருக்கோவில்களின் புராதன அமைப்பு, புனிதத்தன்மை, பாரம்பரியம் கெடாமல் புதுப்பிக்க நிபுணர்கள் பலர் இப்போது ரீச் பஃவுண்டேஷன் மூலம் செயல் படுகின்றனர். புனரமைப்பு செய்பவர்கள் இவர்களைக் கலந்தாலோசித்து இப்பணிகளை செவ்வனே செய்யலாம்.
அடுத்து ‘தேவாரம் தந்த திருச் செல்வங்கள்’ என்ற தலைப்பில் பேசிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன், `அரசர்கள் காலத்து சிற்பிகளும், கட்டிடக்கலை வல்லுநர்களும் பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்களை நிர்மாணித்துள்ளனர். உதாரணமாக
§ கங்கை கொண்ட சோழபுரத்தில் வடக்கு வாயிலினருகே சண்டேசுவர நாயனார் கதை மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.
§ தாராசுரம் கோவிலில் திருச்சுற்றில் அப்பர் கைலாயக் காட்சியும், “மாதர் பிறை கன்னியானை,’ பதிகக் காட்சிகளும், 108 ஓதுவார்களின் சிற்பங்கள், அவர்கள் பெயர்களோடு வரிசையாக அமைத்த நன்றியுணர்வையும் காணலாம்.
§ மேலப்பெரும்பள்ளம் கோவிலில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மான் சிவபெருமானின் வலது கரத்தை தடவுவது போலவும், சிவபெருமான் வீணை வாசிக்க, அருகில் ஒரு பூதம் கேட்பது போல் சிற்பங்கள் அமைத்துள்ள அழகை அப்பர் சுவாமிகள்,
‘வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி, வலம் புரமே புக்காங்கே மன்னினாரே,’ என்றும்,
‘வட்டாணை யாடாலாடி வராணீ வாய் முரடிகள் வருவாரே,’ என சம்பந்தரும் போற்றிப் பாடியுள்ளனர்.
இப்படிப்பட்ட கலையுணர்வு மிக்க சிற்பங்கள், சிலைகள் கோபுரங்கள், விதானங்களில் பெயிண்ட் பூசுவதால், ரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த அழகு மாசு படுகின்றன. அதேபோல் காலச் சரித்திர பட்டயங்களான, வார்ப்புகளான கல்வெட்டுக்கள், கல் பிரித்துக் கட்டுகையில், மாற்றிக் கட்டப்பட்டு, கல்வெட்டுச் செய்திகள் தொடர்ச்சியற்றுப் போய் சிதைத்துவிடுகின்றனர். எனவே, கல் கோவில்கள் செப்பனிடுகையில், பழைய கற்களை வரிசை மாறாமல் எடுத்துக் கட்டுவது அவசியமாகும். உதாரணத்துக்கு, குடவாஇயில் அவர்கள் சொன்ன வேதனை தரும் ஒரு செய்தி:
திருவிடைவாய் கோவிலில் (குடவாயிலுக்கு அருகே, குறடாச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள கோவில்) முழுவதுமாய் தேவாரப் பதிகம் ஒன்று கல்வெட்டாய் கிடைத்த ஒரே ஒரு பதிவு, திருஞான சம்பந்தர் பாடிய
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்
பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1.1
ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்
செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்
எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது
வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே. 1.2
கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்
திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்
குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே. 1.3
கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்
பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்
வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே. 1.4
திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண
எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்
கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்
விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 1.5
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்
வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்
வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 1.6
பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்
நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்
கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு
வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. 1.7
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்
பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்
கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்
விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 1.8
புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்
ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்
தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்
விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே. 1.9
உடையேது மிலார் துவராடை யுடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்
அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த
விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 1.10
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்
மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை
நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்
கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே. 1.11
என்ற கல்வெட்டே,முதல் முதல் 1917ல் கல்வெட்டாக கண்டெடுக்கப்பட்ட ஆவணம். ஆனால்,மீண்டும் கோவிலை செப்பனிட்டுக் கட்டியவர்கள், கற்களை வரிசை மாற்றிப் பூசிவிட்ட படியால், ஒரு காலச்சுவடு, சரித்திரத்தில் அரிய பாடல், தேவாரம் கல்வெட்டாய் உள்ள ஆதாரம், சிதைந்துவிட்டது!
எனவே, விழிப்புணர்வோடும், விஷய ஞானத்தோடும் கோவில்களை புனரமைப்பது அவசியம். விமானங்களில் செடிகள் வளரவிடாமல், அவ்வப்போது பிடுங்கிவிட வேண்டும். பிடுங்கிய துவாரத்தில், சுண்ணாம்புக் கரைசலையோ, ஆசிடையே ஊற்றி மீண்டும் செடிகள் வளராமல் தடுக்க வேண்டும். திருக்கோவில் செப்பனிடும் பணியில் ஈடுபடும் அன்பர்கள் அனைவரும், இத்தகைய முறைகளை கடைபிடித்து பணி செய்வார்களானால், நனது காலச்சின்னங்கள் என்றென்றும் நம்மோடு இருக்கும். வரும் சந்ததியினருக்கு வரலாற்றின் படிமங்கள் மீஞ்சப் பெறும்.
தக்க செப்பனீட்டு முறைகளை தெரிந்து கொள்ள அணுகவும்:
REACH FOUNDATION
26/43,
மின்னஞ்சல்: reach.foundation.india@gmail.com
12 November 2008
பெண்ணியம் பேசும் பேனா திருமதி ராஜம் க்ருஷ்ணன்
இங்கே காணவும். சிறு தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பொறுத்துக் கொண்டு செய்தியின் சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
இதனை தமிழ் மரபுக் கட்டளையினர் மின்தமிழ் மூலமாக வெளியிட்டுள்ளனர். காண மட்டும் போதாது; தமிழ் வளர்க்கும் (?) அரசுக்கு எல்லாருமாய் குரல் கொடுத்து அந்த மாபெரும் எழுத்தாளருக்கு,இருக்க இடம், போதிய மருத்துவ வசதி, அவர் படைப்புகளை தேசீயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடச் செய்ய வேண்டும்.
அந்தப் பதிப்பைக் கீழேயும் தந்துள்ளேன்:
=============================================================
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் - பெண்ணியம் பேசும் பேனா
[திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)]
[ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். விஷ்ராந்தியின் நிறுவனர் சாவித்ரி வைத்தி இவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு கைகளை வைத்துக் கொண்டு எழுத லகுவாக மேசை செய்து தர எண்ணம் என்று சொன்னார்.] இன்றோ கூர் மழுங்கினாலும், மையின் தாக்கம் குறையவில்லை!
ராஜம் கிருஷ்ணன். 5/11/1925 பிறந்த நாள். நானும் தமிழ் தேனீ க்ருஷ்ணமாச்சாரி அவர்களும் அம்மாவை சந்தித்தது, சனிக்கிழமை அன்று.(1/11/2008)
'அவன் ஏன் இன்னும் என்னையெல்லாம் அழைத்துக் கொண்டு போகவில்லை?' என்றார், திடுப்பென்று! மனம் கனத்துப் போனது. இவருக்கே உலகில் இடமில்லை என்றால், தமிழ் தமிழ் என வெற்றுப் பறை சாற்றும் 'தமிழ் மானத் தலைவர்களுக்கு' ஏன் இங்கே இடம் விட்டு வைத்துள்ளார்கள்?
தலை நரைத்திருந்தது. ஆனால் குரலில் சிந்தனையில் காரம் குறையவில்லை. அவர் பேசப் பேச இதுவன்றோ பெண்மை? இதுவன்றோ உண்மை பெண் குரல், பெண் உரிமை என்றெல்லாம் மனம் கொக்கரித்தது. பேனாவின் முனை மழுங்கினாலும், அதிலிருந்து வரும் செய்திகள் சாட்டையடிகள் போலவே மிளிர்ந்தன!
தமிழ்த்தேனீ ம்ருதுவான அவர் குரலைப் பதிவு செய்தாலும், எங்கே செய்திகள் விடுபட்டு விடுமோ என்று, நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.
அவற்றில் சில...
விடுபட்ட விருதுகள்..
- சாகித்ய அகாடமி –இரு முறை
- பாரதீய பாஷா விருது, சோவியத் நாடு – நேரு விருது 1975
- ந்யூயார்க் ஹெரால்டு சர்வதேச விருது. இது எதற்காக என்று அவரையே கேட்டேன். (பெண்ணியத்தை வெளிப்படுத்தக் கூடிய எழுத்துக்களுக்கு ஆசியாவிலிருந்து வருடம் ஒருவரை தேர்வு செய்து பரிசுகள் வழங்குவார்களாம். 1950 வருடத்திய விருது இவருக்கு கிடைத்துள்ளது.)
- கலைமகள் விருது 1973
- திரு.வி.க விருது 1991
மொத்தம் 59 படைப்புகள் வெளிவந்துள்ளன.
அதைப் பற்றி அவர் கூறுகையில்,'சமூகப் ப்ரக்ஞையும், பெண்களை அவலமாய் சித்தரிக்கும் போக்குமே என்னை எழுத வைத்தன. நானும் பல பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். பதிவுத் தபாலில் திரும்பி வரும். ஆனால், முதன் முறையாக திருச்சி வானொலிக்கு எழுதிய நாடகம், ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சாதாரண தபாலில் செய்தி வந்தது!
அவசரச் சட்டம் பிரகடனமான போது எழுதிக்கொண்டிருந்த ஒரே பெண் எழுத்தாளர் இவர்தானாம்.
திருச்சி வானொலியில், இவரது நாடகமான 'ஷட்டில் வண்டி' (லால்குடி – திருச்சி இடையே செல்லும் வண்டியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை) நேரடியாக வாசிக்கச் செய்ய அழைத்தார்களாம். தாயாருடன் சென்றிருந்தார். முன்பெல்லாம், நேரடி ஒலிபரப்பு ஆதலால், அங்கே காகிதங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், இயக்குநர் கையை மேலே உயர்த்தினால் குரலை உயர்த்த வேண்டும், கீழே இறக்கினால், குரலையும் சற்று மட்டுப் படுத்த வேண்டும்.புடவை சரசரப்புகள் பதிவு ஆகக் கூடாது, என்று பல கெடுபிடிகள். இவருக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தை விட, மிக வேகமாக, உணர்ச்சி பூர்வமாக தன் கருத்துக்களை கொட்டி விட்டு அமர்ந்திருந்தாராம். எனவே, வெளியில் வந்ததும், அப்போது இருந்த தொழில் நுட்ப வல்லுநர் ஹகிம் என்பவர்,'அப்பப்பா,உங்களுக்கு கடிவாளம் போடவே முடியாதும்மா! புருஷன் எப்படி மாட்டப் போறாரோ?' என்றாராம்.
இவர் பேசியதில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது, ஆதாரத் தகவல்கள் சேர்த்த பிறகே அவர் கதைகளை உருவாக்குவார் என்பது. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை வருணித்துக் கொண்டே போனவர், நடு நடுவே, 'இதுதான் என் ப்ரச்னையே! எதிராளியை பேசவே விட மாட்டேன்!" நானே பேசிக் கொண்டிருப்பேன்!" என்றார்.
அதேபோல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு வைத்தியமும் பார்த்து, கையில் பணமும் கொடுத்து அனுப்பியதைப் பார்த்து இவரது நண்பர் திரு. ராமஸ்வாமி சாஸ்திரி என்பவர், " உயிர் கொடுத்தான் அதனொடு, உடமையும்,பொருளும் கொடுத்த நவீன கடவுள் இவன்," எனும்பொருள் படியான ச்மஸ்க்ருத சுலோகத்தை பாடி, டாக்டரை புகழ்ந்தாராம்! நண்பர் ஆதலால்,மவுனம் காத்த டாக்டர். ரெங்காச்சாரிக்கு,கடவுள் நம்பிக்கை கிடையாதாம்!
சிகிச்சைக்கு படுத்திருந்த நோயாளி ஒருவர் கையில் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தைப் பார்த்து டாக்டர் கோபம் கொண்டு, "அதை நம்புறதா இருந்தா ஏன் என்னிடம் வரே?" என்று கடிந்து கொண்டாராம்!
"என் கணவர் காலாஅஜார் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்.அன்பும், அரவணைப்பும், நல் வார்த்தைகளும் சொல்லி, வைத்தியம் பார்த்த பாங்கைக் கண்டு அவரைப் பற்றி விசாரிக்க, ஊரே புகழ்ந்ததால், உந்தப்பட்டு அவரின் சரிதத்தை கதையின் நடையில் எழுதினேன்" என்றார்.
அதே போல், 'முல்ளும் மலர்ந்தது' என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்து பேசியதாலேயே!
தனது சகோதரரின் உதவியுடன் தொலை தொடர்பு துறை நண்பர்கள் மூலம, க்வாலியரில் போய் இறங்கினாராம்! பணியில் இருந்த கணவருக்கு பணி நீட்டம் செய்திருந்தாலும், அதனை உதறச் சொல்லிவிட்டு க்வாலியர் வந்து சேரும்படி சொன்னாராம்!
அங்கே, சரணடைந்த கொள்ளையர் ஒரு பக்கம். கொள்ளை,கொலைகள் செய்து கொண்டு பிடி குடுக்காத கும்பல் ஒரு பக்கம். முதலில் கூறிய மக்களைப் பற்றி அதிகமாக யாரும் எழுதாததால், அதைப்பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணி, அவர்கள் சரணடைந்தவுடன் வந்து சேரும் ஒரு ஆசிரமத்தில், (முன்னாள்) கொள்ளையரை சந்திக்கச் சென்றாராம்.
அதில் மறைந்த மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொருமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!
மற்றொரு சரணடைந்த கொள்ளையன் மகாவீர் சிங்கை, அவனது இல்லத்தில் சந்திக்க போகையில், இருட்டிவிட்டதால், அங்கேயே கணவன், மனைவி இருவரையும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தானாம்! உபசாரமாய் நல்ல சப்பாத்தி, சப்ஜி (காய்கறி) தந்து, பின்னர் குளிருக்கு இதமாய் ரஜாயும் (கம்பளி) தந்தாளாம் அவனது மனைவி.
காலையில், கண் விழித்துப் பார்த்த ராஜம் அம்மாவின் கண்களில், அவனது மனைவி அணிந்திருந்த அதிகப்படியான கனத்த நகைகளே பட்டுக் கொண்டிருந்தது! கால்களை தொட்டு கும்பிட்டு வழியனுப்பியவளிடம் அம்மா, "இவை உங்கள் ஊரில் தாலியா?" என்று கேட்க, கணவனான மகாவீர் சிங் சிரித்துக் கொண்டே, "எல்லாம் கொல்ளையடித்தவை" என்று சொல்லி இடிச் சிரிப்பு சிரித்தானாம்! இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து வழியெல்லாம் சொன்ன திரு. இந்தூர்க்கர் இவர்களை (மும்பை) அன்றைய பம்பாய்க்கு ரயில் ஏறி அனுப்பி வைத்தாராம். அங்கே தேஷ்முக் என்பவரை சந்திக்கச் சொல்லியிருந்தாராம். தேஷ்முக்கிடம், "திரு. இந்தூர்க்கர் எங்களை அனுப்பி வைத்தார்," என்றதும். "Mr. Indurkar was shot dead yesterday," என்ற அதிர்ச்சி செய்தியை சொல்லி, செய்தித் தாளைக் காட்டினாராம்!
கணவரின் அரசுப்பணியினால், வட மாநிலங்களில் தங்க நேர்ந்ததையும், அப்போதைய கோவாவை தனி மாகாணம் ஆக்குவதா, மகாராஷ்டிரத்தோடு சேர்ப்பதா என்ற சண்டை நேரங்களில், பல இடங்களுக்கு மாற்றப்பட்டதை நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.
உங்களுக்கு இப்போது எத்தனை பாஷை தெரியும்? எனக் கேட்டேன்.
"ஏழு - 7?" என்றார் சிரித்துக் கொண்டே!
இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் என்னை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! அந்த புத்தகம் எங்கோ போய்விட்டது என்றார் ஆதங்கத்துடன்.
இவரது உறுதியைப் பார்த்து கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 'உன்னை பார்த்தால், பத்ரகாளியைப் பர்ப்பதுபோல் இருக்கிறது," என்பாராம்!
தனது நடை, பற்றி பேச்சு வருகையில்,
(தேனீயார், "நீங்கள் ப்ராம்மண பாஷையிலேயே எழுதுவதாக.. என்று ஆரம்பித்தவுடனேயே, வேகமாக மறுத்து,)
"அப்படி முத்திரை பதிந்துவிடக் கூடாதென்பதில் நான் கவனமாய் இருந்தேன்.
கருப்பு மணிகள், வேருக்கு நீர் போன்ற பதிவுகளில் ப்ராம்மண பாஷை எங்கிருந்து வந்தது?
பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியே என் ஆதர்சன குரு. உண்மை, நெஞ்சில்பட்டது, சமூகப் ப்ரக்ஞை – இவை மூன்றுமே நல்ல எழுத்தாளனை வெளிக் கொணரும்.
பிற எழுத்தாளர்களைப் பற்றி கூறுகையில், தயங்காமல், தன் கருத்துகளைப்பட்டென போட்டு உடைத்தார்! லா.ச.ரா – பிறர் புகழ்ந்தாலும், எனக்குப் பிடிக்காது. காரணம், பெண்களை அவர் போகப் பொருளாக மட்டும் பார்த்தார்! சுஜாதா எத்தனை அறிவு ஜீவி,படித்தவர்? அவரும், பெண்களை அவர்களது அங்கங்களை வருணித்து எழுதுவதை தவிர்த்திருக்கலாம். அதே போல் ஜெயகாந்தன். பெண்கள் என்று ஒரு மனிதனாக மதிக்கப்பட்டு, கதைகளில் வெளி வருகிறார்களோ,அன்றுதான் தமிழ் எழுத்துக்களுக்கு விடியல்!" என்றார்!
அதோடு திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை! பாலசந்தர் என்று ஒருவர். இரண்டு பெண்டாட்டிக் கதை,பெண்களின் அந்தரங்கங்கள், இவற்றையே படம் எடுத்து 'சிகரம்' என்று பேரெடுத்தவர். சினிமா, பெண்களை இன்றும் தவறாகவே சித்தரிக்கும் ஒரு ஊடகம். அதிலிருந்தும் பலர் என் கதைகளைக் கேட்டனர். தர மறுத்து விட்டேன்," என்கிறார்!
சிறிய வயதில் தாம் பார்த்த படைப்புகள், படங்களான,
agony in ecstasy,
flower girl,
biography of Abraham Lincoln,
Ten Commandments,
போன்றாவையே தம்மை படைப்புலகத்திற்கு ஈர்த்தன- "எப்படிப்பட்ட காவியங்கள்? தமிழில் அப்படி எடுப்பதற்கு யார் உள்ளனர்?" என்கிறார்.
கணவரின் ஊக்குவிப்பு, ஒப்புதல் பற்றி பேசுகையில், "எந்த சூழ்நிலையிலும், தவறு செய்ய மாட்டேன், என்ற என் மேல் இருந்த நம்பிக்கையே," தன்னை சுதந்திரமாக பணி செய்யவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் சகோதரனையும், அங்கே மருத்துவ காரணங்களால், 'சூழ்நிலைக் கைதி'யாய் இருப்பதையும், நடக்க இயலாமை பற்றியும், எப்போதும் கத்திக் கொண்டிருந்த தொ(ல்)லைக் காட்சிப் பெட்டியில் லயித்திருந்த பணிப் பெண்களின் அலட்சியம் (இருவர் தவிர – புகைப் படத்தில் கண்ட அம்மணி, மற்றும் சத்யா எனும் இளம் பெண்- அவர் புகைப்படத்திற்கு மறுத்துவிட்டார்), நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சுற்றியுள்ள முதியவர்களின் சோகம் போன்றவற்றையும், ஒரு படைப்பாளியைப் போலவே, கோர்வையாகப் பேசிப் பதிவு செய்தார்!
எங்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "மனித நேயம், பெண்மை இரண்டுக்கும் மதிப்பு கொடுங்கள், அதுவே மனிதத்தை உயர்த்தும்,"என்றார்.
83 வயதிலும், தெளிந்த பேச்சு, தீர்க்கமான கருத்துக்கள், என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அழகிய கண்ணாடி ஜாடி போன்றே அவரது மனம் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். யாரும் உதவி செய்வதை அவர் விரும்பவில்லை, என்பதும், தமது இந்த நிலை குறித்த வருத்தம் அவர் பேசியதில் வெளிப்பட்டது.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுதான். அதேபோல்தான் அம்மாவும். ஆனாலும் புலிக்கேற்ற உலவு தளம் தருவது, மிருக ஆர்வலர்களின் கடமையன்றோ? மிருகத்திற்கே அப்படி என்றால், தமிழில் தடம் பதித்த ஒரு பெண் எழுத்தாளருக்கு?
தங்குமிடமும், வைத்திய செலவும், தமிழ் வளர்ப்பதாகச் சொல்லும் அரசு ஏன் உடனடியாக செய்யக் கூடாது?
காலம் பின்னிரவு ஆகிவிட்டமையால், மனமின்றி அவரிடம், பிரிய மனமில்லாமல், பிரியா விடை பெற்றுக் கொண்டு வந்தோம்.
11 November 2008
மகாபலிபுரத்தில் ஒரு பசுமைக் கற்பழிப்பு!
உலக புராதனச்சின்னமான மாமல்லபுரத்தில் பசுமைக் கற்பழிப்பு!
மாமல்லபுரத்திலுள்ள த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே, ஒரு நவீனக் கழியலறைக் கட்டப்படுள்ளது. அழகான புராதனச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இத்தகைய நவீனத்துவம் தேவைதானா?
பார்க்க வருபவர்கள் தங்கள் சிரமபரிகாரங்களை அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலோ, அருகாமையிலுள்ள சிற்றுண்டி சாலைகளின் ஓய்வறைகளிலேயோ செய்து கொள்ளலாம். அப்படியிருக்க, புராதனத்தைக் கெடுக்கும் இந்த நவீனம் தேவைதானா?
புராதன ஆர்வலர்கள் இந்த நவீன கழிப்பறைக்கு பின்புறமாய் தொடங்கும் இடத்திலிருந்து, குன்றுகளைச் சுற்றி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த, கோரமண்டல் வரண்ட பசுமைக் காடுகளிலேயே இயற்கை மாறாமல், இன்றும் உள்ள காடுகளினூடே நடந்து சென்று, இயற்கை அழகையும், மிகவும் காண்பதற்கு அரிய தாவரங்களைக் கண்டும் மகிழ்ந்து வந்தனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காடுகள் இருப்பதே தெரியாது. கள்ளக் காதலர்களும்,
தண்ணியடிப்பவர்களும், ஊரைச் சுற்றி செல்ல சோம்பல்பட்டு, குறுக்கு வழியில்
செல்பவர்களுக்கும் தான் இந்த இடம் பரிச்சயம். ஆனால், அவர்களால், மரங்களுக்கு இதுவரை எந்த கெடுதலும் வந்ததில்லை.
ஆனால், ஏ.எஸ்.ஐ. எனும் அகில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் நேர் கண்காணிப்பில், வேலிகளால் வரையறுக்கப்பட்ட இடத்துள் இன்று, பாதி, காட்டு தீ வைத்தும்,புல்டோசர்களாலும், அரிவாள் அழிப்பினாலும், அழிக்கப்பட்டு விட்டது!
கேள்விப்பட்டதும், குடும்பத்தில் ஒருவருக்கு தீ விபத்தால் மரணம் ஏற்பட்ட தாக்கத்தோடு அங்கே வந்த இயற்கை ஆர்வலர்கள், பல தகவல்களை நமக்கு அளித்தனர்.
170க்கும் மேற்பட்ட அரிய தாவர வகைகள் இங்கு வளர்ந்துள்ளன. அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்!
பாலைவனங்களில் மட்டும் வளரும் குட்டை பேரீச்ச மரங்கள் (100 வயதானவை) சில அழிந்துவிட்டன். சில பிழைத்துள்ளன.
பேய் அத்தி, கரடிப்புங்கம், என்றூம் பசுமை இலைகள் கொண்ட,இலையே உதிராத கார்சினியா ஸ்பிகடா வகை மரங்கள், ஆலமரத்திலேயே அதிக வைரம் பாய்ந்த, வேர், விழுதுகள்
விடாத வகை மரங்கள், சில காப்பிச் செடிகள், காட்டு எலுமிச்சை, ஒரு சில கருங்காலி மரங்கள், 250 வயது தாண்டிய டெரிஸ் ஸ்காண்டன்ஸ் எனும் அரிய வகைக் கொடி, போன்றவை, அதிர்ஷ்ட வசமாக உயிர் 
தப்பியுள்ளன.
ஆனால் பல கணக்கற்ற 100 வயதிற்கும் மேலான மரங்கள், புகை கக்கியபடி சாய்ந்துள்ளன! அந்த புகை மூட்டமும், கருகிய மரங்களையும் காண்கையில், நமக்கும் நெஞ்சு விம்மியது.
த்ரிமூர்த்தி குகையிலிருந்து, இக்காட்டின் நடுவேயுள்ள கோனேரிக் குடைவறைக் குகை
வரையிருந்த மரங்கள் எல்லம் வெட்டப்பட்டுவிட்டன!ஒரு சில நாட்கள் முன்னர், ஒற்றையடிப் பாதையாய் இருந்த காட்டு வழி, வெயில் படாத இயற்கை இன்று இல்லை. புல்டோசர்களும், லாரிகளும் சென்று, பாதையில்,
கோனேரி மண்டபத்துக்கு நேர் எதிரே, வேலி வரை செல்லும் இப்புதிய பாதை, அங்கேயே முடிவடைகிறது! வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பெரிய நீர் நிலை,கண்மாய் போல். புதிதாக அதன் கரைகள் உயர்த்தப் பட்டிருப்பது தெரிகிறது.
மரங்களை சாய்த்துவிட்டு, அப்படி என்ன செய்யப் போகிறார்கள்?
படகு சவாரி செய்யும் படகுத் துறை ஏற்படுத்தப் போவதாகக் கேள்வி! மல்லைக்கு அருகிலேயே முத்துக்காடும், முதலியார்குப்பம் படகுத் துறைகளும் கடலன்னையை வருடியபடி இருக்கையில், இந்த குளம் குட்டையில், அப்படி என்ன படகு சவாரி செய்ய மக்கள் வரப் போகிறார்கள்? இல்லையேல், மேலும் நவீன கழிவறைகள் கட்ட என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர்.
தொல்பொருள் அதிகாரிகளைத் தொடர்பு செய்ய முயன்றால்,அவர்கள் சிலைகளுக்கும், சின்னங்களுக்கும் மட்டுமே பாதுகாவலர்கள் (?) என்றும், இந்த காடுகளை மைசூரிலிருந்து ஏ.எஸ். ஐ யின் தோட்டக் கலைத் துறையினர் நேர் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.
இந்த காடுகளிலுள்ள அத்தனை தாவரங்களையும் இனம் கண்டு, தாவரப் பெயர்களைப் பதிவு செய்ய சுமார் மூன்று மாதங்கள் உழைத்த பேராசிரியர்கள், எஸ்.சுவாமிநாதன், திரு. அஜித் தாஸ், மற்றும் அவர்களது ஆராய்ச்சி மாணவர்களின் உழைப்பால் பல அரிய தாவரங்கள் இங்கே, இந்த கோரமண்டல், வரண்ட, என்றும் பசுமையான காட்டில் இருப்பதை உலகிலுள்ள பல கருத்தரங்களில் வரவேற்று மெச்சியுள்ளனர்.
சில அரிய மரம், செடி, கொடிகளும், அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டும் உள்ளது என்பது, ஆஸ்திரேலியாவி
லிருந்து வந்த சில ஆராய்ச்சியாளர்கள் சில தாவரங்களை என்ன விலையானாலும் தருகிறோம் என்று சொன்னதும், அதற்கு நமது தாவரவியல் ஆர்வலர்கள், ‘இந்தியாவிற்கென பெருமை சேர்க்கும் சில விஷயங்களில் இங்கு வளரும் இந்த தாவரங்களும் ஒன்று. உயிர் போனாலும் தரமாட்டோம்’ என்று
மறுத்ததும், இந்த அரசுதுறை அரைவேக்காடுகளுக்கு எங்கே தெரியப் போகிறது? இவர்கள் இத்தொடு நிறுத்திக் கொண்டு, இந்த காட்டை தாவரவியல் ஆர்வலர் குழுக்களிடையே ஒப்படைத்துவிட்டால், மீண்டும் அக்காட்டின் அழகும் பெருமையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நந்தவனம் அமைக்க வாய்ப்புள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு அரிய இயற்கைச் செல்வங்களை கற்றுத் தர வழி உள்ளது. அதற்கு வேண்டியவர்கள் வழி செய்வார்களா, இல்லை ஆயிரம் தடை சொல்லி மரங்களை
அழித்து அவப்பெயர்பெற்று, செல்லாக் காசுக்குப் படகுகள் ஓட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது கழிப்பு அறை தந்த செம்மல்கள் என்று மெடல் வாங்கி சட்டையில்லா கல்நெஞ்சுகளில் குத்திக் கொள்ளப் போகிறார்களா?
இந்த மல்லை குகைகளைச் சுற்றியுள்ள, குறிப்பாக இந்த காட்டினருகேயுள்ளஏ.எஸ்.ஐ யின் கம்பிக் கதவுகள் என்றும் திறந்தபடியே உள்ளன.
நாம் குறிப்பிட்டபடி, சமூக விரோதிகளும், குடிகாரர்களும்,
கள்ளக் காதலர்களும், புதிதாக எரிந்துபோன மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் கிராம மக்களையும்தான் அங்கு பார்க்க
முடிகிறது. உலக அளவு அந்தஸ்து பெற்ற புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களிலா இந்த அவலம்? தாவரயியல் துறை மைசூர் அதிகாரிகளின் கட்டுபாட்டில் உள்ளது சரி. இந்த சரித்திரச் சின்னங்களின் பாதுகாப்பு யார் கையில் உள்ளது? கொடுமை என்ன என்றால், நாம் சென்ற அதே ஞாயிற்றுக் கிழமைதான், பெல்ஜிய மன்னர், ராணியான ஆல்பர்ட், பவோலா தம்பதியரை அரசு மரியாதையோடு, சென்னை வட்ட அகில இந்திய தொல்பொருள் துறைத் தலைவி சத்யபாமா பத்ரிநாத் அவர்கள் மாமல்லபுரம் சுற்றிக் காட்ட அழைத்து வந்திருந்தார்கள். நல்ல வேளை அவர்களை இந்த கருகிய காட்டிற்குள் அழைத்து வரவிலை.வந்திருந்தால், நமது மானம் படகு அல்ல, கப்பல் கடந்து, பல நாடுகளுக்குப் போயிருக்கும்!
இதை பச்சைக் கற்பழிப்பு, அல்லது இனப் படுகொலை என்று சொல்லாமல், வேறு எப்படி அழைப்பதாம்?
இருக்கும் மரங்களைக் காக்க ஒரே வழி, இதை இயற்கை ஆர்வலர்கள் கொண்ட தனிக் குழுவின் பராமரிப்பில் விடவேண்டியதுதான். வாடிய பயிரையும் கண்டு வாடிய வள்ளலார் பிறந்த தமிழ் மண்ணில், இப்படி உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள இடத்திலேயே ஒரு பச்சைக் கொலை நடந்திருப்பது ஒரு பொது நல வழக்குக்கான விஷயம்தானே? அரசு நடவடிக்கை எடுக்குமா?
எதோ என் நல்ல நேரம், ஊடகத் துறையினர், (தொலைக் காட்சி மற்றும் தினசரிகள்) இதை உடனடியாக வெளியிட்டும்,பிரசுரித்தும், ஆவன செய்வதாய் உறுதியளித்துள்ளனர். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அச்சுகளில் ஏறி காலை (புதன் கிழமை- இந்திய நேரப்படி) வரும் என்ற நம்பிக்கையோடு தூக்கம் இழந்துவிட்ட கண்களை தூங்க வைக்க முயல்கிறேன்.. திரைப்படமாகவும் இதை எடுத்துள்ளேன். விரைவில் அதை சீர் செய்து வெளியிடுவேன். அடுத்த முறை இந்த மாதிரி தவறை ஜென்மத்துக்கும் துறையினர் செய்யக் கூடாது! :( நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்!
தினமலர் சென்னை பதிப்பில் 12-11-2008 ல் வெளிவந்த கட்டுரை
சற்றுமுன் கிடைத்த தகவல்: (16 நவம்பர் 2008)
எனது பத்திரிகை நண்பி ஏ.எஸ்.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, முதலில் மறுத்தவர்கள், பின்னர், அரிய மரங்களை எங்கே வெட்டினோம்? புங்கை, வேம்பு போன்றவற்றை மட்டும்தானே வெட்டினோம்,” என்றார்களாம்.
அப்படியாகில், 100 ஆண்டுகள் மேல் தாண்டி விட்ட அந்த ‘பொது' மரங்கள் அரியவை ஆகும் நாள் வந்துவிட்டதே! இதோ, இவர்கள் அவற்றை வெட்டி, அவற்றை ‘சரித்திரம்' ஆக்கிவிட்டார்களே! சுற்றியுள்ள மரங்களை வெட்டிவிட்டால், நாம் குறிப்பிட்ட அரிய மரங்கள் மேலே விழும் வெயில் காற்று, சீதோஷ்ண நிலை மாறி, ‘என்றும் பசுமை' யாய் அவற்றை வைத்திருக்கக் கூடிய நிலமையும் மாறி, அந்த ‘அரிய' மரங்களும் அழிந்துவிடாதோ?
படகுத்துறை அமைப்பதை சுற்றுலா துறையினர் மற்றும் தொல்பொருள் துறையினர் இருவரும் மறுத்துவிட்டனராம். எனில், மண்ணைத் தோண்டி. அந்த நீர் நிலையை அதிகம் செய்தது யார்? பொது பணித் துறை என்ற பதில் வந்துள்ளது! எதற்காம்? ஊரிலுள்ள 36 நீர் நிலைகளாஇ மழை வலுக்குமுன் ஆளப்படுத்தி நீர் வளத்தை அதிகப் படுத்துவதற்காக இந்த குளத்தையும் சீர் செய்தார்களாம்! சுற்றியுள்ள மரங்களே கரை கெட்டிப்படுத்தி மண் சரியாமல் இருக்க ஆதாரம். அவற்றை வெட்டி நீர் நிலை சரி செய்வதஎன்பது, கண்ணைக் விற்று சித்திரம் வரைவதை போல் ஒப்பிடுவதாகும்!
Update: 19th Nov 2008
news in NDTV on this. I appear for few seconds!!!
நற்செய்தி: மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.
மரபூர் ஜெய.சந்திரசேகரன்.



