24 January 2007

முராரி பாபு!


ஆன்மீக வாதிகளுக்கு, நல்லதொரு எடுத்துக் காட்டு - முராரி பாபு! தன்னை ஒரு மத குருவாகவோ, ஒரு ஆன்மீக போதகராகவோ தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்! வால்மீகி ராமாயணத்தை சுவை படக் கூறுவதில் வித்தகர். ராமர் கதையில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. அதை பின்பற்ற மக்களிடையே, மனித நேயம் வளர ஆவன செய்வதுதான் என் பணி, என்கிறார் முராரி பாபு. சமீபத்தில், அவர் செய்துவரும் ஒரு மிக நல்ல பணியைப் பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தொலைதூர நாடுகளான மெக்சிகோ, ஆஸ்திரேலியாவிலிருந்து, வெதுவெதுப்பான நீரை நோக்கி இந்த சொற்பமே எஞ்சியுள்ள சுறாத்திமிங்கிலங்கள் ( எட்டு முதல் பத்து - டன் எடை இருக்கக்கூடியது), குஜராத்திலுள்ள வீரவல், போர்பந்தர், துவாரகா, பீடியா, டியு, மங்க்ரோல் கடலோரங்களில் குட்டிபோட கரை சேருவது வழக்கம்.


அப்போது மீனவர்களுக்கு நல்ல வெட்டைதான்! பல வருடங்களாக இந்த சுறா இனம் அழிந்து வருவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும், பல லட்சம் பெறுமான ஒரிரு சுறா பிடித்தால் போதும், ஒரு வருட செலவுக்கான பணம் கிடைத்துவிடும் என்பதால், அங்குள்ள 'கார்வா' எனும் மீனவ சமுதாயத்தினரை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை.


அங்கு பயணிக்கையில் இதை கேள்விப்பட்ட முராரி பாபு, உடனே, படகிலேறிச் சென்று, ஒரு பிடிபட்ட திமிங்கிலத்தை வலையை அறுத்து விடுவித்தார்! பயங்கர எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தங்கள் குருவாயிற்றே! என்ன செய்வது என்று தெரியாத அந்த மீனவர்களை நோக்கி முராரி பாபு சொன்னது: "குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்கு வரும் உங்கள் பெண்ணை கொல்வீர்களா? அப்படித்தானே இந்த வாயில்லா ஜீவன்களும்? இனத்தில் சுறா ஆயினும் அவை இங்கு வருகையில் தாய்மை அடைந்து வருகின்றன. யாரையும் கொல்வதில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த இனத்தையே அழித்துவிட்டால்? வருங்காலம் நம்மை ஒரு ஜீவகாருண்யமற்ற கொலைகாரர்களாகத்தான் பார்க்கும். "இந்தோ, அறுத்த வலைகளுக்கான நஷ்ட ஈடு 10,000 ஆயிரம் ரூபாய்," என்று தன் கையால் எடுத்து கொடுத்தார்!

இந்த செய்கை அம்மீனவர்களின் மனதை உலுக்கி விட்டது. இன்று கடந்த மூன்று ஆண்டுகளாக, திமிங்கிலங்கள் வேட்டை ஆடப் படுவதில்லை!

முன்பு திமிங்கிலங்களை வேட்டையாடும்போது பிடியா, மற்றும் விராவல் கடல் நீரெல்லாம், ரத்தச்சிவப்பாகக் காட்சியளிக்குமாம்! இப்போது நீரின் நிறம், மனிதரின் மனதுள் ஈரம், பாயக் காரணம், ஒரு ஆன்மீகவாதி! இதுபோல், சமுதாய நோக்கோடு எல்லா சாமியார்களும், மத போதகர்களும் இருந்தால், மனம், மதம், எல்லாவற்றுக்கும் நல்லது.

அங்குள்ள வன அதிகாரிகள், மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், முன்னணிக் கம்பெனிகளான குஜராத் கெமிகல்ஸ் மற்றும் உப்பளம் அதிகம் வைத்துள்ள டாடா கெமிகல்ஸ், தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்! "இத்தனை ஆண்டுகள் எங்களால் முடியாததை பாபா செய்துவிட்டார்!" என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க!

போலி பிஷப்களும், கோலாகலச் சாமியார்களும், கொலை கொள்ளையில் ஈடுபட்டும் 'பெயர்'இழப்பு ஆகாமல், இப்படி நல்ல காரியம் செய்தால், சுற்றுப்புற சூழலும் சரியாகும், மக்களும் மாறுவர்!

3 comments:

சிறில் அலெக்ஸ் said...

//அங்குள்ள வன அதிகாரிகள், மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், முன்னணிக் கம்பெனிகளான குஜராத் கெமிகல்ஸ் மற்ம் உப்பளம் அதிகம் வைத்துள்ள டாடா கெமிகல்ஸ், தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்! "இத்தனை ஆண்டுகள் எங்களால் முடியாததை பாபா செய்துவிட்டார்!" என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க! //

இவங்கெல்லாம் சேர்ந்து அந்த மீனவர்களின் வருமானம் மேம்பட ஏதாவது செய்தால் இந்தக் கதை முழுமைபெறும் என நினைக்கிறேன்.

கட்டுரைக்கு நன்றி.

Maraboor J Chandrasekaran said...

சிறில் அலெக்ஸ்! சூப்பர் ஸ்பீட் ஆளுய்யா நீர்! எப்படி அத்தனை சீக்கிரம் படித்தீர்கள்? ஆமாம், நீங்க சொன்னது போல், அந்த நிறுவனங்கள் எல்லாம், இப்போது, மீனவர் வாழ்க்கை மேம்பாட்டுத் திட்டங்கள் பல தொடங்கியுள்ளன! உங்களுக்காக, முராரி பாபுவின் போட்டோ, மற்றும், அந்த மீன் பிடிபடு(விடுபடு?) தல் போட்டோவையும் இணைத்துள்ளேன்! :)

கால்கரி சிவா said...

சந்துரு, நல்ல கட்டுரை. முராரி பாபுவின் பணி மகத்தானது