08 February 2007

நல்ல ஹெல்மெட் - கண்டுபிடிப்பது எப்படி?


இன்றைய தினசரிகளில் வந்த செய்தி - தலை கவசத்தை கட்டாயமாக்க ஆலோசனை!


சென்னை வலை பதிவர் சந்திப்பின் போது, சில நண்பர்கள் கேட்ட கேள்வி - நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி? என்பதே!
அவர்களுக்குக் கூறிய தகவல்கள், மற்றவருக்கும் உபயோகமாய் இருக்க இப்பதிவு.


மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போன டெல்லிக்காரர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!

அது - கந்தர் சஷ்டி கவசம்!

43 comments:

Anonymous said...

Useful Info. Thanks.

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks, Mr.Anonymous Why anonymous for this feedback? you could have very well revealed your name :)

Anonymous said...

It's very usefull. Keep like this posting.

--VENDAN

techtamil said...

மிகவும் பயனுள்ள தகவல், சரியான நேரத்தில் வெளியிட்ட உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

Ryder ப்ராண்ட் பற்றி ஏதாவது தெரியுமா? தரமானவையா?

750 ரூபாய்க்கு வாங்கினேன்.

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks, Mr.Vendan. See my other blogs too on science too and comment pls.

டெக் தமிழ், கேட்ட பேராத் தெரியலயே? இருந்தாலும், நான் சொன்ன சோதனைகளெல்லாம் செஞ்சு பாருங்க. சந்தேகமிர்ருந்தால், போட்டு ஓட்டுங்க, ஆனா மெதுவா போங்க. வேறென்ன சொல்ல?

மதுசூதனன் said...

ஹெல்மெட் சரிதான். பைக் வாங்க யார் காசு கொடுப்பா?

மதுசூதனன் said...
This comment has been removed by a blog administrator.
தங்கவேல் said...

மரபூரார் நல்ல பயனுள்ள பதிவு. பழைய ஹெல்மெட் தொலைந்து சென்ற மாதம்தான் புது ஹெல்மெட் வாங்கினேன்; (எல்.ஐ.சி அருகிலுள்ள ஜெனரல் பேட்டர்ஸ் சாலையிலுள்ள கடையில்) இரண்டுமே வேகா பிராண்ட் (நல்ல பிராண்ட் தானே!?) ஹெல்மெட் தாயாரிப்பில் போலிகள் இருக்கிறது எனத்தெரியும். இப்பொழுதுதான் அதை எவ்வாறு தயாரிக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டேன். (நம்ம புதுப்பேட்டை ஏரியாவிலும் தாயாரிக்கிறார்கள் - நான் பார்த்திருக்கிறேன்)

//அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும். //

நச் வார்த்தைகள்.

//எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்! //

வாசிக்கவே பயமாக இருக்கிறது.

//ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!
அது - கந்தர் சஷ்டி கவசம்! //

இது நல்ல வாசிப்பனுவமுள்ள உண்மையான வார்த்தைகள்.

என்னுடைய நண்பர்கள் சிலர் முடி கொட்டுகிறது என்பதற்காக ஹெல்மெட் அணியாமலுள்ளனர். அவர்களிடம் நான் சொல்வது இதுதான் - "மயிரை பார்த்தா உயிர் இருக்காது". சென்னை சுந்தரம் மெடிக்கல் பவுண்டேசன் மருத்துவமனையில் ஹெல்மெட் அணியாமல் தங்களது இருசக்கர வாகனங்களில் வரும் ஊழியர்களின் வண்டிகள் வளாகத்திற்குள் பார்க் பண்ண அனுமதிக்கப்படுவதில்லை.

ஒரு பொது சுகாரத்துறை மருத்துவர் என்ற முறையில் எனது தனிப்பட்ட எண்ணம் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கவேண்டுமென்பதே. முன்பு புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான மறைந்த பி. ராமமூர்த்தி சொல்லியும் அவரது நண்பரான கருணாநிதி ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்தார் என ஞாபகம். மீண்டும் இச்சட்டம் கொண்டுவரப்படும் என்பது போன்ற நம்பிக்கைக் கீற்றுகள் தற்போது தென்பட ஆரம்பித்துள்ளன.

ஜெய. சந்திரசேகரன் said...

மதுசூதனன், குறும்புய்யா உமக்கு :) கல்யாணம் பண்றவங்களுக்குத்தான் பெரிசுங்க அட்வைஸ் பண்ற மாதிரி, வண்டி இருக்குற ஆளுங்கதான் தலையக் காப்பாத்திக்கிறதப் பத்தி யோசிக்கணும். ஒருவேளை நீங்க பின் சவாரியே செஞ்சு காலத்தை ஓட்ற ஆளா இருந்தாலும், தலைக் கவசம் தேவை! அதிக உயிர் பலி பின்னால இருக்கிறவங்களுக்குத்தான். தெரியுமா? ஜாக்கிரதை :)

ஜெய. சந்திரசேகரன் said...

தங்கவேல். சமூக நலத்தில் உங்களுக்கு உள்ள அக்கறையைப் பாராட்டுகிறேன். நல்ல சொற்றொடர்: மயிரா? உயிரா? அதற்கும் வழி இருக்கிறதே? தலையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அதன் மேல் தலைக் கவசம் அணிந்தால், மயிர், உயிர் இரண்டும் தப்பும் :-)

நன்மனம் said...

நல்ல தகவல்கள்,

தலை கவசம் வாங்கும் போது தலைக்கு உள்ள இருக்கறத கொஞ்சம் உபயோகிச்சா தலைக்கு வெளியே சரியான பாதுகாப்பு கிடைக்கும்னு சொல்ரீங்க. சரி தான். :-)

நன்றி

ஜெய. சந்திரசேகரன் said...

நன்மணம்- வருகைக்கு நன்றி. சரியாச்சொன்னீங்க.

ஜெய. சந்திரசேகரன் said...

நன்மணம்- வருகைக்கு நன்றி. சரியாச்சொன்னீங்க.

Deepa said...

very very usefull..
நான் இந்த பதிவை ப்ரிண்ட் எடுத்துட்டேன்

ஜெய. சந்திரசேகரன் said...

Thanks Deepa.
ப்ரின்ட் எடுத்து - அட என்னங்க, நோடீஸ் மாதிரி ரோடுல தலைக் கவசம் இல்லாம வரவங்களுக்கு தர்றீங்களா? ரொம்ம்ம்ம்ப சேவை மனப்பான்மைங்க உங்களுக்கு :)

Deepa said...

அட இது கூட நல்ல idea வா இருக்கே..

ஜெய. சந்திரசேகரன் said...

செயல் வீரர் deepa வாழ்க :)!!

Sundar said...

catalyst-வினையூக்கி

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி- சுந்தர். சரியான சொல் தந்து உதவியதற்கு. "வினையூக்கி " - catalyst

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவுங்க சந்திரா..

நல்ல ஹெல்மெட்டின் லட்சணங்களைச் சொல்லிக் கொடுத்துவிட்டு அதைக் கட்டாயமாக்குவது என்பது நல்ல யோசனை..

என்னுடையது வோல்கா.. ஆனால், ஆயிரத்திற்குக் குறைந்த விலைக்குத் தான் வாங்கினேன் :)

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க பொன்ஸ். ரொம்ப பிஸின்னாலும், 'தல' மேட்டர்னு தலையக் காமிச்சதுக்கு நன்றி. வோல்கா, கேட்ட பேரத்தான் இருக்கு. எதுக்கும் நான் சொன்ன சோதனைல்லாம் செஞ்சு பாத்துருங்க. சந்தேகமிருந்தா,SISI Guindy la காமிச்சு போலியா, நல்லதன்னு தெரிஞ்சுக்கலாம்.
P.U.C மாதிரி, இதுக்கும் மூலைக்கு மூலை பரிசோதனைக் கூடங்கள் அரசாங்கம் நடத்த அனுமதிக்கலாம். ஆனால், புகை கக்கலை பரிசோதனை செய்யாமலே, dubakoor certificate அவங்க குடுக்கறமாதிரி, தலைக் கவசத்துல நடந்துக்கமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? பயமாத்தான் இருக்கு :(

Senthil said...

நல்ல தகவல்.
இதை ஏன் நீங்கள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது?

அன்புடன்
சிங்கை நாதன்

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி, சிங்கை நாதன் @ செந்தில்.
பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளேன், வருகிறதா இல்லையா, ஆசிரியர் கையில் :) நான் முன்னாள் ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளன், எனவே, அங்கு முதலில் அனுப்பியுள்ளேன். பதில் இல்லையெனில், பிற பத்திரிகைகளுக்கு அனுப்புகிறேன். உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.

Tamil said...

ok thanks a very nice article useful to all

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி. தமிழ்

Anonymous said...

உருப்புடியானதொரு பதிவு...தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில் இந்த பதிவு நல்ல தகவல்களை கொண்டுள்ளது...அப்படியே ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து தந்திக்கு அல்லது தினமலருக்கு அனுப்புங்க..கண்டிப்பா வெளியிடவேண்டிய கட்டாயம் அவங்களுக்கு...

செந்தழல் ரவி

Anonymous said...

நானும் அனானியாத்தான் போடவேண்டி இருக்கு. ப்லாகர் பிரச்சினை..

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க செந்தழல் ரவி! முன்னாள் மாணவ நிருபரா இருந்தும், ஆ.வி, மோட்டார் விகடனுக்கு அனுப்பியும், பதிலில்லை. தினசரி நாளிதழ்களுக்கு இன்னும் அனுப்பவில்லை. கட்டாயம் முயற்சி செய்கிறேன்.

சேவியர் said...

நல்ல தகவல்கள். ஒருசில தகவல்களை என்னுடைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன் உங்கள் பெயருடன்.

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க சேவியர்! (நல்ல பேரு - தலைய சேவியர் Saviour not Xavier :) எழுதுங்க, நிறைய மக்களுக்கு இந்த தகவல்கள் போய் சேரணும்.

விஜயன் said...

தல போற விஷயம்...

நல்ல வேளை தலய காப்பாத்திட்டீங்க தல....

பயனுள்ள தகவல். நன்றி

ஜெய. சந்திரசேகரன் said...

விஜயன், நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. 'தல'ன்னெல்லாம் கூப்பிடாதீங்க! ப்ரச்னைதான் வரும். எதோ படிச்ச படிப்புக்கு (plastics technology)சில தெரிஞ்ச விஷயத்த எழுதினேன்

சேதுக்கரசி said...

நல்ல கட்டுரை. அன்புடன் குழுமத்திலும் அனுப்பியிருக்கிறேன்.. நன்றி..

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க சேதுக்கரசி [கடல்ராணி :-)], "அன்புக் குழுமம்" - என்ன அது, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க, வலைஞர்கள் பயனடையட்டும். Pls send me the URL of Anbu Kuzhumam.

சீனு said...

//அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்//

ஆகா, என்ன ஒரு எக்ஸ்பிளநேஷன்...

சேதுக்கரசி said...

பேரை சுருக்கிடாதீங்க :-)

"அன்புடன்" - 2 வருடங்களாக இயங்கிவரும் முதல் யுனிகோடு தமிழ்க் குழுமம். 2ம் ஆண்டு விழா நடந்துட்டிருக்கு.. கவிதைப் போட்டி அறிவிப்பு விரைவில் வரும் பாருங்கள்... ப்ரியன் மற்றும் இன்னும் சிலரின் பதிவுகளில்.
http://priyan4u.blogspot.com

http://groups.google.com/group/anbudan

அன்புடனைப் பற்றி அறிந்துகொள்ள:
http://groups.google.com/group/anbudan/web
http://buhari.googlepages.com/anbudan.html

முன்பெல்லாம் யாகூ கூழுமங்கள் திஸ்கியில் இருந்ததே, இது யுனிகோடில். இலக்கியம், கவிதை, கதை, தமிழ் / தமிழர் பற்றி, கருத்தாடல்கள், சினிமா, பாடல், அறிவியல், அது இது என்று ஒரு பல்சுவைக் களம்.

இரண்டு ஆண்டுகளாக யுனிகோடு தமிழ்த் தட்டச்சு செய்ய, பலருக்கும் உதவியிருக்கிறோம். மிகவும் பிரபலமான தமிழ்ப் பதிவர்கள் சிலருக்கூம் உள்பட ;-) ஒரு எட்டு வந்து தான் பாருங்களேன்.

Nilakkaalam said...

Thankyou sir.
மிகவும் பயனுள்ள தகவல்களை கொடுத்து இருக்கிறீர்கள். நிஜமாகவே இவ்வளவு சந்தேகமும் மனதில் இருந்தது. இப்போது தைரியமாக வாங்கலாம். மீண்டும் நன்றி.

ஜெய. சந்திரசேகரன் said...

வாங்க சீனு, ரொம்ப நாளா ஆளையேக் காணோம்? ('தலை' போற விஷயத்தைப் பத்தி எழுதினா, உங்க கண்ல 'தல' யும் அசினும் தான் படறாங்க! ம்ம்ம்! [தொப்பி பத்தரமா இருக்கா? :-)]

ஜெய. சந்திரசேகரன் said...

சேதுக்கரசி (பேரச் சுருக்கல) 'அன்புடன்' தகவல்கள் தந்ததுக்கு நன்றி :)

ஜெய. சந்திரசேகரன் said...

நிலா, வாங்க, என்ன ரொம்ப நாளா என் பதிவுகளில் அமாவாசை ஆகிப் போச்சேன்னு யோசிச்சேன். வந்ததுக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி. "thank you sir" ல்லாம் எழுதாதீங்க. 'sir', 'மோர்'ல்லாம் கேட்டா வயசான ஃfஈலிங் வருது :)

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

பயனுள்ள தகவல்கள்!!
மிக்க நன்றி !

ஜெய. சந்திரசேகரன் said...

Kalvettu @ Baloon Mama,
Nice name. Thanks for your feedback,
JC

ஜெய. சந்திரசேகரன் said...

இன்று செய்திகளில் வந்த துயரம்: மர்தாண்டம், கருங்கல், கிள்ளியூர் ஒன்றிய பா.ஜ.க. ப்ரசார அணி தலைவர் மகேந்திரன், வயது 35, சாலை விபத்தில் லாரி மோதி இறந்தார். காரணம்? தலையிலிருந்த தலைக் கவசம் உடைந்து போய், அந்த சில்லு தலைக்குள் போய், எடுக்க முடியாமல், ரத்தம் கொட்டி, பரிதாபமாய் இறந்து விட்டார்! நல்ல தரமான தலைக் கவசத்தின் பங்கு என்ன, தரக் குறைவான போலிகளின் பங்கு என்ன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவே இந்த செய்தியை இங்கு வெளியிட்டுள்ளேன். அந்த போலி தலைக் கவசத்தை தயாரித்தவனின் தலையோ அல்லது உறவினரின் தலையோ இதே போல் சிதறியிருந்தால், அவன் அப்படியேனும் அந்தத் தொழிலை விடுவானா?