28 March 2006

கவியோகியின் தமிழ்த்தாய் வாழ்த்து! -

5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய தமிழ்த்தாய் வாழ்த்து!!
1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி சுத்தானந்த பாரதி பாடிய பாடல்...

ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

14 March 2006

தமிழன்னை திருப்பள்ளியெழுச்சி!!

தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி
மூவர் தமிழோதி நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாங் கம்பமுடி கவிழ்த்துத்
தீவினை மாற்றுந் திருமந்திரஞ் சொல்லி
ஆவியுருக்கும் அருட்பாவால் அர்ச்சித்துக்
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டுத்
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோம் எம்பாவாய்!
-கவியோகி சுத்தானந்த பாரதி

எப்படிப் பாக்கள் அணிகலன்கள் ஆகின்றன!! ஆவியுருக்குகின்றன! கூவிக்கூத்தாட வைக்கின்றன! என்னே கவியின் கற்பனை! இப்படி தமிழை சுவாசித்து, நினைந்து, நினைந்து கசிந்துருகி கவிபுனையும் தமிழன்பர் எத்தனை பேர்? நாமறியோம்?

07 March 2006

படித்தேன், பிடித்தது, பதித்தேன்!


கே.கார்த்திக் சுப்பராஜ் என்பவர் எழுதி, மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை!எத்தனை தத்ரூபமாய் வருணிக்கிறார் தன் நிலமையை?படித்தேன், பிடித்தது, பதித்தேன்!

பாரதி எனும் பெயர் கொண்டாலே..!

சில நாட்களுக்கு முன் பல மாபெரும் சான்றோருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு மரியாதை செய்தனர். சுத்தானந்த பாரதியின் தமிழ்த் தொண்டு இக்கால அரசியல் வாதிகளுக்கு எங்கே தெரியப்போகிறது? நிஜத்தில் இவர்களெல்லாம் தமிழ்க் காதலர்கலா? தமிழ் காவலர்களா? பாரதி எனும் பெயர் கொண்டாலே, புகழ் மெதுவாகவே வருமோ என்னவோ?

தபால் தலை வெளியிட்டுக் கெளரவிக்கப் பட்டவர் எந்த விதத்திலும் குறைந்தவர் அல்லர்; ஆனால்,எல்லா தமிழ் அறிஞர்களும் ஒரே மாதிரியாக கெளவிக்கப்படுகிறார்களா? என்பதுதான் கேள்வி. ஜெமினி கணேசனுக்குத் தபால் தலை!
ஏன்? 'தலைவர்' போலவே பல்மணம் (polygamy) செய்து பெரும் புகழ் எய்தியதாலா? இந்த வரிசையில் நாளை நடிகை லஷ்மி, கமல், ராதிகா போன்றோர் வந்தால் கூட ஆச்சரியப்படுதற்கில்லை!!

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் பெற்ற பெருமை கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதி அவர்களையே சேரும். அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மஹாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய ஒப்பற்ற படைப்பு! அதை படிப்பவர்க்கு கவிதை வீச்சும், தேசப்பெருங்கனலும், தெய்வீகமும் தமிழ் மேல் ஆராக் காதலும் ஏற்பட்டுவிடும் என்றால் அது மிகையில்லை! இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கே அக்காவியம் மிகப்பொருந்தும். ஆனால் அவர் செய்த பிறவித் தவறு ஒரு தமிழனாய் அதுவும் நிஜத் துறவியாய் இருந்ததே! இதே, மற்ற நாட்டினராய் இருந்திருந்தால், இம்மாபெரும் தேசீய கவி, வானளாவும் புகழ் உச்சியில் சென்றிருப்பார். ஆனால், தமிழ் கூறும் நல்லுலகம் அவர் இருந்த காலத்தில் அவரை சரியாக கவனிக்க மறந்து விட்டது! அந்த விருது அறிவிக்கப் பட்டபோது கூட சில அரைகுரைகள் கூக்குறலிட்டன! பாடல்கள் என்றால், எம்.எஸ்.,பட்டம்மாள், வசந்த கோகிலம், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்த ராஜன், ஜீ.என்.பீ போன்றோர் கவியோகி எழுதிய பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளனர். திருக்குறளை சரியாக, அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சரியான நபர் "கவியோகி சுத்தானந்த பாரதியார் தான்", எனத் தேர்வு செய்து, 1968ஆம் நடந்த இருந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது! ஆனால், மிகவும் வருந்தக்கூடிய கூத்து அங்கு நடந்தேறியது! மேடையில் பல கற்றோர்; அறிஞர் அண்ணா உட்பட அமர்ந்திருக்கின்றனர்; அவரையும், அச்சிட்டவரையும் வானளாவப் புகழ்ந்த பேச்சாளர்களோ, விழா அமைப்பாளர்களோ, கீழே முதல் வரிசையில் அமர்ந்திருந்த கவியோகியை மேடைக்கும் அழைக்கவில்லை, அவர் இந்த ஒப்பற்ற பணியான மொழிபெயர்ப்பைச் செய்தார் என்றும் நன்றி கூறவில்லை! இவ்விழாவை ஏற்பாடு செய்தவர் ஒரு பேராசிரியரே!! ஆனால் ஏன் இப்படிச் செய்தார்? எங்கே, திராவிடக் கட்சிகள் எனக்கூறிக்கொண்டு, ஒரு இந்து மதத்துறவியை மேடையில் அமர்த்திவிடார்களே" எனும் இழிசொல்லுக்காக அஞ்சியோ அப்படிச் செய்தனர்?சமயோகம், சமத்துவம் எனும் முழங்கும் கவியோகியா ஒரு மதத்தைச் சார்ந்தவர்?

ஒரு வேளை அமரர் டாக்டர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் கவியோகிக்கு தக்க பெருமைகள் வந்து சேர்ந்திருக்குமோ என்னமோ? கவியோகியின் ஆசிரமம் அப்போது, சென்னை அடையாரில் அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் கவியோகியின் மேன்மையை எம்.ஜி.ஆர் அவர்கள் அனுபவித்துள்ளார்கள். மறைந்த M.P. உ.சுப்ரமணியத்தின் தம்பி திரு.உ.பில்லப்பன், நிஜ எம்.ஜி.ஆர் விசுவாசி. இன்றுவரை கட்சியிலிருந்தும், எந்த பதவி மோகத்துக்கும் பணியாதவர். அவர் எம்.ஜி.ஆர் - சுத்தானந்தர் இருவரின் பரஸ்பர மரியாதையைப் பற்றி விரிவாக, கவியோகி ஆரம்பித்த பள்ளி வெள்ளி விழா மலரில் எழுதியுள்ளார்கள்.

மற்றொரு முறை எம்.ஜி..ஆர் 1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி கலந்து கொள்வதற்காக, நட்சத்திர ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்து, அழைப்பிதழும் அனுப்பியிருந்தார். ஆனால், அரசியல் சாணக்கியர்கள், "அட சாமியார் எங்கே வரப்போறாரு!" என்று, அறை ஏற்பாட்டையோ, இல்லை அழைப்பிதழ் அனுப்பியது பற்றியோ, கவியோகிக்கு செய்தி அனுப்பாமல், அவர்களே அந்த அறையில் கும்மாளமடித்துள்ளனர்!

ஆனால், சுத்தானந்தரோ, " என் தாய் தமிழுக்கு விழா! நான் போகவேண்டும்!! என்று சொல்லி விழாவுக்குச் சென்றுவிட்டார்! பழ.நெடுமாறன் கவியோகி மேடையை நோக்கி வருவதைப் பார்த்ததும், ஓடோடிச் சென்று மேடைக்கு அழைத்து வந்தார். மேலே அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துவிட்டது!

அவர் தாமே, கவியோகியை அருகில் அழைத்து, முதல் நாள் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்! கவியோகி கணீர் குரலில் தான் எழுதிய தமிழ் தாய் வாழ்த்தான, " காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும்.." எனும் பாட்டை பாடி வணங்கிவிட்டு, வணங்கி, கீழே இறங்கிச் சென்றுவிட்டார்!! பதைத்துப் போன எம்.ஜி.ஆர், திரு.பில்லப்பனை அழைத்து, "சுத்தானந்த பாரதியாரை எப்படியேனும் 5ஆம் நாள் விழாவில் பங்கு பெறச்செய்யுங்கள்." என்று கூறினார். மாநாட்டின் கடைசி நாளான 5ஆம் நாள் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால், 5 தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட இருந்தது! தான் தந்த பெயர் இல்லாததைக் கண்ட எம்.ஜி.ஆர், தனது கையாலேயே ஒரு பெயரை நீக்கிவிட்டு, கவியோகியின் பெயரை எழுதினார்! அவர் செய்ததை அடித்தெழுத யாருக்குத் தைரியம் வரும்? கடைசியில், எங்கோ திருச்சி வானொலி நிலையத்தில், தமிழ் கவிதை வாசிக்கச் சென்றிருந்த கவியோகியை, தனிக் காரில் அழைத்து வந்து அன்னை இந்திரா காந்தியால் கெளரவித்தார்கள், உலகத்தமிழ் மாநாட்டினர்!

அந்த தமிழ்ப் பாடல் இதோ:-
தமிழ்த்தாய் வாழ்த்து (5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய பாடல்)
ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !
நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்றுஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

இந்தப் பாடலை தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிவிக்க இயலாமல், அங்கும் அரசியல் தலையிட்டதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? திராவிடம் என்று கூறிக்கொண்டும், தமிழ்க் காவலர்கள் என்று கூறிக்கொண்டும் அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்களிடையே, தமிழும் ஒரு நிஜ தமிழ் கவிஞனின் பெயரும் தொலைந்து போனது அதிசயமில்லைதான்!--------------------------------------------------------அவரது புத்தகங்களை நாடிச்செல்ல, அவர் நிறுவிய தொண்டு நிறுவனமான யோக சமாஜம், சோழபுரம், சிவகங்கை மாவட்டத்திலிருந்து செயல் பட்டு வருகிறது! அணுகவும்: email - kaviyogi@gmail.com