29 June 2006

"கதைச்சது" வெளிவந்தது!!

நிலாராஜ் தனது பதிவில் சொன்னது போல், போட்டி என்றால், எங்கிருந்தோ நேரம் கிடைத்துவிடுகிறது.

அவசரப் பிரசவமானாலும், சுகப்ரசவமே! நிலாச்சாரல் ஆண்டு நிறைவுப் போட்டிக்கான கடைசி நாள், கடைசி நொடித்துளிகள் இருந்தபோது, இந்திய நேரப்படி, மிகக் கடைசியாக சமர்ப்பித்த சோம்பேறிப் போட்டியாளன் நானொருவனாகத்தான் இருக்கமுடியும்!! நிலா பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெற்றாலும், அவரது இணைய பத்திரிகையில் எனது கதையும் கவிதையும் வெளியிடப்படுவதில் எனக்கு பரிசு கிடைத்த மகிழ்ச்சி!! அனுராதா ரமணனும், கபிலன் வைரமுத்துவும் எழுதிய வரிசையில், இந்த சின்னபையலின் கிறுக்கலும் உட்புகுந்தது அதிசயமே!! அவற்றின் சுட்டி இதோ:-

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_265a.asp
http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_264a.asp


போட்டி என்றதும், நினைவுக்கு வருகிறது ஒரு முடிவே தெரியாத போட்டி! துவக்கு.காம் "புலம் பெயர்ந்தவர்"களைக் கருவாகக் கொண்டு கவிதை எழுத ஒரு போட்டி அறிவித்து நிறைய பேர் எழுதி அனுப்பினார்கள். இன்றுவரை என்ன ஆயிற்று தெரியவில்லை; யாரேனும் கண்டுபிடித்துத் தருவார்களா?

29 April 2006

கல்லிலே கலை வண்ணம் -6

வரலாறு.காம் என்று பொன்னியின் செல்வன் யாஹ¤ குழுமத்திலிருந்து சிலர் தனியாக ஆரம்பித்து, அது இப்போது சரித்திரம் படிப்பவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழ் ரசிகர்கள், தமிழ்நாட்டுக் காதலர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது! நான் எழுதிய புள்ளமங்கைக் கோயில் சிற்பங்களை படித்த நண்பர் சேஷாத்ரி கோகுல், தான் வரலாறு.காமில் எழுதிய புள்ளமங்கை கட்டுரையை மீண்டும் உயிர்பித்து, எனது சில படங்களோடு சேர்த்து வெளியிடுள்ளார்! அவருக்கு நன்றி. நண்பரின் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கணினி வல்லுநர் எப்படி சரித்திரத் தேர்ச்சி கொண்டார் என்பதற்கு விடை :- இம்மாதிரியான சிற்பங்களை பார்க்கும் எந்த கலா ரசிகனுக்கும், நமது முன்னோரின் உயரிய கலை ரசனயும், திறமையும் வெளிப்படும்; அது நம்மை சரித்திரக் காதலன்/ காதலி ஆக்கிவிடும். (வரலாறு.காம் மா.லாவண்யா கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதால் )
ஒரே சிலை இருவரின் உள்ளங்களில் எப்படி வேறு வேறு உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளது என்பது பற்றியும் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவே, இந்த பதிவு.அந்த சுட்டிகளை மீண்டும் ஒரு முறை தருகிறேன்:-

http://varalaaru.com/Default.asp?articleid=325http://maraboorjc.blogspot.com/2006/01/1.html
http://maraboorjc.blogspot.com/2006/02/2.html
http://maraboorjc.blogspot.com/2006/02/3_06.html
http://maraboorjc.blogspot.com/2006/02/4_08.html
http://maraboorjc.blogspot.com/2006/02/5.html

12 April 2006

கோவில்களை யார் சீரமைப்பது?

கீதா சாம்பசிவம் கேட்ட ஒரு கேள்வி என்னை இந்த பதிவு எழுத வைத்து விட்டது! இந்து என்ற போர்வையை போர்த்திக்கொண்டுதான் நான் கோவில் பணி செய்யவேண்டுமா? ஒரு நாட்டுப் பற்று உள்ள இந்தியனாக இதை நான் செய்யக் கூடாதா? என நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால்,ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லக் கூடாது என்பார்கள். அதனால் அதை தவிர்ப்போம். அதற்கு அவர்களே கூறிய காரணம் என்ன தெரியுமா? "எங்காளுங்களுக்குத் தெரிஞ்சா விலக்கி வெச்சுடிவாங்க சார். எனக்கு மனசுல ஈரமுண்டு, செய்றேன், ஆனா ஆளுங்கள பகைச்சுக்க தைரியமில்ல," என்றுதான். அத்தகைய நல்லுள்ளங்கள் கையால் எத்தனையோ கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1) உப்பளம் நிறைந்த இடம். ஏறத்தாழ 20 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்த மானதை ஒரு கிருத்துவர் வைத்துள்ளார். அவர் அதில் சில இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து, பெண்ணின் கல்யாணத்துக்கு விற்க முற்படுகிறார். அது, கோவிலுக்குண்டான இடம். அது பாழடைந்துள்ளது. குழு அவரிடம் மன்றாடுகிறது. கடைசியில் தானாடாவிடாலும் தன் சதையாடுமல்லவா? "ஏம்பா. இந்த நிலத்த வித்து உன் பொண்ண கட்டிக்கொடுக்க போற. சிவன் சொத்து குல நாசம்னு சொல்வாங்க; அப்படியும் பொண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறேன்னு சொன்ன நிஜமாலுமே நீ மனுஷனே இல்லைய்யா," ன்னு ஒரு நண்பர் சத்தமாகவே வாதிட்டார்!
எதிரிலே இருந்தவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்!என்ன நினைத்தாரோ தெரியாது."சார், சரி சார்- என் பொண்ணு மட்டும் இந்த இடத்த விக்காம நல்ல எடத்துல செட்டிலாகட்டும், அந்த சாமி சத்தியமா சொல்றேன், அந்த சாமி கும்பாபிஷேகம், என்கைல தான்!" என்றார்!

குடும்ப சமேதராக, கோபுரம் மேல் ஏறி, அவர் கையாலே கும்பாபிஷேகம் நடந்தது என்பதையும் நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா?

2) சேரி - மிகுந்த மக்கள் எதிர்ப்புக்கிடையில், சேரியிலுள்ள அம்மன் கோவில் கட்டிமுடிக்கப் படுகிறது. அவர்களில் முதியவர் ஒருவர் பூசாரி ஆக, ருத்ராக்ஷம் கட்டிக்கொள்கிறார். வழக்கமாக கோவில் கட்டும் வேலை முடிந்தது, ஒரு வைதிகரை வைத்து, மந்திர கோஷம்முழங்க, பழைய கோவிலை புதுப்பித்ததற்காக பீடாபரிகாரங்கள் செய்து, பின்னர் ஊர் மக்களிடம் ஒப்படைப்பது எங்கள் வழக்கம். கும்பாபிஷேக நாள் - மாம்பலத்திலிருந்து வைதிகரும் தயார். அங்கே போனபின் தான் வைதிகருக்குத் தெரிந்தது, அது சேரி என்று. அவர் தயங்கியதைப் பார்த்த ராமமூர்த்தி, "ஏன் அங்கதான் கருமாரி அம்மன் இருக்கா, இருக்கக் கூடாதா? வாங்க," என்று அவரை இழுத்துக் கொண்டு போகாத குறை.

முணுமுணுத்துக் கொண்டே, பூஜை நடந்தது! (மந்திரமா, கவலை முணுகலா, யாருக்குத் தெரியும்?). எல்லாம் முடிந்தது. காலையிலிருந்து பூஜையிலேயே கண்ணாக இருந்து விட்டதால், நல்ல பசி! பிரசாதம் என வைத்த வெண்பொங்கல், சேரி மக்களிடையே விநியோகம் ஆகிவிட்டது! அந்தணருக்குப் பசி, ஆனால் வெளியே சொல்லமுடியவில்லை! அப்போது அங்கிருந்த ஒரு வயதான அம்மாள், தயங்கியபடி நின்றதைப் பார்த்து, என்ன என்று வினவுகையில், அவர் இவர்கள் பசியாக இருப்பார்களே என்று கடையிலிருந்து 'பன்'னும், தன் கையால் டீயும் போட்டு வைத்திருக்கிறார், ஆனால் மற்றவர்கள்,"அட, அவங்க ஐயருங்க.அதெல்லாம் சாப்பிட மாட்டாங்க," என்று சொல்லி கிழவியைத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது! ராமமூர்த்தியோ, "அட, பசி கொல்லுது. என்னம்மா, அந்த மகமாயியே, பசி தீர்த்த மாதிரி,கொண்டாம்மா," என்றார். வைதிகருக்கும் , அவர் மறுக்க மறுக்க, கையில் டீயும் பன்னும் திணிக்கப்பட்டது! பூஞ்சை உடம்பு, வெயில், பசி தாங்கவில்லையென்றால்?

எல்லாரும் கிளம்ப எத்தனிக்கையில், "இருங்க, இருங்க" என்று இரண்டு மூன்று பெண்கள் கைகளில் கூடை ஏந்தி ஓடி வந்தார்கள்! என்ன என்று கேட்டால், "சாமி, எங்க ஊர்லேர்ந்துதான் கத்திரி, வெண்டையெல்லாம் மார்கெட்டுக்கு போகுது. அதான், நல்லபடியா கோவிலைக்கட்டி, எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தீங்கன்னு, ரெண்டு கூட கொண்டாந்தோம்; வேற நாங்க என்னத்த கைமாறா கொடுக்கறதாம்?" என்றார்கள். ராமமூர்த்தியோ," அய்யருதான் எல்லாம் செஞ்சு வெச்சாரு, ஒரு வாரம் ஓடும்; காய்கறிய அவருக்கே கொடுங்க." என்றதும், சந்தோஷமாய் இன்னும் மேலே புடலை, கீரை என்று கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்த வைதிகர்,கண்களில் நீர் மல்க, "ராமமூர்த்தி, இவங்க அன்புக்கு முன்ன காசு, பணம், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல.இனி இப்படி நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன்," என்றார்.!!

3) மிக அற்புதமான சுயம்பு லிங்கம்- காட்டில் விழுந்து கிடக்கிறது! பார்த்து, பதைபதைத்து, நேராக நிமிர்த்திவைத்து, ஊருக்குள் விசாரிக்கிறார். அது மிகவும் புராதன கோவில் இடிபாடுகளில் இருந்ததாகவும்,இப்போது கேட்பாரற்று இருப்பதாகவும் அறிகிறார். சரி, அடுத்த முறை வரும் போது,ஒரு ஓலைக் கூரையாவது ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணிக் கொண்டே போகிறார்.
மாதம் முடிந்து அந்தப் பக்கமாய் போகையில், ஆச்சரியம் காத்திருக்கிறது! அழகாக fஐபர் க்ளாஸ் பச்சைக்கூறை வேய்ந்த, குளிர்ந்த நிழலுள்ள கோவிலாய் காட்சியளிக்கிறது அந்த இடம்! யார் செய்தது என விசாரித்தால், ஒரு முஸ்லிம் அன்பர் - என பதில் வருகிறது!! அருகிலேயே fஐபர் ஷீட்டுக்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்; போய் பேசினால்,"சார், எப்படீன்னாலும், எங்க பாட்டன் முப்பாட்டன் கலத்து சாமி அது. அவங்க இருந்தா வெய்யில்ல காய வைப்போமா? அதான்; என்னால முடிஞ்சது!" என்றாராம்.உடன் சென்றிருந்த பத்திரிகையாளர் உடனே, செய்தி, புகைப்படம் சேகரிக்கத் தொடங்க, "சார், வேணாம் சார்; ஏதோ தோணிச்சு, செஞ்சேன். பேப்பர்லல்லாம் போட்டா, எங்க சமூகத்துக் காரங்க, என்னய தள்ளி வெச்சுடுவாங்க; அப்புறம் என் பொண்ணுக்கு யாரும் பையன் கொடுக்க மாட்டாங்க!," என்றாராம்.

இப்படி பலப் பல உதாரணங்கள். ஏன், கோவில் விழாக்கள் என்றால், ஷேக் சின்னமௌலானா நாகஸ்வரம் வாசிக்கவில்லையா, அவருக்கு கோவில்காரார்கள் மரியாதை செய்யவில்லையா?

காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை உதாரணத்தை சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.

காஞ்சி மடத்தில் அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. அப்போது காஞ்சி பரமாச்சாரியாரிடம் (பரமாச்சாரியார்-100 வயதைத் தொட்டவர்; இப்பொழுது உள்ளவர்கள் இல்லை, அவர்களின் குரு) சிலர் போய், "அவங்க, காலைல 4 மணிக்கே பெரிசா மைக்க அலறவெக்கிறாங்க; பேசாம உபத்திரவ கேசுன்னு சொல்லி, போலீஸ்ல சொல்லலாமா? இல்ல அவங்கள வேற எங்கயாச்சும் போக வைக்கலாமா," என்று கேட்டதற்கு, அவர், "அட, அவா, கரெக்டா, டாண்னு, நேரத்துல ஓதுறத ஆரம்பிக்கறா. அந்த சப்தம்தான் எனக்கு அலாரம்! அதை ஏன் நிப்பாட்டறேள்? வேண்டாம், அவா அனுஷ்டானம் அவாளுக்கு, நம்ம வழி நமக்கு. அதை எப்படி இடைஞ்சல்னு சொல்றது?" என்றாராம்.!!

09 April 2006

நட்சத்திர வந்தனம்..! <|>

மங்களம் குலுங்கி என்றும் அன்பு மேவி இன்பமாக
வான்வளம் பெருகி வாழ்க பூமியெல்லாம்
சங்கடங்கள் இன்றி சண்டை சச்சரவும் இன்றி வாழ்க
சஞ்சலங்கள் இன்றி வாழ்க தேசமெல்லாம்!....

எனத் தொடங்கும் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் வரிகளைக் கூறி எனது நட்சத்திர வாரத்தினை நிறைவு செய்கிறேன்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்தந்த நாட்களில் பதிவுகள் (குறைந்தது ஒன்றேனும் பதிய முயற்சி செய்தேன்) தர முயற்சித்தேன்.

பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சித்ரான்னம் வைத்தேனா, எனக்குத் தெரியாது!! ஆனால், வயிற்றை , மனதைக் கெடுக்காத பத்தியச் சாப்பாடாவது போட்டேன் என நினைக்கிறேன்.

விவாதங்கள் என்ற பெயரில் ப்ரச்னைகளை வளர்க்கவும் விரும்பவில்லை.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள ப்ரச்னைகள், என் சொந்தப் ப்ரச்னை இல்லை. கோவில்களும், நமது சரித்திரமும் அழிந்துபோகும் அபாயத்தை மிக சிறிய நாட்களுக்குள் பார்த்து, மனம் நொந்து, பல பெரிய மனிதர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். தெளிவாகத் தெரியும் 2 விஷயங்கள்:-

1) தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த பொருள், அரசியல் நெருக்கடிகளில் தான் பழங்கால புதை பொருட்கள், கோவில்களை ஆராய முற்படுகின்றனர். ஆள் பலமும் குறைவு.

2) ஊர் மக்களிடையே, நம்பிக்கையின்மை - ஆண்டவனிடத்தில், ஆட்சியாளர்கள் இடத்தில், ஏன் சக மனிதர்களிடத்தில், தன்னிடத்தில் - இல்லாமலிருப்பது!

முதல் ப்ரச்னையை சில ஆர்வலர்கள் சரிகட்ட முற்பட்டிருக்கிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களையும், கோவில் புனரமைப்புப் பணி செய்யும் சிலரையும், கோவில்களை சுத்தம் செய்யும் தன்னார்வக் குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழு அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் ப்ரச்னையை எல்லாரும் சேர்ந்துதான் சரி செய்ய வேண்டும். முதலில் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும், அரசு அலுவர்கலையும் குற்றம் கூறிக் கொண்டே இருக்கும் மனப் பாங்கை நாம் கைவிடவேண்டும்! எம்.ஜி.ஆர் அவர்கள் அழகாகச் சொன்னது போல், "நாடென்ன செய்தது நமக்கு?" என எண்ணாமல், "நாமென்ன செய்தோம் நாட்டுக்கு?" என சீறிய சிந்தனை செய்ய வேண்டும்.

நாடு என்றால் என்ன? நாமும் நம்மை சுற்றியுள்ளதுதான், நமது முதல் நாடு, நாட்டின் பாகம். அதை சுகாதாரமாக வைக்க, நாம் முதலில் குப்பைகளை எறிவது, ரோட்டோரத்தைப் பார்த்தால் காலைத் தூக்குவது, எச்சில் துப்புவது, சுற்றியுள்ள மற்ற மக்களை பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் புகை விடுவது போன்ற செயலை நிறுத்தினாலே போதும்.(பிடிப்பது எனும் சொல் எனக்கு தவறாகப் படுகிறது!!- அவர் விடுகிறார், சுற்றியுள்ளவர்தனே, பிடிக்கின்றனர்?? Passive smokers) .

சிறுபிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தருதல், நடந்து போகும் தூரம் உள்ள வரலாற்றுசின்னங்களை பார்க்கக் கூட்டிச் செல்லுதல், தூய தமிழில் நல்ல குறள், பாசுரங்கள், சொல்லிக்குடுத்து அவர்களை தினமும் குளித்து உடை உடுத்தி சொல்லவைத்தல், இதெல்லாமே நல்ல சந்ததியை நாட்டுக்குத் தரும். மக்கள் தான் நாடு.

நான் முந்திய கட்டுரையில் குறிப்பிட்ட ராமமூர்த்தி அவர்கள், கோவில்களை சீரமைக்கப் போகுமிடமெல்லாம், அவருக்கு பல குறுக்கீடுகள். கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர்களின் கோபம், மற்றொரு மதத்தினர் இவர் இந்துயிஸம் பேச வருகிறார் என்று மத முத்திரை குத்தினாலும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று; எல்லா மதத்தினரும், சாதியினரும், ஒரே மண்ணின் மைந்தர்களே! அவர்கள் அனைவரும், அதை ஒரு பழைய கோவிலாக எண்ணாமல், "நம் மண்ணின் ஒரு வரலாற்று சின்னம், மக்கள், மன்னர் அமைதி தேடி வந்த இடம்", என்றெல்லாம் எண்ணிப்பார்த்து, அதை சீரமைக்க பொருளுதவி, செயலுதவி செய்து நிமிரவைத்தால் தான், அவ்வூர் சிறக்கும்! எல்லார் மனதிலும் உள்ள அழுக்குகள் போயி, சமத்துவம் மலரும்" என்கிறார். அவர் 20 ஆண்டுகளில், ஏறத்தாழ 100 கோவில்கள் சீரமைத்துக் கொடுத்திருப்பார்!!

குறைகளைக் கூவிப்பேசி, கூட்டம் சேர்ப்பதைவிட, களைகளைக் களைய என்ன செய்ய வெண்டும் எனும் சிந்திக்கும் நற்கூட்டம் வலுப்பெற வேண்டும்!! அதனை செயல் படுத்தக் காரியத்தில் உறுதி வேண்டும்!! அதற்கு என்னாலான எழுத்துப் பணியை நான் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தமிழும் தமிழ் சார்ந்த குலமும் மணக்க எழுதிக்கொண்டே இருப்பேன். நிறை, குறை இரண்டும் கூறி என்னை எழுதவைத்த உள்ளங்களுக்கு வணக்கம்!

அமைதி வேண்டும் நாடோடிகளே!

திரைகடலோடியும் திரவியம் தேடு - என்று சொன்னோர் முன்னோர்! அதைதான் தமிழ் தெரிந்த நம் கோடானுகோடி நண்பர்கள் இன்று செய்துவருகிறார்கள். வெவ்வேறு சூழ்நிலைகள், குடுமபங்கள், நிர்பந்தங்கள், வசதி முறை என்று வளர்ந்தாலும், எங்கெங்கோ, எத்துறையோ, வேலை செய்து வந்தாலும், "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா,' எனும் நிலைப்பாட்டே கொண்டுள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த நட்சத்திர வாரக் கடைசி நாட்கள் நான் சென்னையிலிருந்து மகாராஷ்ட்டிரத்திலிருக்கும் பூனே நகரத்துக்கு வரவேண்டி இருந்து. 2 நாட்களும் மென்பொருள் கணினி பொறியாளர்களுக்கான தேர்வை, எனது அமெரிக்க நிறுவனம், என்னை விட்டு எடுக்கச்சொல்லி, நியமனமும் செய்யச் சொன்னது. எங்கள் உழவாரப் பணிக்குழு மேற்கொண்டுள்ள ஒரு கோவிலை நிலத்தடியிலிருந்து வெளியே எடுக்கும் பணி பற்றிய செய்திகளை மொபைல் தொலைபேசி மூலம் கேட்டற்ந்து கொள்ளும் வேலை ஒரு புறம், தமிழ்மணத்துக்கான பதிவுகளை, சிந்தித்து (?) இரவு முழுதும் எழுதுவது ஒரு புறம், புதியவர்களை பகல் பூராவும் நேர்முகம் காணல் ஒரு புறம் என பரபரப்பாக எந்து வாரம் முடிவுக்கு வருகிறது.

ஆமாம், நிறுத்து! என்னவோ தலைப்பிட்டாய் என உள்ளே படித்தால், என்ன சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் எடுத்து விடுகிறாய்? எனாதீர்கள்! முதலில் சொன்ன செய்திக்கும், நான் பூனாவில் அநுபவித்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு முகப் படுத்தப் பார்க்கிறேன்.

காலையில், சில பதிவுகளை Browsing centre க்கு (சரியான தமிழ் வார்த்தை உடனடியாக மனதில் தோன்றவில்லை, மன்னிக்கவும்) போய் அவசர பதிவு செய்துவிட்டு, நேரே, தாடி மழிக்க முடி சீர் திருத்தகத்துள் நுழைந்தேன். உடன் வந்த மற்றொரு அலுவலக நண்பரிடம், "பார், வெங்கடேஷ் சலூன்" என எழுதியிருக்கிறது. கட்டாயம் ஆந்திராவிலிருந்து வந்தவர் தான் இந்தக்கடையின் முதலாளியாக இருக்க வேண்டும்.", என்றேன். அவரும் "எப்படி, பார்க்கலாம், உள்ளே பேச்சு குடுத்து, கண்டுபிடிப்போம்," என்றார்.

மழித்தல் ஆரம்பமாயிற்று. எரிச்சல் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு மினி இந்தியாவே வேலை செய்து கொண்டிருந்த்து. 5 நாற்காலிகள். முதல் நாற்காலியில் மராத்திய சிறுவனுக்கு, மராத்தி ஒருவரே சவரம் செய்து கொண்டிருந்தார். அடுத்தது, ஒரு காஷ்மீரி பெரியவருக்கு, ஒரு ராஜஸ்தானியும், அடுத்து ஒரு மராத்தி, அந்தப் பெரியவரின் பேரனுக்கும் சவரம் செய்துகொண்டிருந்தனர். சேட்டை செய்யும் பேரனை கடைக்கண்ணால், பார்த்துக்கொண்டே காஷ்மிரியில் அவனை சரியாக உட்காரச்சொல்லி எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார். அடுத்து நான். பார்த்தால், கிராமங்களைச் சேர்ந்த மராட்டியர் போன்ற நெடு நெடு தோற்றம், தாட்டியான முகவெட்டு கொண்டவர், முகச்சவரம் செய்துகொண்டிருந்தார். அடுத்து அந்த கடை முதலாளி போலும், அதிசயமாக, மிக சுத்தமாக, சfபாரி அணிந்திருந்தார். அவர் வேலை 'முடி'ந்த ஒரு வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டார். பின்னர், உள்ளே சென்று, விளக்குமாறு எடுத்து தரை முழுதும் கூட்டி, முடிகளை ஓரம் கட்டி, சுத்தப்படுத்தினார். அவரது செய்கை எனக்குப் பிடித்தது. முதலாளி. நினைத்தால், அவர் ஆட்கள் யாரையாவது தரையை கூட்டச்சொல்லியிருக்கலாம்! ஆனால், அவர்கள் வேலையாக இருந்ததால், அவரே செய்தார். அதற்குள், எனது முகத்தில் கத்திவைத்த பணியாளர், முதலில் மராட்டியில், "சே, என்ன மழிக்க வரவே மாட்டேன் என்கிறது?" பின்னர் ராஜஸ்தானியிடம், ஹிந்தியில் அதே குறையையும், கூறினார். " நான் என்ன செய்வது? நான் என்ன செடி கொடியா வளர்த்து வெட்டசொல்கிறேன்?" என மனதுள் எண்ணிக்கொண்டேன். நானாக வீட்டில் செய்வதாலோ, என்னமோ, எனது முடிகணுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது போலும். இதற்கும் தினசரி சவரம் செய்துகொள்பவன் நான்.
முதலாளி, மீண்டும் பக்கத்து நாற்காலி அருகே வந்ததும், தூய தமிழில், "ஒக்...., என் கீழ ஒக்கார்ந்துருக்கானே, ஒரு தா...., எந்த ஊர்காரன்னே தெரில, எதோ காட்டிலேர்ந்து வந்துருப்பான் போல்! ஷேவே பண்ண முடில," என்றான் கடுப்பாக!
தொன்று தொட்டு, சங்க காலத்திலிருந்தே, எந்த ஒரு வார்த்தையைச் சொன்னால், அது மிகவும் அவமானமாக கருதப்பட்டதோ, எந்த வார்த்தை காலம் காலமாக பல பெயர்கள் பெற்று, காலத்தில் அழியா கெட்ட வார்த்தையாக இருக்கிறதோ, அதை முகத்தில், கத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருவன் மிகவும் அருகே, மனதுக்குள் குண்டைப்புதைப்பதைச் சொன்னால், யாருக்கு சினம் வராது? பொங்கியெழ வேண்டாமா?
இருந்தாலும், "சினம் காக்க, சினம் காக்க," என மனத்துள் சொல்லிக்கொண்டு, "உங் ஊர் தா...தான்!" ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம். கத்தி நின்றது. அவன் இதனை எதிர்பார்க்கவில்லை போலும்!! மழித்தல் அதிசயமாக கத்திகொண்டு, ஆனால் ரத்தமின்றி சுமுகமாக முடிந்தது. அருகில் இதை கவனித்த முதலாளியும், எனக்கு மழித்தவரும், தமிழர்கள்!!! தந்தை, மகன்!
தந்தை எதோ கூற முற்பட்டார்.
"முன்ன ஒரு பத்து நாள் முன்ன என் கிட்ட பண்ணிகிட்டீங்களோ?"
"இல்ல, ரெண்டு நாளா தான் நான் பூனாலயே இருக்கேன்."
"இல்ல சார், எனக்கு நினைவு இருக்கே, இதே முகம், இதே ப்ராப்ளம்...."
"..இதே திட்டும் திட்டினீங்க போல? ஒருவேளை நீங்க்ச் தீர்க்கதரிசியோ, எனக்கு தெரியாத தம்பியோ? எங்க அம்மாவைத்தான் கேக்கணும்; எங்க குடும்ப விஷயமெல்லாம் நல்ல தம்பி பேசுனாரு," என்றேன் நக்கலாக, குரலின் ஒலியை உயர்த்தாமல்.
"தம்பி சொன்னத சார், மறக்கல போல...! " பேச்சை மாற்ற விரும்பி, "சார், செல்fப் ஷேவிங் செய்வீங்க போல?"
"ஆமாம்."
"அதான் சார், முடி இப்படி ஆச்சு. அதுவும் இந்த மூணு ப்ளேடு போட்டு புதுசு புதுசா வருதுல்ல, அது தாறுமாறா வெட்டும். க்ராஸ் ஷேவிங் செஞ்சாலும் இதே கதிதான். சாதாரண முழுப் ப்ளேடு இருக்கே, அத வெச்சு, ஒரு பத்து நால் ஒரே திசைல செய்ங்க, அப்புறம் சோப்பு போடறத தவிருங்க, தண்ணிதான். இப்படி பண்ணீங்கன்னா, சரி ஆயிடும். ஒண்ணு பண்ணுங்க சார். பேசாம இங்க வாங்க, ஒரே வாரத்துல நான் சரி செய்றேன்," என்றார்.

நான் அமைதியாக," என் முக சரியாக இல்லாததற்கும், முடி சரியாக இல்லாததும் என் தவறும் இல்லை, என் தாயின் தவறும் இல்லை. நாம், நாடோடிகள், வெறும் நாடோடிகள் கிடையாது; கலாச்சார நாடோடிகள். எங்கோ பிறந்து, எங்கோ, எண்சாண் வயிற்றை நிரப்ப ஓடிவந்து, இப்படி ஆண்டவன் அருளால், நிலைத்து நிற்கிறோம். அங்கே அவரவர் பாஷையையே பேசி, வந்த ஊரின் ஒரு அங்கமாகவே உங்கள் குடும்பம் மாறிவிட்டது அறிந்து மகிழ்ச்சி. கடையும் போட்டீர்கள்; மகனும் உதவியாக உள்ளார்; ஆனால், பணத்தை சொல்லிக் கொடுத்த நீங்கள் பண்பை சொல்லிக் கொடுக்கவில்லையே? மிக சில நொடிகள், மழிக்கும் வரை. முடிந்தால் செய்யப் போகிறீர்கள்; முடியவில்லையென்றால், "முடியல" என்று சொல்லப் போகிறீர்கள். அதற்கு எதற்கு கடுஞ்சொல்லை உபயோகப்படுத்த வேண்டும்? காரணமில்லாமல்? உங்களுக்கு இருக்கும் பதைப்பு, உங்கள் மகனுக்கு இல்லையே? நீங்கள் கூறும் சமாதானங்களை விட, அவர் ஒரு வார்த்தை, "மன்னியுங்க, தெரியாம சொல்லிட்டேன்," என்று சொன்னால், எனக்கு மனம் சற்று ஆறியிருக்கும். அவருக்கோ, நினைவேயில்லாமலிருப்பது போல் நிற்கிறார். நான் சொன்னது போல், நாம் நாடோடிகள், நமது செயல்கள், வார்த்தைகளிலிருந்து தான், எவரும், "ஓ, இவன் இந்த ப்ரதேசத்தைச் சேர்ந்தவன். இப்படி பேசுகிறான், இப்படி நடந்து கொள்கிறான்," என்று கவனித்து, அவனது இனத்தவரும், நாட்டினரும், அவனைப் போலவே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மலையாளிகள் மிகவும் ஒற்றுமையானவர்கள், பஞ்சாபிகள் உழைப்பாளிகள், தமிழர்கள் என்றாலே, "தமிழ் நாட்டை தாண்டி வர மாட்டான், வந்தால், இந்தி பேசத்தெரியாது, சாவல் (அரிசி) சாப்பிடாமல் அவனால் இருக்க முடியாது; இரண்டு தமிழன் பார்த்துக் கொண்டால், ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்வார்கள், " என்றெல்லாம் கேலி பேசும் நிலைக்கு உள்ளதை நம் நன்னடத்தைதான் மாற்றும்.உங்களுக்கும் அதில் பங்குள்ளது. வருகிறேன் என்று சொல்லி நகர்ந்தேன்.

தந்தையோ மீண்டும், "உங்கள மாதிரி நல்லது சொல்றதுக்கு எந்த நாய்க்கும் தோணல சார். அப்பப்ப வந்து போங்க," என்றார்.

நான் மெதுவாக, "என்னங்க, பார்த்து, 'இந்த நாய்க்கு'ன்னு பையன திட்றீங்களா தெரியல. நீங்க சொன்னதப் பார்த்தா உங்கள நீங்களே திட்டிக்கிற மாதிரி எனக்கு தோணுது. எதுக்கு அப்படி இருக்கணும்? நல்ல அப்பாவா இருங்களேன்; சரி. என் கழுத்தில் கை வைத்தும் வெட்டாமல் விட்டதுக்கு நன்றி," என்றேன்.(அவர் - அந்த அப்பா என்ன சொன்னார் என்பதை மீண்டும் படித்துப் பாருங்கள்!)
அவரும் தூய தமிழில், "நன்றி" என்றார்...வழக்கமாக தேங்க்ஸ்.. என்பார்கள் - இரண்டு தமிழருள் வேற்று மொழி எதற்கு?

வி.வ.போ-2 - ப்ளாஸ்டிக் தேவை!

ப்ளாஸ்டிக் மரங்களைக் காக்கிறது!

"சரி, இவன் வயிற்றில் அடித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. அதனால்தான் சந்திரசேகரன் இதை எழுதுகிறான்," என்ற குரல்கள் கேட்டாலும், ப்ளாஸ்டிக் எனும் புரட்சிப் பொருள் வந்ததினால் எத்தனை சிக்கல்கள் தீர்ந்துள்ளன, எத்தனை நன்மைகள் நமக்கு கிடைத்துவருகிறது என்பதை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.

முதல் எதிர்ப்பு ப்ளாஸ்டிக் பைகளுக்கு. பைகள் பல்லாயிரக்கணக்கான பொருட்களை தூக்கிச்செல்ல உருவானவை. மிக குறைந்த எடை, கிழியாமலிருக்கும் பலம், உள்ளே இருக்கும் பொருள் இன்னதென்று பையை பிறிக்காமலே பார்க்க வாய்ப்பு - இவை தான் ப்ளாஸ்டிக்கை நமக்கு புகுத்தியது. இவ்வனைத்து பயனும் இருந்தாலும், "இது மக்கா பொருள் (காற்று, மண், நீர், நுண்கிருமிகள் எதிலும் கரைந்து போகக்கூடிய பொருள்) . எனவே இது நிலத்தை, நீர்நிலையை, மண்ணை கெடுத்துவிடும்; மாடுகள் பைகளைத் தின்றுவிடுகின்றன; அதனால், மலச்சிக்கல், உடல்கெடுதல் போன்ற பல ப்ரச்னைகள்" என்கிறார்கள்.

ஆனால், இப்போது, 20 மைக்ரானுக்குக் கீழ் உள்ள (1 மைக்ரான் என்பது 1 செண்டிமீட்டரில் 1000த்திலொரு பங்கு!) குறைந்து தடிமம் உள்ள பைகளை தயாரிக்கக்கூடாது என்றும், மறுசுழற்சியில் உபயோகிக்கக் கூடாதென்றும் அரசாங்கம் விதி செய்துள்ளது. மிகவும் அக்கறையுள்ள அரசாங்கம் என் நீங்கள் துள்ளிக்குதித்தால், அதற்குக் காரணம் வேறு. IPCL போன்ற நிறுவனங்கள் பாலிமர் (Poly Ethylene) தயாரித்து வந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் எல்லா பாலிமர் நிறுவனங்களையும் வளைத்துப் போட்டு தனதாக்கிக் கொண்டது. அவர்கள் தயாரித்த பாலிமர் குருணைகளைக் கொண்டு, எத்தனை முயற்சித்தாலும், 20 மைக்ரானுக்கு கீழே மெலிதான தடிமத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை!! என்ன செய்வது? பிடி, அரசாங்க வழி!! அங்கிங்கே அலைந்து டெல்லிவரை போய், அவர்கள் கையாலாகாத தனத்தையே சட்டமாக்கி விட்டார்கள்! அப்படியும் புழக்கத்தில் வரும் பைகளை, வீதிகளில் எறிகிறவர்களை தண்டியுங்கள், ப்ளாஸ்டிக்கை எதுக்கு எதிர்க்கவேண்டும்?

குப்பை பொறுக்கி, அதில் சீவனம் நடத்தும் மாபெரும் கூட்டம் நம் நாட்டில் உள்ளது தெரியுமா? அவர்களைப் போய் கேளுங்கள், "அட, 20 மைக்ரான் என்ன 2 மைக்ரான் இருந்தாக்கூட எங்களுக்கு கண்ல தப்பாது. எத்தன பேப்பர் பொறுக்கினாலும், 10 ப்ளாஸ்டிக் பைங்களல்ல கிடைக்கிற காசு எங்களுக்கு பெரிசு. அதை ஏன் சார் தடை செய்றாங்க?" என்று!! இவர்களுக்கென்ன பதில்?
மாட்டு உரிமையாளர்கள் ஏன் மாட்டை ரோட்டில் விடவேண்டும்? ஊரெல்லாம் மேய்ந்து தின்று, பாலை மட்டும் தான் எடுத்துக் கொ(ல்ல)ள்ளவேண்டும் என எண்ணும் சின்ன புத்திக்காரர்களைக் கண்டிக்காமல், பை தயாரிப்பை ஏன் நிறுத்த வேண்டும்?

துணிகள், உபயோகப் பொருட்கள் வாங்கும் பைகளை பல நிறுவனங்கள் பேப்பரிலும், சணலிலும் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆனால், பேப்பர் தயாரிக்க உதவும் கரும்புச் சக்கையும், சணல் நாணல் செடிகளும் திடீரென எப்படி பன்மடங்கு வளரும், பயிரிடப் பெறும்? supply-demand எனும் தருதல்-தேவை எப்படி ஈடுசெய்யமுடியும்? அல்லது மரச்சக்கைகளையும், காட்டுக் கொடிகளிலும்கூட மூலதனமாய் வைத்து, பேப்பர் செய்யமுடியும் என்று சொல்பவர்கள் மரத்தை அழிக்கக் கூடாது என்னும் எதிர் வாதத்துக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அதே போல், இந்த பைக்குப்பைகள், தாருடன் சேர்த்து உருக்கி போடப்படும் சாலைகள் 15- 20 ஆண்டுகள் னாலும், பழுதடைவதில்லை! என்வே, தமிழக தென்மாவட்டங்களில் பல இடங்களில் பரீட்சார்த்தமாக இவ்வகை சாலைகள் போடப்பட்டுள்ளன.

மக்கும் ப்ளாஸ்டிக்கும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள், கோல்fப் என விளையாடப்படும் 'T' க்கள் விளையாடும் களத்திலேயே விடப்படும்- அந்த டீக்கள், போன்ற சுற்றுப்புற சூழலை கெடுக்கலாம் என்று சந்தேகத்துக்கு உரிய பொருட்கள் செய்ய இந்த மக்கும் ப்ளாஸ்டிக்குகள் உபயோகப் படுகின்றன. சோளம், பருத்தி, விளக்கெண்ணை போன்ற எண்ணை வித்துக்கள் எண்ணையெடுக்கப்பட்டு பின் எறியப் படும் சக்கையிலிருந்து இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உருவாகின்றன. கெடும் பண்டங்களை வைக்கும் ஜாடி, பை போன்றவை செய்யவும் இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உதவுகின்றன. பண்டம் கெட்டால், அதிலுள்ள கிருமிகள், இந்த ப்ளாஸ்டிக்கையும் உண்டுவிடும்! மற்ற மக்கும் ப்ளாஸ்டிக்குகள் சூரிய ஒளியிலுள்ள நீல ஒளி கதிர்களால், மக்கிப் போகும்.

அடுத்தது - மிக சிறிய உதாரணம்- பல் துலக்கும் குச்சியிலிருந்து எல்லா ப்ளாஸ்டிக்கா? என்போர், சற்றே சிந்தியுங்கள். சராசரியாக ஒரு நகரத்தில், ஏறத்தாழ 50 லட்சம் பேர் தினமும் பல் துலக்குகிறார்கள். அதில் ஒரு நூறு பேராவது வேப்பங்குச்சி, ஆல்விழுது போன்றவற்றை உபயோகிப்பார்களா? சந்தேகமே. ப்ளாஸ்டிக் ப்ரஷ் மட்டும் இல்லாவிட்டால், இது எப்படி சாத்தியம்? விதண்டவாததுக்காக, நான் கையாலேயே தேய்ப்பேன் எனச் சிலரும், ஏன் நாமும் கிராமத்தவர் போல், வேப்பங்குச்சி வாங்கலாமே, உபயோகித்து எறிதல் (use and throw) கொள்கைக்கும், சுற்றுப்புர ச்சுழலுக்கும் நல்லதாயிற்றே என்று சொல்பவர்க்கும் ஒரு சிறிய விளக்கம்:சரி, குச்சிவாங்குகிறோம், முதல் நாள் சராசரியாக ஒரு 4 மரத்தை மொட்டையடித்து குச்சியெடுத்து, வெட்டி ஊருக்குள் அனுப்பிவைத்தால் ஒரு நாள் பல் துலக்கல் வைபவம் நடைபெறும். மறுநாள்,,மாதம் முழுதும்? அப்படியே, மரம் மேல் மரம் வெட்டிக்கொண்டே போனால், கொஞ்ச நாளில், வேப்ப மரம் என்பதை, படத்திலும், ஒளிப் பேழையிலும் தான் காணலாம். இது காடுகளை அழிக்கும் காரியமா? மத்த பிற உபயோகங்கள் உள்ள வேப்பமரம், வேறு எங்கு தேடுவது? அடுத்த ஊர்காரன், அவன் ஊருக்குள் பல் துலக்க அங்குள்ள மரங்களைக் காலி செய்துவிட்டதாகக் கேள்வி!!

அதேபோல், நாற்காலிகள். மரத்தால் அறுத்துச் செய்யும் நாற்காலிகள் வீடுகளுக்கு உதவுமே தவிர, பெரிய மாநாடு, கூட்டம், கல்யாண வைபவம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவாது. இரும்பில் வளைத்து வெல்டிங் செய்து தயாரிக்கப் படும் நாற்காலிகள், நகர்கையில் சப்தம் செய்யும், சுற்றி விளையாடும் குழந்தைகளுக்கு பத்தாகவும் இருக்கும். எடுத்துப் போட்டு, ஓரமய் அடுக்கி வைக்கும் வேலைக்கும் மரமோ, இரும்போ, உதவாது. கனமாக இருக்கும். மோல்டிங் செய்யப்பட்ட நாற்காலிகளால் எத்தனை நன்மை? லேசானது, பல நிறங்களில் வரும், பார்க்கவும் ஒரே மாதிரி வரிசைக்கு அழகு சேர்க்கும், இதன் வாழ்க்கை கட்டாயும் ஒரு 20 ஆண்டுகளாவது வரும், பழுதுபார்க்கும் சிரமம் கிடையாது, இப்படி அடுக்கிக் கொண்டேபோகலாம்.

மிக முக்கியமான மற்றொரு உபயோகம், வாகனங்கள். எத்தனைக்கெத்தனை லேசாக உள்ளதோ, அத்தனை எரிபொருள் மிச்சம். எந்த வடிவிலும் ப்ளாஸ்டிக்கையும், நாற்கண்ணாடி வைத்து ரெசின் பூசிய (fibreglass, carbon fibe etc.) ப்ளாஸ்டிக்கினால், எத்தனை குறைவான எண்ணிக்கையில் வேண்டுமானாலும் ஒரு பொருளைச் செய்யலாம். இன்று பறக்கும் விமானம், விரைவு ரயில்கள், புதிய ரக ஊர்திகள் (கார், ஸ்கூட்டர்) இத்தனையும் ப்ளாஸ்டிக் பாகங்கள் நிறைந்தனவே!

சட்டை பட்டம், சீப்பு, கண்ணாடி டப்பா, கைப்பிடி, பை க்ளிப், துணிகள் மாட்டும் ஹாங்கெர்கள், அழகழகான் தலைக்ளிப்புகள், மற்றும் எத்தனை தினசரி உபயோகத்துக்கான பொருட்கள். இத்தனைக்கும் மாற்று? ப்ளாஸ்டிக்குக்கு பதிலாக?

ஏரி, குளங்களில், நிலத்தடி நீர் உரிந்து போகாமலிருக்க, பல மாநிலங்களில், மண்ணுக்கடியில், 2 அடி ஆழத்தில் ப்ளாஸ்டிக் பிfலிம்களை விரித்து வைக்கின்றனர். பதப்படுத்த, உணவு பண்டங்கள் கெடாமலிருக்க, உரைகிடங்குகளில் தானியங்கள் கெடாமலிருக்க, சிமெண்ட போன்ற காற்றால் கெட்டித்துப் போகும் பயனுள்ள பொருட்கள் கெடாமலிருக்க, இப்படி, ப்ளாஸ்டிக்கிற்கு மாற்று இல்லாத உபயோகங்கள் ஆயிரமாயிரம்.

மற்றொரு அபத்தமான ஒரு வாதம்- CFC எனும் நச்சு பொருட்கள் வெளியேருவதால், refrigerator எனும் குளிர்பதனப் பெட்டி உபயோகிக்கக் கூடாது என்று! 2002ல் Montreal Protocol எனப்படும், ஒப்பந்தம், எல்லா வர்த்தக நாடுகளும் போட்டுக்கொண்டுள்ளன. அதன்படி, CFC உருவாகும் தொழில்நுட்பத்தை ஓரங்கட்டிவிட்டு, HCFC, நீரை வைத்து தயாரிக்கப்பட்ட காஸ் உள்ள தொழில்நுட்பத்தையும் நாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் இந்தியா உட்பட, cfc ஐ நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த பாலிமர் தயாரிக்கும் தொழிலில், இந்தியாவுக்குக் கேடு செய்யும் பன்னாட்டு நிறுவங்களை வேண்டுமானாலும் நான் கண்டிக்கலாம். அங்கே, அமெரிக்காவில் காலாவதி ஆகிப்போன பல தொழிற்சாலைகள் கருவிகள், சாதனங்களை அப்படியே, அணு அணுவாகக் கழற்றி இந்தியாவில் நிறுவிய ஐ.சி.ஐ. டூபாண்ட், ஜீ.இ., டொவ், போன்றவர்களே ஓசோன் மண்டலத்தை பொத்தல் போட்டு, இப்போது விட்டது சனியென அவற்றை கடலில் தூக்கி எறியாமல், இங்கே தொழிற்சாலை போடுகிறேன் பேர்வழி என வந்து கடை விரித்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்கள்.
தவறான சிந்தனையில் எந்த விஞ்ஞானத்தொழில் நுட்பத்தையும் உபயோகிப்பவர்களை எதிர்த்து நில்லுங்கள்!!

08 April 2006

தெரிந்த ஊர் தெரியாத செய்தி-3




குன்றத்தூர்!!

சென்னையின் அருகேயுள்ள குன்றத்தூர் முருகன் கோயில் எல்லாரும் அறிந்ததே! ஆனால், அதன் வரலாற்றுச் சிறப்பும், அவை சீரழியும் அவலமும் நமக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும்.!! முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது கைப்பக்கம் சேக்கிழாரின் கோவில் உள்ளது. இடப் பக்கம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன!
சேக்கிழார் அவதரித்த ஸ்தலம் இது. அவரது இல்லம் கோயிலாகியுள்ளது. ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டிய இடம் குன்றத்தூர்.
கற்காலத்தில் நாகிரீகம் முளைத்துவிட்டதை குறிப்பது போல், குமரனின் கோயிலுக்கு மேற்கே பரந்து கிடக்கும் ஏரியும், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கி.மு. 1000 ஆண்டு எனக் கணிக்கப் பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் களஞ்சியமே கிடைத்துள்ளது!! குழிகளில் ஸ்வஸ்திகா அமைப்பில் தளம், கத்தி, மணிகள், பானைகள், குவளைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இனி கோயில்களுக்கு வருவோம்.
எல்லாரும் அறிந்த நாகேஸ்வரர் கோவில், சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்டது. மலைமேலிருக்கும் குமரன் கோவிலும், திரைப்படங்களில் தோன்றியதால், நல்ல நிலையில் உள்ளது.
ஏறத்தாழ 900 ண்டுகள் முன், சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், விஜயநகரப்பேரரசு காலத்தில் ஆரம்பித்து, 16ம் நூற்றாண்டுவரை இக்கோயில்கள் நன்கு பேணியிருக்கக்கூடும். அதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம். மூன்றாம் குலோத்துங்கனின் மகளை மணந்த அழகிய சீலன், இக்கோயிலை நன்கு பேணினான். அவனே சிதம்பரம் நடராசர் ஆலயத் தெற்கு கோபுரத்தையும் கட்டினான். காஞ்சியைசுற்றியுள்ள பல கோவில்கள் சீரமைக்கப் பட்டதில், கந்தழீஸ்வரர் கோவிலும் ஒன்று.
மற்றொரு கோயில் ஊரகப்பெருமாள் கோயில். இங்கும் முன் கோபுரத்து இரண்டுநிலைகள் உடைந்து போய்விட்டன! பூசைக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தாலும், பக்க மண்டபங்கள் பழுதாகி விழுந்து கல்வெட்டுக்கள் காணமுடியாமல், மேலே மூடிக்கிடக்கின்றன!
ஆனால், 1990ல் லய உழவாரப்பணி குழுவினரால் சீரமைக்கப் பட்ட இக்கோயில்கள் சரியாகப் பராமரிக்கப் படாமலும், நேரத்தில் திறக்கப் படாமலும் உள்ளன! கோயில்களின் வளாகங்கள் பாழடைந்து காணப்படுகின்றன! கோபுரத்தில் சிருங்கார சிற்பங்கள் காணப்படுகின்றன. விஜய நகரக் கலைப்பாணி அழகாகத் தெரிகிறது. தூண்களில் கொடிசுற்றியதுபோன்ற அழகிய தூண்கள் அதில் கிழிகள் கொஞ்சுவது போன்ற சிற்பங்கள், அத்தனையும் அழகு மங்கி வருகின்றன!
மிகவும் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சி, ஒரேடியாய் ஒடுங்கிவிட்ட வாலீஸ்வரர் கோயில்! பெருமாள் கோவிலுக்கு மிக அருகில், பின்னாலேயே உள்ள கோவில் வட்டவடமாகிய கஜப்ருஷ்டம் பாணியில் அமைந்துள்ளது. கல்வெட்டுச்செய்தி சுவர் முழுதும் காணப்பட்டுள்ளது. ஆனால், முழுதும் சிதைந்து போய், முட்காடு சூழ, அருகருகில் வீட்டைக்கட்டிவிட்ட ஆக்கிரமிப்பாளர் மேலும் கோவிலை கண்ணிலிருந்து மறைக்கச் செய்ய, முழுதுமாய் சீரமைக்கவேண்டிய அவசரத்தில் உள்ளது.

கல்வெட்டாரய்ச்சியாளர்கள் படியெடுத்து விட்டதாக அறிகிறேன். கோவில்? சிவலிங்கம், அருகிலுள்ள தகரம் வேய்ந்த ஒரு அவசரக் கோவிலில் தஞ்சம் புகுந்து விட்டார்; அம்மன் கந்தழீஸ்வரர் ஆலயதுக்கு ஓடிவிட்டாள்! அதைவிடக் கொடுமை, சரிவர பாதுகாக்கப் படாத கல்வெட்டுக்கள். சாலை நடுவிலும், ப்ரகாரங்களிலும் இறைந்துகிடக்கும் கல்வெட்டுக்கள் காலம் போகப் போக, நம் சரித்திரத்தை அழித்துக் கொண்டு போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.