'சந்திப்பு' எனும் தலைப்பில் தங்கம்மாள் பாரதி, 1946ஆம் ஆண்டு, ஒரு பொன்விழா மலரில் எழுதிய கட்டுரை:-
நான்கு புறமும் மரக் கூட்டம்; நடுவில் ஒரு கற்பாறை;எங்கிருந்தோ காற்று மஞ்சநாரத்தம்பூவின் மணத்தையும் இலுப்பைப் பூவின் மணத்தையும் கலந்து கொணர்ந்து வீசியது. சுற்றிலும் உள்ள பனை மரத்திலுள்ள ஓலைகள் சலசலத்தன. கள் இறக்கும் சாணரும் நுங்கு வெட்டும் பெண்களும் பனைமரத்தடியில் உட்கார்ந்து ரசமாக வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் செப்புக் குடத்தை டேய்க்கும் பிராமணச் சிறுமிகளும் அங்கு நின்றனர். புளியங்காயைப் பறித்துத் தின்ற இடைப்பையங்களும் உலக நினைப்பேயின்றி உல்லாசமாகத் திரிந்தனர். மணல் மேடுகளும் சிற்றாறும், இளவெயிலும், மலைக்கூட்டமும் மரச்செறிவும் மனிதர் மனத்தைப் பரவசப் படுத்தக் கூடியனவா யிருந்தன.
அப்போ எனது தந்தையுடன் `யோகி போன்ற' ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நண்பர் ஏதோ பாடினார். பின்னர் இருவரும் தேசம், தமிழ், சுதந்தரம், யோகம் என்றெல்லாம் பேசினர்.
அவரைச் சுருக்கமாக வர்ணிக்கலாம். கண்ணிலே நல்ல குணம். தமிழார்வத்தினால் பரபரக்கும் மனம். இனியும் தாமதமுண்டோ! என்பதைப் போல், அவ்விருவரும் தழுவிக் கொண்டனர் - ஒரு தந்தையும் மகனும் போல. கற்றோரைக் கற்றாரே காமுறுவது இயல்பல்லவா? அவர்கள் தம் மனம் விட்டு உணர்ச்சி ததும்பப் பேசலாயினர். தங்கள் சொந்த விஷயங்களையா? அன்று. அகில உலகத்திற்கும் ஆக்க வேலை பற்றியே பேசினர்.
இரவு! - நல்ல நிலா; இன்னும் பேசினர்; எவ்வளவு நேரம் கழிந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. தமிழ்த்தாய் அந்தர்யாமியாக நின்று அவ்விருவரையும் ஆசிர்வதித்தாள். தந்தையார், "விட்டு விடுதலைப் பெற்றிடுவாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே - என்று பாடினார். பாட்டு முடிந்ததும் "காற்றைப் போலக் கட்டின்றி வாழ்வோம்," என்று கூறி அந்த நண்பர் தந்தையாரிடம் விடைபெற்றுக் கொண்டு குற்றாலத்தை நோக்கி விறுவிறுப்பாக நடந்தார்.
அதே கட்டுரையின் கீழ்:-
குறிப்பு: மேலே கூறப்பட்டவர்களே, கவி சுப்ரமணிய பாரதியும், கவியோகி சுத்தானந்த பாரதியும்! கடையம் ஆற்றங்கரைக்கு அடுத்த தோப்பில்தான் அவ்விருவரும் முதல் முதலாக சந்தித்து, தமிழ்த் தாயின் சேவைக்கும், நாட்டு சேவைக்கும் உபாயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவ்விரு கவிகளின் லட்சியங்களும் இந்நாளில் நிரைவேறி வருகின்றன.
பொன்விழா மலர்? கவியோகி சுத்தானந்தருக்கு 50ஆம் ஆண்டு முடிந்ததை ஒட்டி வெளியிடப் பட்ட நூல்.
9 comments:
1882-1921 என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதி வாழ்ந்த காலம் என்பது தமிழ் நாடு பாடனூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் பாட புத்தகத்தில் இருக்கிறது. அப்படி இருக்க 1946ல் அவர் எப்படி பேசிக் கொண்டிருக்க முடியும்?? விளக்கம் கிடைக்குமா?
ப்ரசன்னா,
கட்டுரை ஆரம்பத்தைப் பாருங்க, என்ன எழுதியிருக்கேன்? சுத்தானந்தரின் பொன்விழா மலரில் வந்த கட்டுரைன்னு! சுத்தானந்த பார்திக்கு1946ஆம் ஆண்டுதான் பொன் விழா நடந்தது, அதுக்கு பெரியவங்க வாழ்த்துமடல் எழுதுவாங்க. அதுல், சுப்ரமணிய பாரதியாரின் பெண்ணும் எழுதுனாங்க. இது அவங்களோட மலரும் நினைவுதானே தவிர, அந்த ஆண்டே, இந்த சந்திப்பு நடந்திருக்கும்னு எப்படி எடுத்துக்கலாம்? சரி, அத விடுங்க, இதுக்கு பின்னூட்டம் போட்ட முதல் ஆளு நீங்கதான். எங்கே இதுமாதிரியான பெரியவர்களின் செய்திகள் படிக்க நாதியே இல்லாமல் போகுமோன்னு நான் நிஜமாகவே நொந்து போயிருந்தப்ப எனக்கு வந்தது உங்கள் மடல். எதோ ஒரு பாரதி உங்களை இந்தப் பதிவுக்குள் ஈர்த்துருக்காரு.,வாசிக்க வெச்சுருக்காரு. நன்றி. விளக்கம் சரியா, நீங்கதான் சொல்லணும்.
இந்த மாதிரியான நல்ல விஷயங்களை எல்லாம் இணய உலகம் ஆதரிப்பது இல்லை. நீங்க விஷயமே தெரியாமல் பாரதி, பாரதி என்று புலம்புகிறீர்கள்.பாரதி ஒரு இந்து இல்லை என்று நீங்கள் பதிவு எழுதினால் ஆதரவும் கிடைக்கும். பின்னூட்டமும் நிறைய வரும்.இல்லாவிட்டால் பார்ப்பான் பாரதி என்று எதாவது எழுதுங்கள்.
கீதா சாம்பசிவம்,
உங்கள் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறேம்; மன்னிக்கவும். அதிக பின்னூட்டங்கள் வேண்டுமென்றோ, இல்லை எல்லாரது கவனத்தை ஈர்க்கும் தரக்குறைவான தலைப்பை தந்தோ, நான் என்னையும் என் எழுத்துக்களையும் வெளிப்படுத்த, நான் விற்பனையாளன் அல்லம், என் எழுத்தும் விற்பதற்கான பண்டம் அல்ல. மனிதில் உறுதி, வாக்கில் இனிமை, நினைவில் நல்லது - இதை பார்ப்பன பார்தி சொன்னான் என்றா உலகம் ஏற்றுக்கொண்டது? கவிஞன் பாரதி என்றுதானே? அதேபோல் தான் சுத்தானந்தரும். என்றேனும் அவர் கருத்துக்கள் பெருவாரியான் மக்களை ஏர்த்து ஒரு யுகப் புரட்சி நடக்கும் என்பதை நான் திடமாக நம்புகிறேன்.'ஏதாவது எழுதுவதை விட' சும்மா இருப்பதே மேல்.
உங்கள் சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்; எதிலும் நல்லதையே பார்க்கப் பழகுங்கள். இது உபதேசமாகத் தோன்றினால், இந்த அதிகப் ப்ரசங்கியை மன்னியுங்கள். நட்பு சார்ந்த அறிவுரையாக ஏற்பீர்களானால், மகிழ்ச்சி!
"பார்ப்பான்" - என்று என்னை யாரும் இழிப்பதாகப் பேசினால், நான் மகிழ்வேன்!காரணம்? நான் பார்ப்பன்னா இல்லையா என்பதைத் தவிர்த்து, இதன் நிஜ விளக்கம் என்னவென்று பாருங்கள் :-
"இவன் எதையும் தெளிவாகப் பார்ப்பான், எல்லாரையும் ஒன்றாகப் பார்ப்பான், செய்வதை நன்றாக செய்யப் பார்ப்பான்"
அப்படி நடக்காதவரை நான் பார்ப்பானாகப் பார்ப்பது இல்லை!
யப்பூ. நான் இந்தப் பதிவை வந்த அன்னைக்கே படிச்சிட்டேன்ப்பூ. என்ன பின்னூட்டம் போட நாளாகிப்போச்சு. மன்னிச்சிக்கோங்கப்பூ.
சுப்ரமணிய பாரதியாரின் பாடல்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன். ஆனால் சுத்தானந்த பாரதியாரின் பாடல்கள் அவ்வளவாகப் படித்ததில்லை. உங்கள் பதிவில் தான் இரண்டோ ஒன்றோ படித்துப் பின்னூட்டம் இட்டேன். இனி அவர் பாடல்களும் நிறையப் படிக்கிறேன்.
கீதா சாம்பசிவம் அவர்கள் உங்களை அப்படி எழுதச் சொல்லவில்லை. தற்போது தமிழ்மணத்தில் நடக்கும் கூத்துக்களைக் கண்டு அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதை இன்னொரு முறை படித்துப்பாருங்கள். உங்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியும். அவர் உண்மையில் சொல்வது நீங்கள் எழுதியிருப்பது நல்ல விஷயம் என்பதைத்தான்.
அண்ணே, லேட்டா பதிலு போட்டாலும் சரிதான். எப்ப வேணும்னாலும் ஊரு பக்கம் வந்தீங்கன்னா, ஒரு நடை வீட்டுக்கு (சென்னை) வாங்க. செவிக்கு, வயிற்றுக்கு இரண்டுக்கும் உணவு ஈயப்படும். அவர் புத்தகங்கள் நிறைய தரேன்.
அப்புறம் கீதா சாம்பசிவம், நல்லதாகத்தான் எழுதியுள்ளார் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவர் குரலில் ஒரு விரக்தி. வலையில் பலர் தவறாக எழுதுவதால். அதுபற்றி நமக்கென்ன. என்பதற்காகத் தான் நான் அப்படி எழுதினேன். அவரை குறை கூறுவதாக அல்ல. நான் சொல்ல வந்தது என்னவென்றால், நம் மனதுக்கு நிறைவு தருவதை நாம் எழுதுவதை நிறுத்தக் கூடாது என்பதைதான். அவரும் நானும் பல பின்னூட்ட போக்குவரத்தில், நண்பர்களாகிவிட்டோம்!
\\நான்கு புறமும் மரக் கூட்டம்; நடுவில் ஒரு கற்பாறை;எங்கிருந்தோ காற்று மஞ்சநாரத்தம்பூவின் மணத்தையும் இலுப்பைப் பூவின் மணத்தையும் கலந்து கொணர்ந்து வீசியது. சுற்றிலும் உள்ள பனை மரத்திலுள்ள ஓலைகள் சலசலத்தன.\\ !
தங்கம்மா! அவர்களின் காலத்துக்கே நம்மையும் கூட்டிச் சென்றுவிட்டார்!
நன்றி நன்றி உங்களுக்கு :)
மீனா, உள்ளதச் சொன்னேனுங்க! எனக்கெதுக்கு நன்றி?
கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும்ங்கிற மாதிரி, பாரதியின் பெண்ணும், வசன கவிதை போலவே எழுதியிருக்காங்க!
Post a Comment