26 September 2007

கணபதி பப்பா, மோரியா!!!

ரீ.ச் பவுண்டேஷன் மூலம் பழைய கோவில்களைத் தேடிப் போவேன் என்பது பலருக்குத் தெரியும். அப்படி நான் போன ஒரு கோவில், சென்னை மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கோவளம் கைலாசநாதர் கோவில். எதிர்பார்த்தபடியே, புராதனமான, உதாசீனப் படுத்தப்பட்ட கோவில். கோவிலை எதிர்த்துள்ள காலி இடத்தில் இஸ்லாமியருக்கான மயானத்தை கட்டிவிட்டதால், கோவிலைச் சேர்ந்தவர்கள் அதை மூடி சுவரெடுத்துவிட்டு, தெற்குப்பக்கமாய் ஒரு வாசல் வைத்து விட்டார்கள். அப்படி இப்படி என்று சில நல்லவர்கள் சேர்ந்து, ஒரு கால பூசை நடக்கிறது. விமானம் முழுதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை நீக்க மரம் கொல்லி ரசாயனம் வரவழைத்துள்ளோம். நித்திய பூசை செய்ய கோவில் பூசாரியும் தேடி வருகிறோம். சனி, ஞாயிறுகளில், பஜனை அல்லது தேவாரப் பாடல் பாட வழிசெய்து வருகிறோம். கோவில் மதில்சுவர்களைச்சுற்றி மற்றவர்கள் மூன்று சுவர்கள் எழுப்பி, ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். குளத்தியும் அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள். அதை ரோட்டரி சங்கம் மூலம் தூர்வார முயற்சி செய்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன். மீனவ நண்பர். பக்கத்திலிருக்கும் டாஜ் நட்சத்திர ஹோட்டலில் வரும் வெளிநாட்டவர்கள், கடலில் நீந்த செல்வது வழக்கம். அப்போது கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்றுவது இவரது வேலை! அப்படி கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு மேல் இவர் காப்பற்றியுள்ளார்! அதி ஒரு நாட்டு தூதரும் அடங்குவார்! மகிழ்ந்துபோய் பணமோ, பரிசோ தருபவர்களிடம், "எனக்காக எதுவும் செய்யவேண்டாம். என் கிராம பெண்களுக்கு காலைக் கடன் செய்ய இடமில்லை. கடற்கறையோரம் செல்வது சங்கடமான வேலை. எனவே, ஒரு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டும், பிள்ளைகளுக்கு கல்விக் கூடம், மற்றும் சுயவேலை வாய்ப்புக்காக சமுதாயக் கூடம் என்று பல கட்டிடங்களை கட்டி வாங்கியுள்ளார்! தனக்காக எல்லாம் கேட்டும் உலகத்தில், தன் ஊருக்காக இவர் கேட்க, மனமகிழ்ந்து செய்வோரும், அதிகமாகவே இவர்களுக்கு செய்ய முன் வருகின்றனர். கைலாசநாதர் கோவிலையும் இவரே பராமரித்து வருகிறார். விவேகானந்த பக்தரான இவர், கோவிலை செப்பனிட முனைந்துள்ளார். கட்டாயம் இந்த சமூக நலக் காவலரோடு, எங்கள் ரீ.ச் இயக்கமும் கை கோர்த்து, கோவிலிலேயே, மூலிகைத் தோட்டம், கல்விக் கூடம், மற்றும் மருத்துவர் வருகை போன்றவற்றையும் நாங்கள் செய்ய முயல்கிறோம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.

சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம் வெளியூருக்கு அனுப்புவது போல்!

பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா, லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத் தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக் கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?

04 September 2007

ஆத்ம விசாரம்!

பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!


நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.


சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?

அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!

எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!


நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.

மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!


மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!


இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?


(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.

மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!