15 August 2010

கொடி காத்த கிழவி!

மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!
காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.
முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.

காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.

5 comments:

Anonymous said...

மிகவும் நல்ல, இதுவரை நான் கேள்விப்படாத தகவல். தொடருங்கள். உங்கள் இப்பதிவை என் வலைப்பக்கத்தில் பிரசுரித்துள்ளேன்.

Maraboor J Chandrasekaran said...

அன்பர் திரவிய நடராஜனுக்கு,
நன்றி. மிக சொல்பமான பேர்களே இப்பதிவைப் பார்த்தார்கள். எனினும், நல்ல தலைவர்களை நமது நாடு கண்டெடுத்துள்ளதை நாம் நினைவில் கூறுவது, வருங்காலத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கான பதிவுகளே. தங்கள் மீள்பதிவுக்கு நன்றி.

சந்திரசேகரன்

Kousalya Raj said...

மிகவும் புதிய தகவல் இது...இந்த பதிவு ஏன் பலரையும் சென்று சேரவில்லை என்று தெரியவில்லை.

இப்போது இருப்பவர்களை பார்த்து ஆதங்கப்படும் அதே நேரம் மாதங்கினி ஹஸ்ரா அவர்களை பற்றி குறைந்த பட்சம் தெரிந்தாவது வைத்துக்கொள்ளலாம்.

வயதான பெண்மணி அவர்களின் நெஞ்சுரம் வியக்க வைக்கிறது...

குடியரசு தினத்தன்று அவரை பற்றி தெரிந்து கொண்டதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது எனக்கு.

பகிர்வுக்கு நன்றி.

csmathi said...

very nice

Unknown said...

Very Useful information --thanks & keep write such historical incidents ...