06 January 2007

வி.வ.போ - 4 - தலை நிமிர் தமிழா!

வி.வ.போ - 4 (விஞ்ஞானத்தை ளர்க்கப் போறேண்டீ -4)

மரபணு சோதனை செய்த பருத்தி, கடலை விதைகள், மற்றும் சிக்குன்குனியா போன்றவை நம்மை மட்டும் கிடுகிடுக்க வைக்க வில்லை! நுண்கிருமிகளான பாக்டீரியா அமெரிக்க அரசை கிடுகிடுக்க வைத்துள்ளது.

எல்லா கடைகளுக்கும் ச்பினாச் (Spinach) எனும் இலை வகைகளை விற்கும் ஒரு மாபெரும் பேரங்காடி (சூப்பர் மார்கெட்), நாட்டிலுள்ள அத்தனை இலைகளையும் திரும்பப் பெற்று, புதைத்து விட்டது! காரணம்? ஒரு ஈ! இது நம்மூர் ஈ அல்ல; ஈ.கோலி எனப்படும் எஸ்செரீசியா கோலி! இந்த பாக்டீரியக் கிருமி, உணவை உண்பவருக்கு வாந்தி, பேதி, மயக்கம், உண்டுபடுத்தி, சில சமயம் மரணத்துக்கே கொண்டு போய் விடும்! வருடத்துக்கு 60-80 பேர் இந்த கிருமி தாக்கிய உணவை உண்டு மடிகிறார்கள், இல்லை குறைந்தது 80,000 பேர் நோயுறுகிறார்கள்!
சராசரியாக இந்த கிருமியின் வீரியத்தை கண்டு பிடிக்க குறைந்த பட்சம், 24 மணி நேரமாகும். மிக அதிகமான பொருட்களை தயார் செய்யும் ஒரு உணவு தொழிற்கூடமோ, உபயோகப்படுத்தும் ஹோட்டல்களோ, எப்படி கால விரயமாகாமல், இதை கண்டு பிடிக்க முடியும்?
பத்தே நிமிடங்களில் முடியும் என செய்து காட்டியவர், ஒரு இந்தியர், தமிழர் - ராஜ் முத்தரசன்! 60 வயதே ஆன துடிப்பான விஞ்ஞானி! ட்ரெக்சல் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்து, இப்போது, வேதியல் துறை பேராசிரியராக இருக்கும், ராஜ், ஒரு மிகச்சிறிய கண்ணடி ஊசியின் ஒரு முனையில் பீஜோஎலக்டிரிக் பீங்கான் டைடனேட் எனும் மின் இணைப்பையும், மறு முனையில், அந்த ஈ.கோலியின் எதிர்ப்பு கிருமிகளையும் கொண்ட சிறிய கருவியை உருவாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட உணவினுள் அதை வைத்தால் போதும்! எதிர்சக்தியை எதிர்க்க அந்த கிருமி போராடும் தன்மை அதிகமாக அதிகமாக, மின் அதிர்வும் அதிகமாகும். அதிர்வின் அளவை வைத்து, எத்தனை சதவிகிதம் அந்த ஈ.கோலி [ஈ கொல்லி என்று தமிழில் பெயர் வைக்கலாமோ? :-) ] உணவில் படிந்துள்ளது என துல்லியமாய் உடனடியாக கண்டுபிடித்துவிடமுடியும்! இதே போல் மற்றசில கிருமிகளை கண்டறியவும், ராஜ் இந்த கருவியை அமைத்துள்ளார். மிக குறைந்த செலவில், உடனடி தகவல் பெற இவர்கண்டுபிடித்த இந்த கருவிக்காக, பல பாராட்டுகளும், அமெரிக்க அரசின் மானியமும், லிவெர்சென்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தோடு, கூட்டுறவு தொழில் முனைப்பும் ஏற்பட்டுள்ளன! மும்பை பாபா சோதனை கூடத்தினர், "மிளகாய், மிளகு போன்றவற்றினால் இந்த ஈ.கோலியின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளனராம்!
நான், திரு. ராஜ் முத்தரசனை பாராட்டி, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கூடவே, அவரின் கல்வி, பின்னணி பற்றியும் கேட்டு வினவினேன்! அவரும், அவரது அண்ணனும், சிறு வயதில், தமிழ் மொழியில் தான் எல்லா பாடங்களையும் படித்தார்களாம்! ஆங்கில தேர்ச்சி பெற, தனியாக ஒரு வாத்தியாரை அமர்த்தினாராம், இவர் தந்தை, திரு. ராஜகண்ணனார். அந்த ஆசிரியர், ஆதி அந்த விஷயங்களான 'வாட் இஸ் யுவர் நேம், வாடிஸ் யுவர் ஏஜ்?" போன்ற விஷயங்களே சொல்லித் தந்துள்ளார். ராஜின் தந்தை, பள்ளிக்கூடமே பார்க்காமல், தானாகவே படித்து தொலை தொடர்புக் கல்வியிலேயே பி.ஏ முடித்து, பின்னர் எம்.ஏ சென்னை பிரசிடன்ஸியிலேயே முதல் மாணவராகத் தேர்ந்தவராம்! மேம்பாட்டுக்காக, குடும்ப மொத்தமும் சிங்கப்பூர் செல்ல, அங்கு, மற்றவருடன் ஒப்பிடும் போது, ஆங்கிலம் குறைவாகவே தெரிந்தததால், வெட்கி தலை குனியாமல், விடாது முயன்று, இவர், இவர் அண்ணன், பள்ளியில் முதலிடத்தில் வந்தார்கள், எனும் செய்தி இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியம்! மீண்டும் இவர் தந்தை இந்தியா வந்து, கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருந்து, சிறிது காலம் ஊட்டியிலும், பின்னர் பல ஆண்டுகள் சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தாராம். அப்போது சென்னையிலிருந்த ராஜுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைத்துள்ளது! அதிலும் வேதியல் துறையில், முதல் மாணவராக வந்த ராஜ், ட்ரெக்சல் பல்கலைக் கழகத்திலேயே முதுநிலையும், ஆராய்ச்சியும் மேற்கொண்டு, இன்று பல அங்கீகாரம் பெற்று, பல்கலைக் கழக தலைவராக இருந்து, மீண்டும், இந்த பயோசென்ஸர் (நுண்உயிர்காட்டி) ஆராய்ச்சியை 2000 ஆண்டிலிருந்து செய்து வந்து, இப்போது வெற்றியும் பெற்றுள்ளார்! பல இந்திய மாணவருக்கு டாக்டர் பட்டத்துக்கான பரிந்துறையும், வழிகாட்டுதலும் புரிந்துள்ளார். இவர் அடிக்கடி, ஐ.ஐ.டி(IIT), பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி(IISc), பூனாவிலுள்ள என்.சி.எல்(NCL), ஹைதராபாத்திலுள்ள சி.சி.எம்.பி (CCMB) மற்றும் ஏனைய கல்வி நிலையங்களில் கலந்துரையாடல், சொற்பொழிவுகள் செய்துள்ளார்! CSIRO விஞ்ஞான துறை தலைவர், பாரத பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருமான டா. மால்ஷேகருக்கு பல விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஐ.ஐ.டியை சார்ந்த டா. எனாக்ஷி பட்டாசாரியா இவரது ஆராய்ச்சி கூடத்தில் இவரது ஆலோசனை பேரில் சில ஆய்வுகள் நடத்தியுள்ளார். எனவே தனது ஆராய்ச்சியின் மூலம் உலகுக்கே தமிழர் பெருமை பறைசாற்றி, அதோடு, தன்னால் இயலும்போது, நம் நாட்டினருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி, எத்தனையோ இந்தியர்கள் மதிநுட்பத்தால் இந்தியா ஏற்கனவே ஒரு வல்லரசு ஆகிவிட்டது என்று உலகுக்கு பறை சாற்றி வருகின்றனர்!

6 comments:

Anonymous said...

well written, we need more such people to be exposed to our student community, to inspire them to do SOMETHING BIG!

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks, anonymous :)

நன்மனம் said...

நல்ல தகவல், நமக்கு பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். ராஜ் முத்தரசனுக்கு வாழ்த்துக்கள்.

தகவல் பரிமாறியதற்க்கு நன்றி திரு.'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் அவர்களே.

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க நன்மணம். விஞ்ஞான கட்டுரைகளை கண்டுகொண்டமைக்கு நன்றி. சிறுவர்களிடையே பரப்பவும்.

Anonymous said...

என்ன சார் தமிழ்நாட்டு கலாச்சாரம் புரியாம இருக்கிங்க. இது எல்லாம் மக்களுக்கு தேவையில்லை. அவரு என்ன ஜாதின்னுதான் மக்களுக்கு தெரியனும். அதுவும் அவர் எதாவது ஒரு உயர் வகுப்பை சார்ந்தவரா இருந்தா நீங்க அதிக பின்னூட்டம் வாங்குவீங்க அவர் ஏன்டா தமிழ்நாட்டுல பிறந்தோமுனு வருத்தபடுரு அளவுக்கு.ஆமா அவரு அமெரிக்கவுல இருக்காரு. இதுக்கே அவர அமெரிக்க அடிவருடினு ஒரு குருப் சொல்லுமே?...

சாரி நல்ல விசயத்தை சொல்லிருக்கிங்க. ஆனா இதவிட நம் மக்களுக்கு வேற நிறைய ஜாதி,மத சண்டை வேலை இருக்கு. அதனால யாரும் வரமாட்டாங்க.

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க, அனானி. செய்யத்துணிக கருமம்- இதைத்தான் நான் கடைபிடிக்கிறேன். எதோ, நீங்க சொன்ன 'பொதுஜன' அலையோடு நான் ஒத்து போகவில்லை. ஆனால், எந்நாளும், எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் மரபூரான் பதிவுகளில் ஒரு நல்ல செய்தியே இருக்கும்; மக்களுக்காக - நான் எழுதுவது இதனால் தான்