31 January 2007

புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு !

துவக்கு.காம் கவிதைப் போட்டி அறிவித்து, ஆறேழு மாதங்கள் ஆகியும், முடிவுகளை அறிவிக்கவில்லை. எனவே, எனக்குப் பிடித்த கவிதையை இங்கு தருகிறேன்.சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்!

பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்டு கண்ணுறங்கு..!
அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?

ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!

பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை

ஆண்: உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..

பெண்: புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?

ஆண்: காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா

பெண்: காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு

ஆண்: ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!

27 January 2007

வி.வ.போ - 5(விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டீ -5)

விடாதே பிடி!

முன்னர் ஈ.கோலி எனும் பாக்டீரியா செய்யும் அழிவு வேலைகளைப் பார்த்தோம். (http://maraboorjc.blogspot.com/2007/01/4.html) இந்த கட்டுரையில், ஒரு பாக்டீரியாவின் ஆக்க வேலையை பற்றி பார்ப்போம்!


நீர் ஈரம் உள்ள இடங்களில், மிக குறைவான உணவை உட்கொண்டு, எந்த விதமான நச்சு பொருட்களையும் காற்றில் கலக்காத ஒரு முனிவர் பாக்டீரியா இந்த காலோபாக்டர் க்ரெஸன்ட்டஸ் எனும் பாக்டீரியா. இது தனது நீண்ட தண்டுபோன்ற பகுதியின் மூலம் எந்த சமதளமானாலும், அதனோடு ஒட்டிக் கொள்கிறது! அத்தண்டினுள் பாலிசாக்கரைடு எனும் சர்க்கரை ரசாயன சங்கிலிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில சர்க்கரை மூல சங்கிலிகள் புரத சத்து சங்கிலிகளோடு இணைந்து, ஒரு விதமான ஜவ்வை உருவாக்கியுள்ளன. அந்த ஜவ்வு மூலமே, இந்த ஜந்து சமதளங்களோடு ஒட்டிக்கொள்கின்றன. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது!


நாம் சாதாரணமாகப் பார்க்கும் வஜ்ரம், இன்ன பிற கோந்துகள் ஒரு சதுர இன்ச் பரப்பளவில் சுமார் 2 கிலோ எடையை விடுபடாமல் தான்கி நின்றாலே அதிசயம். fபெவிகாலின் ஜோரு! என்று விளம்பரம் செய்யும் fபெவிகால், அதிக பட்சமாக 5 கிலோ எடையை ப்ரிந்து விழாமல் தாங்கும். ஆனால், இந்த பாக்டீரிய ஜவ்வுன் தாங்கும் சக்தி எவ்வளவு தெரியுமா? ஒரு சதுர இன்ச்க்கு 5 டன்!(ஒரு டன் = 1000 கிலோ. இந்த பாக்டீரியாவின் ஜவ்வை பல மடங்காக பரபணு சோதனை மூலம் பன்மடங்காக்கி, உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்தால், உலகிலேயே மிக அதிகமான பிடிப்பு சக்தி கொண்ட பசை தயார்! ப்ளூமிங்டன் மற்றும் ப்ரவுன் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


மருத்துவ அறுவை சிகிச்சைக்கு இரு பாகங்களை ஒட்ட இயற்கையிலிருந்து தயாரித்த ஜவ்வாகவும், கட்டிடக் கலை மற்றும் பொறியியல் துறைகளில் எந்த பொருளையும் ஒட்ட இந்த ஜவ்வு ஒரு வரப்ரசாதமாக இருக்கும்!


ஆனால், ஒரே ஒரு ப்ரச்னை! எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதால், எந்த கலத்தில்( பாத்திரத்தில்) இயந்திரத்தில் இதை தயாரித்தாலும், அந்த பத்திரத்தோடு இது ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாமல் போய்விட்டால்? !!


ஆராய்ச்சி தொடர்கிறது...

24 January 2007

முராரி பாபு!


ஆன்மீக வாதிகளுக்கு, நல்லதொரு எடுத்துக் காட்டு - முராரி பாபு! தன்னை ஒரு மத குருவாகவோ, ஒரு ஆன்மீக போதகராகவோ தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்! வால்மீகி ராமாயணத்தை சுவை படக் கூறுவதில் வித்தகர். ராமர் கதையில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. அதை பின்பற்ற மக்களிடையே, மனித நேயம் வளர ஆவன செய்வதுதான் என் பணி, என்கிறார் முராரி பாபு. சமீபத்தில், அவர் செய்துவரும் ஒரு மிக நல்ல பணியைப் பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தொலைதூர நாடுகளான மெக்சிகோ, ஆஸ்திரேலியாவிலிருந்து, வெதுவெதுப்பான நீரை நோக்கி இந்த சொற்பமே எஞ்சியுள்ள சுறாத்திமிங்கிலங்கள் ( எட்டு முதல் பத்து - டன் எடை இருக்கக்கூடியது), குஜராத்திலுள்ள வீரவல், போர்பந்தர், துவாரகா, பீடியா, டியு, மங்க்ரோல் கடலோரங்களில் குட்டிபோட கரை சேருவது வழக்கம்.


அப்போது மீனவர்களுக்கு நல்ல வெட்டைதான்! பல வருடங்களாக இந்த சுறா இனம் அழிந்து வருவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும், பல லட்சம் பெறுமான ஒரிரு சுறா பிடித்தால் போதும், ஒரு வருட செலவுக்கான பணம் கிடைத்துவிடும் என்பதால், அங்குள்ள 'கார்வா' எனும் மீனவ சமுதாயத்தினரை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை.


அங்கு பயணிக்கையில் இதை கேள்விப்பட்ட முராரி பாபு, உடனே, படகிலேறிச் சென்று, ஒரு பிடிபட்ட திமிங்கிலத்தை வலையை அறுத்து விடுவித்தார்! பயங்கர எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தங்கள் குருவாயிற்றே! என்ன செய்வது என்று தெரியாத அந்த மீனவர்களை நோக்கி முராரி பாபு சொன்னது: "குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்கு வரும் உங்கள் பெண்ணை கொல்வீர்களா? அப்படித்தானே இந்த வாயில்லா ஜீவன்களும்? இனத்தில் சுறா ஆயினும் அவை இங்கு வருகையில் தாய்மை அடைந்து வருகின்றன. யாரையும் கொல்வதில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த இனத்தையே அழித்துவிட்டால்? வருங்காலம் நம்மை ஒரு ஜீவகாருண்யமற்ற கொலைகாரர்களாகத்தான் பார்க்கும். "இந்தோ, அறுத்த வலைகளுக்கான நஷ்ட ஈடு 10,000 ஆயிரம் ரூபாய்," என்று தன் கையால் எடுத்து கொடுத்தார்!

இந்த செய்கை அம்மீனவர்களின் மனதை உலுக்கி விட்டது. இன்று கடந்த மூன்று ஆண்டுகளாக, திமிங்கிலங்கள் வேட்டை ஆடப் படுவதில்லை!

முன்பு திமிங்கிலங்களை வேட்டையாடும்போது பிடியா, மற்றும் விராவல் கடல் நீரெல்லாம், ரத்தச்சிவப்பாகக் காட்சியளிக்குமாம்! இப்போது நீரின் நிறம், மனிதரின் மனதுள் ஈரம், பாயக் காரணம், ஒரு ஆன்மீகவாதி! இதுபோல், சமுதாய நோக்கோடு எல்லா சாமியார்களும், மத போதகர்களும் இருந்தால், மனம், மதம், எல்லாவற்றுக்கும் நல்லது.

அங்குள்ள வன அதிகாரிகள், மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், முன்னணிக் கம்பெனிகளான குஜராத் கெமிகல்ஸ் மற்றும் உப்பளம் அதிகம் வைத்துள்ள டாடா கெமிகல்ஸ், தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்! "இத்தனை ஆண்டுகள் எங்களால் முடியாததை பாபா செய்துவிட்டார்!" என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க!

போலி பிஷப்களும், கோலாகலச் சாமியார்களும், கொலை கொள்ளையில் ஈடுபட்டும் 'பெயர்'இழப்பு ஆகாமல், இப்படி நல்ல காரியம் செய்தால், சுற்றுப்புற சூழலும் சரியாகும், மக்களும் மாறுவர்!

06 January 2007

வி.வ.போ - 4 - தலை நிமிர் தமிழா!

வி.வ.போ - 4 (விஞ்ஞானத்தை ளர்க்கப் போறேண்டீ -4)

மரபணு சோதனை செய்த பருத்தி, கடலை விதைகள், மற்றும் சிக்குன்குனியா போன்றவை நம்மை மட்டும் கிடுகிடுக்க வைக்க வில்லை! நுண்கிருமிகளான பாக்டீரியா அமெரிக்க அரசை கிடுகிடுக்க வைத்துள்ளது.

எல்லா கடைகளுக்கும் ச்பினாச் (Spinach) எனும் இலை வகைகளை விற்கும் ஒரு மாபெரும் பேரங்காடி (சூப்பர் மார்கெட்), நாட்டிலுள்ள அத்தனை இலைகளையும் திரும்பப் பெற்று, புதைத்து விட்டது! காரணம்? ஒரு ஈ! இது நம்மூர் ஈ அல்ல; ஈ.கோலி எனப்படும் எஸ்செரீசியா கோலி! இந்த பாக்டீரியக் கிருமி, உணவை உண்பவருக்கு வாந்தி, பேதி, மயக்கம், உண்டுபடுத்தி, சில சமயம் மரணத்துக்கே கொண்டு போய் விடும்! வருடத்துக்கு 60-80 பேர் இந்த கிருமி தாக்கிய உணவை உண்டு மடிகிறார்கள், இல்லை குறைந்தது 80,000 பேர் நோயுறுகிறார்கள்!
சராசரியாக இந்த கிருமியின் வீரியத்தை கண்டு பிடிக்க குறைந்த பட்சம், 24 மணி நேரமாகும். மிக அதிகமான பொருட்களை தயார் செய்யும் ஒரு உணவு தொழிற்கூடமோ, உபயோகப்படுத்தும் ஹோட்டல்களோ, எப்படி கால விரயமாகாமல், இதை கண்டு பிடிக்க முடியும்?
பத்தே நிமிடங்களில் முடியும் என செய்து காட்டியவர், ஒரு இந்தியர், தமிழர் - ராஜ் முத்தரசன்! 60 வயதே ஆன துடிப்பான விஞ்ஞானி! ட்ரெக்சல் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்து, இப்போது, வேதியல் துறை பேராசிரியராக இருக்கும், ராஜ், ஒரு மிகச்சிறிய கண்ணடி ஊசியின் ஒரு முனையில் பீஜோஎலக்டிரிக் பீங்கான் டைடனேட் எனும் மின் இணைப்பையும், மறு முனையில், அந்த ஈ.கோலியின் எதிர்ப்பு கிருமிகளையும் கொண்ட சிறிய கருவியை உருவாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட உணவினுள் அதை வைத்தால் போதும்! எதிர்சக்தியை எதிர்க்க அந்த கிருமி போராடும் தன்மை அதிகமாக அதிகமாக, மின் அதிர்வும் அதிகமாகும். அதிர்வின் அளவை வைத்து, எத்தனை சதவிகிதம் அந்த ஈ.கோலி [ஈ கொல்லி என்று தமிழில் பெயர் வைக்கலாமோ? :-) ] உணவில் படிந்துள்ளது என துல்லியமாய் உடனடியாக கண்டுபிடித்துவிடமுடியும்! இதே போல் மற்றசில கிருமிகளை கண்டறியவும், ராஜ் இந்த கருவியை அமைத்துள்ளார். மிக குறைந்த செலவில், உடனடி தகவல் பெற இவர்கண்டுபிடித்த இந்த கருவிக்காக, பல பாராட்டுகளும், அமெரிக்க அரசின் மானியமும், லிவெர்சென்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தோடு, கூட்டுறவு தொழில் முனைப்பும் ஏற்பட்டுள்ளன! மும்பை பாபா சோதனை கூடத்தினர், "மிளகாய், மிளகு போன்றவற்றினால் இந்த ஈ.கோலியின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளனராம்!
நான், திரு. ராஜ் முத்தரசனை பாராட்டி, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கூடவே, அவரின் கல்வி, பின்னணி பற்றியும் கேட்டு வினவினேன்! அவரும், அவரது அண்ணனும், சிறு வயதில், தமிழ் மொழியில் தான் எல்லா பாடங்களையும் படித்தார்களாம்! ஆங்கில தேர்ச்சி பெற, தனியாக ஒரு வாத்தியாரை அமர்த்தினாராம், இவர் தந்தை, திரு. ராஜகண்ணனார். அந்த ஆசிரியர், ஆதி அந்த விஷயங்களான 'வாட் இஸ் யுவர் நேம், வாடிஸ் யுவர் ஏஜ்?" போன்ற விஷயங்களே சொல்லித் தந்துள்ளார். ராஜின் தந்தை, பள்ளிக்கூடமே பார்க்காமல், தானாகவே படித்து தொலை தொடர்புக் கல்வியிலேயே பி.ஏ முடித்து, பின்னர் எம்.ஏ சென்னை பிரசிடன்ஸியிலேயே முதல் மாணவராகத் தேர்ந்தவராம்! மேம்பாட்டுக்காக, குடும்ப மொத்தமும் சிங்கப்பூர் செல்ல, அங்கு, மற்றவருடன் ஒப்பிடும் போது, ஆங்கிலம் குறைவாகவே தெரிந்தததால், வெட்கி தலை குனியாமல், விடாது முயன்று, இவர், இவர் அண்ணன், பள்ளியில் முதலிடத்தில் வந்தார்கள், எனும் செய்தி இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியம்! மீண்டும் இவர் தந்தை இந்தியா வந்து, கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருந்து, சிறிது காலம் ஊட்டியிலும், பின்னர் பல ஆண்டுகள் சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தாராம். அப்போது சென்னையிலிருந்த ராஜுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைத்துள்ளது! அதிலும் வேதியல் துறையில், முதல் மாணவராக வந்த ராஜ், ட்ரெக்சல் பல்கலைக் கழகத்திலேயே முதுநிலையும், ஆராய்ச்சியும் மேற்கொண்டு, இன்று பல அங்கீகாரம் பெற்று, பல்கலைக் கழக தலைவராக இருந்து, மீண்டும், இந்த பயோசென்ஸர் (நுண்உயிர்காட்டி) ஆராய்ச்சியை 2000 ஆண்டிலிருந்து செய்து வந்து, இப்போது வெற்றியும் பெற்றுள்ளார்! பல இந்திய மாணவருக்கு டாக்டர் பட்டத்துக்கான பரிந்துறையும், வழிகாட்டுதலும் புரிந்துள்ளார். இவர் அடிக்கடி, ஐ.ஐ.டி(IIT), பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி(IISc), பூனாவிலுள்ள என்.சி.எல்(NCL), ஹைதராபாத்திலுள்ள சி.சி.எம்.பி (CCMB) மற்றும் ஏனைய கல்வி நிலையங்களில் கலந்துரையாடல், சொற்பொழிவுகள் செய்துள்ளார்! CSIRO விஞ்ஞான துறை தலைவர், பாரத பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருமான டா. மால்ஷேகருக்கு பல விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஐ.ஐ.டியை சார்ந்த டா. எனாக்ஷி பட்டாசாரியா இவரது ஆராய்ச்சி கூடத்தில் இவரது ஆலோசனை பேரில் சில ஆய்வுகள் நடத்தியுள்ளார். எனவே தனது ஆராய்ச்சியின் மூலம் உலகுக்கே தமிழர் பெருமை பறைசாற்றி, அதோடு, தன்னால் இயலும்போது, நம் நாட்டினருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி, எத்தனையோ இந்தியர்கள் மதிநுட்பத்தால் இந்தியா ஏற்கனவே ஒரு வல்லரசு ஆகிவிட்டது என்று உலகுக்கு பறை சாற்றி வருகின்றனர்!

02 January 2007

யார் மிருகம்?

காஷ்மீர் ஸ்ரீநகர் அருகேயுள்ள த்ரால் நகரத்தின் வெளிக் கிராமங்களில் ஒன்றான 'மண்டோரா' வில் சென்ற நவம்பர் மாதம் நடந்த துயர சம்பவம் இது!

காட்டிலிருந்து கரடி ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டது. வழியில் அகப்பட்ட குழந்தையையும் பிடித்துச் சென்றது! அதைக் கண்ட ஊரார், உடனே அதனை விரட்டினர். என்ன தோன்றிற்றோ தெரியவில்லை! அது குழந்தையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால், இரவு முழுதும் காத்திருந்த ஊரார், கரடி மீண்டும் உள்ளே நுழைகையில், அதனைப் பிடித்து அடித்து, எரித்துக் கொன்றுவிட்டனர்! வனவிலங்கு அதிகாரிகள் ஒரு சிலர் அங்கு போனாலும், இந்த இழிசெயலை தடுக்க முடியாமல் போனது. காரணம்? "மக்கள் கண்களில் தெரிந்த கொலை வெறி!" என்கிறார்களாம்!
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, கருப்புக் கரடி, அதிசய பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினங்களில் ஒன்று. ஆனால், இரக்கமின்றி அதை கொலை செய்துவிட்டார்கள். அதை விடக் கொடுமை, கரடி பிடிபட்ட செய்தி கேட்டு அங்கே போன தனியார் திலைகாட்சியினர்! கொல்வதை தடுக்க முற்படாமல், சாவதானமாக, அந்த அடித்துக் கொடுமை செய்யும் காட்ச்சியையும், எரித்து கொலை செய்யும் காட்சியையும், படம் பிடித்து தொலைகாட்சியில் வெளியிட்டார்கள்! இதனை நமது நாட்டிம் முதல் எதிர்கண்ணோட்ட தகவல்தளமான BBC வெளியிட்டது! பாபர் மசூதி இடிக்கப் பட்ட போதும், குஜராத் கலவரத்தின் போதும், மும்பை வெடிகுண்டு செய்தியையும், முண்டியடித்து முதலில் உலகுக்கு தெரியச் செய்தது BBC! நாம் சுதந்திரம் பெற்று எத்தனை காலமாகியும், நம்முள் உள்ள சில சில தவறான செய்திகளை வெளியிட்டு குளிர் காய்வதை கடமையாக செய்கிறது. இவர்களுக்கு இப்படி செய்திகளை திரட்டி த் தருபவர் யார்? அவர்க்ளை முதலில் இனம் கண்டு தேச துரோக குற்றத்துக்கு அவர்களை உள்ளே தள்ளலாம். தப்பே இல்லை. இதை கருத்து சுதந்திரம் என்றோ, பத்திரிகை சுதந்திரம் என்றோ சொல்லி ஒருவர் நழுவக் கூடாது. சரி, விஷயத்துக்கு வருவோம். கரடி கொலையில் காவலர் விசாரணையின் கீழ் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீகார் காடுகளில் சமீபத்தில் வெறிபிடித்த யானை பலரை கொன்று குவித்து அட்டகாசம் செய்துள்ளது. அதனை அதிகாரிகளே சுட்டு கொன்றுவிட்டனர். அது பரவாயில்லை. ஏனெனில், யானைக்கு 'மதம்' பிடித்து விட்டது. எத்தனையோ முயற்சி செய்தும், மருத்துவர்களால் அதனை கட்டுப் படுத்த முடியவில்லை! ஆனால், இங்கே? குழந்தை என்று தெரிந்தோ, அல்லது, ஆட்கள் கூச்சல் கேட்டோ, ஒரு விலங்கான கரடி கூட, குழந்தையை கீழே போட்டுச் சென்று விட்டது. ஆனால், ஆறறிவு படைத்த, பண்பட்ட மனிதர்கள், காத்திருந்து, ஒரு மிருகத்தை பிடித்து, அடித்து, எரித்தே கொன்றுவிட்டார்கள். இப்போழுது சொல்லுங்கள்? யார் மிருகம்?