31 January 2006

கல்லிலே கலைவண்ணம்!-1


யாஹ¥ குழுமங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் க்ரூப் உபயத்தில், தஞ்சை பெரிய கோயிலையும், புள்ளமங்கைக் கோயிலையும் காணப்பெற்றேன். 'கல்லிலே கலை வண்ணம் கண்டார்' எனும் கண்ணதாசன் பாட்டை பாடவைத்த எத்தனையோ ஆச்சரியங்களில் தஞ்சை கோயில் ஒன்று. அதனைப்பற்றியும், அதனது கர்த்தாவான சோழர்கால கோயில்கள், கல்வெட்டுகள் பற்றியும் விரிவாக, சுவையான செய்திகளை www.varalaaru.com எனும் உ.ஆர்.எல்லில் படிக்கலாம். ஆனால், எழுதப்படாத பல சிறு கோயில்களிலும் ஊர்களிலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன! பல நண்பர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். எத்தனை பேர் இந்தியாவிலுள்ள பல அரிய சுற்றுலா தலங்களைக் கண்டுள்ளனர்? அட, இந்தியா சரி, தமிழ்நாட்டில் எத்தனை அதிசயங்கள் உள்ளன தெரியுமா? அவற்றைக் காணவே நம் வாழ்நாள் போதாது. சரி முடிந்தவரை பார்ப்போம், பார்ப்பவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்வோம் என்பதற்காகவே இந்த கட்டுரை.

இனி வரும் நாட்களில் "தெரிந்த ஊர் தெரியாத செய்தி" எனும் தலைப்பில், ஒவ்வொரு இடமாக எழுத உத்தேசம். என்ன நீங்களும் தயார் தானே?

1) புள்ளமங்கைக் கோயில்: இந்த கட்டுரைக்கு மட்டும் சற்று வித்தியாசமான் பெயர்! "கல்லிலே கலை வண்ணம்" ஏன்? கட்டுரையைப் படித்தபின் எல்லோர்க்கும் இது புரியும்!

தஞ்சைக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புள்ளமங்கைக் கோயில் உள்ளது. http://www.templenet.com/Tamilnadu/s206.html எனும் உ.ஆர்.எல் லில் இக்கோயிலைப்பற்றிய வரலாற்று செய்திகளை விரிவாகக் காணலாம்.

படத்தில் பார்ப்பது போல், வானுயர்ந்த கோபுரம் இல்லை. மிகவும் சின்னது. இதன் சுற்றுப்புறம், 2000 சதுர அடிக்குள் அடங்கிவிடும்! ஆனால் விமான கோபுரத்திலுள்ள சிற்பங்கள் "ஆஹா, இதுவல்லவோ சிற்பம்" என வியக்க வைக்கிறது. முதலில் பிள்ளையார் சுழி போடுவோமா? ஆமாம், முதலில் நாம் காண்பது பிள்ளையார். அழகான சிற்பம். கிட்டத்தட்ட 7 அடி உயரம், சுற்றிலும், அருமையான பல "Still cum action shots!". தேவர்கள், கன்னியர்கள் ஆச்சரியத்தைத் தாங்கி பாலகணேசனைக் காண்கிறார்கள். அவர்களது முகங்களில் ஆச்சரியம், புன்னகை, போன்ற பாவனைகள்! தாளம் வாசிப்பவர்கள் ஒரு புறம், அதற்கு ஜால்ரா போடும் கோஷ்தி மறுபுறம்! சவரி வீசும் பூதகணங்கள் கூட, மறு கையால் ஆஹா என வியக்கும்படியான முத்திரை காட்டுகிறார்கள்! தலைக்குமேலேயுள்ள முகப்புக் காட்சியில், பரமசிவன், பார்வதி தாயக்கட்டம் ஆடும் காட்சி! மேலே தெரியும் வர்ணங்கள் இயற்கை சாயங்கள்- காலத்தால் சிலவும், கயவர்களால் சிலவும் சிதிலமடைந்துள்ளது.மிக மேலே, சிகப்பும் மஞ்சளுமாய் தெரியும் வர்ணங்களினூடே உற்றுப்பார்த்தால், பல பாவனைகள் தாங்கிய பூதகணங்கள் காட்சியளிக்கின்றன! மற்ற சிற்பங்கள் சாத்திரப் பிரகாரம் செய்தாலும், வேலைசெய்பவர்க்கு ஒரு "Relaxation" வேண்டாமா? அதற்கு ஏற்படுத்தப்பட்ட வரிசைதான் இந்த பூதரேகை வரிசை. மிகவும் கீழே, சதுரம் சதுரமாக பல சிறு கல்வெட்டுக் காட்சிகள்! அவற்றை அத்தனயும் படம் பிடிக்க வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. ஒன்றைப் பார்க்கையிலேயே லயித்துவிடும் மனம், மேலே செல்ல மறுக்கிறது! அவற்றைப் பற்றி அடுத்த பதிப்பில்..

10 January 2006

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 6- கத்தி

கத்தி

சுருள்தகடு நீட்டி, தணல் நெருப்பில் காட்டி
சம்மட்டி அடி வாங்கி, மூக்குச் சாணைத் தீட்டி
பளபளக்க வந்தேன், கைப்பிடியும் பூட்டி!
இலை நறுக்கக் களையெடுக்க, காய்கனிகள் தான் அரிக்க
கலை பலதில் செப்பனிட கையுளியாய் ஆகிடினும்
தலை நறுக்க என்னை நீ இறக்குவது வேதனை!
நித்தம் நித்தம் பல நித்திரை போக்கும் அரக்கர் கையால்
ரத்தம் சுவைத்து குடற்கூழ் குடிக்க நான் மறுத்தேன்!
கத்தினேன், முனை மழுங்கினேன், கேட்பாரில்லை!
சித்தம் கூராக்கு; நித்தம் சீராகு!
சீரில்லா மதியும் கூரில்லா முனையும்- கேட்
பாரில்லா நிலையும் நமக்கெதற்கு?
மதி தீட்டு, உடற்சாணை பிடி
பளபளக்கும் உளம், உடல், உற்றார்!