11 November 2008

மகாபலிபுரத்தில் ஒரு பசுமைக் கற்பழிப்பு!

உலக புராதனச்சின்னமான மாமல்லபுரத்தில் பசுமைக் கற்பழிப்பு!


மாமல்லபுரத்திலுள்ள த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே, ஒரு நவீனக் கழியலறைக் கட்டப்படுள்ளது. அழகான புராதனச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இத்தகைய நவீனத்துவம் தேவைதானா? பார்க்க வருபவர்கள் தங்கள் சிரமபரிகாரங்களை அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலோ, அருகாமையிலுள்ள சிற்றுண்டி சாலைகளின் ஓய்வறைகளிலேயோ செய்து கொள்ளலாம். அப்படியிருக்க, புராதனத்தைக் கெடுக்கும் இந்த நவீனம் தேவைதானா?


புராதன ஆர்வலர்கள் இந்த நவீன கழிப்பறைக்கு பின்புறமாய் தொடங்கும் இடத்திலிருந்து, குன்றுகளைச் சுற்றி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த, கோரமண்டல் வரண்ட பசுமைக் காடுகளிலேயே இயற்கை மாறாமல், இன்றும் உள்ள காடுகளினூடே நடந்து சென்று, இயற்கை அழகையும், மிகவும் காண்பதற்கு அரிய தாவரங்களைக் கண்டும் மகிழ்ந்து வந்தனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காடுகள் இருப்பதே தெரியாது. கள்ளக் காதலர்களும், தண்ணியடிப்பவர்களும், ஊரைச் சுற்றி செல்ல சோம்பல்பட்டு, குறுக்கு வழியில்

செல்பவர்களுக்கும் தான் இந்த இடம் பரிச்சயம். ஆனால், அவர்களால், மரங்களுக்கு இதுவரை எந்த கெடுதலும் வந்ததில்லை.

ஆனால், ஏ.எஸ்.ஐ. எனும் அகில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் நேர் கண்காணிப்பில், வேலிகளால் வரையறுக்கப்பட்ட இடத்துள் இன்று, பாதி, காட்டு தீ வைத்தும்,புல்டோசர்களாலும், அரிவாள் அழிப்பினாலும், அழிக்கப்பட்டு விட்டது!


கேள்விப்பட்டதும், குடும்பத்தில் ஒருவருக்கு தீ விபத்தால் மரணம் ஏற்பட்ட தாக்கத்தோடு அங்கே வந்த இயற்கை ஆர்வலர்கள், பல தகவல்களை நமக்கு அளித்தனர்.

170க்கும் மேற்பட்ட அரிய தாவர வகைகள் இங்கு வளர்ந்துள்ளன. அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்!

பாலைவனங்களில் மட்டும் வளரும் குட்டை பேரீச்ச மரங்கள் (100 வயதானவை) சில அழிந்துவிட்டன். சில பிழைத்துள்ளன.


பேய் அத்தி, கரடிப்புங்கம், என்றூம் பசுமை இலைகள் கொண்ட,இலையே உதிராத கார்சினியா ஸ்பிகடா வகை மரங்கள், ஆலமரத்திலேயே அதிக வைரம் பாய்ந்த, வேர், விழுதுகள்

விடாத வகை மரங்கள், சில காப்பிச் செடிகள், காட்டு எலுமிச்சை, ஒரு சில கருங்காலி மரங்கள், 250 வயது தாண்டிய டெரிஸ் ஸ்காண்டன்ஸ் எனும் அரிய வகைக் கொடி, போன்றவை, அதிர்ஷ்ட வசமாக உயிர்

தப்பியுள்ளன.

ஆனால் பல கணக்கற்ற 100 வயதிற்கும் மேலான மரங்கள், புகை கக்கியபடி சாய்ந்துள்ளன! அந்த புகை மூட்டமும், கருகிய மரங்களையும் காண்கையில், நமக்கும் நெஞ்சு விம்மியது.

த்ரிமூர்த்தி குகையிலிருந்து, இக்காட்டின் நடுவேயுள்ள கோனேரிக் குடைவறைக் குகை

வரையிருந்த மரங்கள் எல்லம் வெட்டப்பட்டுவிட்டன!ஒரு சில நாட்கள் முன்னர், ஒற்றையடிப் பாதையாய் இருந்த காட்டு வழி, வெயில் படாத இயற்கை இன்று இல்லை. புல்டோசர்களும், லாரிகளும் சென்று, பாதையில்,

சக்கரத் தடங்கள் தோன்றியுள்ளன.


கோனேரி மண்டபத்துக்கு நேர் எதிரே, வேலி வரை செல்லும் இப்புதிய பாதை, அங்கேயே முடிவடைகிறது! வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பெரிய நீர் நிலை,கண்மாய் போல். புதிதாக அதன் கரைகள் உயர்த்தப் பட்டிருப்பது தெரிகிறது.

மரங்களை சாய்த்துவிட்டு, அப்படி என்ன செய்யப் போகிறார்கள்?

படகு சவாரி செய்யும் படகுத் துறை ஏற்படுத்தப் போவதாகக் கேள்வி! மல்லைக்கு அருகிலேயே முத்துக்காடும், முதலியார்குப்பம் படகுத் துறைகளும் கடலன்னையை வருடியபடி இருக்கையில், இந்த குளம் குட்டையில், அப்படி என்ன படகு சவாரி செய்ய மக்கள் வரப் போகிறார்கள்? இல்லையேல், மேலும் நவீன கழிவறைகள் கட்ட என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர்.


தொல்பொருள் அதிகாரிகளைத் தொடர்பு செய்ய முயன்றால்,அவர்கள் சிலைகளுக்கும், சின்னங்களுக்கும் மட்டுமே பாதுகாவலர்கள் (?) என்றும், இந்த காடுகளை மைசூரிலிருந்து ஏ.எஸ். ஐ யின் தோட்டக் கலைத் துறையினர் நேர் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.

இந்த காடுகளிலுள்ள அத்தனை தாவரங்களையும் இனம் கண்டு, தாவரப் பெயர்களைப் பதிவு செய்ய சுமார் மூன்று மாதங்கள் உழைத்த பேராசிரியர்கள், எஸ்.சுவாமிநாதன், திரு. அஜித் தாஸ், மற்றும் அவர்களது ஆராய்ச்சி மாணவர்களின் உழைப்பால் பல அரிய தாவரங்கள் இங்கே, இந்த கோரமண்டல், வரண்ட, என்றும் பசுமையான காட்டில் இருப்பதை உலகிலுள்ள பல கருத்தரங்களில் வரவேற்று மெச்சியுள்ளனர்.

சில அரிய மரம், செடி, கொடிகளும், அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டும் உள்ளது என்பது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சில ஆராய்ச்சியாளர்கள் சில தாவரங்களை என்ன விலையானாலும் தருகிறோம் என்று சொன்னதும், அதற்கு நமது தாவரவியல் ஆர்வலர்கள், இந்தியாவிற்கென பெருமை சேர்க்கும் சில விஷயங்களில் இங்கு வளரும் இந்த தாவரங்களும் ஒன்று. உயிர் போனாலும் தரமாட்டோம் என்று

மறுத்ததும், இந்த அரசுதுறை அரைவேக்காடுகளுக்கு எங்கே தெரியப் போகிறது? இவர்கள் இத்தொடு நிறுத்திக் கொண்டு, இந்த காட்டை தாவரவியல் ஆர்வலர் குழுக்களிடையே ஒப்படைத்துவிட்டால், மீண்டும் அக்காட்டின் அழகும் பெருமையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நந்தவனம் அமைக்க வாய்ப்புள்ளது.


பள்ளிக் குழந்தைகளுக்கு அரிய இயற்கைச் செல்வங்களை கற்றுத் தர வழி உள்ளது. அதற்கு வேண்டியவர்கள் வழி செய்வார்களா, இல்லை ஆயிரம் தடை சொல்லி மரங்களை

அழித்து அவப்பெயர்பெற்று, செல்லாக் காசுக்குப் படகுகள் ஓட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது கழிப்பு அறை தந்த செம்மல்கள் என்று மெடல் வாங்கி சட்டையில்லா கல்நெஞ்சுகளில் குத்திக் கொள்ளப் போகிறார்களா?


இந்த மல்லை குகைகளைச் சுற்றியுள்ள, குறிப்பாக இந்த காட்டினருகேயுள்ளஏ.எஸ்.ஐ யின் கம்பிக் கதவுகள் என்றும் திறந்தபடியே உள்ளன.


நாம் குறிப்பிட்டபடி, சமூக விரோதிகளும், குடிகாரர்களும்,

கள்ளக் காதலர்களும், புதிதாக எரிந்துபோன மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் கிராம மக்களையும்தான் அங்கு பார்க்க

முடிகிறது. உலக அளவு அந்தஸ்து பெற்ற புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களிலா இந்த அவலம்? தாவரயியல் துறை மைசூர் அதிகாரிகளின் கட்டுபாட்டில் உள்ளது சரி. இந்த சரித்திரச் சின்னங்களின் பாதுகாப்பு யார் கையில் உள்ளது? கொடுமை என்ன என்றால், நாம் சென்ற அதே ஞாயிற்றுக் கிழமைதான், பெல்ஜிய மன்னர், ராணியான ஆல்பர்ட், பவோலா தம்பதியரை அரசு மரியாதையோடு, சென்னை வட்ட அகில இந்திய தொல்பொருள் துறைத் தலைவி சத்யபாமா பத்ரிநாத் அவர்கள் மாமல்லபுரம் சுற்றிக் காட்ட அழைத்து வந்திருந்தார்கள். நல்ல வேளை அவர்களை இந்த கருகிய காட்டிற்குள் அழைத்து வரவிலை.வந்திருந்தால், நமது மானம் படகு அல்ல, கப்பல் கடந்து, பல நாடுகளுக்குப் போயிருக்கும்!


இதை பச்சைக் கற்பழிப்பு, அல்லது இனப் படுகொலை என்று சொல்லாமல், வேறு எப்படி அழைப்பதாம்?


இருக்கும் மரங்களைக் காக்க ஒரே வழி, இதை இயற்கை ஆர்வலர்கள் கொண்ட தனிக் குழுவின் பராமரிப்பில் விடவேண்டியதுதான். வாடிய பயிரையும் கண்டு வாடிய வள்ளலார் பிறந்த தமிழ் மண்ணில், இப்படி உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள இடத்திலேயே ஒரு பச்சைக் கொலை நடந்திருப்பது ஒரு பொது நல வழக்குக்கான விஷயம்தானே? அரசு நடவடிக்கை எடுக்குமா?


எதோ என் நல்ல நேரம், ஊடகத் துறையினர், (தொலைக் காட்சி மற்றும் தினசரிகள்) இதை உடனடியாக வெளியிட்டும்,பிரசுரித்தும், ஆவன செய்வதாய் உறுதியளித்துள்ளனர். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அச்சுகளில் ஏறி காலை (புதன் கிழமை- இந்திய நேரப்படி) வரும் என்ற நம்பிக்கையோடு தூக்கம் இழந்துவிட்ட கண்களை தூங்க வைக்க முயல்கிறேன்.. திரைப்படமாகவும் இதை எடுத்துள்ளேன். விரைவில் அதை சீர் செய்து வெளியிடுவேன். அடுத்த முறை இந்த மாதிரி தவறை ஜென்மத்துக்கும் துறையினர் செய்யக் கூடாது! :( நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்!

தினமலர் சென்னை பதிப்பில் 12-11-2008 ல் வெளிவந்த கட்டுரைசற்றுமுன் கிடைத்த தகவல்: (16 நவம்பர் 2008)


எனது பத்திரிகை நண்பி ஏ.எஸ்.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, முதலில் மறுத்தவர்கள், பின்னர், அரிய மரங்களை எங்கே வெட்டினோம்? புங்கை, வேம்பு போன்றவற்றை மட்டும்தானே வெட்டினோம்,” என்றார்களாம்.


அப்படியாகில், 100 ஆண்டுகள் மேல் தாண்டி விட்ட அந்த ‘பொது' மரங்கள் அரியவை ஆகும் நாள் வந்துவிட்டதே! இதோ, இவர்கள் அவற்றை வெட்டி, அவற்றை ‘சரித்திரம்' ஆக்கிவிட்டார்களே! சுற்றியுள்ள மரங்களை வெட்டிவிட்டால், நாம் குறிப்பிட்ட அரிய மரங்கள் மேலே விழும் வெயில் காற்று, சீதோஷ்ண நிலை மாறி, ‘என்றும் பசுமை' யாய் அவற்றை வைத்திருக்கக் கூடிய நிலமையும் மாறி, அந்த ‘அரிய' மரங்களும் அழிந்துவிடாதோ?


படகுத்துறை அமைப்பதை சுற்றுலா துறையினர் மற்றும் தொல்பொருள் துறையினர் இருவரும் மறுத்துவிட்டனராம். எனில், மண்ணைத் தோண்டி. அந்த நீர் நிலையை அதிகம் செய்தது யார்? பொது பணித் துறை என்ற பதில் வந்துள்ளது! எதற்காம்? ஊரிலுள்ள 36 நீர் நிலைகளாஇ மழை வலுக்குமுன் ஆளப்படுத்தி நீர் வளத்தை அதிகப் படுத்துவதற்காக இந்த குளத்தையும் சீர் செய்தார்களாம்! சுற்றியுள்ள மரங்களே கரை கெட்டிப்படுத்தி மண் சரியாமல் இருக்க ஆதாரம். அவற்றை வெட்டி நீர் நிலை சரி செய்வதஎன்பது, கண்ணைக் விற்று சித்திரம் வரைவதை போல் ஒப்பிடுவதாகும்!


Update: 19th Nov 2008

news in NDTV on this. I appear for few seconds!!!

நற்செய்தி: மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.


மரபூர் ஜெய.சந்திரசேகரன்.


15 comments:

4தமிழ்மீடியா said...

வணக்கம்!
உங்க கவலையை, எங்கள் இணையத்தளத்தின் பொது மன்றத்தில் முன்வைத்துள்ளோம். வாசகர்கள் என்ன என்ன சொல்கின்றார்கள் இங்கே பார்க்கலாம்
நன்றி!

ஜெய. சந்திரசேகரன் said...

நீங்கள் கொடுத்த உரலியில் சொடுக்கினால், ஒன்றும் வரவில்லையே? தயவு செய்து சரிபார்க்கவும்.

தினமலரில் இன்று (புதன்) வெளிவந்தது:
http://epaper.dinamalar.com//DM/Dinamalar/2008/11/12/PagePrint/12_11_2008_012.pdf

NDTV will release video today and tomorrow it might appear in Times of India- Chennai edition.

4தமிழ்மீடியா said...

இணைப்பை சரி செய்து விட்டோம்.
உங்க கவலையை, எங்கள் இணையத்தளத்தின் பொது மன்றத்தில் முன்வைத்துள்ளோம். வாசகர்கள் என்ன என்ன சொல்கின்றார்கள்
இங்கே பார்க்கலாம்

நன்றி!

ஜெய. சந்திரசேகரன் said...
This comment has been removed by the author.
ஜெய. சந்திரசேகரன் said...

உடனடியாக சரி செய்ததற்கு நன்றி.

சந்திரசேகரன்

சுந்தரராஜன் said...

நல்ல கட்டுரை. சமூகப் பொறுப்புள்ள இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

SurveySan said...

கழிவறை கட்டியது தவரொன்றுமில்லை.

ஆனா, இடத்துக்கேத்த மாதிரி, வெளிப்புர கட்டிட அமைப்பு லேசா மாத்தி அமச்சிருக்கலாம்.

மகாபலிபுரத்தில், கழிவரைகள், கருங்கல் கொண்டு, அழகு படூத்தியிருக்கணும். நெருடாமல் இருந்திருக்கும்.

Vetrimagal said...

Commendable efforts. The future generations are indebted to you for this.

I am nowhere near Mahabalipuram to come and strengthen your efforts, but, I can pray for your well being and success in your mission.

where ever I find this kind of destruction I make it a point to do something to prevent it, in whatever little steps I can take.

God bless you and all the others who toil for such causes.

All the best.

Indian said...

I condemn this criminal negligence of the govt department.

ஜெய. சந்திரசேகரன் said...

4திமிழ்மீடியா மக்களே, விவாத மேடை உரலி மீண்டும் மக்கர் செய்கிறது :(
(இந்திய நேரம் மதியம் 2.30 மணி)

நன்றி, தோழர் சுந்தரராஜன், வெற்றிமகள்.

சர்வேசனா,சர்வேயரா? எதுக்குக் கேட்டேன் என்றால், உலக புராதனச் சின்னங்களின் சிறப்பு என்ன என்றாலேயே, அவை பழைய சூழ்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதாலேயே! நவீன கழிப்பறை இந்த ஏ.எஸ்.ஐ. எல்லையைத் தாண்டி கட்டக் கூடாதா? அரிய காடுகளை இழந்தா நாம் அவற்றைக் கட்ட வேண்டும்?

இந்தியன், இந்தியன் தாத்தா மாதிரி கத்தி எடுக்க இல்லை என்றாலும், உங்களிப் போன்றோர் பேனா எடுக்கவும் ( எலி போதும் என்கிறீர்களோ ;)],இம்மாதிரியான அவலங்களை தவிர்க்க!

dondu(#11168674346665545885) said...

உங்கள் மனக்கொதிப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெய. சந்திரசேகரன் said...

நன்றி டோண்டு ராகவன் சார்.

சரவணகுமரன் said...

:-((

ஜெய. சந்திரசேகரன் said...

சரவணன குமரன்:
:(( என்றால் உங்கள் கவலையை பதிவு செய்கிறீர்கள் எனக் கொள்ளலாமா?

ஜெய. சந்திரசேகரன் said...

Update: 19th Nov 2008

நற்செய்தி: மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள். NDTV யில் காட்டினார்கள். என் திருமுகம் கூட தெரிந்தது!


மரபூர் ஜெய.சந்திரசேகரன்.