28 March 2006

கவியோகியின் தமிழ்த்தாய் வாழ்த்து! -

5 பெரும் காப்பியங்களை ஆடை அணிகலனாய் அணிவித்து ஆற்றிய அழகிய தமிழ்த்தாய் வாழ்த்து!!
1980 ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் கவியோகி சுத்தானந்த பாரதி பாடிய பாடல்...

ராகம்: காம்போதி, தாளம்: ஆதி
காதொளிரும் குண்டலமும், கைக்குவளை
யாபதியும், கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

11 comments:

குமரன் (Kumaran) said...

ஜே.சி. உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் படிக்கத் தான் முடியவில்லை. இந்த வாரம் நீங்கள் தமிழ்மண நட்சத்திரம். வாழ்த்துக்கள். இந்த வாரமாவது தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிக்கவேண்டும்.

குமரன் (Kumaran) said...

கவியோகியாரின் அற்புதமான பாடலை இங்கே தந்திருக்கிறீர்கள். அதற்கு விளக்கமும் கொடுத்தால் இன்னும் நன்றாய் இருக்குமே ஜே. சி.

துளசி கோபால் said...

வாங்க ஜெயசந்திரசேகரன்,

நீங்களா இந்த வார நட்சத்திரம்? கலக்குங்க.
வாழ்த்துகள்

பாரதி said...

வாழ்த்துக்கள் சந்திரமோகன். "பாரதி என்னும் பெயர் கொண்டாலே" பதிவிலேயே இந்த தமிழ்த் தாய் வாழ்த்தைப் படித்தேன். தொடருங்கள் உங்கள் தமிழ்ப் பணியை.

பாரதி said...

தவறுதலாக சந்திரமோகன் என்று குறிப்பிட்டு விட்டேன். மன்னிக்கவும்.

ஜெய. சந்திரசேகரன் said...

குமரன்,
கழுத்துல 'டாலர்' தொங்க வுட்டாங்களே! இனியாச்சும் படிங்க,மதுரக்காரவுக படிச்சு சொல்லலைன்னா, வேற யாரு பார்க்கப் போறாக? உங்க வாழ்த்துக்கு நன்றி.

ஜெய. சந்திரசேகரன் said...

துளசி கோபால்,
வாழ்த்துக்களுக்கு நன்றி. கலக்குறேனா, கலாய்க்கறேனா, நீங்கதான் சொல்லணும்.

ஜெய. சந்திரசேகரன் said...

பாரதி,
வாழ்த்துக்களுக்கு நன்றி. பெயர மாத்திப் படிச்சாப்ல பதிப்புகலையும் மாத்தி படிச்சிறாதீங்க ;-) எதோ பார்த்து, படிச்சு, உங்க மேலான கருத்துக்கள எழுதுங்க.(ஆமாம், இந்த "மேலான கருத்துக்கள்" ங்கற வார்த்தைக்கு மறு வார்த்தையே இல்லையா? யாராச்சும் சொல்லுங்களேன்!!

ஜெய. சந்திரசேகரன் said...

தமிழ்த்தாய் வாழ்த்துக்கான விளக்கத்தை அன்பர் குமரன் கேட்டார். அரும்பெரும் இலக்கணச் செறிவு மிக்க இறைப்பாடல்களுக்கு விளக்கம் அளிக்கும் அவரும், அவரைப் போன்ற ஞானக் கூட்டம் தமிழ் மணத்தில் இருக்கையில், என்னிடம் கவியோகியின் பாடலுக்கான விளக்கத்தை கேட்டார் குமரன். என்னால் முடிந்த மட்டில், விளக்கமிளித்துள்ளேன். சரியாயிருப்பின், ரசிக்கவும்; பிழையிருப்பின் பின்னூட்டி எனக்கு விளக்கவும். நன்றி.


தமிழன்னையின் காதுகளுக்கு குண்டலங்கள்- குண்டலகேசி!
கைகளுக்கு வளையல்களாக வளையாபதி!
பதக்க மாலையின் ஒளிமிகும் கல்- (சீவக) சிந்தாமணி!
மெல்லிடை அணிகலனாக, (மணி)மேகலை!
பூந்தாமரை போன்ற கால்களுக்கு, சிலம்புகள்- சிலப்பதிகாரம்!

ஆயிற்று ஐம்பெரும் காப்பியங்கள் அணிகலன்களாகிவிட, மற்ற சிறப்புமிக்க தமிழ் ஆக்கங்கள் ஒன்றின்பின் ஒன்றாக தமிழன்னைக்கு தம்மைப் படைக்க வருகின்றன!

'சூளா'மணி- சூளும் மணி ஆகிவிட்டது! ஆம், அன்னையின் மகுடமாய். சரி, அன்னைக்கு அலங்காரம் ஆயிற்று. பின்னர், கைக்கு ஒரு செங்கோல் இருந்தால்தானே, அரசிபோல், அழகுக்கு, அழகு?
எனவே, நீதிநெறி நன்னூலாம் திருக்குறளே, அன்னையின் செங்கோலாய் கைகளில் மிளிர்கிறது!

நாலடியார், அமுதுபோல் படைக்கப்பெற, நம்மாழ்வாரின், ப்ரபந்தப் பல்லாண்டு வாழ்த்துக்கள், அரங்கெங்கும் ஒலிக்க, சேக்கிழாரின் பெரியபுராணம் பாலமுதுபோலிருக்க, கம்பரின் ராமாயண காவியம் சித்திரம் போல் அரங்கேற, உலகம் உய்ய இருளைப்போக்கி மனதுள் ஒளிமிக்கச்செய்யும் திருக்குறளிருக்க, நமது நல் தாய், காலத்தைக் கடந்தகேன்றும் மங்கா இளமைப்பொலிவோடு, கேட்டதை (இங்கே ஞானத்தைத் தரும் ஞானவாணியையே, கவிஞர் ஒப்பிடுகிறார்- அறிவுப் பசி தீர கேட்டதைத் தரும் கற்பவிருக்ஷம்போல், அள்ள அள்ள குறையா (ஞானக்) கனிகள் மிக்க அருஞ்சோலை மரம் போல், அனிகலன்கள் பூட்டி, அரும்பெரும் நூல்கள் புடைசூழ ஞான் ஒளிவீசும் தமிழ்த்தாயை உள்ளம் விம்மக் கண்டு ஆனந்தம் கொள்கிறார், கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்!

benjaminlebeau said...

அன்புசால் நண்பர் சந்திரசேகருக்குக் கனிவான கைகுவிப்பு!
இனிய நல் வாழ்த்துகள்!
கவியோகி சுத்தானந்த பாரதியாரின்
இனிய கவிதை மனத்தைத் தொட்டது!
அப்பாவைப் படிக்க வைத்த பெருமை
எப்பாலும் தங்களுக்கே!
அதனாலேயே என் நன்றிகள் உங்களுக்கே!.

தங்கள் விளக்கத்தில் ஒரு பகுதி தவறென எளியேனுக்குத் தோன்றுகிறது :
"நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்க...'' என்ற வரியில் வரும்
'நால்வரிசை " என்ற சொல்லுக்குத் தாங்கள் நாலடியார் எனப் பொருள் கொண்டுள்ளீர்கள்.

மறுபடி அச்சொல்லை ஊன்றிக் கவனியுங்கள் :
நால்வர் இசை அமுது
எனப் பதம் பிரிக்கவேண்டும்.
சைவ சமயக் குரவர்கள் நால்வர்
(அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர்).
அவர்கள் அருளிய தேவாரப் பதிகங்களும்
மாணிக்க வாசகரின் திருவாசகமும் இசைஅமுதாய் விளங்குபவை. ஆகவே நால்வர் இசை இவற்றையே குறிக்கும்.
சைவத்தைத் தொடர்ந்து வைணவம் - நம்மாழ்வாரின் திருவாய்மொழி வருவது பொருத்தமே!

ஆகா இப்படி ஒரு பாடல் இருப்தையே அறியாமல் இத்தனை ஆண்டுக்காலம் வாளாய், வீணாய்க் கிடந்தேனே!
நல்ல வேளை தங்கள் தயவால்
இப்பாடலை அறிய நேர்ந்தது!
மறுபடி நன்றிகள் பல!
நனி நன்றியன்
பெஞ்சமின் லெபோ (பிரான்சு)

ஜெய. சந்திரசேகரன் said...

அன்புள்ள பெஞ்சமின், அப்பா, அப்பா என்று சுத்தானந்தரை விளிக்கிறீரே, எப்படி? அவர் சன்யாசி. நான் அவரது அண்ணனின் பெண் வயிற்று பேரன். ஒருவேளை அவரால் பிரான்ஸில் போதனை பெற்ற அன்பருள் தாங்களும் ஒருவரோ? அறொயேன். எனினும் அவருக்கு தக்க சிஷ்யன் உள்ளார், அவரது தமிழை ரசிக்கும் ஒரு உள்ளம் பிரான்ஸு நாட்டிலிருந்து ஒலிக்கிறது எனக் கேட்க உவகையாக உள்ளது. உங்கள் தொடர்பு தகவல்களை எனக்கு kaviyogi@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நல்லது.
தாங்கள் அளித்த விளக்கமே சரி. நான் சொன்னது தவறு. மன்னிக்கவும். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.