19 December 2006

தோஹாவில் "தோக்கா" :சாந்தி!

சாந்தி, சாந்தி, சாந்தி: - இது வேத மந்திரத்தின் இறுதி வரிகள் என்பதைப் பற்றி நான் சொல்லவரவில்லை!

இந்த பெயரைக் கேட்டவுடன் எல்லாருக்கும் அண்மையில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நபர்தான் நினைவுக்கு வருவார். தோஹாவில் அவருக்கு 'தோக்கா' (இந்தியில் காலை வாரிவிடுதல்!) தந்துவிட்டனர்!

இன்று காலை செய்தித் தாள்களில், "தமிழக முதல்வர் அவருக்கு அறிவித்தபடியே, வதந்திகளையும் அவதூறுகளையும் புறந்தள்ளிவிட்டு, மனிதாபிமானத்தின் அடிப்படையில் 15 லட்சத்தைத் தந்தார்" என்ற செய்தியைபார்த்ததும்தான் மனதில் நிம்மதி பிறந்தது!

முதலில் சர்ச்சையைப் பற்றி:அவர் ஆணா, பெண்ணா, இல்லை 'நடுநிலையாளரா' (இந்தப் பதம்தான் சரி என்று எனக்கு பட்டது!) என்பது, இத்தனை நாட்கள் அவரை பலதரப்பட்ட மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், சோதனைத் தேர்வு போட்டிகளிலும் ஓடச்செய்த நடுவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? இல்லை சக போட்டியாளருக்கும் கூட வித்தியாசம் தெரியாமலிருக்கும்? அதிசயம்தான்! சாந்தி நேற்று குறிப்பிட்டபடி, "என் மனசாட்சியின்படி நான் குற்றமற்றவள்" என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்! அப்படி மனசாட்சியை உதறிவிட்டு அவர் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என்று மனம் எண்ணிப்பார்க்க மறுக்கிறது!

சரி, ஒரு வேளை அவர் 'அப்படியே' இருக்கட்டும்! அவரை கடைசிவரை அனுப்பிவைத்த அதிகாரிகள் தானே குற்றம் செய்தவர்கள்? தண்டனை என்று ஒன்றிருந்தால், அதை அவர்களுக்குத்தான் தரவேண்டும்! இனி அவர்கள் எந்த போட்டிக்கும் அதிகாரியாகவோ, நடுவராகவோ கலந்து கொள்ளக் கூடாது!அப்படி தெரிந்தே அவர்கள் சாந்தியைப் பகடை காய் ஆக்கியிருப்பார்களே ஆனால், அவர்களுக்கும் 'மாமா' வேலை செய்பவனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

சாந்தியின் நிலையை எண்ணிப் பாருங்கள்! அவர் 'அப்படியே' இருக்கட்டும்! காலை தினமும் ஏழ்மையின் முகத்தில் விழிக்கும் குடும்பம் ஒரு பக்கம்; சத்துணவோ போஷாக்கோ இல்லாத பயிற்சி ஒரு பக்கம். சந்தேகமும் மருத்துவமும் காலை வாரிவிட்ட ஏக்கம் ஒரு பக்கம்; வேலையின்மையும், ஓட்டத்துக்காக தொடரும் கல்வி ஒருபக்கம் - இப்படி பல சுமைகளை தூக்கி அவர் ஓடியது - தனது வாழ்கையின் விடியலைக் காண கடைசி மூச்சுள்ள ஒரு நோயாளிபோல், உயிரோடு 'காலில்' பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்!

அவர் தோற்றிருந்தால்? அவர் 'அப்படியே' இருப்பது, அப்படியே அமுங்கிபோயிருக்கும்! செய்தி வெளியே வந்திருக்காது! இந்திய செய்தியாளர்களைப் போல ஒரு "negative news mongers" ஐ நான் எங்கும் பார்த்ததில்லை! இந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டு நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிடும் கேவலமான வேலையை வழக்கம்போல் செவ்வனே பல பத்திரிகைகள் செய்தன! அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல், இராக்கில் போர் உச்சத்திலிருந்த பொதுகூட, அவர்கள் எல்லாப் பக்கங்களிலும், வெற்ற பெற்ற தொழில் அதிபர்கள், நன்கு விற்கும் பொருட்கள், நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகள், இப்படி நல்லவையையே வெளியிட்டு, கடைசி பக்கங்களில், ஒரு பத்தி செய்தியாக, போரில் காலமானவர்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டார்களாம்! காய்ந்த புல்லிலும் சத்துணவை காணும் இராக்கியன் எங்கே, ஆயிரம் ஆயிரம் விருந்து வகைகள் கண் முன் இருந்தும் மலத்தை தேடி உண்ணும் இந்த மாதிரியான முதல் பக்க செய்தி வெளியீட்டாளர்கள் எங்கே?

இதில் இன்னொரு விஷயத்தை மனித உரிமைக் காரர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்! இம்மாதிரியான 'நடுநிலையாளர்களுக்காக' ஏன் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு முதல் உள்ளூர் மைதானம் வரை தனியே போட்டிகள் நடத்தக் கூடாது? அவர்கள் எல்லா நாட்டிலும் 'கணிசமான' எண்ணிக்கையில் நிரம்பி உள்ளனர்! எதிலும் அங்கீகாரம் தராமல், கீழே தள்ளப்படுவதால்தான் அவர்கள் சமூகத்துக்கெதிராக பிராத்தல்கள் நடத்தவோ,பிச்சை எடுக்கவோ, ஏனைய பிற தவறான பாதையில் செல்லவோ முற்படுகின்றனர் (எல்லாரும் அல்ல; பெரும்பாலானவர்கள்). ஆண்டவனில் 'அர்த்தநரீஸ்வர தத்துவத்தில் தொடங்கி, இதிகாசங்களில் அர்ச்சுனன் 'பிரகன்நளையாக' இருந்ததுவும், 'சல்லியன்' அரவானாக தேரோட்டியதிலிருந்து, சங்க காலத்தில், (இது மார்கழி மாதமாகையால் நினைவுக்கு வந்தது) திருநாவுக்கரசர் பாடிய திருவெம்பாவையில், "..ஆணாகி, பெண்ணாகி, அலியாய் பிறங்கொளிசேர், மண்ணாகி, விண்ணாகி, அத்தனையும் வேறாகி.." என வரும் காலம் தொட்டு, இன்று பல துறைகளில் முன்னேறத் துடிக்கும் இந்த 'நடுநிலை மக்களை' முன்னேற்ற வழி செய்ய நாம் முயல்வோமாக!

26 comments:

கால்கரி சிவா said...

//ஆயிரம் ஆயிரம் விருந்து வகைகள் கண் முன் இருந்தும் மலத்தை தேடி உண்ணும் இந்த மாதிரியான முதல் பக்க செய்தி வெளியீட்டாளர்கள் எங்கே?
//

சந்துரு, சரியான சாட்டையடி பத்திரிக்கைகளுக்கு.

சாந்தி போன்ற சாதனையாளர்கள் வாழவேண்டும் வளரவேண்டும்

ஜெய. சந்திரசேகரன் said...

உடனடி பின்னூட்டத்துக்கு நன்றி கால்கரி.சிவா!

ஜி said...

அருமையான பதிவு.

koothaadi said...

பத்திரிகைகள் பத்திய உங்கள் விமர்சனம் சரியானதே ..அழகிகள் கைது ,மாடல்கள் விபச்சாரம் நடிகைகள் உபா அருந்தி கொண்டாட்டம் போன்றவை வாசகர்களுக்கு கிளுகிளுபூட்டி காசு பாக்க மட்டுமே என்று ஆகி விட்டது ..
தமிழ் நாட்டில் ஹிந்து தவிர எல்லாப் பத்திரிகைகளும் அழுக்கை வியாபரம் செய்யும் புனிதர்கள் தாம்..

சாந்திக்கு எல்லாம் நல்லது நடக்கும் என் நம்புகிறேன் ..

SurveySan said...

Chandrasekaran,

Very good questions.
I can't digest the fact we have rules and procedures to do these things based on some medical tests.

Why cant they go based on gender by birth?
Was she born this way? OR did she get to this stage because of her hard work and poverty?

If its the later, the human rights group should raise it as an issue and do the needful to get the medal back to Santhi.

I dont think we should classify Santhi under other categories without knowing the full details.

I cant imagine, how hurtful it is for her. poor GIRL.

SurveySan

லொடுக்கு said...

சாந்திக்கு பெண்கள் பிரிவில் ஓட தகுதியில்லாதவர் என்று அவரே அறிந்திருந்து செய்திருந்தால்? அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று சொல்லலாமா கூடாதா?

நான் நிச்சயமாக சாந்திக்கு இனி இச்சமுதாயத்தில் கிடைக்கப் போகும் மரியாதை அறிந்து வருத்தப்பட்டாலும் மேலுள்ள கேள்விக்கு என்ன பதில்?

நாடோடி said...

பத்திரிக்கைளை குறை சொல்வது மிகப்பெரிய முட்டாள்தனம்.
கள்ள காதலன், இலவசம், நடிகைகளின் தொப்புள் படம் இந்த மிக முக்கியமான தகுதிகளையுடைய பத்திரிக்கைகளை மட்டுமே மக்கள் தேடி படிக்கிறார்கள். இதில் குற்றம் சொல்லபடவேண்டியவர்கள் பத்திரிக்கைகள் அல்ல. வக்கிரமான புத்தியுடைய மக்களைதான்.

Anonymous said...

About Sthanthi,
first of all she is a human - by birth she is a woman - In every man and woman - male and female hormons are there but within the limit. In some cases, it exceeds the limit.even if it is so,it is not the fault of shanthi - it is the fault of organ which stimulate
Your voice for the `nadu....' appreciable. But no one can deny her achievements. yaaro

பொன்ஸ்~~Poorna said...

சந்திரா, கட்டுரை அருமையாக இருக்கிறது.

ஆனால், ஆங்காங்கு "'அப்படியே'", "'நடுநிலை'" என்று தனித்துக் குறியிட விரும்புவது ஏன் என்று தான் புரியவில்லை.

திருநங்கைகளை நமக்குள் ஒருவராக எழுத்தளவில் கூட நம்மால் பார்க்க முடியாமல் போனதாலா?! :(

சீனு said...

//அப்படி மனசாட்சியை உதறிவிட்டு அவர் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என்று மனம் எண்ணிப்பார்க்க மறுக்கிறது!//
இல்லை. ஒரு வேளை சந்தர்ப்பம் மனசாட்சியை உதறவிடலாம் இல்லையா? தான் 25 வயது வரை வயதுக்கு வரவில்லை என்பதை எதற்கு மறைக்க வேண்டும்?

அவருக்கு 15 இலட்சம் கொடுக்கப்படக்கூடாது என்பது என் எண்ணம் இல்லை. At least, அவர் இத்துனை வருடம் பட்ட கஷ்டத்திற்காகவேணும் அந்த 15 இலட்சங்கள் போய் சேரவேண்டும். அது அவருக்கு பின் வருபவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.

//இதில் குற்றம் சொல்லபடவேண்டியவர்கள் பத்திரிக்கைகள் அல்ல. வக்கிரமான புத்தியுடைய மக்களைதான்.//
ம்ஹூம்...இதில் நீயா நானா என்றால் இருவருமே குற்றவாளிகள் தாம். ஆனால், இதில் பொருப்பற்று நடந்து கொள்வது ஊடகம் தான் என்பது என் கருத்து.

ஜெய. சந்திரசேகரன் said...

ஜி, வாங்க, பின்னூட்டத்துக்கும், சான்றளித்தமைக்கும் நன்றி.

ஜெய. சந்திரசேகரன் said...

கூத்தாடி, பின்னூட்டத்துக்கு நன்றி. ஆனால் இந்து பத்திரிகையை விட்டு வைத்தது தப்பு. அவர்களும் அதே வேலையைத்தான் பல முறை செய்கின்றனர். சாந்தி மனதில் சாந்தி நிலவ பிரார்த்திப்போமாக!

ஜெய. சந்திரசேகரன் said...

Surveyan (good name!),
I agree to your points. A fighter she is (any good athlete is!) I too endorse your views and that's the reason I chose to write this to support Shanthi. Inspite of she being any gender, it is to her spirit we applaud, not for her gender. I have also raised the same questions you have asked, to the readers. I hope Shanthi will come out of this, not get hurt or go to the extent of suicide, a fighter sports person, she is.

Anonymous said...

Chandrasekaran,

What a fantastic write up. All your poits are 100% valid.

ஜெய. சந்திரசேகரன் said...

லொடக்கு,பின்னூட்டத்துக்கு நன்றி. என் பதிவை நன்கு படியுங்கள். சாந்தி தவறு செய்ய வாய்ப்புக்கள் மிக குறைவு என்பதுதான் என் வாதம். சின்ன சின்ன போட்டிகளில் வெற்றி பெற்ற பின்னரே யாரும் ஆசிய போட்டிக்கு தேர்வு செய்யப் படுவர். திடீரென சாந்தியை பிரச்னை மனிதராக்குவது எதற்கு? அப்படியே தவறிருந்தாலும், பல நாள் பட்டினி கிடந்த குழந்தை திருடிய ரொட்டிக்கும் சாந்தியின் பதக்கத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. தண்டிக்கப் படவேண்டியவர்கள், அவரை அப்படியே மேலே போட்டிக்கு அனுப்பியவர்கள். முதலில், சாந்தி 'யார்' என்பது தெரியட்டும்!

ஜெய. சந்திரசேகரன் said...

நாடோடி, பத்திரிகையைதான் யாரும் குறை சொல்லுவார்கள். அவர்களை யார் இம்மாதிரியான செய்திகளை முதல் பக்கத்தில் போட வேண்டும் என நிர்பந்தித்தது? சினிமாவிஉலும் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாதான் மக்கள் பார்ப்பார்கள் எனும் கருத்தை உடைத்து சமீபத்தில் எத்தனை நல்ல படங்கள் வெளி வந்துள்ளன? அதே போல் தான் பத்திரிகைகளும். நானும் பத்திரிகையாளன் தான். தவறியேனும் கீழ்தரமான செய்தியையோ, அல்லது உடனடி விளம்பரம் செய்யும் உத்தியையோ நான் கடை பிடிப்பதில்லை. எது காலத்திற்கும் மனதில் நிற்கும் கருத்தோ, அதை மட்டும் தான் எழுதுகிறேன்.
-----------------------------------
anonymous,
I also have my fullest sympathy with Shanthi and support her grit and determination to win as a sports person, which most in India lack. Those who deny her achievements are those who only are of the "Pulavar Nakeeran" type of Thiruvizaiyaadal :)

Anonymous said...

As far as the news, Shanthi failed already in the preli.test conducted by Indian sports officials. Still, She went and the rest happened.

லொடுக்கு said...

நண்பரே!
நான் அவரை பெண் இல்லை என்றோ ஆண் இல்லை என்றோ கூறி மனம் புண்படுத்தும் அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் கேட்க வந்தது, ஒருவேளை அதை சாந்தியே அறிந்திருந்து செய்திருந்தால்? நீங்கள் கூறும் உவமையில் உள்ளது போல் ரொட்டி பசியில் திருடினாலும், பசியில்லாமல் திருடினாலும் குற்றம் குற்றம்தானே? மற்றபடி, கண்டிப்பாக தடகள அமைப்பினர் தண்டனைக்குறியவர்களே அதில் மாற்றுக் கருத்து இல்லை.

இப்போதைக்கு எனக்கு இரண்டு விருப்பம்:
1. முதலில் அறிவித்த ஹார்மோன் சோதனை முடிவு தவறென்று மீண்டும் அறிக்கை வரவேண்டும்.

2. இல்லையேல், குற்றச்சாட்டு உண்மையெனில்- அதை சாந்தி அறிந்திருக்கவில்லை என்ற செய்தி வரவேண்டும்.

பாவம் சாந்தி. இது போன்ற ஒரு சர்வதேச அவமானம் யாருக்கும்(எதிரிக்கும் கூட) வர கூடாது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

நீங்களாக இவரை "நடுநிலை இனம்" என்பது போல் முடிவுசெய்து எழுதியதுபோல் தெரிகிறது.

இவரை அப்படித்தான் என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்?

பெண்மைக்கு என்ன அளவுகோல்?

இணைய நாடோடி said...

உங்கள்எழுத்திற்கு என் கண்டனத்தையும் கொஞ்சமாவது கணக்கில்எடுத்துக் கொள்ளவும் http://chella.info/wegbypsy/

Anonymous said...

Dont made the medial alone. Meida / politeicans/movies/ govt reflect the minds of the people. I see daily samachar top 25. Mostly the top clicks are related to sex, crimes only. Why the internet users are like this.Media get message from this and give what mass intererst is. So much hypocrasy among people.

ஜெய. சந்திரசேகரன் said...

பொன்ஸ், //எழுத்தளவில் கூட//.. அப்படி கிடையாது. ஒன்றாகப் பார்க்க விழைவதால் தானே நான் அவர்களுக்கு தனியே போட்டியே வைக்க வேண்டும் என்கிறேன்! படிப்பவர், சாந்தி பெண்ணாயிருப்பின், இந்த மலிவு பெயர் இறக்கச் செயலை கண்டிக்கிறேன். அப்படி இல்லாத பட்சத்தில், அவர் சூழ்நிலைக் கைதியாக இருப்பதாலேயே இத்தனை தூரம் நடந்திருக்குமென நினைக்கிறேன்! குறியீடுகளை போட்டதால்தான் அந்த சொற்தொடருக்கு அர்த்தம் வருகிறது. அதை நீக்கிப் பார்த்தால், சொல்ல வந்த செய்தி நலிவடைந்து விடுகிறது. மனதளவிலும், அழுத்தளவிலும் அவர்களை நான் ஆதரிக்கவே செய்கிறேன்.

----------------------------------
சீனு, வருகைக்கு நன்றி. என் கருத்தொத்து இருக்கிறது உங்களதும். சிறிய மாற்றம்: இருவரையும் குறை கூறுவது சற்று அதிகம் என நினைக்கிறேன். பத்திரிகைகள் முதலில் மாற்றிக் கொள்ளட்டும். பிறகு மக்களின் மாற்றத்தை நாம் கண் கூடாக பார்க்கலாம். எனது வேண்டுகோள் - அதிக தவறான ஊடகங்களை தரும் செய்திகளை முதல் பக்கத்திலும், கொட்டை எழுத்துக்களில் எந்த பக்கத்திலும் போட வேண்டாம் என்பதே!

ஜெய. சந்திரசேகரன் said...

லொடக்கு,
இப்போது நீங்கள் தெளிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டது சரியல்லவோ? எதுவேனும், உங்கள் கடைசி வரிகள் நிஜம்! பாவம், சாந்தி!
--------
anonymous (2)- thanks for your feedback
--------
anonymous(3)- you said, // as far as the news goes...// I fear that Shanthi as a sports person would have done that. I really doubt. If that's the case, her utmost poverty (or officials false promise to hide the truth) would have pushed her to this corner. So? let's wait for the final news, nothing is confirmed.
--------------------------------
கல்வெட்டு, நான் எதுவுமே முடிவு செய்யவில்லை. இரு நிலைகளையும் மதிப்பீடு செய்து, சாந்தி எனும் ஒரு விளையாட்டு வீரரின் நிலைமைக்குத்தான் நான் வருந்தினேன்.
//பெண்மைக்கு என்ன அளவுகோல்// என்று கேட்டுள்ளீர்கள்! மருத்துவ ரீதியாக என்ன என்பது இன சார்பு சோதனை தான். மனரீதியாக? - புண்படுவதில், ஆண் பெண் யாவருக்கும் மனம் ஒன்றுதான்.

-----------------------
இணைய நாடோடி,

//உங்கள்எழுத்திற்கு என் கண்டனத்தையும் கொஞ்சமாவது கணக்கில்எடுத்துக் கொள்ளவும் http://chella.info/wegbypsy/ //

கண்டனம் தெரிவிப்பது- என் எழுத்துகளுக்கு .. என்பது போல் தொனிக்கிறதே? அப்படியெனில், என்ன குறை என்று சொன்னால், சரி செய்ய முயல்கிறேன். சாந்தியை அவமானப்படுத்தியதை கண்டிக்கிறீர்கள் என்றால், நானும் அதை ஆமோதிக்கிறேன்!
The URL you gave is not working. Pls check and repost again :(
-----------------------------------

மாசிலா said...

நல்ல கருத்தோட்டமுள்ள நல்ல பதிவு.
தங்களது பத்திரிகைகள் விற்பதற்கு பத்திரிகையாளர்கள் இதையும் செய்வார்கள் இதற்கும் மேலும் போவார்கள்.
கிடைத்திருக்கு வெகுமதியை உபயோகித்து இதுபோன்ற மோசடி பத்திர்கையாளர்கள் மீது சாந்தி மீது வழக்கு போடலாம்!

சுந்தர் / Sundar said...

மக்கள் மன்றத்தில் ...அருமையாக பதிந்ததற்கு நன்றி

- சாந்திக்கு மன தைரியம் கிடைக்க பிராத்திக்கிறேன்

ஜெய. சந்திரசேகரன் said...

மாசிலா (நல்ல பெயர்)வாங்க. சாந்தி பத்திரிகைகாரர்கள் மேல் வழக்கு போட்டு காலம், பணம் விரையமாவதற்கு, அவர் மேலும் பல போட்டிகளில் பரிசுகளை வெல்ல பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சொலல்விலன், சோர்விலன் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது! என்பது வள்ளுவர் வாக்கு!
--------------------

வருகைக்கு நன்றி சுந்தர். உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சாந்தி இந்த தடைகளை கடந்து, நாட்டுக்குப் பல பதக்கங்களை வெல்ல வேண்டும்.