29 December 2005

அக்றிணை பொருட்கள் கூறும் பாடம் - 5-வளையல்

வளையல்
வட்டம் - என் உருவம், உன் உலகம், கணிதம், மனிதம்
சுட்டதால்- நெகிழ்கிறேன், வளைகிறேன் உருப்பெருகிறேன்- கைப்
பட்டதால்- மகிழ்ந்து, மகிழவைத்து, ஒலித்து மங்களமிசைத்தும்- சொல்ல
விட்ட கதை தெரியுமா?

நாள் கிழமைப் பார்த்து நல்லநேரம் கோர்த்து
வாழை அடிவாழை யென வாழ வந்த பெண்ணின்
கரமேறி, சுரமேறி, கல கல இசையமைத்து
வலம் வந்த நாள் எத்தனை நாள்?

பெண்டிர் கூட, மஞ்சள், குங்குமம்
ரவிக்கையோடு என்றும் வளைய வந்தேன்
ரப்பரோ, கண்ணாடியோ, கவின்மிகு பொன்னோ
எவ்வுரு கொண்டிடினும் ஏற்றமிக கண்டேன்

கைம்பெண்ணாய் ஆனவளின் ஆடவனும் போனபின்
சுற்றுச் சேலை, பட்டுக் கூந்தல், கட்டுப் பூ
இதனோடு என்னையும் பொடித்தெறிந்து
போவெனச் சொல்ல மதிகெட்ட மனித, நீ யார்?
விதி விதித்த வினையோடு விளையாட
துணிந்தனர் பேடிகள்..
நான் வரித்த 'கை'ம்பெண், அவள் மனம், இசைவு
கண்கள் கசியும் பல மவுன அலறல்கள்...
வளையல் நானும், என்னொத்தவரும்
களையப் படுவது ஏன்?
களையப் பட வேண்டிய தற்குறி
வழக்கங்களை, கரும்புகையடித்த
மனங்களை,க்... களை!!

17 November 2005

ஜென்னல் - சிறுகதை கூறும் நெடுகதை

வானம் பார்த்த மக்கள்..! எப்போது மழை வரும், வந்தால், எத்தனை நாள் வரும்? பல நாள் பொழிந்தாலும், வெள்ளம் வருமா? இதுபோன்ற கேள்விகள் மனதில் தினமும் வந்து போகும், ஏழை மக்கள் எத்தனை பேர்?
நம்மில் பலருக்கு Insecurity என்ற வார்த்தை வாழ்நாளில் வராது; வந்தாலும், தீர்வு காணாக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு சிறிய காட்சி...
ஒரு ஊரில், பல குடிசைகள்.. கணவன் (சிவன் என்று வைத்துக் கொள்வோம்), மனைவி (அழகி என்று வைத்துக்கொள்வோம்! கற்பனை பெயரிலாவது நன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே?) அவர்களது பெண் குழந்தை (எல்லாருக்கும் ஆண் குழந்தைதான் வேண்டுமா என்ன?)

சிவன் வயலில் வேலை செய்துகொண்டுள்ளான்; அழகி உதவிக்கொண்டிருக்கிறாள். நிலம்,அவர்களது நிலமே; ஆனால், நெல் தரகர்கள் கொள்முதல் செய்கையில், ஒரு வருட பணத்தை ஒன்றாகத் தர பல நிபந்தனைகள் விதித்துள்ளனர்:
1) மறுவருட நெல்லும், அவர்களுக்கே போகவேண்டும்,
2) கொடுத்த பணம் மறுவருட நெல்லின் விலையை விட அதிகமானால், மீந்த பணத்திற்கு 2% வட்டி தரவேண்டும்!
இதுதான் இன்றைய பெரும்பாலான விவசாயிகளின் நிலை!

ஒரு சிறிய கதை, அக்கதையின் முக்கிய அம்சமே, அவர்களது 'வீடு'.

'வீடு' என்பதை விட, குடிசை என்ற சொல் பொருத்தமாக இருக்கும். இப்போது தமிழகத்திலுள்ளது போன்றான சூழ்நிலை! காற்று, மழை அல்லது இரண்டும் கலந்து கட்டி அடிக்கிறது! சிவன், அழகி இருவராலும், 'சிவனே' யென்று வேலை செய்ய மனம் ஒப்பவில்லை! எங்கே காற்று நம் வீட்டுக் கூரையை அடித்துக் கொண்டோடிவிடுமோ, அல்லது, மழையில், பிய்ந்து ஒழுகி மூழ்கடித்துவிடுமோ என்ற கவலை. அதோடு, விளைநிலம் பாடிக்கப்பட்டால், நெல் பாழ்; பண வரவு பாழ்; அதோடு, எமன் போல் வந்து நிற்கும் தரகன்; பிய்ந்தோடிவிட்ட கூரையை சரி செய்ய மரம், வேய செலவாகும் குறைந்த பட்சம் ரூ.5000/- இவை அனைத்தும், அவர்களது வயிற்றை பிசைந்தது! மற்றொரு பக்கம், பெண் குழந்தை தனியாக வீட்டில் இருப்பாளே? கூரை இடிந்த குடிசை! நீர் நிறைந்த குடிசை! இந்த எண்ணங்களே அவர்களது, நெற்றியில் புதிய கவலை ரேகைகளை வரையத் தொடங்கின!
அதைவிட மனதை உருக்கும் செய்தி என்ன, தெரியுமா?
கூரை இழந்ததும், வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும், எல்லா கண்களும், இவர்களைப் பின் தொடரும்! பச்சாதாப பேச்சுகளும், கேலிப் பேச்சுகளும் காதில், விழும்! ''இதோ போறானே, இவன் வீட்டு கூரதான் இன்னிக்கி பிச்சிகிட்டுப் போச்சு! அடியாத்தி, இந்த அழகிப் பொண்ண எப்படிதான் ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ..'' என்ற பேச்சுக்கள் தான், இருவரது மனதையும் தைக்கின்றது! அவமானம், இயலாமை தலைமேல் ஏறிக் கூத்தாடுகின்றன!

வீட்டுக்குச் செல்வோமா?..
அங்கும், காற்று, மழை மாறி மாறி அடிக்கிறது! உள்ளே இருந்த குழந்தை, உள்ளுக்கும், வெளியேயுமாய், ஓடி, ஓடி களைத்திருந்தது! முதலில், உள்ளே உட்காரும்; கூரையின் நிச்சயமற்ற தன்மை அறிந்து, மீண்டும் வெளியே ஓடும்! மழை, காற்று தாங்காமல், உள்ளே ஓடிவரும்; இப்படியாக களைத்துப் போன குழந்தை, வாசலிலேயே, அயர்ந்து, தூங்கிப் போய் விடும்!
வழியில்...
ஊராரின் பேச்சுக்கு செவி சாய்க்காமல், பதில் கூற முடியாமல், குழந்தை என்ன ஆயிற்றோ எனத் தெரியாமல், இரு தலை, இல்லை, இல்லை, பல தலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கும், அவ்விரு விவசாயத் தம்பதியரை சற்றே மனக்கண்ணால், பாருங்கள்!

இருள் சூழ்ந்தபடியால், குடிசை வந்து சேர்ந்த சிவன், மனைவி, மகள் சூழ, அடிக்கும் காற்றை பார்த்தவாறே, மழை, சூராவளியின், 'ஓ' எனும் ஓலத்தைக் கேட்டவாறே, இடிபாடுகளுக்கடையே, அமர்ந்து, விடியுமா என்க் காத்திருக்கிறான்! விடியல் வருமா, மறுநாள், அவன் வாழ்விலும்??

ஒரு சிறிய செய்தி...

இப்படி, எத்தனையோ மக்கள், வாழத்தெரியாமல், வாழ வழியில்லாமல், சிக்கித் திணறி, திக்குத் தெரியாமல் நம் கிராமங்களில், நகரத்து சேரிகளில் வசிக்கின்றனர்! உடுக்க உடை, உண்ண உணவு- இவை இரண்டும், வேலை செய்தால் கிட்டக் கூடிய ஒன்று; இல்லையேல், கிடைத்த கிளிசலை கட்டிக்கொள்ளலாம்; பழையதை உண்ணலாம்.
ஆனால், இடம்? எல்லோராலும் ஒரு நிரந்தரமான வீடு கட்டிக் கொள்ள முடியுமா? அப்படி கட்டினாலும், கூரையில்லாத, ஓடு வேய்ந்த வீடோ, அல்லது, தளம் அமைத்த கான்கிரீட் கூரையோ அமைக்க முடியுமா?
முடிந்தால்தான் நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கு ஒரு அர்த்தம் உள்ளது. குடிசையின் கூரை பிய்யாமலிருந்தால், பறக்காமலிருந்தால், ஒரு குடிசை வாசிக்கு, அதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்க முடியாது! 'என்றும் பறக்கும் கூரை?' எனும் கேள்வியில், ஒருவனது தாழ்வு மனப்பான்மையும், ஊரின் பேச்சுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் அவ்மானமுமே எஞ்சி நிற்கும்! அதேபோல், அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சில், ஒரு நீங்காத ஏக்கம் தொக்கி நிற்கும். என்ன தெரியுமா? மற்ற குழந்தைகளைப் போல், 'ஒரு ஜென்னல் திறந்து இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லையே?' என்ற ஏக்கம்! சுவரிருந்தால்தானே ஜென்னல் வரும்? சுவரோ, கூரையோ இன்றி, வெறும் தென்னங்கீற்றின் தடுப்புகளில் விளையாடும் பருவத்தைத் தொலைக்கும் அந்தப் பிஞ்சு நெஞ்சின் ஏக்கத்தை யார் போக்குவார்?
முடியும் என்கிறார் ஒருவர்; அவர் பெயர் இளங்கோ! கீழ்க்காணும் உரலில் (URL ல்) அவரைப் பற்றியும், அவரது சாதனைகளைப் பற்றியுமான செய்திகளைக் காண்க. நான் அவரை சந்தித்த போது, சொன்ன சிந்திக்க வைக்கச் சொன்ன குட்டிக் கதைதான், மேலே சொன்னது!

கதையின் முடிவு என்ன? அது படிக்கும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது! எப்படி? பாண்டிச்சேரியிலுள்ள அரவிந்தர் ஆசிரமத்திலுள்ள சுய சேவைக் குழுவினர் அமைத்த மண் செங்கல் செய்யும் இயந்திரத்தால் செய்யப்படும் செங்கலுக்கு, சூளைச் சூடு தேவையில்லை! புகை கக்கும் மாசு பறவாது! சிமென்ட், மணல், செம்மண் மூன்றையும், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து, நீர் தெளித்து, பிண்டமாக்கி, அச்சிலிட்டு, மேற்சொன்ன இயந்திரத்தில் 'ப்ரெஸ்' (அழுத்தினால்) செய்தால், செங்கல் பிறக்கிறது. 20 x 10 அடி உள்ள அறையும், தனியாக ஒரு சிறிய அறையும், கொண்ட ஒரு வீடு; மேலே அதேபோல் மெஷினால், செய்யப்பட்ட காற்றில் பறக்காத ஓடுகள்; தனியாக கழிப்பறை. (இதுக்கு ஒரு தனி கட்டுரையே எழுதலாம், அவ்வளவு விஷயம் உள்ளது!) - இவற்றைக் கட்ட சராசரியாக, ரூ.25,000 மட்டுமே தேவை. செங்கல் செய்யவும், மண் கொண்டுவந்து அடிக்கவும், பஞ்சாயத்திலுள்ள இளைஞருக்கே வேலை தரப்படலாம்; எப்படியும், வருடா வருடம் கூரை வேய, ரூ.5000/- செலவு செய்யும் ஒவ்வொரு வீட்டினரும், அந்த பணத்தை பஞ்சாயத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு கொடுத்தால், பூகம்பத்தைத் தாங்கக் கூடிய வடிவமைப்பில் வீட்டைக் கட்ட இயலும்! என்ன, செங்கல் அச்சுகளில், ஒரு கம்பி நுழையக்கூடிய துளைகள் வருமாதிரியாக வடிவமைத்தால், இக்கம்பிகள், சுவற்றுக்கு அரணாகயிருந்து, காற்று, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றத்தைத் தாங்கக் கூடியவையாக வீட்டினை மாற்றியமைக்க முடியும்! இளங்கோவின் கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள சமத்துவ புரம் வீடுகள், குடிசை மாற்று வாரிய வீடுகள், மரும் சுற்றியுள்ள ஏனைய கிராமங்களிலுள்ள வீடாய் மாறிய குடிசைகள் அனைத்தும், மேற்கண்ட முறையிலேயே அமைக்கப் பெற்றுள்ளன!

யோசித்துப் பாருங்கள்! சிவனும், அழகியும், இனி தலை குனிந்து நடக்கத் தேவையில்லை! ஜென்னல் வைத்த சுவற்றின் அருகே அமர்ந்திருக்கும், அந்தக் குழந்தை (அட, பெயரே வைக்கவில்லையே! சரி, பொம்மி என்று வைத்துக்கொள்வோம்!) ஆவலாக ஓடிவந்து, ஜென்னலருகே நிற்கிறது! மெதுவாக தன் பிஞ்சுக் கைகளால் ஜென்னல் கதவுகளைத் திறக்கிறது! ஆஹா! என்ன, ஒரு காட்சி! தெள்ளத் தெளிவான வானம்; ஜென்னல் வழியே, பீச்சிட்டு வரும், கதிரவனின் கிரணங்கலிலிருந்து ஒளிப்ரவாகம்! பொம்மியின் முகத்தைப் பாருங்கள்! எத்தனை மகிழ்ச்சி! எத்தனை முக ஜாலங்கள், உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்! முகத்தில் விழும் காலைத் தென்றல், அவளது, முன் முடியை மெதுவாக வருதி, முகத்தில், தனிக் களை சேர்க்கிறது! தனது, வீடு, இந்த ஜென்னல், இந்த ஜென்னலோரப் பார்வை இவை அனைத்தும் காணாதது கண்ட உவகையை அவள் மனதில் ஏற்படுத்தியுள்ளது!! இந்த உணர்ச்சி, மனநிம்மதி, இவற்றை வார்த்தையால் கூற இயலாது! இதே, வசதியுள்ளவர்களை நினைத்துப் பாருங்கள்? எங்கே, வெளிச்சம் அதிகமாகப் பாயுமோ என்று, திரைசீலைகளை போட்டு, ஜென்னலை மூடி வைப்பர்; சிலர்,மேலும் ஒரு படி மேலே! வெளிகாற்றோ, வெளிச்சமோ, மேனியில் படாதவாறு, வீடெங்கும் (A.C) குளிரூட்டம் செய்து கொள்வர்! ஜென்னலையே திறக்க மாட்டார்கள்!

பசிக்கிறவனுக்குத் தானே தெரியும் போஜனத்து அருமை!

நாம் எல்லோரும், இப்படி எத்தனையோ, சிவனையும், அழகியையும், பொம்மியையும் நம் வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வீடு கட்டும் போது, இப்படி, ஒரு சில குடிசைகளை மாற்றியமைக்க பொருளுதவியோ, இல்லை நேரடியாக, சிறுமனைகள் கட்டிக் கொடுத்தால், எத்தனை ஏழைகள் வளம் பெறுவர்? 'இல்லாதானை இல்லாளும் வேண்டாள்', எனும் சொல்லை மாற்றி, இருப்பதை இல்லாதவற்குக் கொடுத்து வாழ்வோம்! பொருளாளர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், இளைஞர்கள் இத்தகைய வீடுகட்டும் பணியை ஆரம்பித்தால், விரைவில், நாட்டில் குடிசைகள் மறையும்!

இதனால், பல தலை குனிவுகள் தவிர்க்கப்படும்; விடியாத விடியல்கள் விடியும்; முயலுவோம்!!
இளங்கோ பற்றிய உரல் (URL) : http://www.goodnewsindia.com/Pages/content/transitions/elango.html

இந்த goodnewsindia வில், இந்தியாவிலுள்ள பல பெயர்தெரியாத சாதனையாளர்கள், புரட்சியாளர்கள் பற்றிய செய்திகள் காணும்போது, நம்முள்ளும் நம்பிக்கை வளர்கிறது! வருங்காலத்தில் நாடு மிளிரும் நாளைக் காண மனம் தாவி ஓடுகிறது!
--------------------------

06 November 2005

'மர'த்துப் போனவர்கள்!

வேர் அறுந்த மரம்...
வந்தது வெளிச்சம் வெளியே
இருண்டது மனம் உள்ளே!
மரத்தோடு பல மனிதமும் சாய்ந்தது!
பட்சிகள் கூட்டை படபடத்துத் தேடும்
அவசரம் தெரியாமல் கிளை வெட்டும் கைகள்,
அவலம் நடந்த சுவடு தெரியாமல் அடிமரம்
விலை பேசும் 'மர'த்துப் போனவர்கள்!
ஆயிரம் கிளைவீசி அணைத்த ஆத்தா
ஆடின காற்றில் அடித்து வீழ்ந்தாள்.
சற்றும் ஓயாத நெடுந்தவம் கண்டவள் வீழ
மகிழ்ந்தன மச்சு வீட்டுப் பெரிசுகள்!
ஆகா, வெளிச்சம் வந்ததென!
கோடி கொட்டிச் செய்த மாடம்
அழகு வெளியில் தெரிய, அப்பாடா வீழ்ந்தது மரம்!
தேடி அலைந்தாலும் கிட்டுமா இனி வரம்?
தெரியாத ஒன்றை தொலைத்த உன்பணம்
மொத்தமும் போட்டாலும் வாராது இனி தேடி!
வீழ்ந்தது மரம் மட்டும் அல்ல,
தூசைச் சலித்து சுவாசம் தரும் சல்லடை.
வேர்உழ மண்எழ நடுக்கம் தடுத்த கொடை.
சிறுவனாய் ஏறி மிதித்தும் பயம் தவிர்த்தவள்!
பாண்டி ஆட நிழல் கொடுத்தவள்!
ஓசோன் நீத்த வானம் தரும்
சூரியச் சாட்டை சுட்டெரிக்கும்
சூட்டைத் தன் மேலேந்தித் தடுத்து
சுகமான தென்றல் தந்தவள்!
விலை பேச இனி காலம் பல
காத்திருக்க வேணும், தளிர் ஒரு மரமாக!
அதுவரை, காலன் விட்டுவைப்பானா உனை?
வெளியில் வா! விலை பேசு, உயிர் பிச்சை கேள்!
மாடம் விட்டு வா வெளியில்.
அனாதையாய் அழு!

என்ன சாதி(தீ??)

மரபு மீறா புதியவன் எனவே பத்தினி நான்,
வரவு தெரியா வரிகள் செலவிட பட்டினி நான்!

கவலை கவலை கொள்ளத் தொடங்கியது- என்
திவலைச் சிந்தனைகள் சிதறா,க விதை விளைய!

மற்றவர் தொலைநின்று விநோதமெ ன்றனர்,
கற்றவர் கலையாத கலையாக கண்டனர்..

உயிர் வந்ததும் உயிர்மெய் தேடினேன்
பயிர்ந் துசிலிர்த்தெழ படரடி தேடினேன்

வந்தது வேறொரு ஆயுத (எ?)அழுத்து!
வெந்தது கவியெழ துடித்த கருத்து.

சாதியென் னவுன் சார்பு என்ன?
ஓதிவந் தன சில சாத்தான்கள்..

வலைபதியும் புனிதங்களில்- சிலந்தி
வலை பதிக்கும் சில பூச்சிகள்

சொல்லத் துணிந்தேன், அவர்
சொல்லால் தணிவாரென!

நூல் யாசகம் செய்வதில் அந்தணன்
சூள் உலகமெ னதெண்ணும் மன்னன்!

வார்த்தைச் சிக்கனச் செட்டி
வார்ப்பை ருசிக்கத் தரும் சட்டி!

தமிழைப் புசிப்பதில் முதலி
தலை தாழ வளர வரும் கதலி!

மனதுக்குப் பிடித்தது மதம்! - ஆம்
எவரும் சம்'மதம்', எதுவும் சம்'மதம்'

சாதிகேட்டா சொற்கள் வளரும்?
நாதிகேட்டா புற்கள் வளரும்?

திருத்தி வளர்த்தால் பூத்தரும்!
தடுத்து மறுத்தால் வெடித்திடும்

பூவா பூகம்பமா?
நீயே முடிவு செய்!

01 November 2005

சிந்தனைக் கட்டுரை- சாதிகள் இல்லையடி பாப்பா? இல்லை.. மனிதா!!

பாரதி பாடியதுபோல் இனி சாதியைச்சாடி, அதைவிடச் சிறப்பாக யாரும் பாடமுடியாது. அவரது தாசன் பாரதிதாசன். அவரைத் துணைக்கு அழைத்து, பார்ப்பனரை சீண்டிவிடுகிற சிறியவர் பற்றி என்ன சொல்வது? பாரதியின் கவித்துவதுக்கும், தீர்க்கதரிசனத்துக்கும் தான் எல்லோரும் தலை வணங்குகிறார்களே தவிர, அவரது சாதிக்கு அல்ல. அம்பேத்கர், காந்தி, நேரு, படேல், என்று அழைக்கிறார்களே, இதெல்லாம், அன்னாரது, பெயரல்ல! சாதி! அதேபோல், மற்றொரு விசித்திரம் குஜராத்தில் இன்றும் நடக்கிறது! பாய், பேஹன், என்றால், சகோதரன், சகோதரி (Bhai, Bahen). ஆனால், அங்கு, பெயருக்கு நடுவே, இது நுழைந்துகொண்டுவிட்டது!
சர்தார் வல்லப்ஹ் பாய் படேல், என்ற தலைவரது பெயரில், வல்லப்ஹ் என்புது மட்டும் தான் அவரது பெயர். மற்றதெல்லாம்..? பாய் இங்கே எப்படி வந்தது? சாதி- படேல் எப்படி வந்தது?

கிருஷ்ணனை பார்ப்பனர் என்று சொல்பவர்க்கு, புராணமும் தெரியவில்லை, பொது அறிவும் இருக்கவில்லை!
அவர் இடையர் (Yadav) குலத்தவர்! அவரை பூசை செய்து, ஆராதிப்பது பார்ப்பனர் மட்டுமா? அவர்கள் சாதி
பார்த்திருந்தால், ஒரு இடையர் குலத்தவனை ஆராதிப்பார்களா? கிருஷ்ணனின் பல செய்கைகள் தவறெனத் தோன்றினாலும், ஒவ்வொன்றுக்கும் ஒரு பின் கதையுள்ளதை மேற்புல் உண்டவற்கு எங்கே தெரியப்போகிறது?வெளியே வேஷம், உள்ளே பயம். ''பிள்ளக்கி பேரு வெக்கணும், காது குத்தணும், பொண்ணு சடங்காயிட்டா, கல்யாண நாள் தேதி குறிக்கோணும், .. (கோவிலில்).. ''சாமி, பாத்து நல்லா நிதானமா செய்யுங்க, பய வெளிநாடு போறான். பூச பலமா மனசுல நிக்கிற மாதிரி செய்யுங்க..", ஏன்?.. தலைவருக்கு இனி நல்லதே நடக்க, என்ன பரிகாரம்? சரி, மஞ்சத் துண்ட தோள விட்டு இறக்கக் கூடாது..'' இப்படி பட்ட அத்தியாவசியங்களுக்கு தேவைப்படும் ஒரு சாதியினர், ''போட்டுத் தாக்கு'' என்றதும், வாய் மூடியிருத்தலே, அரைவேக்காடுகளுக்கு, துளிர் விட வாய்ப்பு தருகிறது. அதே மக்கள் தலை தூக்கினால், உலகம் தாளுமா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல், வாமன அவதாரத்திலிருந்து வந்தது. மூர்க்க அரசன், ஆனால், கொடை வள்ளல், மகாபலி. கேட்டவர்க்கு இல்லை எனச்சொல்லாமல், அள்ளித்தருபவன். அவனை அழிக்க, ஒரு அந்தணன் உருவம் தான், வேங்கடவனுக்கே வேண்டியிருந்தது! மிகக் குள்ளமான அந்தணனைப் பார்த்து, 'இவன் என்ன கேட்கப் போகிறான்', என ஏளனப் பார்வை பார்த்த அரசனிடம், மூண்றடி மண் கேட்டான், வாமனன்! கேள்வியின், நிஜத்தை புரிந்து கொண்ட ராஜ குரு சுக்ராச்சாரியார், ஒரு புழுவின் உரு கொண்டு, தாரைவார்க்கும், கிண்டியின் வாயை அடைத்துக் கொண்டு, அமர்ந்தார். வாமனனோ, ஒரு தர்பைப் புல்லை எடுத்து, கிண்டியின் துவாரத்தைக் குத்தினான்! கண்ணிளந்த சுக்ராச்சாரியாரால், அந்தணனின் செயலை நிறுத்த முடியவில்லை! கிண்டித் துவாரத்திலிருந்து, நீர் வெளியேற, மாமன்னன் தானம் அளித்துவிட்டான்! உலகளந்தப் பெருமானாக, நீடுயரம் கொண்டு, பூமியை ஒரு காலால், விண்ணை ஒரு காலால், அளந்துவிட்டான்! மற்றொரு அடி? எவர்க்கும் அவரவர் தலை, உயிர்- அதைவிட மேலான ஒன்று இருக்க முடியுமா? தலை தாழ்ந்தான் அரசன். மூன்றாம் அடியை தலைமேல் வைத்துப் பெற்றான் அந்தணன்! புல் ஆயுதமான கதை தெரிந்ததா?

''நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திரமும் இன்றி, வஞ்சனை சொல்வாரடி, ... வாய்ச்சொல்லில் வீரரடி..'' என்று பாரதி பாடியது, இத்தகைய அரை வேக்காடுகளைப் பார்த்துத் தான்! எங்கே, இதே பழிச் சொல்லை, ஒரு தேவரையோ, மறவரையோ பார்த்துச் சொல்லமுடியுமா? வார்த்தை விழுமுன், வீச்சறுவாள் பறக்கும்! மென்மையான குணத்தை வைத்து ஒருவனை எடைபோடமுடியாது!
சாணக்கியர் என்று பேர் வாங்கிய ராஜாஜியினால்தான், காங்கிரஸ் தளர்ந்து, திராவிடக் கட்சிகள் தலையெடுத்தன! அவர் பார்ப்பனர் என்று எல்லோரும் தூற்றினாரா? இல்லையே? பெரியாரும், அண்ணாவும், ராஜாஜியும் எத்தனை சிறந்த நண்பர்கள் என்பது ஊரறியும்!
மக்கள் பத்திரிகைகள், விகடன், கல்கி, கலைமகள், மற்றும் எழுத்தாளர்கள் சுஜாதா, வாலி, மாலன் போன்றோரை ஏனைய சாதியினர் புறக்கணிக்க முடியுமா? கோவில்களில் அந்தணம் மறையுமா? இதெல்லாம் மீறி, மொழியையும், நாட்டையும், மக்கள் நல்லிணக்கத்தையும் மனதில் கொள்வோர், இனி வீணாகச் சாதிப் பேயை தட்டி எழுப்பமாட்டார்கள் என நம்பி, வாழ்வோமாக!
கவியோகி சுத்தானந்தர், பாடியது போல்,
''எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்,
எல்லாரும் ஆடுங்கள், எல்லாரும் பாடுங்கள், இன்பமே நமது தெய்வம்,
அல்லா,பரமபிதா,அரிகரப் பிரம்மம் என்றும், அம்மையப்பா என்றும்,
சொல்லிவணங்குவோம், சொல்லறியாச்சுடரை, ஜோதி ஒளியில் என்றே!
சாதிமத பேதம், தாளாத சுத்தனவன், சச்சிதானந்தப் பெருமான்,
ஆதியந்தமில்லாதான், ஆர்வமுடன் அழைத்தால், அன்பருள்ளே வருவான்!
இல்லையென்பாருள்ளும், இருக்கிறேன் என்பவன், இதயத்தில் கூத்திடுவான்,
எல்லையில்லா உலகில், எங்கும் உயிர்க்குயிராம் இன்னருள் பூத்திடுவான்!''

என்பதை ஆனந்த பள்ளாகப் பாடி, எல்லோரும் `ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என வாழ்ந்து, ஒற்றுமைக்கு வழிவகுப்போம்.

31 October 2005

சிந்தனைக் கட்டுரை- துணைப் பெயர் குழப்பம் !

நண்பர் ராம்கி எழுதிய பெயர் குழப்பம் போல் துணைப் பெயர் குழப்பமும் பரவலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் `Initials' (தந்தைப் பெயரின் முதலெழுத்து) பெயருக்குமுன் வைப்பது வழக்கம். வடநாட்டிலோ சாதி பெயரை பெயருக்கு பின் வைத்துகொள்வது வழக்கம். ஆனால், கூப்பிடுவது முதலில் சாதிப் பெயரையே! இரண்டிலும் பிரச்னை!

`Initials' மட்டும் வைப்பதில் உள்ள சிக்கலை, வெளி நாடு செல்லும் தமிழரும், வட நாட்டில் வேலைக்குச் செல்லும் இளைஞரும் அனுபவிப்பதை கேட்டால் தெரியும்!

Passport ல், விரிவு படுத்தி எழுதுகையில், A.ராமசாமி என்பவர் அய்யாசாமி ராமசாமி ஆகிவிடுவார்! பல இடங்களில் அழைக்கப் படுகையில், "அய்யாசாமி, அய்யாசாமி'' என்றே அழைக்கப் படுவார்! இந்தச் சிக்கலால், முதன்முறை வெளி நாட்டுப்பயணத்தின் போது, யாரையோ அழைக்கிறார்கள் - என்றெண்ணி, கிட்டத்தட்ட விமானத்தை விட்ட என் நண்பரும் உண்டு!

ஜாதி இல்லை என்று நாம் கூரையேறி¢க் கூவினாலும், வட நாட்டில் அது இல்லாமல் எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது! Surname என்று, பெயரின் கடைசியில், ஜாதியை ஒட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல், Initialஐ விரிவுபடுத்த வேண்டும். தமிழர் நிலையைப் பாருங்கள்..
மேலேயுள்ள ராமசாமியையே துணைக்கு அழைப்போம்.
A.ராமசாமி, அய்யாசாமி ராமசாமி ஆகிவிடுவார்! அங்கே வேலை விண்ணப்பப் படிவமோ, ரேஷன் கார்டோ, வோட்டுப் பதிவோ, இதே குழப்பம் தான்!

கீழ்காணும் உரையாடலைப் பாருங்கள்..
பெயர்? - A.ராமசாமி.
A ன்னா? - அய்யாசாமி.
அப்ப, அப்பா பெயர்? - P. அய்யாசாமி.
Pன்னா? - பெரியசாமி.
அப்ப Surname? - நாங்க அதை எழுதறதில்ல!
இல்ல. அது கட்டாயம் வேணும்.- சரி, அப்ப அப்பாபேரையே Surname ஆ எழுதிகோங்க.
முடியாது! Surname வேணும். வேறு ஏதாவது பெயர் சான்று உள்ளதா? - இல்ல. அதிலும் இப்படித்தான்.
உஹ¥ம். இது தேறாத கேஸ்! .....மதராஸி.! (அவன் வாயில் கெட்ட வார்த்தை).
ஒருவிதமாய், அப்பா பெயரை Surname ஆக எடுத்துக் கொண்டு, அதையே, அப்பா பெயராகவும் போட்டால், பெயர் இப்படித்தான்.. -> `ராமசாமி அய்யாசாமி அய்யாசாமி'. இல்லை சிறிது சுயகவுரவம் பார்க்காமல், ஜாதியை கடைசியில் போட்டால், பல இடங்களில் பிரச்னை!
மேற்கண்ட விமான நிலைய உதாரணத்தில், ராமசாமியை, அய்யாசாமி என்று அப்பன் பெயரால் அழைத்த கொடுமை போராதென்றால், இப்ப ஜாதி பெயரால் அழைக்கப் பெறுவர்! ஏனெனில், Passportல், முதலில் Surname _________ என்றுதான் தொடங்கும்! வேலை செய்யுமிடத்திலும், Mr.____, _____ என்று சாதியினால்தான் அழைக்கப் படுவோம்!

நான், முதலில் வேலைக்குச் சேர்ந்த போது, இந்தக் கொடுமை தான். மும்பையருகிலுள்ள தானாவில், மிக பிரபலமான ப்ளாஸ்டிக் கம்பெனி. அதிலும் Campus interview மூலம், முதல் ஆளாக தேர்வு செய்து வேலைக்குச் சேர்ந்த நாள். ஹிந்தியும் தெரியாது. HRD Manager அழைத்து, `ஸஹி நாம் தேதோ!' என்றார். உடனிருந்தவன், என் முழி பிதுங்குவதைக் கண்டு, உதவி செய்தான். 'சரியான பெயர் சொல்லு.'
இத்தனை நாள் கேட்டுப் பழகி, என் பெயரில் எந்தத் தப்பும் நான் உணர்ந்திருக்கவில்லை! `It is correct' என்றேன்.
`ஹிந்தி நஹி ஆத்தா' என்றார் HRD! மனதுக்குள், `அடியாத்தாதான் தெரியும், ஹிந்தி ஆத்தாவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக்கொண்டாலும், அவர் கேட்டதையுணர்ந்து `No' என்றேன். மிக ஏளனமான பார்வையை என் மேல் வீசி, `Surname' pls..என்றார்.
அதே நண்பன், மீண்டும் `Surname' என்ன என்பதை விளக்க, தன்மானம் விழித்துக் கொண்டது!
'நாங்கள் எழுதுவதில்லை. We have abolished mentioning language from our school records itself! (பள்ளி குறிப்பிலிருந்தே)
இந்தக் கொடுமை இதோடு ஒழியவில்லை. ஹிந்தி தெரியாத காரணம், Surname இல்லாதது, ஏதோ அப்பன் பெயர் தெரியாத மாதிரியான இகழ்ச்சி, அந்த HRDக் காரர் மனதில் ஒட்டிவிட்டது போலும்!

HRD : ஸாரி, நான் பெயரை என்ரோல் செய்ய முடியாது. Pls tell your surname!
நான்: ஸாரி, எப்போதோ என் அப்பன் வைத்த பெயரை என்னால் மாற்றிக்கூற முடியாது. இல்லையென்றால், 'Surname' எனும் இடத்தில், `இந்தியன்' என்று எழுதிக்கொள்ளுங்கள்!
HRD: Ok, இப்பொ உன் டிபார்ட்மெட்டுக்கு போ. ஆனால், நாளைக்குள் Surname என்ன என்று சொல்லவேண்டும்!
நான்: இப்பொ, எப்பொ கேட்டாலும் என் surname `இந்தியன் தான்'.
HRD: Too arrogant. Then why you hell Madrasis, come here for jobs?
நான்: Sir, then why the hell you Bomabites, come all the way to choose brainy South Indian through campus interviews? Don't you have any competent guys here?
HRD : Ok, you go back. I will talk to the president who took you for the job.

மறுநாள் ப்ரெசிடெண்ட் அழைப்பதாகச் சொல்லி, பியூன், அவசர செய்தி கொண்டுவந்தான். போனேன்.
விளக்கம் கேட்டார். உடன் நின்றிருந்தார், நம்ம HRD!!
சார், இல்லாத துணைப்பெயர் எங்கிருந்து வரும்? இப்பொழுது மாற்றினால், காலம் எல்லாம் ப்ரசினைகள் வராதா? முதல் நேர்காணலில், பேரா பிரச்சினை? என் மதிப்பெண்ணையும், பதில்களையும் வைத்துத்தானே என்னைத் தேர்தெடுத்தீர்கள்? அப்போ இல்லாத சாதி, இப்பொ எப்படி தலை காட்டுகிறது? தப்பாகயில்லன்னா, ஒரு உதாரணம் சொல்றேன். இப்ப, (HRDயின் பெயர்!) Mr. M.R.Shah இருக்கிறார். எல்லோரும் Shah, Shah என்றுதானே கூப்பிடுகிறீர்கள்? அது சாதிப் பெயர் தானே? எத்தனை பேருக்கு, இவர் முதல் பெயர் தெரியும்? M. ன்னா என்ன? R. ன்னா என்ன? எது அவர் பெயர்? எது அப்பா பெயர்? ஆனால், அவர் அப்படி கூப்பிட அனுமதிப்பது, அவர் விருப்பம். நான் சொன்னது சரிதானே? என்னை என் முதல் பெயரான சந்திரசேகர் என்றே அழைக்கலாமே? கட்டாயம் ஜாதி பெயர் வேண்டுமென்றதால், இந்தியன் என்றேன். இதிலேன்ன தப்பு?

ப்ரெசிடெண்ட் என்னையும், HRD யையும் மாறி மாறி பார்த்தார். (இப்படி சொல்றது தப்போ? பெயர் அல்லது சார் என்று விளிக்க வேண்டுமல்லவா? HRD என்பது, டிபார்ட்மெண்ட் பெயர் ஆச்சே? சரிதான். ஆனால், சொல்லும்படியாக அவர் நற்செயல்கள் செய்தால், கட்டாயம் பெயர் அடிக்கடி உபயோகித்திருப்பேன். இல்லையெனில், எப்போதும், M.R.Shah, HRD தான்! ஏனெனில், நான் சாதி பெயரை அடிக்கடி சொல்ல விரும்பவில்லை!) . பின்னர், என்னிடம், `Ok, you can go to your seat Mr.Chandrashekhar, (இள ரத்தம் என்று நினைத்திருப்பார் போல), என்று கூறி, அனுப்பிவிட்டார்!
மூடியகதவின் பின், அவர் சப்தம் போடுவது தெளிவாகக்கேட்டது!
இந்த விஷயம், ஜுரம் போல், மொத்த பாக்டரியிலும் பரவி விட்டது! ஹிந்தி தெரியாத பாவத்துக்காகவும், Surname வைத்து அழைக்கப் பெறாத பாவத்துக்காகவும், கீழ்நிலைப் பணியாளர் முதல், மற்ற ஹிந்தி பேசும் அலுவலர்வரை, கேலி பேசுவதும், `இங்க போ, அங்கே வா' என்று வேண்டுமென்றே `தமிழ் பேசுகிறேன் பேர்வழி' யாக, முதுகுக்குப்பின் ஏளனம் செய்வது என் ஏராளமான விஷயம் எழுதுவதென்றால், பல புத்தகம் வேண்டியிருக்கும். மீண்டும், விஷயத்துக்கு வருவோம்!

இந்த பிரச்னைக்கு என்ன வழி? சாதி எழுத தன்மானம் இடம் கொடுக்காது. எழுதவில்லையென்றால், நம் மாநிலம் தாண்டிப் போனால் பிரச்னை! அப்பன் பேரால் அழைக்கப் படும் அவலம்! 'ஊரோடு ஒட்டி வாழ்' என்பதை கருத்தில் கொண்டு, எங்கள் வருங்கால குழந்தைகள் கஷ்டப்படாமலிருக்க, இரு வழித் தாத்தாக்கள் பெயரையும் இணைத்து, (Rengasamy+ Rajagopalan) `ரெங்கராஜ்' என்ற துணைப் பெயரை குழந்தைக்கு வைத்தேன்! அண்ணன் மக்கள், என் மகள் எல்லோருக்கும் First name, Middle name, Surname உள்ளது. இந்த ஜூலை 18 பிறந்த என் மகளுக்கு நேத்ரா சந்திரசேகர் ரெங்கராஜ் எனும் நாமத்தை, திருவல்லிக்கேணியிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பதிந்து சர்டி¢பிகேட் வாங்கினேன்! 16 வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த பிரச்னைக்கு இப்போதுதான் விடிவு! என் பெற்றோரைக் குறை கூற முடியாது. தமிழகத்து எல்லை தாண்டாதவர்கள்! எங்கள் புண்ணியத்தால், வட நாட்டில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்! கஷ்டம் அப்போதுதான் தெரிந்தது! அவர்கள் அனுமதியுடனேயே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டேன்!

(தமாஷ¤க்கு - கருப்பசாமி, பிச்சை என்று இருந்தால், `கச்சை' - என்று பெயரை எப்படி Surname ஆக வைப்பது என்று சண்டைக்கு வராதீர்கள்! இது போல், எதேனும் வழி கண்டுபிடிப்பது அவரவர் அப்பன் ஆத்தாளுக்கு கடமை!)

`சாதியாவது, மதமாவது' என்று பேசுபவருக்கு ஒரு சிறிய வேலை! மாநில விளிம்பைத் தாண்டி, வாழ வழி காணுங்கள்! முதலில் உங்கள் மக்கள் மனதிலிருந்து சாதிப் பேயை ஓட்டுங்கள்! பிறகு, மற்றவர் வீட்டில் உள்ள பேயை ஓட்டலாம்! மற்ற ஒரு Blogல், வீர வன்னையன் என்று பரை சாற்றிகொண்டு ஒருவர் பார்ப்பனர்களை அனாவசியமாக் எதிர்க்கிறார்! தீபாவளியே, ஏதோ பிராமணர்கள் கொண்டுவந்தது போலவும், பிற மாநி¢லங்களிலிருந்து அம்மதம் இங்கு பரவி விட்டதுபோலவும், ஏசுகிறார்! அவரது, சிற்றறிவை எண்ணி நகைப்பதா, விடு என்று விட்டுத் தள்ளுவதா என்று குழுப்பம்! தீபாவளியின் பேரில், ஒரு சந்தோஷம் வீட்டில் பரவுவதில் என்ன பிரச்னை? இவர் மனைவி மக்களிடம் வியாக்யானம் பேசி, துணிமணிகள், பலகாரம், பட்டாசுகளை மறுக்கப் போகிறாரா? இல்லை, இவருக்கு பார்ப்பனர் மீது என்ன கோபம்? என்றோ சமுதாயத்தில் நடந்த நிகழ்வுகளுக்கெல்லாம், இன்றா இகழ்ந்து பேசுவது? இல்லை சாதிகள் மேல் கோபமா? அப்படியென்றால் நியாயம். ஆனால், அவர் பெயரில், வீர வன்னியன் என்ற சாதி வாலை அல்லவா சேர்த்துக்கொண்திருக்கிறார்? வெட்டவேண்டாமா?

நான் மனிதன். சாதி என்பது 'படித்த'வனுக்கு தடையல்ல! அரைகுரைகளுக்குத் தான், அது ஒரு punching bag! அவ்வளவே! இதற்கு துணை போகும் இன்னொருவர், 'நிஜம் சுடும்' என்று அறிந்து, `Anonymous.. ' என்ற பெயரில், வீர வன்னியனுக்கு தூபம் போதுகிறார்! அதோடு மேலும் `பருப்பு சாம்பாரைக் கண்டுபிடித்த பார்ப்பனரை எதிர்த்து பாடுங்கள்!' என்கிறார்! என்ன அரைவேக்காட்டுத்தனம்! இவர்களை எண்ணி மனம் வேதனைப் படுகிறது! தமிழ் வளர்க்கும் தளத்தில் தராதரம் தெரியாமல் எழுதுகிறார்கள்! இவர்களுக்கு வேகம் மட்டுமின்றி, விவேகமும் வளர வாழ்த்துக்கள்!

29 October 2005

மரம் வளர்க்கும் அரம் !

தூர் வடித்து நீருயர்த்தி வான் நிமிர்ந்தேன்
சார் புலர்பறவைபல தான் வளர்த்தேன்
சீறழிப் புவி யினில் காலம் தாண்டி
பலபலப் பதிவினிற்கு சாட்சியானேன்!

மாசு தூசு நீக்கி உந்தன் மூச்சு தந்தேன்
வீசு புயல் செயலிழக்க அரண் வளர்த்தேன்
கோர மானசுடு வெயில் தளர்ந்து போயி
ஆரமரக்குளிர் நிழல் படரத் தந்தேன்

வேர்பதித்து உட்புகுந்து பூமி கண்டேன்
பார்நிலைக்க மண்பிடித்து இருக்கம் தந்தேன்
ஆழிசூழ் கடல்புகா அணைப்பும் ஆனேன்
ஆவிபோயும் அறுத்தெடுக்கும் பலகை தந்தேன்

ஊடல் கொண்ட படர்கொடி, பழமுண்ண
கூடும் பறவைகள்; தேடும் வேடர் பிறழவே
நாடும் மிருக மறை விடம்; பற்றறுத்த
மாமுனி, அத்தனைக்கும் அத்துணை!

ஆதரவு நாடிநான் வாய்திறக்க இயலுமாவுன்
ஆணிவேர ருக்கும் ஆசை போக்கிட முடியுமா?
மாடிகோடி கட்டினாய் மண்ணையும் சுறுக்கினாய்
நாடி வாழ்ந்த தாய்எனது நாடி,நாபி கருக்கினாய்.

கீழிறங்கி பதியவும் மண்ணைக் காணோம்
மேல்நிமிர்ந்து பார்க்கவும் ஒளியைக்காணோம்
கூடிநிற்க தேடினேன் துணையைக்காணோம்
நீண்ட உன்வீடு எனக்குஇ டுகாடு ஆகி!

காய்ந்த பூமி காக்கக் கரம் நீட்டி வாழ்ந்த
வேய்ந்த கூரையாய் அமைந்த கோலம் எங்கே?
சாய்ந்த என்னை எவரெவர், கூறு போட்டும்
மாய்ந்த பின்னும் தருகிறேன் -மானு டர்க்கே!!

26 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்- 4 - காகிதம்.

காற்றடிக்கும் வேகத்தில் உறுதியோடு நின்ற என்
சாறுடைய தாய்விடச் சக்கையாகிப் போகினேன்

சக்கரத்தின் சுழற்சியில் சக்கரையை இழந்த நான்
திக்குயேதும் தெரியுமுன் தட்டித் தப்பையாகினேன்!

ரசாயனங்கள் குளியலும் ரப்பர் ரோலர் துவையலும்
தாண்டித் தாண்டித் திக்கியே காகிதமாய் மாறினேன்.

கடைகளில் புனிதனாய், புத்தகமாய் புத்தனாய்
நடையினில் உரைநடை, கவிதையேற்றி தேறினேன்!

அதிகமான மைய் எனில் - அப்படியே குடித்திட்டு
அரிதுமான மெய் எனில் - என்மேலே 'வரி'த்திட்டு

உரைகள், வரிகள் யாவையும் உலகினிற்கு அளிக்கவே
உளதை வடித்து ஏழைகள் கடிதமாக்கி கலவவே

என்றும் வெள்ளை மனதுடன் எதுவும் ஏற்றிக்கொள்ளவே
நன்கு தீது பிரித்திடா நடுநிலைஞன் ஆகினேன்!

மின்னஞ்சல் கணினி போன்றவை கணத்தை சுருக்கி தந்தினும்
அஞ்சிகெஞ்சி போகும் நிலை எனக்கு என்றுமில்லையே!

பதிவுபத்திரம் குழந்தைப் புத்தகம் - கணினி எட்டா உலகிலும்
மதிக்கும் நிலையில் மதிக்கு நிதி வாரி வழங்க நேரினேன்.

கடலையுண்ட பின் - கசக்கி எறியும் முன்
விடலை முடியும் முன், விடல்-ஐ தொடங்கும் முன்

படலை! மனதில் பதிய வைக்க என் எழுத்தை வாசி!
படபடக்கும் காகிதமென் படர்வுகளை யாசி!

21 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-1 கயிற்றுப் பாட்டு!

பாதாளம் தெரிந்திருந்தும் கீழ் குதித்து,
பட்டை உரிபட்டு, உடன்பிறந்தார் பிரிந்து
குத்தீட்டி குதறல் பட்டு, அடிபட்டு, பதப்பட்டு,
நாராகி, இழுபட்டு வெயில் வாங்கிக் கைகோர்த்து,
கயிறாகத் திரிபட்டு ஒருசேரத் துணை நின்றேன்
நீயோ...
படிக்காமல், கரையாமல்,பண்பென்ன தெரியாமல்
பிடிப்பின்றி வாழ்ந்திட்டுப் பிறர்மேலே பழிபோட்டு
குடித்திடவே உயிர்தன்னை- என்னை சுருக்காக்குகிறாய்!
உன் உயிர் போவது உன்னால்,
என் பெயர் கெடுவது எதனால்?
உனக்கு வேலையில்லை, என்னை விடு, எனக்குப் பல ஜோலி-
பழு கட்டவும், இழுக்கவும், முறுக்கவும், இணைக்கவும்,
சேர்க்கவும்தான் தெரியும்! அது என் தொட்டில் பழக்கம்.
நீ எனக்கு சொல்லித்தருவது, கெட்டப் பழக்கம்!