22 February 2006

மூளை வரட்சி!!


படிச்சா கம்ப்யூட்டர், இல்லைன்னா இல்ல!
இது தான் இன்னிக்கி பசங்க கிட்ட நாம கேட்குறது!
மத்த பொறியியல் பாடங்களான கட்டடக் கலை, மின்னியல், மெகானிகல், இதெல்லாம் கேக்க நாதியில்லாம் இருக்கு.அப்படி எடுத்துப் படிச்சாலும், ஒரு இஞ்சினியர் பட்டம் வாங்கதான் அத உபயோகப்படுத்தறாங்களே தவிர, மேற்கொண்டு, பழைய குருடி கதவத் திறடின்னு, அவுங்களும் கணிணி படிச்சுட்டு, அந்தப் பக்கம் தாவீர்றாங்க!

எத்தனையோ தொழில்கள்ல நாம முதலீடு செஞ்சாலும், ஆள் பற்றாக்குறை இருந்துகிட்டே தான் இருக்கு. ஒரு CNC ஆப்பரேட்டரோ, நல்ல வடிவமைப்பாளாரோ, மூலப் பொருட்களை ஆராயற Material Science பொறியாளரோ குறைஞ்சுகிட்டே வராங்கறது தான் உண்மை. கார் கம்பெனிகள், துணிகள் ஏற்றுமதி நிறுவனம் எல்லாத்துலயும் மேல் பதவிகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்கு.இத சரி செய்ய என்ன வழி?
பலதரப் பட்ட தொழில் இயக்குநர்கள் சேர்ந்து, கணிணி கம்பெனிகள் நடத்துற மாதிரி எல்லா ஊர்லயும் வேலை சேர்ப்பு விழா நடத்தணும். நல்ல சம்பளத்தைத் தரணும். வேலைக்குச் சேரும்போதே, ரொம்ப காலம் வேலைல இருந்தா, என்னன்ன வசதிகள், பதவி ஏற்றம், பண ஏற்றம் கிடைக்கும்னு ஒரு வருங்கால அட்டவணையே கொடுக்கலாம்!!

I.I.T ல ஆண்டொண்ணுக்கு ஒரு மாணவனுக்கு அரசாங்கத்துலேர்ந்து சராசரியா ரெண்டேகால் லட்சம் செலவு செய்யறாங்க! அந்தக் கணக்குல பார்த்தா, எத்தன IIT காரங்க, வெளிநாட்டுக்குப் போய்ட்டு திரும்ப வரதில்ல? கேட்டா, "இங்க வசதி குறைச்சல்" ன்னு சொல்றாங்க! ஆமாங்கய்யா,கோவணத்துக்கே வழியில்லாத குப்பனும் சுப்பனும் வாடுற ஏழை நாடு, உனக்குன்னு, உன் தனி அறிவை நம்பி, ஒரு முதலீடாதான் அந்த பணத்தை செலவு செஞ்சது.

உனக்குன்னு இருக்குற அந்த "சிறப்பு மூளையை" வெச்சு, ஏம்பா, அந்த வசதிங்களை நீயே ஏற்படுத்திக்கக் கூடாது? உன்னாத்தா நீ கிழிஞ்ச டவுசர் போட்டு பள்ளிக்கூடம் போகக்கூடாதுன்னு, தான் ஒத்தச் சேலைல இருந்து கிட்டு உனக்கு புது டவுசர் வாங்கினா.
நீ பெரியவனானதும், அடுத்த வீட்டு ஆன்டி ஆப்பிளும், அமுதும் வெக்கிறான்னு அங்க போயி வசிப்பயா, இல்ல ஆத்தாள உன் பக்கத்துல வெச்சுக்குவயா?

அரசாங்கத் தரப்புலேர்ந்து ஒண்ணு செய்யலாம். கட்டாய பணி புரியும் ஆண்டுகளை இந்த IIT, மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் மீது திணிக்கலாம்; தப்பேயில்ல! இந்த நாட்டுக்கு குறைஞ்சது 10 வருஷம் வேல செய்யணும். ஒண்ணு, முதல் பத்து வருஷம். இல்ல 40 வயதுக்குள் எதேனும் 10 வருஷம். (ஒரு வேளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தா, அத அவங்க ஏத்துக்க தோதா! எப்படியாச்சும் அக்ரீமண்ட் இருக்குல்ல? அதனால 40 வயசு முடியறதுக்குள்ளே, வந்து வேல செய்வாங்க! ) இல்லன்னா,பாஸ்போர்ட் ரத்துன்னு சொல்லணும்.

"ஸ்வதேஷ்" னு ஒரு நல்ல படம். லகான் டைரக்டர் அசுடோஷ் கவுரிகர் எடுத்தது!

அதுல ஒரு நல்ல செய்திய அந்த கதநாயகன் சொல்றான்! அவன் கஷ்டப்பட்டு படிச்சு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA வுல ஒரு பெரிய விஞ்ஞானி ஆயிர்றான். அவன் வளர்த்த ஆசிரம அம்மாவை கூட அழைச்சுகிட்டு போகணும்னு இந்தியா வர்றான். அங்கே, அவனுக்கு அதிர்ச்சி காத்துருக்கு. அந்த அம்மாவைக் காணோம்! விசாரிச்சா, யாரோ ஒரு பொண்ணு கூட வெச்சுக்க கூப்டுகிட்டு போனதா கேள்விப்பட்டு, இவனும் அந்த பாதையில் பயணப்படறான். ஒரு வழியா அந்த கிராமத்துக்குப் போனால், தன்னுடன் படித்த பெண்ணே, நன்றி மறக்காம, அம்மாவ வெச்சு காப்பாத்துறதப் பார்க்குறான்! எப்படியும் அம்மாவக் கூட அழைச்சுகிட்டு போணும்கிற அந்த பிடிவாதம் ஒரு பக்கம்; அந்த பொண்ணு ஒரு பள்ளிக்கூடம் வெச்சு நடத்துது. அதுல ஜாதிப் ப்ரிச்னைனால பசங்க யாரும் ஒண்ணா படிக்க வரல. பஞ்சாயத்தோ, "பள்ளிக் கூடம்லாம் சரிப்பட்டு வராது. சொன்ன தேதிக்குள்ளாற 50 பசங்க சேக்கலைன்னா, திரும்ப கட்டிடத்த பஞ்சாயத்தே எடுத்துக்கும்னு" கண்டிஷனா சொல்லிர்றாங்க! அந்த கெடுக்குள்ள பிள்ளைங்கள ஒண்ணு சேர்க்க பாடு படும் அந்த பொண்ணுக்குப் பரிஞ்சு, இவனும் களத்துல (கொஞ்சம் பொதுநலமும், சுய அறிவும் இருக்குற ஊர்க்காரங்க ரெண்டு பேர் கூட உதவிக்கு வர) இறங்குறான்!! இன்னொரு பக்கம், பஞ்சம். எட்டு தூரத்துல மலைச்சுனை இருந்தும், தண்ணியில்லாப் பஞ்சம்! அத வழிக்குக் கொண்டுவந்து, பாத்தி வெட்டி, நீர் பாய்ச்சி,பெரிய பைப்புங்கள்ல தண்ணியக் கொண்டுவந்து, ஒரு சேமிப்பு கடங்குல வெச்சு, அருவியா விழவெச்சு, Hydro electricity எனும் நீர்வழி மின்சாரம் தயாரிக்க தனது படித்த அறிவையெல்லாம் உப்யோகித்து, ஊர்காரங்க மனசுல இடம் பிடிக்கிறான், கதாநாயகன்! இத்தனை ப்ரச்னைகள் அவன் மனசுல ஒரு ரசாயன மாற்றத்தைக் கொண்டு வருது! இன்னொரு பக்கம், அமெரிக்க வாழ் உடன் படித்த நண்பன் மூலமா, NASA வுல நடக்குற வேலைகளையும் அவ்வப்போது கவனிச்சுக்கறான். கடைசியா, அவனுக்கு NASA காரங்க, ராக்கெட் ஏவுற அன்னிக்கி கட்டாயம் அங்க வந்துரணும்னு கண்டிஷன் போட்டுர்றாங்க! கதாநாயகன், அங்கு போய், அந்த ராக்கெட் வேலைய, ராப்பகல் உழச்சு, வெற்றிகரமா, ஏவுறான்! அவனுக்கு பல பெரிய பதவிங்க, பணப் பரிசு காத்திருக்கு. அவனோ, தனது பாஸ்கிட்ட," என் வேல எது, எதுல எனக்குக் கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் கிடைக்குமோ, அங்கே நான் போகிறேன்"னு சொல்லிட்டு திரும்ப கிராமத்துக்கு வந்துர்றான்!! அது தான் கதை!

அதுல, எத்தன செய்திங்க?

முதல் செய்தி- வெறும் வாய் மெல்ற இளைஞர்களுக்கு சவுக்கடி. இவன் சும்மா தண்ணி அடிச்சுட்டு, ஊரச் சுத்திட்டு, கவர்மெண்டத் திட்ட வேண்டியது. நீ உருபட்டியா? படிச்சயா? எதானும் வேல செஞ்சயா,இல்ல செய்ய முற்பட்டியா?

அடுத்த செய்தி- கொடுக்கற வசதி வரணும்னா, அதுக்கு அடிப்படைக் கல்வி- எம்மொழியாயினும், எவ்வழியாயினும் கல்வியைக் கற்பவனுக்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பு வரத்தான் செய்யும்! நல்லா சம்பாதி, அப்புறம் கொடுக்கறதப் பத்திப் பேசு!

மூணாவது செய்தி - கல்; வெளிநாடு போ; பொருள் சேர்,உனக்கும் உன் நாட்டுக்கும் பெருமை சேர்; கடமையிலிருந்து தவறாதே! (எண்ணித்துணிக கருமம்..) அப்புறம் திரும்பி வந்து நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்.

இந்த படத்து கதாநாயகன், மேல சொன்ன மூணையும் செய்யறான், அதனால நம் மனசுலயும் இடம் பிடிக்கிறான்!

அவன், விஞ்ஞானி ஆயிட்டு, இங்க வந்து அது இல்ல, இது இல்லன்னு சொல்லாம, இருக்குற ஊரணி, கிடைக்கிற பைப்பு, மோட்டார், வயர், இத வெச்சே, நீர் பாசன வசதிய ஊருக்கு செய்றான். எது மக்களுக்குத் தேவையோ, அதை குறிப்பறிந்து செய்யறான். "நான் செஞ்சா ராக்கெட்தான் செய்வேன்"னு சொல்லல!


அதுதான் மாணவர்களுக்கும், நம் இளைய தலைமுறைக்கும் நாம சொல்லணும். படி; படிப்படியா மேல போ, பிடி. பதவியப் பிடி. பிடிச்சப்புறம், பழைய படியையும், படிப்பையும், பிடிப்பையும் விட்டுடாத!

16 February 2006

தலை நிமிர்ந்து நட நட! கவியோகியின் மற்றொரு பாடல்!

பார் பார் உள்ளே,
யார் யார் நீ
தீர் தீர் புதிரை,
சேர் சேர் கதிரை
தலை நிமிர்ந்து நட நட
வறுமை மடமை பொடிபட
உரிமை உண்மை திடமுறத்
தலை யுயர்த்தித் தாவு முன்!
தமிழ் பெற்ற சிங்கமே
நிலை யுயர்ந்து புகழ் பெறு
நேர்மையான தங்கமே
நாடு வாழவீடு வாழக்
கூடிவாழ நாடுவாய்
ஏடு தந்த நல்லறிவை
நீடு வாழ்வில் ஊக்குவாய்
உயர நோக்குவாய்;
உண்மையின்
அன்புலகை ஆக்குவாய்
ஓம் சுத்த சக்தி ஓம்

15 February 2006

இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

"இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!" என்பதை கவியோகி சுத்தானந்த பாரதியின் கொள்கைக் கோஷம்!அதற்கு அவர் எழுதிய பாடல் இதோ:-
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!
என்னும் குரலை எழுப்பிடுவோமே
கல்லார் கற்றார் ; காணார் கண்டார் ;
இல்லார் உள்ளார் ; ஈந்தார் ஏற்றார் ;
நல்லார் அல்லார் ; நம்பர் பண்பர் ;
செல்வர் எளியர் ; சிறியார் பெரியார் ;
எவரெவரேனும் எத்திசையேனும்
மானிடர் ஓரின மக்களே யாவர்
ஓர்வான் சூழும் ஓருலகத்தில்
ஓருயிர் துடிப்புடன் ஓரான்மநேயர்
சாதிமதமெனும் பேதமேயின்றித்
தீதறவாழும் செவ்விய மந்திரம்
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்கவே!

13 February 2006

போர்ப் பேய் - கவியோகி


நான் போன இடுகையில் கொடுத்த மங்கலப் பண்ணினைப் பாடியவர், மஹரிஷி, கவியோகி சுத்தானந்த பாரதியார். ஒரே ஒரு நண்பர் சரியாக, இதனை இயற்றியவர் சுத்தானந்த பாரதி என நேராக விடை கூறாமல், சுத்தானந்த பாரதியை மறக்க முடியுமோ? என்று கேள்வி கேட்டு என்னை நெத்தியடி அடித்துவிட்டார்! நண்பர் அனாநிமஸ் எனப்பதிலெழுதியதால், பரிசு அறிவித்தபடி சுத்தானந்தரின் புத்தககங்கள் அனுப்ப முடியாததற்கு வருந்துகிறேன். நண்பர் தயவு செய்து விலாசம் எழுதினால், என் மனது ஆறும். சுப்ரமணிய பாரதிக்குப் பின் கவித்துவத்தால் 'மகரிஷி','பாரதி' பட்டங்கள் பெற்றவர்; தாமாக சேர்த்துக்கொண்டவர் இல்லை!
கவியோகியின் மற்றொரு அமைதிப் பாட்டை இன்று தருகிறேன்:-

விஞ்ஞானத்தால் வாழ்வு செழிக்கும்
வியன்கள் புரிய வருள்
அஞ்ஞானத்தால் அணுகுண்டெறியும்
அடுபோர் நீக்கி யருள்
மெஞ்ஞானத்தால் மேதினியன்பின்
விண்ணக மாகவருள்
எஞ்ஞா னத்தும் மெஞ்ஞானமதாய்
இலகும் பரமாத்மா!!

இவ்விரண்டு பாட்டையும், அமெரிக்க தலைவரிடமும், ஏனைய 'பெரிய தலை'களுக்கும் மொழிபெயர்த்துத்தரவும் தேவையில்லை!கவியோகியே, 'Peace Anthem' என்று அன்று ருசியா, பெர்லின் நாடுகளில் பாடிய பாட்டை இன்று அவர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும்; வேப்பிலை நன்கு வேலை செய்தால், போர்ப் பேய் அடங்கும்!

10 February 2006

மங்கலப் பண் - பரிசு !

மங்கலம் குலுங்கி எங்கும் அன்பு மேவி இன்பமாக
வான் வளம் பெருகி வாழ்க - பூமியெல்லாம்
சங்கடங்கள் இன்றி சண்டை சச்சரவுமின்றி எங்கும்

சஞ்சலங்களின்றி வாழ்க - தேசமெல்லாம்
தங்கமான சுத்தயோக சங்கமாக ஞானதீரர்

சாந்தமாக வாழ்க நீடு - தர்மமோங்க
சிங்கம்போல வீரநெஞ்சும் சித்தர்போல சக்திவீறும்

பொங்கிவாழ நன்கருள் செய் - பரமாத்மா!!


இந்த சமாதானப் பாட்டைப் பாடியவர்,... 7 வயதிலேயே சன்யாசி ஆகி, ஏறத்தாழ 20 ஆண்டுகள் நாடு சுதந்திரம் பெரும் வரை மவுன விரதம் காத்தவர் ... யார்? கிட்டத்தட்ட 10 பாஷைகள் அறிந்தவர், பல நாடுகள் பயணித்தவர்! கவி+ யோகி ஆக விளங்கியவர் இவரொருவராகத்தான் இருக்க முடியும்! 92 வயது வாழ்ந்து, ஜீவ சமாதி அடைந்தவர்; இவர் பெயரில் யோக சமாஜமும், பள்ளியும் நன்கு நடந்து வருகின்றன! யார்? எனக் கண்டுபிடிப்பவர்க்கு, கவியோகியின் புத்தகங்கள் பரிசாக அனுப்பப்படும்!

09 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-5.அடுத்து, புள்ளமங்கைக் கோயிலில் சமத்துவ நோக்குகொண்ட சிற்பங்கள் உள்ளன!! ஆம், சிவன் கோயிலில் ராமாயணக் காட்சிகள்!!
ஒரு சிலவற்றைப் பார்ப்போமா?
வில்லெடுத்த ராமனின் காட்சி! அந்த வில்லை எடுத்து தூக்கிப் பிடித்த அதே ஜோரில் ஒரு மந்தஹாசப் புன்னகை புரியும் ராமன்! ராவணனை அழிக்க ஒரே ஒரு அம்பை வீசுகிறான்! அந்த நொடியில் அவன் நிற்கும் அழகே அழகு! வீரு கொண்ட நிமிர்ந்த நோக்கு. அருகில் சீதை(?) வியக்க, சுற்றுமுள்ள வானரங்கள் ஆச்சரியப்பட, வலது கால் கீழ் அசுரர்கள் பொடிபட, மேலிருந்து அவதாரத்தின் நோக்கம் நிறைவேறப் போவதால், வாழ்த்தும் தேவர்கள். கடவுள் மிகப் பெரியவன் என்பதையோ, அல்லது விசுவரூபத்தைக் குறிக்கவோ கைகள் ஆச்சரியக் குறியை காட்டுவதுபோல், சிற்பி இக்காட்சியை வடித்துள்ளான்.


மற்றொரு சிதைந்த ஆனால் சிந்தை கவர்ந்த சிற்பம், சூர்ப்பனகை மூக்கறுப்பு! ஒரு பக்கம் பயந்து போன சீதையை ராமன் தேற்றிக்கொண்டிருக்க, மறுபக்கம், ஜடைமுடிவிரிந்த நிலையில், அகோரமாகக் கத்தும் சூர்ப்பனகை மூக்கறுப்பு வைபவம், இலக்குவனால், இனிதே ?? :-) நடைபெறும் காட்சி! எளிமையான ஆனால், அற்புதமான படைப்பு இது!

08 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-4


Action Still of a stunt scene!! புள்ளமங்கை கோயிலில் இதுவும் ஒரு கல்லோவியம்!
போர் காட்சி! குதிரையில் ஏறிய வீரன், பின்னால் துரத்திவருகிற யானையை அடக்கும் காட்சி. யானையின் கோபமும், அங்குசத்தால் தாக்கியபடியும், குதிரையையும் ஓட்டிக்கொண்டே போகும் வீரனை ஒரு சேரக் காட்டும் இக்கல்லோவியம்,காலத்தால் சிறிது சிதைந்திருந்தாலும், கோலத்தால் நம் மனதை வெல்கிறது அன்றோ?


மிக அருகே, தூண்களின் இரு புறமும் கீழ் நிலையில் பல யாழி முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமின்றி பார்க்கும் கண்களூக்கு, அந்த யாழியின் வாய்க்குள் ஒரு உருவம் இருப்பது புலப்படாது! சற்றே நெருங்கி உற்றுப் பாருங்கள்! ஆ! யாழி வாயை கிழித்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய ஒரு வீரன் வெளியே வருகிறான்!! எனக்கென்னவோ அது காளிங்கனை சம்ஹாரம் செய்யும் கண்ணனாகவே தோன்றியது! இந்த அற்புத படைப்பின் மொத்த அளவும், நம் கைக்குள் அடங்கிவிடும்!!

06 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-3


அடுத்த ,கலைச் சதுரம், ருத்ர தாண்டவம்!! கல்லினை அடிக்கும், உளிக்குக் கூட உக்ரம் ஏற்பட்டாலொழிய, இத்தகைய ஒரு சிற்பத்தை வடித்திருக்க இயலாது! கோர ரூபம், ஜடை முடி குலுங்க, சகல அவயங்களும் ஆட, ஒவ்வொரு கையும், உடுக்கு, மணி, ஆயுதங்கள் ஏந்தி, ஆட, இடது பக்கத்து ஒரு கை மட்டும், கலைஞனின் தனது ஆச்சரியத்தை, சிவபெருமானின் ஒரு கையில் முத்திரையாகப் பதித்து விட்டான்! இறைவம் மிகப்பெரியவன் எனும் தத்துவத்தைக் கூட அந்த கை காட்டுவதாக அர்த்தம் கொள்ளலாம்!

சிவனின் கீழே ஒரு யானை சிரம் தாழ்ந்து தலை குனிவதைக்காட்டி, ருத்ரனின் விசுவரூபத்தை நமக்கு சிற்பி எவ்வளவு எளிமையாகக் காட்டிவிட்டார்!!
(இது கஜசம்ஹாரமூர்த்தி வடிப்பு என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்து, இந்த வரியை சேர்த்துள்ளேன். படிப்பூட்டியவர்க்கு நன்றி.)

சரி, ஓவியம் வரையும் போது, 'balancing' என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஒரு செய்தியோ, அல்லது நிறமோ மிக அதிக அளவில் வரையப் படும் போது, அது மிகையாகத் தோன்றும்! எனவே, அதை சரி செய்ய, contrast நிறங்களோ, அல்லது, வெண்மையோ, ஓவியத்தில் புகுத்தப்படும். அதே பாணியை, இங்கே, சிற்பக் கலைஞரும் பின்பற்றியுள்ளார்! ருத்ரம் கல்லில் மிகை படுவதை, அழகான நகைச்சுவையும், வாழ்வியலும் புகுத்தி, நம்மை வியக்க வைக்கிறார்!

சிவனின் இடப்பக்கம் கீழே,பாருங்கள்! குழந்தை ஒன்று, தன்னை மறந்து, சிவதாண்டவத்தைக் காணும் பெண்ணின் கைகளிலிருந்து தாவிக்குதிக்க, அதை அவசரமாக ஏந்த மற்றொரு பெண் விரைவதையும், எத்தனை அழகாக வடித்துள்ளார்? நாட்டியத்தைக் காணும் பெண்ணின் மனதில் மகிழ்ச்சி!! உக்ரன் சிவனைப் பார்த்து எப்படி சிரிக்க முடியும்? ஆம், முடியும்!! வாழ்வியல் தத்துவம் அது! ஆட்டுவித்தால் ஆடும் மனித மனநிலையை ப்ரதிபலிக்கிறது, இச்சித்திரம்! அதே போல், கோபம், துன்பம், இன்பம் போன்றவை இறைவன் அடியார்க்கு ஒன்றே எனச் சொல்லுகிற மாதிரியும் உள்ளது, இப்பதிப்பு!

இச்செய்தி balancing செய்ய போதாதே? என்ன செய்ய? கீழே பாருங்கள்! குட்டி பூதகணம் ஒன்று, வாய் கோணி, கேலி செய்கிறது! அதைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் இருப்பார்களோ?

கோபத்தை ப்ரதிபலிக்கும் இந்த கல்லோவியத்தை, காண்பவர் மனம் வியக்கும் வகையாக செதுக்கிய சிற்பியின் கற்பனை வளத்தை என்னேவென்பது?

03 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-2


புள்ளமங்கைக் கோயில் தொடர்ச்சி..

அடுத்து, நான் போன இடுகையில் குறிப்பிட்ட சின்னச் சின்ன அற்புதக் கல்வெட்டுச்சித்திரங்கள் ப்ரகாரத்தினைச் சுற்றிலும் உள்ளன. மிக அதிக பட்சமாக 6" X 4" அளவே கொண்ட மினி கலைப் புதையல் அவை!! ஒன்றொன்றும் ஒரு கதை பேசுகிறது!!
முதலில் நாம் காண்பது சிவதாண்டவத்தில் சில காட்சிகள்:-

முதல் கலைக் கல் ஒரு நிஜ கலக்கல்!! சிவனைப் பாருங்கள்! மேல் நோக்கிய ஒரு மந்தஹாசமான பார்வை! 8 கைகளும் பல முத்திரைகள் தாங்கி, ஒரு கால் தூக்கிய நிலையில், இடுப்பிலுள்ள நாகாபரணப் பாம்புகூட ஆடும் ஒரு action shot!! சுற்றியுள்ள பூதகணம், மெய்மறந்து ஆச்சரியத்தைத் தாங்கிய முகபாவம்! (முகம் சிதைந்து போனாலும், நம்மால் அந்த ஆச்சரிய பாவத்தை அனுபவிக்க முடிகிறது!) அருகிலுள்ள தேவகன்னிகை (அ) பார்வதி, விசுவருபமெடுத்து ஆடும் ஆனந்த தாண்டவனை உவகை மேலிடக் காண்கிறாள்!! இவை அத்தனையும், இச்சிறு கற்சதுரத்தில் பதிக்கப் பட்டிருக்கும் அழகு, சோழர்காலத்து கலைஞர்களின் உயரிய நயத்துக்கு எடுத்துக்காட்டன்றோ?

01 February 2006

தெரிந்த ஊர் தெரியாத செய்தி

திருக்கோவூர்: செவ்வாய் ஜனவரி 17 திரு.ஞான வெட்டியான் "தாள் எறியால் நெற்றியில் வடு' எழுதிய நிகழ்ச்சி, மீண்டும் நடந்தேறியுள்ளது!! ஆனால், அதை சோழன் செய்யவில்லை; நவீன கோயில் செப்பனிடுபவர்கள் செய்துவிட்டார்கள்! இது போல் எத்தனையோ கோயில்கள். சமீபத்தில் சென்னை போரூர் அருகேயுள்ள திருக்கோவூர் கருணாகரப் பெருமாள் கோயிலை சுத்தமிடச்சென்ற [கோயில்சுத்தம் செய்வோர் (temple cleaners yahoo group) யாஹ¥ குழுமத்தால்] இளைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது!! கோயில் மதில்சுவற்றையொட்டி பல கல் தூண்கள் விழுந்து கிடந்தன! கோயில் சுத்திகரிப்போர் பற்றிய செய்தியை, இங்கு காணலாம் http://templesrevival.blogspot.com

இக்கோயிலின் மிக அருகே பாடல்பெற்ற ஸ்தலமான கோவூர் சிவபெருமான் கோயில் உள்ளது. தியாகராஜ சுவாமிகள் தனது நண்பர் சுந்தரேச ஐயரைக் காண வருகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் மீதான 5 பாடல்கள் கொண்ட "கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள்" பாடிய ஸ்தலம். 1968ல் இக்கோயிலின் புனருத்தாரணப் பணிகளின் போது, அருகிலுள்ள பெருமாள் கோயில் தூண்கள், நன்றாக இருந்த காரணத்தால், அவ்ற்றை வைத்து, இக்கோயிலைச் செப்பனிட்டுள்ளனர், அதிகாரிகள். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, இரு கோயில்களுமே, ஒரே மாதிரியாகச் சோழர்களால் கட்டபெற்று, இன்று, ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் எனும் கதையாக ஆகிவிட்டது!!

இது போல், பல கோயில்கள், சரித்திர செய்தி சொல்லும் கலைகள், கல்வெட்டுகள், அழிந்து வருகின்றன! அதை மீண்டும் எழுச்சியுறச் செய்யும் பணியில் சில குழாம்கள் பணி செய்துவருகின்றன! அவற்றில் ஒன்று, மேற்கண்ட temple cleaners குழு. மேலும், வடபழனி சிவன் கோயிலில் உள்ள உழவாரப்பணி நற்பணிமன்றம், திருவான்மியூரைச் சேர்ந்த ஆடலரசன் என்பவரின் கீழ் இயங்கும் குழு, மாம்பலம் சாய் சமிதி திரு.நாகசுப்ரமணியனின் குழு, போன்ற குழுக்கள், கேட்பாரற்றுக்கிடக்கும் பல கோயில்களுக்குச் சென்று, அதனைச் சுத்தம் செய்து, கோயிலமைந்த ஊர் மக்களை அழைத்துப் பேசி, கோயிலை நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்தும் பணியை இக்குழுக்கள் செய்துவருகின்றன. என்னால் முடிந்தது, எல்லாக் குழுவினரையும் ஒன்று சேர்க்கும் முயற்சி! மீண்டும் அடுத்த பதிப்பில் பழைய படி புள்ளமங்கை சிற்பங்களைக் காண, சந்திப்போம்...!