02 March 2008

சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி...

சென்னை நாரத கான சபாவில், இன்றைய மாலைப் பொழுது.. (ஞாயிறு 2 மார்ச்) வாசல் வரை நிரம்பி வழியும் கூட்டம்.. கலைந்த தலை, கசங்கிய சட்டைகளுடன் இருவர் என்னை பிடித்துத் தள்ளாத குறையாக முண்டியடித்து போய், இருக்கை தேடி அமருமுன், அவர்களை நேரில் ஒரு பிடி பிடித்து ஏன் இப்படி? ' என்று கேட்கும் முன், நானும் அரங்கத்துள் நுழைந்தேன். அந்த சூழ்நிலை யாரையுமே பேசவிடாது. மேடையில் ஒருவர் பின் ஒருவராக பேசுபவரைத்தவிர!

என்னை தள்ளிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தவர்கள் கணேஷ். வசந்த்! சுஜாதாவின் ஆதர்ஸ புருஷர்கள், கதை நாயகர்கள்! வசந்தை இதுபோல் சிரிப்பு கலைந்து நான் பார்ப்பது இதுவே முதல் முறை! கணேஷின் சீரியஸ் முகம், முதல் முறை வெளிரிப் போயிருந்தது! இனி இவர்கள் ப்ரதாபத்தை யார் அரங்கேற்றுவார்கள்?

ஆம், அங்கு நடந்த நிகழ்ச்சி, சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி செட்டியார், பார்த்திபன், இயக்குநர் வசந்த், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி!

எல்லார் பேசியதிலிருந்து சில சாராம்சம்:

சத்யராஜும், பத்திரிகையாளர் சுதாங்கனும், பெருமை பட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயற்பெயரும் ரங்கராஜன் என்பதால்! தன் மனைவியின் பெயரில் அவர் பிற்காலத்தில் தான் எழுதினாராம். முதலில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதமும், கணையாழியும்தான் கதைகள் பிரசுரித்துள்ளன!

திரு. கஸ்தூரி ரங்கனுடன் இணைந்து அவர் நடத்திய கணையாழி இதழில், சுஜாதாவின் 'கடைசி பக்கம்' எத்தனை எத்தனை பேருக்கு தமிழ் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ரா.கி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, எஸ்.ராம்கிருஷ்னன், மதன், சுதாங்கன், இரா.முருகன், போன்றோரின் சொற்களில் வெளிப்பட்டன!

அவர் தம்பி பேசும்போது, சுஜாதா தமிழ் சொற்களை கணினிமயமாக்கியதில் சுஜாதாவின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். பேடண்ட் வாங்கியிருந்தால், அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரார் ஆகியிருப்பார், ஆனால் தமிழை நவீன மயமாக்குதலில் இருந்த ஆர்வத்திலும், இன்றைய இளைஞர்களுக்கு தமிழின் ஆழ அகலதை சுட்டிக் காட்ட அவர் கணினி தமிழைத் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அவரது தங்கையார் பேசுகையில், சுஜாதாவுக்கு புல்புல்தாரா, மாண்டொலின் அருமையாக வாசிக்கவும், திறம்பட ஓவியம் வரையத் தெரியும் என்றும், எல்லாரும் அவர் ஒரு இசைக்கலைஞராகவோ அல்லது ஒரு ஓவியனாகவோ வருவார் என எண்ணியிருக்கையில், விஞ்ஞானியாகவும் (பெங்களூரூ பாரத் எலக்ட்ரிகலில் உயரதிகாரி - மின் ஓட்டுப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த குழுவின் தலைவர்), கவிஞராகவும் (சுதாங்கன் வாசித்துக் காட்டிய வேலை செய்யும் சிறுவனைப்பார்த்து சுஜாதா எழுதிய கவிதை கண்களில் நீர் வரவழைத்தது!), வசன கவியாகவும் (கவிஞர் தமிழச்சி வாசித்துக் காட்டினார்), நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் (எல்லாரும் இதை குறிப்பிட்டு பல மேற்கோள் காட்டினர்), எல்லாரும் அறிந்த கதை, கட்டுரை, நாவல் ஆசிரியராகவும் எப்படி ஆனார்," என அதிசயித்தார். என்று அவர் வீட்டுக்குச் சென்றாலும், சுற்றி பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருப்பதால், இவர் உள்ளே செல்ல தயங்குகிறார் என்றால், நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தமக்கையை மட்டும் பார்த்தவாரே நலம் விசாரித்து, இருக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்!

மதன் மற்றும் கமலஹாசன் பேசுகையில் எழுத்தாளர்களையும், திரைக் கதை எழுத்தாளர்களையும் சில தயாரிப்பாளர்கள் எத்தணை மோசமாக நடத்துவார்கள், பணம் பட்டுவாடா செய்யாமல், என்பதையும் சற்று காட்டமகவே சுட்டிக் காட்டினார்கள் !

பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், கள்ளழகர் மலையில்தான் ஆண்டாளின் ஜீபசமாதியிருக்கிறது என்பதை மதுரைக்காரரான தமக்கு சுஜாதாவுடன் அக்கோவிலுக்கு செல்லுகையில்தான் தெரிந்தது என்று, செய்வன திருந்தச் செய்யும் பண்பாளர்களில் சுதாதாவை மிஞ்ச ஆள்கிடையாது என்று அடித்துச் சொன்னார்.

ஆம், கமல், பார்த்திபன், பேசமுடியாமல் கண்ணீர் விட்ட பாலு மகேந்திரா, சிவசங்கரி, வைரமுத்து, சுஜாதாவின் நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிவரும் பூர்ணம் விஸ்வநாதனின் நாடகக் குழுவினர், திருப்பூர் கிருஷ்ணன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர் நடராஜன் போன்றோர் பேசுகையில்தான் சுஜாதா எனும் மனிதன், கோபமே காட்டாத மனிதன், பல்கலை வித்தகன்(multi tasking), இசைக் கலைஞன் சுஜாதா, என்கின்ற அவரது பல புதிய பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன!

பத்து வருடங்களாக அவரை நோய்களினூடே, காலனின் வரவைத் தள்ளி வைத்து தமிழ் சேவை செய்ய அவரது மனைவியார் சுஜாதா எத்தனை மெனக்கட்டிருக்கிறார் என்பதும், பெற்றோரை தனியே விட்டு வெளிநாடுகளில் வாழ் இளைஞர்களினால் அவருக்கு இருந்த மனபாரமும், பற்பல கலைஞர்களுக்கு அவர் ஒரு சுமைதாங்கிக் கல்லாகவும் (தங்கர் பச்சான் பேசியதிலிருந்து) இருந்த செய்தியும் புதிது!

இனி ஒரு சுஜாதா வருவாரா? கலையுலகத்து விருதுகளான ஏகப்பட்ட "பத்ம.., சாகித்ய.." விருதுகளை இவருக்கு தந்து, நல்ல வேளை இவர் தரத்தை அரசாங்கம் ஜால்ரா அடிக்கும் மற்றும் பலராக்கிவிடவில்லை! சிவாஜிக்கு தேசிய விருதும், சுஜாதாவுக்கு சாகித்ய, பத்ம.. விருதுகளைவிட, அரங்கமே நிறைந்த மக்கள் கூட்டம், இந்த அஞ்சலி நாள் நிகழ்வே,பெரியதொரு விருது.

ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் வண்ண ஓவியம் அவரது மகன்களிடம் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் தீர்க்கமான பார்வையும், அவரது பிரத்யேகமான முன் முடிக் கற்றையும் என் கண்களில் பிம்பமாக இன்னும் நிலைத்து நிற்கிறது!

வெளியே வரும் போது யாரோ தோளைத் தொட்டனர்! திரும்பிப் பார்த்தால், கணேஷ¤ம், வசந்த்தும்! "ஸாரி, ப்ரதர், அவசரத்துல கொஞ்சம் இடிச்சுட்டு போய்ட்டேன்.." என ஆரம்பிக்க, "பரவாயில்லை" என நட்புரிமையோடு கைகுலுக்கி வந்தேன். இந்தத் காலத்தில் யார் இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அதும் 4 மணி நேரம் கழித்து? என்ன இருந்தாலும் சுஜாதாவின் வளர்ப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான்!