05 November 2010

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மின் தமிழ் அன்பர்கள் மிக்க தமிழ் மரபு அரக்கட்டளைக்காக, ஒரு மாமனிதனை நான் பேட்டி எடுக்கப்போயிருந்தேன்.
அதன் முழு வடிவம் இங்கே கேளுங்கள்


இரண்டே இரண்டு டேபிள் வெயிட் (table weight) அவற்றின் மேல் உள்ள புடைப்பு சிற்பமும், எழுத்துக்களும் ஒருவரது வாழ்க்கைப் பாதையை மாற்ற முடியுமா? முடியும் என்றே சொல்கிறது இந்த ஒரு நவீன பகீரதனின் வாழ்க்கை. ஆம், அன்று பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான்.

இந்த நவீன பகீரதனோ, பூமிக்குக் கீழே மறைந்து ஓடும் ஜீவ நதியாம் சரஸ்வதியை பூமிக்கு மேலே கொண்டுவந்துள்ளார்!

6 மாதங்களில் முடிக்க வேண்டிய ஒரு பணி 20 ஆண்டு காலம் நீடித்தால்?

நீடித்தால், நம்மை பணி நீக்கம் செய்து விடுவார்கள் :)

ஆனால்,அதே தன் வாழ்வின் குறிக்கோளாக, ஆரிய திராவிட பிரித்துப் பார்க்கும் மாயை, மொழி வேற்றுமை, உலக வாழ்வியலுக்கு முன்னோடியாக பாரதத்தில் பல இடங்களில் பூமிக்கு 300 அடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நம் ஜீவ நதி சரஸ்வதி, ராம சேது, நதிகள் இணைப்புத் திட்டம் - இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் பல விசாரணைகளை தம்மிடையே ஆய்வுக்கு உட்படுத்தி, நம் நாட்டின் தொன்மையையும், புனிதத்தியும் நிலை நாட்ட தன் வங்கிப் பணியையே துறந்து ஆய்ந்து, முடிவுகளை தனது புத்தகங்கள் மூலமும், தனது ஆராய்ச்சி நிறுவனம் மூலமாகவும் பரப்பி வரும் ஒரு நிறை குடம் முனைவர். கல்யாணராமன். இனி, இவரது கோப்புகளைக் கேட்டபின் நாம் சொல்லப்போகும் தீபாவளி விசாரிப்பு என்ன தெரியுமா?

பாருங்கள் இந்தப்படங்களை . முனைவர் கல்யாணராமனின் படைப்புகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த அந்த இரண்டு மேஜை கனங்கள் (Table weight with Indus script and animals)

அவரது நீண்ட பேட்டியை சிறிது சிறிதாக பல பாகங்களாக தர உள்ளேன்.

இனி வரப்போகும் தீபாவளிகளில் நீங்கள் கேட்கப்போகும் குசல விசாரணை:

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா?

சரிதானே!

15 August 2010

கொடி காத்த கிழவி!

மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!
காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.
முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.

காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.

29 May 2010

தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 7

http://www.heritagewiki.org/index.php?title=தெரிந்த_ஊர்_தெரியாத_செய்தி_-_2

தமிழ் மரபுக் கட்டளை நடத்தும் மரபு விக்கியில் 2ஆவது, இந்த வலைத் தளத்தில் 7ஆவது கட்டுரை, இந்த போனி அமரேஸ்வரர் கோவில், விசாகபட்டிணம் அருகேயுள்ள அழகிய கோவில் பற்றிய கட்டுரை.
மேலே உள்ள லிங்க்கில் காண்க.

19 May 2010

தெரிந்த ஊர் தெரியாத செய்தி - 6

தெரிந்த ஊர் தெரியாத செய்தி - அரிக்கமேடு, புதுவை.

புதுவை அரிக்கமேடு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுக் களம். மத்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து நிற்கும் அரிக்கமேடு ஆய்வுக் களம் இன்று அழகிய மாந்தோப்பாக வேலியிட்டு நிற்கிறது. தொல்லியல் அறிஞர் தியாக.சத்திய மூர்த்தி அவர்கள் சொல்வது படி, “மிக அதிகமான இடங்கள் அரிக்கமேட்டைச் சுற்றி ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ, செலவு செய்ய எத்தனிக்கவில்லை. எனவே என் காலத்தில் என்னாலான பணி, வேலியிட்டு அந்த இடத்தைக் காப்பாற்ற முற்பட்டேன்,” என்கிறார். மின் தமிழ் குழும நண்பர் அ.சுகுமாரனும் நானும் அங்கே ஒரு ASI (மத்திய தொல்லியல் துறை அலுவலர்) நண்பருடன் வேலிக் கதவு திறந்து மாந்தோப்பு அடங்கிய நிலத்தினூடே நடந்தோம். சரியான வழி காட்டுதல் இன்றி, கால் போன போக்கிலே நடந்தோம். ஒரே புராதனச் சின்னம் அங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்ததற்கான செங்கல் மிச்சங்கள்.

இங்கே அருகில் துறைமுகம் இருந்ததாகவும், துளையிட்ட இயற்கைக் கற்களாலான பாசிகள் பெரிய அளவில் ஏற்றுமதியானதாகவும் செய்திகள் சொல்கின்றன. பொறுமையாக தேடிப்பார்த்ததில், துளையிட்ட பாசிகளும், அதற்கான மூலப் பொருட்களான கற்கள் சிலவும் கிடைத்தன.

சுற்றி வரும் பாதை ஆராய்ச்சிப் பயணம் (expedition) போவது போல மிகவும் அபாயகரமாக இருந்தன. நண்பர் சுகுமாரனை நடக்கவிட்டு எடுத்த படங்கள் காண்க.

மறுபுறம், ஒரு அதள பள்ளத்தில் கீழிறங்கி, கடலின் நீர் நிலையைத் தொடலாம். (Back waters). முன்பு பண்டங்கள் விற்கையில், இந்த சிறு சிறு படகுத் துறைகள்தான், கடலுள் பொருட்களை எடுத்துச் செல்லத் தோதாக படகுகளை நிறுத்த உபயோகப்பட்டன.

இன்றோ, பலான வேலைகள் செய்ய இளசுகள் இந்த வழியை நாடுகின்றனர். இந்த திடலுக்கு நடுவே ஒரு மேட்டை (பள்ளத்தை?) காட்டினார் ASI அலுவலர். அதற்குள் ஒரு பெரிய கட்டிடமே இருப்பதாகவும், அகழ்வாராய்ச்சிக்கு போதிய நிதிவரத்தின்மையால் அந்த பணி கைவிடப்பட்டதாகவும் சொன்னார்.

மொத்த பரப்பளவையும் பார்த்துக் கொள்ள ஒரே ஒரு அலுவலர். பாதுகாப்பு என்பது பூஜ்யம் - இடத்துக்கும், அதை பார்த்துக் கொள்ளும் ஆளுக்கும்! என்னமாய் உறங்குகிறது நம் புராதன பூமி!

மீண்டும் வெளியே வரும் வழியிலேயே, அரிக்கமேட்டின் எல்லையில் இருந்த ஒரு சிறிய கோயில் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அருகில் குழவியில் வெற்றிலை இடித்துக் கொண்ட இரண்டு கிழவிகளை விசாரித்ததில், ‘கடன் வாங்கின சாமி கோவில்' என்றார்கள்! பின்ன?

‘பின்ன என்ன? அதான் வெளியே நிற்கிற இரண்டு பேரும் கடன் கொடுத்தவங்க. வாங்கின பிரம்மா(?!) வெளியே வர்றப்ப பிடிச்சு கடனை திருப்பி வசூல் பண்ணத்தான் இங்க நிற்கிறாங்க,” என்றார் ஒரு கிழவி!

அப்படிப் போடு!

உள்ளே சென்று பார்த்தால், மூலவராய் பரிதாபமாய் கடன் பட்ட நெஞ்சத்துக்கு சொந்தக்காரனாய் ஒரு அழகிய ஜைன சிலை! சுமார் 6 அடி உயரம் இருக்கும் இந்த சிலை, நிச்சயமாக 2-3 ஆம் நூற்றாண்டின் ஜைன தீர்த்தங்கரரின் சிலை. அவருக்கு பட்டை விபூதி, மாலை எல்லாம் போட்டு (கடன் வாங்கின ஆளுக்கு இவ்வளாவு மரியாதையா, பரவாயில்லையே!) வைத்திருந்தனர். சரி, வெளியே வசூலுக்கு நிற்கும் இருவரின் சிலைகளையும் சரியாக ஆய்ந்து பார்த்தோம். பாவம், கோயில் கட்டவும், கொடை கொடுத்த வள்ளலான முதலியாரும், அவர்தம் மனைவியும் கைகூப்பி நிற்கும் சிலை இன்று தவறான ஊராரின் கதைப்புக்கு ஆளாகி, கடன் வாங்க வெளியில் நிற்பவர்களாக மாற்றிவிட்டது. சமுதாயத்தில் தவற்றை பரப்புவது எவ்வளவு பெரிய அசிங்கம்? அதுவும் வரலார்றுச் செய்திகளை திரித்துக் கூறல்? யாரை குறை சொல்வது?

சிலைகளின் கீழே உள்ள கல்வெட்டில் அழகாக, “சாவிடி மணியம் அழகப்ப முதலியார்” (சாவிடி என்பது வீட்டுப் பெயர்) என்று ஆண் சிலை கீழேயும், சாவிடி மணியம் முதலியார் பொஞ்சாதி” (அப்படித்தான் கல்வெட்டில் உள்ளது. மனைவிமார் பெயரோ, பெண்கள் பெயரோ, வெளிப்படையாக பொறிக்கவில்லை என்பதைக் காண்க!) என்று பெண்சிலையின் கீழேயும் பொறிக்கப் பட்டிருந்தன.

அந்த இருவருக்கும் மானசீகமாக வணங்கிவிட்டு, நம் கட்டுரையேனும் அவர்தம் அவப்பெயரை நீக்கும் என்ற நம்பிக்கையில் வெளிவந்தோம்.

அந்த கோயிலுக்கு சிறிது முன்னரேயே, மற்றொரு தனியார் கோயிலும் உள்ளது. ரெங்கராஜு எனும் பொன்னுச்சாமி என்பவர் வணங்கி வந்த அம்பாளின் காலடியிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என்றௌ அங்கே இருந்த அவர்தம் குடும்பத்தார் தெரிவித்தனர். 1950ல் அவர் இறந்ததும் அவருக்கு ஒரு நினைவுச் சிலை மிகவும் தத்ரூபமாக செய்து நிறுவப்பட்டுள்ளது. அதையும் படத்தில் காண்க. கல்வெட்டுகளில் பிழைகள் ஏற்பட்டுள்ளதும் ஒரு சரித்திர வெளிப்பாடே.

சரித்திரத் தேர்ச்சி கொள் என்று முண்டாசுக் கவி. சரியான சரித்திரத்தை திரித்துச் சொல்பவர்கள் உலகில் ஏராளம், உஷார்!


03 January 2010

ஆருத்ரா அதிசயம்

சென்ற வருடம் 6-1-2009 அன்று ஆருத்ரா தரிசனம். மறுநாள் ரீச் பவுண்டேஷன் நடத்திய உழவாரப்பணி அன்பர்களுக்கான பழங்கால கோயில்கள் பாதுகாப்பது எப்படி என்பதன் கருத்தரங்கம் நடைபெற்றது. முதல் நாள் ஆருத்ரா தரிசனம் மற்றும் களி தனக்குக் கிடைக்காமல், சிதம்பரம் வழியாக அழைத்துச் செல்லாமல் சென்றேன் என்ற புகார் என் மேல் ஒரு ரீச் உறுப்பினர் வை(த்)தார்! எனக்கு ஆருத்ரா என்ற விஷயம் தெரியாது. மாலை வரை புலம்பித் தீர்த்துவிட்டார் அன்பர்! பின்னர் மாலையில் திருப்பிறம்பியம் மற்றும் இன்னாம்பூர் கோயில்களுக்கு எல்லாரும் போவதாக முடிவு செய்து, முதலில் இன்னாம்பூர் சென்றோம். இன்னாம்பூர் கிராமம்,

சுவாமிமலை கும்பகோணம் பாதையில், திருப்பிறம்பியம் போகுமுன் வரும். அங்குள்ள எழுத்தறிவித்த நாதர் திருக்கோயில் நடராஜர் காண்பதற்கு அரிய ஒரு நடராஜர். திருவாச்சி எனும் வட்டம் எல்லா நடராஜ உற்சவ மூர்த்திகளில் இருக்கும். சிலை அமைப்பில் திருவாச்சி இன்றியமையாதது. ஆனால் இன்னாம்பூர் உற்சவ மூர்த்தியான நடராஜரின் ஜடை வரிகளே இருபக்கமும் விரிந்து இருக்க, அதில் ஒருபக்கம் கங்கையும், மறுபக்கம் நாகராஜனும் இருக்க, வசீகரனாய் இருப்பார் இந்த இன்னாம்பூர் எழுத்தறிவித்த நாதர் நடராஜர். நாங்கள் கோயிலுக்கு போன பொது, இரவு கடைசி பூஜை முடிந்து கோயில் ச்சர்த்தும் நேரம். அவசரமாக ஓடி வந்த ஊர் பெரியவர் ஒருவர், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளை பத்திரமாக ஸ்வாமிமலை கோயிலில் சேர்த்துவிடுவது வழக்கம்

என்றும் அன்று ஊர் மக்கள் யாரும் சிலைகளை தூக்க வரவில்லையென்றும், எங்களை கை கொடுக்கச் சொல்ல்லி, இர்ய் விக்ரஹங்களையும் தூக்கி மாட்டு வண்டியில் வைக்கச்சொன்னார்.” புகார் சொன்ன அன்பர் அப்போதுதான், ஆர்வக் கோளாறால், நடராஜரைத் தொட்டு, திட்டு வாங்கிக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தார். அதிசயம் நடராஜரே ஊர்ப் பெரியவரின் மூலம் தன்னை தொட்டுத்தூக்கி வண்டியில் வைக்கச் சொல்கிறார். எனக்கும் சந்தோஷம்! காலையிலிருந்து புகார்களை சுமந்த எனக்கு நடராஜரை சுமக்க ஒரு வரம்! பத்திரமாய் 6-7 பேர்சேர்ந்து விக்ரஹங்களை வண்டியில் ஏற்றி ஸ்வாமிமலைக்கு

அனுப்பி வைத்தோம்.

இம்முறை 01-01-2010 அன்று ஆருத்ரா (திரு ஆதிரை). திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம்

போயே ஆகவேண்டும் என்று மனதுள் திட்டம். ஆனால் காரோட்டி அன்பர், சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சாலை மிகவும் மோசமாய் இருக்கும் என்று போவதைத் தவிர்க்கச் சொல்லிவிட்டார். ஸ்வாமிமலையில் வருடக் கடைசி மற்றும்

புத்தாண்டு தினங்களில் தங்குவதை கடந்த 4 ஆண்டுகளாக

எங்கள் கூட்டுக் குடும்பம் கடைபிடித்து வருகிறது. ``சரி இருக்கவே இருக்கிறார் அருகிலேயே இன்னாம்பூரார், என்று அவரைப் பார்க்க சென்றேன்.

அதே ஊர் பெரியவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு, ``வாங்க சார்

பரவாயில்லையே இந்த ஆருத்ரா தரிசனத்துக்கும் வந்துவிட்டீர்களே,” என்று கேட்டு, உடனிருந்த இளைஞர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் கோயிலில் நந்தவனம் அமைத்து எல்லா நன்னாட்களிலும் கோயிலில் விழாக்கள் செய்து வருவதாக தெரிவித்தனர். பாரம்பரியம் காக்க இளைஞர்கள் முன்வருவது கண்டு

மகிழ்ந்து, சென்ற வருடானுபவத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு, ``என்னவோ இம்முறை காலையில் வந்துவிட்டேன். இரவானால் நடராஜரைத் தொட்டு சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும்” என்று சொல்லி, தரிசனம் முடிந்து

ப்ரசாதங்கள் பெற்றுக் கொண்டு வைடை பெற்றேன்.

புத்தாண்டு அன்று மாலை சுமார் 7.30 மணிக்கு ஸ்வாமிமலையில் எங்கள் குடும்பத்தார் தங்கத்தேர் இழுப்பது முன்னேற்பாடு செய்த நிகழ்வு. தங்கத்தேர் இழுத்துவிட்டு சற்று அமர்ந்தேன்!

திடீரென தேரோடும் வெளிப்ரகாரத்துள் ஒரு ட்ராக்டர் வண்டி உட்பிரவேசித்தது! என்ன என்று பார்ப்பதற்குள் ஒரு

குரல்!

“சார்! வாங்க சார், என்ன இங்க இருக்கீங்க? வந்து கை கொடுங்க! இன்னாம்பூரார் உங்களை தூக்கக் கூப்பிடறார்,” என்று பரிச்சியமான அந்த இன்னாம்பூர் பெரியவரின் குரல் ட்ராக்டரிலிருந்து வந்தது!!! அந்த ஆடல்வல்லானின் திருவிளையாடல் கண்டு உள்ளம் பூரித்தது, கண்கள் பனித்தன. திருநல்லம் போனால் என்ன, இங்கேயே கடைசி நிமிட ஏற்பாடாக இன்னாம்பூர் வந்தால் என்ன? நான் ஒருவனே”, என்று சொல்லாமல் சொல்லி இன்முறுவலை தந்த அந்த இன்னாம்பூரானின் விளையாட்டில் நான் அடிமையாகி, ஆனந்தக் கண்ணீரோடு, சிலையைத் தொட்டு வணங்கி, தூக்கி வைக்கக் கை கொடுத்தேன். சென்ற முறை சிறிது சுமையாக இருந்த இன்னாம்பூரார் இன்று லேசாக மிதந்தார்! அதே இன்முறுவலோடு என்னைப் பார்த்துக் கொண்டே ஸ்வாமிமலை கருவூல

அறையிலும், என் மனதுள்ளும் ஒருசேர உட்புகுந்தார்.

முதலில் இருப்பது சென்ற ஆண்டு எடுத்த படம்.

அடுத்தது 01-01-2010வில் எடுத்த படம்!

அலகிலா விளையாட்டுடையாரவர்க்கே சரண் நாங்களே!