04 April 2006

பூக்களைத் தான் பறிக்காதீங்க..!

கால வேளைல நான் ஏன் வாக்கிங் அது இதுன்னு கிளம்பரதில்லைன்னு ஒரு பதிவு போட்டேன். நாகரிகக் கோமளிகள்னு.[ http://sirichuvai.blogspot.com ] அதுல பணக்கார ரவுசுகளப் பத்தி முக்கியமாச் சொன்னேன்.

அதுல சொல்லவிட்ட ஒரு தினசரி நடக்கும் தப்பான விஷயத்த தனி பதிவா போட்டாதான், நமக்குள்ள இருக்குற சில பல பழக்கத்த நாம் மாத்திக்க முடியும்.!!

மரங்களப் பார்க்கறதே அபூர்வமாயிகிட்டு இருக்குற நகரங்கள்ல, அழகான கால நேரம், பூமரம், செடிங்கள்ல இருக்குற ஆயிரமாயிரம் பூக்கள், மெதுவா, சூரிய வளிச்சம் பட்டு, பனி வெலகி, வாய் திறந்து, காலக் காத்த உள் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா, நிறம் மாறி, பூக்கும். அது முழுசா, பூக்க, எப்படியும் 7-8 மணி ஆயிரும். ஆனா, அதுக்குள்ள அந்த பூக்களுக்கு வர்ற ஆபத்து இருக்கே, அது சொல்லி மாளாது!

செம்பருத்தி, நந்தியாவட்டை, பவள மல்லி (சீசன்லதான் பூக்கும்), மஞ்சள் ஆம்பல், மஞ்ச ஸ்பீக்கர் பூ (இதுக்கு தமிழ் பெயர் தெரியாதுங்க!), சுருள் நந்தியாவட்டை, கொன்னை, இன்னும் பல விதமான பூக்கள் பூக்கறதப் பாக்குறது, அழகு.இத எந்த கவிஞனாலும் வருணிக்க முடியாது, எந்த ஓவியனாலும் வரைய முடியாது. ஆனா, பச்ச பிள்ள கண் தெறக்கறதுக்கு முன்னமே, குரல்வளைய நெர்¢க்கிற மாதிரி, "பக் பக்" னு அத பறிச்சுகிட்டு போய்டுவானுங்க, சில பெருசுங்க.

வெள்ள வேஷ்டி மடிப்புக்குள்ள, கைல உள்ள மஞ்சப் பையி, விட்டா வாயிலயும் போட்டுகிட்டு போயிடுவாங்க போல! சூரியன் எந்திரிக்க லேட்டானாலும், இவனுங்க எந்திரிச்சு `அட்டாக்' பண்றத விடமாட்டாங்க! என்னங்கடா, இப்படி விடிகாலைல பறிக்கிறாங்களேன்னு பார்த்தா, கோவிலுக்கு, சாமிக்குன்னு சொல்லி பிடுங்குறாங்க! அட பாவிகளா, சாமி வாயத்திறந்து "எனக்கு பச்ச புள்ளயொத்த, கண்ணு தெறக்காத பூவப் பறிச்சு போட்டாதான், அருள்பாலிப்பேன்னு" சொன்னாரா? அதுக்குன்னு வேற பல பூ இருக்கே? முல்லை, மல்லிகை, துளசி இலை, வில்வ ன்னு பல தினுசு. ரெண்டு கோஷ்டிக்கும் ( குறுக்குக் கோடு கோஷ்டி, நெட்டுக் கோடு கோஷ்டி!! நான் இல்லைன்னாலும் மனுசப்பயலுவ விடுறாங்களா? கோடுல நிக்கிறவன் அதத் தாண்டி வரமாட்டேங்கிறான்கறத தனியா எழுதணும் போல; ஆனா, அது எழுதி, திருந்தற கோஷ்டியவிட, ஏன் எழுதினன்னு திட்டற கோஷ்டிதான் அதிகமாகும்கிறதால், அந்த மேட்டரை இப்ப டச் பண்ணல!)

ஆண்டவனே, துளசியையும், வில்வத்தையும் படைச்சு வெச்சுருக்கானே? ஒரு துளசியால பாமா, கிருஷ்ண்ன அடைஞ்சதும், ராத்திரி பூரா, வில்வ மரத்துல ஒதுங்குன திருடன், வில்வம்னு தெரியாம பறிச்சு,பறிச்சு கீழ எறிஞ்சுகிட்டேயிருந்ததுல, கீழே இருந்த சிவலிங்கம் சந்தோஷப்பட்டு, திருடனுக்கு காட்சியளிச்சு, அவனுக்கு நல்ல புத்தி தந்ததையும் நாம படிச்சதில்லையா? பின்ன, பிஞ்சுப் பூக்களை ஏன்யா பறிக்கிறீங்க??

அதுலயும், சில தாத்தாக்கள் பலே தாத்தாக்களாக இருப்பாங்க! கைல ஒரு நடை குச்சிய (walking stick க்கு தமிழாக்கம். 'டாக்டர் ஐயா' மன்னிப்பாராக!) கொண்டாந்து, அத விட்டு, மேலேயுள்ள கிளைய அப்படியே வளைச்சு, மத்த கையால இறுக்கிப் பிடிச்சு, சட சடன்னு,மேல உள்ள பூவையெல்லாம் பறிக்கிறப்ப, "அட, மேல தப்பிச்ச, கொஞ்ச நஞ்சப் பூவ, தல தப்ப விட மாட்டேங்கிறாங்களே"ன்னு, கோவமா வரும். ஆனா, பெருசுங்கள திட்ட முடியுமா? ஒரு பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, மொத்த மரமும் கைம்பெண் போல் நிக்கிறதப் பார்க்கும் மனசுள்ள மனுசனுக்கு 'பகீர்' னு இருக்கும்.

ஆனா, "பூ பறிக்கத்தான் செய்வேன்; சாமிக்குப் போடத்தான் போடுவேன்; பாட்டன், முப்பாட்டன் காலத்துலேர்ந்து பூ பறிச்சு போடறோம். பழக்கத்த விட முடியாதுன்னு" சொல்ற மக்களுக்கு ஒரு தலை சாய்ந்த விண்ணப்பம், வேண்டுகோள் :

பூவோட காலம், ஒரு நாள் தான்; ராத்திரில வாடிடும். ஆனா, சாயங்காலம் பார்த்தீங்கன்னா, நல்லா பூத்து, வரப்போகும் இரவின் வாடுதலைப் பற்றி கவலைப் படாத, மாலைக் காத்துல சிலுசிலுத்துகிட்டு நிக்கும். அப்ப அந்த பூ கிட்ட பேசுங்க; "ஏ,பூவே.காலைல கண்ணுக்கு குளிர்ச்சியா, மனதுக்கு இதமா காட்சி தந்த. இப்ப, வாடி எப்படியும் கீழ விழப்பொற. அதுக்கு நான் சொல்ற உபாயம் ரெண்டு பேருக்குமே நல்லது. என்னால பூ பறிச்சு போடாம இருக்க முடியாது. உன்னால் உதிர்றத தடுக்க முடியாது. அதனால நான் உன்ன பறிச்சு, இறைவனடில சேர்க்கறேன். சந்தோஷமா இரு!" ன்னு!

கட்டாயம் வாய் இருந்தா அந்த பூ காலைல பறிச்சா உங்கள சாபமிடும், ஆனா மாலைல இறைவனடி சேர்த்தா, வாழ்த்தும்! என்ன, சரிதானே? நீங்க அப்படி காலைல பூ பறிச்சா, அத மாலை வேளைக்கு மாத்திக்கங்க! ஓ, ஒரு வேளை அத மாலை வேளைன்னு சொல்ற காரணம், இதுவாக் கூட இருக்குமா? பூக்கள் பறிக்கபபட்டு, மாலையாக சேர்ந்து, இறைவனடி சேரும் நேரம்ங்கிறதால, 'மாலை' நேரமாச்சுதோ?

மத்தவங்க அப்படி பறிக்கறதப் பார்த்தா, இதமா எடுத்துச்சொல்லி, நேரத்த மாத்தச் சொல்லுங்க!
சரி, காலைலதான் போடணும்னு அடம் பிடிக்கிறவங்க, அதுக்குன்னே விற்குற அந்தந்த சீசன் பூவ (மல்லிகை, முல்லை ஒரு சீசந்தான், கனகாம்பரம், டிசம்பர் பூ, ஒரு சீசன், சவந்தி ஒரு சீசன்) - இப்படி சல்லிசாவும் வாங்கி, சாமிக்கு சாத்தலாம்ல? எதோ, பூவித்து பொழக்கிற ஆத்மாக்கள் சந்தோஷப் பட்டு போலாம்ல?

மல்லிகைன்னதும் ஞாபகம் வருது. சென்னைக்குப் பக்கத்துல நத்தம் கிராமம். அங்க பசங்களுக்கு என்.எஸ்,கே. மாதிரி, "விஞ்ஞானத்த வளர்க்கப் போறோம்" னு சொல்லி, IIT பசங்களோட சேர்ந்து சில நாட்கள் போனோம். அந்த ஊருக்கு முக்கிய வருமானம் வர்றதே, மல்லிகை வியாபாரம்தான். ஆனா, சீசன்ல, கையால அத அவசரமா, பறிக்க முடியாம, பல பூக்கள் வாடி கீழ விழுகறதாயும், பல பூக்கள் பறிக்க நேரமில்லாம, வாடி வீணாப் போறதாயும் சொன்னாங்க! IIT படிச்ச பசங்களுக்கு ஒரு சவால்! "மொத்த பூவையும் சுலபமா, சீக்கிரமா, கீழ சிந்தாம, வீணாகாம பறிக்க ஒரு சாதனம், மெஷின கண்டுபிடிச்சு கொடுங்க ராசா"ன்னு ஒரு கிழவி கேட்டுச்சு! யாராச்சும் அப்படி ஒண்ணை யோசிச்சு சொல்லுங்களேன்!!
சொன்னா, பல கிராமங்கள்ல இதயே பொழப்பா வெச்சு நடத்தறவங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரபிரசாதமா இருக்கும்! சரி, இது பறிக்கறதுக்கு மிஷன். ஆனா நான் இந்த பதிவ எழுதுனது, பூக்களப் பறிக்காதீங்கன்னு சொல்ற Mission! ரெண்டும் வேற; வேற!

நேர்முகத் தேர்வு!

பொன்ஸ் இதே தலைப்புல ஒரு கதை எழுதினதால தலைப்பை மட்டும் மாத்தினேன். தமிழ்ல!

எதிர்பார்க்கவில்லை யாரும்! இண்டெர்வியூவுக்கு இத்தனை பேர் சராசரி 100 பேர்! மிகவும் முக்கியமான பதவி! லையாசன் மானேஜர். 

பேப்பர் விளம்பரமே முழுப்பக்கத்துக்கு வந்திருந்தது! பொறியியல் மற்றும் எம்.பி.ஏ தகுதியுள்ள சுறுசுறுப்பான இளைஞர் தேவை! 
குறைந்தது 5 வருட அனுபம் தேவை. 
நேர்முகத்தில் தேர்வானால், பல நாடுகளுக்குப் போய், மிகவும் பரபரப்பாக வியாபாரம் செய்யப்படும் மென்பொருளின் (Software) வெளிநாட்டு டீலர்கள், ஏஜண்டுகள் நிர்ணயித்து, அவர்களது ப்ரச்னைகளை சமாளித்து, நல்ல முறையில் ஏற்றுமதி ஆக்கவேண்டிய பொறுப்பு! 

அதனால் ரிஷப்ஷனில் நிற்க இடமில்லை! 
எதோ Job Fair போல! சீரியசான முகத்திடன், பரபரப்பான முகத்துடன், களையான முகத்துடன், ஆண்களும், மெதுவாக மொபைலில் பேசியபடி பல பெண்கள், இப்படி பல பேர்..

 'ஹை டா, யூ டூ, வேணாண்டா, உனெக்கெல்லாம் I.I.T., I.I.Sc. இதெல்லாம் தெரந்துவெச்சுருக்கான் பாஸ்,எதுக்கு இந்த வேலைக்கெல்லாம் வர?''இல்லடா, அப்பா வேலக்கிப் போ, சிஸ்டர் மேரேஜுக்கு உதவியா இருக்கும்ங்கிறாரு!'
`நா வெணா உதவி பண்றேன்; ஐ வில் மாரி ஹேர் விதவுட் டவுரி!'
`ஹோ' சுற்றிலும் சிரிப்பலை! 
 'மாம்ஸ்!ஐ ஹாவ் எக்ஸ்பீரியன்ஸ், பட் ஸாப்ட்வேர் சேல்ஸ் இல்ல, வேர பேக்கேஜ்; என்ன கேள்வி கேப்பாங்க? 
தெரியல'
'எதுக்குடா புலம்பற? வர்றது வரட்டும்!' - (மச்சான்!?) 
 `யேய், ராஜி, என்னடி, கல்யாணம் செஞ்சுக்கப் போறன்னாங்க! நீ எப்படி இந்த இண்டர்வியூவுக்கு?'
'போடி, நல்லா ஊர் சுத்தலாம்; எவனாவது இளிச்சவாயன் அப்புறமா மாட்டமாட்டானா? அப்ப பார்த்துக்கலாம்' 

இப்படி பல குரல்களை அடக்கியது - ஒருவனின் வருகை! 
 இதுதாண்டா ஹேண்ட்சம்! - எனும்படி, உயரமாக, நல்ல நிறம், தீர்க்கமான பார்வை, உயரிய உடை,பாவனை- இத்யாதிகளுடன்! மெலிதான தங்க பிரேம் அணிந்த கண்ணாடி, கையில் சிறிய லேப்டாப் பை! தலை முதல் கால் வரை பணம் தெரிந்தது. ரிசப்ஷனிஸ்டிடம் அவன் பேசிய நுனிநாக்கு ஆங்கிலம் மற்ற எல்லார் வயிற்றிலும் புளியைக் கறைத்தது! மெதுவாக இருக்கையில் அமர்ந்தான். மற்றவர்கள் அவனையே பார்ப்பதும், தங்களுக்குள் பேசுவதுமாய் இருந்த அவன், அதனை சட்டை செய்வதாகத் தெரியவில்லை!

9.00 மணிக்கு அழைத்தவர்கள் மேற்கொண்டு என்ன செய்வார்கள், யாரை முதலில் அழைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை!மெதுவாக ஒருவித சலிப்புப் பேச்சும், `சும்மா, ஏமாத்துறாங்கடா' என்ற எதிர்மறை ஏச்சுகளும் வர ஆரம்பித்தன!Mr.Handsome - அவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் மெல்லிய குரலில் மொபைலில் யாருடனோ ரொம்ப நேரமாக பேசிக்கொண்டிருந்தான்!!

மணி 11.00! மெல்ல ஒருவர் M.D. ரூமிலிருந்து எட்டிப் பார்த்தார். 
கையில் ஒரு குறியேடு. ஒரு சில பேர்களை உரக்கப் படித்தார்; ``எல்லாரும் கான்·fபரன்ஸ் ஹாலில் வெயிட் பண்ணுங்க". (Mr.Handsome மும் அதில் ஒருவன்). மற்றவர்கள் போகலாம்! என்றார்!! 

பல பேருக்கு ஒரே ஷாக்! ஏன், எதற்கு என்றுகூட தெரியாமல் திருப்பி அனுப்பினால்?? 
திடீரென ஒரு குரல். `யோவ் என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு! இருக்குற கம்பெனில லீவ் போட்டு, இங்க வந்து காஞ்சுக் கிடந்தா இப்படி விரட்டியடிக்கிறீங்க?? 
யோவ், யாருய்யா H.R.D மானேஜர்? கூப்பிடுய்யா!! 
ஏ எதுக்கு மாம்ஸ்?? M.D.யக் கூப்பிடுடா..

 `ஆமாம், ஆமாம், வீ வாண்ட் தி M.D. டு ஆன்ஸர் அஸ்!" 

கோஷங்கள் அதிகமாயின! 

 Mr.Handsome முன் வந்தான். "லுக் மை டியர் ஜெண்டில்மென். நானும் உங்களைப் போல் தலைகால் புரியாமல்தான் இருக்கிறேன்; பட், சர்ப்ரைஸ் இஸ் என்னையும் உள்ளே அழைத்துள்ளார்கள்!! உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், உங்களுக்காக நான் ஒரு கோரிக்கை இந்த கம்பெனி நிர்வாகத்திற்கு வைக்கிறேன்! அதை வெளியில் வந்து 10 நிமிடத்தில் எல்லோருக்கும் சொல்கிறேன். ஆனால் நீங்களெல்லாம் சரி என்றால்; ஓகே?"

 "எஸ், எஸ் கோ அஹெட்'' என்றார்கள் 
எல்லோரும்.மற்றவர்கள் இந்த கூத்தைப் பார்க்காமல் எப்பொழுதோ உள்ளே போய்விட Handsome முடன் மற்றொரு இளைஞனும் நின்று கொண்டிருந்தான். " ஹே, ஐ ஆம் ராகவ் ; வாட் இஸ் யுவர் நேம்? வை ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர்?" - இது Handsome.( அப்பாடா ஒரு வழியா பேர் தெரிஞ்சது!!) 

இளைஞன் - " ஐ ஆம் ராகேஷ் ஜெயராம். என் பெயர் உள்ளே அழைக்கப் பட்டுவிட்டது. இருந்தாலும் இவர்களை இப்படியே விட்டுவிட மனதில்லை. அதான்..ஐ வாண்ட் டு ஹெல்ப் யூ டாகிங் fபார் தெம்." 
 "குட். சரி இருவருமாக உள்ளே போய் பேசுவோம்!" ராகவும், ராகேஷ¤ம் உள்ளே போனார்கள். எண்ணி பத்து நிமிடத்தில் ராகேஷ் வெளியில் வந்தான்.

" ஹி, நண்பர்களே, நல்ல செய்தி! 1/2 மணி நேரம் கழித்து எல்லாரையும் உள்ளே அழைக்க M.D. சம்மதித்துள்ளார்! 
யாருக்கு காத்திருப்பதால் பிரச்னை இல்லையோ, அவர்கள் நிற்கலாம். மற்றவர்களை யாரும் இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கவில்லை!" 

சுமார் 10 பேர் இருக்க, மற்றவர்கள் அவசரமாக வெளியேறினர். 

1/2 மணி நேரம் கழித்து, முதலில் சென்ற எல்லோரும் வெளியே வந்தனர். வந்ததும் பேசாமல், வாசலை நோக்கிப் போய்விட்டனர்! காத்திருந்தவர்கள் உள்ளே அழைக்கப் பட்டனர். மாநாட்டு மேஜை, அதன் மேல் ப்ரொஜக்டர், கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட நவீனங்கள். அவரவர் நாற்காலிகளில் அமர்த்தப் பட்டனர். 2 நிமிடத்திற்குக் கூட எல்லாருக்கும் பொறுமையில்லை! மெதுவாக முணுமுணுக்கத்தொடங்கினர்! 

சட்டென எல்லாரையும் வாயடைக்கச் செய்த அந்த மைக் ஓசை மட்டும் ஒலித்தது." நண்பர்களே, வணக்கம். நான் இந்த கம்பெனியின் M.D. பேசுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கும், நேரில் வந்தமைக்கும் நன்றி. எல்லா மென்பொருள் நிறுவனமும் வழக்கமாக பரிட்சை, பின்னர் நேர்முகம் எனத்தேர்வு செய்யும். நானும் அடைத்தான் இதுவரை செய்தேன்!

உங்களுக்கு நான் சொல்வது ஆச்சிரியமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். ஆனால், வரும் கூட்டத்தை எதிர்பார்த்ததனால் தான், நான் இப்படி ஒரு தேர்வு செய்தேன்!" தேர்வா? எங்க வெச்சீங்க?" என்றது ஒரு தைரியக் குரல்! 

"யெஸ். நீங்கள் கம்பெனிக்குள் கால் வைத்த நிமிடமே, தேர்வு ஆரம்பமாகிவிட்டது! எனது, செக்யூரிடியிலிருந்து, ரிசப்ஷனிஸ்ட், பியூன் ஆகியோரே தேர்வாளர்கள்! எப்படி, ஒருவர் உள்ளே வருகிறார், வரும் சற்று முன் தான் தலை சரிசெய்துகொள்கிறாரா, இல்லை இயற்கையாகவே, சுத்தமானவரா, காலணிகள் எவை? ஷ¥ அணிந்துள்ளாரா? 
விளையாட்டு ஷ¥வா, இல்லை சரியாக பாலிஷ் செய்த ஆபிஸ் ஷ¥வா? காஷ¤வல் வேரா, இல்லை ஆபிஸ¤க்கு வரும் உத்தேசத்தில் நல்ல சுத்தமான உடை அணிந்துள்ளாரா? வந்ததும், என்ன செய்கிறார்? அரட்டையா, இல்லை ரிஷப்ஷன் மேசைமேலுள்ள இந்தக் கம்பெனி பற்றிய பல நாளேட்டுச் செய்திகள், கம்பெனி ப்ராஸ்பெக்டஸ், முதலியவற்றை படிக்கிறாரா?

வரவேற்பறையின் மூலையில் நாங்கள் வேண்டுமென்றே, `இலவச போன்' எனக் குறிப்பிட்டு ஒரு போன் நிறுவியிருந்தோம்! அதை எத்தனை பேர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், என்றெல்லாம் கண்காணித்து, காவலாளி முதல் பியூன் வரை, மதிப்பெண் இட்டு, எனக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்!! 

செக்யூரிட்டி கணேசன், பியூன் ராமு, ரிசப்ஷனிஸ்ட் ஆகியோருக்கோ, இதனால் ஒரு பெரிய பொறுப்பை தலையில் சுமக்கும் பெருமிதம்! எனவே, ஆட்களின் நடையுடை பாவனைகள், மற்றும் போன் செய்பவர்கள், சவடால் அடிப்பவர்கள், ஏன், பெண்களை கேலி பேசுபவர்கள் என்று சகல செய்திகளையும் திரம்பட சேகரித்து, எனக்கு மிக்க உருதுணையாக இருந்தார்கள். என் வேலையை சுலபமாகினார்கள். ய ஸ்பெஷல் தேங்க்ஸ் டு தெம்!" "தென் கேம் தெ க்ளைமாக்ஸ்! அப்படியும் 20 பேர் முதல்நிலை தேர்வில் தேறினார்கள். அவர்களுக்குத்தான், உள்ளே அழைக்கப்பட்டு நேர்முகக்காணல் நடைபெற்றது. 

ஆனால், அந்த நிலைக்கும் போவதற்கு முன்னாலேயே, என் கவனத்தைக் கவர்ந்தவர், திரு. ராகேஷ் ஜெயராம்! யெஸ், உங்களுக்காக வாதாட முன் வந்தவர்! தன் பெயர் வாசிக்கப் பட்டதும், எங்கே, மீண்டும் பெயர் வாசிக்கப் படாமல் போய்விடுமோ என்பதுபோல, மற்றவர்கள் உள்ளே அவசர அவசரமாக முண்டியடிக்க, இவர் மட்டும், ஒதுங்கி நின்றது ஏன் என் யோசித்தேன்! ஒருவேளை கூட்ட நெரிசலுக்கு பயந்தாரோ என்று கூட நினைத்தேன்! பட், ஹீ வாஸ் டிfபரன்ட்! மற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டுமென்று உள்ளேவந்து வாதிட்டார்! நான் கூட, " மிகவும் அதிகம் பேசினால், உன் தேர்வு கூட பின்னுக்குத் தள்ளப்படும்" என்று பயமுறுத்தினேன்! அசரவில்லை அவர்! பணிவாக, அதேசமயம் ஆணித்தரமாக, " உங்கள் பரிட்சை முறை புதுமையானதுதான், ஒத்துக்கொள்கிறேன்! ஆனால், பலருக்கு இதன் நிஜம் தெரியாது! ஏதோ, தில்லுமுல்லு என்றும், மேலிடத்து சிபாரிசு! என்றெல்லாம், தவறாக நம்மைபற்றி பேசுவார்கள்! எனவே, உள்ளே அழைத்து தன்னிலை விளக்கம் தர வேண்டியது நம் கடமை" என்று பேசினார்! 

நானும் விடாமல், " என்ன இது, நம் கம்பெனி என்று பேசுகிறாயே? இப்பொழுதுதான் தேர்வு செய்வதையே சொன்னேன், அதற்குள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாயே?" என்றேன்!அதற்கு, ராகேஷ், " சார், மன்னிக்கவும். எந்த நிமிடம் நாம் இந்த கம்பெனியின் ஒரு அங்கம் ஆகிறோமோ, எப்பொழுதும், கம்பெனியின் நல்லது கெட்டது, அதன் நற்பெயர் போன்றவற்றுக்கு நாமுமொரு கருவி ஆகிறோம். மனதில் தோன்றியதை, நல்லவையாக இருப்பின், உடனே சொல்வதுதான், கம்பெனிக்கு நல்லது!" என்றாரே பார்க்கலாம்! 

நாங்கள் தேர்வு செய்ய இருப்பவர், தினம் பிரச்னைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்! பல நாடு, பல மனிதர்கள்! எல்லாரையும் அனுசரித்து போகவேண்டும், அதே சமயம் கோபம் வரக்கூடாது! தெளிய சிந்தனை இருக்க வேண்டும். அதற்கு என் பரிட்சையில் ராகேஷ் தேறினார்! ஐ லைக்ட் ஹிஸ் ஸ்பிரிட்! ஸோ, தட்ஸ் இட்! இந்த தேர்வில் யாருக்கும் ஏமாற்றமிருந்தால், என்னை மன்னியுங்கள்! சரியான கோணத்தில் சிந்திப்பவர்க்கு, இந்த அனுபவம் ஒரு நல்ல தூண்டுகோலாகவும்,படிப்பினையாகவும் இருக்கும் என நம்புகிறேன்! குட் லக்!" நிசப்தம்! 

திடீரென ஒரு குரல்! "ராகேஷ் சரி! அந்த ராகவ்? அந்தாளும் தானே எங்களுக்காக பேசினான்?" 
"அவருக்கு இங்கு முன்னரே, வேலை தரப்பட்டுவிட்டது! யெஸ், ஐ ஆம் ராகவ், the M.D, myself!" திரைக்குப்பின்னால் இருந்து வெளியே வந்தார், ராகவ் பரத்வாஜ்,M.Tech. M.B.A(Harvard) - 28 வயது இளைஞர்!

03 April 2006

பாதரசக் கண்ணாடி- அ·றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-6

என் பின்னே பாதரச அரிதாரம்
நீ உன்னைப் பார்க்கவே
எனக்குப் பூசியது போகாது
நீ தினம் முகம் மாற்றுகிறாய்
காலை பல் தேய்க்கும்
கோணங்கிச் சேட்டைகள்
பின்னர் முடி மழித்து
அழகணிய ரத்த தானங்கள்
அவசர தலைசீவல்,
சீவி, பின் கலைத்திடுதல்!
கோபம் படர்கையில்
விசிறியடிக்கும் நீர்
மேலடித்ததும், வழிந்துவிடும்.
கோபமில்லை!!
உள்ளே உள்ள கருப்புக்கள்,
முகமறியாஅடித்து மறைக்கும்
வெண்பூச்சு!
தலை நரைத்தும், நிறையாத மதி
மறைக்க தடவப்படும் சாயம்
நாள் முழுதும் சிரிப்பு பூசி
இருளில் கரைந்து,
என் முன் கலையும்
கண்ணீர் பூச்சுகள்
ஒளிவட்டம் முன் அரிதாரம்
அவிழ்த்து அமர்கையில்
என்முன்ஆழமாய் உள்காணும்
உன்முகம்
முகம்கழுவ எடுத்து ஒட்டும்
வட்டப் பொட்டு.
உள்ளுக்குள் பொங்கிடும்
கள்ளமயக்கம் வெளிக்காட்டும்
உற்று நோக்கல்
இத்தனையும் கண்டும், காணாச்
சித்தர்போல், சித்தம் சிதறா, ஒரு
புத்தர் போல் நானிருக்க,
என்முகத்தைப் பார்க்கத்
தேடுகிறேன்ஒரு முகம்-
கண்ணாடிபோல்நிச்சலனமாய்!
எங்கேனும்-பார்த்தால்
சொல்லுங்கள்!!

விடாது சிகப்பு !!

3/4/2006;- காலைலேர்ந்து மீண்டும், மீண்டும் பதிந்தாலும், கீழ்கண்ட செய்தியே, வந்து கொண்டிருக்கிறது! அதுவும் பம்பரம் பற்றிய கவிதை. ஒரேடியா சுத்திட்டேன் போலிருக்கு! வலைல பதிய மாட்டேங்குது. "விடாது கருப்பு" ன்னு ஒருத்தர் இணையம் வெச்சுருக்காரு. அத மாதிரி, விடாது சிகப்புன்னு இதுக்கு பேரு வெச்சுடலாம்! சிகப்பு கலர்ல இந்த செய்தி வந்துகிட்டேயிருக்கு. பார்ப்போம். "இவன்லாம் நட்சத்திரமாயிட்டான்யா" ன்னு ப்ளாகர் காரங்களே, 'கைய' வெச்சுட்டாங்களோ? இதோ விடாது சிகப்பு இப்படித்தான் வருது:-

Your post was not saved due to a database error. An engineer has been notified. Please copy your post to your computer and try again later. You can check Blogger Status for information about known problems with Blogger.
இப்ப 3/5/2006 இந்திய நேரம் ராத்திரி 11:00 மணி. பார்க்கலாம்; ப்ளாக்கரா, நானான்னு! சிவராத்திரியா, சிவனேன்னு கடக்குற ராத்திரியான்னு!

பம்பரம் - அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்-3



பம்பரம் வலைல சரியா சுத்தமாட்டேங்குது! இதுவும் காணாமல் போயி, பின்னுட்டங்களும் வருகின்றன. ப்ளாகரில்தான் இதைக் காணோம்! மறுபடியும், மறுபடியும் பதிகிறேன்! பார்க்கலாம், எனக்கு, ப்ளாக்கருக்கும் ஒத்திக்கு, ஒத்தி!

கட்டை கடைந்து கடைந்து
பொட்டில் ஆணி அரைந்து
கயிற்றில் சுடக்கி சுழற்றி
ஆடும் பம்பரமே!

சுற்றும் வரை சுற்று.
சுழல் எழல் கழலுமுன்.
கோடுகள், புள்ளிகள், உடலின் நிறங்கள்
யாவும் மறைந்துவிடும்!

ஆடிடும் வேளையில் சுற்றும் முற்றும்
யாவும் மறந்துவிடும்!
உருவும் போயி மருவும் போயி
அருவம் ஆகிவிடும்!

சுழலும் நேரம் உன்னால் எதையும்
அளவாய் பார்க்க முடியாது
சுற்றம் சூழல் சுற்றி நின்றாலும்
சூழ்நிலை உனக்கு பழகாது!

ஆடிடும் ஆட்டம் ஈர்ப்பிலிணங்கி
அடங்கிடும் வரையில் சுற்றிவிடு
சுற்று(ம்)முன் பார்வை நிலைத்திட
கூர்வை,சீர்-வை,நேர்-வை!


3/4/2006 காலைல பதிச்சு, காணாமல் போன பம்பரம் :-

http://maraboorjc.blogspot.com/2006/04/3.html

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 2 -விளக்கு!


பஞ்சலோகம் அஞ்சு விரல் ஒன்று சேர்ந்து
சுட்டெரியும் எறிதணலில் கலவையாகி
கொட்டிவைத்த சுட்டுவைத்த மண்ணுக்குள்ளே
ஆவிபிரிந்தோடும் உடல் பிண்டமாகி
பட்டறையில் தட்டி தட்டிப் பொன்னுமாகி
மின்னுகிற விளக்கெனவே பிறவி பெற்றேன்
அழகாக அம்மணியர் வாங்கிப்போக
பூஜையறை மேடையிலே பதவி ஏற்றேன்
விட்டதடா பட்டபாடு - மூச்சுவிடுமுன்
பட்டுதிரி பொட்டுவைத்து எண்ணெய் குளித்தே
சுட்டெரியும் சுடர் கொண்டு தீபமேற்றி
படர்வெளிச்சம் பாரெங்கும் வீசக் கற்றேன்!
நித்தம் நித்தம் எண்ணெய்குடித்தாவி நீக்கி
நெருப்பு உண்டு நிர்மலனாய் இருளைப்போக்கி
வந்து வீழும் விட்டில்கள் விரகம் போக்கி
வெந்து கரம் வேகிடினும் வேள்வியாக்கி
விடியல் நம்பி நம்பிக்கையாம் ஜோதியேற்றி
சொல்லும் பாடம் அறியலையோ சின்னத்தம்பி!
இல்லாத ஒன்றையெண்ணிக் கனவில்வாழும்
இயலாமை மண்ணிறுக்கம் களைந்து நீயும்
ஐம்பொன்னாம் ஐம்புலன்கள் ஒன்று சேர்த்து
நம்பிக்கைக் கண்ணொளிற வெளிச்சம் காட்டி
விளக்கு எந்தன் வழிபழகப் பந்தம் காட்டி
வருமுலகு அறிந்திடும்நல் பாதை விளக்கு!

ப்ளாகர் வரிசையில் காணப்பட்டாலும், "முன்னெழுதியவை" யில் காணவில்லை. எனவே, மீண்டும் பதிகிறேன்.

முதலிலேயே நன்றி நவிலல்!

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள்! சரிதான்!அதாவது என் கணக்குப்படி, நான் ஐந்தாவது பிள்ளை. எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்ந்ததில்லை! எதற்கும் சாதாரணமாக வளைந்து கொடுக்க மாட்டேன்! அதனால், பதில், அதனோடு அடி இரண்டும் கலந்து கட்டி கிடைத்திருக்கின்றன! இன்னும், என்னுள் கேட்டு, உலகத்தைக் கேட்டு, பதிவுகளில் கேட்டு, என் தேடுதல் இன்றும் தொடர்கிறது. அதன் விழைவே, நான் எழுத முயல்வது.
எனக்குத் தமிழ் ஆர்வம் வரக் காரணம்?

மார்கழி மாதம், வீட்டிலும், கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்போனதாலா? இல்லை திருக்குறளை அழகாகப் பிரித்துக் கூறி தமிழைப் புரிய வைத்த கமலா டீச்சர் காரணமா?ஐந்தாம் வகுப்பு படிக்கையில் குழந்தைப் புத்தகம் கோகுலத்தில் வந்த ஒரு பாட்டைக் கண்டு லயித்து, அதை நான் எழுதியதாகச் சொல்லி பின்னர் குட்டு வெளிப்பட்டு எல்லாரும் சிரித்ததாலா?

வானொலியில் கம்பர் விழா கேட்கமட்டும் லீவு போட அனுமதித்த அம்மாவினாலா? இல்லை கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல், தாத்தாவின் தம்பி, கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் பாடல்களைக் கேட்டு, கேட்டுத் தெளிந்ததாலா? தெரியாது! ஆனால், கவிதை போட்டியாகட்டும், கல்லூரி நாட்களில் கட்டுரை ஆகட்டும், என்னை கொஞ்சம் தன்னம்பிக்கைக்குர்¢யவன் ஆக்கியது, தமிழ்!

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் ஆனந்த விகடன், ஜுனியர் விகடனுக்கான மதுரை மாவட்டத்து நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மூவருள் ஒருவனாக்கியதும், அதில் சிறப்பு நிருபர் விருது வாங்கச் செய்ததும், என்னுள் ஒளிந்திருந்த தமிழே! மற்ற இருவர், கல்பனா, மற்றும் இன்று சமீபத்தில் வெளிவரவிருக்கிற "திருட்டுப்பயலே" (திட்டலைங்க, அது திரைப்படத்து பேருங்க!) வின் இயக்குனர், சுகி.கணேசனான அன்றைய சு.கணேசன்!

வேலை நிமித்தம் 15 ஆண்டுகள் வடமாநிலங்களில் இருந்த என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தது, அவ்வப்போது கேட்ட அரட்டை அரங்கமும், தமிழ் சங்கத்தில் நடக்கும் விழாக்களுமே!

மீண்டும், தமிழகத்தில் வந்து வேலை செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!! அதுவும் அதோடு, மீண்டும் என்னுள் வசந்தம் வரும், தமிழில் தினமும் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!

நீண்ட நாட்களாக மனதில் ஓடிய கருவே, முதன் முதலில் நான் பதிவு செய்த அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! சக மனிதன் சொல்லி கேட்காததையா, பொருட்கள் சொல்லிக் கேட்கப்போகிறான் மனிதன்? இருந்தாலும், வாய் பேசா ஜடப்பொருட்களே நமக்கு பல வாழ்வியல் பாடத்தை சொல்கிறது என்றால், வாயுள்ள நாம் எத்தனை தேர்ச்சி பெறவேண்டும்? மனதில் தோன்றிய சில கவிதைகளை என் வீட்டிலேயே உள்ள கவிஞர் குழாம் (ஆமாம்; நிஜம்! என் தாய் மாமன் வெங்கடரெங்கன், எனது பெரிய மாமா பெண் பேராசிரியையும் பிரபல நவீன கவிதாயினியான் ரெங்கநாயகி, மற்றும் எனது சகோதரிகள், தாயார் போன்றோர்) முன் வைத்தேன். முதன் முதலில் அவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று அதிக ஓட்டு பெற்ற அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடல் - விளக்கு!!

http://maraboorjc.blogspot.com/2006/04/2.html

ஒரு வேளை ஒண்ணும் விளங்கவில்லையென்று, "விளக்கு" என்று சொல்லிவிட்டார்களோ?!நான் என் கவிதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்துவிட்டேனோ?) கவிதையை மூடிவைக்கப் போனேன்! ரெங்கநாயகிதான் என்னை அழைத்து, "டேய், நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது?" என்றார். தமிழிலா? அவரே எனக்கு "பதிவுகள்" இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் எனது கவிதைகளைப் போடச்சொன்னார். அவர்களுக்கு நன்றி.

எல்லாரும் முடிவில் நன்றி நவில்வார்கள். எழுந்து சென்றுவிடும் கூட்டத்துக்கு சொல்வதை விட, நட்சத்திர பேச்சாளர் பேச்சை கேட்க ஆவலாய் இருக்கும் கூட்டத்துக்கு தமிழ்மண அன்பர்களை ஒப்பிட்டு, எனது நன்றிகளை முதல் நட்சத்திரப் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன்.
திரு.மாலனுக்கு அவர் மதுரை திருநகரில், தனது தமக்கையாரின் வீட்டுக்கு வருவதைப் பற்றியும், அப்போது அவர் பேசும் செய்திகளை நான் கேட்டதாகவும் குறிப்பிட்டு, எப்படி இணையத்தில் எழுதவேண்டும் எனக் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்; அத்தனை வேலைகளுக்கும் நடுவே, தனது ஆரம்ப வாழ்க்கை நிகழ்வுகளை நான் எழுதியது கண்டு மகிழ்வதாகவும், கவிதைகள் நன்கு உள்ளதாகவும், அவரும், திண்ணை, பதிவுகள், போன்றவற்றில் எழுதலாம் என்றும் குறிப்பிட்டு எழுதினார். அதோடு, யுனிகோடில் தமிழ் பதித்தால், மேலும் பல இணையங்களில் எழுதலாம் என்று சொன்னார். யுனிகோடைப் பற்றி விளக்கம் கேட்டு, மறுபடியும் அவருக்கு எழுதினேன். அவர் மீண்டும் பொறுமையாக, தமிழ்மணத்தை பற்றி குறிப்பிட்டு, அதில், எப்படி யுனிக்கோடில் பதிவது என எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

முதலில் திருப்பதியில் மொட்டை தேடுவது போல் நுழைந்த நான், காசி ஆறுமுகம் அவர்களின் "உன்கோடு, தனிக்கோடு"- கண்டு தேன் குடித்த வண்டானேன்! எனக்கு தெரிந்த அத்தனை தமிழ் ஆர்வலர்களுக்கும் அந்த urlஐ அனுப்பி, படிக்கச் செய்தேன்! அந்த கடினமான விஷயத்தை, தேனில் தடவிக் கொடுக்கும் மருந்தைப் போல் அழகாக ஊட்டியிருந்தார் அவர். நேரில் பார்க்காமலே, அவரது அபரித ரசிகனானேன். என்னடா இவன் அடிக்கடி தேன் பற்றி சொல்கிறானே, என்று என்னை நரி ஆக்கிவிடாதீர்கள்!

பின்னர் மாலை நேரங்களில் சுரதா, முரசு அஞ்சல் போன்றவற்றின் உதவியோடு, தமிழ் எழுதிப்பழகி, மெல்ல மெல்ல தமிழ் மணத்துள் எட்டிப்பார்த்தேன்.

முதலில் பதித்த அத்தனையும் அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! ஆனால், அவற்றுக்கு மிக சில பின்னூட்டங்களே வந்தன. ஆனால், பின்னூட்டங்களை எப்படி பதிவுகளில் காணச்செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், காசி அவர்களுக்கு அஞ்சல் எழுதி, எப்படி, மட்டுறுத்தல் செய்வது என்று தெரிந்து கொண்டேன். காசி அவர்களுக்கு "கண்ணாயிரம்" (கைதி இல்லப்பா) எனச் செல்லப் பெயர் வைக்கலாம்! எப்படித்தான் அத்தனை பேருக்கும் கடிதம் வந்த வேகத்திலேயே, அவரால் சரியான பதிலை, உடனுக்குடன் அனுப்பி வைக்க முடிகிறதோ? அந்த அந்நியோன்னியம் நிறைந்த தகவல் செறிவுள்ள கடிதங்கள் எழுதி என்னைச் செம்மை படுத்திய காசி அவர்களுக்கு நன்றி.

பல அன்பர்கள் கூறுவது போல், எப்படி அதிகமான பின்னூட்டங்களைப் பெறுவது என மனம் தவித்தது உண்மை. ஆனால், சிலரது செய்திகள் படித்தபின், அந்த செய்திகள் மறுநாளே பழைய விஷயமாகிவிடுவதும், மீண்டும் படிக்கத் தூண்டுமா, அல்லது, மறக்கப்படுமா என்று ஒரு கேள்வி என்னும் எழுந்தது. SLANDEROUS, SCANDALOUS, SLEAZE என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப் பட்டதை எழுதக் கூடாது என்று உறுதி கொண்டேன். என்று படித்தாலும், யாருக்கேனும், ஒரு புதிய தகவலோ, ஒரு நெறியோ, ஒரு நல்ல விஷயமோ தருவதாக இருந்தால்தான், அச்செய்தி காலத்தால் அழியாததாகும்; அப்படிபட்ட விஷயங்களையே எழுதவேண்டும் என்று என்னுள் ஒரு கோட்பாடு வைத்துக்கொண்டேன். பின்னூட்டங்களை விட, என் மனம் எதைப்பற்றி என்னை எழுதவைக்கிறதோ, அதையே நான் எழுத விழைகிறேன்.
மற்றவர் பதிவுகளை முடிந்த மட்டும் படிப்பேன். ஒரு முறை சாதி குறித்து, தவறான செய்தி கண்டு, என்னுள் இருந்த பத்திரிகையாளன் விழித்துக்கொண்டான்!! அந்த பதிவை இட்டவர், தனது பெயரிலேயே சாதியை உடன் ஒட்டிவைத்துள்ளார்!! உடனே, தவறுகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு பதிவு இட்டேன். அதற்கு, ஏராளமான பின்னூட்டங்கள்!! எது நாட்டுக்குத் தேவை இல்லையோ, எதை நாம் மறக்க முயல்கிறோமோ, அது மீண்டும், மீண்டும் பேசப்படுவதைக் கண்டு நான் மிகவும் கவலை கொண்டு, சாதி(தீ) என ஒரு பதிவு பதித்தேன், நான் என்ன சாதி என்று பரிகசித்து ஒரு கவிதையும் பதித்தேன்.

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.html

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.html

ஆரம்பித்துள்ளேன். பிற இணைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றி.

தமிழ்மணத்தால், எனக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் ஆயினர். ஒருவரை குறிப்பிட்டு, சிலரை மறந்திடலாகாது. எல்லாரது, பாராட்டுக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி.

கடைசியாக, எனது நன்றி, மதி அவர்களுக்கு. எல்லாரையும் 'மதி'க்கத் தெரிந்த நிறை'மதி' போன்ற 'மதி' கொண்டவர்! ஒரு மாதம் முன், அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைக் கண்டு, எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி,சந்தேகம்! நமது பதிவுகளையும் ஆசிரியக் குழு பார்க்கிறார்களா? என்று! நட்சத்திர வாரம், ஏப்ரல் முதல் தேதிக்குப்பின் வருவதால், தருமி போல் (பதிவர் தருமி இல்லை, திருவிளையாடல் தருமி!!) ஏகத்துக்கும் கேள்விகேட்டு, அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். பதில் :- "நீங்கள்தான்"- அவ்வளவே!!

எனது நன்றியுரை மிகவும் நீண்டுவிட்டது என்ன செய்ய? மதி அவர்கள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத நானும் இனி முயல்கிறேன். வரும் வார பதிவுகளை படித்து நிறை, குறை இருந்தால், சுட்டிக்காட்டி, என்னை இன்னும் மெருகேறச் செய்ய உதவப் போகும் ஆயிரமாயிரம் தமிழ்மண அன்பர்களுக்கு பணிவான நன்றி.