03 April 2006

பாதரசக் கண்ணாடி- அ·றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-6

என் பின்னே பாதரச அரிதாரம்
நீ உன்னைப் பார்க்கவே
எனக்குப் பூசியது போகாது
நீ தினம் முகம் மாற்றுகிறாய்
காலை பல் தேய்க்கும்
கோணங்கிச் சேட்டைகள்
பின்னர் முடி மழித்து
அழகணிய ரத்த தானங்கள்
அவசர தலைசீவல்,
சீவி, பின் கலைத்திடுதல்!
கோபம் படர்கையில்
விசிறியடிக்கும் நீர்
மேலடித்ததும், வழிந்துவிடும்.
கோபமில்லை!!
உள்ளே உள்ள கருப்புக்கள்,
முகமறியாஅடித்து மறைக்கும்
வெண்பூச்சு!
தலை நரைத்தும், நிறையாத மதி
மறைக்க தடவப்படும் சாயம்
நாள் முழுதும் சிரிப்பு பூசி
இருளில் கரைந்து,
என் முன் கலையும்
கண்ணீர் பூச்சுகள்
ஒளிவட்டம் முன் அரிதாரம்
அவிழ்த்து அமர்கையில்
என்முன்ஆழமாய் உள்காணும்
உன்முகம்
முகம்கழுவ எடுத்து ஒட்டும்
வட்டப் பொட்டு.
உள்ளுக்குள் பொங்கிடும்
கள்ளமயக்கம் வெளிக்காட்டும்
உற்று நோக்கல்
இத்தனையும் கண்டும், காணாச்
சித்தர்போல், சித்தம் சிதறா, ஒரு
புத்தர் போல் நானிருக்க,
என்முகத்தைப் பார்க்கத்
தேடுகிறேன்ஒரு முகம்-
கண்ணாடிபோல்நிச்சலனமாய்!
எங்கேனும்-பார்த்தால்
சொல்லுங்கள்!!

No comments: