26 September 2007

கணபதி பப்பா, மோரியா!!!

ரீ.ச் பவுண்டேஷன் மூலம் பழைய கோவில்களைத் தேடிப் போவேன் என்பது பலருக்குத் தெரியும். அப்படி நான் போன ஒரு கோவில், சென்னை மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கோவளம் கைலாசநாதர் கோவில். எதிர்பார்த்தபடியே, புராதனமான, உதாசீனப் படுத்தப்பட்ட கோவில். கோவிலை எதிர்த்துள்ள காலி இடத்தில் இஸ்லாமியருக்கான மயானத்தை கட்டிவிட்டதால், கோவிலைச் சேர்ந்தவர்கள் அதை மூடி சுவரெடுத்துவிட்டு, தெற்குப்பக்கமாய் ஒரு வாசல் வைத்து விட்டார்கள். அப்படி இப்படி என்று சில நல்லவர்கள் சேர்ந்து, ஒரு கால பூசை நடக்கிறது. விமானம் முழுதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை நீக்க மரம் கொல்லி ரசாயனம் வரவழைத்துள்ளோம். நித்திய பூசை செய்ய கோவில் பூசாரியும் தேடி வருகிறோம். சனி, ஞாயிறுகளில், பஜனை அல்லது தேவாரப் பாடல் பாட வழிசெய்து வருகிறோம். கோவில் மதில்சுவர்களைச்சுற்றி மற்றவர்கள் மூன்று சுவர்கள் எழுப்பி, ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். குளத்தியும் அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள். அதை ரோட்டரி சங்கம் மூலம் தூர்வார முயற்சி செய்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன். மீனவ நண்பர். பக்கத்திலிருக்கும் டாஜ் நட்சத்திர ஹோட்டலில் வரும் வெளிநாட்டவர்கள், கடலில் நீந்த செல்வது வழக்கம். அப்போது கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்றுவது இவரது வேலை! அப்படி கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு மேல் இவர் காப்பற்றியுள்ளார்! அதி ஒரு நாட்டு தூதரும் அடங்குவார்! மகிழ்ந்துபோய் பணமோ, பரிசோ தருபவர்களிடம், "எனக்காக எதுவும் செய்யவேண்டாம். என் கிராம பெண்களுக்கு காலைக் கடன் செய்ய இடமில்லை. கடற்கறையோரம் செல்வது சங்கடமான வேலை. எனவே, ஒரு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டும், பிள்ளைகளுக்கு கல்விக் கூடம், மற்றும் சுயவேலை வாய்ப்புக்காக சமுதாயக் கூடம் என்று பல கட்டிடங்களை கட்டி வாங்கியுள்ளார்! தனக்காக எல்லாம் கேட்டும் உலகத்தில், தன் ஊருக்காக இவர் கேட்க, மனமகிழ்ந்து செய்வோரும், அதிகமாகவே இவர்களுக்கு செய்ய முன் வருகின்றனர். கைலாசநாதர் கோவிலையும் இவரே பராமரித்து வருகிறார். விவேகானந்த பக்தரான இவர், கோவிலை செப்பனிட முனைந்துள்ளார். கட்டாயம் இந்த சமூக நலக் காவலரோடு, எங்கள் ரீ.ச் இயக்கமும் கை கோர்த்து, கோவிலிலேயே, மூலிகைத் தோட்டம், கல்விக் கூடம், மற்றும் மருத்துவர் வருகை போன்றவற்றையும் நாங்கள் செய்ய முயல்கிறோம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.

சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம் வெளியூருக்கு அனுப்புவது போல்!

பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா, லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத் தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக் கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?

10 comments:

வல்லிசிம்ஹன் said...

கணபதி திரும்பி வந்துவிடுவார்!!
பின்ன இந்தப் பிஞ்சுகள் வாய் நிறைய அழைக்கிறார்களே.என்ன அழகு.

அருமை அருமை!!

கீதா சாம்பசிவம் said...

அருமையான முயற்சி. நண்பர் நாராயணனுக்குப் பாராட்டுக்கள்.

ஜெய. சந்திரசேகரன் said...

வல்லி சிம்ஹன், மற்றொரு பதிவின் பதிலில் சொன்னதுபோல், தொல்லைக்காட்சிப் பெட்டியை கிடாசியாச்சு. அதான் வீட்ல குழந்தைளும் மண்ணெடுத்து அவங்கவங்க பிள்ளையார் செஞ்சு விளையாண்டாங்க. தனியா கவனிச்சு, பூ போட்டு, படையல் வெச்சு, பூஜை பண்ணினாங்க. நாம் எப்படியோ, மக்கள் அவ்வழி. நாம 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு", மும்தாஜ் ஆடற படத்தை பார்த்துகிட்டு ஒக்கார்ந்தோம்னா, அவங்களும் அதைத்தான் பின்பற்றுவாங்க. கட்டாயம் பிள்ளையார் அடுத்த வருஷம் வருவார்., குழந்தைகள் குரலைக் கேட்டு! உங்க வருகைக்கு நன்றி.

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி கீதா சாம்பசிவம், எப்ப இந்தியா வர்றீங்க? முன்னயே தேதி சொன்னா, உங்க ஊர் கோவிலுக்கு போக வசதியாயிருக்கும்!

Shobha said...

Pillayar Gambirama irukkar! Neengale panninadala karaikka manasu varadu kashtamthan.
Kailasanathar main roadlaye irukara? or off the Mahabalipuram road?

ஜெய. சந்திரசேகரன் said...

Vanakkam Shoba Madam,
Kovalamis off- Mahabalipuram Road on the left hand side when you drive from Chennai to Mahabalipuram, as soon as you cross Muttukadu back water bridge and Taj FishermanCove 5 star hotel.
Chandra

முத்துலெட்சுமி said...

அருமையான பிள்ளையாரா வந்திருக்காரே ... பிள்ளைங்களோட ஊர்வலமும் சூப்பர்.. ...அந்த மீனவ நண்பருக்கு பாராட்டுக்கள்.

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி, முத்துலட்சுமி. இப்படி பல கோவில்களை நாங்கள் சீர் செய்ய முற்படுகிறோம். அவ்விடத்திலேயே, கல்வி, மருத்துவம் இலவசமாக நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கீதா சாம்பசிவம் said...

//நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! //
கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திட்டு வந்ததில் இது கண்ணிலே பட்டது. எந்த வழிபாடும் விநாயகரில் ஆரம்பித்து, அனுமனில் முடிய வேண்டும் என்பதே பின்னாட்களில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறியது" எனத் திரிந்து விட்டது. பிள்ளையார் பற்றிய என் பதிவுகளைப் பார்க்கவும். :))))))))

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி கீதா சாம்பசிவம். கட்டாயம் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்.