14 November 2006

குழந்தைகள் தினம்???


இன்று பேச்சளவில் குழந்தைகள் தினம் என்று கொண்டாடினாலும், fபிரோசாபாத்திலும், சிவகாசியிலும் அல்லல்படும் ஏராளமான குழந்தைகளுக்காக வருந்தி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்.

ஆனால், Fபிரோசாபாத்தில் 4 வயதுமுதலே, பள்ளிப் பை தூக்கும் முன்னரே, கண்ணாடிக் கைவளையல்களுக்கு மெருகேற்ற, ஜிமிக்கி ஒட்ட, உருக்கு கண்ணாடியை அச்சில் சுற்றி வட்டமாய் ஒட்ட, இப்படி ஏராளமான வளையல்கள் செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் குழந்தைகளையே ஈடுபடுத்துகின்றனர், அங்கே வளையல் தயாரிப்பாளர்கள்! காரணம்? ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள், கவனித்து செய்வார்கள், அதிக ஊதியம் கேட்கமாட்டார்கள்! எப்படி? அவர்கள் குடும்பத்தின் வருமை காரணமாக, பெற்றோர்களும் பிள்ளைகளை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்! சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான்! பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது! அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய்! அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில்! அந்த புகையை அருகிலிருந்து சுவாசிப்பதனால், அவர்களுக்கு, ஆஸ்மா, டீ.பி. மற்றும் கண் பார்வை மங்கலாகுதல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது!

இனியேனும், வளைகாப்பு, சீமந்தம், நவராத்திரி போன்ற விசேடங்களுக்கு வளையல்கள் வாங்கும் பெண்கள், அந்தப் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களால் ஆனவை இல்லை என உறுதி படுத்திக் கொண்டு வாங்குவதே உத்தமம். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போல், "குழந்தைகளை ஈடுபடுத்தப்பட்ட பொருள் இல்லை" என்பதற்கு ஏதேனும் ஒரு முத்திரை அரசே கொண்டுவரலாம்.

அதேபோல் கல்யாணங்களிலும், ஊர்வலங்களிலும், விசேட நாட்களிலும் வெடி, மத்தாப்பு கொழுத்தும் போது, அங்கே ஒரு பிஞ்சுத் தளிரும் கந்தகத்தில் எரிந்து வாடுவதை மனதில் கொண்டு, அம்மாதிரி பொருட்களை வாங்கி காசை கரியாக்குவதை விட, அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களுக்குச் சென்று, நம் பிள்ளைகள் மூலமே அக்குழந்தைகளுக்கும் எதேனும், புத்தாடை, இனிப்புகள் வழங்குவதை ஒரு நிரந்தரச் சடங்காகக் கொள்ளலாம்.

தகவல், புகைப்படம் ஆதாரம்: நன்றி. IBN news.

2 comments:

கடல்கணேசன் said...

//சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்//

உங்களுக்குள் உள்ள பத்திரிக்கையாளனின் முகம் வெளியே தெரிகிறது.. நல்ல கட்டுரை சந்திரசேகரன்.. வாழ்த்துக்கள்.

Maraboor J Chandrasekaran said...

கடல் கணேசன், பத்திரிகையாள முகம் என்பதை விட, ஒரு மனித முகம் நிஜ வருத்தத்தில் கேட்ட கேள்விகள் இவை. உங்களுக்கு தெரியாதது அல்ல. ஏனெனில், நீங்களும் என் இனமே! வாழ்த்துக்களுக்கு நன்றி.