31 October 2005

சிந்தனைக் கட்டுரை- துணைப் பெயர் குழப்பம் !

நண்பர் ராம்கி எழுதிய பெயர் குழப்பம் போல் துணைப் பெயர் குழப்பமும் பரவலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் `Initials' (தந்தைப் பெயரின் முதலெழுத்து) பெயருக்குமுன் வைப்பது வழக்கம். வடநாட்டிலோ சாதி பெயரை பெயருக்கு பின் வைத்துகொள்வது வழக்கம். ஆனால், கூப்பிடுவது முதலில் சாதிப் பெயரையே! இரண்டிலும் பிரச்னை!

`Initials' மட்டும் வைப்பதில் உள்ள சிக்கலை, வெளி நாடு செல்லும் தமிழரும், வட நாட்டில் வேலைக்குச் செல்லும் இளைஞரும் அனுபவிப்பதை கேட்டால் தெரியும்!

Passport ல், விரிவு படுத்தி எழுதுகையில், A.ராமசாமி என்பவர் அய்யாசாமி ராமசாமி ஆகிவிடுவார்! பல இடங்களில் அழைக்கப் படுகையில், "அய்யாசாமி, அய்யாசாமி'' என்றே அழைக்கப் படுவார்! இந்தச் சிக்கலால், முதன்முறை வெளி நாட்டுப்பயணத்தின் போது, யாரையோ அழைக்கிறார்கள் - என்றெண்ணி, கிட்டத்தட்ட விமானத்தை விட்ட என் நண்பரும் உண்டு!

ஜாதி இல்லை என்று நாம் கூரையேறி¢க் கூவினாலும், வட நாட்டில் அது இல்லாமல் எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது! Surname என்று, பெயரின் கடைசியில், ஜாதியை ஒட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல், Initialஐ விரிவுபடுத்த வேண்டும். தமிழர் நிலையைப் பாருங்கள்..
மேலேயுள்ள ராமசாமியையே துணைக்கு அழைப்போம்.
A.ராமசாமி, அய்யாசாமி ராமசாமி ஆகிவிடுவார்! அங்கே வேலை விண்ணப்பப் படிவமோ, ரேஷன் கார்டோ, வோட்டுப் பதிவோ, இதே குழப்பம் தான்!

கீழ்காணும் உரையாடலைப் பாருங்கள்..
பெயர்? - A.ராமசாமி.
A ன்னா? - அய்யாசாமி.
அப்ப, அப்பா பெயர்? - P. அய்யாசாமி.
Pன்னா? - பெரியசாமி.
அப்ப Surname? - நாங்க அதை எழுதறதில்ல!
இல்ல. அது கட்டாயம் வேணும்.- சரி, அப்ப அப்பாபேரையே Surname ஆ எழுதிகோங்க.
முடியாது! Surname வேணும். வேறு ஏதாவது பெயர் சான்று உள்ளதா? - இல்ல. அதிலும் இப்படித்தான்.
உஹ¥ம். இது தேறாத கேஸ்! .....மதராஸி.! (அவன் வாயில் கெட்ட வார்த்தை).
ஒருவிதமாய், அப்பா பெயரை Surname ஆக எடுத்துக் கொண்டு, அதையே, அப்பா பெயராகவும் போட்டால், பெயர் இப்படித்தான்.. -> `ராமசாமி அய்யாசாமி அய்யாசாமி'. இல்லை சிறிது சுயகவுரவம் பார்க்காமல், ஜாதியை கடைசியில் போட்டால், பல இடங்களில் பிரச்னை!
மேற்கண்ட விமான நிலைய உதாரணத்தில், ராமசாமியை, அய்யாசாமி என்று அப்பன் பெயரால் அழைத்த கொடுமை போராதென்றால், இப்ப ஜாதி பெயரால் அழைக்கப் பெறுவர்! ஏனெனில், Passportல், முதலில் Surname _________ என்றுதான் தொடங்கும்! வேலை செய்யுமிடத்திலும், Mr.____, _____ என்று சாதியினால்தான் அழைக்கப் படுவோம்!

நான், முதலில் வேலைக்குச் சேர்ந்த போது, இந்தக் கொடுமை தான். மும்பையருகிலுள்ள தானாவில், மிக பிரபலமான ப்ளாஸ்டிக் கம்பெனி. அதிலும் Campus interview மூலம், முதல் ஆளாக தேர்வு செய்து வேலைக்குச் சேர்ந்த நாள். ஹிந்தியும் தெரியாது. HRD Manager அழைத்து, `ஸஹி நாம் தேதோ!' என்றார். உடனிருந்தவன், என் முழி பிதுங்குவதைக் கண்டு, உதவி செய்தான். 'சரியான பெயர் சொல்லு.'
இத்தனை நாள் கேட்டுப் பழகி, என் பெயரில் எந்தத் தப்பும் நான் உணர்ந்திருக்கவில்லை! `It is correct' என்றேன்.
`ஹிந்தி நஹி ஆத்தா' என்றார் HRD! மனதுக்குள், `அடியாத்தாதான் தெரியும், ஹிந்தி ஆத்தாவெல்லாம் தெரியாது' என்று சொல்லிக்கொண்டாலும், அவர் கேட்டதையுணர்ந்து `No' என்றேன். மிக ஏளனமான பார்வையை என் மேல் வீசி, `Surname' pls..என்றார்.
அதே நண்பன், மீண்டும் `Surname' என்ன என்பதை விளக்க, தன்மானம் விழித்துக் கொண்டது!
'நாங்கள் எழுதுவதில்லை. We have abolished mentioning language from our school records itself! (பள்ளி குறிப்பிலிருந்தே)
இந்தக் கொடுமை இதோடு ஒழியவில்லை. ஹிந்தி தெரியாத காரணம், Surname இல்லாதது, ஏதோ அப்பன் பெயர் தெரியாத மாதிரியான இகழ்ச்சி, அந்த HRDக் காரர் மனதில் ஒட்டிவிட்டது போலும்!

HRD : ஸாரி, நான் பெயரை என்ரோல் செய்ய முடியாது. Pls tell your surname!
நான்: ஸாரி, எப்போதோ என் அப்பன் வைத்த பெயரை என்னால் மாற்றிக்கூற முடியாது. இல்லையென்றால், 'Surname' எனும் இடத்தில், `இந்தியன்' என்று எழுதிக்கொள்ளுங்கள்!
HRD: Ok, இப்பொ உன் டிபார்ட்மெட்டுக்கு போ. ஆனால், நாளைக்குள் Surname என்ன என்று சொல்லவேண்டும்!
நான்: இப்பொ, எப்பொ கேட்டாலும் என் surname `இந்தியன் தான்'.
HRD: Too arrogant. Then why you hell Madrasis, come here for jobs?
நான்: Sir, then why the hell you Bomabites, come all the way to choose brainy South Indian through campus interviews? Don't you have any competent guys here?
HRD : Ok, you go back. I will talk to the president who took you for the job.

மறுநாள் ப்ரெசிடெண்ட் அழைப்பதாகச் சொல்லி, பியூன், அவசர செய்தி கொண்டுவந்தான். போனேன்.
விளக்கம் கேட்டார். உடன் நின்றிருந்தார், நம்ம HRD!!
சார், இல்லாத துணைப்பெயர் எங்கிருந்து வரும்? இப்பொழுது மாற்றினால், காலம் எல்லாம் ப்ரசினைகள் வராதா? முதல் நேர்காணலில், பேரா பிரச்சினை? என் மதிப்பெண்ணையும், பதில்களையும் வைத்துத்தானே என்னைத் தேர்தெடுத்தீர்கள்? அப்போ இல்லாத சாதி, இப்பொ எப்படி தலை காட்டுகிறது? தப்பாகயில்லன்னா, ஒரு உதாரணம் சொல்றேன். இப்ப, (HRDயின் பெயர்!) Mr. M.R.Shah இருக்கிறார். எல்லோரும் Shah, Shah என்றுதானே கூப்பிடுகிறீர்கள்? அது சாதிப் பெயர் தானே? எத்தனை பேருக்கு, இவர் முதல் பெயர் தெரியும்? M. ன்னா என்ன? R. ன்னா என்ன? எது அவர் பெயர்? எது அப்பா பெயர்? ஆனால், அவர் அப்படி கூப்பிட அனுமதிப்பது, அவர் விருப்பம். நான் சொன்னது சரிதானே? என்னை என் முதல் பெயரான சந்திரசேகர் என்றே அழைக்கலாமே? கட்டாயம் ஜாதி பெயர் வேண்டுமென்றதால், இந்தியன் என்றேன். இதிலேன்ன தப்பு?

ப்ரெசிடெண்ட் என்னையும், HRD யையும் மாறி மாறி பார்த்தார். (இப்படி சொல்றது தப்போ? பெயர் அல்லது சார் என்று விளிக்க வேண்டுமல்லவா? HRD என்பது, டிபார்ட்மெண்ட் பெயர் ஆச்சே? சரிதான். ஆனால், சொல்லும்படியாக அவர் நற்செயல்கள் செய்தால், கட்டாயம் பெயர் அடிக்கடி உபயோகித்திருப்பேன். இல்லையெனில், எப்போதும், M.R.Shah, HRD தான்! ஏனெனில், நான் சாதி பெயரை அடிக்கடி சொல்ல விரும்பவில்லை!) . பின்னர், என்னிடம், `Ok, you can go to your seat Mr.Chandrashekhar, (இள ரத்தம் என்று நினைத்திருப்பார் போல), என்று கூறி, அனுப்பிவிட்டார்!
மூடியகதவின் பின், அவர் சப்தம் போடுவது தெளிவாகக்கேட்டது!
இந்த விஷயம், ஜுரம் போல், மொத்த பாக்டரியிலும் பரவி விட்டது! ஹிந்தி தெரியாத பாவத்துக்காகவும், Surname வைத்து அழைக்கப் பெறாத பாவத்துக்காகவும், கீழ்நிலைப் பணியாளர் முதல், மற்ற ஹிந்தி பேசும் அலுவலர்வரை, கேலி பேசுவதும், `இங்க போ, அங்கே வா' என்று வேண்டுமென்றே `தமிழ் பேசுகிறேன் பேர்வழி' யாக, முதுகுக்குப்பின் ஏளனம் செய்வது என் ஏராளமான விஷயம் எழுதுவதென்றால், பல புத்தகம் வேண்டியிருக்கும். மீண்டும், விஷயத்துக்கு வருவோம்!

இந்த பிரச்னைக்கு என்ன வழி? சாதி எழுத தன்மானம் இடம் கொடுக்காது. எழுதவில்லையென்றால், நம் மாநிலம் தாண்டிப் போனால் பிரச்னை! அப்பன் பேரால் அழைக்கப் படும் அவலம்! 'ஊரோடு ஒட்டி வாழ்' என்பதை கருத்தில் கொண்டு, எங்கள் வருங்கால குழந்தைகள் கஷ்டப்படாமலிருக்க, இரு வழித் தாத்தாக்கள் பெயரையும் இணைத்து, (Rengasamy+ Rajagopalan) `ரெங்கராஜ்' என்ற துணைப் பெயரை குழந்தைக்கு வைத்தேன்! அண்ணன் மக்கள், என் மகள் எல்லோருக்கும் First name, Middle name, Surname உள்ளது. இந்த ஜூலை 18 பிறந்த என் மகளுக்கு நேத்ரா சந்திரசேகர் ரெங்கராஜ் எனும் நாமத்தை, திருவல்லிக்கேணியிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பதிந்து சர்டி¢பிகேட் வாங்கினேன்! 16 வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த பிரச்னைக்கு இப்போதுதான் விடிவு! என் பெற்றோரைக் குறை கூற முடியாது. தமிழகத்து எல்லை தாண்டாதவர்கள்! எங்கள் புண்ணியத்தால், வட நாட்டில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்! கஷ்டம் அப்போதுதான் தெரிந்தது! அவர்கள் அனுமதியுடனேயே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டேன்!

(தமாஷ¤க்கு - கருப்பசாமி, பிச்சை என்று இருந்தால், `கச்சை' - என்று பெயரை எப்படி Surname ஆக வைப்பது என்று சண்டைக்கு வராதீர்கள்! இது போல், எதேனும் வழி கண்டுபிடிப்பது அவரவர் அப்பன் ஆத்தாளுக்கு கடமை!)

`சாதியாவது, மதமாவது' என்று பேசுபவருக்கு ஒரு சிறிய வேலை! மாநில விளிம்பைத் தாண்டி, வாழ வழி காணுங்கள்! முதலில் உங்கள் மக்கள் மனதிலிருந்து சாதிப் பேயை ஓட்டுங்கள்! பிறகு, மற்றவர் வீட்டில் உள்ள பேயை ஓட்டலாம்! மற்ற ஒரு Blogல், வீர வன்னையன் என்று பரை சாற்றிகொண்டு ஒருவர் பார்ப்பனர்களை அனாவசியமாக் எதிர்க்கிறார்! தீபாவளியே, ஏதோ பிராமணர்கள் கொண்டுவந்தது போலவும், பிற மாநி¢லங்களிலிருந்து அம்மதம் இங்கு பரவி விட்டதுபோலவும், ஏசுகிறார்! அவரது, சிற்றறிவை எண்ணி நகைப்பதா, விடு என்று விட்டுத் தள்ளுவதா என்று குழுப்பம்! தீபாவளியின் பேரில், ஒரு சந்தோஷம் வீட்டில் பரவுவதில் என்ன பிரச்னை? இவர் மனைவி மக்களிடம் வியாக்யானம் பேசி, துணிமணிகள், பலகாரம், பட்டாசுகளை மறுக்கப் போகிறாரா? இல்லை, இவருக்கு பார்ப்பனர் மீது என்ன கோபம்? என்றோ சமுதாயத்தில் நடந்த நிகழ்வுகளுக்கெல்லாம், இன்றா இகழ்ந்து பேசுவது? இல்லை சாதிகள் மேல் கோபமா? அப்படியென்றால் நியாயம். ஆனால், அவர் பெயரில், வீர வன்னியன் என்ற சாதி வாலை அல்லவா சேர்த்துக்கொண்திருக்கிறார்? வெட்டவேண்டாமா?

நான் மனிதன். சாதி என்பது 'படித்த'வனுக்கு தடையல்ல! அரைகுரைகளுக்குத் தான், அது ஒரு punching bag! அவ்வளவே! இதற்கு துணை போகும் இன்னொருவர், 'நிஜம் சுடும்' என்று அறிந்து, `Anonymous.. ' என்ற பெயரில், வீர வன்னியனுக்கு தூபம் போதுகிறார்! அதோடு மேலும் `பருப்பு சாம்பாரைக் கண்டுபிடித்த பார்ப்பனரை எதிர்த்து பாடுங்கள்!' என்கிறார்! என்ன அரைவேக்காட்டுத்தனம்! இவர்களை எண்ணி மனம் வேதனைப் படுகிறது! தமிழ் வளர்க்கும் தளத்தில் தராதரம் தெரியாமல் எழுதுகிறார்கள்! இவர்களுக்கு வேகம் மட்டுமின்றி, விவேகமும் வளர வாழ்த்துக்கள்!

29 October 2005

மரம் வளர்க்கும் அரம் !

தூர் வடித்து நீருயர்த்தி வான் நிமிர்ந்தேன்
சார் புலர்பறவைபல தான் வளர்த்தேன்
சீறழிப் புவி யினில் காலம் தாண்டி
பலபலப் பதிவினிற்கு சாட்சியானேன்!

மாசு தூசு நீக்கி உந்தன் மூச்சு தந்தேன்
வீசு புயல் செயலிழக்க அரண் வளர்த்தேன்
கோர மானசுடு வெயில் தளர்ந்து போயி
ஆரமரக்குளிர் நிழல் படரத் தந்தேன்

வேர்பதித்து உட்புகுந்து பூமி கண்டேன்
பார்நிலைக்க மண்பிடித்து இருக்கம் தந்தேன்
ஆழிசூழ் கடல்புகா அணைப்பும் ஆனேன்
ஆவிபோயும் அறுத்தெடுக்கும் பலகை தந்தேன்

ஊடல் கொண்ட படர்கொடி, பழமுண்ண
கூடும் பறவைகள்; தேடும் வேடர் பிறழவே
நாடும் மிருக மறை விடம்; பற்றறுத்த
மாமுனி, அத்தனைக்கும் அத்துணை!

ஆதரவு நாடிநான் வாய்திறக்க இயலுமாவுன்
ஆணிவேர ருக்கும் ஆசை போக்கிட முடியுமா?
மாடிகோடி கட்டினாய் மண்ணையும் சுறுக்கினாய்
நாடி வாழ்ந்த தாய்எனது நாடி,நாபி கருக்கினாய்.

கீழிறங்கி பதியவும் மண்ணைக் காணோம்
மேல்நிமிர்ந்து பார்க்கவும் ஒளியைக்காணோம்
கூடிநிற்க தேடினேன் துணையைக்காணோம்
நீண்ட உன்வீடு எனக்குஇ டுகாடு ஆகி!

காய்ந்த பூமி காக்கக் கரம் நீட்டி வாழ்ந்த
வேய்ந்த கூரையாய் அமைந்த கோலம் எங்கே?
சாய்ந்த என்னை எவரெவர், கூறு போட்டும்
மாய்ந்த பின்னும் தருகிறேன் -மானு டர்க்கே!!

26 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்- 4 - காகிதம்.

காற்றடிக்கும் வேகத்தில் உறுதியோடு நின்ற என்
சாறுடைய தாய்விடச் சக்கையாகிப் போகினேன்

சக்கரத்தின் சுழற்சியில் சக்கரையை இழந்த நான்
திக்குயேதும் தெரியுமுன் தட்டித் தப்பையாகினேன்!

ரசாயனங்கள் குளியலும் ரப்பர் ரோலர் துவையலும்
தாண்டித் தாண்டித் திக்கியே காகிதமாய் மாறினேன்.

கடைகளில் புனிதனாய், புத்தகமாய் புத்தனாய்
நடையினில் உரைநடை, கவிதையேற்றி தேறினேன்!

அதிகமான மைய் எனில் - அப்படியே குடித்திட்டு
அரிதுமான மெய் எனில் - என்மேலே 'வரி'த்திட்டு

உரைகள், வரிகள் யாவையும் உலகினிற்கு அளிக்கவே
உளதை வடித்து ஏழைகள் கடிதமாக்கி கலவவே

என்றும் வெள்ளை மனதுடன் எதுவும் ஏற்றிக்கொள்ளவே
நன்கு தீது பிரித்திடா நடுநிலைஞன் ஆகினேன்!

மின்னஞ்சல் கணினி போன்றவை கணத்தை சுருக்கி தந்தினும்
அஞ்சிகெஞ்சி போகும் நிலை எனக்கு என்றுமில்லையே!

பதிவுபத்திரம் குழந்தைப் புத்தகம் - கணினி எட்டா உலகிலும்
மதிக்கும் நிலையில் மதிக்கு நிதி வாரி வழங்க நேரினேன்.

கடலையுண்ட பின் - கசக்கி எறியும் முன்
விடலை முடியும் முன், விடல்-ஐ தொடங்கும் முன்

படலை! மனதில் பதிய வைக்க என் எழுத்தை வாசி!
படபடக்கும் காகிதமென் படர்வுகளை யாசி!

21 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-1 கயிற்றுப் பாட்டு!

பாதாளம் தெரிந்திருந்தும் கீழ் குதித்து,
பட்டை உரிபட்டு, உடன்பிறந்தார் பிரிந்து
குத்தீட்டி குதறல் பட்டு, அடிபட்டு, பதப்பட்டு,
நாராகி, இழுபட்டு வெயில் வாங்கிக் கைகோர்த்து,
கயிறாகத் திரிபட்டு ஒருசேரத் துணை நின்றேன்
நீயோ...
படிக்காமல், கரையாமல்,பண்பென்ன தெரியாமல்
பிடிப்பின்றி வாழ்ந்திட்டுப் பிறர்மேலே பழிபோட்டு
குடித்திடவே உயிர்தன்னை- என்னை சுருக்காக்குகிறாய்!
உன் உயிர் போவது உன்னால்,
என் பெயர் கெடுவது எதனால்?
உனக்கு வேலையில்லை, என்னை விடு, எனக்குப் பல ஜோலி-
பழு கட்டவும், இழுக்கவும், முறுக்கவும், இணைக்கவும்,
சேர்க்கவும்தான் தெரியும்! அது என் தொட்டில் பழக்கம்.
நீ எனக்கு சொல்லித்தருவது, கெட்டப் பழக்கம்!