19 July 2006

போட்டி - "கருப்பய்யா"

காற்று ஊழிக்காற்றாய் அடித்தது. ஏற்கனவே, மெல்லிய தேகம். அத்தனை உயரத்துக்கு போனதால், உடம்பு, 'S' போல் காற்றில் வளைவது போல் இருந்தது.

சோழிங்கநல்லூரின் பல உயர்ந்த I.T.பார்க் கட்டடங்களில் இதுவும் ஒன்று. அதன் உயரத்திலிருந்த படியே, கீழே பென்சில் கீரலாய்த் தெரியும் சாலைகளையும், இவன் நிற்பதை அண்ணாந்து பார்க்கக்கூட, நேரமில்லாமல், கடிகாரத்தை மிழுங்கியது போல் திரியும் இளைஞர் கூட்டம், எறும்பு ஊர்வதுபோல் கட்டிடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போவதையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

அவசர அப்பா, அன்பு அம்மா, அநியாயத்துக்கு விரட்டும் பாஸ், மதிக்காத ஏளன விழிகளால் பார்க்கும் சக ஊழியர்கள், தினம் பார்த்து சிரிக்கிறாள் என நினைக்கும் அந்த பெயர் தெரியாத பெண், வேலையிடத்து சகலைகள், என எல்லாரும் ஒரு ரவுண்டு, மனக்கண்ணில் வந்து விட்டுப்போனார்கள்!
குதிக்கவேண்டியதுதான் பாக்கி. "ஒன். டூ.." சொல்லுமுன், அந்த 'எண்ண' ஓட்டத்தை முந்திக்கொண்டு நெஞ்சின் லப்-டப் சப்தம் அதிகமாக கேட்டது!

தொண்டையில் வரண்டு, நாக்கு எங்கோ ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். "குதி! குதி! அடக் குதிடா, இன்னும் அவமானங்களை தாங்கிகிட்டு எத்தனை நாள் வாழ்றது..கமான், குதி..." என மனதின் தைரியப் பகுதியின் ஆதிக்கம் அதிகரித்து, ரத்தம் குபுக்கென தலைக்கேற.. கு...

'விஷ்..' என மிக பக்கத்தில் ஒரு சப்தம் கேட்டதுபோலிருந்தது! மெதுவாக கண்ணைத்திறந்து பார்த்தான்! நம்ப முடியவில்லை! மிக,மிக அருகில் அவன்! அருகில் இவனதை விட பெரிதாக உள்ள கட்டிடத்தின் சுவற்றிலிருந்து அப்படியே ஒரு கயிற்றைப் பிடித்தபடி, ஸ்பைடர்மேன் போல், இவன் முகத்துக்கு முன் வருவதும், ஊசலாடி பின்னால் போவதுமாய் இருந்தான். மெதுவாக கயிற்றின் ஆட்டத்தை நிறுத்தி, இவன் பக்கமாக குதிக்க முயல்வது தெரிந்தது!

"யேய், வராத! என் கிட்ட வராத! ஐ யாம் கோயிங் டு ஜம்ப்!"

அவன் கத்தினான்."என்ன சொல்ற? காதுல விழல! இரு கயிறு கொஞ்சம் நின்னதும் பக்கத்துல வந்து கேக்கறேன்!"

"அதத்தான் சொல்றேன். பக்கத்துல வராதன்னு,டோண்ட் கம் நியர் மீ!"

"எதோ இங்கிலீஷ்ல சொல்றன்னு தெரியுது; ஆனா என்னன்னுதான் தெரியல. எனக்கு இங்கிலீஷ் வராது. இரு பக்கத்துல வர்றேன்."

சொல்ல சொல்ல கேட்காமல், மெதுவாக இந்தப் பக்கமாய் குதித்து, அருகே வந்தான். வருகையிலேயே, தன்னைச்சுற்றியிருக்கும் கயிற்றைக் கழற்றிக் கொண்டே வந்தான்.

குதிக்க வேண்டியதை மறந்து, "இவன்,இங்கே, எப்படி.." எனக்..

"என்ன கேக்கவர்றன்னு தெரியுது! எங்கிருந்து குதிச்சான்னா? அதான் பார்த்தயே? வானத்தில இருந்துதான்.." சொல்லி சிரித்தான்!

அதற்குள் மிக அருகில் வந்துவிட்டு, சகஜமாகத் தோளிலும் கை போட்டான்."கண்ணா, பாரு, எனக்கு இங்க்லீஷ் வராதுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்; நீ சும்மா பீட்டர் விட்டுகிட்டே இருக்கயே?"

'வெடுக்' கென கையை உதறிவிட்ட குலோத்துங்கன்(ஆபிஸில் குல், குல் என்பார்கள்!) "யேய், யூ.. சரி, தமிழ்லயே சொல்றேன். நீ எப்படி வந்தயோ அப்படியே போயிடு. என்ன தடுக்காதே, எனக்கு குதிக்கணும்!"
"குதி! ஆனா, அட்ரஸ் கொடுத்துட்டு போ! சொல்லிவிட உபகாரமா இருக்கும்; அதோடு, எதாச்சும் சொந்த பந்தம் இருந்தா, பாங்க் பாலன்ஸ் இருந்தா, விவரத்தை சொல்லு; கொஞ்சம் கவனிக்க வசதியா இருக்கும்" மீண்டும் சிரிப்பு!

"உனக்கு நக்கலா இருக்கா? எல்லாத்துக்கும் சிரிக்கிறயே? எம்மாதிரி உனக்கு ப்ரச்னைங்க வந்தா, நீயும் இதைத்தான் செய்வ!"

"அட, பார்றா! ப்ரச்னையா? எவனுக்கும் வராதது புதுசா உனக்கு வந்துருச்சா, என்ன? சரி, என்னன்னுதான் சொல்லேன்; எதாச்சும் சரி செய்ய வழிதெரியுதான்னு பார்ப்போம்; தெரியல, நீ என் கையத்துலயே தொங்கு, நானே அத்துவுடுறேன்"

சொன்னபடியே, மெதுவாக குல்.லின் (நாமும் அப்படியே கூப்பிடுவோமே,குலோத்துங்கன், எழுத ரொம்ம்ம்ப கஷ்டமாயிருக்கு!) கையைப் பிடித்து, சுவர் விளிம்பிலிருந்து உள் பக்கமாக, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டான், அந்த ஸ்பைடர்மேன்!

உடைந்து போயிருந்தான் கு.ல்! கொஞ்சம் நினைவு வந்தது போல்! தலைகுனிந்து கொஞம் போல் விசும்பி அழுதான்! ப்ரச்னைகளாலா, இல்லை தனது தற்கொலை முயற்சியும் தடைபட்டதாலா, தெரியவில்லை.

வேண்டுமளவு அழட்டுமென விட்டு, மெதுவாக மவுனத்தை உடைத்தான் ஸ்பைடர்மேன்." பார் இதோ பார்; என்ன ப்ரச்னை? எதுனாலும் பேசி சரி பண்ணீர்லாம்; இப்படி புசுக்குனு குதிக்கற முடிவெல்லாம் எடுக்கக்கூடாது! அப்படி எல்லாரும் ப்ரச்னைக்கு குதிக்க ஆரம்பிச்சாங்கன்னா, அதுக்கும் திருப்பதி மாதிரி க்யூ ஏற்பாடுதான் செய்யணும்! சொல்லு, என்ன ப்ரச்னை"

சிரித்துவிட்டான், கு.ல்!

"பார்றா, சிரிக்கறத; கொஞ்ச நேரம் முந்தி குதிச்ச பயலா இது, இப்ப சிரிக்கிறான்! என்னய்யா ஒரே கன்ப்யூஷியஸா இருக்கயே! எதுக்குய்யா சிரிச்ச?"

"இல்ல, திருப்பதி மாதிரி க்யூல எல்லாரும் நின்னு, ஒவ்வொருத்தனா குதிக்கிற மாதிரியும், அத கன்ட்ரோல் பண்ண செக்யூரிட்டி வெச்சு, ஒவ்வொருத்தறா அனுப்புற மாதிரியும் நினைப்பு வந்து, சிரிப்பு வந்துச்சு, அதான்; அதவிடு, நீ..நீங்க இப்ப கன்ப்யூஷ்யஸ்ன்னு சொன்னீங்கல்ல? அது ஆங்கில வார்த்தையே இல்ல; அந்த பேர்ல ஒரு பெரிய சீன மேதை வாழ்ந்தார்!"

"பார்றா, பையன் பிச்சு உதர்றத! இவ்வளவு தெரிஞ்சு வெச்சுருக்க? இப்படி அல்பாயுசுல போறதுக்கா?" எனக் கேட்டவனை முறைத்தான், கு.ல்.

"சரி, கோவிச்சுக்காத; என்ன ப்ரச்னை சொல்லு"

"உன் கிட்ட ஏன் சொல்லணும்? நீ யாரு? எதுக்கு என்ன தடுத்த? எப்படி இப்படி அந்தரத்துல இருந்து வந்த?"- சரமாரியாகக் கேட்டான்!

"யப்பா, யப்பா, மெதுவா, ஒண்ணொண்ணாக் கேளு, சொல்றேன்"

"நா யாரு? உன்னவிட அதிகம் சோகத்தைக் கண்டவன்; எப்படீன்னு கேக்கறியா? சுனாமில எங்குடும்பத்த மொத்தமா தொலைச்சேன்! படிச்ச சர்டிபிகேட்டுங்களயும்தான்! கவருமெண்ட்ல அப்ளை பண்ணா, நேரத்துக்கு அதுங்க வந்து சேரல; நிவாரணமும் வந்து சேரல; இப்ப நான் தனிகட்டை!"

"எதுக்குத் தடுத்தேன்? அதுவாதான் போகும் உசிரு; வாழ எத்தன ஆசப்பட்டாலும், சுனாமிலயோ, இல்ல இப்ப நடந்த குண்டுவெடிப்பிலோ செத்தவங்கள நம்மால காப்பாத்த முடிஞ்சுதா? இல்லையே?
அப்படிப்பட்ட அபூர்வமான உசிர நாமளா போக்கிகிட்டா? சரி, நீ குதிக்கிறதப் பார்த்துட்டு சும்மா இருக்க நான் என்ன கல்நெஞ்சக் காரனா?"

"அந்தரத்துல இருந்து எப்படி வந்தேன்? அதான்யா பொழப்பு! என் வயசு என்ன இருக்கும்னு நினைக்குற? உன் வயசுதான்! ஆனா, காத்துலயும், அந்தரத்துலயும் இப்படி லோல் பட்டு கறுத்துப்போய், தோல் சுருங்கி, இப்படி இருக்கேன்! என்ன பொழப்புங்கறயா? இந்த உயரமான கட்டடத்தை, கண்ணாடிங்களால சுத்தி மூடிருக்காங்களே? அத சுத்தப் படுத்தற வேலை! மேலேர்ந்து கீழே வர ஒரு கயிறு; எத்தனை சதுர அடி துடைக்கிறோமோ அத்தன பணம்; அதுக்காக இஷ்டத்துக்கு வேகமா தொடைக்க முடியாது; அழுக்கு காட்டிக் கொடுத்துடும்! தலைக்கு பேருக்கு ஒரு ஹெல்மெட்டு; அவ்வளவு தான்; இன்சியூரன்ஸ் கிடையாது; வேலை நிரந்தரம் கிடையாது; பின்ன எதுக்கு இந்த வேலை? இப்ப, இந்த வேலைக்குத்தான் ரொம்ப டிமாண்ட்; இதுக்குத்தான் கொஞ்சம் பண அதிகம் புரளும்; உயிர பணயம் வெச்சு, கொஞ்சம் காசு பார்க்கறேன்!"

"இப்ப சொல்லு, நான் உன்னய கேள்வி கேக்கறது நியாயமா இல்லையான்னு?"

பேச நாக்கே எழவில்லை கு.ல்லுக்கு!

"முதல்ல எம்பேரே சரியில்ல; குலோத்துங்கன்னு! எங்கப்பா சரித்திர பிரியர்; அதான் எனக்கு இந்த பெயர்; இங்க வேலைக்கு வந்தப்புறம்தான், ஆளாளுக்கு கேலி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.."

"இந்த மாதிரி 'பாதோஸ்' லாம் பாடாதப்பா! பேரு பிடிக்கல, ஊரு பிடிக்கலன்னு. நிஜ காரணத்தை ரத்தின சுருக்கமா சொல்லு. கீழேர்ந்து சூப்ரவைசர் இப்பவே பார்க்க ஆரம்பிச்சுட்டான்; எங்கடா ஆளக் காணோம்னு; உன் காரணம் சரின்னா, நானே, பிடிச்சு தள்ளி விட்டுர்றேன்!"

"மூணு வருஷமாவே நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் என் கம்பெனீல வேலை செய்யறேன்; இங்கிலீஷ் கொஞ்சம் தடுமாறும்; முடிஞ்சவரைக்கும் இங்கிலீஷ்ல பேசி, அத சரிப் படுத்தறேன்.."

"அதான் சாகக் கடக்கையில ரொம்ப பீட்டர்விட்டயோ, நல்ல ஆள்யா நீ"

"குறுக்க கேலி பேசாதே! என் நிலைமையக் கேளு! ப்ரொக்ராமிங்ல நான் ஸ்ட்ராங்! அதனால், பொறுப்புகள் தேடி வந்துச்சு. யார் கண்ணு பட்டதோ, இப்ப நாலு மாசமா, என்னய ஒதுக்குற மாதிரி fபீலிங்."

"எப்படிச் சொல்ற?"

"நான் செஞ்ச ஒரு ப்ரொக்ராம் ஒரு யூ.எஸ்.களையண்டுக்கு பிடிச்சுப் போச்சு; அவன் இங்க வரச்ச, என்னை அறிமுகம் கூட செஞ்சு வெக்கல; சரின்னு விட்டேன்; அதே சப்ஜெக்டுல ரெண்டு மூணு புது ப்ராஜெக்ட் வந்தது; அதுல என்ன சேர்த்துக்கல; இப்ப என்னடான்னா, முதல்ல சொன்ன யூ.எஸ். க்ளையண்ட் ஆர்டர் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துல எங்க ஆபீஸ்லேர்ந்து 10 பேர் அங்க ப்ரொபேஷன்ல போறாங்க; அதுலயும் என் பேர் இல்ல! அந்த ப்ராஜக்ட்ல புதுசா போடற மத்த இன்ஜினீயருங்களும் என் டேபிளைக் கடந்து போறச்ச கண்டுக்காமலே போறாங்க! சரி, பேசாம பாஸ் கிட்ட நேரே பேசிடலாம்னு போனா, அவர் அப்பாயிண்ட்மண்டே தரமாட்டேங்கிறாரு! ஒரு வேளை என் இங்கிலீஷ¤க்கு பயந்துதானோ என்னை வெளிநாட்டு வாய்ப்புகள்ளேர்ந்து கழட்டிவிடுறாங்களோன்னு தோணுது! அதான்!"

"அடப் பாவி, இந்த சாதாரண விஷயத்துக்கா தற்கொலை முயற்சி!" விட்டுத்தள்ளு, வேற வேலைக்கு போகவேண்டியது தானே, இப்பதான் உங்க லைன்ல மந்தை மந்தையா ஆளெடுக்கறாங்களே!''
"அதுவும் ட்ரை பண்ணியாச்சு, ம்ஹ¥ம், வேலை கிடைக்கலே!"

"சரி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு - நீ வீட்ல ஒரே பிள்ளையா?"
"ஆமாம்"
"நீ கேக்கறதெல்லாம் கிடைச்சுடுமா?"
"ஆமாம், அப்பா பிசினஸ் பிசினஸ்னு ஒரேடியா அலைவாரு; என்னை அவர்கூட சேரச்சொன்னாரு; நான் தான், கம்ப்யூட்டர் லைன்ல பெரியாளா வரணும்னு, ஐ.டி ல சேர்ந்தேன்; சரின்னுட்டாரு, முதல் சம்பளத்துல ஒரு பைக் வாங்கிக்கிறேன்னேன்; சரின்னுட்டாரு"

"கொடுத்து வெச்சவன்யா, அப்பா எல்லாத்துக்கும் சரிங்கறாரு. ஆனா அதான் ப்ராப்ளமே; எங்க குதிக்க பர்மிஷன் வாங்கிகிட்டு வா பார்ப்போம்!"

"எ..என்ன சொல்ற?"

"ஆமாம்; நினைச்சதெல்லாம் கடைச்சுதுல்ல? அதான் இங்கயும் நீ எல்லாத்தையும் உடனே எதிர்பார்க்கிறே! கொஞ்சம் பொறு! நீயே ஒத்துகிட்ட இங்லீஷ் கொஞ்சம் இடிக்கும்னு. நல்ல வசதியான் பிள்ளதானே,ஏன் வாத்தியாரு வெச்சு ட்யூஷன் வெக்கிறது; படிக்கிறது! அத விட்டுட்டு, சுய பச்சாதாபத்துலயும், அவசரத்தாலயும் உசிர விடப்பார்த்தயே? சரி, விடு. உங்க அப்பனாத்தா உன்ன பொணமா பார்க்கவா இப்படி செல்லமா வளர்த்தாங்க? சொல்லு!

பேர் சரி இல்லங்கறியே குலோத்துங்கன் எவ்வளவு பெரிய ராஜாத் தெரியுமா? ராஜாவாட்டம் பேரு, வசதி, இப்படி பொறந்தும், பெத்தவங்க நம்பிக்கைய கெடுக்கிறத விட, சாகறதே மேல், போ, போய் குதி!"

பதிலேதும் வரவில்லை; அங்கே, மவுனம் ஒரு யுகப் புரட்சியை செய்துகொண்டிருந்தது!


சிறிது நேரத்துக்குப் பிறகு, குலோத்துங்கன் மெல்ல நடந்து வந்து, "உன்..உங்க பேர் என்ன?"

இப்பவாச்சும் கேட்டயே? 'யமன்'னு கூட வெச்சுக்க, நாந்தான் உன் உசிரு போகாம நிப்பாட்டிட்டேனே; பாரு, என் கைல கூட கயிறு! இல்ல, "கடவுள்" னு வெச்சுக்க" ..சிரித்தான்.

"என் பெயர், கருப்பய்யா; குலோத்துங்கன்கிற பேர விட நல்லாயிருக்கில்ல?
..அட, உன் லொள்ளுல, என் பொழப்புல மண்ணு. இந்நேரம் ஒரு 200 சதுர அடி கண்ணாடி துடைச்சா, நல்லா காசு பொரண்டுருக்கும்; அப்பா, கண்ணு நல்லாயிருப்பா; எனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு," என்று சொல்லி..."ஸ்வயிங்..." எனக் கயிறு பிடித்து, ஆடியபடி,கீழிறங்கி விட்டான்!

மறுநாள்..
ஆபீசுக்குள் நுழைந்த குலோத்துங்கனுக்கு, ரிசப்ஷனிஸ்ட் அவசரமாக, "எல்லா ஸ்டாfபும் பாஸ் ரூமுக்கு போயிருக்காங்க, எதோ அர்ஜண்ட் மீட்டிங்; நீங்க வந்தவுடனேயே உள்ள வரச்சொன்னாரு பாஸ்," என்றாள்!!

"அட, நான் குதிக்கப் போன விஷயம் யாருக்கும் தெரியாதே? எதற்கு பாஸ் கூப்பிடுகிறார்?" மனதுக்குள் கேள்விகளுடன்,பாஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

"வாங்க,குலோத்துங்கன்; ஸோ, வாட் இஸ் யுவர் ப்ளான்?"

என்ன இப்படி திடுதிப்னு கேக்குறாரு? எதைப்பத்தி?

"நான் நேரா விஷயத்துக்கு வரேன்; யூ.எஸ்.ப்ராஜக்ட்க்கு எல்லாரையும் கலந்தாலோசித்து பேசினதுல, 10 பேர் செலெக்ட் செஞ்சாச்சு. ஆனா, அந்த பத்து பேரும், உங்க தலைமைலதான் வேல செய்ய விருப்பப்படறாங்க; என் விருப்பம், க்ளையண்ட்டின் விருப்பம்; அதுவே, கூட வேல பார்க்கிறவங்களின் விருப்பமாகவும் ஆகி, ஏகோபித்த முடிவில், நீங்க 'மேலே' ப்ரமோட் ஆகறேங்க! ஐ,மீன், யூ ஆர் தெ பாஸ் fஆர் யூ.எஸ்.ப்ராஜெக்ட்!! என்ன பாஸ்போர்ட்டெல்லாம் இருக்குதானே? கங்கிராட்ஸ்!" எனக் கை குலுக்கினார்!!

பின்னால், பலத்த கரகோஷம், பாராட்டுக்கள்..! ஹேய்,குலோத்துங்கன். அமெரிக்கன் உன் பெயரச் சொல்லிச் சொல்லியே, மூச்சு விட்டுடுவான்; அதானாலதான் நீ பாஸ்..!" என்றான் மணி. எல்லாரும் சிரித்தார்கள்!

குலோத்துங்கனுக்கோ...

"யேய், உன் பாஸ் 'மேலே ப்ரமோட்' பண்ணார்; நேத்து நீயா, 'மேலே' டிமோட் ஆக இருந்தயே!" என்று அறைக்கு வெளியே கண்ணாடியைத் துடைத்தபடி, கருப்பய்யா கேட்பதுபோலிருந்தது!!

12 comments:

Anonymous said...

I am not able to write in Tamil.It is a good story.Teenagers who are weak minded must read it.For trivial things they seek the end.This is a good eyeopener for them.Written very lightly and humorously.

டிபிஆர்.ஜோசப் said...

நல்ல கரு மரபூர். சந்தேகமேயில்லை.


ஆனால் இன்னும் கொஞ்சம் எடிட் செஞ்சிருக்கலாமோன்னு தோனுது..

ஆல் தி பெஸ்ட்

ரவி said...

அருமை..

Maraboor J Chandrasekaran said...

பின்னூட்டத்துக்கு நன்றி ஜோசப் சார்! எடிட் பண்ணலாம்னு நினச்சேன்; எங்கன்னு தான் தெரியல; ஓட்டம் தடைபட்டதால, அப்படியே விட்டுட்டேன்!

Maraboor J Chandrasekaran said...

பின்னூட்டத்துக்கு நன்றி செந்தழல் ரவி

dondu(#11168674346665545885) said...

எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

உலகில் மூன்றாம் உலக மகா யுத்தம் வந்ததில் எல்லோரும் காலி, ஏஎதோ ஃப்யூஷன் குண்டாம் ஒருவர் உடல் கூட மிஞ்சவில்லை. நம் ஹீரோ மட்டும் மிஞ்சியிருக்கிறான். அவனும் அதே போல ஒருவரும் இல்லாத உலகில் இருக்க பயந்து, 12 மாடியிலிருந்து ஜம்ப் செய்த அதே தருணத்தில் அவன் அறையிலிருந்த டெலிஃபோன் மணி அடிப்பதைக் கேட்கிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Technology Buff, Entrepreneur said...

Good one, Chandra. With my limited knowledge of story writing, I would say, you started of really well - nall korvaiya arambicheenga... but next day promotion matter konjam over-dramatic a irukkudhu. The story could start with dratmatics and end in a serious and beleivable end. I would like it... but romba edhirpaarpoda padikka arambichittu, sappunnu mudinchu pona madhari irukku. In face, I evern thought about an alternate ending. How about Kul starting to view life differently from the next day on, treat life differently and life will treat you differently? How about Kul quitting his job and taking up a social cause and dedicating it to karuppaiya? just my two cents worth.

Maraboor J Chandrasekaran said...

Thanks for your feedback and opinion VVThevan @Madan. Story telling is to the likes of a story writer; agreed the end had twist which does not match your liking. But the end you suggestd is more dramatic! Rather, if the hero has the next day, a turn around of event, will he not curse himself fore the hasty decision he took the night before?
Anyway, you can rewrite the end in your way and read for yourself. Dont worry I will not sue you for copy right or infringement ;)

Maraboor J Chandrasekaran said...

Thanks Chellu, for your feedback and time

Maraboor J Chandrasekaran said...

இந்தக் கதையை புதுக்கோட்டையிலிருந்து இயங்கும் "தமிழ் முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" பல நாடுகளிலிருந்து "கந்தர்வன் நினைவுப் போட்டி" க்கு வந்த 382 கதைகளில், பிரசுரத்திற்கு தேர்வு செய்துள்ளது என்பதை மகிழ்வோடு வலைஞர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மூன்று கதைகள் முறையே பரிசுகள் பெற்றன. புத்தகத்தில் அவை போக பதிக்கப்படவுள்ள 10 கதைகளில் எனதும் ஒன்று என்பது, மேலும் எழுத தூண்டுகோலாய் உள்ளது. நடுவர்கள்: மேலாண்மை பொன்னுச்சாமி, சீருடையான், காமுத்துரை, உதயசங்கர், ஜனநேசன், ச்ரீதர், மணிமாறன். அத்தனை பேருக்கும் நன்றி.

Subramanian said...

வணக்கம்.தங்கள் வலைப்பதிவை இன்று கண்டேன்.நன்றாகப் படித்திருந்தும் ஆங்கிலப் புலமை போதாததால் வேலை கிடைக்காமல் அலையும் இன்றைய இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் அருமையான கதை.அருமையான களம்.தங்கள் ஒப்புதலோடு மற்ற வலைப்பக்கங்களில் பதிவிட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Maraboor J Chandrasekaran said...

நன்றி தின்டுக்கல் சர்தார்! மகிழ்ச்சி. இக்கதை கந்தர்வன் நினைவுப் போட்டியில், 385 கதைகளுள் 10த்தில் ஒன்றாக பிரசுரத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, புத்தகமாய் வெளியிட்டுள்ளனர். மற்ற பதிவுகளையும் படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். எனது இன்னொரு உரலி http://sirichuvai.blogspot.com