வேர் அறுந்த மரம்...
வந்தது வெளிச்சம் வெளியே
இருண்டது மனம் உள்ளே!
மரத்தோடு பல மனிதமும் சாய்ந்தது!
பட்சிகள் கூட்டை படபடத்துத் தேடும்
அவசரம் தெரியாமல் கிளை வெட்டும் கைகள்,
அவலம் நடந்த சுவடு தெரியாமல் அடிமரம்
விலை பேசும் 'மர'த்துப் போனவர்கள்!
ஆயிரம் கிளைவீசி அணைத்த ஆத்தா
ஆடின காற்றில் அடித்து வீழ்ந்தாள்.
சற்றும் ஓயாத நெடுந்தவம் கண்டவள் வீழ
மகிழ்ந்தன மச்சு வீட்டுப் பெரிசுகள்!
ஆகா, வெளிச்சம் வந்ததென!
கோடி கொட்டிச் செய்த மாடம்
அழகு வெளியில் தெரிய, அப்பாடா வீழ்ந்தது மரம்!
தேடி அலைந்தாலும் கிட்டுமா இனி வரம்?
தெரியாத ஒன்றை தொலைத்த உன்பணம்
மொத்தமும் போட்டாலும் வாராது இனி தேடி!
வீழ்ந்தது மரம் மட்டும் அல்ல,
தூசைச் சலித்து சுவாசம் தரும் சல்லடை.
வேர்உழ மண்எழ நடுக்கம் தடுத்த கொடை.
சிறுவனாய் ஏறி மிதித்தும் பயம் தவிர்த்தவள்!
பாண்டி ஆட நிழல் கொடுத்தவள்!
ஓசோன் நீத்த வானம் தரும்
சூரியச் சாட்டை சுட்டெரிக்கும்
சூட்டைத் தன் மேலேந்தித் தடுத்து
சுகமான தென்றல் தந்தவள்!
விலை பேச இனி காலம் பல
காத்திருக்க வேணும், தளிர் ஒரு மரமாக!
அதுவரை, காலன் விட்டுவைப்பானா உனை?
வெளியில் வா! விலை பேசு, உயிர் பிச்சை கேள்!
மாடம் விட்டு வா வெளியில்.
அனாதையாய் அழு!
No comments:
Post a Comment