17 May 2009

மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் - சுசி கணேசன்

மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் - சுசி கணேசன்

ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் 1988 மாணவப் பத்திரிகையாளர்களாய் நானும், நண்பன் சு. கணேசன் என்ற இன்றைய பிரபல இயக்குநர் சுசி. கணேசனும் மற்றும் ஒரு மாணவி (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) மதுரை மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். காலத்தில் கோலத்தில், நான் மும்பை, பரோடா நகரங்களில் ப்ளாஸ்டிக் நிபுணனாய், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து, கடந்த 3 ஆண்டுகளாய் என்னால் முடிந்த சமூக சேவை செய்ய எண்ணியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை எங்கள் குழந்தைகளுக்கு எடுத்து இயம்ப என்ணியும் சென்னையில் வசித்து வருகிறேன். புராதனக் கோவில்களை சீரமைக்க ரீச் பவுண்டேஷன் (www.conserveheritage.org) எனது முக்கியப் பணிக் களம். அதனால் பல கிராம மக்களை சந்தித்து வருகிறேன்.

திரைப்படங்கள், தொ(ல்)லைக் காட்சி இரண்டையும் தவிர்த்து விட்டது எங்கள் குடும்பம். ஆனால், முதன் முதலாய் ஒரு திரைப்படத்தோடு என்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு, சுசி. கணேசனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளக் காரணம் மனித நேயத்தின் ஒரு பரிணாமத்தை நண்பன் சுசி தொட்டதுதான்!

சுசி.கணேசனுடனான தொடர்பை மிகுந்த சிரமங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டேன். சினிமா வட்டத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கஷ்டம். அதுவும் இயக்குநருடன்! துணை இயக்குநர்கள், உதவியாளர்கள் சமுத்திரத்தில் பழைய கல்லூரி நட்பைக் கூறி யார் உள்ளே விடுவார்கள்? அழைப்பிதழ் இல்லாமலேயே, பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பது கிராமங்கள் தத்தெடுப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஏன்? சினிமா வட்டத்துள் பணமே பிரதானம். அடுத்தவர் துயர் துடைக்கவோ, அல்லது சாமானியனைப் பற்றி எண்ணிப் பார்க்கவோ பிரபலங்களுக்கு நேரம் இருப்பதில்லை. மாணவ நிருபராய் இருந்த கணேசன், கிராமத்திலிருந்து வந்த கணேசன், பி.டெக் படித்த கணேசன், கனவுத் தொழிற்சாலையில் கோலோச்சும் கணேசன், திரைப்பட வரலாற்றிலேயே (உலக,இந்திய) யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எண்ணி, அதை நனவாக்கியுள்ளார். கந்தசாமி பட பூஜையின் போதே, 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதை அவரது தயாரிப்பாளர் கலைப் புலி தாணு அவர்களின் ஊக்குவிப்பால் அறிவித்தார். அது பாடல் வெளியீட்டு விழாவின் போது நிறைவேறியுள்ளது. 17/05/2009 மாலை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், முக்கியமாக பங்கேற்றவர்கள் அந்த 30 கிராமத்தினர்.சொந்த செலவில், பஸ்களில் நிரம்பி வந்தனர். சேர்த்த கூட்டமில்லை, தானாய் சேர்ந்த கூட்டம்!

கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆனந்த பவன், நல்லி அதிபர்கள் உட்பட 20 பேர், அதில் பெயர் சொல்ல விரும்பாத 8 பேர்கள்,அந்த 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். ராமசந்திரா, ஏ.சி.சண்முகம் மற்றும் அகர்வால் கண் - மருத்துவ நிலையங்கள் இந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் தருவதாக அறிவித்துள்ளன. வந்த விண்ணப்ப மடல்கள் 998. தத்தெடுத்ததோ, 30! எனவே மேலும் பல ஆர்வலர்கள் இந்தப் பணியை ஊக்குவித்து எடுத்துச் செய்ய வேண்டும் என்று எல்லாரும் வேண்டுகோள் விடுத்தனர். சினிமா செட்டிங் போடவே பலகோடிகள் செலவு ஆகும்.அந்தப் பணத்தை நிரந்தர செலவாக கிராமங்களில் செய்து, அவற்றை மாற்ற முயற்சிக்கும் சுசி.கணேசன், கலைப்புலி தாணு போன்றோரிடம் நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன், மீண்டும் கோருவதும் இதுதான்: நண்பா, என்னை இப்பணியில் நிரந்தரமாய் இணைத்துக் கொள்! நண்பா, கை கொடுக்கிறேன், தூக்கிவிடு, என் சேவை எண்ணத்தை, அதன் மூலம் பல காலப் பொக்கிஷங்கள் நிறைந்த,சிதிலமடைந்த கோவில்கள் கொண்ட பல கிராமங்களை! "
பார்க்க படங்கள்