
அக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8
ஆல் விழுது, வண்டி டயர் பற்றிமெல்ல
காலூன்றக் கற்ற காலம் ஆட்டமாடி,
முட்டிதேய ரத்தம் வர காற்றெதிர்த்து
ஆடிய அவ்வாட்டம் மனம் மறக்குமோடீ?
மரப்பலகை நுனிகளிலே வளையம் வைத்து
நெட்டுயரும் சங்கிலிகள் கூரை பார்த்து
திரிசங்கு நான் தொங்கி உந்தனுக்கு
என்றென்றும் உடனிருந்து சாட்சியானேன்
கல்யாணம், பேர்வைத்தல்,காதுகுத்தல்
காதல் மொழி சலசலப்பு ஆட்டமாடல்
சண்டைகளில் எத்துவிழ முதுகுகாட்டி
சச்சரவு, சல்லாபம் அமைதி காத்து
கவிதைக்குக் கருகொடுத்து புரவியேற்றி
காலம் பல கடந்திடவே கருவியாகி
கடிதங்கள் வைத்து மனம் பாரமாகி
படிதங்கள் எத்தனை என் உள்ளினுள்ளே!
பாரம் என்று நான் உன்னை உதறவில்லை
சாரம் போயி சங்கிலிகள் மழுங்கவில்லை
ஆட்டிடினும் கூத்தாடிடினும் ஏற்றியேறி
ஆடும் மனம் சிறகடிக்க கைகொடுத்தேன்
காலங்கள் கடந்து மனை குறுகிப்போயி
கழற்றிவிட்ட பலகைகளாய் கழன்று போயி
துருபிடித்த சங்கிலிகள் விலங்கு பூட்டி
திருமறைந்து அருவங்களாய் ஆகிப்போனோம்
ஆட்டுவித்தால் ஆடும்வரை எங்கள் தேவை
ஆடாவிட்டால் இல்லையொரு கண்ணின் பார்வை
அடங்கிடுமென் சப்தம் இனி எண்ணைய் இல்லை
அண்டிவந்த உனக்குநல் லெண்ணமில்லை
காட்டிடுமே என்வாழ்வு உயர்வு தாழ்வு
பின்போனால் உள்தள்ளும் உலகமுன்னை
முன்போனால் உந்துதல் போல் உதறுமுன்னை
கண்முன்னே சுழலுதற்போல் போக்குகாட்டி
பின்சென்று புரங்கூறும் விந்தையுலகம்!
என்றென்றும் பாரம் மட்டும் சுமக்க பாரு
நன்றென்றும் தீதென்றும் பிரித்திடாது,
ஆடுகையில் மனமுவந்து கோஷம் போடு
அடங்குகையில் அர்த்தம் கண்டு அணையை போடு.
2 comments:
வாழ்வியலின் ஆட்டத்தை சத்தமில்லாமல் ஆட்டுகிறீர் ஊஞ்சலென!நன்று!
ஆட்டிவித்தால் யாரொருவர் ஆடதானே கண்ணா!!
Post a Comment