படித்ததில் பிடித்தது - பிடித்தது என்றால் படிக்கச் சுவையாக இருந்ததென சொல்லவில்லை. என்னையே, 'பிடித்தது'! இந்த செய்தி, என்னை, என்னுள், ஒரு பொறியைப் பற்றி வைத்தது. நிஜ இந்தியராகிய எவரும் உதாசீனப்படுத்த முடியாத கருத்துக்களை ஹைதராபாத்தில் பேசுகையில் வெளியிட்டார், ஒரு மூத்த குடிமகன்,தலைவர்! பலர் படித்திருக்கலாம், பலருக்கு இதை முன்மொழிந்திருக்கலாம். அந்த தலைவர் கூறிவது போல் மின்னஞ்சல் அடையும் 100 பேரைவிட உரலி, வலைச் செய்தி மூலம் அதிகம் பேருக்கு செய்தி சொல்லுவோம் எனும் ஆசையில் இதை வலையில் பின்னுகிறேன்:-
=====================================================================================
இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?
நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?
எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?
பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.
டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு பெற்ற இடங்களாக மாற்றியுள்ளார்! இப்படி எத்தனையோ சாதனைகளுக்கு பதிலாக நமது தகவல் தொடர்புத் துறையினர், எப்போதும் சோக செய்திகள், தோல்விகள், பேரிழப்புகளை வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்!
நான் ஒரு நாள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் காலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஊரெங்கும் குண்டு மழை, அழுகைகள், போர் சங்குச் சப்தம். ஆனால், அப்பத்திரிகையின் முதல் பக்கத்திலோ, ஒரு யூதர் அங்கே பாலைவனத்தில், ஐந்தே வருடங்களில், சொட்டு நீர்ப்பாசனம் செய்து, பழ மரங்கள் நட்டு, சோலைவனமாக மாற்றிய கதைதான் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது! காலை எழுந்து முதன்முதலாக செய்தித்தாளைப் படிக்கும் யாரையும் அம்மாதிரியான சாதனையைச் செய்யத் தூண்டும் செய்தி அது! மற்ற குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!
ஆனால், இங்கு நாம் மரணம், நோய்கள், நீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என செய்திகளைப் பற்றியே அதிகம் காண்கிறோம்.
ஏன் இத்தனை பின்தங்கிய சிந்தனைகள், தவறான பார்வைகள்?
மற்றொரு கேள்வி. நாம் ஏன் வெளிநாடு, வெளிநாட்டுப்பொருட்கள் மேல் இத்தனை மோகம் கொள்கிறோம்?
நமக்கு வெளிநாட்டு டி.வி, வெளிநாட்டு சட்டை, வெளிநாட்டு தொழில்நுட்பம் வேண்டும் என ஏங்குகிறோம். இறக்குமதிப் பொருட்களில் அப்படி என்ன மோகம்?
சுயநம்பிக்கையும், சுயசார்புமே நமக்கு சுய மரியாதையைத் தரும் எனும் எண்ணத்தை நாம் ஏன் மறந்துவிட்டோம்?
நான் ஹைதராபாத்தில் சொற்பொழிவு ஆற்றியவுடன் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுமியிடம் கேட்டேன்."உன் வாழ்கை குறிக்கோள் என்ன?" என்று. அவள்" முன்னேறிய இந்தியாவில் வாழ வேண்டும்," என்றாள்!
அவளுக்காக, அவளைப்போன்ற வருங்கால சந்ததியருக்காக, 'முன்னேறிய இந்தியாவை' உருவாக்க வேண்டியது நமது முதல் கடமை.
நாம் இதற்காக ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் முற்போக்கு சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன என்று?
இந்தியா 'முன்னேறும்' நாடல்ல; 'முன்னேறிய' நாடு!
சரி, இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் எனக்காக ஒதுக்க முடிந்தால் நல்லது. நான் மீண்டும் உத்வேகத்தோடு, உணர்ச்சியோடு சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். நிஜ இந்தியனாய் இருந்தால்,படித்தால் படியுங்கள்.
நீங்கள்...
- நமது சட்டங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன;
- நமது முனிசிபாலிடி, கார்ப்பரேஷன்காரர்கள் குப்பை அள்ளுவதில்லை;
- நமது தொலைபேசிகள் வேலை செய்வதில்லை என்று;
- ரயில்வே துறை ஒரு கோமாளிக் கூட்டம் என்று;
- உலகிலேயே மோசமான விமான சர்வீஸ் இங்குள்ளது என்று;
- கடிதங்கள் நேரத்தில் போவதில்லை என்று;
- நாட்டை நாய்களுக்கு ரொட்டித்துண்டு போல் கடித்துக் குதற விட்டுவிட்டோம், மிகவும் அதளபாதாளத்தில் உள்ளது...."
இப்படி எத்தனையோ ... சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள்! என்ன செய்தீர்கள்?
சிங்கப்பூருக்கு செல்லுமொரு இந்தியனாக உங்களையே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முகம், உடல், உயிர். சரியா?
நீங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேரும்போது, உலகிலேயே முதல் தர மன்ணில் கால் பதிப்பதை உணர்கிறீகள்!
சிங்கப்பூரில் நீங்கள் தெருக்களில் சிகரெட் முனைகளை எற்¢வதில்லை. கடைகளுக்குள்ளேயே தின்பதில்லை.
பாதாள சாலைகளை நீங்களும் பெருமையான ஒரு சாதனையாக எண்ணுகிறீர்கள்; அங்கே ஆர்சர்ட் சாலையில் (மும்பையில் மாஹிம்- பெட்டார் ரோடு போலவேயுள்ள சாலை) மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பறக்கிறீர்கள். சர்வ சாதாரணமாக கார் பார்க்கிங்கில் அதிக நேரம் செவவிட்டமைக்காக $5 சிங்கப்பூர் டாலரை கப்பம் கட்டுகிறீர்கள் (சுமார் ரூ.60) ஆனால் குறை சொல்வதில்லை! வாயைத்திறக்கிறீர்களா? இல்லை. ஏன்?
துபாயில் ரமலான் நோன்பு காலங்களில் வெளியிடங்களில் தப்பித்தவறி உணவு உண்பதில்லை. ஏன்?
லண்டனில் ஒரு தொலைபேசி நிறுவன ஊழியரிடம், "ஏன்பா, என் STD,ISD பில்லெல்லாம், வேற ஏதாச்சும் இளிச்சவயன் பில்லோட சேர்த்துடு,' எனக் கூறி அவருக்கு பணத்தை லஞ்சமாகத் 'தள்ளுவதில்லை'! ஏன்?
வாஷிங்டன் தெருக்களில் மணிக்கு 55 mph (88 Km/h) காரோட்டிவிட்டு தட்டிக் கேட்கும் போக்குவரத்து போலீஸிடம், "ஏய் நான் யார்னு தெரியுமா. ..... இன்னாரோட மகன், இந்தா இந்த நோட்ட எடுத்துகிட்டு ஓடிப்போ?'' என்று சூளுரைப்பது இல்லை. ஏன்?
ஆஸ்திரேலியாவிலோ, நியூசிலாந்திலோ தின்றுவிட்டு பேப்பரையோ, குடித்துவிட்டு இளநீர் காயையோ அப்படியே நடு ரோட்டில் எற்¢யாமல், குப்பை தொட்டியிலேயே எற்¢கிறீர்கள்! ஏன்?
ஜப்பானிலுள்ள டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை குதப்பிவிட்டு 'புளிச்' எனத் துப்புவதில்லை. ஏன்?
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், பரிட்சை எழுதவோ, போலி சர்டிபிகேட் வாங்கவோ, வேறு ஆளையோ, பிட்டுகளையோ நம்புவதில்லை; பயப்படுகிறீர்கள். ஏன்?
நான் அதே- 'உங்களை'ப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
அங்கெல்லாம் சட்டத்தை மதிக்கும் நீங்கள், இந்த மன்ணை மிதித்ததும் மாறிவிடுகிறீர்கள்! பேப்பரை எறிவீர்கள், சிகரெட்டை போட்டு மிதிப்பீர்கள், அனாசாயமாக துப்புவீர்கள்! மற்ற நாட்டு சட்ட திட்டங்களை இவ்வளவு மதித்து போற்றும் நீங்கள், சொந்த நாட்டில் வேறு மாதிரி நடந்து கொள்வது ஏன்? எப்போது நம் நாட்டு சட்ட திட்டங்களையும் மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?
மும்பையில் மிகவும் பிரபலமாக இருந்த முன்னாள் முனிசிபல் கமிஷனர், திரு.தினாய்கர், ஒரு பேட்டியில், " இந்த ஊரில் பெரிய மனிதர்கள் நாய்களை கூட்டிக்கொண்டு தெருவில் வாக்கிங் போவார்கள். அப்போது நாய் தெருவிலேயே செய்யும் அசிங்கங்களை பாராமல் இருப்பார்கள். அதே பெரிய மனிதர்கள் தான், நிர்வாகத்தைப் பற்றி," என்ன கவர்ன்மெண்ட்? கொஞ்சம்கூட ரோடையெல்லாம் சரியா வெச்சுக்க மாட்டேங்கறாங்க?," என்று குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்! நீங்கள் அந்த அரசாங்கத்தினரிடம் என்ன எற்றிபார்க்கிறீர்கள்? நாய் எப்போதெல்லாம் காலை தூக்குகிறதோ, எப்போதெல்லாம் உட்கார முற்படுகிறதோ, அப்போது அங்கே ஆஜராகி ஒரு சட்டியை அடியில் ஏந்திப்பிடிக்கச் சொல்கிறீகளா?" என்று சூடாக சொன்னாராம்!
அமெரிக்காவிலும், லண்டனிலும் நாய் சொந்தக்காரர்களே, நாயின் அசிங்களை சுத்தம் செய்ய கைகளில் உறை அணிந்து, உடன் ஒரு பையையும் கொண்டு வரவேண்டுமாம்; ஜப்பானிலும் அப்படியே. பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை? தினாய்கரின் கோபம் சரியே!
தேர்தலில் ஓட்டுப் போட்டதோடு நாம் நமது கடமைகளை மறந்துவிடுகிறோம். ஒன்றும் செய்யாமல், சோம்பியிருந்து, இனி எல்லாமே புதிய அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நமது பங்களிப்பு? - பெரிய சைபர்!
நாம் குப்பைகளை எங்கும் எறிவோம்; அர்சாங்கம் உடனே சுத்தம் செய்ய வேண்டும். நாம் ஒரு சிறிய காகிதத்தைக் கூட கீழே குனிந்து, எடுத்து, குப்பை தொட்டியில் போட மாட்டோம்.
ரயில்வே துறை, ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று கோபமாக சொல்லுவோம்;ஆனால் நாம் அதை சுத்தமாக வைத்திருக்க மாட்டோம்.
இந்தியன் ஏர்லைன்ஸ¤ன், ஏர் இந்தியாவும் நல்ல சுத்தமான, சுவைமிக்க உணவும், துடைத்துக்கொள்ள நல்ல நாப்கின்களையும் தரவேண்டுமென எதிர்பார்ப்போம்; ஆனால், சாப்பிட்டவுடன் அந்த தட்டு, பேப்பர் நாபிகின் போன்றவற்றை அப்படியே, ஏர்போர்ட் எனக்கூட பாராமல், எறிய நாம் தயங்கமாட்டோம்! இது அங்கு பணி புரிபவர்களுக்கும் பொருந்தும். "பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம்; நாம் சுத்தமாக இருக்கவேண்டும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,"என அங்கிருப்பவர்களும் எண்ணுவதில்லை.
பெண் குழந்தைகள் காப்பு, வரதட்சிணைக்கொடுமை,பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய வெளியே பேசி விட்டு, வீட்டில் அப்படியே நேர்மாராக நடப்போம்!
அதற்கு நாம் சொல்லும் சாக்குப்போக்கு?சப்பை கட்டுதல்கள்?
நான் ஒருவன் மட்டும் என் மகனுக்காக வரதட்சிணை வாங்காமலிருந்தால் போதாது. வேறென்ன செய்ய வேண்டும்?
யார் இந்த வழக்கங்களை மாற்றுவது?
இந்த வழக்கங்களை கையாள்பவர்கள் யார், யார் மாறவேண்டும் என்றால், எல்லாரும் மாறவேண்டும்!
"என் பக்கத்து வீட்டுக்காரர், என் தெருவிலுள்ளவர்கள், என் அதிகாரிகள், மற்றைய ஊர்களில் உள்ளோர், ஏனைய மதத்தினர், ஜாதியினர், இவையெல்லாம் போக, நமது அரசாங்கம் மாற வேண்டும்," என்று சொல்வோமே தவிர "நான் என்னை, என் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்", என்று யாராவது நினைக்கிறார்களா?
இந்த சீர்திருத்தங்களையும் சமுதாய நலத் திட்டங்களையும் செய்ய நாம் முன்வராமல், வீட்டுக்குள் அடைகாக்கும் பெட்டை போல் ஒளிந்துகொண்டு, தூரத்திலிருக்கும் நாடுகளைப் பார்த்து, அங்கிருந்து நமக்காக, ஒரு மிஸ்டர்.க்ளீன் வந்து, கையிலுள்ள மந்திரக் கோலால், எதேனும் மந்திரங்கள், மாயாஜாலங்கள் செய்து, நமது நாட்டையே மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறிர்கள்!
கோழையாக ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க திராணி இல்லாமல், "இது சரியில்லை, அது சரியில்லை," எனக்கூறி, அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அங்கே அண்டிப்பிழைத்து, அவர்களின் வெளிச்சத்தில் குளிர் காய்ந்து, அவர்கள் புகழ் பாடுகிறீர்கள்! அங்கே நமது நாட்டைப்பற்றிய கவலையோ, பயமோ இன்றி, வாழ்கிறீர்கள்!
நியூயார்க்கில் குண்டு வெடிப்பு, பாதுகாப்பு இல்லையெனத் தெரிந்ததும், இங்கிலாந்துக்கு ஓடி, ஒளிகிறீர்கள்!
இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எனத் தெரிந்ததும், உடனே, துபாய்க்கான அடுத்த விமானத்தைப் பிடிக்கிறீர்கள்!
அங்கேயும் வளைகுடா நாடுகளில் போர் முரசு கேட்டவுடன், உடனே, நமது அரசாங்கம் செலவில்லாமல், நம்மை மீட்டு, நமது மண்ணில் பத்திரமாக சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; இல்லையேல் அரசாங்கத்தை வாயில் வந்தபடியெல்லாம் ஏசி, குறை கூறி குளிர்காய்கிறீர்கள்!
யாரும், இந்த முறைகளை மாற்ற முனைவதில்லை. இந்த அரசு சக்கரத்தில் பிழை சரி செய்து, எண்ணெய் ஊற்றி, ஓடவைக்க முற்படுவதில்லை!
எல்லாரும் நமது மனங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு அடகு வைத்துவிட்டோம்!
ஜான் கென்னடி சொன்னது போல், நாம் இந்த இந்திய நாடு மேம்பட என்ன செய்கிறோம் என்று மனம் கூர்ந்து கேட்டுக்கொள்ளுங்கள். அதை இன்றே செய்ய முற்பட்டு, நமது தேசமும், அமெரிக்காவைப் போல், ஏனைய முற்போக்கு நாடுகள் போல் உருவாக்க முயலுங்கள்.
நம்மிடம் இருந்து இந்தியா என்ன எதிர்பார்க்கிறதோ, அதை இன்றே செய்ய முற்படுங்கள். இந்த செய்தியை நீங்களும் உள்வாங்கி, உங்களைப் போல் சிந்திக்கும் நல்லுள்ளங்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்; வெத்து ஜோக்குகளையும், அல்ப படங்களையும், மின்னஞ்சல் செய்வதை விட இதை அதிகம் பேருக்கு அனுப்ப முயலுங்கள்! நன்றி.
டாக்டர். அப்துல் கலாம்.
ஜனாதிபதி - இந்தியக் குடியரசு
6 comments:
சந்துரு,
மெய்யாலுமே இது அப்துல்கலாம் நாட்டுமக்களுக்குச் சொன்ன செய்தியா?
கொஞ்சம் காரமாகவே சொல்லியிருக்கிறமாதிரி இருக்கே!
ஆமாம்,ஹரிஹரன். ஹைதராபாத்தில் பேசிய பேச்சு. அதையே மின்னஞ்சல் செய்தியாகவும் அனுப்ப இது பலருக்கு மின்னஞ்சலாக வந்துள்ளது. அதன் தமிழாக்கமே இது. ஏன், அப்துல் கலாம் காரமாக பேசக்கூடாதா? நிஜம் கொஞ்சம் அதிகமாகவே காரமாக இருக்கும்!
//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!//
கலாம் கூறியது உண்மை.இது போன்ற பத்திரிக்கை தர்மம் இங்கும் வேண்டும்.
தேவையற்ற விசயங்களுக்கும்,தவறான நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் குழந்தைகளை நாட்ப்பத்திரிக்கை படியுங்கள் என்று சொல்லவே பயமாக இருக்கிறது.
//குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!//
//கலாம் கூறியது உண்மை.இது போன்ற பத்திரிக்கை தர்மம் இங்கும் வேண்டும். தேவையற்ற விசயங்களுக்கும்,தவறான நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதால் குழந்தைகளை நாட்ப்பத்திரிக்கை படியுங்கள் என்று சொல்லவே பயமாக இருக்கிறது. //
லெஷ்மி, நம் எல்லாருக்கும் பத்திரிகை நண்பர்கள் இருக்கிறார்கள். முடிந்தவரை அவர்களிடம், நல்ல செய்திகளை வெளிக்கொணறுமாறும், அதை முதல் பக்கங்களில் வரச் செய்யவும் முயல்வோம். இது எல்லாருக்கும் சென்றடைய வேண்டும். ஆரம்பித்தால் நண்மையிலேயே முடியும் என நம்புவோமாக. ஏன், அந்த குழந்தைகளை விட்டே, பத்திரிகைகளுக்கு கடிதம் எழுதச் சொல்லுங்கள். கட்டாயம் மாற்றம் வரும்.
சூடாக இருந்தது...!!!!
செந்தழல் ரவி, கலாம் சொன்னது- இவை செந்தணல் வரி(கள்) ! சூடாயிருக்குன்னு கீழே போட்டுடாதீங்க. எல்லா வெளிநாட்டில் வேலை செய்யும் நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள். நாமும் முடிந்த வரை கலாம் சொன்னதை கடைபிடிப்போம்!
Post a Comment