09 April 2006

வி.வ.போ-2 - ப்ளாஸ்டிக் தேவை!

ப்ளாஸ்டிக் மரங்களைக் காக்கிறது!

"சரி, இவன் வயிற்றில் அடித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. அதனால்தான் சந்திரசேகரன் இதை எழுதுகிறான்," என்ற குரல்கள் கேட்டாலும், ப்ளாஸ்டிக் எனும் புரட்சிப் பொருள் வந்ததினால் எத்தனை சிக்கல்கள் தீர்ந்துள்ளன, எத்தனை நன்மைகள் நமக்கு கிடைத்துவருகிறது என்பதை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.

முதல் எதிர்ப்பு ப்ளாஸ்டிக் பைகளுக்கு. பைகள் பல்லாயிரக்கணக்கான பொருட்களை தூக்கிச்செல்ல உருவானவை. மிக குறைந்த எடை, கிழியாமலிருக்கும் பலம், உள்ளே இருக்கும் பொருள் இன்னதென்று பையை பிறிக்காமலே பார்க்க வாய்ப்பு - இவை தான் ப்ளாஸ்டிக்கை நமக்கு புகுத்தியது. இவ்வனைத்து பயனும் இருந்தாலும், "இது மக்கா பொருள் (காற்று, மண், நீர், நுண்கிருமிகள் எதிலும் கரைந்து போகக்கூடிய பொருள்) . எனவே இது நிலத்தை, நீர்நிலையை, மண்ணை கெடுத்துவிடும்; மாடுகள் பைகளைத் தின்றுவிடுகின்றன; அதனால், மலச்சிக்கல், உடல்கெடுதல் போன்ற பல ப்ரச்னைகள்" என்கிறார்கள்.

ஆனால், இப்போது, 20 மைக்ரானுக்குக் கீழ் உள்ள (1 மைக்ரான் என்பது 1 செண்டிமீட்டரில் 1000த்திலொரு பங்கு!) குறைந்து தடிமம் உள்ள பைகளை தயாரிக்கக்கூடாது என்றும், மறுசுழற்சியில் உபயோகிக்கக் கூடாதென்றும் அரசாங்கம் விதி செய்துள்ளது. மிகவும் அக்கறையுள்ள அரசாங்கம் என் நீங்கள் துள்ளிக்குதித்தால், அதற்குக் காரணம் வேறு. IPCL போன்ற நிறுவனங்கள் பாலிமர் (Poly Ethylene) தயாரித்து வந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் எல்லா பாலிமர் நிறுவனங்களையும் வளைத்துப் போட்டு தனதாக்கிக் கொண்டது. அவர்கள் தயாரித்த பாலிமர் குருணைகளைக் கொண்டு, எத்தனை முயற்சித்தாலும், 20 மைக்ரானுக்கு கீழே மெலிதான தடிமத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை!! என்ன செய்வது? பிடி, அரசாங்க வழி!! அங்கிங்கே அலைந்து டெல்லிவரை போய், அவர்கள் கையாலாகாத தனத்தையே சட்டமாக்கி விட்டார்கள்! அப்படியும் புழக்கத்தில் வரும் பைகளை, வீதிகளில் எறிகிறவர்களை தண்டியுங்கள், ப்ளாஸ்டிக்கை எதுக்கு எதிர்க்கவேண்டும்?

குப்பை பொறுக்கி, அதில் சீவனம் நடத்தும் மாபெரும் கூட்டம் நம் நாட்டில் உள்ளது தெரியுமா? அவர்களைப் போய் கேளுங்கள், "அட, 20 மைக்ரான் என்ன 2 மைக்ரான் இருந்தாக்கூட எங்களுக்கு கண்ல தப்பாது. எத்தன பேப்பர் பொறுக்கினாலும், 10 ப்ளாஸ்டிக் பைங்களல்ல கிடைக்கிற காசு எங்களுக்கு பெரிசு. அதை ஏன் சார் தடை செய்றாங்க?" என்று!! இவர்களுக்கென்ன பதில்?
மாட்டு உரிமையாளர்கள் ஏன் மாட்டை ரோட்டில் விடவேண்டும்? ஊரெல்லாம் மேய்ந்து தின்று, பாலை மட்டும் தான் எடுத்துக் கொ(ல்ல)ள்ளவேண்டும் என எண்ணும் சின்ன புத்திக்காரர்களைக் கண்டிக்காமல், பை தயாரிப்பை ஏன் நிறுத்த வேண்டும்?

துணிகள், உபயோகப் பொருட்கள் வாங்கும் பைகளை பல நிறுவனங்கள் பேப்பரிலும், சணலிலும் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆனால், பேப்பர் தயாரிக்க உதவும் கரும்புச் சக்கையும், சணல் நாணல் செடிகளும் திடீரென எப்படி பன்மடங்கு வளரும், பயிரிடப் பெறும்? supply-demand எனும் தருதல்-தேவை எப்படி ஈடுசெய்யமுடியும்? அல்லது மரச்சக்கைகளையும், காட்டுக் கொடிகளிலும்கூட மூலதனமாய் வைத்து, பேப்பர் செய்யமுடியும் என்று சொல்பவர்கள் மரத்தை அழிக்கக் கூடாது என்னும் எதிர் வாதத்துக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அதே போல், இந்த பைக்குப்பைகள், தாருடன் சேர்த்து உருக்கி போடப்படும் சாலைகள் 15- 20 ஆண்டுகள் னாலும், பழுதடைவதில்லை! என்வே, தமிழக தென்மாவட்டங்களில் பல இடங்களில் பரீட்சார்த்தமாக இவ்வகை சாலைகள் போடப்பட்டுள்ளன.

மக்கும் ப்ளாஸ்டிக்கும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள், கோல்fப் என விளையாடப்படும் 'T' க்கள் விளையாடும் களத்திலேயே விடப்படும்- அந்த டீக்கள், போன்ற சுற்றுப்புற சூழலை கெடுக்கலாம் என்று சந்தேகத்துக்கு உரிய பொருட்கள் செய்ய இந்த மக்கும் ப்ளாஸ்டிக்குகள் உபயோகப் படுகின்றன. சோளம், பருத்தி, விளக்கெண்ணை போன்ற எண்ணை வித்துக்கள் எண்ணையெடுக்கப்பட்டு பின் எறியப் படும் சக்கையிலிருந்து இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உருவாகின்றன. கெடும் பண்டங்களை வைக்கும் ஜாடி, பை போன்றவை செய்யவும் இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உதவுகின்றன. பண்டம் கெட்டால், அதிலுள்ள கிருமிகள், இந்த ப்ளாஸ்டிக்கையும் உண்டுவிடும்! மற்ற மக்கும் ப்ளாஸ்டிக்குகள் சூரிய ஒளியிலுள்ள நீல ஒளி கதிர்களால், மக்கிப் போகும்.

அடுத்தது - மிக சிறிய உதாரணம்- பல் துலக்கும் குச்சியிலிருந்து எல்லா ப்ளாஸ்டிக்கா? என்போர், சற்றே சிந்தியுங்கள். சராசரியாக ஒரு நகரத்தில், ஏறத்தாழ 50 லட்சம் பேர் தினமும் பல் துலக்குகிறார்கள். அதில் ஒரு நூறு பேராவது வேப்பங்குச்சி, ஆல்விழுது போன்றவற்றை உபயோகிப்பார்களா? சந்தேகமே. ப்ளாஸ்டிக் ப்ரஷ் மட்டும் இல்லாவிட்டால், இது எப்படி சாத்தியம்? விதண்டவாததுக்காக, நான் கையாலேயே தேய்ப்பேன் எனச் சிலரும், ஏன் நாமும் கிராமத்தவர் போல், வேப்பங்குச்சி வாங்கலாமே, உபயோகித்து எறிதல் (use and throw) கொள்கைக்கும், சுற்றுப்புர ச்சுழலுக்கும் நல்லதாயிற்றே என்று சொல்பவர்க்கும் ஒரு சிறிய விளக்கம்:சரி, குச்சிவாங்குகிறோம், முதல் நாள் சராசரியாக ஒரு 4 மரத்தை மொட்டையடித்து குச்சியெடுத்து, வெட்டி ஊருக்குள் அனுப்பிவைத்தால் ஒரு நாள் பல் துலக்கல் வைபவம் நடைபெறும். மறுநாள்,,மாதம் முழுதும்? அப்படியே, மரம் மேல் மரம் வெட்டிக்கொண்டே போனால், கொஞ்ச நாளில், வேப்ப மரம் என்பதை, படத்திலும், ஒளிப் பேழையிலும் தான் காணலாம். இது காடுகளை அழிக்கும் காரியமா? மத்த பிற உபயோகங்கள் உள்ள வேப்பமரம், வேறு எங்கு தேடுவது? அடுத்த ஊர்காரன், அவன் ஊருக்குள் பல் துலக்க அங்குள்ள மரங்களைக் காலி செய்துவிட்டதாகக் கேள்வி!!

அதேபோல், நாற்காலிகள். மரத்தால் அறுத்துச் செய்யும் நாற்காலிகள் வீடுகளுக்கு உதவுமே தவிர, பெரிய மாநாடு, கூட்டம், கல்யாண வைபவம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவாது. இரும்பில் வளைத்து வெல்டிங் செய்து தயாரிக்கப் படும் நாற்காலிகள், நகர்கையில் சப்தம் செய்யும், சுற்றி விளையாடும் குழந்தைகளுக்கு பத்தாகவும் இருக்கும். எடுத்துப் போட்டு, ஓரமய் அடுக்கி வைக்கும் வேலைக்கும் மரமோ, இரும்போ, உதவாது. கனமாக இருக்கும். மோல்டிங் செய்யப்பட்ட நாற்காலிகளால் எத்தனை நன்மை? லேசானது, பல நிறங்களில் வரும், பார்க்கவும் ஒரே மாதிரி வரிசைக்கு அழகு சேர்க்கும், இதன் வாழ்க்கை கட்டாயும் ஒரு 20 ஆண்டுகளாவது வரும், பழுதுபார்க்கும் சிரமம் கிடையாது, இப்படி அடுக்கிக் கொண்டேபோகலாம்.

மிக முக்கியமான மற்றொரு உபயோகம், வாகனங்கள். எத்தனைக்கெத்தனை லேசாக உள்ளதோ, அத்தனை எரிபொருள் மிச்சம். எந்த வடிவிலும் ப்ளாஸ்டிக்கையும், நாற்கண்ணாடி வைத்து ரெசின் பூசிய (fibreglass, carbon fibe etc.) ப்ளாஸ்டிக்கினால், எத்தனை குறைவான எண்ணிக்கையில் வேண்டுமானாலும் ஒரு பொருளைச் செய்யலாம். இன்று பறக்கும் விமானம், விரைவு ரயில்கள், புதிய ரக ஊர்திகள் (கார், ஸ்கூட்டர்) இத்தனையும் ப்ளாஸ்டிக் பாகங்கள் நிறைந்தனவே!

சட்டை பட்டம், சீப்பு, கண்ணாடி டப்பா, கைப்பிடி, பை க்ளிப், துணிகள் மாட்டும் ஹாங்கெர்கள், அழகழகான் தலைக்ளிப்புகள், மற்றும் எத்தனை தினசரி உபயோகத்துக்கான பொருட்கள். இத்தனைக்கும் மாற்று? ப்ளாஸ்டிக்குக்கு பதிலாக?

ஏரி, குளங்களில், நிலத்தடி நீர் உரிந்து போகாமலிருக்க, பல மாநிலங்களில், மண்ணுக்கடியில், 2 அடி ஆழத்தில் ப்ளாஸ்டிக் பிfலிம்களை விரித்து வைக்கின்றனர். பதப்படுத்த, உணவு பண்டங்கள் கெடாமலிருக்க, உரைகிடங்குகளில் தானியங்கள் கெடாமலிருக்க, சிமெண்ட போன்ற காற்றால் கெட்டித்துப் போகும் பயனுள்ள பொருட்கள் கெடாமலிருக்க, இப்படி, ப்ளாஸ்டிக்கிற்கு மாற்று இல்லாத உபயோகங்கள் ஆயிரமாயிரம்.

மற்றொரு அபத்தமான ஒரு வாதம்- CFC எனும் நச்சு பொருட்கள் வெளியேருவதால், refrigerator எனும் குளிர்பதனப் பெட்டி உபயோகிக்கக் கூடாது என்று! 2002ல் Montreal Protocol எனப்படும், ஒப்பந்தம், எல்லா வர்த்தக நாடுகளும் போட்டுக்கொண்டுள்ளன. அதன்படி, CFC உருவாகும் தொழில்நுட்பத்தை ஓரங்கட்டிவிட்டு, HCFC, நீரை வைத்து தயாரிக்கப்பட்ட காஸ் உள்ள தொழில்நுட்பத்தையும் நாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் இந்தியா உட்பட, cfc ஐ நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த பாலிமர் தயாரிக்கும் தொழிலில், இந்தியாவுக்குக் கேடு செய்யும் பன்னாட்டு நிறுவங்களை வேண்டுமானாலும் நான் கண்டிக்கலாம். அங்கே, அமெரிக்காவில் காலாவதி ஆகிப்போன பல தொழிற்சாலைகள் கருவிகள், சாதனங்களை அப்படியே, அணு அணுவாகக் கழற்றி இந்தியாவில் நிறுவிய ஐ.சி.ஐ. டூபாண்ட், ஜீ.இ., டொவ், போன்றவர்களே ஓசோன் மண்டலத்தை பொத்தல் போட்டு, இப்போது விட்டது சனியென அவற்றை கடலில் தூக்கி எறியாமல், இங்கே தொழிற்சாலை போடுகிறேன் பேர்வழி என வந்து கடை விரித்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்கள்.
தவறான சிந்தனையில் எந்த விஞ்ஞானத்தொழில் நுட்பத்தையும் உபயோகிப்பவர்களை எதிர்த்து நில்லுங்கள்!!

14 comments:

Sam said...

http://www.grist.org/
advice/ask/2004/08/02/
umbra-bottles/
பிளாஸ்டிக் பற்றி இவர்கள் இப்படிச் சொல்கிறார்களே? பொது மக்கள் எதை நம்புவது.
அன்புடன்
சாம்

புகழேந்தி said...

மிகவும் வித்தியாசமான வாதம். இடுகைக்கு நன்றி.

இன்னொரு சந்தேகம்.
Halon என்னும் வாயு ஓசோனைப் பொத்தல் போட்டு கபளீகரம் செய்வதால் தீ அணைப்புக்கு FM200 உபயோகியுங்கள் என்கிறார்களே அதுவும் இதே போல் தான

குறும்பன் said...

அட மக்கா! மக்காப் பொருள் சாதாரணது இல்லையப்பா. மடத்தனமா உபயோகிச்சா எந்த தொழில்நுட்பமும் டப்பான்னு சொல்லறீங்க. ஒத்துக்கிறேன்.

ஜெய. சந்திரசேகரன் said...

புகழேந்தி,
நன்றி. நீங்கள் சொன்ன செய்தியும் சரிதான்.

ஜெய. சந்திரசேகரன் said...

சாம்,
நீங்க சொன்ன உரலுக்கு போய் இடிச்சேன்,ஸாரி,படிச்சேன்.
இவர்கள் சொல்லும் வாதம் ஏற்பதாயில்லை. சொல்வதெல்லாம், பதப்படாத (uncured active radicals) உடலில் கலந்து மாசுபடுத்தும் என்பது. இவர்கள் கணாக்குப் படி, இந்நேரன், உலகில் ஆண்மைத் தன்மை சுத்தமாக நின்று போயிருக்க வேண்டும்! அதேபோல், இவர்கள் நச்சு எனத் தள்ளுபடி செய்த பாலிகார்பனேட் (polycarbonate) குழந்தைகள் பால் குடிக்கும் பாட்டில்கள் செய்ய, கண் கவசம், அதிரடிப்படையினரின் கண்ணாடி போன்ற கேதயம், மேற்கூறை போன்ற ப்பரந்த பல பொருள்கள் செய்ய உபயோகப்படுகிறது. காரணம்? 120 டிகிரி செல்சியஸ் வரை கொதிக்கும் நீரில் இந்த பொருளைப் போட்டால், அது உருகாது. கிருமிகள் இருந்தால், செத்துவிடும். இவர்கள் கூறுவது போல் கண்ணாடி பாட்டில்களை நாடினால், குழந்தைகள் கைகளில் தருவது பாதுகாப்பா? சொல்லுங்கள்.
இரண்டாவது, நம்ம இலவசமா, உள்ளே சுவாசிக்கிற வண்டிப்புகை, சிகிரெட் புகை விட இந்த பொருட்கள் எத்தனையோ மேல். நம்பகமான கெடுதல்கள் ஏற்பட்டிருந்தால், இந்நேரம் இவர்கள் வேண்டாமென ஒதுக்கியுள்ள ப்ளாஸ்டிக்குகள் உலகெங்கும் தடைசெய்யப்பட்டிருக்கும்; ஆகவில்லையே? ஏன்?

ஜெய. சந்திரசேகரன் said...

குறும்பன்,
ரொம்ப சரி. காயலான் கடைக்குப் போக வேண்டிய தொழில் நுட்பங்களை அணு ஆயுத ஒப்பந்தத்தோடு, இலவச இணைப்பாக, (இதெல்லாம் வெளியே சொல்லப்படாது- கோக் (கு மாகு), மெக் டொனால்டு இதெல்லாம் இப்படி உள்ளே நுழைந்தவைதான்) நம் தலையில் அமெரிக்கா கட்டுவதைதான் நாம் விழித்திருந்து எதிர்க்கவேண்டும்.

Sam said...

http://livingcode.corante.com/
archives/2005/06/06/
plastics_estrogens_and_
fertility.php

தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த ஊரில் ஒன்று உண்மையிலேயே தேவையா என்று
பல முறை பார்த்துச் செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களுடைய சரித்திரம் அப்படி. நீங்கள்
இந்தத் துறையில் இருப்பதால் இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். நுகர்வோர் இதெல்லாம் தெரிந்தவர்களாக
இருக்க முடியவில்லையே. இதோடு இணைத்த சுட்டியில் இதை மறுபடியும் சொல்கிறார்கள்
அல்லது சந்தேகம் எழுப்புகிறார்கள். அரசாங்கம் கடைசி நிமிடம் வரை இதிலெல்லாம் தலையிடுவதில்லை.
அன்புடன்
சாம்

ஜெய. சந்திரசேகரன் said...

சாம்,
தவறாக நினைக்க என்ன இருக்கிறது? கேட்கிறீர்கள்; விடை தெரிந்தால் சொல்கிறேன்; அவ்வளவுதானே? இவர்கள் சொல்வதை பார்த்தால், ப்ளாஸ்டிக் தோன்றி இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இப்போதைக்கு உலகெல்லாம் ஆண்மை குறைந்து இந்நேரம் ஜனத்தொகையும் குறைந்திருக்கவேண்டும்! இல்லையே! தலைகீழாக, ஏறிக்கொண்டேயிருக்கிறதே! பேசாமல்,இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கருத்தடைக்கு வேற மருந்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டாம். ப்ளாஸ்டிக் புழங்கினாலே போதுமே!! ;-)

Sam said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

சுட வைக்கும் உணவு சார்ந்த பொருட்களோடில்லாமல், மற்ற அனைத்து விதங்களிலும் பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.

அன்புடன்
சாம்

ஜெய. சந்திரசேகரன் said...

சாம், தைரியமாக உப்யோகியுங்கள்- உணவுக்குக்கூட உபயோகப்படுத்துமுன்:- 1) மைக்ரோவேவ் ஓவனுள் வைக்க, PP (Polypropylene - food grade) என் பார்த்து வாங்குங்கள். தண்ணீர் குடங்கள் பாட்டில்கள் என்றால், P.E.T அல்லது, Lexan (Polycarbonate -virgin grade) எனக் கேட்டு வாங்குங்கள். பல் துலக்கும் ப்ரஷ் ப்ளாஸ்டிக் தானே, அது உங்க கணக்குப்படி, food grade ஆ இல்லையா ? [:~(

இலவசக்கொத்தனார் said...

/இவர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், கருத்தடைக்கு வேற மருந்தெல்லாம் கண்டுபிடிக்க வேண்டாம். ப்ளாஸ்டிக் புழங்கினாலே போதுமே!! ;-)//

பிளாஸ்டிக்தானே புழங்குது?? ஓ! அது ரப்பரோ!! :D

Sam said...

//பல் துலக்கும் ப்ரஷ் ப்ளாஸ்டிக் தானே, அது உங்க கணக்குப்படி, food grade ஆ இல்லையா//

நான் சுட வைக்கும் உணவுப் பொருட்களில் என்று சொல்லியிருந்தேன்.

தண்ணீர் பாட்டில்களில் நீங்கள் சொன்ன விவரங்கள் போடுகிறார்களா?

அன்புடன்
சாம்

ஜெய. சந்திரசேகரன் said...

கொத்தனார் அண்ணா, நீங்க "எங்கெயோ போய்ட்டீங்க" :-)

ஜெய. சந்திரசேகரன் said...

சாம், மைக்ரோ வேவ் ஓவன் பத்திதான் சொன்னேனே? ப்ரஷ் மேட்டர் சும்மா, நகைச்சுவைக்காக, உங்களுக்கு எது கிடைக்குதோ, வேப்பங்குச்சியோ, ப்ளாஸ்டிக் ப்ரஷோ வெச்சு துலக்குங்க! நான் சொன்ன செய்திகள் பொதுவா எல்லா நல்ல கம்பெனிகளும், பாட்டிலுக்கு வெளியே, டப்பாவுக்கு வெளியே, அச்சோ அல்லது, ஸ்டிக்கர் மூலமாகவோ, அல்லது, அந்த டிசைனோடு, மோல்டிங்கோ செய்திருப்பார்கள். Virgin food grade அல்லது, மூன்று குறியீடுகள் (arrows) சுழல்வதைப் போல் சின்னமும் கூட போட்டிருப்பார்கள். நல்ல முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக உள்ளீர்கள். நல்லது. படிக்கும் எல்லார்க்கும் உங்கள் கேள்விகளின் மூலம் விழிப்புணர்வு வந்தால் சரி.