உழவாரப் பணி செய்யும் அன்பர்களுக்கான பணிவிளக்கப் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கத்தை REACH FOUNDATION, 5-8-2007 ஞாயிற்றுக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா கலையரங்கத்தில் நடத்தியது.
உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு சந்திரசேகரன் அளித்த முன்னுரை:-
Rural Education And Conservation of Heritage என்பதன் சுருக்கம் தான் REACH. கிராம மக்களுக்கு கலாச்சாரமும், முன்னோர் விட்டுச் சென்ற பல செல்வங்களைப் பற்றிய பகுத்தறிவை ஊட்டவும், அந்த கலாச்சாரச் சின்னங்களான புராதன கோவில்கள், மண்டபங்கள், முற்றம் வைத்த வீடுகள், கல்வெட்டுக்கள், மற்றும் பழங்கலைகளைப் போற்றி பாதுகாக்கவும், தோன்றியது REACH.
கடந்த June 16 ம் நாள், எங்கள் இணையதளமான conserveheritage.org யின் திறப்பு விழாவும், இணையத்தின் மூலம் கல்வெட்டுப் படிப்பை நடத்தத் துவக்க விழாவும், ஆளுநர் மாளிகையில், திரு. சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக தகவல்கள் உள்ளன. எங்கே அவை? யார் அவற்றை கண்டுபிடித்து சொல்வார்கள்? யாரிடம் சொல்வார்கள்? சொல்லி என்ன பயன்? ஒரே தொகுப்பாக, வணமாக, கோவில்கள் தொகுப்பு மஞ்சரியாக, இணையதளத்தில் இந்த செய்தி உலகம் முழுதும் போனால்தான், மண்ணின் மைந்தர்கள் பலர், அவற்றை சீர் செய்ய பொருளுதவியோடும், அருளுதவியோடும் ஓடிவருவர். அரசாங்கத்துக்கும், பொது மக்களுக்கும் இந்த பிரச்னையின் ஆழம் தெரியும். அதை நோக்கித்தான் இந்த முதல் படி.
மாணிக்கவாசகர் ஆரம்பித்து, ஆண்டாண்டு காலமாய் இன்றும் தொடரும் கோவில்களை சுத்தம் செய்துவரும் மாபெரும் பணியை ஆற்றிவரும் அன்பார்ந்த அடியார் நீங்கள். உங்களுடன், அடியார்க்கு அடியாராய் இன்று அறிவியலும், தொழில்நுட்பமும், வரலாறும் கைகோர்க்கக் காத்திருக்கின்றன! ஆம், REACH என்பதற்கு போய்ச் சேருதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், உங்கள், ஆர்வம், ஆக்கம் மற்றும் செயல்களோடு சேர்த்து கோவில்களை செப்பனிட என்ன செய்ய வேண்டும் என ஒருசேர சிந்திக்கும் நன்னாள் இந்த பொன்னாள்!
நாம் சேர்க்கும் சிதிலமடைந்த கோவில்களை பற்றிய தொகுப்பு முதலில் வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும். தமிழகம் மட்டும் இப்படி என்றால், இந்தியா முழுதும் சுமார், 2 லட்சம் கோவில்கள் சிதிலமடைந்து போயுள்ளதாகச் சொல்கிறார்கள்.
நமது செயல்கள் பரந்து விரியும் தருணத்தில், நாம் தமிழகம் மட்டுமன்றி, பரதக் கண்டம், ஏன், இந்த உலகில் எங்கு நம் கலாசாரச் சின்னங்கள் சீரிழந்தாலும், அவற்றை சீர் செய்யும் பரந்த சிந்தனை கொள்ள வேண்டும். இதுவே REACH FOUNDATIONன் தொலை நோக்காகும்.
எங்கெல்லாம், பாழடைந்த கோவில்கள் உள்ளன எனும் தகவல் நம்மிடம், ஏன் அரசிடமும் இல்லை. அதேபோல், சீர்செய்யும் நல்லெண்ணம் இருந்தாலும், தவறான அணுகுமுறையால், பழங்கலைகள், ஆகம விஞ்ஞான வழிமுறைகள், செலவுகள் ஆகியவை நிலையில்லாமல் போய்விடுகின்றன. உழவாரப்பணி செய்பவர்களுக்குத் தான் தெரியும், எங்கெங்கே, பாழடைந்த கோவில்கள் உள்ளது என்று!
வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கட்டிடம் கட்டும் வல்லுநர்கள் ஆகியோரையும், இந்த உழவாரப்பணி செய்யும் அன்பர்களையும் ஒன்று சேர்த்தால், தகவல் பறிமாற்றம் செய்துகொள்ளலாம் எனும் ஆர்வத்தாலேயே, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது!
மிக நல்ல வரவேற்பு! கன்யாகுமரி, திருச்செந்தூர், முதல் கும்பகோணம், திருவண்ணாமலை, திருநல்வேலி, தரங்கம்பாடி வரை, ஏறத்தாழ 180 பேர் கலந்து கொண்டனர்!
குத்துவிளக்கு ஏற்றி விழா ஆரம்பமான பின்னர், "எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்," எனும் சுத்தானந்த பாரதியின் பாடலை இறைவணக்கமாகப் பாடினார், மயிலை ஓதுவார், திரு. ஸற்குருநாதன்.
REACHன் தலைவர் தொல்பொருள் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். கேரள அரசின் முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராய் இருந்தவரும், இந்திய தொல்பொருள் துறையில் தலைவராக இருந்தபோது, சமீபத்து சுனாமித் தாக்குதலில், மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள புலிக்குகைக்கு அருகே வெளிவந்த சங்க காலத்து முருகன் கோவிலை மீட்டவரும், 4000 வருடங்களுக்கு முன்பே தமிழ் பிராம்மி எழுத்துக்கள் இருந்ததை திச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியால் கண்டெடுத்தவரும், தஞ்சை கோவில் கோபுரத்தினுள்ளே இருந்த சோழர் கால fresco ஓவியங்களையும், அதன் மேல் இருந்த நாயக்கர் கால ஓவியங்களையும் ஒரு சேர மீட்டு, வெளியே பிரகாரத்தில் நிரந்தரமாக அவற்றை போலவே அதே அளவில் ஒரு கண்காட்சியையும் ஏற்படுத்தித் தந்தவரும், சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவரும், இன்னும் எத்தனையோ தொல்பொருளாராய்ச்சிகளை செய்தவரும், செய்து வருபவர் REACH foundationனின் தலைவர் டாக்டர்.திரு. தியாக.சத்தியமூர்த்தி.
சுண்ணாம்பு, செங்கல், அந்த இடத்திலேயே கிடைக்கும் கற்கள் போன்றவற்றாலேயே, அழகான கோவில்களை சீர்செய்துவிடமுடியும் என்றும், தென்னகத்தில் மட்டும், ஒரு கிராமத்துக்கு என்று 3 கோவில்களாவது இருக்கும்; எனவே, சுமார் 40,000 முதல் 50,000 பாழடைந்த கோவில்களை சீர் செய்யும் மாபெறும் பணி நமக்கு உள்ளது என்றும் பேசினார்.
விழாவின் சிறப்பு விருந்தினரான சுற்றுலாத் துறை செயலர் திரு. ஸ்ரீதரன் IAS அவர்கள்,
"கடவுளின் சொந்த நாடு என்று கேரளத்தை மட்டுமின்றி, மொத்த நாட்டையே சொல்லலாம், அத்தனை கோவில்கள் உள்ளவை நம் நாடு," என்று பேசினார்.
தத்வலோகா அரங்கத்தை இலவசமாக குடுத்துதவிய அதன் தலைவர் திரு. ராமச்சந்திரன், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனது மண்டபத்தை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
உழவாரப்பணி குழுக்களின் சார்பாக பேசிய திரு.கோமல். வி.சேகர், செப்பனிடும் போது, மக்கள் படும் அவஸ்தைகளையும், பாழடைந்த கோவில்களின் பணியாளர்கள், மற்றும் அர்ச்சகர்கள் படும் அல்லல்களையும், பணக்கஷ்டங்களையும் உணர்ச்சி பூர்வமாக
விவரித்தார்.
ரீச் நிர்வாகிகள் H. சந்திரசேகரும், ஹரிஹரனும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
தலைமையுரை ஆற்றிய சிலை மீட்ட செம்மல், கலைமாமணி டாக்டர்.திரு.நாகசுவாமி பேசுகையில், "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் கூற்று, வெறும் புகழ்ச்சி அல்ல, நிஜ கூற்றே! என்று சரித்திர ஆதாரங்களோடு விளக்கினார். உதாரணமாக, 2500 வருடங்களுக்கு முன்னால் செய்த கிரேக்க நாணயத்தில், ஒரு புரம் பலராமனின் உருவமும், மறு பக்கம் கிருஷ்ணனின் முகமும் பதிந்திருந்ததாம்! தரங்கம்பாடி
மாசிலாமணி நாதர் கோவிலை பற்றிய ஆவணப் படத்தை காட்டி, சீர் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுரை பகர்ந்தார்.
தமிழக தொல்பொருள் ஆய்வுக்கழகத்தலைவராய் இருந்தவரும், பன்னாட்டிலும் இன்னாட்டுப் பெருமையை இன்றும் பறை சாற்றி வருபவர் டாக்டர். திரு. நாகசுவாமி. சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழூரில், முதல் நூற்றாண்டுச் சேரர் கல்வெட்டுக்கள், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சோழர்கள் அரண்மனை, மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடியிலுள்ள டச்சுக் கோட்டை, எட்டயபுரத்திலுள்ள சுப்ரமணிய பாரதியார் பிறந்த வீடு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் அரண்மனை இருந்த இடம், இப்படி எத்தனையோ பொக்கிஷங்களை நமக்கு மீட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தவர். பூம்புஹாரில் முதன் முதலாக கடலுக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சியை செய்தவரும் திரு. நாகசுவாமி ஆவார்கள். புகழ் பெற்ற லண்டனிலிருந்து நடராஜர் சிலையை மீட்க, இந்தியாவிலிருந்து முக்கிய சாட்சிவல்லுநராக டாக்டர். நாகசுவாமி சென்ற போது, அவரது திறனை, லண்டன் நீதிபதியே வியந்து மெச்சியுள்ளார். கரூர், ஆலங்குளம், கொர்க்கை, போன்ற இடஙளில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பல அரிய செய்திகளை தந்தவரும், இவரே! தமிழகத்தில் பல இடங்களில் அருங்காட்சியகம் அமைத்தவரும், சிதம்பரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்.கபிலா வாத்சாயனருடன் சேர்ந்து, நாட்யாஞ்சலி விழாவைத் தோற்றுவித்தவரும், தமிழகத்தில் முதலில் கல்வெட்டு படிக்கும் துறையை ஆரம்பித்தவரும், டாக்டர்.நாகசுவாமியே! சரித்திர புத்தகங்கள், நாடகங்கள் என சுமார் 150 படைப்புகளுக்கு இவர் ஆசிரியர். BBC உட்பட, இன்றும் பல வெளிநாட்டு வானொலி மற்றும் தொலைகாட்சியினர் இவரது பேட்டிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது, தரங்கம்பாடி கோவிலைப்பற்றியும், சமீபத்தில் அவர் சென்று வந்த அயோத்தி ராமர் கோவிலைப் பற்றியும், ஒரு சிறு குழந்தையின் குதூகலத்துடனும், அதே சமயம் கருத்து செரித்த, முதிர்ந்த விஷயங்களை சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. இத்தனை பெருமைக்கு உரியவர், "சிலை மீட்ட செம்மல்", கலைமாமணி. டாக்டர். நாகசாமி அவர்கள்.
தொல்பொருள் ஆய்வாளர் ஸ்ரீராமன் தனது தொகுப்பான, "பழங்கலை கட்டிடங்களை மீட்க, பொதுமக்களின் பங்கு," என்பதை அழகான Power Point ஆவணமாக காண்பித்து உரை நிகழத்தினார்.
பழங்கோவில்களை சீர் செய்யும் போது செய்யக் கூடாதவை/ செய்ய வேண்டியவை:
· கூரையை மழைநீர் வராமலிருக்க பூசுகிறேன் என்று அதிக தளங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பூசாதீர்கள்! அதிக எடை ஏறி, மொத்த தூண்கள் சரிந்துவிடலாம்!
· அங்கு கிடைக்கப் பெறும் கற்களை வைத்தே சீர்செய்யலாம்.
· சிமெண்ட் உபயோகிக்காதீர்கள்
· சிறு செடிகள், கொடிகள், மரங்கள், விமானத்திலோ அல்லது வெறு எந்த பகுதியிலும் வளர விடாதீர்கள். உடனே, பிடுங்கி எறிந்துவிடுங்கள்.
· சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். பூச்செடி, துளசி, வில்வம் போன்றவற்றை சுற்றுப்புரத்தில் வளர்ப்பதன் மூலம், தூய்மையாகவும் இருக்கும், அவை பூஜைக்கும் உதவும்.
· நீர் வரத்து உள்ள வழிகளை சீர்செய்யவும். அவை தண்ணீரை நேராக குளத்தில் சேர்த்துவிடும். இதன் மூலம், தரையினடியில் நீர் அதிகரிக்கும். என்றும் குளம் சுத்தமாக இருக்கும்.
· மழைகாலங்களில் மதில்சுவர் மற்றும் பழைய விமானங்கள் கோபுரங்களின் மேல் ஏற முயலாதீர்கள். சரிந்து விழ, வாய்ப்புகள் உண்டு.
· அக்ரலிக், காவி, எனாமல் பெயிண்டுகளை உபயோகிக்காதீர்கள். அவை கட்டிடத்தை பாழ்படுத்திவிடும். சுற்றுப்புற சூழலுக்கும் பாதுகாப்பற்றது.
விழாவை தொகுத்து வழங்கிய சந்திரசேகரன் நல்ல தமிழில் பேசினார். மேற்கோள்கள் காட்டி, பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரீச் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. சுந்தர் பரத்வாஜ் நன்றி கூர, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
இனி வரும் நாட்களில், இந்த உழவாரப்பணியினரைக் கொண்டே, அந்தந்த ஊரிலுள்ள கோவில்களை சீர் செய்ய முயற்சிப்பது. விபூதி, குங்குமம், கோவில்களுக்கு வேண்டிய பொருட்கள் தயார் செய்வதன் மூலம் சுயவேலை வாய்ப்பு குழுக்கள், அவர்தம் குழந்தைகளுக்கு இலவசமாக ஓராசியர் பள்ளி, மற்றும் மூலிகை, இயற்கை உர காய்கறிகள் போன்றவற்றை பயிரிட பயிற்சி இவற்றை போதித்து, கோவில், கோவிலைச் சார்ந்த மக்கள் எனும் நல்லுலகம் படைப்பதே REACH Foundation ன் இளைஞர்கள் குழுவின் தொலை நோக்காகும்.
8 comments:
இதில் மெம்பராக முடியுமா?..அதற்கு என்ன செய்யவேண்டும்?
அருமையான தகவல்கள்....மிக்க நன்றி.
திரு. சுந்தர் பரத்வாஜ் பற்றி பாலகுமாரன் சொல்லக் கேட்டிருக்கிறேன். முனைவர் நா.நாகசாமியோ உலகம் அறிந்தவர்.
பதிவுக்கு, மிண்டும் நன்றி.
அருமையான தகவல்கள்....மிக்க நன்றி.
திரு. சுந்தர் பரத்வாஜ் பற்றி பாலகுமாரன் சொல்லக் கேட்டிருக்கிறேன். முனைவர் நா.நாகசாமியோ உலகம் அறிந்தவர்.
நன்றி மதுரையம்பதி! join temple_cleaners yahoo group to know further details or write to reach.foundation.india@gmail.com
அறியத்தந்தமைக்கு நன்றி சந்திரசேகரன்.
வருகைக்கு நன்றி முத்துலக்ஷ்மி. நீங்களும் எங்கள் பணியில் சேர்ந்து உங்கள் ஊரிலுள்ள கோவில்கள், பழங்காலச் சின்னங்கள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ளலாமே? எனது இடுகைகளில் தெரிந்த ஊர் தெரியாத செய்தி என பல ஊர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லியுள்ளேன். மேலும் பார்க்க http://templesrevivbal.blogspot.com and http://reachhistory.blogspot.com and www.conserveheritage.org
திரு லட்சுமிநாராயணனின் மெயில் வந்தது. தேவையான தகவல் கொடுத்துள்ளேன். உங்களுக்கும் அதை ஃபார்வார்டு பண்ணி உள்ளேன். உதவிக்கு நன்றி.
Dear Geetha madam,
I will do what best I can to see how REACH can restore your village temple. Rest is in the Almighty's hands!
Anbudan,
Chandra
Post a Comment