03 April 2006

பம்பரம் - அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்-3



பம்பரம் வலைல சரியா சுத்தமாட்டேங்குது! இதுவும் காணாமல் போயி, பின்னுட்டங்களும் வருகின்றன. ப்ளாகரில்தான் இதைக் காணோம்! மறுபடியும், மறுபடியும் பதிகிறேன்! பார்க்கலாம், எனக்கு, ப்ளாக்கருக்கும் ஒத்திக்கு, ஒத்தி!

கட்டை கடைந்து கடைந்து
பொட்டில் ஆணி அரைந்து
கயிற்றில் சுடக்கி சுழற்றி
ஆடும் பம்பரமே!

சுற்றும் வரை சுற்று.
சுழல் எழல் கழலுமுன்.
கோடுகள், புள்ளிகள், உடலின் நிறங்கள்
யாவும் மறைந்துவிடும்!

ஆடிடும் வேளையில் சுற்றும் முற்றும்
யாவும் மறந்துவிடும்!
உருவும் போயி மருவும் போயி
அருவம் ஆகிவிடும்!

சுழலும் நேரம் உன்னால் எதையும்
அளவாய் பார்க்க முடியாது
சுற்றம் சூழல் சுற்றி நின்றாலும்
சூழ்நிலை உனக்கு பழகாது!

ஆடிடும் ஆட்டம் ஈர்ப்பிலிணங்கி
அடங்கிடும் வரையில் சுற்றிவிடு
சுற்று(ம்)முன் பார்வை நிலைத்திட
கூர்வை,சீர்-வை,நேர்-வை!


3/4/2006 காலைல பதிச்சு, காணாமல் போன பம்பரம் :-

http://maraboorjc.blogspot.com/2006/04/3.html

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 2 -விளக்கு!


பஞ்சலோகம் அஞ்சு விரல் ஒன்று சேர்ந்து
சுட்டெரியும் எறிதணலில் கலவையாகி
கொட்டிவைத்த சுட்டுவைத்த மண்ணுக்குள்ளே
ஆவிபிரிந்தோடும் உடல் பிண்டமாகி
பட்டறையில் தட்டி தட்டிப் பொன்னுமாகி
மின்னுகிற விளக்கெனவே பிறவி பெற்றேன்
அழகாக அம்மணியர் வாங்கிப்போக
பூஜையறை மேடையிலே பதவி ஏற்றேன்
விட்டதடா பட்டபாடு - மூச்சுவிடுமுன்
பட்டுதிரி பொட்டுவைத்து எண்ணெய் குளித்தே
சுட்டெரியும் சுடர் கொண்டு தீபமேற்றி
படர்வெளிச்சம் பாரெங்கும் வீசக் கற்றேன்!
நித்தம் நித்தம் எண்ணெய்குடித்தாவி நீக்கி
நெருப்பு உண்டு நிர்மலனாய் இருளைப்போக்கி
வந்து வீழும் விட்டில்கள் விரகம் போக்கி
வெந்து கரம் வேகிடினும் வேள்வியாக்கி
விடியல் நம்பி நம்பிக்கையாம் ஜோதியேற்றி
சொல்லும் பாடம் அறியலையோ சின்னத்தம்பி!
இல்லாத ஒன்றையெண்ணிக் கனவில்வாழும்
இயலாமை மண்ணிறுக்கம் களைந்து நீயும்
ஐம்பொன்னாம் ஐம்புலன்கள் ஒன்று சேர்த்து
நம்பிக்கைக் கண்ணொளிற வெளிச்சம் காட்டி
விளக்கு எந்தன் வழிபழகப் பந்தம் காட்டி
வருமுலகு அறிந்திடும்நல் பாதை விளக்கு!

ப்ளாகர் வரிசையில் காணப்பட்டாலும், "முன்னெழுதியவை" யில் காணவில்லை. எனவே, மீண்டும் பதிகிறேன்.

முதலிலேயே நன்றி நவிலல்!

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள்! சரிதான்!அதாவது என் கணக்குப்படி, நான் ஐந்தாவது பிள்ளை. எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்ந்ததில்லை! எதற்கும் சாதாரணமாக வளைந்து கொடுக்க மாட்டேன்! அதனால், பதில், அதனோடு அடி இரண்டும் கலந்து கட்டி கிடைத்திருக்கின்றன! இன்னும், என்னுள் கேட்டு, உலகத்தைக் கேட்டு, பதிவுகளில் கேட்டு, என் தேடுதல் இன்றும் தொடர்கிறது. அதன் விழைவே, நான் எழுத முயல்வது.
எனக்குத் தமிழ் ஆர்வம் வரக் காரணம்?

மார்கழி மாதம், வீட்டிலும், கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்போனதாலா? இல்லை திருக்குறளை அழகாகப் பிரித்துக் கூறி தமிழைப் புரிய வைத்த கமலா டீச்சர் காரணமா?ஐந்தாம் வகுப்பு படிக்கையில் குழந்தைப் புத்தகம் கோகுலத்தில் வந்த ஒரு பாட்டைக் கண்டு லயித்து, அதை நான் எழுதியதாகச் சொல்லி பின்னர் குட்டு வெளிப்பட்டு எல்லாரும் சிரித்ததாலா?

வானொலியில் கம்பர் விழா கேட்கமட்டும் லீவு போட அனுமதித்த அம்மாவினாலா? இல்லை கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல், தாத்தாவின் தம்பி, கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் பாடல்களைக் கேட்டு, கேட்டுத் தெளிந்ததாலா? தெரியாது! ஆனால், கவிதை போட்டியாகட்டும், கல்லூரி நாட்களில் கட்டுரை ஆகட்டும், என்னை கொஞ்சம் தன்னம்பிக்கைக்குர்¢யவன் ஆக்கியது, தமிழ்!

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் ஆனந்த விகடன், ஜுனியர் விகடனுக்கான மதுரை மாவட்டத்து நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மூவருள் ஒருவனாக்கியதும், அதில் சிறப்பு நிருபர் விருது வாங்கச் செய்ததும், என்னுள் ஒளிந்திருந்த தமிழே! மற்ற இருவர், கல்பனா, மற்றும் இன்று சமீபத்தில் வெளிவரவிருக்கிற "திருட்டுப்பயலே" (திட்டலைங்க, அது திரைப்படத்து பேருங்க!) வின் இயக்குனர், சுகி.கணேசனான அன்றைய சு.கணேசன்!

வேலை நிமித்தம் 15 ஆண்டுகள் வடமாநிலங்களில் இருந்த என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தது, அவ்வப்போது கேட்ட அரட்டை அரங்கமும், தமிழ் சங்கத்தில் நடக்கும் விழாக்களுமே!

மீண்டும், தமிழகத்தில் வந்து வேலை செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!! அதுவும் அதோடு, மீண்டும் என்னுள் வசந்தம் வரும், தமிழில் தினமும் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!

நீண்ட நாட்களாக மனதில் ஓடிய கருவே, முதன் முதலில் நான் பதிவு செய்த அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! சக மனிதன் சொல்லி கேட்காததையா, பொருட்கள் சொல்லிக் கேட்கப்போகிறான் மனிதன்? இருந்தாலும், வாய் பேசா ஜடப்பொருட்களே நமக்கு பல வாழ்வியல் பாடத்தை சொல்கிறது என்றால், வாயுள்ள நாம் எத்தனை தேர்ச்சி பெறவேண்டும்? மனதில் தோன்றிய சில கவிதைகளை என் வீட்டிலேயே உள்ள கவிஞர் குழாம் (ஆமாம்; நிஜம்! என் தாய் மாமன் வெங்கடரெங்கன், எனது பெரிய மாமா பெண் பேராசிரியையும் பிரபல நவீன கவிதாயினியான் ரெங்கநாயகி, மற்றும் எனது சகோதரிகள், தாயார் போன்றோர்) முன் வைத்தேன். முதன் முதலில் அவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று அதிக ஓட்டு பெற்ற அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடல் - விளக்கு!!

http://maraboorjc.blogspot.com/2006/04/2.html

ஒரு வேளை ஒண்ணும் விளங்கவில்லையென்று, "விளக்கு" என்று சொல்லிவிட்டார்களோ?!நான் என் கவிதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்துவிட்டேனோ?) கவிதையை மூடிவைக்கப் போனேன்! ரெங்கநாயகிதான் என்னை அழைத்து, "டேய், நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது?" என்றார். தமிழிலா? அவரே எனக்கு "பதிவுகள்" இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் எனது கவிதைகளைப் போடச்சொன்னார். அவர்களுக்கு நன்றி.

எல்லாரும் முடிவில் நன்றி நவில்வார்கள். எழுந்து சென்றுவிடும் கூட்டத்துக்கு சொல்வதை விட, நட்சத்திர பேச்சாளர் பேச்சை கேட்க ஆவலாய் இருக்கும் கூட்டத்துக்கு தமிழ்மண அன்பர்களை ஒப்பிட்டு, எனது நன்றிகளை முதல் நட்சத்திரப் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன்.
திரு.மாலனுக்கு அவர் மதுரை திருநகரில், தனது தமக்கையாரின் வீட்டுக்கு வருவதைப் பற்றியும், அப்போது அவர் பேசும் செய்திகளை நான் கேட்டதாகவும் குறிப்பிட்டு, எப்படி இணையத்தில் எழுதவேண்டும் எனக் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்; அத்தனை வேலைகளுக்கும் நடுவே, தனது ஆரம்ப வாழ்க்கை நிகழ்வுகளை நான் எழுதியது கண்டு மகிழ்வதாகவும், கவிதைகள் நன்கு உள்ளதாகவும், அவரும், திண்ணை, பதிவுகள், போன்றவற்றில் எழுதலாம் என்றும் குறிப்பிட்டு எழுதினார். அதோடு, யுனிகோடில் தமிழ் பதித்தால், மேலும் பல இணையங்களில் எழுதலாம் என்று சொன்னார். யுனிகோடைப் பற்றி விளக்கம் கேட்டு, மறுபடியும் அவருக்கு எழுதினேன். அவர் மீண்டும் பொறுமையாக, தமிழ்மணத்தை பற்றி குறிப்பிட்டு, அதில், எப்படி யுனிக்கோடில் பதிவது என எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

முதலில் திருப்பதியில் மொட்டை தேடுவது போல் நுழைந்த நான், காசி ஆறுமுகம் அவர்களின் "உன்கோடு, தனிக்கோடு"- கண்டு தேன் குடித்த வண்டானேன்! எனக்கு தெரிந்த அத்தனை தமிழ் ஆர்வலர்களுக்கும் அந்த urlஐ அனுப்பி, படிக்கச் செய்தேன்! அந்த கடினமான விஷயத்தை, தேனில் தடவிக் கொடுக்கும் மருந்தைப் போல் அழகாக ஊட்டியிருந்தார் அவர். நேரில் பார்க்காமலே, அவரது அபரித ரசிகனானேன். என்னடா இவன் அடிக்கடி தேன் பற்றி சொல்கிறானே, என்று என்னை நரி ஆக்கிவிடாதீர்கள்!

பின்னர் மாலை நேரங்களில் சுரதா, முரசு அஞ்சல் போன்றவற்றின் உதவியோடு, தமிழ் எழுதிப்பழகி, மெல்ல மெல்ல தமிழ் மணத்துள் எட்டிப்பார்த்தேன்.

முதலில் பதித்த அத்தனையும் அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! ஆனால், அவற்றுக்கு மிக சில பின்னூட்டங்களே வந்தன. ஆனால், பின்னூட்டங்களை எப்படி பதிவுகளில் காணச்செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், காசி அவர்களுக்கு அஞ்சல் எழுதி, எப்படி, மட்டுறுத்தல் செய்வது என்று தெரிந்து கொண்டேன். காசி அவர்களுக்கு "கண்ணாயிரம்" (கைதி இல்லப்பா) எனச் செல்லப் பெயர் வைக்கலாம்! எப்படித்தான் அத்தனை பேருக்கும் கடிதம் வந்த வேகத்திலேயே, அவரால் சரியான பதிலை, உடனுக்குடன் அனுப்பி வைக்க முடிகிறதோ? அந்த அந்நியோன்னியம் நிறைந்த தகவல் செறிவுள்ள கடிதங்கள் எழுதி என்னைச் செம்மை படுத்திய காசி அவர்களுக்கு நன்றி.

பல அன்பர்கள் கூறுவது போல், எப்படி அதிகமான பின்னூட்டங்களைப் பெறுவது என மனம் தவித்தது உண்மை. ஆனால், சிலரது செய்திகள் படித்தபின், அந்த செய்திகள் மறுநாளே பழைய விஷயமாகிவிடுவதும், மீண்டும் படிக்கத் தூண்டுமா, அல்லது, மறக்கப்படுமா என்று ஒரு கேள்வி என்னும் எழுந்தது. SLANDEROUS, SCANDALOUS, SLEAZE என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப் பட்டதை எழுதக் கூடாது என்று உறுதி கொண்டேன். என்று படித்தாலும், யாருக்கேனும், ஒரு புதிய தகவலோ, ஒரு நெறியோ, ஒரு நல்ல விஷயமோ தருவதாக இருந்தால்தான், அச்செய்தி காலத்தால் அழியாததாகும்; அப்படிபட்ட விஷயங்களையே எழுதவேண்டும் என்று என்னுள் ஒரு கோட்பாடு வைத்துக்கொண்டேன். பின்னூட்டங்களை விட, என் மனம் எதைப்பற்றி என்னை எழுதவைக்கிறதோ, அதையே நான் எழுத விழைகிறேன்.
மற்றவர் பதிவுகளை முடிந்த மட்டும் படிப்பேன். ஒரு முறை சாதி குறித்து, தவறான செய்தி கண்டு, என்னுள் இருந்த பத்திரிகையாளன் விழித்துக்கொண்டான்!! அந்த பதிவை இட்டவர், தனது பெயரிலேயே சாதியை உடன் ஒட்டிவைத்துள்ளார்!! உடனே, தவறுகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு பதிவு இட்டேன். அதற்கு, ஏராளமான பின்னூட்டங்கள்!! எது நாட்டுக்குத் தேவை இல்லையோ, எதை நாம் மறக்க முயல்கிறோமோ, அது மீண்டும், மீண்டும் பேசப்படுவதைக் கண்டு நான் மிகவும் கவலை கொண்டு, சாதி(தீ) என ஒரு பதிவு பதித்தேன், நான் என்ன சாதி என்று பரிகசித்து ஒரு கவிதையும் பதித்தேன்.

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.html

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.html

ஆரம்பித்துள்ளேன். பிற இணைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றி.

தமிழ்மணத்தால், எனக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் ஆயினர். ஒருவரை குறிப்பிட்டு, சிலரை மறந்திடலாகாது. எல்லாரது, பாராட்டுக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி.

கடைசியாக, எனது நன்றி, மதி அவர்களுக்கு. எல்லாரையும் 'மதி'க்கத் தெரிந்த நிறை'மதி' போன்ற 'மதி' கொண்டவர்! ஒரு மாதம் முன், அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைக் கண்டு, எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி,சந்தேகம்! நமது பதிவுகளையும் ஆசிரியக் குழு பார்க்கிறார்களா? என்று! நட்சத்திர வாரம், ஏப்ரல் முதல் தேதிக்குப்பின் வருவதால், தருமி போல் (பதிவர் தருமி இல்லை, திருவிளையாடல் தருமி!!) ஏகத்துக்கும் கேள்விகேட்டு, அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். பதில் :- "நீங்கள்தான்"- அவ்வளவே!!

எனது நன்றியுரை மிகவும் நீண்டுவிட்டது என்ன செய்ய? மதி அவர்கள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத நானும் இனி முயல்கிறேன். வரும் வார பதிவுகளை படித்து நிறை, குறை இருந்தால், சுட்டிக்காட்டி, என்னை இன்னும் மெருகேறச் செய்ய உதவப் போகும் ஆயிரமாயிரம் தமிழ்மண அன்பர்களுக்கு பணிவான நன்றி.

28 March 2006

கவியோகியின் தமிழ்த்தாய் வாழ்த்து! -

5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய தமிழ்த்தாய் வாழ்த்து!!
1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி சுத்தானந்த பாரதி பாடிய பாடல்...

ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

14 March 2006

தமிழன்னை திருப்பள்ளியெழுச்சி!!

தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி
மூவர் தமிழோதி நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாங் கம்பமுடி கவிழ்த்துத்
தீவினை மாற்றுந் திருமந்திரஞ் சொல்லி
ஆவியுருக்கும் அருட்பாவால் அர்ச்சித்துக்
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டுத்
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோம் எம்பாவாய்!
-கவியோகி சுத்தானந்த பாரதி

எப்படிப் பாக்கள் அணிகலன்கள் ஆகின்றன!! ஆவியுருக்குகின்றன! கூவிக்கூத்தாட வைக்கின்றன! என்னே கவியின் கற்பனை! இப்படி தமிழை சுவாசித்து, நினைந்து, நினைந்து கசிந்துருகி கவிபுனையும் தமிழன்பர் எத்தனை பேர்? நாமறியோம்?

07 March 2006

படித்தேன், பிடித்தது, பதித்தேன்!


கே.கார்த்திக் சுப்பராஜ் என்பவர் எழுதி, மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை!எத்தனை தத்ரூபமாய் வருணிக்கிறார் தன் நிலமையை?படித்தேன், பிடித்தது, பதித்தேன்!

பாரதி எனும் பெயர் கொண்டாலே..!

சில நாட்களுக்கு முன் பல மாபெரும் சான்றோருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு மரியாதை செய்தனர். சுத்தானந்த பாரதியின் தமிழ்த் தொண்டு இக்கால அரசியல் வாதிகளுக்கு எங்கே தெரியப்போகிறது? நிஜத்தில் இவர்களெல்லாம் தமிழ்க் காதலர்கலா? தமிழ் காவலர்களா? பாரதி எனும் பெயர் கொண்டாலே, புகழ் மெதுவாகவே வருமோ என்னவோ?

தபால் தலை வெளியிட்டுக் கெளரவிக்கப் பட்டவர் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்லர்; ஆனால்,எல்லா தமிழ் அறிஞர்களும் ஒரே மாதிரியாக கெளவிக்கப்படுகிறார்களா? என்பதுதான் கேள்வி. ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை!
ஏன்? 'தலைவர்' போலவே பல்மணம் (polygamy) செய்து பெரும் புகழ் எய்தியதாலா? இந்த வரிசையில் நாளை நடிகை லஷ்மி, கமல், ராதிகா போன்றோர் வந்தால் கூட ஆச்சரியப்படுதற்கில்லை!!

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் பெற்ற பெருமை கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதி அவர்களையே சேரும். அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மஹாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய ஒப்பற்ற படைப்பு! அதை படிப்பவர்க்கு கவிதை வீச்சும், தேசப்பெருங்கனலும், தெய்வீகமும் தமிழ் மேல் ஆராக் காதலும் ஏற்பட்டுவிடும் என்றால் அது மிகையில்லை! இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கே அக்காவியம் மிகப்பொருந்தும். ஆனால் அவர் செய்த பிறவித் தவறு ஒரு தமிழனாய் அதுவும் நிஜத் துறவியாய் இருந்ததே! இதே, மற்ற நாட்டினராய் இருந்திருந்தால், இம்மாபெரும் தேசீய கவி, வானளாவும் புகழ் உச்சியில் சென்றிருப்பார். ஆனால், தமிழ் கூறும் நல்லுலகம் அவர் இருந்த காலத்தில் அவரை சரியாக கவனிக்க மறந்து விட்டது! அந்த விருது அறிவிக்கப் பட்டபோது கூட சில அரைகுரைகள் கூக்குறலிட்டன! பாடல்கள் என்றால், எம்.எஸ்.,பட்டம்மாள், வசந்த கோகிலம், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், ஜீ.என்.பீ போன்றோர் கவியோகி எழுதிய பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர். திருக்குறளை சரியாக, அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சரியான நபர் "கவியோகி சுத்தானந்த பாரதியார் தான்", எனத் தேர்வு செய்து, 1968ஆம் நடந்த இருந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது! ஆனால், மிகவும் வருந்தக்கூடிய கூத்து அங்கு நடந்தேறியது! மேடையில் பல கற்றோர்; அறிஞர் அண்ணா உட்பட அமர்ந்திருக்கின்றனர்; அவரையும், அச்சிட்டவரையும் வானளாவப் புகழ்ந்த பேச்சாளர்களோ, விழா அமைப்பாளர்களோ, கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த கவியோகியை மேடைக்கும் அழைக்கவில்லை, அவர் இந்த ஒப்பற்ற பணியான மொழிபெயர்ப்பைச் செய்தார் என்றும் நன்றி கூறவில்லை! இவ்விழாவை ஏற்பாடு செய்தவர் ஒரு பேராசிரியரே!! ஆனால் ஏன் இப்படிச் செய்தார்? எங்கே, திராவிடக் கட்சிகள் எனக்கூறிக்கொண்டு, ஒரு இந்து மதத்துறவியை மேடையில் அமர்த்திவிடார்களே" எனும் இழிசொல்லுக்காக அஞ்சியோ அப்படிச் செய்தனர்?சமயோகம், சமத்துவம் எனும் முழங்கும் கவியோகியா ஒரு மதத்தைச் சார்ந்தவர்?

ஒரு வேளை அமரர் டாக்டர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் கவியோகிக்கு தக்க பெருமைகள் வந்து சேர்ந்திருக்குமோ என்னமோ? கவியோகியின் ஆசிரமம் அப்போது, சென்னை அடையாரில் அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் கவியோகியின் மேன்மையை எம்.ஜி.ஆர் அவர்கள் அனுபவித்துள்ளார்கள். மறைந்த M.P. உ.சுப்ரமணியத்தின் தம்பி திரு.உ.பில்லப்பன், நிஜ எம்.ஜி.ஆர் விசுவாசி. இன்றுவரை கட்சியிலிருந்தும், எந்த பதவி மோகத்துக்கும் பணியாதவர். அவர் எம்.ஜி.ஆர் - சுத்தானந்தர் இருவரின் பரஸ்பர மரியாதையைப் பற்றி விரிவாக, கவியோகி ஆரம்பித்த பள்ளி வெள்ளி விழா மலரில் எழுதியுள்ளார்கள்.

மற்றொரு முறை எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!

ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!

அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார். மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்? கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!

அந்த தமிழ்ப் பாடல் இதோ:-
தமிழ்த்தாய் வாழ்த்து (5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய பாடல்)
ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

இந்தப் பாடலை தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவிக்க இயலாமல், அங்கும் அரசியல் தலையிட்டதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? திராவிடம் என்று கூறிக்கொண்டும், தமிழ்க் காவலர்கள் என்று கூறிக்கொண்டும் அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்களிடையே, தமிழும் ஒரு நிஜ தமிழ் கவிஞனின் பெயரும் தொலைந்து போனது அதிசயமில்லைதான்!--------------------------------------------------------அவரது புத்தகங்களை நாடிச்செல்ல, அவர் நிறுவிய தொண்டு நிறுவனமான யோக சமாஜம், சோழபுரம், சிவகங்கை மாவட்டத்திலிருந்து செயல் பட்டு வருகிறது! அணுகவும்: email - kaviyogi@gmail.com