19 December 2006

தோஹாவில் "தோக்கா" :சாந்தி!

சாந்தி, சாந்தி, சாந்தி: - இது வேத மந்திரத்தின் இறுதி வரிகள் என்பதைப் பற்றி நான் சொல்லவரவில்லை!

இந்த பெயரைக் கேட்டவுடன் எல்லாருக்கும் அண்மையில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நபர்தான் நினைவுக்கு வருவார். தோஹாவில் அவருக்கு 'தோக்கா' (இந்தியில் காலை வாரிவிடுதல்!) தந்துவிட்டனர்!

இன்று காலை செய்தித் தாள்களில், "தமிழக முதல்வர் அவருக்கு அறிவித்தபடியே, வதந்திகளையும் அவதூறுகளையும் புறந்தள்ளிவிட்டு, மனிதாபிமானத்தின் அடிப்படையில் 15 லட்சத்தைத் தந்தார்" என்ற செய்தியைபார்த்ததும்தான் மனதில் நிம்மதி பிறந்தது!

முதலில் சர்ச்சையைப் பற்றி:அவர் ஆணா, பெண்ணா, இல்லை 'நடுநிலையாளரா' (இந்தப் பதம்தான் சரி என்று எனக்கு பட்டது!) என்பது, இத்தனை நாட்கள் அவரை பலதரப்பட்ட மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், சோதனைத் தேர்வு போட்டிகளிலும் ஓடச்செய்த நடுவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? இல்லை சக போட்டியாளருக்கும் கூட வித்தியாசம் தெரியாமலிருக்கும்? அதிசயம்தான்! சாந்தி நேற்று குறிப்பிட்டபடி, "என் மனசாட்சியின்படி நான் குற்றமற்றவள்" என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்! அப்படி மனசாட்சியை உதறிவிட்டு அவர் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என்று மனம் எண்ணிப்பார்க்க மறுக்கிறது!

சரி, ஒரு வேளை அவர் 'அப்படியே' இருக்கட்டும்! அவரை கடைசிவரை அனுப்பிவைத்த அதிகாரிகள் தானே குற்றம் செய்தவர்கள்? தண்டனை என்று ஒன்றிருந்தால், அதை அவர்களுக்குத்தான் தரவேண்டும்! இனி அவர்கள் எந்த போட்டிக்கும் அதிகாரியாகவோ, நடுவராகவோ கலந்து கொள்ளக் கூடாது!அப்படி தெரிந்தே அவர்கள் சாந்தியைப் பகடை காய் ஆக்கியிருப்பார்களே ஆனால், அவர்களுக்கும் 'மாமா' வேலை செய்பவனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

சாந்தியின் நிலையை எண்ணிப் பாருங்கள்! அவர் 'அப்படியே' இருக்கட்டும்! காலை தினமும் ஏழ்மையின் முகத்தில் விழிக்கும் குடும்பம் ஒரு பக்கம்; சத்துணவோ போஷாக்கோ இல்லாத பயிற்சி ஒரு பக்கம். சந்தேகமும் மருத்துவமும் காலை வாரிவிட்ட ஏக்கம் ஒரு பக்கம்; வேலையின்மையும், ஓட்டத்துக்காக தொடரும் கல்வி ஒருபக்கம் - இப்படி பல சுமைகளை தூக்கி அவர் ஓடியது - தனது வாழ்கையின் விடியலைக் காண கடைசி மூச்சுள்ள ஒரு நோயாளிபோல், உயிரோடு 'காலில்' பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்!

அவர் தோற்றிருந்தால்? அவர் 'அப்படியே' இருப்பது, அப்படியே அமுங்கிபோயிருக்கும்! செய்தி வெளியே வந்திருக்காது! இந்திய செய்தியாளர்களைப் போல ஒரு "negative news mongers" ஐ நான் எங்கும் பார்த்ததில்லை! இந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டு நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிடும் கேவலமான வேலையை வழக்கம்போல் செவ்வனே பல பத்திரிகைகள் செய்தன! அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல், இராக்கில் போர் உச்சத்திலிருந்த பொதுகூட, அவர்கள் எல்லாப் பக்கங்களிலும், வெற்ற பெற்ற தொழில் அதிபர்கள், நன்கு விற்கும் பொருட்கள், நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகள், இப்படி நல்லவையையே வெளியிட்டு, கடைசி பக்கங்களில், ஒரு பத்தி செய்தியாக, போரில் காலமானவர்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டார்களாம்! காய்ந்த புல்லிலும் சத்துணவை காணும் இராக்கியன் எங்கே, ஆயிரம் ஆயிரம் விருந்து வகைகள் கண் முன் இருந்தும் மலத்தை தேடி உண்ணும் இந்த மாதிரியான முதல் பக்க செய்தி வெளியீட்டாளர்கள் எங்கே?

இதில் இன்னொரு விஷயத்தை மனித உரிமைக் காரர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்! இம்மாதிரியான 'நடுநிலையாளர்களுக்காக' ஏன் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு முதல் உள்ளூர் மைதானம் வரை தனியே போட்டிகள் நடத்தக் கூடாது? அவர்கள் எல்லா நாட்டிலும் 'கணிசமான' எண்ணிக்கையில் நிரம்பி உள்ளனர்! எதிலும் அங்கீகாரம் தராமல், கீழே தள்ளப்படுவதால்தான் அவர்கள் சமூகத்துக்கெதிராக பிராத்தல்கள் நடத்தவோ,பிச்சை எடுக்கவோ, ஏனைய பிற தவறான பாதையில் செல்லவோ முற்படுகின்றனர் (எல்லாரும் அல்ல; பெரும்பாலானவர்கள்). ஆண்டவனில் 'அர்த்தநரீஸ்வர தத்துவத்தில் தொடங்கி, இதிகாசங்களில் அர்ச்சுனன் 'பிரகன்நளையாக' இருந்ததுவும், 'சல்லியன்' அரவானாக தேரோட்டியதிலிருந்து, சங்க காலத்தில், (இது மார்கழி மாதமாகையால் நினைவுக்கு வந்தது) திருநாவுக்கரசர் பாடிய திருவெம்பாவையில், "..ஆணாகி, பெண்ணாகி, அலியாய் பிறங்கொளிசேர், மண்ணாகி, விண்ணாகி, அத்தனையும் வேறாகி.." என வரும் காலம் தொட்டு, இன்று பல துறைகளில் முன்னேறத் துடிக்கும் இந்த 'நடுநிலை மக்களை' முன்னேற்ற வழி செய்ய நாம் முயல்வோமாக!

05 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்! விவாதம் 2ம் பாகம்

கருத்து நடத்திய கருத்தரங்கம் - 1 பார்க்க http://maraboorjc.blogspot.com/2006/12/blog-post.html மரண தண்டனை தேவையா?

நான் இந்த இடுகையை எழுதும் சில நாட்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரை என்பவர், குற்றங்களுக்காக வருந்தச் செய்வதே நீதி எனும் தலைப்பில் குற்றம் புரிந்தவர்களை திருந்தச் செய்வது குறித்து தினமணி நாளிதழில் எழுதியிருந்ந்ததைக் காண நேர்ந்தது. அதற்கு பதில் ஒன்றை அரூரிலிருந்து திரு.ஸ்ரீ.மதிவாணன், என்பவர் எழுதியுள்ளார். அதன் சாராம்சத்தை கீழே தருகிறேன். இக்கட்டுரைக்கு இந்த பதிலும் மிகப்பொருந்தும். ஆனால். அவர் ஒரு இடத்தில், "நூறு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டாலும், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக்கூடாது (!!!) என எழுதியுள்ளார். அதை பத்திரிகை ஆசிரியரும், திருத்தங்கள் செய்யாமலே வெளியிட்டுள்ளார்!"நூறு குற்றவாளிகள் விடுபட்டாலும் கூட, ஒரு நிரபராதி கூட தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது", என்றுதானே இருக்க வேண்டும் அந்த வரிகள்?ஸ்ரீ.மதிவாணனுக்கு அந்த நீதியும் ஏற்புடையதாக இல்லை. அவர் கூறும் காரணம்?" ..உட்கார்ந்த இடத்திலிருந்தே விரும்பியதைச் செய்யும் வசதியை ஆயுட்சிறை பயங்கரவாதிகளுக்குத் தருமேயன்றி - அவர்களை வைத்துப் பாதுகாக்கையில், அன்னாரின் சிறைவழி ரெளடியிசங்களால் சிறைக்குள்ளேயே ஆபத்துகள் வளரவும், தீய திட்டங்கள் மேலும் வலுப்பெறவும் வழிசெய்யும்; ஆயிரம் கிரண்பேடிகள் உருவெடுத்தாலும் கொடூரக் கொலையாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை!"" ... பயங்கரவாதிகளால் கொல்லப்படும் ஆயிரமாயிரம் ராணுவ வீரர்களுக்கு இரங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட எந்த அறிவு ஜீவியோ, மனித உரிமைவாதியோ முன் வருவது இல்லை!""...ஜெசிகா லால், ப்ரியதர்சனி மாட்டூ, போன்ற பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப் படுகையில், எத்தகைய அவமானமும், வேதனையும், கதறலையும் அனுபவித்திருப்பர்? அது அந்த தவறைச் செய்யும் ஆணுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த காலித் தனத்தை உடலிலும், உயிரிலும் தாங்கித் துடித்து, மானத்தையும் உயிரையும் ஒரு சேர, உச்சபட்ச வலியினூடே இழக்கும் பென்ணின் நிலையில் தன்னை கற்பனை செய்துகொண்டால், அங்கே, எத்தகைய மனிதாபிமானங்களுக்கும் இடமிருக்காது,".. என்று எழுதியுள்ளார்.இதைப் படித்து, போன ஞாயிற்றுக்கிழமை, கண்பார்வையற்றவர்களுக்காக பாடங்கள் படிக்கச்செல்கையில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் இருவர், சிறுகதை தொகுப்பொன்றை படிக்கச் சொன்னார்கள்; அதில் மனித நேயத்தை மேலிட்டுக்காட்டும், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் கதியினூடே, கோவி.மணிசேகரனின் "கழுவேறிமேடு" எனும் கதையைப் படிக்க நேர்ந்தது! சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது? என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதையிலும் மனிதம் நிலைத்தது! நீதியும் நிலைத்தது!அந்தக் கதையின் முடிவையே இந்தக் காலத்திலும் கடை பிடித்தால், கட்டாயம் காசுவாங்கி நீதி விற்கும் அவலம் இருக்காது!கதையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்...இன்றைய விழுப்புரம் அருகேயுள்ள வில்லியனூர் கோவிலருகே இருக்கும் பாகூர். அங்கு, விஜய நகர பேரரசுக்கு உட்பட்ட மண்டலாதிபதிகளுள் மல்லமராஜு என்பவன் ஆள்கிறான். சாமானியன், காதலந் பெயர்- வில்வநேசன்; வில்லியனூர் சிவன் கோவிலின் சுவாமி பெயர்! (அம்மனின் பெயர்- குயிலம்மை!- இந்த அழகிய பெயர்களைக் கண்டதும், அந்தக் கோவில் இன்னும் இருக்கிறதா எனக் காண மனம் விழைகிறது!). காதலி சுந்தர மேனியாள்!கதையை ஊகித்திருப்பீர்களே! பலம் கொண்ட மல்லமராஜு, கோவிலில் சுந்தர மேனியாளைக் கண்டவுடன் மயக்கம் கொள்கிறான். அவளை அடைய எல்லாம்செய்து பார்க்கிறான். ஆனால் அவள் மசிவதாயில்லை! தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான்! ஊரே அதிர்கிறது!கழுவிலேற்றும் நாளில், எதிர்பாராத விதமாக, பேரரசன் கிருஷ்ண தேவராயர், தன் சைன்யத்தோடு பாகூர் வழியே செல்கிறார். அவர் வரும் நாளன்று, அபசகுனமாக கழுவிலேற்றலாகாது, என, அந்த தண்டனையை மல்லமராஜு, தள்ளிப் போடுகிறான்; அரசனை எதிர்கொண்டழைக்கிறான். எல்லா உபசரிப்புகளும் நடைபெற்றபின், உள்ளூர் கவிஞர் குப்புசாமி கவி பாட அழைக்கப் படுகிறார். அவரோ, மன்னனை பற்றி பாட மறுக்கிறார். சினம் கொண்ட மாமன்னன் காரணம் கேட்கிறான். அதற்குக் கவிஞர், மல்லமராஜுவின் கொடுமைகளை எங்கே சபையில் கூறினால், பின்னர் மன்னன் சென்ற பின் அவன் எல்லா மக்களையும் சித்ரவதை செய்வான் எனப் பயப்படுவதாக அறிவிக்கிரார்! மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன! சாட்சியாக அழுதபடி கை கட்டி எதிரே நிற்கும் விவநேசன், மற்றும் கைதியாய் சிறையில் வாடும் சுந்தர மேனியாள்!உண்மையறிந்த மன்னன், மறுநால், அந்த பெண்ணை விடுவித்து சபையில் வர ஏற்பாடு செய்கிறான். தைரியமாக தனை எதிர்நோக்கி நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் மன்னனுக்கு தலைநகரிலுள்ள தனது பெண்ணின் நினைவும், துணிவும் ஏனோ, மனதில் தோன்றிவிடுகின்றன! சுந்தரமேனியாளுக்கு தவறுக்குப் பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்களிக்கிறான். கொடுங்கோல் அழிய வேண்டுமென்றும், தனது காதல் கல்யாணமாக நிறைவேற வேண்டுமென்றும் கேட்கிறாள்; அதோடு நின்று விடாமல், மாமன்னன் நீதி என்றென்றும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு வினோத தண்டனையை மல்லமராஜுவுக்கு பெற்றுத்தருகிறாள், சுந்தரமேனியாள்! என்ன தவறு? என்ன தண்டனை?தவறான தீர்ப்பு சொன்னதற்காக, அந்த தண்டனையை, தீர்ப்பு சொன்னவனே அனுபவிக்க வேண்டும்! அதாவது, மல்லமராஜு, கழுவிலேற்றப்பட வேண்டும்!!தண்டனை நிறைவேறுகிறது; காதலும் நிறைவேறுகிறது! புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை! இது எப்படியிருக்கு!இது மாதிரியான தீர்ப்பு தந்தால், நிறைய ஆட்சியாளர்கள், நீதிபதிகள் இன்று சிறையில்தான் வாட வேண்டும், தூக்கு மேடையும் ஏற வேண்டும்! நடக்குமா? இல்லை இப்படி சட்டம் வந்தால், பொய் வழுக்கு போடும் காவலர்களும், வக்கீல்களும், வாய்தா வாங்கியே மக்களை ஏமாற்றும் வக்கீல்களும், காசுக்கு நீதியை விலை பேசும் நீதிபதிகளும் காணாமல் போவார்கள்! ஹ¥ம்ம்ம்ம். பெருமூச்சு விட்டு என்ன பலன்?

01 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்!

தலைப்பு: மரண தண்டனை தேவையா?
'கருத்து' இயக்கம் நடத்திய கருத்தரங்கத்துக்கு (பெட்டச்சி அரங்கம், நவம்பர் 29ஆம் தேதி,2006, மாலை 5.30 மணிக்கு) செல்லும் அழைப்பு வந்ததால், அங்கு கேட்ட சுவாரசியமான தகவல்களை இங்கே தருகிறேன். அரசியல் அல்லாத அமைப்பு எனும் முத்திரையோடு, இந்திய நிதி அமைச்சரின் மகனான கார்த்தி சிதம்பரமும், தற்போதைய தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழியும் ஆரம்பித்து நடத்தும் கருத்துச் சுதந்திர மேடைதான் கருத்து. இணையமும் உள்ளது ( www.karuthu.com).

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது.

கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஒரு வருட வளர்ப்பு (அவரது இல்லங்க, கருத்து அமைப்பின் வளர்ப்பு) பற்றியும், முற்றிலுமாக மரண தண்டனை என்பதே வேண்டாம், அது மனித நேயத்துக்கு ஒரு காலத்தின் பின்சரிவு எனப் பேசினார்.

அடுத்து பேசிய மனித உரிமை கழக தலைவரும், கிரிமினல் வக்கீலுமான சுரேஷ், மிகவும் நெகிழ்ச்சியான சில சம்பவங்களையும், எப்படி எந்த நீதிபதி வந்தால், எந்த வழக்கு எப்படி திசை மாற வாய்ப்புள்ளது என தெரிந்து கொண்டு, எப்படி வக்கீல்கள், இம்மாதிரியான கேஸ்களில் வாய்தா வாங்குவார்கள் என்பதையும் சொன்னார். அவற்றில் சில உதாரணங்கள்:

தப்பித் தவறி, மும்பைக்கு ஓடிப்போன பல படிக்கத்தெரியாத, ஏழைகளுள் ஒருவன் (இவை மிக முக்கியம்) ஆறுமுகம் எனும் குப்பையில் பைகள் சேர்க்கும் ஒரு தமிழ் பிழைப்பாளி. (பொறுக்கி என்றால் அர்த்தம் வேறுபடும் அபாயம் உள்ளது; எனவே, பிழைப்பாளி). அங்கு ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது, கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் போடப்பட்ட 10 வயது பெண்ணைப் பார்த்து அலறிவிடுகிறார். சமய சந்தர்ப்பம், பணம், படிப்பு அதோடு பாஷை புரியாமை (பாவம் தமிழ் தவிர வேறு பாஷை தெரியாமல் அங்கு பிழைக்கப் போயுள்ளார்), தவிர பத்திரிகைகள், குழந்தை, பெண்கள், பாலியல் பலாத்காரம் பற்றி கூவும் சங்கங்களின் கூச்சல்கள் ஆகியவை அவருக்கு எதிராக இருக்க, காவல் துறையும் , நீதிமன்றமும் தனது காகித வேலைகளை (கேஸ் கட்டுகள், துணைக்கு நாலு சாட்சி தகவல்கள் தொகுப்புகள், என பல விஷயங்கள்) முடித்து, தீர்ப்பு எழுதின. என்ன? ஆயுள் தண்டனை! 12 ஆண்டுகள் முடியும் தருவாயில், இப்போது, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, மும்பையில் ஒரு காவலதிகாரி தற்கொலை செய்துகொண்டார்; அதற்கும் ஆறுமுகம் ஆயுள் தண்டனைக்கும் என்ன சம்பந்தம்? உள்ளது!! ஜோடித்த தகவல்களால், இன்று நிரபராதி ஆறுமுகம் தண்டனையை அனுபவித்து வருகிறான். அதற்கு காரணமான அன்றைய அதிகாரி இன்றைய DCP. தானும் உடந்தை; இத்தனை ஆண்டு காலமாக இருந்த மன உளைச்சலே இந்த தற்கொலைக்குக் காரணம்" என எழுதி வைத்துள்ளார்! தண்டனையின் காலம் இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஆறுமுகம் விடுதலை ஆகிவிட்டார்! அப்போது ஆறுமுகம் தமிழில் அப்பாவியாகச் சொன்னது," என்ன நம்பி ஊருல ரெண்டு ஜெனம் இருந்துச்சு; அதுங்க இப்ப இருக்காங்களா, போயிட்டாங்களான்னு கூட தெரியலயே" என்று! மேலும் வழக்கறிஞர் சுரேஷ் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது. இதே குற்றத்துக்கு நீதிபதிக்கு இரண்டு முடிவுகள் உள்ளன. ஆயுள் தண்டனை தவிர, மரண தண்டனை! இந்த ஆறுமுகத்துக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தால்? காலமும், சமுதாயமும் நம்மைச் சாடாதா? ஒரு குறிப்பிட்ட தனி மனிதரான நீதிபதியின் அன்றைய நிலை, சிந்தனை, வாத ப்ரதிவாத சாதுர்யங்கள், பணம், போன்றவையே ஜெயிக்கும்; நிஜ சட்டமும், சமுதாயமுமல்ல; அத்தகைய ஆபத்தான சூழலில், மரண தண்டனை தேவையா? எனவே இந்த மரண தண்டனையையே, இந்திய சட்டத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என வாதிட்டார்.

5600 ஆண்டுகளுக்கு முன்னரே, மரண தண்டனையைப் பற்றி கூறும் மதங்களே, அதிலும் சில விதிவிலக்குகளை வைத்துள்ளது; இரண்டாம் உலகப்போரினால் 16000000 (160 லட்சம்) மக்கள் அநியாயமாக இறந்தார்கள் என்றும், 170 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல்கள் பரிமாறினார். எனவே, மனிதன் நிர்ணயம் செய்யும் எந்த கொலையும் (அது போராக இருந்தாலும் சரி, அல்லது நீதிபதியின் தீர்ப்பாயிருந்தாலும் சரி) மனித நேயம் எனும் சொல் முன், அநியாயமே! எனவே மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு முத்தாய்ப்பாக, ஆப்பிரிக்க இனத்தலைவர் நெல்சன் மாண்டேலா, 27 வருடங்கள் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகையில் சொன்ன செய்தியைச் சொன்னார்!!

"அவர் சொன்னால், நாடே கேட்கும் நிலையிலிருந்தது! தன்னை சிறையிலிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டதற்கு, "அவர் என்ன செய்தாரோ, அதையே நானும் செய்தால் என்ன பயன்? இனத்தின் மீது வெறுப்பு வந்து கருப்பர்களை அவர் வதைக்க வைத்த துவேஷம்தான் இன்று விசுவ ரூபம் எடுத்துள்ளது. அதை ஒழிக்க, நான் அவருள் உள்ள 'மனிதத்தை' அவர் உணரச் செய்தேனானால், அதுவே அவர் மீது நான் எடுக்கும் சரியான நடவடிக்கை!" என்றாராம்! மாண்டேலாவே, ஆப்பிரிக்க சட்டதிட்டங்கள் மாற்றி எழுதியமைக்கையில், மரண தண்டனையை நீக்க வித்திட்டாராம்!

பெண் கழகப்பேச்சாளாரும், வழக்கறிஞருமான அருள்மொழி பேசுகையில், ஒரு பூனைக்கதை சொன்னார்."என் வீட்டருகில் ஒரு ரவுடிப்பூனை. எல்லா பெண்பூனைகள், அவற்றுக்கு பிறக்கும் பெண்குட்டிகள், என பாகுபாடு பாறாமல், குட்டிகள் போடச்செய்தது! சினை பூனைகள் நடக்கக் கஷ்டப்படுகையில், பல குட்டிகள் இறந்து போகையில், எனக்கு அந்த ரவுடிப் பூனை மேல் ஏகக் கோபம்! நண்பரிடம் சொல்லி, எப்படியாவது அந்த ரவுடியை கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள்," என்று சொன்னேன். அவர் கேட்டது, " அது மிருக சுபாவம்; யாருடனும் உடலுறவு கொள்ளும், ஊர் சுற்றும்; ஆனால் மனிதராகிய நாம், நம்மை விட பலகீனமான குறைந்த அறிவுள்ள, திரும்ப சண்டை போட முடியாத ஒரு பூனையை ஆள் வைத்துக் கொல்வதா? பின்னர், மனிதர்கள் மேம்படுவது எப்படி?" என்றாராம்!!

எனவே, ஒரு பூனைக்கே மனித நேயம் காட்டும் நாம், மனிதருள் மனிதனைக்காண கூடாதா," என்றார். மற்றொரு உதாரணத்தையும் சொன்னார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் எனும் மாணவன், "நான் கடையிலிருந்து 9V உள்ள பாட்டரிகளை சொந்த உபயோகத்திற்காக வாங்கிச் சென்றேன். ராஜீவ் காந்தியைக் கொல்லும் அளவுக்கு அந்த பாட்டரிகளை உபயோகித்து குண்டு செய்ய முடியுமா என்று எனக்கு இன்றுவரை தெரியாது, " என்றாராம், இந்த மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள குற்றவாளி!

ஆனால், மக்களிடையே கேள்வி நேரம் வருகையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற விரும்பிய அருள்மொழி, தேவையில்லாமல், பெரியார் சொன்ன, பாம்பையும்,______ ஒரு சேரப் பார்த்தால், முதலில் _____ அடி," எனும் கருத்தை நிறுத்தி நிதானமாகச் சொன்னது, அந்த சில வகுப்பினருக்கு அக்காலகட்டத்தில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அவர்களைப் போல்தான் வேறு ச ில சிறுபான்மையினர். எனவே, சமுதாயத்தில் அவர்கள் ஒடுக்கப் படுவதால்தான், தீவிரவாதிகள் ஆகிறார்கள். அந்த சமுதாய சீரமைப்பு செய்யாத அரசியல், பண, சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் இன்றி, இனப் ப்ரச்னை வரும்;" என்றார். ஆனால், அவரது துர்பாக்கியம், அந்த கருத்தை முழுமையாக கேட்கும் முன்னரே, ________ இழிவு படுத்தி, ___ இந்துக்கள் என்று ஏகமாகக் கூறி, வக்கிரங்களை, ஜாதிச்சண்டையைப் பற்றி ஒரு நபர் கூச்சல் செய்ய அருள்மொழி காரணமாகிவிட்டார்!

பின்னர் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், தான் வக்கீல் இல்லை என்றாலும், தமக்கு தோன்றும் கருத்தை மக்கள் முன் வைப்பதாக பீடிகையோடு ஆரம்பித்தார்!முதலில், எதிர்கருத்துக்களை நேருக்கு நேர் பேசக்கூடிய வாய்ப்பை, கேட்கும் வாய்ப்பை இன்றைய அரசியல் சூழலில் (பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பட்டிமன்றங்கள் தவிர) மக்கள் மறந்துவிட்ட நிலையில், 'கருத்து' அதற்கான களம் அமைத்ததைப் பாராட்டினார்.

" நாய்க்கும், பூனைக்கும் கருணை காட்டும் சமுதாயம், மனிதன் என்றால் இனம், மொழி, சாதி எனப் பிரித்துப்பார்ப்பது ஏன்? அவற்றுக்கு நீதி தந்தது நமக்கு புதிதல்ல; முல்லைக்குத்தேரும், புறாவுக்குப் பதிலாக பருந்துக்கு தனது தொடையையும், இறந்த கன்றுக்கு மாற்றாக, நீதி கேட்டு வந்த பசுவுக்கு முன் தன் மகனையே தேர்காலில் கொல்லச் செய்த மன்னனும், தான் தவறு செய்தோம் என்று கேட்டதும், உயிர் நீத்த பாண்டியனையும் கொண்ட பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு!"எனத் தொடங்கினார்...

இப்போது திடீரென மரண தண்டனை பற்றிய விவாதங்கள் நாடெங்கும் நடக்கக் காரணம்? அப்சல் குரு! ஏன்? யார் அப்சல்? நாடாளுமன்றத்துக்கு குண்டு வைக்க திட்டமிட்டு பிடி பட்டு, இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ளவன்! சிறுபான்மை வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, அரசியல் கட்சிகள் சில, ஆதாய நோக்கில் அவனைத் தூக்கிலிடுவது தவறு என அரைகூவல் விடுகின்றன!

ஆனால், அவன் அதைப் பற்றி கவலை பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தனியார் தொலைக் காட்சியில், அவனது தாய் பேட்டி தருகிறார்; அவனது கண்களை துடைத்து விடுகிறார், ஆனால் அந்தக் கண்களில் கண்ணீரே வரவில்லை! அவன் முகத்திலும் கவலை தெரியவேயில்லை! பின்னர், எதற்காக இந்த வேஷம்? கோஷம்? ஏன்? அன்று பாராளுமன்றத்தில் அவனது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டபோது உயிர் நீத்த 6 ராணுவ வீரர்களுக்கு மட்டும் தாயாரோ, மனைவியோ இல்லை மக்களோ இல்லையா? அவர்களை ஏன் இந்த தொலைக்காட்சிகள் மறந்து போயின? அவர்கள் படும் துயரம் என்னவோ? நாட்டுக்காக அவர்களது இல்லத்தலைவர் உயிர் நீத்து, பல எம்.பி.க்களின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான பரிசு- அந்த கயவணை கருணையுள்ளத்தோடு, தூக்கிலிருந்து தடுப்பதா? எம்பி.க்கள் எனது கட்சி, எதிர் கட்சி என்பது முக்கியமல்ல. அவர்கள் நம் நாட்டுத் தலைவர்கள். அவர்களை மட்டும் குண்டு வைத்துத் தகர்த்திருந்தால், உலகமே, நமது பாதுகாப்பு அமைச்சகத்தைப் பார்த்து எள்ளி நகைத்திருக்குமே?
மரண தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். ஆனால், போராட்டம், தனி விடுதலை, இயக்கம் என்ற பெயரில், நாம் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அழைக்கும் 'கோழைகள்' பஸ் ஸ்டாண்டிலும், ரயில்களிலும், பாதயாத்திரை போகும் யாத்ரீகர் மேலும் வைத்த குண்டுகளால், தாக்குதல்களால், நமது முன்னாள் பிரதமர் உட்பட, 26 லட்சம் அப்பாவி மக்களை நமது நாடு இழக்கவில்லையா? அவர்களாது உயிர் முக்கியமில்லையா?

அப்சல் குரு தூக்கிலிடப்படவேண்டுமா, இல்லையா எனக்கேட்டு 'இந்தியா டுடே'வும் MARGம் நடத்திய வாக்கெடுப்பில், 80% மக்கள் தூக்கிலிடுவது சரியே எனக் கூறியுள்ளனர்.

அப்படியும், அரசாங்கமும், நீதிமன்றமும் தவறான தீர்ப்பளித்தாலும், அதனை மறு பரிசீலனை செய்ய மாநில ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் உரிமையை இந்த சட்டம் அனுமதித்துள்ளது. எனவே, பயங்கரவாதத்தை நிறுத்த மரண தண்டனை போன்றவை அவசியமே", எனப் பேசினார்.

அது தவிர, வீர சாவர்கர் பற்றி, அதிகம் பலருக்குத் தெரியாது என்று வருத்தம் கொண்டார். லண்டனில் நமது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், வெள்ளையனை சுட்டுக் கொன்றதற்கு (பெயரை நான் குறித்துக் கொள்ளவில்லை, மன்னியுங்கள்) அங்கு வசித்த இந்தியர்களே எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் போட்டனராம்! ஆங்கிலத்தில் unanimously oppose என எழுதவே, அங்கேயே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே மனிதர் வீர சாவர்கர். உடனே, அருகிலிருந்த எதிர்ப்பாளர்கள், அவரை தாக்க முற்படவே, சாவர்கருக்கு துணையாக நின்ற வா.வே.சு. ஐயர், தனது துப்பாக்கியை எடுத்து, அவர்களை சுட முயன்றாராம். அதற்கு, சாவர்கர், "விட்டுவிடு; நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தோட்டாவும், ஒரு வெள்ளையனை அழிக்கவே! நமது மக்களையே சுடுவதற்கு அல்ல!" என்றாராம்! ஆனால், அன்றைய அரசாங்கம் அவருக்கு தந்த பெயர், "தீவிரவாதி" ! தன்னை கொல்ல முயன்றவனுக்கே, மன்னிப்பு அளிக்குமாறு காந்தி அடிகள் சொன்னதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா? இல்லையே? நமது தலைவர் ஒருவரைக் கொன்றார் என்ற காரணத்துக்காகவே, கோட்ஸே தூக்கிலிடப்படவில்லையா? காரணம் - நமது தேசத்தின் பாதுகாப்பு, தலைவர்களின் பாதுகாப்பு. அதேபோல் தான் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்ற காரணத்தினால், சில சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், காரணம் அவர் நமது நாட்டின் தலைவர்!

ராஜீவ் வழக்கிலும் நாம் அவரைக் கொன்றவருக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாலும் தகும் என ஏன் நினைக்கிறோம்? கட்சிப்பாகுபாடின்றி நான் பார்க்கிறேன். அவர் நமது நாட்டுத் தலைவர்! அவருக்கு நேர்ந்தது, வேறு எவருக்கும் நேரக் கூடாது என்பதற்கு, இந்த மரண தண்டனை ஒரு பாடமாக அமையட்டும்."

"சரி, கோட்ஸேவுக்கு மன்னிப்புத் தருமாறு சொன்ன காந்தி அடிகள், பகத்சிங்குக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுதருவதற்கு மறுத்தது ஏன்? அவர் இம்சை வழியில் போனதால் தான், மரண தண்டனையை மாற்றக் குரல் கொடுக்கவில்லை என்றார் காந்திஜி. அப்படியானால், தனக்கு சாதகமான கருத்தை சொல்பவருக்கு ஒரு நியாயம், தனது விருப்புகளுக்கு எதிராக இருந்ததாலேயே இன்னொரு நியாயம் என ஒருவர் எண்ணலாமா? ஆனால், இன்று நாடு பகத்சிங்கை தியாகியாக போற்றுகிறது! காந்திஜி செய்தது அப்படியென்றால் தப்பா? அவர் பகத்சிங்கை உயிரோடு இருக்கச் செய்திருக்கலாமே?
எனவே, நீதி என்பது இருந்தால், மரண தண்டனை இருக்கட்டும்; இல்லையென்றால், ஒரேடியாக எடுத்துவிடு. ஒருவனுக்கு ஒரு நியாயம், மற்றவனுக்கு அநியாயம் - இப்படி அதை உபயோகிக்காதே! எனினும், சுரேஷ் சொல்வது போல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், தவறான ஒரு தண்டனை தரப்படுமேயானால், அவர் அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. மன்னிக்கும் அதிகாரம், சூழ்நிலைகளுக்கேற்ப, ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ளது."
"தமிழகத்தில் சில வருடங்களுக்கு ஒரு ஊரில் நடந்த சம்பவத்தை கணேசன் எடுத்துக் காட்டினார். இரவில் வங்கியைக் கொள்ளையடிக்க வந்தவர்கள், பிடிபட்டதும், அவர்களை அந்த ஊராரே, கல்லால் அடித்திக் கொன்றுவிட்டனர்! அந்த ஊரார் செய்தது கொலை குற்றமா? அரசாங்கமே, அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அதிக சலுகைகளையும் அறிவித்ததே? எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்தே, குற்றம் ஆராயப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டுமே, தவிர, தண்டனையே, வேண்டாம் என்று சொல்வது, குற்றவாளிகளை ஊக்குவிப்பது போலாகிவிடும்."

"காவலர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறோம்; நல்ல காவலர்களையும் நான் அறிவேன். சட்டப்படி குற்றம் நிரூபிக்க அவர் செய்ய வேண்டிய காகித சமாசாரங்கள் எல்லாம் தாண்டி அவன் தண்டிக்கப்படுமுன்பே, அரசியல் குறிக்கீடும், பணமும் அந்த தண்டனை வராமலே செய்துவிடும். எனவே, அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம், ஓரத்தில் ***க்கு ஒதுங்கச் சொல்லி, தப்பிக்கப் பார்த்தான் என்று 'என்கவுன்டர்' கொலையாகவே அதை முடித்து விடுகிறார்கள்! (சாமி பட க்ளைமாக்ஸ் நமக்குத் தெரியாதா? நாம் அதை வரவேற்கவில்லையா?)" என்று தன் பக்க நியாங்களைக் கூறி வாதிட்டார்.

முடிவுரை படிக்க வந்த கனிமொழி, " அன்றைய தீவிரவாதி இன்றைய தேசத்தலைவர்; அவர் அன்று தூக்கிலிடப்பட்டிருந்தால்? ஒரு தலைவரை நான் இழந்திருப்போம்! (இழந்தாயிற்றே? பகத்சிங்கை? வேறு யாரைக் குறிப்பிட்டார் என்பதை அவரே சொல்லட்டும்???) உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை நாம் அறவே நீக்கவேண்டும். 'ஐயன்' வள்ளுவர் குறிப்பிட்டதாக, இல. கணேசன் ஒரு குறளைக் குறிப்பிட்டார். அதன் அர்த்தம்: நெற்பயிர்கள் நன்கு வளர வேண்டுமானால், களைகளை எடுக்கவேண்டும். அதுபோல்தான் அரசனும் முடிவு செய்யவேண்டும். அதற்கு அர்த்தம், கொல்வது அல்ல, நீக்குவது மட்டுமே!" என்றார். (அப்படீன்னா, என்ன, நாடு கடத்தச் சொல்றீங்களா? நமக்கே எதிரிங்கறப்ப, அடுத்தவன் எப்படி அவனை உள்ளே சேர்ப்பான்? நீக்குவதற்கு வெறென்ன அர்த்தம் இருக்கமுடியும்?)
இப்படியே போனால், எல்லா ஊர்களிலும் மக்களே கல்லால் அடிப்பது போன்ற தீர்ப்பை தாங்களே எடுக்கும் நிர்பந்தம் வந்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்," என எச்சரித்துவிட்டு அமர்ந்தார்.

பின்னர் வந்த பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், முதலில் பேசியவர், மிக அருமையான ஒரு கண்ணோட்டத்தைத் தந்தார்.!
ஓரிரு தவறான தீர்ப்புகளால், அந்த தண்டனையையே ரத்து செய் (மரண தண்டனை), அப்படியே பார்த்தால், நல்ல நீதிகிடைக்கவில்லையா, நீதிமன்றத்தையே மூடிவிடு, காவலர்கள் கயவர்களாகிறார்களா, காவல் நிலையங்களை மூடிவிடு; மந்திரிகள் சரியில்லையா, சட்ட சபையையும், நாடாளுமன்றத்தையே மூடிவிடு!" என்றா நாம் முடிவெடுக்கிறோம்? எனவே, இந்த மாதிரியான தண்டனைகள் இருந்தால்தான், கொஞ்சமேனும் நாட்டில் தவறு செய்பவர்க்கு பயம் இருக்கும் என்றார்!

"சரி, தீர்ப்பை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றாலும், பணம் படைத்தவர்கள், காவல் நிலையங்களிலேயே, மீட்டிங் போடுகிறார்கள்; தொண்டர், குண்டர் வைத்துக்கொள்கிறார்கள்; மொபைல், ஏ.ஸி. என வைத்துக் கொள்கிறார்கள்; ஏன் சில சிறைச் சாலையில், குடும்பமே நடத்தியுள்ளார்கள்! எனவே, மரண தண்டனை எனும் ஒன்று தேவையே," என்றார்.

முடிவில், பார்வையாளர்கள் என்ற போர்வையில், சில சந்தர்ப்பவாதிகளும், சாதிச்சாயம் பூசி அங்கு வந்தவர்களும், அருள்மொழி குடுத்த குறிப்பைக் கொண்டு, பிற இனத்தவரை குறிப்பிட்டு பேசி, கீழ்தரமாக அடித்துக் கொள்ளத் துவங்கியதும், சரி, இனி இங்கே கருத்துப் பரிமாற்றம் தவிர வேறு சில பரிமாற்றங்களும் ஆகலாம் என யூகித்து நாம் அந்த இடத்தை விட்டு "எஸ்கேப்' ஆனோம்!

எனக்கு தோன்றிய சில அடிப்படை சந்தேகங்கள்தான் என்போன்ற சாதாரண குடிமகனுக்கு வரும்:

170 நாடுகளில் இல்லை என்று, இங்கும் எடுத்துவிடவேண்டும் என்று சுரேஷ் சொன்னார். அவர்கள் சூழ்நிலை பண்பாடு, வளர்ப்பு வேறு. அங்கே, குழந்தைகள் கைகளில் துப்பாக்கியால் சுட்ட கதை எத்தனை படித்திருக்கிறோம்? ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்வார்கள்; குடும்பம் எனும் அமைப்பே பல நாடுகளில் குறைந்து வருகிறது. எனவே, நமது நாட்டின் சூழ்நிலைக்கு எது சரியோ அதைத்தான் நாம் சட்டமாக வைக்க வேண்டும்.
பயங்கரவாதி மரணதண்டனையைப் பற்றி பயப்படுவதில்லை. அவன் மரணம் வரும் என எதிர்நோக்கிதானே, மனித குண்டாகவும், வெடி வைக்கும் ஆளாகவும் மாறுகிறான்? அவனே கவலைபடாமல்,பல்லாயிரம் அப்பாவி மக்களை கொல்ல முடிவு செய்யும் போது, பிடிபட்டால் அவனை நாம் கொல்லக் கூடாதா? நாய் வளர்ப்பு மிருகம்தான். அதன் மேல் நமக்கு கருணை வேண்டும்தான். ஆனால், வெறி பிடித்த நாயை அரசாங்கமே சுட்டுக் கொன்றுவிடுகிறதே? யானை அழகுதான்; ஆனால் மதம் பிடித்த யானை? அங்குசத்துக்கு அடங்காது போனால், மயக்க ஊசியை செலுத்தி அடக்கப் பார்ப்பார்கள்; இல்லையேல் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மதம் பிடித்த (2 பொருளில்) மனிதனும், மிருகம்தானே?

இதை எண்ணும் நெஞ்சம்தான், மற்றொரு வினாவையும் எழுப்புகிறது!

"பல குற்றவாளிகள் விடுபடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது" என்கிறது சட்டம்.
எனவே இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து சட்டதிட்டங்களை மாற்றி எழுத வேண்டியது நமது சட்ட வல்லுநர்களே! மாற்றும் கமிட்டியே இதுவரை 4 முறை மாற்றப்பட்டு, அரசியல் காரணங்களால் சட்டதிட்டம் மாற்றம் செய்யப்படவில்லையாம்! மக்கள விழித்துக் கொள்ளுங்கள்! தவறான தகவலால் சிறை செல்லும் ஒரு அப்பாவி, சரியில்லாத ஒரு தண்டனை முறையால் தூக்கிலிடப்படலாமா? அரசாங்கத்தை விழித்தெழச் செய்ய மக்கள் முதலில் விழித்தெழுங்கள்!

22 November 2006

அறிவியல்- வி.வ.போ- 3

வி.வ.போ - "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி" - நன்றி கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் பாட்டின் ஆரம்ப வரிகள்!)

சென்னை வலை பதிவாளர் சந்திப்புல இராம.கி ஐயா, "அவங்கவுங்க சுமூகத்துக்கும், வருங்கால சந்ததிக்கும் உருப்படியா ஏதும் எழுத மாட்டீங்களா? காதலும், கவிதையும், கட்டுரையும் எழுத சினிமா, அரசியல்னு அடிதடி செய்ய நிறைய பேர் வருவாங்க. நாமளும் அதைச் செய்யணுமா"னு கேட்டது நியாயமாத்தான் எனக்கு பட்டது.

முந்தி, ஆமணக்குலேர்ந்து எரிபொருள் எண்ணை எடுக்குறதப் பத்தி எழுதுனேன்.
அடுத்து ப்ளாஸ்டிக் எதுக்கு அவசியம்னும் எழுதுனேன்.

ராம.கி ஐயா சொன்ன மாதிரி பின்னூட்டங்கள் அதிகம் இதுக்கெல்லாம் வராதுன்னு தெரிஞ்சும் ஏன் எழுதுறோம்? எப்படியும் செய்திகளால், இன்னிக்கில்லைனாலும், என்னிக்காச்சும் ஒரு கிராமம், நம் தமிழன், நண்பர், வாசிப்பவர், பயன் பெற்றால், என் ஜென்மம் கடைத்தேறும்!!

இந்த கட்டுரையிலயும், எரிபொருள் எண்ணை தரும் ஒரு காயைப் பத்தி பார்ப்போம்!
வழக்கமா, நம்ம ஊர்ல பஸ் ஸ்டாண்டுல பெரிசா நிக்கிற 'புங்க மரம்" எரிபொருள் எண்ணை எடுக்க பயன்படுதுன்னா நீங்க நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும், இந்த உண்மைக் கதைகளைப் படிச்சா!

பெங்களூர்ல இருக்குற மாபெரும் விஞ்ஞான ஆய்வுக் கழகம், IISc. (Indian Institute of Science)
இதுல ஆராய்ச்சி செய்யற பேராசிரியர், உடுப்பி ஸ்ரீனிவாசான்னு பேரு. காடுகளில் எப்படி விஞ்ஞானத்த வளர்க்கலாம்னு போனவருக்கு, மகாராஷ்டிர ஆந்திரா பார்டர்ல இருக்குற ஒரு கிராமத்துல, பெரிய விடிவு கெடச்சது. என்ன?

"ஏன்யா, இன்க கரண்ட் வரணும்னா, என்ன தர முடியும்? தண்ணி ஓடை, இல்ல எதாச்சும் கனிமங்கள் இப்படி ஏதாவது?"

"சோத்துக்கே லாட்டரி. நாங்க ஆதிவாசிங்க. வெளி உலகம் என்னன்னு எங்களுக்குத் தெரியாது. ராத்திரி புங்க மரக் காயி ஏண்ணைல, காடா விளக்கு எரியும். அதான் இங்க காடு முழுச்சும் நிறைய கிடைக்கும். வேற ஒண்ணும் இல்ல," என்றனர் சலிப்பாக.

'காடா வெளிக்கு இந்த எண்ணையில எரிஞ்சா, கட்டாயம், இது எரிபொருளா இருக்கும்' என்று சந்தோஷமாக பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் நினச்சது சரி! அந்த எரிபொருளால, ஒரு ட்ராக்டரே ஓடுச்சு!

சலிப்பைக் களிப்பாக மாற்றியது, புரொபஸர் உடுப்பி ஸ்ரீனிவாசா, அவரது உதவியாளர்கள், நயீம் மற்றும் குழுவினரின் அடாத முயற்சியே! அந்த ஆதிவாசிங்கள்ல, கொஞ்ச பேரை, கர்நாடகாவில இருக்குற ககெனஹல்லி எனும் ஊருக்கு அழைச்சுகிட்டு போயி, அவங்க ஏற்பாடு செஞ்ச "மாதிரி ப்ராஜக்டை"க் காண்பிச்சாரு.

அடுத்த தடவை, உலக வங்கி அதிகாரி இம்மானுவேல் டிசில்வா மற்றும் அங்கிருந்த ஆதிவாசிகள் ஒருங்கிணப்பு வளர்ப்புத் திட்ட செயலாளர் நவீன் மிட்டல் (இவரப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகணும்! நவீன், இந்தியாவின் உயரிய கல்விக்கூடங்களில் ஒன்றான I.I.T யில் தங்க மெடல் வாங்கியவர்! வாங்கின கையோடு அமெரிக்காவுக்கு கம்பி நீட்டாம, நம்ம மக்களுக்கு என்ன செய்யணும்னு, யோசிச்சு, I.A.S படிச்சு, கலெக்டராகி, ஆதிவாசிங்க நலத் திட்டசெயலாளரா விரும்பி வந்தவரு!) ஆகியோரோட, உட்னூர்ங்கிற இடம் வரையிலும் வண்டில வந்து, அதுக்கப்புறம், நயீம் சொல்ற மாதிரி," 30 கிலோமீட்டர் ரோடுங்கிற பேருல, போட்டிருக்கிற கூழாங்கல்லு பாதைதான் எங்களுக்கு மேலே போறதுக்கு வழி! (அட, ஆதிவாசிங்க இருக்குற சால்பார்ட்டி கிராமத்துக்கு!). முடிவேயில்லாம போயிகிட்டிருந்துச்சு.."
அப்படி போனவங்க, மண்டை காஞ்சு போயி, ஒரு வழியா மேல்மட்டத்தை அடைஞ்சு, தலைய நிமிர்ந்தா, அவங்களுக்கு, ஒரு அதிசயம் காத்திருந்துச்சு! ஆமாம்! எங்க பார்த்தாலும், புங்க மரக் கன்னுங்களை நட்டுவெச்சு, வளர்த்துருந்தாங்க அந்த ஆதிவாசிங்க! காத்துல ஆடுற மரக்கன்னுங்களைப் பார்த்து புரபஸருக்கு, சந்தோஷம் தலை கால் புரியல!

2001ல, அப்படியே வளார்ந்த மரங்களோட காய்களை ஆட்டி எண்ணை எடுத்து, ஒரு புது 7.5 Kva கிரிலோஸ்கர் மோட்டர்ல விட்டு, அங்கிருக்கிற குடிசைங்களுக்கெல்லாம் வயரிங் பண்ணி, பல்பு மாட்டி,(சுமார் 5,00,000 செலவு) விளக்கு எறியச் செய்தார்,புரபஸர் ஸ்ரீநிவாசா! அந்த செய்தி, காட்டுத் தீ போல பரவி, இப்ப, கிட்டத்தட்ட ஆந்திராவுல சித்தூர், விஜயநகரம், விசாகபட்டிணம், ப்ரகாசம் ஜில்லா, ஸ்ரீகாகுளம் போன்ற எல்லா இடங்களிலுள்ள கிராமங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள பிஜாபூர், பெல்லாரி, சித்திரதுர்கா மாவட்டங்கள்ல இருக்கிற கிராமங்கள் தவிர, மகாராஷ்டிரத்திலுள்ள இந்த சால்பார்டி கிராமம் தவிர, ஏனைய ஆதிவாசிகள் குடியிருக்கும் மலைகள்லயும், அக்கம்பக்கத்து ஊர்கள்லயும் வேகமா இந்த திட்டம் பரவி,புரட்சி பண்ணிகிட்டிருக்கு! கர்நாடகாவுல ஒரு கிராமத்துக்கு 'பவர்குடா' ன்னே பேரு வெச்சுட்டாங்கன்னா, பார்த்துக்குங்க! (தமிழ்ல ஆரம்பிச்சா, கரண்ட்பட்டின்னு வெச்சா எப்படியிருக்கும்?)

இந்த திட்டத்துல செலவு ரொம்ப கம்மி. மாசம் ஒரு வீட்டுக்கு அஞ்சு ரூபாயும், 300 கிலோ புங்கமரக்காயும் குடுத்துடணும்! அவ்வளாவுதான், சாயந்திரம் 6 மணிலேர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கரண்ட் கிடைக்கும்! இதனால பலருக்கு புது வேலைவாய்ப்புகள், படிப்பு கிடைச்சிருக்கு!

நிறைய பேரு, எண்ணை ஆட்டற ஆலை வெச்சு காசு சம்பாதிக்கிறாங்க. நிறைய ஆதிவாசி இளைஞர்கள் அந்த ஜெனரேட்டர், பம்ப் ரிப்பேர் செய்ய கத்துகிட்டாங்க. சிலர் அந்த புங்க மரக்காய் எண்ணை எடுத்த புண்ணாக்க இயற்கை உரமா பொடி பண்ணி காய வெச்சு, வியாபாரம் பண்றாங்க; பசங்க நிறைய பேரு ராத்திரி படிச்சு காலேஜுகள்ல காலடி எடுத்து வெச்சுருக்காங்க!

இன்னும் சில தொழிற்சாலைகள், இந்த எண்ணைய வாங்கி, அவங்களோட டீசல் பம்ப் செட்டுக்கு உபயோகிச்சுக்கறாங்க!

ரயில்வே நிர்வாகம், எங்கல்லாம் நிலங்கள் இருக்கோ, அங்கல்லாம் ஜாத்ரோபாவும்,புங்க மரங்களும் நட்டு வெச்சு, அவுங்களும் டீசல் இஞ்சின்ல இந்த இயற்கை எண்ணைய உபயோகப்படுத்த ஆரம்பிச்சுருக்காங்க!

தரிசு நில விவசாயிங்க, ஏனைய பலர் இந்த பயிர்களை (ஜாத்ரோபா, புங்க மரம்) ஊடு பயிராவோ, வயல் கரைகளிலோ நட்டு, எண்ணை வித்துக்களை வித்து [பார்றா, சிலேடையா வருது :-) ] காசு பார்க்கலாம்.

நாட்ல இருக்குற எரிபொருள் எண்ணை பற்றாக்குறையும் குறையும், விவசாயிங்களுக்கு கரண்டும் குறைஞ்ச செலவுல கிடைக்கும், நாலு காசும் புழங்கும். என்ன விஞ்ஞானத்தால் பலன் அடைஞ்ச இந்த நிஜக்கதையும் உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்குதா?மேல தகவல் தெரிஞ்சுக்கணும்னா, தொடர்பு கொள்ள:

புரொ. உடுப்பி ஸ்ரீநிவாசா,Dept.of Mechanical EnggIndian Institute of ScienceBangalore 560012மின்னஞ்சல்: udipi@mecheng.iisc.ernet.in மற்றும் திரு.A.R.Nayeem [nayeem@mecheng.iisc.ernet.in]தொலைபேசி: 91-80-23566617,23566618,51281736மொபைல்: 9342129295

===========================================================================
more positive stories from www.goodnewsindia.com

17 November 2006

பீட்டா போட்டா, பூட்ட நீ!

பீடா போட்டா வாய் செவக்கும்கிற மாதிரி, ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறினால், மூஞ்சி சிவக்கும். தெரியாத்தனமா மறிட்டேன். கடல் கணேசன் அப்பவே வார்ன் பண்ணாரு. கடலே சொல்லி கேக்காம, கவுந்துட்டேன்! :-(எப்படி html எடிட் செஞ்சாலும், பார்டர் போலிஸ் மாதிரி, "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே உள்ளது, சின்ன அயிட்டமா ஒண்ணை பதிவிட்டு atom feed ஆட்டம் காணுதா இல்லையான்னு பார்க்கச் சொல்லும்! சரி 'test' அப்படீன்னு ஒரே ஒரு வார்த்தை எழுதி அதை பதிவிட்டேன். மீண்டும் "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே ......." என்று பழைய பாட்டையே படித்தது! என் சிற்றறிவுக்கு பட்டபடி, maraboorjc ப்ளாக்கிலிருந்து நீக்கி, அவற்றை எனது மற்ற்றொரு ப்ளாக்கான "சிரிச்சுவை" யில் போட்டு வைத்திருக்கிறேன். முன்பு பின்னூட்டம் தந்த நண்பர்கள் அரைத்த மாவையே அரைக்கிறான் என்று ஏசாமல், மீண்டும் பின்னூட்டுங்கள்! பின்னி பெடலெடுக்காதீர்கள்! பீட்டா ப்ரச்னை சரியானால், தமிழன்னைக்கு (அன்னைக்) காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டுள்ளேன்!

15 November 2006

இலவசம் தேன்கூடு போட்டிக்கு

தவறிய நேரம், தவிச்ச படிப்பு சோத்துக்கு லாட்டரி இலவசம்
ராத்திரி முழிப்பு ஆத்தா பழிப்பு கண்களில் வளையங்கள் இலவசம்
குப்புற படுத்து குத்துப் படம் பார்த்தா, பெண்டுவலி முதுகில் இலவசம்
கணக்கில்லாம புகை பிடிச்சா காசம், கான்சர் இலவசம்
வீட்டை மறந்தா மத்தவ கிட்ட எய்ட்ஸ் நோயும் இலவசம்
வாயில வார்த்தை தடிச்சு இருந்தா தர்ம அடிகளும் இலவசம்
எதுக்கும் அடிதடி வம்புன்னு போனா, அடுத்தவன் பகையும் இலவசம்
பொங்கப் பண்டிகை தீபாவளின்னு வேட்டிச் சட்டை இலவசம்
கட்சிக்காரன் முட்டாளாக்க டி.வி. கொடுத்தான் இலவசம்,
பாவி மனுஷா, மேலும் உன்னை சோம்பச் செய்யும் இலவசம்
எல்லாஞ் சரிதான் ஏளனம் செஞ்சா ஏமாற்றம் என்றும் இலவசம்!

இந்த இலவசங்கள் தேவையா?

எடுத்ததை நடத்தி, தடுப்பதை விடுத்தா வெற்றிப் பாதை இலவசம்
வாழற வாழ்க்கை ரசிச்சு வாழ்ந்தா நீங்கா மகிழ்ச்சி இலவசம்!

14 November 2006

குழந்தைகள் தினம்???


இன்று பேச்சளவில் குழந்தைகள் தினம் என்று கொண்டாடினாலும், fபிரோசாபாத்திலும், சிவகாசியிலும் அல்லல்படும் ஏராளமான குழந்தைகளுக்காக வருந்தி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்.

ஆனால், Fபிரோசாபாத்தில் 4 வயதுமுதலே, பள்ளிப் பை தூக்கும் முன்னரே, கண்ணாடிக் கைவளையல்களுக்கு மெருகேற்ற, ஜிமிக்கி ஒட்ட, உருக்கு கண்ணாடியை அச்சில் சுற்றி வட்டமாய் ஒட்ட, இப்படி ஏராளமான வளையல்கள் செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் குழந்தைகளையே ஈடுபடுத்துகின்றனர், அங்கே வளையல் தயாரிப்பாளர்கள்! காரணம்? ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள், கவனித்து செய்வார்கள், அதிக ஊதியம் கேட்கமாட்டார்கள்! எப்படி? அவர்கள் குடும்பத்தின் வருமை காரணமாக, பெற்றோர்களும் பிள்ளைகளை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்! சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான்! பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது! அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய்! அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில்! அந்த புகையை அருகிலிருந்து சுவாசிப்பதனால், அவர்களுக்கு, ஆஸ்மா, டீ.பி. மற்றும் கண் பார்வை மங்கலாகுதல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது!

இனியேனும், வளைகாப்பு, சீமந்தம், நவராத்திரி போன்ற விசேடங்களுக்கு வளையல்கள் வாங்கும் பெண்கள், அந்தப் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களால் ஆனவை இல்லை என உறுதி படுத்திக் கொண்டு வாங்குவதே உத்தமம். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போல், "குழந்தைகளை ஈடுபடுத்தப்பட்ட பொருள் இல்லை" என்பதற்கு ஏதேனும் ஒரு முத்திரை அரசே கொண்டுவரலாம்.

அதேபோல் கல்யாணங்களிலும், ஊர்வலங்களிலும், விசேட நாட்களிலும் வெடி, மத்தாப்பு கொழுத்தும் போது, அங்கே ஒரு பிஞ்சுத் தளிரும் கந்தகத்தில் எரிந்து வாடுவதை மனதில் கொண்டு, அம்மாதிரி பொருட்களை வாங்கி காசை கரியாக்குவதை விட, அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களுக்குச் சென்று, நம் பிள்ளைகள் மூலமே அக்குழந்தைகளுக்கும் எதேனும், புத்தாடை, இனிப்புகள் வழங்குவதை ஒரு நிரந்தரச் சடங்காகக் கொள்ளலாம்.

தகவல், புகைப்படம் ஆதாரம்: நன்றி. IBN news.

12 November 2006

நிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்!

படித்ததில் பிடித்தது - பிடித்தது என்றால் படிக்கச் சுவையாக இருந்ததென சொல்லவில்லை. என்னையே, 'பிடித்தது'! இந்த செய்தி, என்னை, என்னுள், ஒரு பொறியைப் பற்றி வைத்தது. நிஜ இந்தியராகிய எவரும் உதாசீனப்படுத்த முடியாத கருத்துக்களை ஹைதராபாத்தில் பேசுகையில் வெளியிட்டார், ஒரு மூத்த குடிமகன்,தலைவர்! பலர் படித்திருக்கலாம், பலருக்கு இதை முன்மொழிந்திருக்கலாம். அந்த தலைவர் கூறிவது போல் மின்னஞ்சல் அடையும் 100 பேரைவிட உரலி, வலைச் செய்தி மூலம் அதிகம் பேருக்கு செய்தி சொல்லுவோம் எனும் ஆசையில் இதை வலையில் பின்னுகிறேன்:-

=====================================================================================

இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?
நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?
எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?
பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.
டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு பெற்ற இடங்களாக மாற்றியுள்ளார்! இப்படி எத்தனையோ சாதனைகளுக்கு பதிலாக நமது தகவல் தொடர்புத் துறையினர், எப்போதும் சோக செய்திகள், தோல்விகள், பேரிழப்புகளை வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்!

நான் ஒரு நாள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் காலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஊரெங்கும் குண்டு மழை, அழுகைகள், போர் சங்குச் சப்தம். ஆனால், அப்பத்திரிகையின் முதல் பக்கத்திலோ, ஒரு யூதர் அங்கே பாலைவனத்தில், ஐந்தே வருடங்களில், சொட்டு நீர்ப்பாசனம் செய்து, பழ மரங்கள் நட்டு, சோலைவனமாக மாற்றிய கதைதான் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது! காலை எழுந்து முதன்முதலாக செய்தித்தாளைப் படிக்கும் யாரையும் அம்மாதிரியான சாதனையைச் செய்யத் தூண்டும் செய்தி அது! மற்ற குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!

ஆனால், இங்கு நாம் மரணம், நோய்கள், நீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என செய்திகளைப் பற்றியே அதிகம் காண்கிறோம்.

ஏன் இத்தனை பின்தங்கிய சிந்தனைகள், தவறான பார்வைகள்?

மற்றொரு கேள்வி. நாம் ஏன் வெளிநாடு, வெளிநாட்டுப்பொருட்கள் மேல் இத்தனை மோகம் கொள்கிறோம்?
நமக்கு வெளிநாட்டு டி.வி, வெளிநாட்டு சட்டை, வெளிநாட்டு தொழில்நுட்பம் வேண்டும் என ஏங்குகிறோம். இறக்குமதிப் பொருட்களில் அப்படி என்ன மோகம்?

சுயநம்பிக்கையும், சுயசார்புமே நமக்கு சுய மரியாதையைத் தரும் எனும் எண்ணத்தை நாம் ஏன் மறந்துவிட்டோம்?

நான் ஹைதராபாத்தில் சொற்பொழிவு ஆற்றியவுடன் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுமியிடம் கேட்டேன்."உன் வாழ்கை குறிக்கோள் என்ன?" என்று. அவள்" முன்னேறிய இந்தியாவில் வாழ வேண்டும்," என்றாள்!

அவளுக்காக, அவளைப்போன்ற வருங்கால சந்ததியருக்காக, 'முன்னேறிய இந்தியாவை' உருவாக்க வேண்டியது நமது முதல் கடமை.
நாம் இதற்காக ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் முற்போக்கு சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன என்று?

இந்தியா 'முன்னேறும்' நாடல்ல; 'முன்னேறிய' நாடு!

சரி, இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் எனக்காக ஒதுக்க முடிந்தால் நல்லது. நான் மீண்டும் உத்வேகத்தோடு, உணர்ச்சியோடு சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். நிஜ இந்தியனாய் இருந்தால்,படித்தால் படியுங்கள்.

நீங்கள்...
- நமது சட்டங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன;
- நமது முனிசிபாலிடி, கார்ப்பரேஷன்காரர்கள் குப்பை அள்ளுவதில்லை;
- நமது தொலைபேசிகள் வேலை செய்வதில்லை என்று;
- ரயில்வே துறை ஒரு கோமாளிக் கூட்டம் என்று;
- உலகிலேயே மோசமான விமான சர்வீஸ் இங்குள்ளது என்று;
- கடிதங்கள் நேரத்தில் போவதில்லை என்று;
- நாட்டை நாய்களுக்கு ரொட்டித்துண்டு போல் கடித்துக் குதற விட்டுவிட்டோம், மிகவும் அதளபாதாளத்தில் உள்ளது...."

இப்படி எத்தனையோ ... சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள்! என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூருக்கு செல்லுமொரு இந்தியனாக உங்களையே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முகம், உடல், உயிர். சரியா?
நீங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேரும்போது, உலகிலேயே முதல் தர மன்ணில் கால் பதிப்பதை உணர்கிறீகள்!
சிங்கப்பூரில் நீங்கள் தெருக்களில் சிகரெட் முனைகளை எற்¢வதில்லை. கடைகளுக்குள்ளேயே தின்பதில்லை.
பாதாள சாலைகளை நீங்களும் பெருமையான ஒரு சாதனையாக எண்ணுகிறீர்கள்; அங்கே ஆர்சர்ட் சாலையில் (மும்பையில் மாஹிம்- பெட்டார் ரோடு போலவேயுள்ள சாலை) மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பறக்கிறீர்கள். சர்வ சாதாரணமாக கார் பார்க்கிங்கில் அதிக நேரம் செவவிட்டமைக்காக $5 சிங்கப்பூர் டாலரை கப்பம் கட்டுகிறீர்கள் (சுமார் ரூ.60) ஆனால் குறை சொல்வதில்லை! வாயைத்திறக்கிறீர்களா? இல்லை. ஏன்?

துபாயில் ரமலான் நோன்பு காலங்களில் வெளியிடங்களில் தப்பித்தவறி உணவு உண்பதில்லை. ஏன்?

லண்டனில் ஒரு தொலைபேசி நிறுவன ஊழியரிடம், "ஏன்பா, என் STD,ISD பில்லெல்லாம், வேற ஏதாச்சும் இளிச்சவயன் பில்லோட சேர்த்துடு,' எனக் கூறி அவருக்கு பணத்தை லஞ்சமாகத் 'தள்ளுவதில்லை'! ஏன்?

வாஷிங்டன் தெருக்களில் மணிக்கு 55 mph (88 Km/h) காரோட்டிவிட்டு தட்டிக் கேட்கும் போக்குவரத்து போலீஸிடம், "ஏய் நான் யார்னு தெரியுமா. ..... இன்னாரோட மகன், இந்தா இந்த நோட்ட எடுத்துகிட்டு ஓடிப்போ?'' என்று சூளுரைப்பது இல்லை. ஏன்?

ஆஸ்திரேலியாவிலோ, நியூசிலாந்திலோ தின்றுவிட்டு பேப்பரையோ, குடித்துவிட்டு இளநீர் காயையோ அப்படியே நடு ரோட்டில் எற்¢யாமல், குப்பை தொட்டியிலேயே எற்¢கிறீர்கள்! ஏன்?

ஜப்பானிலுள்ள டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை குதப்பிவிட்டு 'புளிச்' எனத் துப்புவதில்லை. ஏன்?

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், பரிட்சை எழுதவோ, போலி சர்டிபிகேட் வாங்கவோ, வேறு ஆளையோ, பிட்டுகளையோ நம்புவதில்லை; பயப்படுகிறீர்கள். ஏன்?

நான் அதே- 'உங்களை'ப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

அங்கெல்லாம் சட்டத்தை மதிக்கும் நீங்கள், இந்த மன்ணை மிதித்ததும் மாறிவிடுகிறீர்கள்! பேப்பரை எறிவீர்கள், சிகரெட்டை போட்டு மிதிப்பீர்கள், அனாசாயமாக துப்புவீர்கள்! மற்ற நாட்டு சட்ட திட்டங்களை இவ்வளவு மதித்து போற்றும் நீங்கள், சொந்த நாட்டில் வேறு மாதிரி நடந்து கொள்வது ஏன்? எப்போது நம் நாட்டு சட்ட திட்டங்களையும் மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

மும்பையில் மிகவும் பிரபலமாக இருந்த முன்னாள் முனிசிபல் கமிஷனர், திரு.தினாய்கர், ஒரு பேட்டியில், " இந்த ஊரில் பெரிய மனிதர்கள் நாய்களை கூட்டிக்கொண்டு தெருவில் வாக்கிங் போவார்கள். அப்போது நாய் தெருவிலேயே செய்யும் அசிங்கங்களை பாராமல் இருப்பார்கள். அதே பெரிய மனிதர்கள் தான், நிர்வாகத்தைப் பற்றி," என்ன கவர்ன்மெண்ட்? கொஞ்சம்கூட ரோடையெல்லாம் சரியா வெச்சுக்க மாட்டேங்கறாங்க?," என்று குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்! நீங்கள் அந்த அரசாங்கத்தினரிடம் என்ன எற்றிபார்க்கிறீர்கள்? நாய் எப்போதெல்லாம் காலை தூக்குகிறதோ, எப்போதெல்லாம் உட்கார முற்படுகிறதோ, அப்போது அங்கே ஆஜராகி ஒரு சட்டியை அடியில் ஏந்திப்பிடிக்கச் சொல்கிறீகளா?" என்று சூடாக சொன்னாராம்!

அமெரிக்காவிலும், லண்டனிலும் நாய் சொந்தக்காரர்களே, நாயின் அசிங்களை சுத்தம் செய்ய கைகளில் உறை அணிந்து, உடன் ஒரு பையையும் கொண்டு வரவேண்டுமாம்; ஜப்பானிலும் அப்படியே. பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை? தினாய்கரின் கோபம் சரியே!

தேர்தலில் ஓட்டுப் போட்டதோடு நாம் நமது கடமைகளை மறந்துவிடுகிறோம். ஒன்றும் செய்யாமல், சோம்பியிருந்து, இனி எல்லாமே புதிய அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நமது பங்களிப்பு? - பெரிய சைபர்!

நாம் குப்பைகளை எங்கும் எறிவோம்; அர்சாங்கம் உடனே சுத்தம் செய்ய வேண்டும். நாம் ஒரு சிறிய காகிதத்தைக் கூட கீழே குனிந்து, எடுத்து, குப்பை தொட்டியில் போட மாட்டோம்.

ரயில்வே துறை, ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று கோபமாக சொல்லுவோம்;ஆனால் நாம் அதை சுத்தமாக வைத்திருக்க மாட்டோம்.

இந்தியன் ஏர்லைன்ஸ¤ன், ஏர் இந்தியாவும் நல்ல சுத்தமான, சுவைமிக்க உணவும், துடைத்துக்கொள்ள நல்ல நாப்கின்களையும் தரவேண்டுமென எதிர்பார்ப்போம்; ஆனால், சாப்பிட்டவுடன் அந்த தட்டு, பேப்பர் நாபிகின் போன்றவற்றை அப்படியே, ஏர்போர்ட் எனக்கூட பாராமல், எறிய நாம் தயங்கமாட்டோம்! இது அங்கு பணி புரிபவர்களுக்கும் பொருந்தும். "பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம்; நாம் சுத்தமாக இருக்கவேண்டும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,"என அங்கிருப்பவர்களும் எண்ணுவதில்லை.

பெண் குழந்தைகள் காப்பு, வரதட்சிணைக்கொடுமை,பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய வெளியே பேசி விட்டு, வீட்டில் அப்படியே நேர்மாராக நடப்போம்!

அதற்கு நாம் சொல்லும் சாக்குப்போக்கு?சப்பை கட்டுதல்கள்?

நான் ஒருவன் மட்டும் என் மகனுக்காக வரதட்சிணை வாங்காமலிருந்தால் போதாது. வேறென்ன செய்ய வேண்டும்?
யார் இந்த வழக்கங்களை மாற்றுவது?

இந்த வழக்கங்களை கையாள்பவர்கள் யார், யார் மாறவேண்டும் என்றால், எல்லாரும் மாறவேண்டும்!

"என் பக்கத்து வீட்டுக்காரர், என் தெருவிலுள்ளவர்கள், என் அதிகாரிகள், மற்றைய ஊர்களில் உள்ளோர், ஏனைய மதத்தினர், ஜாதியினர், இவையெல்லாம் போக, நமது அரசாங்கம் மாற வேண்டும்," என்று சொல்வோமே தவிர "நான் என்னை, என் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்", என்று யாராவது நினைக்கிறார்களா?

இந்த சீர்திருத்தங்களையும் சமுதாய நலத் திட்டங்களையும் செய்ய நாம் முன்வராமல், வீட்டுக்குள் அடைகாக்கும் பெட்டை போல் ஒளிந்துகொண்டு, தூரத்திலிருக்கும் நாடுகளைப் பார்த்து, அங்கிருந்து நமக்காக, ஒரு மிஸ்டர்.க்ளீன் வந்து, கையிலுள்ள மந்திரக் கோலால், எதேனும் மந்திரங்கள், மாயாஜாலங்கள் செய்து, நமது நாட்டையே மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறிர்கள்!

கோழையாக ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க திராணி இல்லாமல், "இது சரியில்லை, அது சரியில்லை," எனக்கூறி, அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அங்கே அண்டிப்பிழைத்து, அவர்களின் வெளிச்சத்தில் குளிர் காய்ந்து, அவர்கள் புகழ் பாடுகிறீர்கள்! அங்கே நமது நாட்டைப்பற்றிய கவலையோ, பயமோ இன்றி, வாழ்கிறீர்கள்!

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு, பாதுகாப்பு இல்லையெனத் தெரிந்ததும், இங்கிலாந்துக்கு ஓடி, ஒளிகிறீர்கள்!

இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எனத் தெரிந்ததும், உடனே, துபாய்க்கான அடுத்த விமானத்தைப் பிடிக்கிறீர்கள்!

அங்கேயும் வளைகுடா நாடுகளில் போர் முரசு கேட்டவுடன், உடனே, நமது அரசாங்கம் செலவில்லாமல், நம்மை மீட்டு, நமது மண்ணில் பத்திரமாக சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; இல்லையேல் அரசாங்கத்தை வாயில் வந்தபடியெல்லாம் ஏசி, குறை கூறி குளிர்காய்கிறீர்கள்!

யாரும், இந்த முறைகளை மாற்ற முனைவதில்லை. இந்த அரசு சக்கரத்தில் பிழை சரி செய்து, எண்ணெய் ஊற்றி, ஓடவைக்க முற்படுவதில்லை!

எல்லாரும் நமது மனங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு அடகு வைத்துவிட்டோம்!

ஜான் கென்னடி சொன்னது போல், நாம் இந்த இந்திய நாடு மேம்பட என்ன செய்கிறோம் என்று மனம் கூர்ந்து கேட்டுக்கொள்ளுங்கள். அதை இன்றே செய்ய முற்பட்டு, நமது தேசமும், அமெரிக்காவைப் போல், ஏனைய முற்போக்கு நாடுகள் போல் உருவாக்க முயலுங்கள்.

நம்மிடம் இருந்து இந்தியா என்ன எதிர்பார்க்கிறதோ, அதை இன்றே செய்ய முற்படுங்கள். இந்த செய்தியை நீங்களும் உள்வாங்கி, உங்களைப் போல் சிந்திக்கும் நல்லுள்ளங்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்; வெத்து ஜோக்குகளையும், அல்ப படங்களையும், மின்னஞ்சல் செய்வதை விட இதை அதிகம் பேருக்கு அனுப்ப முயலுங்கள்! நன்றி.

டாக்டர். அப்துல் கலாம்.
ஜனாதிபதி - இந்தியக் குடியரசு

09 November 2006

ரத்தத்தின் ரத்தமே!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை எனக்கு 0+ve ரத்தம் வேண்டுமென கைதொலைப்பேசி செய்தி வந்திருந்தது. வழக்கமாக ரத்ததானத்திற்கு நண்பர்களிடையே செய்தி அனுப்பி நாமும் ரத்ததானம் செய்யும் சுகமே அலாதி. வரும் திங்கள் காலை 8 மணிக்கு வருமாறும், பயனர்(ஒரு சிறுவன்), தொடர்புகொள்ள அவனது தந்தை பெயர் போன்ற அத்தியாவசியமான தகவல்கள் தரப்பட்டிருந்தது. வழக்கமாக எனக்கு வரும் அழைப்புகளில், A+ve, AB-, போன்றவையே அதிகம் வரும். ஓ பாஸிடிவ் என்பதை நான் நகைச்சுவையாக,"நாம ஓப்ளஸ் பசங்க (hopeless)! ஒரு பய கூட நம்ம ரத்தத்தை கேக்க மாட்டேங்கறானே" என்பதுண்டு! செய்தியறிந்ததுமே நான் அந்த தந்தைக்கு போன் போட்டு, "சார், .. நான் கட்டாயம் வரேன்" என ஊர்ஜிதம் செய்தேன்.
திங்கள் கிழமை விரைவாகவே சென்னை க்ரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே விவரத்தை சொன்னதும், ரத்த வங்கியில் ஒரு fபாரத்தை நிரப்பச் சொன்னார்கள். செய்தேன். ஆர்வமாக, பையன் பெயரைக் குறிப்பிட்டு, எப்படி இருக்கிறான்? என கேட்ட எனக்கு அதிர்ச்சி! ஆம்! முதல் நாள் இரவே அந்த சிறுவன் நோய் முற்றி போய் (என்ன நோய் என்பதா இப்போது முக்கியம்? மேலே படிக்கவும்...) இறந்துவிட்டான் என்றனர்! எனினும் நிரப்பிய fபாரம் நிரப்பியதுதான். நான் வங்கியில் சேர்த்திட ரத்தம் தருகிறேன் எனக் கூறிய என்னை அதிசயமாகப் பார்த்தாள் நர்ஸ்.

ரத்தம் குடுக்கவேண்டும் என்பதும், 4 மாதத்திற்கு அல்லது கொஞ்சம் நிதானமாக 6 மாதத்திற்கு, வியாதி, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றதனால் பாதிக்கப்படாமலும், எந்த மருந்துகளும் அருந்தாதவரும், மது, புகை பழக்கம் இல்லாதவராயும் இருப்பவரே, ரத்தம் தர தகுதியானவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே நாம் fபாரத்தில் எழுதி உறுதி செய்ய வேண்டும். சரி, ஆனால்....

எங்குமே இல்லாத ஒரு புதிய விநோத சட்டத்தை அப்போலோ இங்கு நடைமுறை படுத்தியுள்ளது!கைகளில், கால்களில் உறை அணிந்து, எடை மிஷினின் மேல் நின்ற என்னைப் பார்த்து," சார், நீங்க ரத்தம் தர முடியாது", என்றாள் நர்ஸ். "எதுக்கு?" மிக அடிபட்ட மனதுடன் கேட்டேன். நீங்க 49.66 கிலோதான் சார் வெயிட். குறைஞ்சது 50 கிலோவாவது இருக்கணும்!" என்றாள்.
"அட, 0.340 கிராம்ல நான் குறைஞ்சுபோயிட்டா, ரத்தம் தரக்கூடாதா? சட்டப்படி, 45 கிலோக்கு மேலே இருக்குற யாரும் ரத்தம் தரலாமே?"
"ரூல்ஸ் பேசாதீங்க சார். இங்க இதுதான் ரூல்ஸ். உங்க ரத்த செல்கள் (platelets) செறிவா இருக்காது. அதான்," என்றாள் அடுத்த படியாக!
கணக்கற்ற முறை ரத்தம் தந்தவன் நான். கல்லூரி நாட்களில், 45 கிலோ வெயிட் கொஞ்சம் குறைந்தாலும்,பேயாய் தின்று, அடுத்த முறை N.S.S. காரர்கள் ரத்ததானத்தில் உதாசீனப்படுத்தாமல் பார்த்துக்கொண்டவன், அதிலும் அறிவியல் படித்தவன். செல்லின் செரிவு பற்றி ஒரு கிளிப்பிள்ளை நர்ஸ் எனக்கு பாடம் எடுக்கிறாள்! கஷ்டகாலம்! எனக்கு இந்த மருத்துவமனையின் நிராகரிப்பு மிகுந்த மனவேதனை அளித்தது!

மேலே போய் அங்கிருந்த வாயிற்காப்போன் போல் அங்கங்கு நிற்கும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை கேட்டால், "சாரி" என கை விரித்தார்கள்.

மனம் நொந்து வரும் வழியில், ஜீவன் ரத்த வங்கி வந்தது. ஆத்திரத்துடன் அங்கே போய், "நான் ஓப்ளஸ்.. சாரி, ஓ பாசிடிவ், தானம் செய்யலாமா?" என்றேன். வழக்கம் போல் fபாரம் நிரப்புதல், எடை பார்த்தல் படலங்கள் நடந்தேறின. நான் மெதுவாக, "நான் (அங்கிருந்த எடை மிஷின் படி கம்மி!) 49 கிலோதான இருக்கேன்?" என்றேன்.

அங்கிருந்தவர், பட்டென்று, "ஆனா என்ன சார்? தானம் செய்ய மனசு இருக்கே? சீக்கு இல்லாம இருக்கீங்கல்ல? 45 கிலோ இருந்தாலே தரலாம் சார்," என்று என் மனதில் பால் வார்த்து, ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாள்(சாரி... தானமாக எடுத்துக்கொண்டாள்). அப்போலோ ஆத்திரம் ஜீவனில் தணிந்தது :)

இம்மாதிரியான ரத்த வங்கிகள், உருப்படியாக elisa டெஸ்ட் (எய்ட்ஸ் உள்ளதா எனப்பார்க்கும் டெஸ்ட்) செய்தால் நல்லது. உலகமிருக்கும் நிலையில் தான தரும் யாருமே கட்டாயம் சம்மதித்திருப்பார்கள். ஆனால், அப்போலோ தனக்கென ஒரு தப்பான சட்டத்தை வைத்துக்கொண்டு, தானம் தர முன் வருபவர்களை இதுபோல் நிராகரித்தால்? நியாயமா?

16 October 2006

தேன்கூடு போட்டி - விடுதலை-2

அத்தனையும் 'விடுதலை'க் கற்றால்தான் நிஜ விடுதலை!

வருகைதரும் நேரம் உயிர்மூச்சு பெற்றுவிடுதலை
வளருகின்ற தூரம் வாழ்வைக் வாழக் கண்டுவிடுதலை
காணும் வாழ்வில் கல்வி காதல் கடமை கற்றுவிடுதலை
கண்டபின்னர் வந்த தூரம் திரும்பிப் பார்த்துவிடுதலை

காணும் பொருள் யாவற்றையும் உடன் பெற்றுவிடுதலை
பெற்றபின்னர் அத்தனையும் இயைந்து றந்துவிடுதலை
துறக்கும் நிலை போகும் மனம் முற்றும் துள்ளிவிடுதலை
கண்டிடும் நாள்தான் எமக்கு முற்றிலுமாய் விடுதலை!

தேன்கூடு போட்டி - விடுதலை

விடுதலை நாடினால் விடுதலை!

உட்புகும் காற்றை மூச்சாகிவிடுதலை
கற்றிடும் கூற்றைப் பேச்சாகிவிடுதலை
நட்டிடும் நாற்றை கனிக்கவிடுதலை
விட்டுவி ட்டாடும் கூத்தாகிவிடுதலை

காணாத கண்களை தேற்றிவிடுதலை
காட்டும் வித்தைபல காட்டிவிடுதலை
வேணாத ஈட்டுதல் நீட்டிவிடுதலை
என்றுநீ தெரிந்தே ஓட்டிவிடுதலை

காணும் மாந்தர்மனம் மாற்றிவிடுதலை
கண்டபொருள் யாவும் போற்றிவிடுதலை
உணரு(ம்) மனமதை உட்காணவிடுதலை
புணரும் சட்டையை கழற்றிவிடுதலை

வாடிடும் நாடிதில் வளர்ந்துவிடுதலை
தேடிடும் கோடிகள் கூட்டிவிடுதலை
சாடிடும் மதப்பேய் ஓட்டிவிடுதலை
நாடினால் நாடிதில் வரும் நிஜவிடுதலை!

03 September 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்! poetry for T.sangam competition

கரிமல எரிவகை மாசுகள் நிறைந்தும்
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
கோளில் ஒன்று குறைந்ததென் றாகியும்
சூழல் நசிந்து ஊழல் பெறுகினும் - பாரில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தாய்காட்டி உணவூட்டும் நிலவு மெங்கே
கட்ட டங்கள்கண் மறைக்க வானமெங்கே
எட்டிப் பார்க்கும் வானவில்லின் ஜாலமெங்கே?
காலை மாலை கதிரவனின் வர்ணமுமெங்கே? - எனினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் மனதுக்கு எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் எல்லாம்
விட்டு விடுதலையாகி பறக்கும் எல்லை - விதிக்க
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கற்பனை விரிய எல்லையை விரிக்க
பறந்தும் உயர எட்டா நிலையை
எண்ணிய படியே எங்கும் பறக்க
விண்ணதின் உச்சம் கண்டிட விழைய - உயர்த்த
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
கற்பனை கனவுகள் நனவென வாக்க
கல்பனா சாவ்லா சாவிலும் வாழ்ந்திட - திறந்து
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தொடுதல் இன்றி எல்லை காட்டும்
விடுதல் வந்தால் விடுதலை நாட்டும்
ஆதாய மின்றி ஆதார மின்றி
அதுவே அதற்கு சாட்சியமாக - எங்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

19 August 2006

தேன்கூடு போட்டி: தாயுமானார் அவரே தந்தையுமானார்!

முதுகில் பெரிய கட்டி; காலில் போலியோ தாக்கம்; கருமை நிறம்; நெஞ்சில் ஈரமின்றியோ அல்லது வெளியில் சொல்லிக்கொள்ளுமாறு இல்லாத ஒரு உயிரை உயிர்பித்ததாலோ, அந்த பிஞ்சுக் குழந்தையை தெருவில் விட்டுப் போய்விடுகிறாள் ஒரு பெண்.(தாய் எனச்சொல்ல மனம் ஒப்பவில்லை!) கண்டது ஒரு நன்னெஞ்சம்; கொண்டு சென்று, வளர்த்து, புண்ணை போக்கி, கண்ணாய் வளர்த்து பெண்ணாய் ஆக்கி, இன்று பேர் சொல்ல ஒரு பிள்ளையாய், இல்லை இப்படி பேர் சொல்ல பல பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஆண் தெரசாவாக வாழ்ந்து வருகிறார் "பப்பா" (அப்பா) என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வித்யாகர்; சென்னை அருகிலுள்ள திருவேற்காட்டிலும் மற்ற பல இடங்களிலும் இன்று வேர்விட்டு ஆலமரமாக தழைத்து ஓங்கும் சேவாலயம், "உதவும் கரங்கள்".

அன்றலர்ந்த மலர்களாக பிஞ்சுக் குழந்தைகள், சில மாதங்களிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், புத்தி ஸ்வாதீனமற்ற, சமூகத்தால் பரிகசிக்கப் பட்ட ஆண்கள், பெண்டிர், மற்றும் அங்கேயே வளர்ந்து, சேவை ஆற்றி வரும் பெண்கள், ஆடவர், வளர்ந்து பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர் என் ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார், வித்யாகர். 100 வயது கடந்த மூதாட்டியும் இதில் ஒருவர்!

தினமும் எல்லாரையும் பற்றி விசாரித்து, நலம் கண்டு, சிறு தொழில் முனைந்து, அதில் அவரது மக்கள் பணியாற்ற துணை நின்று, பம்பரமாய் சுழலும் இந்த 'பப்பா'வை பார்க்கையில், ஒரு தாய் செய்யக்கூடிய அத்தனையும், தந்தையாகிய இவரே எப்படி செய்கிறார் என மனம் வியக்கிறது!

மேற்படி பொறுப்பு, சமீபத்தில் ஒரு நற்செயலால், முழுமை அடைந்துள்ளது! எப்படி என்று பார்ப்போமா?

தான் வளர்த்த இரு பெண்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களிலேயே, சம்ப்¢ரதாயம் மாறாமல், பத்திரிகை அடித்து, கல்யாண மண்டபத்தில், அக்கினி வளர்த்து அருந்ததி பார்த்து, உற்றார், உறவினர், இரு வீடுகளிலிருந்தும் வர, தன்னை பெண்ணின் தந்தையென ப்ரகடனப் படுத்தி, அருமையாய் இரு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இந்தத் "தந்தை" வித்யாகர்!

எனக்கு இந்த செய்தி எப்படி தெரியும்? எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாளானால், கேக் வெட்டி, கைதட்டி, வசதியானவர்களை அழைத்து விருந்துண்ணும் பழக்கமில்லை. அரிசி மூட்டைகள், இனிப்புகள், கைக்குழந்தைகளுக்கு புதிய சட்டைகள் வாங்கிக் கொண்டு, எல்லாருமாய் "உதவும் கரங்கள்" க்கு சென்று, எல்லாருமாய் சேர்ந்துண்டு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கும், இல்லாதாருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்;

மாதா மாதம் வீட்டில் சேரும் நாளிதழ்கள், பழைய, ஆனால் நன்றாக இருக்கும் துணிமணிகள், மேசை நாற்காலி, குழந்தைகள் பொம்மைகள், என எதைக் குடுத்தாலும், அவர்களே ஒரு வண்டியில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர்! வரும் நபர், கையோடு ஒரு ரசீது புத்தகமும் கொண்டு வருகிறார். அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எழுதி, 'பெற்றுக்கொண்டோம், நன்றி' என எழுதி கையொப்பமிட்டு, ரசீது தருகிறார். அப்படி ஒரு முறை வரும்போது, சந்தோஷமாக, "அய்யா, எங்க தங்கச்சிக்கு கல்யாணம்" எனக் கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்! மகிழ்ந்த என் தாய், உடனே, ஒரு புது பட்டுப்புடவையை கல்யாணப் பெண்ணுக்குத் தந்தார். அதற்கும், ஓரிரு நாட்களில், திரு. வித்யாகரிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு நன்றிக் கடிதம் இல்லம் தேடி வந்தது!

மறுமுறை பிறந்தநாள் கொண்டாட செல்கையில், மற்றொமொரு பெண்ணின் திருமண பத்திரிகையையும் தந்தார் 'பப்பா' வித்யாகர். மகிழ்ச்சி எங்கள் இல்லத்தையும் தொற்றிக் கொண்டது.

அதனால்தான், பெறாவிட்டாலும், குழந்தைகளுக்கு ஒரு தாயாயும், தந்தையுமாக, பெரியவர்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக, முதியவர்க்கு ஒரு நல்ல மகனாக, மன நலம் குன்றியவர்க்கு ஒரு நல்ல மருத்துவனாக வாழ்ந்து வரும் திரு.'பப்பா' வித்யாகரை பற்றி, இந்த "உறவுகள்" பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்!

அந்த ஆலமரத்தின் சுட்டி http://www.udavumkarangal.org
முகவரி: திருவேற்காட்டில் நுழைந்து, "உதவும் கரங்கள்" என்றாலே போதுமே!

எல்லாரும் இத்தகைய நல்லார் பணியை ஆதரித்து வரவேண்டுமெனும் ஆவலில் இந்த கட்டுரை உருவாகியுள்ளது.

18 August 2006

தேன்கூடு போட்டி- தாய்


தாய்

தொப்புள் கொடியறுத்தும் தொடரும்
நோய் வந்தால் உடன் வாடும்
சிரிப்புகாட்ட குரங்காடும்!
நிமிர்ந்திடவே தான் குனியும்,
உண்ணாவிடில் விரதம் கொள்ளும்
தானுருகி தளிர் வளர்க்கும்
வளரும்வரை தாங்கிவரும்
வளர்ந்தபின்னும் நிழலாகும்
தாய் உறவுப்போல ஒரு
உறவுயினி உலகிலுண்டோ?

தேன்கூடு போட்டி - அந்த உறவுக்கு பெயரென்ன?

கலாவதி கார்த்திகேயன் என்ற பெயர். இதில் புதுமை என்ன என்கிறீர்களா? கார்த்திகேயன் தந்தையோ அல்லது கணவனோ அல்ல!

மகன்!

http://vijayanagar.blogspot.com/ எனும் வலை பதிவில், கார்த்திகேயன் எப்படி எழுதுவாரோ, அதே பாணியை பின் பற்றி, தன்னைத் தனது மகனாக பாவித்து, அந்தத் தாய் கடந்த இரு மாதங்களாக பதிவுகள் எழுதுகிறார். கார்த்திகேயனின் நண்பர்களோடு சேர்ந்து ஒரு அறக் கட்டளை நிறுவி அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முயன்று வருகிறார்!

எம்.ஏ,எம்.பில் (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ படித்த அந்தப் பள்ளி ஆசிரியை, ஓராண்டு காலமாக விறுப்பு ஓய்வு பெற்று, மகனின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, மகன் என்ன பணிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரோ அந்த பணியிலெல்லாம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்கிறார், மகனை வாழவைக்கிறார்- ஏன்? அந்த உறவுக்கு பெயரென்ன?

மகன் கார்த்திகேயன் துடிப்பான இளைஞர். கணினி பொறியாளர்; அமெரிக்கா சென்று திரும்பி வந்த, அடக்கமான, உறவினர்களின் செல்லப் பிள்ளை. அலுவலகத்திலும் நல்ல பெயர்! நண்பர்களிடையேயும் நல்ல பெயர். தீயபழக்கங்கள் ஏதும் இல்லை. வரலாற்றுப் பிரியர்! அவர் செல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே தென்னிந்தியாவில் இல்லை எனலாம்! அவருடைய கணிணியிலுள்ள folders புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன! அதனை தனது இடுகைகளில் எழுதியும், வரலாறு.காம் இணையப் பத்திரிகைக்கும் அனுப்பி வந்துள்ளார்!

2005- ஆகஸ்ட் 26ஆம் தேதி. காலை அலுவலகம் சென்ற கார்த்திகேயன், சாலை விபத்தில்- காலமானார்!

இல்லை, என்னுடன், என்னுள் வாழ்கிறான் என புதியமுகம் பூண்டு வாழ்கிறார் கலாவதி கார்த்திகேயன்! பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசையாக மகன் வாங்கித் தந்த பெங்களூர் வீட்டை விட்டு, சென்னை வந்து, தனியே, அறை எங்கும் கார்த்திகேயனின் படங்களை ஒட்டி, சதா அவர் நினைவாக வாழும் - அந்த உறவுக்குப் பெயரென்ன?

968 உறுப்பினர் கொண்ட பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமம். பல மாநிலங்களில், ராஜ ராஜனின் சதயத் திருநாளை ஒட்டி, உறுப்பினர்கள் விழாக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பொருட்டு எல்லாப் பழைய உறுப்பினர்கள், நீண்ட காலமாக தொடர்பு அற்றவர்களுக்கு ஒரு மடல் அனுப்பப்பட்ட மடலுக்கு வந்த பொன்னியின் செல்வியின் மடல் எல்லா உறுப்பினரையும் கலங்க வைத்து விட்டது!

பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமத்தில், மகன் கார்த்திகேயனின் புனைப்பெயரை ஒத்து (பொன்னியின் செல்வன் - கார்த்திகேயனின் மின்னஞ்சல் பெயர்; தாயார் கலாவதியின் மின்னஞ்சல் பெயர் பொன்னியின் செல்வி! )

அவரெழுதியதன் சாராம்சம்:

"என் பெயர் பொன்னியின் செல்வி. உங்கள் உறுப்பினர் கார்த்திக்கின் தாய். எனக்கு கணினி இயக்கிப் பழக்கமில்லை. இப்போதுதான்,மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்; ஆம், கடந்த ஆண்டு என் மகன் மாண்டான் என என்றும் நினைக்க முடியாமல், ஆனால் அவனை நேரில் பார்க்கவும் முடியாமல், நான் தவித்து வருகையில், மெதுவாக அவனது கணினியைத் திறந்து கொஞ்சம்,கொஞ்சமாக இயக்க பழகி வருகிறேன். உங்கள் குழு என் கண்ணில் பட்டது; எனது மகன்தான் நடத்துகிறான் என நினைத்து திறக்க முற்படுகையில், உங்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் எனது மகனும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதையும் தெரிந்து கொண்டேன். எத்தனை செய்திகள் அளித்துள்ளான் என்பதை எண்ணி வியக்கிறேன்.என் மகன் அளவுக்கு சுவையாக எழுத முடியாவிட்டாலும், ஏதோ, என்னால் முடிந்த வரை இதில் பங்கேற்க முயல்கிறேன். வணக்கம்!"

அதற்கு எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நான் அந்தத் தாயைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன்.

இரண்டரை மணி நேரங்கள்! அந்தத் தாய் சொன்னது கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது! தந்தை 2000 ஆண்டே காலமானதும், மகன் கார்த்திக் (கார்த்திகேயனை அவர் அப்படித்தான் அழைக்கிறார்!) அவரை எப்பொழுதும் அரவணைத்து தாய்க்கு எந்த ப்ரச்னைகளும் வரக்கூடாது என வாழ்ந்த "தாய்ச் செல்லம்".

தாய் மகன் இருவருக்குமே சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்கும்! இருவரும், நண்பர்கள் போல் கேலியும் கும்மாளமும் செய்து வாழ்ந்ததாகவே சொல்கிறார்,கலாவதி!

கவிதை, கதை, வரலற்று தலங்களுக்குச் சென்று எழுதும் பயணக் கட்டுரை, புகைப் படங்கள், கார், பைக், அமெரிக்க பயணம், டெல் நிறுவனத்தில் நல்ல பணி,சொந்த வீடு - என மிகவும் வேகமாக fast forward modeல் வளர்ந்த அந்த வாழ்க்கை, எப்படி திடீரென முடிந்து போகும்?

ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், மகனாகவே வாழ முயற்சிக்கும் அந்த தாயின் உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அந்த உறவுக்கு பேரென்ன???

21 July 2006

கோவில்கள் மறையும் அபாயம்! - 2

http://www.pkblogs.com/maraboorjc/2006_04_02_maraboorjc_archive.html

எனும் வலைத்தளத்தில் ( என்ன செய்ய சுற்றி வளைத்து மூக்கைத் தொடுமாறு நமது முட்டாள் அரசாங்கம் நம்மை பாடாய் படுத்துகிறது! 18 குறிப்பிட்ட வலை தளைத்தை தடை செய்வதற்கு பதில், எல்லா ப்ளாக்ஸ்பாட் வலைத்தளங்களையும் ப்ளாக் அவுட் (Black-out) செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!! ) .. விஷயத்துக்கு வருகிறேன்..
மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கோயில்கள் மறையும் அபாயத்தைப்பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டத்தில், 'குன்றத்தூரான்' என்ற பெயரில், ஒருவர் எங்கள் குழு செய்யும் உழவாரப் பணியை கேலி செய்து பேசினார்). அனாமதேயமாக, தனது தொலைப் பேசி எண், மின்னஞ்சல் ஏதும் தராமல், அவர் குறிப்பிட்ட நவக்ரஹஸ்தலங்களை எங்கள் R.E.A.C.H குழு பார்வையிட்டு வந்தது. 'குன்றத்தூரான்' குறிப்பிட்ட கோவூர் சிவாச்சாரியாரான தியாகராஜனின் ஒத்திழைப்போடு எல்லா கோவில்களையும் பார்வையிட்டோம். அவர் கூறியதுபோல், எந்த கோயிலும் 'கேட்பாரற்று கிடக்க'வில்லை!! மாறாக, ஒரே ஒரு கோயிலைத்தவிர (கெருகம்பாக்கம்) மற்றவை நன்றாகவே இருந்தது. மக்கள் வராததற்குக் காரணம், சரியான விளம்பரம் இல்லாததே!
எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் அக்கோவில்களை பார்த்துவிட்டு வந்த மறுவாரமே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைவரான திரு. இறையன்பு IAS (என்ன பெயர் பொருத்தம்!!) ப்ல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்து, ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எங்கள் R.E.A.C.H குழுவின் தலைவரான, முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக திரு.டாக்டர்.டி.சத்யமூர்த்தி ஒரு பவர் பாயிண்ட் விளக்கவுரை அளித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் செயலர் (இறையன்பு அவர்கள்) மற்றும் ஏனைய பெருந்தலைகள் அங்கே அமர்ந்திருக்க, அவ்விளக்கவுரையில் நமது சென்னையைச் சுற்றியுள்ள நவக்ரஹக்கோவில்களின் படங்களும், விளக்கவுரையும் இடம் பெற்றிருந்தன. மறு வாரமே, சுற்றலாத்துறையைச் சேர்ந்த அதிகாரி ராஜசேகர் அவர்கள், நம்முடன் தொடர்பு கொண்டு அக்கோவில்களை பற்றிய விபரங்களையும், போகும் வழிகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டு, ஏனைய அதிகாரிகளுடன் சுற்றிப்பர்ர்த்து வந்து, அத்தலங்களை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கச் செய்தார். நேற்றைய தினகரம், மதுர்ம் இன்றைய இந்து நாளிதழ்களில் சுற்றலாத் துறையின் சிறப்பு அறிவிப்பில், நபர் ஒருவருக்கு ரூ.150 பெற்றுக்கொண்டு, தமிழக சுற்றலாத்துறையே, இந்நவகிரஹக் கோவில்களை சுற்றிக்காட்ட ஏற்பாடு செதுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் வரவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள் பிரசாத, பூசைக்குரிய பொருட்கள் விற்று சுய தொழில் புரிய முனைவர்; அதனால் பணப் புழக்கம் மற்றும் கோவில்களின் நிலைமை சேரமையும் என நம்புவோம். சுற்றலாத்துறை காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஏனைய துறைகளான இந்து அறநிலையத்துறையும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் காட்டினால், சிகப்பு நாடாக்கள் அவிழ்க்கப் பட்டு, கோவில்களில் பூசைகள் தினந்§தோறும் நடைபெறும்; இக்கோவில்களிலிருந்து காணாமல் போகும் கல்வெட்டுச்செய்திகள் உலகெங்கும் அறிய வரும். எல்லாரும் சேர்ந்து இப்பணையை செய்வார்களா?
நீங்களும் இந்த நவக்ரஹ தலங்களை பார்க்க ஆவலாக உள்ளீர்களா? பயணிக்கவும் :-

http://puggy.symonds.net/~madan/navagraha/tour.html

இந்த வலைத்தளத்தில் உள்ள சிகப்புப் புள்ளிகளை சுட்டினால், உங்களை அந்தந்த ஸ்தலங்களுக்கே கொண்டு போகும்!

இப்போதைக்கு எந்த பதிவையும் படிக்க இயலாதவர்கள் மூக்கைச் சுற்றி pkblogs மூலம் முயலலாம்!

19 July 2006

போட்டி - "கருப்பய்யா"

காற்று ஊழிக்காற்றாய் அடித்தது. ஏற்கனவே, மெல்லிய தேகம். அத்தனை உயரத்துக்கு போனதால், உடம்பு, 'S' போல் காற்றில் வளைவது போல் இருந்தது.

சோழிங்கநல்லூரின் பல உயர்ந்த I.T.பார்க் கட்டடங்களில் இதுவும் ஒன்று. அதன் உயரத்திலிருந்த படியே, கீழே பென்சில் கீரலாய்த் தெரியும் சாலைகளையும், இவன் நிற்பதை அண்ணாந்து பார்க்கக்கூட, நேரமில்லாமல், கடிகாரத்தை மிழுங்கியது போல் திரியும் இளைஞர் கூட்டம், எறும்பு ஊர்வதுபோல் கட்டிடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போவதையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

அவசர அப்பா, அன்பு அம்மா, அநியாயத்துக்கு விரட்டும் பாஸ், மதிக்காத ஏளன விழிகளால் பார்க்கும் சக ஊழியர்கள், தினம் பார்த்து சிரிக்கிறாள் என நினைக்கும் அந்த பெயர் தெரியாத பெண், வேலையிடத்து சகலைகள், என எல்லாரும் ஒரு ரவுண்டு, மனக்கண்ணில் வந்து விட்டுப்போனார்கள்!
குதிக்கவேண்டியதுதான் பாக்கி. "ஒன். டூ.." சொல்லுமுன், அந்த 'எண்ண' ஓட்டத்தை முந்திக்கொண்டு நெஞ்சின் லப்-டப் சப்தம் அதிகமாக கேட்டது!

தொண்டையில் வரண்டு, நாக்கு எங்கோ ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். "குதி! குதி! அடக் குதிடா, இன்னும் அவமானங்களை தாங்கிகிட்டு எத்தனை நாள் வாழ்றது..கமான், குதி..." என மனதின் தைரியப் பகுதியின் ஆதிக்கம் அதிகரித்து, ரத்தம் குபுக்கென தலைக்கேற.. கு...

'விஷ்..' என மிக பக்கத்தில் ஒரு சப்தம் கேட்டதுபோலிருந்தது! மெதுவாக கண்ணைத்திறந்து பார்த்தான்! நம்ப முடியவில்லை! மிக,மிக அருகில் அவன்! அருகில் இவனதை விட பெரிதாக உள்ள கட்டிடத்தின் சுவற்றிலிருந்து அப்படியே ஒரு கயிற்றைப் பிடித்தபடி, ஸ்பைடர்மேன் போல், இவன் முகத்துக்கு முன் வருவதும், ஊசலாடி பின்னால் போவதுமாய் இருந்தான். மெதுவாக கயிற்றின் ஆட்டத்தை நிறுத்தி, இவன் பக்கமாக குதிக்க முயல்வது தெரிந்தது!

"யேய், வராத! என் கிட்ட வராத! ஐ யாம் கோயிங் டு ஜம்ப்!"

அவன் கத்தினான்."என்ன சொல்ற? காதுல விழல! இரு கயிறு கொஞ்சம் நின்னதும் பக்கத்துல வந்து கேக்கறேன்!"

"அதத்தான் சொல்றேன். பக்கத்துல வராதன்னு,டோண்ட் கம் நியர் மீ!"

"எதோ இங்கிலீஷ்ல சொல்றன்னு தெரியுது; ஆனா என்னன்னுதான் தெரியல. எனக்கு இங்கிலீஷ் வராது. இரு பக்கத்துல வர்றேன்."

சொல்ல சொல்ல கேட்காமல், மெதுவாக இந்தப் பக்கமாய் குதித்து, அருகே வந்தான். வருகையிலேயே, தன்னைச்சுற்றியிருக்கும் கயிற்றைக் கழற்றிக் கொண்டே வந்தான்.

குதிக்க வேண்டியதை மறந்து, "இவன்,இங்கே, எப்படி.." எனக்..

"என்ன கேக்கவர்றன்னு தெரியுது! எங்கிருந்து குதிச்சான்னா? அதான் பார்த்தயே? வானத்தில இருந்துதான்.." சொல்லி சிரித்தான்!

அதற்குள் மிக அருகில் வந்துவிட்டு, சகஜமாகத் தோளிலும் கை போட்டான்."கண்ணா, பாரு, எனக்கு இங்க்லீஷ் வராதுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்; நீ சும்மா பீட்டர் விட்டுகிட்டே இருக்கயே?"

'வெடுக்' கென கையை உதறிவிட்ட குலோத்துங்கன்(ஆபிஸில் குல், குல் என்பார்கள்!) "யேய், யூ.. சரி, தமிழ்லயே சொல்றேன். நீ எப்படி வந்தயோ அப்படியே போயிடு. என்ன தடுக்காதே, எனக்கு குதிக்கணும்!"
"குதி! ஆனா, அட்ரஸ் கொடுத்துட்டு போ! சொல்லிவிட உபகாரமா இருக்கும்; அதோடு, எதாச்சும் சொந்த பந்தம் இருந்தா, பாங்க் பாலன்ஸ் இருந்தா, விவரத்தை சொல்லு; கொஞ்சம் கவனிக்க வசதியா இருக்கும்" மீண்டும் சிரிப்பு!

"உனக்கு நக்கலா இருக்கா? எல்லாத்துக்கும் சிரிக்கிறயே? எம்மாதிரி உனக்கு ப்ரச்னைங்க வந்தா, நீயும் இதைத்தான் செய்வ!"

"அட, பார்றா! ப்ரச்னையா? எவனுக்கும் வராதது புதுசா உனக்கு வந்துருச்சா, என்ன? சரி, என்னன்னுதான் சொல்லேன்; எதாச்சும் சரி செய்ய வழிதெரியுதான்னு பார்ப்போம்; தெரியல, நீ என் கையத்துலயே தொங்கு, நானே அத்துவுடுறேன்"

சொன்னபடியே, மெதுவாக குல்.லின் (நாமும் அப்படியே கூப்பிடுவோமே,குலோத்துங்கன், எழுத ரொம்ம்ம்ப கஷ்டமாயிருக்கு!) கையைப் பிடித்து, சுவர் விளிம்பிலிருந்து உள் பக்கமாக, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டான், அந்த ஸ்பைடர்மேன்!

உடைந்து போயிருந்தான் கு.ல்! கொஞ்சம் நினைவு வந்தது போல்! தலைகுனிந்து கொஞம் போல் விசும்பி அழுதான்! ப்ரச்னைகளாலா, இல்லை தனது தற்கொலை முயற்சியும் தடைபட்டதாலா, தெரியவில்லை.

வேண்டுமளவு அழட்டுமென விட்டு, மெதுவாக மவுனத்தை உடைத்தான் ஸ்பைடர்மேன்." பார் இதோ பார்; என்ன ப்ரச்னை? எதுனாலும் பேசி சரி பண்ணீர்லாம்; இப்படி புசுக்குனு குதிக்கற முடிவெல்லாம் எடுக்கக்கூடாது! அப்படி எல்லாரும் ப்ரச்னைக்கு குதிக்க ஆரம்பிச்சாங்கன்னா, அதுக்கும் திருப்பதி மாதிரி க்யூ ஏற்பாடுதான் செய்யணும்! சொல்லு, என்ன ப்ரச்னை"

சிரித்துவிட்டான், கு.ல்!

"பார்றா, சிரிக்கறத; கொஞ்ச நேரம் முந்தி குதிச்ச பயலா இது, இப்ப சிரிக்கிறான்! என்னய்யா ஒரே கன்ப்யூஷியஸா இருக்கயே! எதுக்குய்யா சிரிச்ச?"

"இல்ல, திருப்பதி மாதிரி க்யூல எல்லாரும் நின்னு, ஒவ்வொருத்தனா குதிக்கிற மாதிரியும், அத கன்ட்ரோல் பண்ண செக்யூரிட்டி வெச்சு, ஒவ்வொருத்தறா அனுப்புற மாதிரியும் நினைப்பு வந்து, சிரிப்பு வந்துச்சு, அதான்; அதவிடு, நீ..நீங்க இப்ப கன்ப்யூஷ்யஸ்ன்னு சொன்னீங்கல்ல? அது ஆங்கில வார்த்தையே இல்ல; அந்த பேர்ல ஒரு பெரிய சீன மேதை வாழ்ந்தார்!"

"பார்றா, பையன் பிச்சு உதர்றத! இவ்வளவு தெரிஞ்சு வெச்சுருக்க? இப்படி அல்பாயுசுல போறதுக்கா?" எனக் கேட்டவனை முறைத்தான், கு.ல்.

"சரி, கோவிச்சுக்காத; என்ன ப்ரச்னை சொல்லு"

"உன் கிட்ட ஏன் சொல்லணும்? நீ யாரு? எதுக்கு என்ன தடுத்த? எப்படி இப்படி அந்தரத்துல இருந்து வந்த?"- சரமாரியாகக் கேட்டான்!

"யப்பா, யப்பா, மெதுவா, ஒண்ணொண்ணாக் கேளு, சொல்றேன்"

"நா யாரு? உன்னவிட அதிகம் சோகத்தைக் கண்டவன்; எப்படீன்னு கேக்கறியா? சுனாமில எங்குடும்பத்த மொத்தமா தொலைச்சேன்! படிச்ச சர்டிபிகேட்டுங்களயும்தான்! கவருமெண்ட்ல அப்ளை பண்ணா, நேரத்துக்கு அதுங்க வந்து சேரல; நிவாரணமும் வந்து சேரல; இப்ப நான் தனிகட்டை!"

"எதுக்குத் தடுத்தேன்? அதுவாதான் போகும் உசிரு; வாழ எத்தன ஆசப்பட்டாலும், சுனாமிலயோ, இல்ல இப்ப நடந்த குண்டுவெடிப்பிலோ செத்தவங்கள நம்மால காப்பாத்த முடிஞ்சுதா? இல்லையே?
அப்படிப்பட்ட அபூர்வமான உசிர நாமளா போக்கிகிட்டா? சரி, நீ குதிக்கிறதப் பார்த்துட்டு சும்மா இருக்க நான் என்ன கல்நெஞ்சக் காரனா?"

"அந்தரத்துல இருந்து எப்படி வந்தேன்? அதான்யா பொழப்பு! என் வயசு என்ன இருக்கும்னு நினைக்குற? உன் வயசுதான்! ஆனா, காத்துலயும், அந்தரத்துலயும் இப்படி லோல் பட்டு கறுத்துப்போய், தோல் சுருங்கி, இப்படி இருக்கேன்! என்ன பொழப்புங்கறயா? இந்த உயரமான கட்டடத்தை, கண்ணாடிங்களால சுத்தி மூடிருக்காங்களே? அத சுத்தப் படுத்தற வேலை! மேலேர்ந்து கீழே வர ஒரு கயிறு; எத்தனை சதுர அடி துடைக்கிறோமோ அத்தன பணம்; அதுக்காக இஷ்டத்துக்கு வேகமா தொடைக்க முடியாது; அழுக்கு காட்டிக் கொடுத்துடும்! தலைக்கு பேருக்கு ஒரு ஹெல்மெட்டு; அவ்வளவு தான்; இன்சியூரன்ஸ் கிடையாது; வேலை நிரந்தரம் கிடையாது; பின்ன எதுக்கு இந்த வேலை? இப்ப, இந்த வேலைக்குத்தான் ரொம்ப டிமாண்ட்; இதுக்குத்தான் கொஞ்சம் பண அதிகம் புரளும்; உயிர பணயம் வெச்சு, கொஞ்சம் காசு பார்க்கறேன்!"

"இப்ப சொல்லு, நான் உன்னய கேள்வி கேக்கறது நியாயமா இல்லையான்னு?"

பேச நாக்கே எழவில்லை கு.ல்லுக்கு!

"முதல்ல எம்பேரே சரியில்ல; குலோத்துங்கன்னு! எங்கப்பா சரித்திர பிரியர்; அதான் எனக்கு இந்த பெயர்; இங்க வேலைக்கு வந்தப்புறம்தான், ஆளாளுக்கு கேலி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.."

"இந்த மாதிரி 'பாதோஸ்' லாம் பாடாதப்பா! பேரு பிடிக்கல, ஊரு பிடிக்கலன்னு. நிஜ காரணத்தை ரத்தின சுருக்கமா சொல்லு. கீழேர்ந்து சூப்ரவைசர் இப்பவே பார்க்க ஆரம்பிச்சுட்டான்; எங்கடா ஆளக் காணோம்னு; உன் காரணம் சரின்னா, நானே, பிடிச்சு தள்ளி விட்டுர்றேன்!"

"மூணு வருஷமாவே நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் என் கம்பெனீல வேலை செய்யறேன்; இங்கிலீஷ் கொஞ்சம் தடுமாறும்; முடிஞ்சவரைக்கும் இங்கிலீஷ்ல பேசி, அத சரிப் படுத்தறேன்.."

"அதான் சாகக் கடக்கையில ரொம்ப பீட்டர்விட்டயோ, நல்ல ஆள்யா நீ"

"குறுக்க கேலி பேசாதே! என் நிலைமையக் கேளு! ப்ரொக்ராமிங்ல நான் ஸ்ட்ராங்! அதனால், பொறுப்புகள் தேடி வந்துச்சு. யார் கண்ணு பட்டதோ, இப்ப நாலு மாசமா, என்னய ஒதுக்குற மாதிரி fபீலிங்."

"எப்படிச் சொல்ற?"

"நான் செஞ்ச ஒரு ப்ரொக்ராம் ஒரு யூ.எஸ்.களையண்டுக்கு பிடிச்சுப் போச்சு; அவன் இங்க வரச்ச, என்னை அறிமுகம் கூட செஞ்சு வெக்கல; சரின்னு விட்டேன்; அதே சப்ஜெக்டுல ரெண்டு மூணு புது ப்ராஜெக்ட் வந்தது; அதுல என்ன சேர்த்துக்கல; இப்ப என்னடான்னா, முதல்ல சொன்ன யூ.எஸ். க்ளையண்ட் ஆர்டர் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துல எங்க ஆபீஸ்லேர்ந்து 10 பேர் அங்க ப்ரொபேஷன்ல போறாங்க; அதுலயும் என் பேர் இல்ல! அந்த ப்ராஜக்ட்ல புதுசா போடற மத்த இன்ஜினீயருங்களும் என் டேபிளைக் கடந்து போறச்ச கண்டுக்காமலே போறாங்க! சரி, பேசாம பாஸ் கிட்ட நேரே பேசிடலாம்னு போனா, அவர் அப்பாயிண்ட்மண்டே தரமாட்டேங்கிறாரு! ஒரு வேளை என் இங்கிலீஷ¤க்கு பயந்துதானோ என்னை வெளிநாட்டு வாய்ப்புகள்ளேர்ந்து கழட்டிவிடுறாங்களோன்னு தோணுது! அதான்!"

"அடப் பாவி, இந்த சாதாரண விஷயத்துக்கா தற்கொலை முயற்சி!" விட்டுத்தள்ளு, வேற வேலைக்கு போகவேண்டியது தானே, இப்பதான் உங்க லைன்ல மந்தை மந்தையா ஆளெடுக்கறாங்களே!''
"அதுவும் ட்ரை பண்ணியாச்சு, ம்ஹ¥ம், வேலை கிடைக்கலே!"

"சரி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு - நீ வீட்ல ஒரே பிள்ளையா?"
"ஆமாம்"
"நீ கேக்கறதெல்லாம் கிடைச்சுடுமா?"
"ஆமாம், அப்பா பிசினஸ் பிசினஸ்னு ஒரேடியா அலைவாரு; என்னை அவர்கூட சேரச்சொன்னாரு; நான் தான், கம்ப்யூட்டர் லைன்ல பெரியாளா வரணும்னு, ஐ.டி ல சேர்ந்தேன்; சரின்னுட்டாரு, முதல் சம்பளத்துல ஒரு பைக் வாங்கிக்கிறேன்னேன்; சரின்னுட்டாரு"

"கொடுத்து வெச்சவன்யா, அப்பா எல்லாத்துக்கும் சரிங்கறாரு. ஆனா அதான் ப்ராப்ளமே; எங்க குதிக்க பர்மிஷன் வாங்கிகிட்டு வா பார்ப்போம்!"

"எ..என்ன சொல்ற?"

"ஆமாம்; நினைச்சதெல்லாம் கடைச்சுதுல்ல? அதான் இங்கயும் நீ எல்லாத்தையும் உடனே எதிர்பார்க்கிறே! கொஞ்சம் பொறு! நீயே ஒத்துகிட்ட இங்லீஷ் கொஞ்சம் இடிக்கும்னு. நல்ல வசதியான் பிள்ளதானே,ஏன் வாத்தியாரு வெச்சு ட்யூஷன் வெக்கிறது; படிக்கிறது! அத விட்டுட்டு, சுய பச்சாதாபத்துலயும், அவசரத்தாலயும் உசிர விடப்பார்த்தயே? சரி, விடு. உங்க அப்பனாத்தா உன்ன பொணமா பார்க்கவா இப்படி செல்லமா வளர்த்தாங்க? சொல்லு!

பேர் சரி இல்லங்கறியே குலோத்துங்கன் எவ்வளவு பெரிய ராஜாத் தெரியுமா? ராஜாவாட்டம் பேரு, வசதி, இப்படி பொறந்தும், பெத்தவங்க நம்பிக்கைய கெடுக்கிறத விட, சாகறதே மேல், போ, போய் குதி!"

பதிலேதும் வரவில்லை; அங்கே, மவுனம் ஒரு யுகப் புரட்சியை செய்துகொண்டிருந்தது!


சிறிது நேரத்துக்குப் பிறகு, குலோத்துங்கன் மெல்ல நடந்து வந்து, "உன்..உங்க பேர் என்ன?"

இப்பவாச்சும் கேட்டயே? 'யமன்'னு கூட வெச்சுக்க, நாந்தான் உன் உசிரு போகாம நிப்பாட்டிட்டேனே; பாரு, என் கைல கூட கயிறு! இல்ல, "கடவுள்" னு வெச்சுக்க" ..சிரித்தான்.

"என் பெயர், கருப்பய்யா; குலோத்துங்கன்கிற பேர விட நல்லாயிருக்கில்ல?
..அட, உன் லொள்ளுல, என் பொழப்புல மண்ணு. இந்நேரம் ஒரு 200 சதுர அடி கண்ணாடி துடைச்சா, நல்லா காசு பொரண்டுருக்கும்; அப்பா, கண்ணு நல்லாயிருப்பா; எனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு," என்று சொல்லி..."ஸ்வயிங்..." எனக் கயிறு பிடித்து, ஆடியபடி,கீழிறங்கி விட்டான்!

மறுநாள்..
ஆபீசுக்குள் நுழைந்த குலோத்துங்கனுக்கு, ரிசப்ஷனிஸ்ட் அவசரமாக, "எல்லா ஸ்டாfபும் பாஸ் ரூமுக்கு போயிருக்காங்க, எதோ அர்ஜண்ட் மீட்டிங்; நீங்க வந்தவுடனேயே உள்ள வரச்சொன்னாரு பாஸ்," என்றாள்!!

"அட, நான் குதிக்கப் போன விஷயம் யாருக்கும் தெரியாதே? எதற்கு பாஸ் கூப்பிடுகிறார்?" மனதுக்குள் கேள்விகளுடன்,பாஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

"வாங்க,குலோத்துங்கன்; ஸோ, வாட் இஸ் யுவர் ப்ளான்?"

என்ன இப்படி திடுதிப்னு கேக்குறாரு? எதைப்பத்தி?

"நான் நேரா விஷயத்துக்கு வரேன்; யூ.எஸ்.ப்ராஜக்ட்க்கு எல்லாரையும் கலந்தாலோசித்து பேசினதுல, 10 பேர் செலெக்ட் செஞ்சாச்சு. ஆனா, அந்த பத்து பேரும், உங்க தலைமைலதான் வேல செய்ய விருப்பப்படறாங்க; என் விருப்பம், க்ளையண்ட்டின் விருப்பம்; அதுவே, கூட வேல பார்க்கிறவங்களின் விருப்பமாகவும் ஆகி, ஏகோபித்த முடிவில், நீங்க 'மேலே' ப்ரமோட் ஆகறேங்க! ஐ,மீன், யூ ஆர் தெ பாஸ் fஆர் யூ.எஸ்.ப்ராஜெக்ட்!! என்ன பாஸ்போர்ட்டெல்லாம் இருக்குதானே? கங்கிராட்ஸ்!" எனக் கை குலுக்கினார்!!

பின்னால், பலத்த கரகோஷம், பாராட்டுக்கள்..! ஹேய்,குலோத்துங்கன். அமெரிக்கன் உன் பெயரச் சொல்லிச் சொல்லியே, மூச்சு விட்டுடுவான்; அதானாலதான் நீ பாஸ்..!" என்றான் மணி. எல்லாரும் சிரித்தார்கள்!

குலோத்துங்கனுக்கோ...

"யேய், உன் பாஸ் 'மேலே ப்ரமோட்' பண்ணார்; நேத்து நீயா, 'மேலே' டிமோட் ஆக இருந்தயே!" என்று அறைக்கு வெளியே கண்ணாடியைத் துடைத்தபடி, கருப்பய்யா கேட்பதுபோலிருந்தது!!

17 July 2006

தேன்கூடு-போட்டி - காத்தான் !

"என்னடா வாயே திறக்க மாட்டேங்கறே? நேத்து படிச்சுப் படிச்சுச் சொன்னேன்; காத்தான் கிட்ட. தலைவர் போயிட்டாரு. ராவோட ராவா, சடங்கெல்லாம் முடிச்சு, காலைல பத்து மணிக்கெல்லாம் எரிச்சரணும்னு. அதுக்கு மேலே, மினிஸ்டிரீல கொஞ்சம் வேலையிருக்கு போகணும்னேன்ல?"

" கபாலி அண்ணே, விடுங்கண்ணே; ஏதோ புதுபயலாட்டம் தெரியறான். செய்றான்ல; இதோ இப்ப ஆயிடும்!டே, தம்பி, சீக்கரம் ஆகட்டும்பா; எத்தனை கட்டைங்க வெச்ச? 8 லோடு சொன்னோம்; 7 போலத் தெரியுதே?"

"மாமா, காலைல கட்ட எறங்கறச்சே நான் பார்த்தேன்; 8 லோடு போட்டானுங்க; சரிதான்."

"பானை இருக்கா? கோடி வேட்டி, 4 வடம் ரோசாப்பூ மாலை? காத்தான் இருந்தா எல்லாம் ரெடி பண்ணீருவான்; இன்னிக்கீன்னு பார்த்து எங்கய்யா போனான்; உன்ன பார்த்தா சின்னப் பயலாத் தெரியறே! இந்த வேலைக்கெல்லாம் ரொம்ப பக்குவம், அதே சமயம் அனுபவம், வேகம் ரெண்டும் வேணும். என்னவோ போ!நான் சொல்லிகிட்டே இருக்கேன், நேரமில்ல; சீக்கிரம், சீக்கிரம்..யோவ், அய்யரே, சந்தனக் கட்டை கொண்டாந்தீங்களா?"

"இல்லண்ணா, தலைவரை வண்டிலேர்ந்து இறக்கறச்சே, நம்ம சிஷ்யப் பைய கூடவே வருவான்ல; சந்தனக் கட்டை அவன் கைல இருக்கு; கட்டாயம் கொண்டாருவான்."

பக்கத்தில் ஒருவன் ஒத்து வாசித்தான்.."எல்லாம் ரெடிண்ணே; புதுசுன்னாலும், பைய கெட்டி, எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டான்; என்ன வாயத்தான் கொஞ்சம்கூட திறக்க மாட்டேங்கிறான்!"

கீழே குனிந்த படி வேலை செய்து கொண்டிருந்த முத்துவோ, கருமமே கண்ணாயிருந்தான். கடகடவென கட்டைகள் அடுக்கப் பட்டன. சமயத்தில் சில விளாறுகள், சில்லுகள் கையில் ஏறினாலும், ரத்தம் கசிந்தாலும் பொருட்படுத்தாமல், கட்டைகள் மளமளவென மேடையேறின! சுற்றி கட்டைகள், நடுவில் நன்கு காய்ந்த விராட்டிகள், அதற்கு மேலே, சிறிய சைஸ் கட்டைகள்; இப்படி. ஒரு வழியாக அடுக்குதல் முடிந்து, தலையை நிமிர்த்தி," ரெடி" என்றான்.

செல் போனில் கட்டளைகள் பறந்தன! மணி எட்டு! அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தலைவரின் பூத உடலும், கழகக் கண்மணிகளின் ஆர்பாட்ட ஊர்வலமும் சுடுகாட்டை அடைந்தன! தாரை, தப்பட்டை, தப்பாட்டம், ஒப்பாரி, மலையென மாலை.. இப்படி கட்சிப் பயலுகள் நன்றாகவே ஏற்பாடு செய்திருந்தனர்! எல்லாம் முடிந்து, சரியாக 9.30க்கு அடுக்கிய கட்டைகளுக்கு மேல் தலைவரின் பாடை வைக்கப் பட்டு, ஒப்பாரி, மயக்கங்கள் இத்யாதி நாடகங்களுடன், சிதைக்கு அவர் மகன் (வருங்கால தலைவர்?) தீ வைக்க, சுடுகாட்டுப் படலம் நன்கே முடிந்தது.

கும்பல் ஒட்டுமொத்தமாகக் கலைந்தவுடன், அண்ணன் கபாலி தனது பரிவாரங்களுடன், முத்துவினருகில் வந்தான்.
"என்னய்யா, காத்தான் கடைசி வரைக்கும் வரல? தலைவர்னா அவ்வளவு இளப்பமாப் போச்சா? இப்பதான்யா எதிர்கட்சி; நாளைக்கு? ம்ம்.. சரி, சரி என்ன செலவாச்சு, சொல்லு தரேன்..."

அதற்குள், பின் பக்கமாக வேலை முடிந்து பையெல்லாம் முடிந்துக் கொண்டு வந்த சாஸ்திரியின் சிஷ்யன் முத்துக்கிருஷ்ணன், அவசரமாக, கபாலி கிட்டே வந்து, "அண்ணா, இது முத்து! நம்ம ஹைஸ்கூல்ல வாத்தியார்! இவன்..ஸாரி, இவரெங்க இங்க வந்து..?"

"யோவ், இன்னாய்யா இது? உம்மாதிரி குஷால் வேல செய்ற ஆளுக்கு எதுக்குய்யா இந்த வேலைல்லாம்? என்ன ரெட்ட வேலை பார்க்கறியா? இதக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா? காத்தான் பொழப்பக் கெடுக்கறயா, இல்ல இங்கயும் ஷிப்டு, கமிஷன்னு வந்துருச்சா? வாத்திண்றாரு அய்யரு, நீ என்னடான்னா பொணத்த எரிக்க வரயே?"

"இப்ப நான் பேசலாமா? +2 பசங்களுக்கு ராத்திரி இலவசமா எக்ஸ்ட்ரா க்ளாஸ் எடுத்துட்டு வரப்ப, அய்யா, ரொம்ப இருமிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் போல மருந்து குடுத்துட்டு, சாமானெல்லாம் அடுக்க உதவி பண்ணேன்; பக்கத்துல இருந்த என்னக் கூப்பிட்டு, "யப்பா, எல்லாம் ரெடி; தலைவர காலைல வெக்க வராங்க; பத்து மணிக்குள்ள எல்லாம் ஆயிறணும்; அதனால நீ சுருக்க எந்திரிச்சு, எனக்கு உதவியா ஒரு கை கொடுத்தா, வேலை நேரத்துல முடிஞ்சுடும்," னார்!

காலைல 5 மணிக்கு எந்திரிச்சுப் பார்த்தா, அவர வீட்ல காணல; அவசரமாத் தேடி வந்தா, சாமானெல்லாம் இங்க வரிசையா அடுக்கிக் கிடக்கு; ஒரு பக்கம் இருமிகிட்டே, கட்டை அடுக்கி கிட்டு இருந்தாரு...

"ஒரு வார்த்தை ஓங்கிக் குரல் கொடுத்தா, எந்திரிச்சுருப்பேன்ல?" ன்னு கேட்டதுக்கு, "அட, நீ பகல் பூரா பசங்களோட கத்தி கத்தி லோல் படறே; அசந்து தூங்கிட்டு இருந்தே, சரி, எழுப்ப வேணாம்னு நானே, மெதுவா எல்லா வேலையையும் முடிச்சிட்டேன்," ங்கறார்!

"என்னய்யா, கொஞ்சம் இருங்க, ஒரு வா காபி போட்டு கொண்டாறேன்,"னு கிளம்பின என்ன, தடுத்து நிறுத்திடார்;
"இருப்பா, ஒரு வா தண்ணி கொடு போதும்,"னு சொல்லி என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு அப்படியே என் முகத்தப் பார்த்தவர்தான்...

"போய்ட்டார்! என்ன பண்றதுன்னே தெரியல; ஒரு பக்கம் இவரு, மறு பக்கம் உங்க வேலை! சரின்னு மனசக்கல்லாக்கிகிட்டு, அடுக்கின கட்டைலயே, அவரக் கிடத்தி, அவருக்கு கொள்ளிய வெச்சு எரியூட்டிட்டு, புதுசா இந்தப் பக்கம் தலைவருக்காக கட்டைங்கள அடுக்க ஆரம்பிச்சேன், அதான் லேட்டாயிடுச்சு!"

ஓஹோ, அதான் வாத்தியாரு, காத்தான் வேலையச் செஞ்சீகளா? பார்றா, காத்தான் வீட்ல பேயிங் கஸ்ட் வேறயா? இக்கட்ல மாட்டிகிட்டு, அதான் லோல் பட்டீகளோ? உங்களுக்கு எதுக்குய்யா இந்த வேல? சரி, வரேன்; காத்தான் இப்படி திடீர்னு மண்டையப் போடுவான்னு நான் எதிர்பார்க்கலை; கொடுக்கல் கணக்கிருந்தா அவன் கிட்ட கொடுப்பேன்; வாத்யாரு, உங்ககிட்ட என்னத்த தர?"

"பரவாயில்ல கொடுங்க; நான் வாங்கிக்கிறேன்; கணக்கு கணக்குதான? இதோ செலவு எழுதி வெச்ச பேப்பர்!"
"ஏய், வாத்தி! உனக்குதுக்குய்யா குடுக்கணும்? பொணம் எரிக்க கட்டணத்த நேத்தே ஆபீசுல கட்டி ரசீது வாங்கியாச்சு; சாமான்களுக்குத்தானே; உங்கிட்ட எப்படி கொடுக்கறது? போய்யா, அடுக்கி வெச்ச கட்டைலதான் கை வெச்சன்னு பார்த்தா, இப்ப காத்தான் பணத்துலயும் கை வெக்கிறயே! வேணும்னா, அவரு யாராச்சுமிருந்தா அவங்கிட்ட கொடுக்கலாம், சொல்லு.."

"நாந்தான் அவர் பையன்; காத்தான் என் அப்பாதான்! அவர் பேரு மட்டும் 'காத்தான்' இல்ல. அவர் சொல்லும் அப்படித்தான்; அதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது! இப்பதான் அவர் நெஞ்சு நல்லா வேகும்!" உடைந்து போய் அழும் வாத்தியார் முத்துவை எழுப்ப அங்கே யாருக்கும் திராணி இல்லை!

13 July 2006

தேன்கூடு-போட்டி-மரணக் குறியேடு!

வெந்து எரிந்தாலும் வெட்டுகுழி புதைந்தாலும்
வெளிச்சத்துக்கு வந்த உயிர் எத்தனை?

பிறந்து இறந்தாலும் சக்கரம் சுழன்றாலும்
பிறருக்கு செய்த பணி எத்தனை?

பிறப்பைக் கண்டாலும் இறப்பைக் கண்டாலும்
குறிப்பை அறிந்த தலை எத்தனை?

அலைந்து அளந்தாலும் அளந்து அலைந்தாலும்
முதல் முடி கண்டோர் எத்தனை?

அத்தனையும் ஆய்ந்திடுமுன் பித்தனைப் போல்
ஆகும் நிலை கண்டோர் எத்தனை?

மரணமெனும் சொல் கேட்டு கரணமடித் தாடும்
மனம் சரணம் செய்ய இனி

உன்னுள் தேடு; உன்-உள் தேடு இனியிச்
சொல்லை - பின்னால் போடு !

10 July 2006

தேன்கூடு போட்டி - 'மரணக் கதைகள் - 2

காதல் : சாதல் 50:50 !!

இதுவும் உபனிஷதங்களில் வரும் ஒரு அழியாக் காதல் பற்றிய காவியம்!

கந்தர்வர்களின் அரசனுடன் சல்லாபித்ததால், தேவகன்னிகை அப்ஸரஸுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூலோகத்தாய்மார்கள் போல், குழந்தை மேல் பிரியமோ, அனுதாபமோ வராதவர்கள் இத்தேவ கன்னிகைகள்! குழந்தையை ஒரு ஆசிரமத்து வாசலில் போட்டுவிட்டு போய்விட்டாள்!

ஸ்தூல கேசர் எனும் ரிஷி அந்த குழந்தை மேல் இரக்கம் கொண்டு, ப்ரேமதர்வா எனப் பெயரிட்டு, எடுத்து வளர்த்து வந்தார்.

ப்ரேமதர்வா பக்தியும், மிக்க அழகும் உள்ள பெண்ணாக வளர்ந்தாள். ப்ருகு முனிவரின் கொள்ளுப்பேரரான ருரு எனும் ரிஷிகுமாரன், ப்ரேமதர்வாவின் அழகில் மயங்கி, அவளை மணமுடிக்க பெரியவர்களிடம் பேசி முடித்து, மறுநாள் நடக்கவிருக்கும் கல்யாணக் கனவுகளில் மூழ்கி அயர்ந்து தூங்கிப் போனான்!

மாலைவேளையில் தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரேமதர்வா, அவளது விதியின் படி, காலம் முடிந்து, ஒரு பாம்பு கடித்து, அக்கணமே இறந்து போனாள்! இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்!

பொழுது யாருக்கும் சரியாக விடியவில்லை! ஆசிரமத்து முனிவர்களோ, மணவறை பிணவறை ஆகிய காலத்தின் கோலத்தை எண்ணி ஓலமிட்டுக்கொண்டிருந்தனர்! வளர்த்த முனிவர் ஸ்தூலகேசரோ, பச்சை பசும் கொடி போன்ற இத்தனை அழகான பெண்ணை ஏன் இறைவன் தன்னிடம் வளர விட்டு, பின்னர் தளர விட்டார் என எண்ணி எண்ணி விம்மினார்!

செய்தி கேட்டு வந்த மணாளன் ருரு, துக்கம் மேலிட, காட்டுக்குள் நடந்து போய், மனம் அமைதியடைய ஒரு குன்றின் மேல் அமர்ந்து, ஆண்டவனை துதிக்கலானான்!

"தேவர்களே, தவத்தில் திளைத்த என்னுள், காதல் முளைத்ததெப்படி? வினையோ, விதியோ? ப்ரேமதர்மாவின் மேல் ப்ரேமை வந்தது ஏன்? அவள் மரணத்தை என் மனம் ஒப்பாத்தது ஏன்? ஏன்? ஏன்? என் தவம் நிஜமென்றால், தவப்பயன் நிஜமென்றால், பதில் சொல்லுங்கள்! என, வானத்தை நோக்கி அரைகூவல் விடுத்தான்!

பளீரென அங்கு ருருவின் முன் தோன்றினான் ஒரு தேவன்! அவன், " இது காலத்தின் கட்டாயம். அவள் தந்தை கந்தர்வ ராஜனே, அவள் உருவானதும் மறந்தான்; தாய் அப்ஸரஸ், பெற்றதும் துறந்தாள்! வளர்ப்புத் தந்தை ஸ்தூல கேசரோ, விதியை எண்ணி நொந்து அங்கே, சிதைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார்!" என்றான்.

சினத்தில் ருரு, "பின் என் காதல் துச்சமானதா? காடு நோக்கிப் போனவனை வீடு நோக்கி வரச்செய்த அவளை நான் மனதார நேசித்துவிட்டேன். மணவறையில் அமராவிட்டாலும், என் மன அறையுள் சென்றுவிட்ட ப்ரேம தர்வாவை யார் வெளியே கொண்டு செல்ல இயலும்? எனக்கு அவள் வேண்டும்; ஆசை காட்டி மோசம் செய்யும் இந்த கால விளையாட்டை என்னிடம் சொல்லி, சாபத்தை பெறாதீர்கள்," என்று எச்சரித்தான்!

முனிவனின் சாபம் எப்படி வலுவானது என்றறிந்த தேவன், "சரி; உன் ஆயுளில் பாதியை அவளுக்கு தர இசைந்தால், அதையும், அவளது தந்தையும், யம தர்மனும் ஒப்புக்கொண்டால், நீங்கள் இருவரும் சில காலம் உயிர்வாழலாம்! " என்று சொன்னான்.

தன் உயிரில் பாதியை யார் தருவர்? இந்த ஒரு நிபந்தனையைக் கேட்டு, ருரு மடங்கி விடுவான் என்றெண்ணிய தேவனின் எண்ணத்தில் விழுந்தது அடி!! எப்படி?

ருரு சொன்னான்!"ஐயா, என் தவப் பயனில் பாதியைத் தருகிறேன்; அதனால், யமதர்மனும், கந்தர்வ ராஜனும் என் முன்னே வரட்டும்; மீதி தவப் பயனை, என் ஆயுளில் பாதியை என் உயிருக்கும் உயிரான ப்ரேம தர்வாவை உயிர்பிக்கத் தாரை வார்க்கிறேன்! எனது ஆயுள் ஒரு நாள் என வைத்துக் கொள்ளுங்கள், இருவரும் சேர்ந்து அரை நாள் வாழ்வோம், அத்தகைய நொடிப்பொழுதான வாழ்வுகூட எனக்கு ப்ரேம தர்வாவுடனே இருக்கவேண்டும்; அவளில்லாமல் நானில்லை " என்றான்!

ஆச்சரியப்பட்டான் தேவன்; அதிசயித்தனர் தேவர்கள்!

தர்மராஜனான யமனும், கந்தர்வ ராஜனும் அவ்விடத்தில் தோன்றினர்!
ருருவின் வேண்டுகோள் நிறைவேறியது!!உயிர் பெற்றெழுந்தாள் ப்ரேமதர்வா; காதல் கணவனுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்து ஒரு அழியாக் காவியம் படைத்துப் போயினர்!

09 July 2006

தேன்கூடு-போட்டி: மரணம்- குட்டிக் கவிதைகள்!

கொலை
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!

அடக்கம்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்த
அமரரும், அமரராய் அடக்கம்!
அடக்கம் செய்யப்பட்டார்,
அமைதியாய் அமரரானார்!

காலமானார்
அக்காலம், இக்காலம் எதிர்காலம்
எக்காலமாயினும்,என்றும் மாறா
'இறந்த' காலம்; ஒருவர்
போனதும் சொன்னார்- அவர்
"காலம்" ஆனார்!!

06 July 2006

தேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1

மரணத்தை வென்றவன்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! என பாரதி பாடியதை ஒரு சிறுவன் வாழ்ந்து காட்டியுள்ளான். ஒருவனை, "இவனைப் போல் இரு, அவனைப் போலிரு" என்று உதாரணம் காட்டுவதுபோல், நான் இருக்க விரும்புவது, 'நசிகேதனை'ப் போல்!
நசிகேதன்? யாரிவன்?
கதோபனிஷதத்தில் வரும் உபகதை இந்த நசிகேதன் புராணம்.
உபனிஷதங்கள், வேதசாரங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிய வைக்க கதைகள் மூலமாக ஏற்படுத்தப் பட்டவை.

தனது தந்தையார், வயதான பசுக்களையும், வற்றிப் போன மாடுகளையும், தானம் என்ற பெயரில் தருவதைக் கண்ட அப்பாவிச் சிறுவன் நசிகேதன், "ஏனப்பா இவற்றை தானமாகத் தருகிறீர்கள்?" எனக் கேட்டான்.பதிலில்லை."வயதான மாடுகளாயிற்றே, பலனில்லையே?" பதிலில்லை"தானம் தருவது அடுத்தவர் பயன்படுத்தத்தானே?"பதிலில்லை."இந்த மாடுகளை ஏன் தருகிறீர்கள்?''
எரிச்சலடைந்த அவன் தந்தை, "அட, வேண்டாததெல்லாம்,தானம் தான், சும்மாயிரு," என்று அதட்டினார்.
சற்று மவுனம் காத்த சிறுவன்,மீண்டும், 'வேண்டாதவை' என்றால் என்ன?" என்றான்.
"பயனற்றவை வேண்டாதவை."
அப்படியானால், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்னால் உங்களுக்கு என்ன பயன்?"
பதில் இல்லை.
"அப்படியானால் என்னையும் தானமாகத் தந்துவிடுவீர்களா? யாருக்கு?"
பொறுமையிழந்த அவன் தந்தை, "உன்னை யாருக்குக் கொடுப்பது, யார் பெற்றுக்கொள்வார்? அந்த யமனுக்குத்தான்,போ! பேசாதே!" எனக்கூச்சலிட்டார்!"ததாஸ்து" என மந்திரம் சொல்லவும், தாரை வார்க்கும் நீர் தறையில் விழவும் சரியாக இருந்தது.
அப்பொழுதும், முகத்தில் மகிழ்ச்சியே காட்டி நின்றுகொண்டிருந்தான் நசிகேதன்!
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தந்தை, மகனை ஆரத்தழுவி,கண்ணீர் விட்டார்!

"மகனே, தவரிழைத்தேனே? ஒன்றா, இரண்டா?மனமில்லா தானம், உபயோகமில்லா தானம், சுய அறிவின்றி தானம்!
இதனால் நான் என்ன பலன் கண்டேன்? மகனை இழந்ததைத் தவிர?" கண்ணை துடைத்துக் கொண்டு, கேட்டார்," ஆமாம், நான் அழுகிறேன், நீ சிரிக்கிறாயே? " என ஆச்சரியத்துடன் வினவினார்!

தந்தையைப் பார்த்து நசிகேதன், "அப்பா, சந்தோஷப்படுங்கள்!, நீங்கள் சொன்ன மற்ற தவற்றையெல்லாம் சரி கட்டும் விதமாக, பெற்ற மகனையே, அதி உத்தமனான, நெறி தவராத தர்மராஜன் எனப்படும் யமதர்மனுக்குத் தந்ததிலேயே, தங்களுக்குறைந்த யாகத்தின், தானத்தின் பலன்கள் கிட்டும். அது போக, என்னால் என்ன பலன் என்று நான் நினைக்கையில், தங்கள் தானத்திலேயே, மிக அபூர்வமான தானத்துக்குப் பாத்திரமாகி, நான் புதிய உலகைப் பார்க்க போகிறேன்! எனவே, நிம்மதியும் ஆவலுமாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன்!" என்ற மகனைக் கண்டு மலைத்தபடி நிற்கிறார் தந்தை!!

யமலோகம் போன நசிகேதன் 3 நாட்கள் காத்திருந்து, யமனை சந்திக்கிறான். பின்னே? நாள்குறிக்கப்படாமல், திடீரென தானமாக வந்தவன் எப்படி உள்ளே ஏற்றுக் கொள்ளபடுவான்? எனவே, மூன்று நாட்கள் வாசலிலேயே காத்திருக்கும்படி ஆகிவிட்டது நசிகேதனுக்கு!

அதனால் மனமிறங்கிய யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்களைத் தருகிறார்.

குழந்தை நசிகேதன்
1) என் தந்தை எனக்காக கவலை படக்கூடாது
எனும் வரத்தையும், இனி கேட்கும் கேள்விக்கு பதில்களைத் தருமாறும் கேட்கிறான்:-

2) நெருப்பினால் செய்யும் யாகத்தின் ரகசியம் என்ன?
3) மரணத்துக்குப் பின்னால் என்ன?

யமதர்மனின் பதில்கள்?

1) தன்னுள் உணர்வோர், காலத்திற்கு அப்பாற்பட்ட 'தன்னி'லை அடைவோர், மரணத்தைக் கண்டு அஞ்சார். அவர்கள் சாவுக்கு சாவு மணி அடித்தவர்கள்! உன் தந்தை எப்போது உன்னை எனக்கு தானம் அளித்தாரோ, அப்போதே அம்மாதிரியான ஞானத்தைப் பெற்றுவிட்டார்!

2) இருப்போர் இல்லாதவர்க்கு கொடுப்பது தானம்; கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகளுக்கு அவிர்பாகமாக, நீர், நெருப்பின் ஆவி (புகை) மூலமாகத் கொடுப்பது, யாகம்.

3) மரணத்துக்குப் பின்னாலும் வாழ்வின் பல உண்மைகள் அறிய அந்த ஆத்மா பல ப்ரயாணங்களை மேற்கொள்கிறது. நீ வந்து, கண்டது போல்!" எனச் சொல்லி சிரிக்கிறான் யமதர்ம ராஜன்.

தர்ம ராஜன் அல்லவா? அநியாயமாக அங்கே வந்துவிட்ட சிறுவனுக்கு, உபதேசங்கள் செய்து, ஞான ஒளிபெற்ற மாமுனியாக மீண்டும் அவனது இல்லத்துக்கே அனுப்பிவைக்கிறான்.

மரணத்தை வென்ற நசிகேதன் ஞானி ஆகிறான்! மரணத்தை தனது ஞானத்தால் வென்று மீண்டும் பூமிக்கு வருகிறான்!!
இவனைப்போல் இருக்க வேண்டும் என்று நான் சொன்னது, 'அல்பாயுசில் மேலே கிளம்ப' வேண்டுமென்று சொல்ல இல்லை.
அவனது, அறிவுப்பசிதான், அவனை புதிய அனுபவம், புதிய உலகைக் காணச்செய்தது!
அவன் அப்படி என்ன செய்தான்? கேள்விகள் கேட்டான்; யாரை? தனது தந்தையை.
எதற்கு? அவன், அவனது தந்தை எந்த வேலையையும் சரியாக செய்வார், பதில்களை சரியாகச் சொல்வார் என நம்பினான்!
என்ன கேள்வி கேட்டான்? சாதாரணக் கேள்விகள் தான்.
தனது தந்தை செய்யும் எந்த காரியமும், காரணமின்றி செய்யப் படாது என அவன் நம்பினான். அது பொய்க்கையில், கேள்விகள் பிறந்தன, பறந்தன!
இப்போது யோசித்துப் பாருங்கள்? நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா?
நம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.
அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப் புரியும்படியாக!
கேள்வி கேட்பவர்களால்தான், இன்று வளர்ச்சி உண்டாகிறது!
'ஏன் என்ற கேள்வி நான் கேட்காமல் வாழ்ந்ததில்லை,' என என்.ஜி.ஆர். பாடவில்லையா?
எனவே, நசிகேதனைப் போல் இருக்க முயலுங்கள்! கேளுங்கள், பயப்படாதீர்கள்!

29 June 2006

"கதைச்சது" வெளிவந்தது!!

நிலாராஜ் தனது பதிவில் சொன்னது போல், போட்டி என்றால், எங்கிருந்தோ நேரம் கிடைத்துவிடுகிறது.

அவசரப் பிரசவமானாலும், சுகப்ரசவமே! நிலாச்சாரல் ஆண்டு நிறைவுப் போட்டிக்கான கடைசி நாள், கடைசி நொடித்துளிகள் இருந்தபோது, இந்திய நேரப்படி, மிகக் கடைசியாக சமர்ப்பித்த சோம்பேறிப் போட்டியாளன் நானொருவனாகத்தான் இருக்கமுடியும்!! நிலா பல போட்டிகளில் பங்கு பெற்று பரிசு பெற்றாலும், அவரது இணைய பத்திரிகையில் எனது கதையும் கவிதையும் வெளியிடப்படுவதில் எனக்கு பரிசு கிடைத்த மகிழ்ச்சி!! அனுராதா ரமணனும், கபிலன் வைரமுத்துவும் எழுதிய வரிசையில், இந்த சின்னபையலின் கிறுக்கலும் உட்புகுந்தது அதிசயமே!! அவற்றின் சுட்டி இதோ:-

http://www.nilacharal.com/stage/kathai/tamil_story_265a.asp
http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_264a.asp


போட்டி என்றதும், நினைவுக்கு வருகிறது ஒரு முடிவே தெரியாத போட்டி! துவக்கு.காம் "புலம் பெயர்ந்தவர்"களைக் கருவாகக் கொண்டு கவிதை எழுத ஒரு போட்டி அறிவித்து நிறைய பேர் எழுதி அனுப்பினார்கள். இன்றுவரை என்ன ஆயிற்று தெரியவில்லை; யாரேனும் கண்டுபிடித்துத் தருவார்களா?

29 April 2006

கல்லிலே கலை வண்ணம் -6

வரலாறு.காம் என்று பொன்னியின் செல்வன் யாஹ¤ குழுமத்திலிருந்து சிலர் தனியாக ஆரம்பித்து, அது இப்போது சரித்திரம் படிப்பவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழ் ரசிகர்கள், தமிழ்நாட்டுக் காதலர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது! நான் எழுதிய புள்ளமங்கைக் கோயில் சிற்பங்களை படித்த நண்பர் சேஷாத்ரி கோகுல், தான் வரலாறு.காமில் எழுதிய புள்ளமங்கை கட்டுரையை மீண்டும் உயிர்பித்து, எனது சில படங்களோடு சேர்த்து வெளியிடுள்ளார்! அவருக்கு நன்றி. நண்பரின் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கணினி வல்லுநர் எப்படி சரித்திரத் தேர்ச்சி கொண்டார் என்பதற்கு விடை :- இம்மாதிரியான சிற்பங்களை பார்க்கும் எந்த கலா ரசிகனுக்கும், நமது முன்னோரின் உயரிய கலை ரசனயும், திறமையும் வெளிப்படும்; அது நம்மை சரித்திரக் காதலன்/ காதலி ஆக்கிவிடும். (வரலாறு.காம் மா.லாவண்யா கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதால் )
ஒரே சிலை இருவரின் உள்ளங்களில் எப்படி வேறு வேறு உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளது என்பது பற்றியும் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவே, இந்த பதிவு.அந்த சுட்டிகளை மீண்டும் ஒரு முறை தருகிறேன்:-

http://varalaaru.com/Default.asp?articleid=325http://maraboorjc.blogspot.com/2006/01/1.html
http://maraboorjc.blogspot.com/2006/02/2.html
http://maraboorjc.blogspot.com/2006/02/3_06.html
http://maraboorjc.blogspot.com/2006/02/4_08.html
http://maraboorjc.blogspot.com/2006/02/5.html

12 April 2006

கோவில்களை யார் சீரமைப்பது?

கீதா சாம்பசிவம் கேட்ட ஒரு கேள்வி என்னை இந்த பதிவு எழுத வைத்து விட்டது! இந்து என்ற போர்வையை போர்த்திக்கொண்டுதான் நான் கோவில் பணி செய்யவேண்டுமா? ஒரு நாட்டுப் பற்று உள்ள இந்தியனாக இதை நான் செய்யக் கூடாதா? என நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால்,ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லக் கூடாது என்பார்கள். அதனால் அதை தவிர்ப்போம். அதற்கு அவர்களே கூறிய காரணம் என்ன தெரியுமா? "எங்காளுங்களுக்குத் தெரிஞ்சா விலக்கி வெச்சுடிவாங்க சார். எனக்கு மனசுல ஈரமுண்டு, செய்றேன், ஆனா ஆளுங்கள பகைச்சுக்க தைரியமில்ல," என்றுதான். அத்தகைய நல்லுள்ளங்கள் கையால் எத்தனையோ கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1) உப்பளம் நிறைந்த இடம். ஏறத்தாழ 20 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்த மானதை ஒரு கிருத்துவர் வைத்துள்ளார். அவர் அதில் சில இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து, பெண்ணின் கல்யாணத்துக்கு விற்க முற்படுகிறார். அது, கோவிலுக்குண்டான இடம். அது பாழடைந்துள்ளது. குழு அவரிடம் மன்றாடுகிறது. கடைசியில் தானாடாவிடாலும் தன் சதையாடுமல்லவா? "ஏம்பா. இந்த நிலத்த வித்து உன் பொண்ண கட்டிக்கொடுக்க போற. சிவன் சொத்து குல நாசம்னு சொல்வாங்க; அப்படியும் பொண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறேன்னு சொன்ன நிஜமாலுமே நீ மனுஷனே இல்லைய்யா," ன்னு ஒரு நண்பர் சத்தமாகவே வாதிட்டார்!
எதிரிலே இருந்தவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்!என்ன நினைத்தாரோ தெரியாது."சார், சரி சார்- என் பொண்ணு மட்டும் இந்த இடத்த விக்காம நல்ல எடத்துல செட்டிலாகட்டும், அந்த சாமி சத்தியமா சொல்றேன், அந்த சாமி கும்பாபிஷேகம், என்கைல தான்!" என்றார்!

குடும்ப சமேதராக, கோபுரம் மேல் ஏறி, அவர் கையாலே கும்பாபிஷேகம் நடந்தது என்பதையும் நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா?

2) சேரி - மிகுந்த மக்கள் எதிர்ப்புக்கிடையில், சேரியிலுள்ள அம்மன் கோவில் கட்டிமுடிக்கப் படுகிறது. அவர்களில் முதியவர் ஒருவர் பூசாரி ஆக, ருத்ராக்ஷம் கட்டிக்கொள்கிறார். வழக்கமாக கோவில் கட்டும் வேலை முடிந்தது, ஒரு வைதிகரை வைத்து, மந்திர கோஷம்முழங்க, பழைய கோவிலை புதுப்பித்ததற்காக பீடாபரிகாரங்கள் செய்து, பின்னர் ஊர் மக்களிடம் ஒப்படைப்பது எங்கள் வழக்கம். கும்பாபிஷேக நாள் - மாம்பலத்திலிருந்து வைதிகரும் தயார். அங்கே போனபின் தான் வைதிகருக்குத் தெரிந்தது, அது சேரி என்று. அவர் தயங்கியதைப் பார்த்த ராமமூர்த்தி, "ஏன் அங்கதான் கருமாரி அம்மன் இருக்கா, இருக்கக் கூடாதா? வாங்க," என்று அவரை இழுத்துக் கொண்டு போகாத குறை.

முணுமுணுத்துக் கொண்டே, பூஜை நடந்தது! (மந்திரமா, கவலை முணுகலா, யாருக்குத் தெரியும்?). எல்லாம் முடிந்தது. காலையிலிருந்து பூஜையிலேயே கண்ணாக இருந்து விட்டதால், நல்ல பசி! பிரசாதம் என வைத்த வெண்பொங்கல், சேரி மக்களிடையே விநியோகம் ஆகிவிட்டது! அந்தணருக்குப் பசி, ஆனால் வெளியே சொல்லமுடியவில்லை! அப்போது அங்கிருந்த ஒரு வயதான அம்மாள், தயங்கியபடி நின்றதைப் பார்த்து, என்ன என்று வினவுகையில், அவர் இவர்கள் பசியாக இருப்பார்களே என்று கடையிலிருந்து 'பன்'னும், தன் கையால் டீயும் போட்டு வைத்திருக்கிறார், ஆனால் மற்றவர்கள்,"அட, அவங்க ஐயருங்க.அதெல்லாம் சாப்பிட மாட்டாங்க," என்று சொல்லி கிழவியைத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது! ராமமூர்த்தியோ, "அட, பசி கொல்லுது. என்னம்மா, அந்த மகமாயியே, பசி தீர்த்த மாதிரி,கொண்டாம்மா," என்றார். வைதிகருக்கும் , அவர் மறுக்க மறுக்க, கையில் டீயும் பன்னும் திணிக்கப்பட்டது! பூஞ்சை உடம்பு, வெயில், பசி தாங்கவில்லையென்றால்?

எல்லாரும் கிளம்ப எத்தனிக்கையில், "இருங்க, இருங்க" என்று இரண்டு மூன்று பெண்கள் கைகளில் கூடை ஏந்தி ஓடி வந்தார்கள்! என்ன என்று கேட்டால், "சாமி, எங்க ஊர்லேர்ந்துதான் கத்திரி, வெண்டையெல்லாம் மார்கெட்டுக்கு போகுது. அதான், நல்லபடியா கோவிலைக்கட்டி, எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தீங்கன்னு, ரெண்டு கூட கொண்டாந்தோம்; வேற நாங்க என்னத்த கைமாறா கொடுக்கறதாம்?" என்றார்கள். ராமமூர்த்தியோ," அய்யருதான் எல்லாம் செஞ்சு வெச்சாரு, ஒரு வாரம் ஓடும்; காய்கறிய அவருக்கே கொடுங்க." என்றதும், சந்தோஷமாய் இன்னும் மேலே புடலை, கீரை என்று கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்த வைதிகர்,கண்களில் நீர் மல்க, "ராமமூர்த்தி, இவங்க அன்புக்கு முன்ன காசு, பணம், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல.இனி இப்படி நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன்," என்றார்.!!

3) மிக அற்புதமான சுயம்பு லிங்கம்- காட்டில் விழுந்து கிடக்கிறது! பார்த்து, பதைபதைத்து, நேராக நிமிர்த்திவைத்து, ஊருக்குள் விசாரிக்கிறார். அது மிகவும் புராதன கோவில் இடிபாடுகளில் இருந்ததாகவும்,இப்போது கேட்பாரற்று இருப்பதாகவும் அறிகிறார். சரி, அடுத்த முறை வரும் போது,ஒரு ஓலைக் கூரையாவது ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணிக் கொண்டே போகிறார்.
மாதம் முடிந்து அந்தப் பக்கமாய் போகையில், ஆச்சரியம் காத்திருக்கிறது! அழகாக fஐபர் க்ளாஸ் பச்சைக்கூறை வேய்ந்த, குளிர்ந்த நிழலுள்ள கோவிலாய் காட்சியளிக்கிறது அந்த இடம்! யார் செய்தது என விசாரித்தால், ஒரு முஸ்லிம் அன்பர் - என பதில் வருகிறது!! அருகிலேயே fஐபர் ஷீட்டுக்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்; போய் பேசினால்,"சார், எப்படீன்னாலும், எங்க பாட்டன் முப்பாட்டன் கலத்து சாமி அது. அவங்க இருந்தா வெய்யில்ல காய வைப்போமா? அதான்; என்னால முடிஞ்சது!" என்றாராம்.உடன் சென்றிருந்த பத்திரிகையாளர் உடனே, செய்தி, புகைப்படம் சேகரிக்கத் தொடங்க, "சார், வேணாம் சார்; ஏதோ தோணிச்சு, செஞ்சேன். பேப்பர்லல்லாம் போட்டா, எங்க சமூகத்துக் காரங்க, என்னய தள்ளி வெச்சுடுவாங்க; அப்புறம் என் பொண்ணுக்கு யாரும் பையன் கொடுக்க மாட்டாங்க!," என்றாராம்.

இப்படி பலப் பல உதாரணங்கள். ஏன், கோவில் விழாக்கள் என்றால், ஷேக் சின்னமௌலானா நாகஸ்வரம் வாசிக்கவில்லையா, அவருக்கு கோவில்காரார்கள் மரியாதை செய்யவில்லையா?

காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை உதாரணத்தை சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.

காஞ்சி மடத்தில் அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. அப்போது காஞ்சி பரமாச்சாரியாரிடம் (பரமாச்சாரியார்-100 வயதைத் தொட்டவர்; இப்பொழுது உள்ளவர்கள் இல்லை, அவர்களின் குரு) சிலர் போய், "அவங்க, காலைல 4 மணிக்கே பெரிசா மைக்க அலறவெக்கிறாங்க; பேசாம உபத்திரவ கேசுன்னு சொல்லி, போலீஸ்ல சொல்லலாமா? இல்ல அவங்கள வேற எங்கயாச்சும் போக வைக்கலாமா," என்று கேட்டதற்கு, அவர், "அட, அவா, கரெக்டா, டாண்னு, நேரத்துல ஓதுறத ஆரம்பிக்கறா. அந்த சப்தம்தான் எனக்கு அலாரம்! அதை ஏன் நிப்பாட்டறேள்? வேண்டாம், அவா அனுஷ்டானம் அவாளுக்கு, நம்ம வழி நமக்கு. அதை எப்படி இடைஞ்சல்னு சொல்றது?" என்றாராம்.!!

09 April 2006

நட்சத்திர வந்தனம்..! <|>

மங்களம் குலுங்கி என்றும் அன்பு மேவி இன்பமாக
வான்வளம் பெருகி வாழ்க பூமியெல்லாம்
சங்கடங்கள் இன்றி சண்டை சச்சரவும் இன்றி வாழ்க
சஞ்சலங்கள் இன்றி வாழ்க தேசமெல்லாம்!....

எனத் தொடங்கும் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் வரிகளைக் கூறி எனது நட்சத்திர வாரத்தினை நிறைவு செய்கிறேன்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்தந்த நாட்களில் பதிவுகள் (குறைந்தது ஒன்றேனும் பதிய முயற்சி செய்தேன்) தர முயற்சித்தேன்.

பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சித்ரான்னம் வைத்தேனா, எனக்குத் தெரியாது!! ஆனால், வயிற்றை , மனதைக் கெடுக்காத பத்தியச் சாப்பாடாவது போட்டேன் என நினைக்கிறேன்.

விவாதங்கள் என்ற பெயரில் ப்ரச்னைகளை வளர்க்கவும் விரும்பவில்லை.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள ப்ரச்னைகள், என் சொந்தப் ப்ரச்னை இல்லை. கோவில்களும், நமது சரித்திரமும் அழிந்துபோகும் அபாயத்தை மிக சிறிய நாட்களுக்குள் பார்த்து, மனம் நொந்து, பல பெரிய மனிதர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். தெளிவாகத் தெரியும் 2 விஷயங்கள்:-

1) தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த பொருள், அரசியல் நெருக்கடிகளில் தான் பழங்கால புதை பொருட்கள், கோவில்களை ஆராய முற்படுகின்றனர். ஆள் பலமும் குறைவு.

2) ஊர் மக்களிடையே, நம்பிக்கையின்மை - ஆண்டவனிடத்தில், ஆட்சியாளர்கள் இடத்தில், ஏன் சக மனிதர்களிடத்தில், தன்னிடத்தில் - இல்லாமலிருப்பது!

முதல் ப்ரச்னையை சில ஆர்வலர்கள் சரிகட்ட முற்பட்டிருக்கிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களையும், கோவில் புனரமைப்புப் பணி செய்யும் சிலரையும், கோவில்களை சுத்தம் செய்யும் தன்னார்வக் குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழு அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் ப்ரச்னையை எல்லாரும் சேர்ந்துதான் சரி செய்ய வேண்டும். முதலில் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும், அரசு அலுவர்கலையும் குற்றம் கூறிக் கொண்டே இருக்கும் மனப் பாங்கை நாம் கைவிடவேண்டும்! எம்.ஜி.ஆர் அவர்கள் அழகாகச் சொன்னது போல், "நாடென்ன செய்தது நமக்கு?" என எண்ணாமல், "நாமென்ன செய்தோம் நாட்டுக்கு?" என சீறிய சிந்தனை செய்ய வேண்டும்.

நாடு என்றால் என்ன? நாமும் நம்மை சுற்றியுள்ளதுதான், நமது முதல் நாடு, நாட்டின் பாகம். அதை சுகாதாரமாக வைக்க, நாம் முதலில் குப்பைகளை எறிவது, ரோட்டோரத்தைப் பார்த்தால் காலைத் தூக்குவது, எச்சில் துப்புவது, சுற்றியுள்ள மற்ற மக்களை பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் புகை விடுவது போன்ற செயலை நிறுத்தினாலே போதும்.(பிடிப்பது எனும் சொல் எனக்கு தவறாகப் படுகிறது!!- அவர் விடுகிறார், சுற்றியுள்ளவர்தனே, பிடிக்கின்றனர்?? Passive smokers) .

சிறுபிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தருதல், நடந்து போகும் தூரம் உள்ள வரலாற்றுசின்னங்களை பார்க்கக் கூட்டிச் செல்லுதல், தூய தமிழில் நல்ல குறள், பாசுரங்கள், சொல்லிக்குடுத்து அவர்களை தினமும் குளித்து உடை உடுத்தி சொல்லவைத்தல், இதெல்லாமே நல்ல சந்ததியை நாட்டுக்குத் தரும். மக்கள் தான் நாடு.

நான் முந்திய கட்டுரையில் குறிப்பிட்ட ராமமூர்த்தி அவர்கள், கோவில்களை சீரமைக்கப் போகுமிடமெல்லாம், அவருக்கு பல குறுக்கீடுகள். கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர்களின் கோபம், மற்றொரு மதத்தினர் இவர் இந்துயிஸம் பேச வருகிறார் என்று மத முத்திரை குத்தினாலும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று; எல்லா மதத்தினரும், சாதியினரும், ஒரே மண்ணின் மைந்தர்களே! அவர்கள் அனைவரும், அதை ஒரு பழைய கோவிலாக எண்ணாமல், "நம் மண்ணின் ஒரு வரலாற்று சின்னம், மக்கள், மன்னர் அமைதி தேடி வந்த இடம்", என்றெல்லாம் எண்ணிப்பார்த்து, அதை சீரமைக்க பொருளுதவி, செயலுதவி செய்து நிமிரவைத்தால் தான், அவ்வூர் சிறக்கும்! எல்லார் மனதிலும் உள்ள அழுக்குகள் போயி, சமத்துவம் மலரும்" என்கிறார். அவர் 20 ஆண்டுகளில், ஏறத்தாழ 100 கோவில்கள் சீரமைத்துக் கொடுத்திருப்பார்!!

குறைகளைக் கூவிப்பேசி, கூட்டம் சேர்ப்பதைவிட, களைகளைக் களைய என்ன செய்ய வெண்டும் எனும் சிந்திக்கும் நற்கூட்டம் வலுப்பெற வேண்டும்!! அதனை செயல் படுத்தக் காரியத்தில் உறுதி வேண்டும்!! அதற்கு என்னாலான எழுத்துப் பணியை நான் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தமிழும் தமிழ் சார்ந்த குலமும் மணக்க எழுதிக்கொண்டே இருப்பேன். நிறை, குறை இரண்டும் கூறி என்னை எழுதவைத்த உள்ளங்களுக்கு வணக்கம்!