18 August 2006

தேன்கூடு போட்டி - அந்த உறவுக்கு பெயரென்ன?

கலாவதி கார்த்திகேயன் என்ற பெயர். இதில் புதுமை என்ன என்கிறீர்களா? கார்த்திகேயன் தந்தையோ அல்லது கணவனோ அல்ல!

மகன்!

http://vijayanagar.blogspot.com/ எனும் வலை பதிவில், கார்த்திகேயன் எப்படி எழுதுவாரோ, அதே பாணியை பின் பற்றி, தன்னைத் தனது மகனாக பாவித்து, அந்தத் தாய் கடந்த இரு மாதங்களாக பதிவுகள் எழுதுகிறார். கார்த்திகேயனின் நண்பர்களோடு சேர்ந்து ஒரு அறக் கட்டளை நிறுவி அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முயன்று வருகிறார்!

எம்.ஏ,எம்.பில் (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ படித்த அந்தப் பள்ளி ஆசிரியை, ஓராண்டு காலமாக விறுப்பு ஓய்வு பெற்று, மகனின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, மகன் என்ன பணிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரோ அந்த பணியிலெல்லாம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்கிறார், மகனை வாழவைக்கிறார்- ஏன்? அந்த உறவுக்கு பெயரென்ன?

மகன் கார்த்திகேயன் துடிப்பான இளைஞர். கணினி பொறியாளர்; அமெரிக்கா சென்று திரும்பி வந்த, அடக்கமான, உறவினர்களின் செல்லப் பிள்ளை. அலுவலகத்திலும் நல்ல பெயர்! நண்பர்களிடையேயும் நல்ல பெயர். தீயபழக்கங்கள் ஏதும் இல்லை. வரலாற்றுப் பிரியர்! அவர் செல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே தென்னிந்தியாவில் இல்லை எனலாம்! அவருடைய கணிணியிலுள்ள folders புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன! அதனை தனது இடுகைகளில் எழுதியும், வரலாறு.காம் இணையப் பத்திரிகைக்கும் அனுப்பி வந்துள்ளார்!

2005- ஆகஸ்ட் 26ஆம் தேதி. காலை அலுவலகம் சென்ற கார்த்திகேயன், சாலை விபத்தில்- காலமானார்!

இல்லை, என்னுடன், என்னுள் வாழ்கிறான் என புதியமுகம் பூண்டு வாழ்கிறார் கலாவதி கார்த்திகேயன்! பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசையாக மகன் வாங்கித் தந்த பெங்களூர் வீட்டை விட்டு, சென்னை வந்து, தனியே, அறை எங்கும் கார்த்திகேயனின் படங்களை ஒட்டி, சதா அவர் நினைவாக வாழும் - அந்த உறவுக்குப் பெயரென்ன?

968 உறுப்பினர் கொண்ட பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமம். பல மாநிலங்களில், ராஜ ராஜனின் சதயத் திருநாளை ஒட்டி, உறுப்பினர்கள் விழாக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பொருட்டு எல்லாப் பழைய உறுப்பினர்கள், நீண்ட காலமாக தொடர்பு அற்றவர்களுக்கு ஒரு மடல் அனுப்பப்பட்ட மடலுக்கு வந்த பொன்னியின் செல்வியின் மடல் எல்லா உறுப்பினரையும் கலங்க வைத்து விட்டது!

பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமத்தில், மகன் கார்த்திகேயனின் புனைப்பெயரை ஒத்து (பொன்னியின் செல்வன் - கார்த்திகேயனின் மின்னஞ்சல் பெயர்; தாயார் கலாவதியின் மின்னஞ்சல் பெயர் பொன்னியின் செல்வி! )

அவரெழுதியதன் சாராம்சம்:

"என் பெயர் பொன்னியின் செல்வி. உங்கள் உறுப்பினர் கார்த்திக்கின் தாய். எனக்கு கணினி இயக்கிப் பழக்கமில்லை. இப்போதுதான்,மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்; ஆம், கடந்த ஆண்டு என் மகன் மாண்டான் என என்றும் நினைக்க முடியாமல், ஆனால் அவனை நேரில் பார்க்கவும் முடியாமல், நான் தவித்து வருகையில், மெதுவாக அவனது கணினியைத் திறந்து கொஞ்சம்,கொஞ்சமாக இயக்க பழகி வருகிறேன். உங்கள் குழு என் கண்ணில் பட்டது; எனது மகன்தான் நடத்துகிறான் என நினைத்து திறக்க முற்படுகையில், உங்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் எனது மகனும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதையும் தெரிந்து கொண்டேன். எத்தனை செய்திகள் அளித்துள்ளான் என்பதை எண்ணி வியக்கிறேன்.என் மகன் அளவுக்கு சுவையாக எழுத முடியாவிட்டாலும், ஏதோ, என்னால் முடிந்த வரை இதில் பங்கேற்க முயல்கிறேன். வணக்கம்!"

அதற்கு எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நான் அந்தத் தாயைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன்.

இரண்டரை மணி நேரங்கள்! அந்தத் தாய் சொன்னது கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது! தந்தை 2000 ஆண்டே காலமானதும், மகன் கார்த்திக் (கார்த்திகேயனை அவர் அப்படித்தான் அழைக்கிறார்!) அவரை எப்பொழுதும் அரவணைத்து தாய்க்கு எந்த ப்ரச்னைகளும் வரக்கூடாது என வாழ்ந்த "தாய்ச் செல்லம்".

தாய் மகன் இருவருக்குமே சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்கும்! இருவரும், நண்பர்கள் போல் கேலியும் கும்மாளமும் செய்து வாழ்ந்ததாகவே சொல்கிறார்,கலாவதி!

கவிதை, கதை, வரலற்று தலங்களுக்குச் சென்று எழுதும் பயணக் கட்டுரை, புகைப் படங்கள், கார், பைக், அமெரிக்க பயணம், டெல் நிறுவனத்தில் நல்ல பணி,சொந்த வீடு - என மிகவும் வேகமாக fast forward modeல் வளர்ந்த அந்த வாழ்க்கை, எப்படி திடீரென முடிந்து போகும்?

ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், மகனாகவே வாழ முயற்சிக்கும் அந்த தாயின் உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அந்த உறவுக்கு பேரென்ன???

8 comments:

ஜயராமன் said...

அந்த உறவே தெய்வீகம் என்று அழைக்கப்படுகிறது!

இந்த பதிவை படித்து மனது கனத்து விட்டது!

ஏன் என்ற கேள்விக்கு விடை இவ்வுலகில் இல்லை!!

சாலை விபத்து எத்தனை வாழ்க்கைகளை அலங்கோலப்படுத்தியிருக்கிறது என்று கண்கூடாக கண்டும் இன்னும் நம் வீதிகள் மூடர்களால் நிரம்பி வழிகின்றனவே!! இதையும் என்னத்தை சொல்ல

காலத்தால் ரணங்கள் மறையும்! ஆக்கத்தில் தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொள்ளும் இந்த தலைவி வாழ்க

நன்றி மரபூரார்

Anonymous said...

I could NOT name the relationship. But, We can call the mother only as MOTHER.

Raja

Maraboor J Chandrasekaran said...

ஜயராமன், நன்றி. இன்றுகூட எனக்கு அந்தத் தாயிடமிருந்து ஒரு கண்டனக் கடிதம் வந்துள்ளது. என்ன என்று தெரியுமா? "என்னை ஏன் கலாவதி மேடம் என்று அழைக்கிறீர்கள்? நான் எனது அடையாளங்களை (பெயர், நடை, உடை, பாவனைகள், பிடிப்பு, ரசனை) அத்தனையும் இழந்து, என்னைப் பார்ப்பவர்கள் என்னை "கார்த்திக் அம்மா" என்றே அழைக்க வேண்டும்! நீங்கள் அப்படி அழைத்தால்தான் நான் ஏற்றுக்கொள்வேன்!!" எப்படி இருக்கிறது?

கண்ணனைக் காதலனாக, கணவனாக, தெய்வமாக, சேவகனாக கண்ட பாரதியைப் போல், இப்போது ஒரு உன்னத உறவை நான் காண்கிறேன்! தன்னையே தனது மகனாகப் பார்க்கும் தாய்!

Maraboor J Chandrasekaran said...

நன்றி அனானி! தாய் தாய்தான், ச்னதேகமேயில்லை. தாய் எனும் உறவுக்குப் புதிய பரிமாணத்தை சேர்த்ததால்தான் அந்த தாயைப் பற்றி நான் இங்கு எழுத விழைந்தேன்!

Geetha Sambasivam said...

கடவுளே, இப்படியும் ஒரு தாயா? தீராத சோகம் வாழ்வில் வந்தும் மகன் நினைவில் வாழும் அந்தத் தாய் போற்றுதலுக்கு உரியவர். என் வணக்கங்கள், அவருக்கு.

Maraboor J Chandrasekaran said...

நன்றி, கீதா சாம்பசிவம், பின்னூட்டத்துக்கு நன்றி, மனித இனத்தில்தான் தாய்மை எனும் உறவு பேணப்படுகிறது; மற்றதில் ஈரின கலப்பு மட்டுமே! எனவேதான் தாய் எனும் உறவு பற்றி எத்தனை பதிவுகள் போட்டாலும் தகும்!

Anonymous said...

I feel, if karthick had one or two brothers, his mother would have got a holding in this world. But, this only child had made his mother, a virtual orphan..

Maraboor J Chandrasekaran said...

dear p.senthilraja,
not really, Karthik has a younger brother who had just completed his aeronautics, but he is more of the typical today's youth,zipping out, freezing out with friends, etc. That's why the mother thinks more of the lost son Karthik, who was a rare breed, ful of jest, simplicity, respect, articulate, showed interest in other human beings, history and art and so many other things which one would not have observed atand before that tender age of 23.