17 May 2009

மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் - சுசி கணேசன்

மனிதம் ஜெயித்த திரையுலக நண்பன் - சுசி கணேசன்

ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் 1988 மாணவப் பத்திரிகையாளர்களாய் நானும், நண்பன் சு. கணேசன் என்ற இன்றைய பிரபல இயக்குநர் சுசி. கணேசனும் மற்றும் ஒரு மாணவி (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) மதுரை மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோம். காலத்தில் கோலத்தில், நான் மும்பை, பரோடா நகரங்களில் ப்ளாஸ்டிக் நிபுணனாய், இயந்திர வாழ்க்கை வாழ்ந்து, கடந்த 3 ஆண்டுகளாய் என்னால் முடிந்த சமூக சேவை செய்ய எண்ணியும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையை எங்கள் குழந்தைகளுக்கு எடுத்து இயம்ப என்ணியும் சென்னையில் வசித்து வருகிறேன். புராதனக் கோவில்களை சீரமைக்க ரீச் பவுண்டேஷன் (www.conserveheritage.org) எனது முக்கியப் பணிக் களம். அதனால் பல கிராம மக்களை சந்தித்து வருகிறேன்.

திரைப்படங்கள், தொ(ல்)லைக் காட்சி இரண்டையும் தவிர்த்து விட்டது எங்கள் குடும்பம். ஆனால், முதன் முதலாய் ஒரு திரைப்படத்தோடு என்னை சம்பந்தப் படுத்திக் கொண்டு, சுசி. கணேசனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளக் காரணம் மனித நேயத்தின் ஒரு பரிணாமத்தை நண்பன் சுசி தொட்டதுதான்!

சுசி.கணேசனுடனான தொடர்பை மிகுந்த சிரமங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்டேன். சினிமா வட்டத்தில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கஷ்டம். அதுவும் இயக்குநருடன்! துணை இயக்குநர்கள், உதவியாளர்கள் சமுத்திரத்தில் பழைய கல்லூரி நட்பைக் கூறி யார் உள்ளே விடுவார்கள்? அழைப்பிதழ் இல்லாமலேயே, பாடல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பது கிராமங்கள் தத்தெடுப்பு விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஏன்? சினிமா வட்டத்துள் பணமே பிரதானம். அடுத்தவர் துயர் துடைக்கவோ, அல்லது சாமானியனைப் பற்றி எண்ணிப் பார்க்கவோ பிரபலங்களுக்கு நேரம் இருப்பதில்லை. மாணவ நிருபராய் இருந்த கணேசன், கிராமத்திலிருந்து வந்த கணேசன், பி.டெக் படித்த கணேசன், கனவுத் தொழிற்சாலையில் கோலோச்சும் கணேசன், திரைப்பட வரலாற்றிலேயே (உலக,இந்திய) யாரும் செய்யாத ஒரு விஷயத்தை எண்ணி, அதை நனவாக்கியுள்ளார். கந்தசாமி பட பூஜையின் போதே, 30 கிராமங்களை தத்தெடுக்கப் போவதை அவரது தயாரிப்பாளர் கலைப் புலி தாணு அவர்களின் ஊக்குவிப்பால் அறிவித்தார். அது பாடல் வெளியீட்டு விழாவின் போது நிறைவேறியுள்ளது. 17/05/2009 மாலை நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில், முக்கியமாக பங்கேற்றவர்கள் அந்த 30 கிராமத்தினர்.சொந்த செலவில், பஸ்களில் நிரம்பி வந்தனர். சேர்த்த கூட்டமில்லை, தானாய் சேர்ந்த கூட்டம்!

கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆனந்த பவன், நல்லி அதிபர்கள் உட்பட 20 பேர், அதில் பெயர் சொல்ல விரும்பாத 8 பேர்கள்,அந்த 30 கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். ராமசந்திரா, ஏ.சி.சண்முகம் மற்றும் அகர்வால் கண் - மருத்துவ நிலையங்கள் இந்த கிராம மக்களுக்கு இலவச மருத்துவ வசதிகள், சிகிச்சைகள் தருவதாக அறிவித்துள்ளன. வந்த விண்ணப்ப மடல்கள் 998. தத்தெடுத்ததோ, 30! எனவே மேலும் பல ஆர்வலர்கள் இந்தப் பணியை ஊக்குவித்து எடுத்துச் செய்ய வேண்டும் என்று எல்லாரும் வேண்டுகோள் விடுத்தனர். சினிமா செட்டிங் போடவே பலகோடிகள் செலவு ஆகும்.அந்தப் பணத்தை நிரந்தர செலவாக கிராமங்களில் செய்து, அவற்றை மாற்ற முயற்சிக்கும் சுசி.கணேசன், கலைப்புலி தாணு போன்றோரிடம் நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன், மீண்டும் கோருவதும் இதுதான்: நண்பா, என்னை இப்பணியில் நிரந்தரமாய் இணைத்துக் கொள்! நண்பா, கை கொடுக்கிறேன், தூக்கிவிடு, என் சேவை எண்ணத்தை, அதன் மூலம் பல காலப் பொக்கிஷங்கள் நிறைந்த,சிதிலமடைந்த கோவில்கள் கொண்ட பல கிராமங்களை! "
பார்க்க படங்கள்

30 April 2009

கோவில்களைப் பராமரிப்பது எப்படி

கும்பகோணம் உழவாரப் பணி அன்பர்களுக்கான பயிற்சிப்பட்டறை நன்கு நடந்தது என்பதற்கும், மக்களைப் போய் சேர்ந்தது என்பதற்கும் ஒருசாட்சி:

இந்த நிகழ்ச்சி நடந்த (11-1-2009) ஓரிரு நாட்களில், எங்கள் ரீச் பவுஃண்டேஷன் ஸ்தாபகர் திரு. சத்தியமூர்த்தி அவர்களூக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் மறு பதிப்பு இங்கே:

ஸ்ரீ மதுவனேஸ்வரர் சுவாமி வார வழிபாட்டுக் கழகம்

நன்னிலம், திருவாரூர் மாவட்டம்

தலைவர்: ச. வெங்கடேசன், எம்.எஸ்.சி.

85/34, கடைத் தெரு, நன்னிலம் 610 105

பெருமதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்கள் சீரிய தலைமையின் கீழ் நடைபெற்ற ‘உழவாரப்பணி பட்டறையில் நான் செவிமடுத்த சில முக்கிய செய்திகளை ஒரு கட்டுரையாக எழுதி, ஞான ஆலயம், குமுதம் பக்தி ஸ்பெஷல், தினமலர் பக்திமலர், ஆகிய இதழ்களுக்கு அனுப்பியுல்ளேன். அதன் நகல் ஒன்றினை தங்களுக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன். மற்றவி தங்கள் கடிதம் கண்டு.

நன்றி

சிவசிந்தனையுடன்

(ஒப்பம்)

வெங்கடேசன்.

கட்டுரை: (இதில் விடுபட்ட செய்தியை நீல நிறத்தில் அடியேன் நிரப்பியுள்ளேன்)

திருக்கோவில்கள் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு

ஒரு கண்ணோட்டம்

(மீண்டும் புதிதாய் பிறக்கும், காலத்தால் அழியா புராதன கட்டுமானக் கலைகள் என்று தலைப்பு இருந்திருக்கலாம் J)

`கோபுரம் சூழ் மணிக்கோயில் - என சம்பந்தரும்

‘கறைக் கண்டன் உறைக் கோயில் கோலக் கோபுர

கோகர்ணம் சூழாக் கால்களால் பயன் என் - என அப்பரும்

மண்டபமும், கோபுரமும் மாளிகையும், சூழிகையும்

மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி

கண்டவர்கள் மனம் கவரும் புண்டரீகப் பொய்கைக்

காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர்கானே - என சுந்தரரும்

திருகோயில், திருக்குளம், கோயில்களில் மறைகள், திருமுறை ஓதியது, நடனம் மற்றும் சிற்பக் கலைகள், வளர்ந்த தரத்தினை இயம்புகின்றனர்.

இத்தகைய திருக்கோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்கள் மட்டும் அல்ல, தமிழ்மக்களின் பண்பாடு, கலை உணர்வு, கலாச்சாரம், நாகரீகம், ஆகியவற்றை உணர்த்தும் புராதன்ச் சின்னங்களாக விளங்குகின்றன. இந்த கலைப் பொக்கிஷங்களை பாதுகாத்து அடுத்ததலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரது கடமையாகும். எனவே, ஆலயப் புனரமைப்பு செய்வோர்கள், உழவாரப் பணி செய்யும் அன்பர்கள், கலைகளை வளர்க்கும் சிற்பிகள், ஆன்மநேய, ஆன்மீக அன்பர்களிடையே திருக் கோவில்களின் புனிதத் தன்மை, பாரம்பரியம் இவர்றை போற்றிப் பாதுகாக்க வேண்டிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

அத்தகைய விழிப்புணர்வு பட்டறை, உழவாரப்பணி மக்களுக்காக, கும்பகோணம் பக்தபுரி தெருவிலுள்ள ‘பவளம் திருமண மண்டபத்தில், 2009, ஜனவரி 11ஆம் தேதி ரீச் பஃவுண்டேஷனால் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட உழவாரப்பணி, கலாச்சார ஆர்வலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில் வரவேற்றுப் பேசிய ரீச் நிறுவனர், டாக்டர். சத்திய மூர்த்தி அவர்கள், `அரசர்களால் உருவாக்கப்பட்ட திருக்கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழியாமல் இருக்கக் காரணம், அவை கட்டப்பட்ட விதம், அமைப்பு, பயன்படுத்திய பொருட்களின் தன்மையே காரணம். தஞ்சை கோவிலின் அடித்தளம் எத்தனை ஆழம் இருக்குமென்று மேல்நாட்டு வல்லுநர்கள் விவாதித்து, சுமார் 130 அடி என்றார்கள். அது 15 அடியிலிருந்து 30 அடிக்குள் அடங்கிய அடித்தளம் என்றதும் வியந்து போனார்கள்! எனவே, அடித்தளம் சிதந்து போனதாக சரித்திரமே இல்லை. சரியாக பராமரிப்பில்லாமலும், மரங்கள், செடிகளை கோபுரங்களில் வளர்வதைத் தடுக்காமல் விட்டதே இந்த பெரும்பாலான கோவில்களின் சிதைவுக்குக் காரணம். எனவே, பாரமரிப்பது, பராமரித்ததை எப்படி காப்பது, சிதிலமடைந்ததை எப்படி பழம்பொருட்களைக் கொண்டு, அந்த வடிவழகும் நுட்பமும் மாறாமல் கட்டுவது என்பதி விளக்குவதே எங்கள் நோக்கம்,என்று பேசினார்.

தலைமை வகித்துப் பேசிய தொல்பொருள் ஆய்வாளர், கலைமாமணி வித்யவாசஸ்பதி, சிலை மீட்ட செம்மல், டாக்டர். நாகசாமி அவர்கள், “கும்பகோணத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் உழவாரப்பணிக் குழுக்கள் அமைத்து கோவில்களை சீரமைக்க முற்பட்டதையும், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரசின் ஆதரவோடு நாட்டியக் கலை விழா நடத்தியும் நமது கோவில்களைப் பிரபலப் படுத்த முயன்றதையும் நினைவு கூர்ந்து, மக்கள் இன்னமும் கோவில்களை நமது கலாச்சாரச் சின்னங்களாய் பாவித்து, அவற்றை பராமரிக்கக் கூடிய விழிப்புணர்வு வரவில்லை, ஆயினும் ரீச் பஃவுண்டேஷன் என்று வேதனையைப் பகிர்ந்து கொண்டார். கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பல சிறந்த கோவில் கலைகள் பற்றியும் கூறினார். அவற்றுள் சில:

§ குடந்தை நாகேஸ்வரர் கோவில் தேர் காலில் 12 சூரியர்கள் சிற்பங்களும், முன்னே இரண்டு யானைகள்,இரண்டு குதிரைகள் , இத்தனியும் பூட்டிய ரதத்துள் ஆடல்வல்லான் இருப்பது போன்ற கோவிலமைப்பு, குடந்தை கும்பேஸ்வரர் கோவிலில் நடன மாதர் சிற்பங்களும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

§ கோனேரிராஜபுரம் கோவிலின் மேல்விதானத்தில் அத்தலத்தில் நடைபெறும் விழாக்களையும், நடன கர்ணங்களையும் சிறப்பாக வரைந்து வைத்துள்ளனர்.

கருங்கல், சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய், வச்சிரம் கலந்த சாந்தால் உருவாக்கப்பட்டவை, நம் திருக்கோவில்கள். இந்தக் கட்டிடங்களும் மனிதர்கள் போலவே சுவாசிக்கின்றன. அதனால்தான் அவை காலத்தல் அழியாதனவாக உள்ளன. தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் பயன்படுத்திவரும் பொருட்கள் நீண்ட காலம் பலன் அளிக்கத்தக்க வகையில் அமையவில்லை என்பதே உண்மை. அரசர்கள் காலத்தில் கட்டிட கலைக்கு சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தப்பட்ட காரணாம் அதன் சுழற்சியால், அது அதிக பலம் பெறுகிறது என்பதால்தான்

சுண்ணாம்புச் சுழற்சி

CaCO3

சுண்ணாம்புக்கல் (-) CO2

(-)H2O (நீர்)

(-)CO2 கரிமல வாயு கரிமலவாயு

இரண்டும் வெளியேற்றம் CaO வெளியேற்றம்

மணல் சேர்ந்து, நீர், சண்ணாம்புக்கலவை கால்சியம் ஆக்ஸைடு


Ca (OH)2 நீர் சேர்ந்து

கால்சியம் ஹைட்ராக்ஸைடு

சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்) பதப்படுத்தப்படும் போது, அதிலிருந்து கார்பண்டை ஆக்ஸைடு வெளியேறி அது கால்சியம் ஆக்ஸைடாக மாறுகிறது. அதனுடன் நீர் சேரும்போது கால்சியம் ஹைட்ராக்ஸிடு கிடைக்கிறது. மணலுடன் சேர்ந்து கலவையாகிப் பூசப்பெற்றதும், அந்த பூச்சு உலறும் போது நீர் ஆவியாகி வெளியேறிவிடுகிறது. மீண்டும் கார்பண்டை ஆக்ஸைடு உட்புகுவதால் அது மீண்டும் சுண்ணம்புக் கல்லாக பாறி, பலம் அதிகரிக்கிறது. எனவே, மழைக் காலங்களில் நீரை உள்வாங்கி, வெயிலில் ஆவியாக வெளியேற்றுவதால், சுவாசத்தால், நீர் கசிவின்றி, இந்த சுழற்சி அதிகரிக்க, அதிகரிக்க காலங்கள் ஆக ஆக, சுண்ணாம்பால் கட்டபட்ட சுவர் அதிக வலு பெற்றுக் கொண்டே போகிறது.

எனவே புதிதாக புனரமைப்பு செய்பவர்கள் சிமெண்டுக்குப் பதிலாக சுண்ணாம்புச் சாந்தையே பயன்படுத்தினால், கோவில்கள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்பது உறுதியாகும். இந்த தொழில் நுட்பம் குறித்து ஆலோசனை வழங்க ரீச் (Rural Education And Conservation of Heritage) பஃவுண்டேஷன் போன்ற அமைப்புகள் முன் வந்துள்ளன. இந்நிகழ்ச்சியில் ப்ரத்யேகமாக கலந்து கொள்வதற்காக, சுண்ணாம்பு சுதை அறிவியல் வல்லுநர் டாக்டர். தபன் பட்டாசார்யா கல்கத்தாவிலிருந்து வந்திருந்து, இச்செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

மனிதர்களின் நோயை குணப்படுத்த மருத்துவர்கள் உள்ளதுபோல், இந்த திருக்கோவில்களின் புராதன அமைப்பு, புனிதத்தன்மை, பாரம்பரியம் கெடாமல் புதுப்பிக்க நிபுணர்கள் பலர் இப்போது ரீச் பஃவுண்டேஷன் மூலம் செயல் படுகின்றனர். புனரமைப்பு செய்பவர்கள் இவர்களைக் கலந்தாலோசித்து இப்பணிகளை செவ்வனே செய்யலாம்.

அடுத்து ‘தேவாரம் தந்த திருச் செல்வங்கள் என்ற தலைப்பில் பேசிய டாக்டர் குடவாயில் பாலசுப்ரமணியன், `அரசர்கள் காலத்து சிற்பிகளும், கட்டிடக்கலை வல்லுநர்களும் பக்தியுடனும், கலை நுணுக்கத்துடனும் கோவில்களை நிர்மாணித்துள்ளனர். உதாரணமாக

§ கங்கை கொண்ட சோழபுரத்தில் வடக்கு வாயிலினருகே சண்டேசுவர நாயனார் கதை மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

§ தாராசுரம் கோவிலில் திருச்சுற்றில் அப்பர் கைலாயக் காட்சியும், “மாதர் பிறை கன்னியானை, பதிகக் காட்சிகளும், 108 ஓதுவார்களின் சிற்பங்கள், அவர்கள் பெயர்களோடு வரிசையாக அமைத்த நன்றியுணர்வையும் காணலாம்.

§ மேலப்பெரும்பள்ளம் கோவிலில் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மான் சிவபெருமானின் வலது கரத்தை தடவுவது போலவும், சிவபெருமான் வீணை வாசிக்க, அருகில் ஒரு பூதம் கேட்பது போல் சிற்பங்கள் அமைத்துள்ள அழகை அப்பர் சுவாமிகள்,

வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி, வலம் புரமே புக்காங்கே மன்னினாரே, என்றும்,

‘வட்டாணை யாடாலாடி வராணீ வாய் முரடிகள் வருவாரே, என சம்பந்தரும் போற்றிப் பாடியுள்ளனர்.

இப்படிப்பட்ட கலையுணர்வு மிக்க சிற்பங்கள், சிலைகள் கோபுரங்கள், விதானங்களில் பெயிண்ட் பூசுவதால், ரசாயன மாற்றம் ஏற்பட்டு அந்த அழகு மாசு படுகின்றன. அதேபோல் காலச் சரித்திர பட்டயங்களான, வார்ப்புகளான கல்வெட்டுக்கள், கல் பிரித்துக் கட்டுகையில், மாற்றிக் கட்டப்பட்டு, கல்வெட்டுச் செய்திகள் தொடர்ச்சியற்றுப் போய் சிதைத்துவிடுகின்றனர். எனவே, கல் கோவில்கள் செப்பனிடுகையில், பழைய கற்களை வரிசை மாறாமல் எடுத்துக் கட்டுவது அவசியமாகும். உதாரணத்துக்கு, குடவாஇயில் அவர்கள் சொன்ன வேதனை தரும் ஒரு செய்தி:

திருவிடைவாய் கோவிலில் (குடவாயிலுக்கு அருகே, குறடாச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள கோவில்) முழுவதுமாய் தேவாரப் பதிகம் ஒன்று கல்வெட்டாய் கிடைத்த ஒரே ஒரு பதிவு, திருஞான சம்பந்தர் பாடிய

மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்

பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்

பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி

வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1.1

ஒவ்வாத என்பே இழையா ஒளிமௌலிச்

செவ்வான்மதி வைத்தவர் சேர்விட மென்பர்

எவ்வாயிலும் ஏடலர் கோடலம் போது

வெவ்வாய் அரவம் மலரும் விடைவாயே. 1.2

கரையார்கடல் நஞ்சமு துண்டவர் கங்கைத்

திரையார்சடைத் தீவண்ணர் சேர்விட மென்பர்

குரையார்மணி யுங்குளிர் சந்தமுங் கொண்டு

விரையார் புனல்வந் திழியும் விடைவாயே. 1.3

கூசத் தழல்போல் விழியா வருகூற்றைப்

பாசத் தொடும்வீழ உதைத்தவர் பற்றாம்

வாசக் கதிர்ச்சாலி வெண்சா மரையேபோல்

வீசக் களியன்னம் மல்கும் விடைவாயே. 1.4

திரிபுரம் மூன்றையுஞ் செந்தழல் உண்ண

எரியம்பு எய்தகுன்ற வில்லிஇட மென்பர்

கிரியுந் தருமாளிகைச் சூளிகை தன்மேல்

விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே. 1.5

கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்

தள்ளித் தலைதக்கனைக் கொண்டவர் சார்வாம்

வள்ளி மருங்குல் நெருங்கும் முலைச்செவ்வாய்

வெள்ளைந் நகையார் நடஞ்செய் விடைவாயே. 1.6

பாதத் தொலி பாரிடம் பாடநடஞ்செய்

நாதத் தொலியர் நவிலும் இடமென்பர்

கீதத் தொலியுங் கெழுமும் முழவோடு

வேதத் தொலியும் பயிலும் விடைவாயே. 1.7

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்துப்

பண்ணார் தருபாடல் உகந்தவர் பற்றாம்

கண்ணார் விழவிற் கடிவீதிகள் தோறும்

விண்ணோர் களும்வந் திறைஞ்சும் விடைவாயே. 1.8

புள்வாய் பிளந்தான் அயன்பூ முடிபாதம்

ஒள்வான் நிலந்தேடும் ஒருவர்க் கிடமாந்

தெள்வார் புனற்செங் கழுநீர் முகைதன்னில்

விள்வாய் நறவுண்டு வண்டார் விடைவாயே. 1.9

உடையேது மிலார் துவராடை யுடுப்போர்

கிடையா நெறியான் கெழுமும் இடமென்பர்

அடையார் புரம்வேவ மூவர்க் கருள்செய்த

விடையார் கொடியான் அழகார் விடைவாயே. 1.10

ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம்

மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை

நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன்

கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே. 1.11

என்ற கல்வெட்டே,முதல் முதல் 1917ல் கல்வெட்டாக கண்டெடுக்கப்பட்ட ஆவணம். ஆனால்,மீண்டும் கோவிலை செப்பனிட்டுக் கட்டியவர்கள், கற்களை வரிசை மாற்றிப் பூசிவிட்ட படியால், ஒரு காலச்சுவடு, சரித்திரத்தில் அரிய பாடல், தேவாரம் கல்வெட்டாய் உள்ள ஆதாரம், சிதைந்துவிட்டது!

எனவே, விழிப்புணர்வோடும், விஷய ஞானத்தோடும் கோவில்களை புனரமைப்பது அவசியம். விமானங்களில் செடிகள் வளரவிடாமல், அவ்வப்போது பிடுங்கிவிட வேண்டும். பிடுங்கிய துவாரத்தில், சுண்ணாம்புக் கரைசலையோ, ஆசிடையே ஊற்றி மீண்டும் செடிகள் வளராமல் தடுக்க வேண்டும். திருக்கோவில் செப்பனிடும் பணியில் ஈடுபடும் அன்பர்கள் அனைவரும், இத்தகைய முறைகளை கடைபிடித்து பணி செய்வார்களானால், நனது காலச்சின்னங்கள் என்றென்றும் நம்மோடு இருக்கும். வரும் சந்ததியினருக்கு வரலாற்றின் படிமங்கள் மீஞ்சப் பெறும்.

தக்க செப்பனீட்டு முறைகளை தெரிந்து கொள்ள அணுகவும்:

படங்களைக் காண்க

REACH FOUNDATION

26/43, Janaki Raman Street

West Mambalam, Chennai 600 033.

மின்னஞ்சல்: reach.foundation.india@gmail.com