06 July 2006

தேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1

மரணத்தை வென்றவன்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! என பாரதி பாடியதை ஒரு சிறுவன் வாழ்ந்து காட்டியுள்ளான். ஒருவனை, "இவனைப் போல் இரு, அவனைப் போலிரு" என்று உதாரணம் காட்டுவதுபோல், நான் இருக்க விரும்புவது, 'நசிகேதனை'ப் போல்!
நசிகேதன்? யாரிவன்?
கதோபனிஷதத்தில் வரும் உபகதை இந்த நசிகேதன் புராணம்.
உபனிஷதங்கள், வேதசாரங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிய வைக்க கதைகள் மூலமாக ஏற்படுத்தப் பட்டவை.

தனது தந்தையார், வயதான பசுக்களையும், வற்றிப் போன மாடுகளையும், தானம் என்ற பெயரில் தருவதைக் கண்ட அப்பாவிச் சிறுவன் நசிகேதன், "ஏனப்பா இவற்றை தானமாகத் தருகிறீர்கள்?" எனக் கேட்டான்.பதிலில்லை."வயதான மாடுகளாயிற்றே, பலனில்லையே?" பதிலில்லை"தானம் தருவது அடுத்தவர் பயன்படுத்தத்தானே?"பதிலில்லை."இந்த மாடுகளை ஏன் தருகிறீர்கள்?''
எரிச்சலடைந்த அவன் தந்தை, "அட, வேண்டாததெல்லாம்,தானம் தான், சும்மாயிரு," என்று அதட்டினார்.
சற்று மவுனம் காத்த சிறுவன்,மீண்டும், 'வேண்டாதவை' என்றால் என்ன?" என்றான்.
"பயனற்றவை வேண்டாதவை."
அப்படியானால், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்னால் உங்களுக்கு என்ன பயன்?"
பதில் இல்லை.
"அப்படியானால் என்னையும் தானமாகத் தந்துவிடுவீர்களா? யாருக்கு?"
பொறுமையிழந்த அவன் தந்தை, "உன்னை யாருக்குக் கொடுப்பது, யார் பெற்றுக்கொள்வார்? அந்த யமனுக்குத்தான்,போ! பேசாதே!" எனக்கூச்சலிட்டார்!"ததாஸ்து" என மந்திரம் சொல்லவும், தாரை வார்க்கும் நீர் தறையில் விழவும் சரியாக இருந்தது.
அப்பொழுதும், முகத்தில் மகிழ்ச்சியே காட்டி நின்றுகொண்டிருந்தான் நசிகேதன்!
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தந்தை, மகனை ஆரத்தழுவி,கண்ணீர் விட்டார்!

"மகனே, தவரிழைத்தேனே? ஒன்றா, இரண்டா?மனமில்லா தானம், உபயோகமில்லா தானம், சுய அறிவின்றி தானம்!
இதனால் நான் என்ன பலன் கண்டேன்? மகனை இழந்ததைத் தவிர?" கண்ணை துடைத்துக் கொண்டு, கேட்டார்," ஆமாம், நான் அழுகிறேன், நீ சிரிக்கிறாயே? " என ஆச்சரியத்துடன் வினவினார்!

தந்தையைப் பார்த்து நசிகேதன், "அப்பா, சந்தோஷப்படுங்கள்!, நீங்கள் சொன்ன மற்ற தவற்றையெல்லாம் சரி கட்டும் விதமாக, பெற்ற மகனையே, அதி உத்தமனான, நெறி தவராத தர்மராஜன் எனப்படும் யமதர்மனுக்குத் தந்ததிலேயே, தங்களுக்குறைந்த யாகத்தின், தானத்தின் பலன்கள் கிட்டும். அது போக, என்னால் என்ன பலன் என்று நான் நினைக்கையில், தங்கள் தானத்திலேயே, மிக அபூர்வமான தானத்துக்குப் பாத்திரமாகி, நான் புதிய உலகைப் பார்க்க போகிறேன்! எனவே, நிம்மதியும் ஆவலுமாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன்!" என்ற மகனைக் கண்டு மலைத்தபடி நிற்கிறார் தந்தை!!

யமலோகம் போன நசிகேதன் 3 நாட்கள் காத்திருந்து, யமனை சந்திக்கிறான். பின்னே? நாள்குறிக்கப்படாமல், திடீரென தானமாக வந்தவன் எப்படி உள்ளே ஏற்றுக் கொள்ளபடுவான்? எனவே, மூன்று நாட்கள் வாசலிலேயே காத்திருக்கும்படி ஆகிவிட்டது நசிகேதனுக்கு!

அதனால் மனமிறங்கிய யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்களைத் தருகிறார்.

குழந்தை நசிகேதன்
1) என் தந்தை எனக்காக கவலை படக்கூடாது
எனும் வரத்தையும், இனி கேட்கும் கேள்விக்கு பதில்களைத் தருமாறும் கேட்கிறான்:-

2) நெருப்பினால் செய்யும் யாகத்தின் ரகசியம் என்ன?
3) மரணத்துக்குப் பின்னால் என்ன?

யமதர்மனின் பதில்கள்?

1) தன்னுள் உணர்வோர், காலத்திற்கு அப்பாற்பட்ட 'தன்னி'லை அடைவோர், மரணத்தைக் கண்டு அஞ்சார். அவர்கள் சாவுக்கு சாவு மணி அடித்தவர்கள்! உன் தந்தை எப்போது உன்னை எனக்கு தானம் அளித்தாரோ, அப்போதே அம்மாதிரியான ஞானத்தைப் பெற்றுவிட்டார்!

2) இருப்போர் இல்லாதவர்க்கு கொடுப்பது தானம்; கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகளுக்கு அவிர்பாகமாக, நீர், நெருப்பின் ஆவி (புகை) மூலமாகத் கொடுப்பது, யாகம்.

3) மரணத்துக்குப் பின்னாலும் வாழ்வின் பல உண்மைகள் அறிய அந்த ஆத்மா பல ப்ரயாணங்களை மேற்கொள்கிறது. நீ வந்து, கண்டது போல்!" எனச் சொல்லி சிரிக்கிறான் யமதர்ம ராஜன்.

தர்ம ராஜன் அல்லவா? அநியாயமாக அங்கே வந்துவிட்ட சிறுவனுக்கு, உபதேசங்கள் செய்து, ஞான ஒளிபெற்ற மாமுனியாக மீண்டும் அவனது இல்லத்துக்கே அனுப்பிவைக்கிறான்.

மரணத்தை வென்ற நசிகேதன் ஞானி ஆகிறான்! மரணத்தை தனது ஞானத்தால் வென்று மீண்டும் பூமிக்கு வருகிறான்!!
இவனைப்போல் இருக்க வேண்டும் என்று நான் சொன்னது, 'அல்பாயுசில் மேலே கிளம்ப' வேண்டுமென்று சொல்ல இல்லை.
அவனது, அறிவுப்பசிதான், அவனை புதிய அனுபவம், புதிய உலகைக் காணச்செய்தது!
அவன் அப்படி என்ன செய்தான்? கேள்விகள் கேட்டான்; யாரை? தனது தந்தையை.
எதற்கு? அவன், அவனது தந்தை எந்த வேலையையும் சரியாக செய்வார், பதில்களை சரியாகச் சொல்வார் என நம்பினான்!
என்ன கேள்வி கேட்டான்? சாதாரணக் கேள்விகள் தான்.
தனது தந்தை செய்யும் எந்த காரியமும், காரணமின்றி செய்யப் படாது என அவன் நம்பினான். அது பொய்க்கையில், கேள்விகள் பிறந்தன, பறந்தன!
இப்போது யோசித்துப் பாருங்கள்? நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா?
நம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.
அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப் புரியும்படியாக!
கேள்வி கேட்பவர்களால்தான், இன்று வளர்ச்சி உண்டாகிறது!
'ஏன் என்ற கேள்வி நான் கேட்காமல் வாழ்ந்ததில்லை,' என என்.ஜி.ஆர். பாடவில்லையா?
எனவே, நசிகேதனைப் போல் இருக்க முயலுங்கள்! கேளுங்கள், பயப்படாதீர்கள்!

17 comments:

Anonymous said...

Super. Whoever reads this article should be like Nasikethan.

கைரேகை said...

நான் இரண்டு நாட்களாகத்தான் 'தமிழ்மணம்' பார்க்கிறேன்.. இன்றைக்கு என் கண்ணில் பட்டது உங்கள் பக்கம்.. நல்ல நகைச்சுவை உணர்வு(நசிகேதன் கதையைச் சொல்லவில்லை).. முழுதும் பொறுமையாகப் படித்துவிட்டு அப்புறம் சொல்கிறேன்(இப்போதைக்கு உங்கள் பால் வாங்கிய, காலை நடைப்பயணம் போன, NRI தமிழர்களை கேலி செய்த மற்றும் சலூனில் திட்டுவாங்கிய சில 'சாம்பிள்' துளிகள் மட்டும் வேகவேகமாகப் படித்தேன்.. வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் என்று ஒரு 'look' விட்டேன்(நான் செய்த செயலுக்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கலாம்.. இப்போதைக்கு என் மனதில் வந்த வார்த்தை 'லுக்' தான்.. ஆங்கிலம் படுத்தும்பாடு..).. அது போகட்டும்.. நான் சொல்ல வந்ததே வேறு.. உங்களுக்கு ஜோசியம் தெரியுமா.. எனக்கு கொஞ்சம்(பொய்)ஜோசியம் தெரியும்..முயற்சிக்கட்டுமா.. (நான் கை பார்த்து சொல்வதில்லை.. எழுத்து பார்த்து சொல்வேன்..) அய்யாவுக்கு மதுரப்பக்கமோ.. அந்த ஊர் பேருல வர்ற காலேசுல படிச்சிருப்பீங்களே.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்கய்யா.. ஏதோ ஒரு குத்துமதிப்பா சொன்னேன்.. சரியா இருந்தா மேல படிங்கய்யா.. ரொம்ப நல்லா இருக்கய்யா உங்க எழுத்து.. என் ஜோசியம் சரின்னா எழுதுங்க.. மிச்சத்தையும் சொல்றேன்..(எதிர்காலத்தைப் பற்றி எழுதாமல் இது நாடி ஜோசியம் ரேஞ்சுக்குப் போகுதே!.. இண்டர்நெட் காலத்துக்கு முன்னாலேயே நீங்க எழுத்தாளன் ஆகியிருப்பீங்களே.. (காலேசுல படிக்கிறப்பவா?.. அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்கோ.. சரின்னா மட்ட்டும் சொல்லுங்க).. மறுபடியும் எழுதறேன்.. முழுசா படிச்சுட்டு..

ஜெய. சந்திரசேகரன் said...

அனானி,
உங்கள் ஆங்கில மெச்சுதலுக்கு நன்றி.

ஜெய. சந்திரசேகரன் said...
This comment has been removed by a blog administrator.
ஜெய. சந்திரசேகரன் said...

கைரேகை,
நீங்க எழுதினதப் பார்த்தா, கைரேகை பார்க்கறா மாதிரி தெரியல. முன்ன என் கூட படிச்சேங்களோன்னு தோணுது. எதுவோ, நீங்க சொல்றது நிஜம். சரி, கதை கவிதைங்களுக்கு பின்னூட்டமிட்டு, போட்டில ஜெயிக்கவெயிங்க நண்பா!! உங்க நகைச்சுவை உணர்வு கடிதத்துலேயே, தெரியுது.!!

kadalganesan said...

வணக்கம் சந்திரசேகரன். ஜி.கௌதம் தனது பதிவில் விகடனில் வேலைபார்த்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.. ramachandranusha விகடனின் மற்ற (மாணவ) நிருபர்கள் கைதூக்கச் சொல்லிக் கேட்டிருந்தார்.. உங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கிறேன்.. நீங்கள் சுசி கணேசன் மாணவ நிருபராக இருந்த போது அதே வருடத்தில் இருந்தவர் அல்லவா..(உங்களது முந்தைய பதிவு ஒன்றில் படித்தேன்.. ஆனால் கல்பனா உங்களுக்கு சீனியர் ஆச்சே.. உங்களுடன் அந்த வருடத்தில் பணிபுரிந்தவர் சத்யா அல்லவா.. (ஃபாத்திமா கல்லூரி)..
நான்?????.. மறந்து போயிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. து.கணேசன்..

kadalganesan said...

இப்போதான் எழுதினேன் நான் யாரென்று.. உங்களை யோசிக்க வைக்க கைரேகை என்று (வெளாட்டுக்கு!) எழுதினேன்.. ரொம்ப வருடம் கழித்து உங்கள் புகைப்படத்தையும், கட்டுரைகளையும் பார்த்த, படித்த சந்தோஷத்தில், உங்களுடன் கண்ணாமூச்சி விளையாடினேன்.. கண்டிப்பாக உங்கள் கட்டுரைகளை முழுதும் படிக்கிறேன்.. (நான் எழுதி போஸ்ட் செய்தபின் பார்த்தால், கைரேகைக்கு நீங்கள் எழுதிய பதில் படித்தேன்.. அதனால் இந்த பதில்)

இளவஞ்சி said...

ஜெய. சந்திரசேகரன்,

நசிகேதனில் ஆரம்பித்து எம்ஜியாரு பாடலில் முடித்து கேள்வி கேட்பதன் பயனை விளக்கியுள்ளீர்கள்! விடுங்க! மரணத்திற்க்கு முன்பு எல்லாக்கேள்விகளையும் கேட்டுடலாம்! :)

போட்டிக்கான என் வாழ்த்துக்கள்!

ஜெய. சந்திரசேகரன் said...

ஆ, கைரேகை பார்த்த கடல் கணேசன் @ து.கணேசன்!! நண்பா, எபடியிருக்கிறீர்கள்? நண்பனை மீட்டுக்கொடுத்ததே, ஒரு பெரிய பரிசுதான்! நீங்கள் சொன்னது சரிதான். சீனியர் கல்பனா. சகலை சத்யா. இருவரும் என்னை மன்னிப்பார்களாக! நீங்க எந்த ப்ளாக் பெயரில் எழுதுகிறீர்கள்?

ஜெய. சந்திரசேகரன் said...

//விடுங்க! மரணத்திற்க்கு முன்பு எல்லாக்கேள்விகளையும் கேட்டுடலாம்! :)//


அந்த பன்ச்!! அதான்யா இளவஞ்சி!! வாழ்த்துக்கு நன்றி இளவஞ்சி!

ஓகை said...

நசிகேதனைப் பற்றி எழுதியவுடன் ஒரு நண்பர் கிடைத்துவிட்டார் போலிருக்கிறது.

போட்டிக்காக இதுவரை மூன்று பதிவுகள்! ஜமாயுங்கள். வாழ்த்துக்கள்.

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி, ஓகை நடராஜன்! உங்களை மாதிரி எழுத்தாளர்களின் வாழ்த்தே, ஒரு பரிசு தான்! சரி, ஓட்டு போட மறந்துடாதீங்க, அடுத்த கதையும் ரிலீஸ் ஆயிடுச்சு! :-)

குமரன் (Kumaran) said...

நசிகேதஸின் கதையை மிக அருமையாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் சந்திரசேகரன்.

ஜெய. சந்திரசேகரன் said...

வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி :) நன்றி, குமரன். மறக்காமல் ஓ.. போடுங்க ;-)

dondu(#4800161) said...

தெரிந்த கதைதான், ஆனாலும் சுவாரசியம் குறையாது எழுதியிருக்கிறீர்கள். பரிசு பெற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

chellu said...

Nachiketan story is well known one.But the style of JC's writing will definitely impress children as well as the old.In the end he has given a piece of advice to all parents.Excellent!An absrtact vedanta has been given in asimple language .That is the spirit of the writer.

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks Chellu, for your repeated encouraging feedbacks for all my posts, Thanks again.