காதல் : சாதல் 50:50 !!
இதுவும் உபனிஷதங்களில் வரும் ஒரு அழியாக் காதல் பற்றிய காவியம்!
கந்தர்வர்களின் அரசனுடன் சல்லாபித்ததால், தேவகன்னிகை அப்ஸரஸுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூலோகத்தாய்மார்கள் போல், குழந்தை மேல் பிரியமோ, அனுதாபமோ வராதவர்கள் இத்தேவ கன்னிகைகள்! குழந்தையை ஒரு ஆசிரமத்து வாசலில் போட்டுவிட்டு போய்விட்டாள்!
ஸ்தூல கேசர் எனும் ரிஷி அந்த குழந்தை மேல் இரக்கம் கொண்டு, ப்ரேமதர்வா எனப் பெயரிட்டு, எடுத்து வளர்த்து வந்தார்.
ப்ரேமதர்வா பக்தியும், மிக்க அழகும் உள்ள பெண்ணாக வளர்ந்தாள். ப்ருகு முனிவரின் கொள்ளுப்பேரரான ருரு எனும் ரிஷிகுமாரன், ப்ரேமதர்வாவின் அழகில் மயங்கி, அவளை மணமுடிக்க பெரியவர்களிடம் பேசி முடித்து, மறுநாள் நடக்கவிருக்கும் கல்யாணக் கனவுகளில் மூழ்கி அயர்ந்து தூங்கிப் போனான்!
மாலைவேளையில் தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரேமதர்வா, அவளது விதியின் படி, காலம் முடிந்து, ஒரு பாம்பு கடித்து, அக்கணமே இறந்து போனாள்! இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்!
பொழுது யாருக்கும் சரியாக விடியவில்லை! ஆசிரமத்து முனிவர்களோ, மணவறை பிணவறை ஆகிய காலத்தின் கோலத்தை எண்ணி ஓலமிட்டுக்கொண்டிருந்தனர்! வளர்த்த முனிவர் ஸ்தூலகேசரோ, பச்சை பசும் கொடி போன்ற இத்தனை அழகான பெண்ணை ஏன் இறைவன் தன்னிடம் வளர விட்டு, பின்னர் தளர விட்டார் என எண்ணி எண்ணி விம்மினார்!
செய்தி கேட்டு வந்த மணாளன் ருரு, துக்கம் மேலிட, காட்டுக்குள் நடந்து போய், மனம் அமைதியடைய ஒரு குன்றின் மேல் அமர்ந்து, ஆண்டவனை துதிக்கலானான்!
"தேவர்களே, தவத்தில் திளைத்த என்னுள், காதல் முளைத்ததெப்படி? வினையோ, விதியோ? ப்ரேமதர்மாவின் மேல் ப்ரேமை வந்தது ஏன்? அவள் மரணத்தை என் மனம் ஒப்பாத்தது ஏன்? ஏன்? ஏன்? என் தவம் நிஜமென்றால், தவப்பயன் நிஜமென்றால், பதில் சொல்லுங்கள்! என, வானத்தை நோக்கி அரைகூவல் விடுத்தான்!
பளீரென அங்கு ருருவின் முன் தோன்றினான் ஒரு தேவன்! அவன், " இது காலத்தின் கட்டாயம். அவள் தந்தை கந்தர்வ ராஜனே, அவள் உருவானதும் மறந்தான்; தாய் அப்ஸரஸ், பெற்றதும் துறந்தாள்! வளர்ப்புத் தந்தை ஸ்தூல கேசரோ, விதியை எண்ணி நொந்து அங்கே, சிதைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார்!" என்றான்.
சினத்தில் ருரு, "பின் என் காதல் துச்சமானதா? காடு நோக்கிப் போனவனை வீடு நோக்கி வரச்செய்த அவளை நான் மனதார நேசித்துவிட்டேன். மணவறையில் அமராவிட்டாலும், என் மன அறையுள் சென்றுவிட்ட ப்ரேம தர்வாவை யார் வெளியே கொண்டு செல்ல இயலும்? எனக்கு அவள் வேண்டும்; ஆசை காட்டி மோசம் செய்யும் இந்த கால விளையாட்டை என்னிடம் சொல்லி, சாபத்தை பெறாதீர்கள்," என்று எச்சரித்தான்!
முனிவனின் சாபம் எப்படி வலுவானது என்றறிந்த தேவன், "சரி; உன் ஆயுளில் பாதியை அவளுக்கு தர இசைந்தால், அதையும், அவளது தந்தையும், யம தர்மனும் ஒப்புக்கொண்டால், நீங்கள் இருவரும் சில காலம் உயிர்வாழலாம்! " என்று சொன்னான்.
தன் உயிரில் பாதியை யார் தருவர்? இந்த ஒரு நிபந்தனையைக் கேட்டு, ருரு மடங்கி விடுவான் என்றெண்ணிய தேவனின் எண்ணத்தில் விழுந்தது அடி!! எப்படி?
ருரு சொன்னான்!"ஐயா, என் தவப் பயனில் பாதியைத் தருகிறேன்; அதனால், யமதர்மனும், கந்தர்வ ராஜனும் என் முன்னே வரட்டும்; மீதி தவப் பயனை, என் ஆயுளில் பாதியை என் உயிருக்கும் உயிரான ப்ரேம தர்வாவை உயிர்பிக்கத் தாரை வார்க்கிறேன்! எனது ஆயுள் ஒரு நாள் என வைத்துக் கொள்ளுங்கள், இருவரும் சேர்ந்து அரை நாள் வாழ்வோம், அத்தகைய நொடிப்பொழுதான வாழ்வுகூட எனக்கு ப்ரேம தர்வாவுடனே இருக்கவேண்டும்; அவளில்லாமல் நானில்லை " என்றான்!
ஆச்சரியப்பட்டான் தேவன்; அதிசயித்தனர் தேவர்கள்!
தர்மராஜனான யமனும், கந்தர்வ ராஜனும் அவ்விடத்தில் தோன்றினர்!
ருருவின் வேண்டுகோள் நிறைவேறியது!!உயிர் பெற்றெழுந்தாள் ப்ரேமதர்வா; காதல் கணவனுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்து ஒரு அழியாக் காவியம் படைத்துப் போயினர்!
6 comments:
எந்த உபனிஷத்தில் இந்தக் கதை வருகிறது சந்திரசேகரன்? படித்தாகவே நினைவில்லையே?!
காதல்:சாதல் 50:50!!
குமரன்,
http://www.sacred-texts.com/hin/iml/iml08.htm எனும் சுட்டியிலுள்ள Brahmin and his bride கதையைப் படியுங்கள்.
ஒரு ஆண் சாவித்திரி!
தியாகத்துக்கு வலிமை எப்போதுமே உண்டு, அது பொருளுடையதாய் இருக்கும் போது. இந்தத் தியாகம் போற்றத்தக்கது.
அன்புடன்,
டோண்டு ராகவ
//ஒரு ஆண் சாவித்திரி//
அட,இது நல்லாருக்கே!
காதலுக்காக தியாகம் செய்வது எத்தனையோ தலை முறைகளாக வருகிறது!
பின்னுட்டலுக்கு நன்றி, டோண்டு சார்.
Good love story.But ur imaginative ones are more interesting than these Puranic ones.
Good love story.But ur imaginative ones are more interesting than these Puranic ones.
Post a Comment