03 January 2010

ஆருத்ரா அதிசயம்

சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம். மறுநாள் ரீச் பவுண்டேஷன் நடத்திய உழவாரப்பணி அன்பர்களுக்கான பழங்கால கோயில்கள் பாதுகாப்பது எப்படி என்பதன் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் ஆருத்ரா தரிசனம் மற்றும் களி தனக்குக் கிடைக்காமல், சிதம்பரம் வழியாக அழைத்துச் செல்லாமல் சென்றேன் என்ற புகார் என் மேல் ஒரு ரீச் உறுப்பினர் வை(த்)தார்! எனக்கு ஆருத்ரா என்ற விஷயம் தெரியாது. மாலை வரை புலம்பித் தீர்த்துவிட்டார் அன்பர்! பின்னர் மாலையில் திருப்பிறம்பியம் மற்றும் இன்னாம்பூர் கோயில்களுக்கு எல்லாரும் போவதாக முடிவு செய்து, முதலில் இன்னாம்பூர் சென்றோம். இன்னாம்பூர் கிராமம்,

சுவாமிமலை கும்பகோணம் பாதையில், திருப்பிறம்பியம் போகுமுன் வரும். அங்குள்ள எழுத்தறிவித்த நாதர் திருக்கோயில் நடராஜர் காண்பதற்கு அரிய ஒரு நடராஜர். திருவாச்சி எனும் வட்டம் எல்லா நடராஜ உற்சவ மூர்த்திகளில் இருக்கும். சிலை அமைப்பில் திருவாச்சி இன்றியமையாதது. ஆனால் இன்னாம்பூர் உற்சவ மூர்த்தியான நடராஜரின் ஜடை வரிகளே இருபக்கமும் விரிந்து இருக்க, அதில் ஒருபக்கம் கங்கையும், மறுபக்கம் நாகராஜனும் இருக்க, வசீகரனாய் இருப்பார் இந்த இன்னாம்பூர் எழுத்தறிவித்த நாதர் நடராஜர். நாங்கள் கோயிலுக்கு போன பொது, இரவு கடைசி பூஜை முடிந்து கோயில் ச்சர்த்தும் நேரம். அவசரமாக ஓடி வந்த ஊர் பெரியவர் ஒருவர், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளை பத்திரமாக ஸ்வாமிமலை கோயிலில் சேர்த்துவிடுவது வழக்கம்

என்றும் அன்று ஊர் மக்கள் யாரும் சிலைகளை தூக்க வரவில்லையென்றும், எங்களை கை கொடுக்கச் சொல்ல்லி, இர்ய் விக்ரஹங்களையும் தூக்கி மாட்டு வண்டியில் வைக்கச்சொன்னார்.” புகார் சொன்ன அன்பர் அப்போதுதான், ஆர்வக் கோளாறால், நடராஜரைத் தொட்டு, திட்டு வாங்கிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அதிசயம் நடராஜரே ஊர்ப் பெரியவரின் மூலம் தன்னை தொட்டுத்தூக்கி வண்டியில் வைக்கச் சொல்கிறார். எனக்கும் சந்தோஷம்! காலையிலிருந்து புகார்களை சுமந்த எனக்கு நடராஜரை சுமக்க ஒரு வரம்! பத்திரமாய் 6-7 பேர்சேர்ந்து விக்ரஹங்களை வண்டியில் ஏற்றி ஸ்வாமிமலைக்கு

அனுப்பி வைத்தோம்.

இம்முறை 01-01-2010 அன்று ஆருத்ரா (திரு ஆதிரை). திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம்

போயே ஆகவேண்டும் என்று மனதுள் திட்டம். ஆனால் காரோட்டி அன்பர், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் மோசமாய் இருக்கும் என்று போவதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ஸ்வாமிமலையில் வருடக் கடைசி மற்றும்

புத்தாண்டு தினங்களில் தங்குவதை கடந்த 4 ஆண்டுகளாக

எங்கள் கூட்டுக் குடும்பம் கடைபிடித்து வருகிறது. ``சரி இருக்கவே இருக்கிறார் அருகிலேயே இன்னாம்பூரார், என்று அவரைப் பார்க்க சென்றேன்.

அதே ஊர் பெரியவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ``வாங்க சார்

பரவாயில்லையே இந்த ஆருத்ரா தரிசனத்துக்கும் வந்துவிட்டீர்களே,” என்று கேட்டு, உடனிருந்த இளைஞர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் கோயிலில் நந்தவனம் அமைத்து எல்லா நன்னாட்களிலும் கோயிலில் விழாக்கள் செய்து வருவதாக தெரிவித்தனர். பாரம்பரியம் காக்க இளைஞர்கள் முன்வருவது கண்டு

மகிழ்ந்து, சென்ற வருடானுபவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, ``என்னவோ இம்முறை காலையில் வந்துவிட்டேன். இரவானால் நடராஜரைத் தொட்டு சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்” என்று சொல்லி, தரிசனம் முடிந்து

ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு வைடை பெற்றேன்.

புத்தாண்டு அன்று மாலை சுமார் 7.30 மணிக்கு ஸ்வாமிமலையில் எங்கள் குடும்பத்தார் தங்கத்தேர் இழுப்பது முன்னேற்பாடு செய்த நிகழ்வு. தங்கத்தேர் இழுத்துவிட்டு சற்று அமர்ந்தேன்!

திடீரென தேரோடும் வெளிப்ரகாரத்துள் ஒரு ட்ராக்டர் வண்டி உட்பிரவேசித்தது! என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு

குரல்!

“சார்! வாங்க சார், என்ன இங்க இருக்கீங்க? வந்து கை கொடுங்க! இன்னாம்பூரார் உங்களை தூக்கக் கூப்பிடறார்,” என்று பரிச்சியமான அந்த இன்னாம்பூர் பெரியவரின் குரல் ட்ராக்டரிலிருந்து வந்தது!!! அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் கண்டு உள்ளம் பூரித்தது, கண்கள் பனித்தன. திருநல்லம் போனால் என்ன, இங்கேயே கடைசி நிமிட ஏற்பாடாக இன்னாம்பூர் வந்தால் என்ன? நான் ஒருவனே”, என்று சொல்லாமல் சொல்லி இன்முறுவலை தந்த அந்த இன்னாம்பூரானின் விளையாட்டில் நான் அடிமையாகி, ஆனந்தக் கண்ணீரோடு, சிலையைத் தொட்டு வணங்கி, தூக்கி வைக்கக் கை கொடுத்தேன். சென்ற முறை சிறிது சுமையாக இருந்த இன்னாம்பூரார் இன்று லேசாக மிதந்தார்! அதே இன்முறுவலோடு என்னைப் பார்த்துக் கொண்டே ஸ்வாமிமலை கருவூல

அறையிலும், என் மனதுள்ளும் ஒருசேர உட்புகுந்தார்.

முதலில் இருப்பது சென்ற ஆண்டு எடுத்த படம்.

அடுத்தது 01-01-2010வில் எடுத்த படம்!

அலகிலா விளையாட்டுடையாரவர்க்கே சரண் நாங்களே!