20 October 2008

பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

கோவில்களைப் புனரமைப்பு செய்யும் போது, சுவற்றில் உள்ள அழகான பல்லவர், சோழர், நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியிருந்த நாயக்கர் காலத்து ஓவியங்கள், இவ்வாறு அழிந்தது உலகப் ப்ரசித்தி ஆகிவிட்டது!

அப்படி அதில் என்ன இருக்கிறது?

பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?
இவை இயற்கை மூலிகைச் சாயங்களால் வரையப் பெற்றவை
கோட்டோவியங்களின் தடிமனைப் பார்த்தால், இன்று தயாரிக்கப்படும் மைக்ரோ டிப் பேனாக்கள் பக்கத்தில் கூட வராது! அத்தனை மெலிய கோடுகள்.

  1. வர்ணத்தோடு, உணர்வுகளை மெலிதாகப் படம் பிடித்துக் காட்டும் நயம்.
    ஸ்தல புராணங்களை, இதிகாசங்களை, மன்னர் காலச் சரித்திரத்தைப் ப்ரதிபலிக்கும் ஓவியங்கள்.
  2. இவை காலச் சின்னங்கள். 100 வருடம் ஆகிவிட்ட அனைத்துமே, பாதுகாக்கப் பட வேண்டிய சின்னங்கள் என்று தொல்பொருள் இலாகா சொல்லும் காலத்தில், இந்து அறநிலையத் துறைக்கு மட்டும் அந்தச் சட்டங்கள் பொருந்தாதா என்ற கேள்வி எழுகிறது.
  3. இவற்றை மீண்டும் வரையவோ, மீட்கவோ, மிக சொற்பமான கலைஞர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர்!

    சமீபத்தில் அப்படி செப்பனிட்டுப் பணிகள் நடக்கும் இரண்டு கோவில்களுக்கு செல்ல நேர்ந்தது.

    1) மன்னார்கோவில்: குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் தினமும் பாடப்பெற்ற, அவரது சமாதி உள்ள ராஜ கோபாலஸ்வாமி பெருமாள் கோவில்.

ஏறத்தாழ 10 வருடங்களாய் ஹிந்து நாளிதழ் மற்றும் எனைய எல்லா பத்திரிகைகளிலும் கோவில் நலிந்த நிலையிலுள்ளது என்று கட்டம் கட்டி எழுதி வந்த முக்கிய ஸ்தலம். இன்று புனரமைப்பு நடக்கின்றதே என்ற சந்தோஷத்தில் பார்க்கப் போன நமக்கு மன வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

நின்ற, கிடந்த, அமர்ந்த கோலங்களில், இரண்டே கோவில்கள் ஒரே விமானத்தில் மூன்றடுக்குகளில் பெருமாளைப் பார்க்கலாம் என்றால் எனக்குத் தெரிந்து அது இந்த மன்னார்கோவில், மற்றும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில்கள் மட்டுமே.
சுதையினால் செய்யப்பட்டு, மேலே, கண்களைக் கவரும் இயற்கை சாயங்களினால் வர்ணம் பூசப்பட்ட மூலவர்கள்! கோவில் வேலைகள் நடப்பதால், மேலே ஏற முடியவில்லை. இருந்தாலும் வேலை செய்யக் கட்டிய சாரங்களால் மேல் ஏறிப் பார்த்தால்,

வழியிலேயே, கல்வெட்டுக்கள் மேலேயே சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. அருகில் வருங்காலத்தில் கோபுரத்தியே சாய்க்கக்கூடிய சிறி செடி தலை நீட்டிப்பார்க்கிறது!

கோவில்கள் அழிய முக்கிய காரணம் இந்த கவனிப்பார் அற்று வளரும் செடிகளே! பெரும்பாலும், ஆல், அரச மரங்கள் பெரிதாய் வளர்ந்து அஸ்திவாரத்தியே ஆட்டிச் சாய்த்த கோவில்களின் படங்கள் என்னிடம் ஏராளமாய் உள்ளன.

முதல் தளத்தின் முன் பகுதியை ஏதோ கழிவறை கட்டுவதுபோல், அழகின்றி, புராதன வடிவத்துக்கு சிறிதும் ஒப்பாமல், கட்டுவதையும், உள்ளே சன்னதி முன்மண்டபத்தில் முட்டுக் கொடுக்க வைத்த சவுக்குக் கம்புகளும், கரைத்த சிமெண்ட் சாரல்களும், அரிதான அந்த ஓவியங்களை அழித்துக் கொண்டிருப்பதையும் எந்த கண்கள் உள்ள புத்தி ஸ்வாதீனம் உள்ளவரும் பார்க்கச் சகியார்! புராதன முறையில் கட்டப் பட்ட சுதை செங்கல் கட்டுமானம் 1000 ஆண்டுகள் தாங்கி வந்துள்ளது. செடிகளினாலும், கவனிப்பாரற்று பராமரிப்பு இல்லாமையாலும் தான் இந்த கோவில்கள் சிதிலமடைந்துலள்ளன. தொல்பொருள் கட்டிடவல்லுநர்கள் சுண்ணாம்பு, செங்கலினாலேயே கட்ட முடியும் என்கிறபோது இந்த சிமெண்ட் பணி (கலையழகைக் கெடுக்கும் பாத்ரூம் கட்டும் முறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ) தேவையா?

நல்ல தொல்பொருள் ஆய்வாளர்கள், புராதன ஓவியம் தெரிந்த வல்லுநர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களை கலந்தாலோசிக்காமல், நம் பண்டைய சின்னங்களை,கலை பொக்கிஷங்களை சீர் செய்கிறேன் பேர்வழி என்று அழிக்கிறார்களே! கேட்பார் இல்லையா? இவற்றைத் தடுக்க எதேனும் சட்டங்கள் இல்லையா (anti- antique and artifacts act??)

மனதை நெருடும் கோவில் புனரமைப்பு செலவுகள் பட்டியலில், சுமார் 19 லட்சம் சாண்ட் ப்ளாஸ்டிங் (கல் சுவர்களை மிக அதிக அழுத்தக் கம்ப்ரெஸர் காற்றால், மணல் கலந்து அடிப்பது! இதன் மூலம் கல்வெட்டுக்கள் அழிந்துவிடுவது திண்ணம். இந்த முறையை எப்போதோ தொல் பொருள் துறையினர் தடை செய்து விட்டனர். இங்கே எப்படி அனுமதித்தார்கள்? சம்பந்தப் பட்டவர் கவனிப்பார்களா?
படங்களை இந்த பிகாசா படத்தொகுப்பில் அளித்துள்ளேன்.
மன்னார்கோவில் பற்றி அறிய இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

இரண்டாவதாக நான் பார்க்கப்போன கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் ஆலயம். ஆம், முண்டந்துறை – களக்காடேதான்!

மலைசூழ் இயற்கை பின்பலத்தோடு, தனியே தெரிய நிற்கும் கோபுரம், ஒரு கண்கவர்காட்சி. அங்கே கோபுரம் 9 நிலைகள் கொண்டது. அத்தனை நிலைகளும், மரத்தாலேயே நிறுவப்பட்டு, சுண்ணாம்புச் சுதையினால் பூசப்பட்டு, வெளிச் சுற்றில் கணக்கிலடங்கா சுதை பொம்மைகள் நிறுவப் பெற்று, உள்சுற்றில் ஒன்பது நிலைகளிலும் ஓவியங்கள் வரையப் பட்டு, காலத்தை வென்ற கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

இதுவரை வந்த புனரமைப்பு கணக்கீடுகளில், அரசியல் சத்தியங்கள் செயலற்றுப் போய், உள்ளூர் மக்கள், தாங்களே ஒவ்வொரு செலவாய் சேர்த்து, உள்ளேயுள்ள ஓவியங்கள், வெளியே உள்ள சுதை பொம்மைகளை நிறுவ ரீச் பஃவுண்டேஷனின் உதவியை நாடியுள்ளனர்.

இங்கேயும், பெண் உருவங்களின் முக்கிய பகுதிகளில் குரூரர்கள் பொத்தல் போட்டு ஓவியங்களை பாழாக்கியுள்ளனர்.

கணக்கிலடங்கா , மரச் சித்திரங்கள், இதிகாச, புராண, அன்றைய வாழிவியல் ஓவியங்கள் என 9 நிலைகளிலும் ஓவியங்கள், சிற்பங்கள். அதிகம் ஆகையால் அவற்றை பிகாசாவில் வெளியிட்டுள்ளேன்.

களக்காடு பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

மேலும், குற்றாலம் சித்திரசபையிலுள்ள ஓவியங்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஓவியங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுள்ள அம்மன் சன்னதியிலுள்ள ஓவியங்கள் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். காலம் கடந்து அவை அழியுமுன், காப்பார் யார்?

மேற்சொன்ன ரீச் பஃவுண்டேஷன் மூலம், காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் பிரகாரத்தில் உள்ள ஓவியங்களை கோவை L.M.W அதிபர் ரவி சாம் தன் செலவிலேயே செப்பனிட முன் வந்துள்ளார். இம்மாதிரியான தன்னார்வலர் குழுக்களுக்கு அரசு உடனே அனுமதி தந்தால், மக்கள் பலத்தோடு, அவர்களே இப்படி பல கலைச் செல்வங்களை காப்பார்ற இயலும்.

இப்படி ஆயிரம் தன்னார்வக் குழுக்கள் நம்மிடையே உடனே தேவை! இல்லையேல் கோவில் கலைகளும், ஓவியங்களும், நம் கண் முன்னேயே அழிவதைக் காணும் ‘கண்ணிருந்தும் குருடர்கள்’ என்ற அவப் பெயர் நம் சந்ததியினருக்கு வரும்!

ஹிந்து மற்றும் Front line மூத்த நிருபர் டி. எஸ். சுப்ரமணியம் அவ்வப்போது இவற்றைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். அச்சோடு நின்று விடாமல் அரசிலும் கவனிக்கவேண்டியவர்கள், கவனிப்பார்களா?
ஒரு மடல் இங்கே