29 September 2008

மல்லை என்ன கொல்லையா?

மல்லை அல்லது மகாபலிபுரம் எனும் மாமல்லபுரம் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று போற்றப்படுகிறது. ஆனால் அங்கே அத்தகைய பெரிய இடத்திற்குத் தகுந்தாற்போல் காவலர்கள்,பாதுகாவலர்கள், உள்ளார்களா என்பது சந்தேகமே.

அகில இந்திய தொல்லியல் துறையின் ஓரிருவரே கண்களில் தென்படுகின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பஞ்சம். அர்ச்சுனன் தவசு எனப்படும் பாறையை நோக்கி நிற்கையில், உங்களுக்கு வலது பக்கத்தில் உள்ள கம்பி கேட் (சிறிய வாயில்) நேராக தர்மராஜா மண்டபம் போன்றவற்றுக்குப் போக முடியாமல் எப்போதும் மூடியே வைத்திருக்கிறார்கள்?! ஆனால், த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே உள்ள கேட் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது! (இரவில் எனக்கு எப்படி என்று தெரியாது, பகலில் நான் பார்த்த எந்த நேரத்திலும் அது திறந்தே இருக்கிறது! யார் நன்மைக்கு?

உள்ளூர் மக்கள் உள்ளே போய்வந்து, காலைக் கடன்களை பின்னே உள்ள பஞ்சபாண்டவர் குகை மற்றும் கோடிக்கால் மண்டபக் குகைகளில் மல ஜலம் கழிக்கவும், சிராய், விறகு ஒடித்துக் கொள்ளவும், சுற்றுப் பாதையாய் ஊருக்குள் நடக்காமலிருக்கவும் அதனால், பின் புறம் பலர் கண்களுக்கு தென்படாத குகைக் கோவில்களில் ‘குடி’ மக்கள் அதகளம் செய்யவும், இன்ன பிற அசிங்கங்கள் நடந்தேறவும் வழி செய்கிறார்களே காவலர்கள் என்ற பெயரில் அங்கே பணிக்கு அமர்த்தப் பட்ட பண்டை கால சின்னங்களை சின்னாபின்னப் படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கிராதகர்கள்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும் பிடுங்கிக் கொள்ளும் தொல்பொருள் துறையும், இந்த உலக அதிசயத்தை ஊரறியச் சொல்லிச் சொல்லியே பெயரும் பணமும் வாங்கத் துடிக்கும் தமிழக சுற்றுலாத் துறையும் என்ன கிழிக்கிறார்கள்?

மேலும் சில மெய்ப்பொருள் காண்பது .. கொடுமை!

மகிஷாசுரமர்த்தினிக் குகை மற்றும் தர்மராஜ மண்டப சுவர்களில் மற்றும் வாயில் நடைபாதையில் உள்ள அபூர்வ கிரந்த எழுத்துக்கள். நடந்து நடந்தே தேய்ந்து போவிடும், காலப் போக்கில். இந்தக் கோயிலில் சிறப்புவாய்ந்த வடமொழிக் கல்வெட்டு ஒன்று தென்புறச் சுவரில் காணப்படுகிறது. இதில் பதினொரு செய்யுட்கள் உள்ளன.

'பகைவர்களை வென்றவனும் ரணஜெயன் என்று பட்டம் கொண்டவனுமான அத்யாந்தகாமன் என்ற மன்னனால் இக்கோயில் சிவபெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இது போன்ற கல்வெட்டுக்களை ஒரு கண்ணாடி அல்லது உடைக்க முடியாத சிலிகோன் பூசப்பட்ட பாலிகார்பனேட் எனும் கண்ணாடி போன்ற ஷீட்டினால் கவசம் செய்து மூடினால் என்ன? கணேச மண்டபத்திலும், பின்னர் புலிக்குகை அருகே உள்ள அதிரண சண்டேஸ்வர மண்டபத்திலும் கூட அறிய பல்லவக் கிரந்த எழுத்துக்களும், தர்மராஜ மண்டபத்தில் காணப்படும் அறிய செய்யுளின் அதே பிரதி, தேவநாகரி எழுத்துக்களில் ஒரே பொருள் பட எதிரும் புதிருமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே பொருள் படும் இரு வேறு எழுத்துக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் இருப்பது உலகிலேயே வேறெங்கும் கிடையாது.
அதிரண சண்டேஸ்வரக் குகையின் கிரந்த எழுத்துக்களுக்கு நேர் கீழே தரையில், அரிய சோழர்கால கல்வெட்டும் உள்ளது.
இதுவும் காலாகாலத்தில் மூடி வைக்கப்படவில்லையென்றால், தேய்ந்து அழிந்து போய்விடும்.

அதேபோல், மக்கள் நடமாடும் கடற்கரையில், கடற்கரைக் கோவிலின் தெற்கே, ஒரு குட்டிப் பாறை உள்ளது. அது, புலிக் குகையின் மாதிரி (model) போல் உள்ளது. அதை அப்படியே வெளியே விட்டு விட்டார்கள். வேலி கிடையாது. மக்கள் கிறுக்கல்கள் ஏராளம். கடற்கரைக் கோவிலின் வடக்கே, தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் வேலிக்கு வெளியே, மகிடாசுரனை தேவி அடக்குமுன், வாகனமான சிங்கம் அப்படியே பாய்வது போலவும், அரக்கன் ஓடமுயலுவது போலவும் புடைப்புச் சிற்பமும் கூட பாதுகாப்பில்லாமல், மக்களின் (அருகிலுள்ள மீனவர் குப்பத்தின்) அறிவிக்கப்படாத கழிவறையாக உள்ளது!

இவையும் காலச்சின்னங்கள் தான். ஒருதலைப் பட்சமாக, இவற்றை வேலியால் மூடாமல், திறந்த வெளியில் விட்டதற்கு காரணம் என்ன?

மூக்கை பொத்திக் கொண்டே காண வேண்டிய குகை தர்மராஜ மண்டபக் குகை மற்றும் கோனேரி மண்டபம். ஒரே மூத்திர நாற்றம். ஏன்?

த்ரிமூர்த்தி குகை சுற்றி உள்ள பாறைகள் மேலெல்லாம், வழியெங்கும் கண்ணாடி பாட்டில் சிதறல்கள். ஏன் இங்கே குடிக்க அனுமதிக்கிறார்கள்?

அடர்ந்த காட்டினுள் சென்று இந்த மண்டபங்களைக் காணலாம். இப்படி கடற்கரையை ஒட்டி எஞ்சியுள்ள பசுஞ்சோலைகளின் ஒன்று இந்த பாதை! இப்பாதை த்ரிமூர்த்தி குகையின் எதிரே ஆரம்பித்து, சிங்கக் கட்டில்வரை செல்கிறது.

பல இடங்களில் சிலைகளின் மீது கிறுக்கியுள்ள, தங்கள் வெறுக்கத்தக்க கலை அபிமானத்தை (?) வெளிப்படித்தியுள்ள ‘நவீன சித்திரக்காரர்கள் அல்லது ‘கிறுக்கர்’களின் கையை வெட்ட வேண்டாம்?

புகழ் மிக்க உழக்கு எண்ணை ஈச்வரர் கோவில் சிற்பமான ராவணேஸ்வரன் கைலைமலையைத் தூகுவது போன்ற சிலை முழுவதும் கிறுக்கல்கள். ராவணனின் வயிறு முழுதும் ‘கிறுக்கர்;களின் பெயர்கள்!

ஏன்? உலகப் புகழ் பெற்ற மல்லை என்ன உங்கள் கொல்லையா? பராமரிக்க வக்கில்லை என்றால், வழி விடுங்கள்; ஆர்வலர்கள் பலரைக் கொண்டு நாங்கள், தன்னார்வலர் குழுக்கள் இவற்றை சுத்தம் செய்கிறோம். அரசு தடுப்புகள், அனாவசிய சட்டங்கள், குறுக்கீடுகள் வழிவிடுமா? அதன் பிறகு, தப்பு செய்வோரை தண்டிக்கவும் அதே தன்னார்வக் குழுக்களுக்கு அதிகாரம் தரப்படுமா? சரி, என்றால் இந்த மல்லை எனும் உங்கள் கொல்லையை முல்லை நந்த வனமாய் மாற்ற நாங்கள் ரெடி!
--------------------------------------------------------------------------------------------------------
படங்கள் உதவி: ஸ்ரீராம் ராஜாராம், நந்தகுமார் செல்வராஜ், லெஷ்மி -பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தினர்.
லலிதா வெங்கட்டின் படங்கள் கிடைத்த உரலி: http://www.indian-heritage.org/poimahabs/mahabtrp.html
நானும் மற்ற பொன்னியின் செல்வன் யாஹூ இணையக் குழுமத்தினருடன், மேற்சொன்ன ஐ.ஐ.டியின் ஓய்வு பெற்ற மாமல்லை ஆராய்ச்சியாளர் திரு. சுப்ரமணியம் சுவாமிநாதன் அவர்களுடன் சமீபத்தில் மல்லை விஜயம் செய்தோம். மேலுள்ள உரலியில் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் ஒப்பான கலந்துரையாடலே நடந்தமையால், அவற்றை மீண்டும் பதியவில்லை. உரலியில் கண்டது போக, கடற்கரை கோவிலையும், அதன் வேலிகளின் வெளியே உள்ள பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மகிடன் குன்றும், புலிக் குகையின் மாதிரிக் குன்றும், பார்த்தோம்.





6 comments:

G.Ragavan said...

படிக்கிறப்பவே கஷ்டமாயிருக்கு. பொதுமக்களுக்கு விழிப்புணர்வே இல்லையே. என்ன கொடுமைங்க இது. ஒரு மாசத்துக்கு முன்னாடி போயிருந்தப்போ இந்த நெலமையைப் பார்த்தூ வருத்தப்பட்டேன். நீங்க பதிவாவே போட்டுட்டீங்க.

இரா. சதீஷ் குமார் said...

திரு. சந்திரா, தங்கள் கருத்து முற்றிலும் சரி, அரசு மட்டும் அல்ல மக்களுக்கும் அறிவு வேண்டும் மல்லையில் வாழ்வோரும் சரி அங்கு வருவோரும் சரி இந்த சரித்திர சிற்பங்களை அழிக்க தயாராக இருக்கிறார்கள் காப்பதற்கு ஒருவரும் இல்லை...

Maraboor J Chandrasekaran said...

ராகவன், சதீஷ்குமார்,
வருத்தப் படுவதை எப்படி செயல்வடிவாய் மாற்றி ஆக்கப் பணிகள் செய்யலாம்னு பார்ப்போம். எக்ஸநோராவுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். வார இறுதி நாட்களில், ஆர்வலர்கள் (volunteers) சென்று சுத்தம் செய்வது எனத் திட்டம். வாருங்கள் கை கொடுங்கள். உங்களுக்கு இதில் பங்கு பெற ஆர்வமிருந்தால் மின்னஞ்சல்: reach.foundation.india@gmail.com க்கு எழுதவும்.

Geetha Sambasivam said...

வருத்தமாய் இருக்கு சந்திரா, இதே போல் தான் குற்றாலம் சித்திர சபையும் உள்ளது. சித்திரங்கள் அழியும் வகையில். பலமுறை பல தினசரிகளுக்கு இதைச் சுட்டிக் காட்டி எழுதியும், என்னோட பதிவுகளில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டிக் காட்டி எழுதவும் தான் செய்ய முடியுது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையிடம், மாநிலத் தொல்துறையின் பாதுகாப்பில் இருக்கின்றது. முடிந்தால் அதையும் போய்ப் பார்த்து ஏதாவது செய்ய முடியுமா என யோசிக்கவும். குழுவாகத் தான் செய்ய முடியும் இதெல்லாம் என்பதாலேயே உங்களிடம் சொல்கின்றேன்.

Maraboor J Chandrasekaran said...

கீத சாம்பசிவம்,
எங்கள் அடுத்த நெல்லை பயணயத்தின் போது, கட்டாயம் குற்றாலம் நடனசபையை ஆவணப் படுத்தி முக்கிய நபர்களிடம் அதன் நிலையை காண ஆவன செய்ய முயல்கிறோம். நன்றி!
சந்திரா.

Anonymous said...

இதை நினைத்து என்ன சொல்வது. தமிழர்கள் என்றைக்குமே தங்கள் பழமையை தாங்களே தொலைத்துகொள்பவர்கள். இவர்கள் எப்பொதுதான் விழித்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
இது போன்ற அரிய செய்திகளை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
unmaiyan@gmail.com
மிக்க நன்றி