கத்தி
சுருள்தகடு நீட்டி, தணல் நெருப்பில் காட்டி
சம்மட்டி அடி வாங்கி, மூக்குச் சாணைத் தீட்டி
பளபளக்க வந்தேன், கைப்பிடியும் பூட்டி!
இலை நறுக்கக் களையெடுக்க, காய்கனிகள் தான் அரிக்க
கலை பலதில் செப்பனிட கையுளியாய் ஆகிடினும்
தலை நறுக்க என்னை நீ இறக்குவது வேதனை!
நித்தம் நித்தம் பல நித்திரை போக்கும் அரக்கர் கையால்
ரத்தம் சுவைத்து குடற்கூழ் குடிக்க நான் மறுத்தேன்!
கத்தினேன், முனை மழுங்கினேன், கேட்பாரில்லை!
சித்தம் கூராக்கு; நித்தம் சீராகு!
சீரில்லா மதியும் கூரில்லா முனையும்- கேட்
பாரில்லா நிலையும் நமக்கெதற்கு?
மதி தீட்டு, உடற்சாணை பிடி
பளபளக்கும் உளம், உடல், உற்றார்!