தெரிந்த ஊர் தெரியாத செய்தி - அரிக்கமேடு, புதுவை.
புதுவை அரிக்கமேடு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுக் களம். மத்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து நிற்கும் அரிக்கமேடு ஆய்வுக் களம் இன்று அழகிய மாந்தோப்பாக வேலியிட்டு நிற்கிறது. தொல்லியல் அறிஞர் தியாக.சத்திய மூர்த்தி அவர்கள் சொல்வது படி, “மிக அதிகமான இடங்கள் அரிக்கமேட்டைச் சுற்றி ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது. ஆனால் மத்திய அரசோ, மாநில அரசோ, செலவு செய்ய எத்தனிக்கவில்லை. எனவே என் காலத்தில் என்னாலான பணி, வேலியிட்டு அந்த இடத்தைக் காப்பாற்ற முற்பட்டேன்,” என்கிறார். மின் தமிழ் குழும நண்பர் அ.சுகுமாரனும் நானும் அங்கே ஒரு ASI (மத்திய தொல்லியல் துறை அலுவலர்) நண்பருடன் வேலிக் கதவு திறந்து மாந்தோப்பு அடங்கிய நிலத்தினூடே நடந்தோம். சரியான வழி காட்டுதல் இன்றி, கால் போன போக்கிலே நடந்தோம். ஒரே புராதனச் சின்னம் அங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்ததற்கான செங்கல் மிச்சங்கள்.
இங்கே அருகில் துறைமுகம் இருந்ததாகவும், துளையிட்ட இயற்கைக் கற்களாலான பாசிகள் பெரிய அளவில் ஏற்றுமதியானதாகவும் செய்திகள் சொல்கின்றன. பொறுமையாக தேடிப்பார்த்ததில், துளையிட்ட பாசிகளும், அதற்கான மூலப் பொருட்களான கற்கள் சிலவும் கிடைத்தன.
சுற்றி வரும் பாதை ஆராய்ச்சிப் பயணம் (expedition) போவது போல மிகவும் அபாயகரமாக இருந்தன. நண்பர் சுகுமாரனை நடக்கவிட்டு எடுத்த படங்கள் காண்க.
மறுபுறம், ஒரு அதள பள்ளத்தில் கீழிறங்கி, கடலின் நீர் நிலையைத் தொடலாம். (Back waters). முன்பு பண்டங்கள் விற்கையில், இந்த சிறு சிறு படகுத் துறைகள்தான், கடலுள் பொருட்களை எடுத்துச் செல்லத் தோதாக படகுகளை நிறுத்த உபயோகப்பட்டன.
இன்றோ, பலான வேலைகள் செய்ய இளசுகள் இந்த வழியை நாடுகின்றனர். இந்த திடலுக்கு நடுவே ஒரு மேட்டை (பள்ளத்தை?) காட்டினார் ASI அலுவலர். அதற்குள் ஒரு பெரிய கட்டிடமே இருப்பதாகவும், அகழ்வாராய்ச்சிக்கு போதிய நிதிவரத்தின்மையால் அந்த பணி கைவிடப்பட்டதாகவும் சொன்னார்.
மொத்த பரப்பளவையும் பார்த்துக் கொள்ள ஒரே ஒரு அலுவலர். பாதுகாப்பு என்பது பூஜ்யம் - இடத்துக்கும், அதை பார்த்துக் கொள்ளும் ஆளுக்கும்! என்னமாய் உறங்குகிறது நம் புராதன பூமி!
மீண்டும் வெளியே வரும் வழியிலேயே, அரிக்கமேட்டின் எல்லையில் இருந்த ஒரு சிறிய கோயில் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அருகில் குழவியில் வெற்றிலை இடித்துக் கொண்ட இரண்டு கிழவிகளை விசாரித்ததில், ‘கடன் வாங்கின சாமி கோவில்' என்றார்கள்! பின்ன?
‘பின்ன என்ன? அதான் வெளியே நிற்கிற இரண்டு பேரும் கடன் கொடுத்தவங்க. வாங்கின பிரம்மா(?!) வெளியே வர்றப்ப பிடிச்சு கடனை திருப்பி வசூல் பண்ணத்தான் இங்க நிற்கிறாங்க,” என்றார் ஒரு கிழவி!
அப்படிப் போடு!
உள்ளே சென்று பார்த்தால், மூலவராய் பரிதாபமாய் கடன் பட்ட நெஞ்சத்துக்கு சொந்தக்காரனாய் ஒரு அழகிய ஜைன சிலை! சுமார் 6 அடி உயரம் இருக்கும் இந்த சிலை, நிச்சயமாக 2-3 ஆம் நூற்றாண்டின் ஜைன தீர்த்தங்கரரின் சிலை. அவருக்கு பட்டை விபூதி, மாலை எல்லாம் போட்டு (கடன் வாங்கின ஆளுக்கு இவ்வளாவு மரியாதையா, பரவாயில்லையே!) வைத்திருந்தனர். சரி, வெளியே வசூலுக்கு நிற்கும் இருவரின் சிலைகளையும் சரியாக ஆய்ந்து பார்த்தோம். பாவம், கோயில் கட்டவும், கொடை கொடுத்த வள்ளலான முதலியாரும், அவர்தம் மனைவியும் கைகூப்பி நிற்கும் சிலை இன்று தவறான ஊராரின் கதைப்புக்கு ஆளாகி, கடன் வாங்க வெளியில் நிற்பவர்களாக மாற்றிவிட்டது. சமுதாயத்தில் தவற்றை பரப்புவது எவ்வளவு பெரிய அசிங்கம்? அதுவும் வரலார்றுச் செய்திகளை திரித்துக் கூறல்? யாரை குறை சொல்வது?
சிலைகளின் கீழே உள்ள கல்வெட்டில் அழகாக, “சாவிடி மணியம் அழகப்ப முதலியார்” (சாவிடி என்பது வீட்டுப் பெயர்) என்று ஆண் சிலை கீழேயும், சாவிடி மணியம் முதலியார் பொஞ்சாதி” (அப்படித்தான் கல்வெட்டில் உள்ளது. மனைவிமார் பெயரோ, பெண்கள் பெயரோ, வெளிப்படையாக பொறிக்கவில்லை என்பதைக் காண்க!) என்று பெண்சிலையின் கீழேயும் பொறிக்கப் பட்டிருந்தன.
அந்த இருவருக்கும் மானசீகமாக வணங்கிவிட்டு, நம் கட்டுரையேனும் அவர்தம் அவப்பெயரை நீக்கும் என்ற நம்பிக்கையில் வெளிவந்தோம்.
அந்த கோயிலுக்கு சிறிது முன்னரேயே, மற்றொரு தனியார் கோயிலும் உள்ளது. ரெங்கராஜு எனும் பொன்னுச்சாமி என்பவர் வணங்கி வந்த அம்பாளின் காலடியிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார் என்றௌ அங்கே இருந்த அவர்தம் குடும்பத்தார் தெரிவித்தனர். 1950ல் அவர் இறந்ததும் அவருக்கு ஒரு நினைவுச் சிலை மிகவும் தத்ரூபமாக செய்து நிறுவப்பட்டுள்ளது. அதையும் படத்தில் காண்க. கல்வெட்டுகளில் பிழைகள் ஏற்பட்டுள்ளதும் ஒரு சரித்திர வெளிப்பாடே.
சரித்திரத் தேர்ச்சி கொள் என்று முண்டாசுக் கவி. சரியான சரித்திரத்தை திரித்துச் சொல்பவர்கள் உலகில் ஏராளம், உஷார்!
No comments:
Post a Comment