08 April 2006

கோவில்களும்,சரித்திரங்களும் மறையும் அபாயம்!!





கோயில்களும், அதோடு சரித்திரங்களும் மறையும் அபாயம்!!

தென்னிந்திய சரித்திரம் என்று பாட புத்தகங்களில் இருப்பவை என்ன? "சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டது, திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டது. இல்லை மிஞ்சிப் போனால், ராஜ ராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான்.." இதைத் தவிர என்ன பெரிதாக இருக்கிறது? வெளியிலிருந்து வந்து நம்மை ஆண்ட முகலாய அரசர்களுக்கு சரித்திரம் தரும் முக்கியத்துவம், தென்னிந்திய, தமிழக வரலற்றுக்கு சரித்திர சிரியர்கள் தந்துள்ளனரா?

எங்கோ நடக்கும் அயோத்தி கோவில் ப்ரச்னை, பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் அழியும் இந்து மதக் கோவில்களைப் பற்றி வாய் கிழியக் கூவும் பலருக்கு, நம் கண் முன்னே, ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து மக்கள் நடமாட்டம் போய், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்தும், கண்காணிக்கப் படாமல், அழியும் அவலம் இன்று நடந்தேறி வருகிறது. ஆலயங்களுக்கு சொந்தமான நிலத்தை அனுபவிக்கும் பெரும்பாலான குத்தகைதாரர்கள், பல தலைமுறையாய் கோவிலுக்குத் தரும் பணத்தைத் தராமலும், தட்டிக் கேட்டால் அதற்கு பதில் தராமல், அரசியல் ப்ரமுகர்கள், குண்டர்கள் போன்றோர் துணையுடன், சாமி, சாமி இருவருக்குமே கையை விரிக்கும் கூத்து, இதே தமிழகத்தில் தான் நடக்கிறது!

அறநிலையத்துறையில் அறமிருக்கிறதா என்று திருக்கோவில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர் கூறுகின்றனர்- கொஞ்சம் பைசா புழங்கும் கோவில்களுக்குத் தான் மவுசு; உண்டியல் எண்ணும் நாளில், ஒரு பொது மக்கள் பிரதிநிதி, தர்மகர்த்தா, மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கண்காணிக்கவேண்டும், கணக்கு எழுத வேண்டும். நடப்பது என்ன?

அதிகமான் கோவில்களில், இவர்கள் ஒருதலைபட்சமான குழுவாகச் செயல் படுகின்றனர். முதலிலேயே பேசி வைத்துக் கொண்டு, உண்டியலெண்ணும் இடத்தைச் சுற்றி துண்டு விரித்து விடுவர்! ஒரு நூலை (கயிறு) பணமூட்டையின் குறுக்கே போட்டு, பாகங்கள் பிரிப்பர். அதை அப்படியே துண்டுகளில் தள்ளி விடுவர்; எண்ணுவது கிடையாது! மீதி (குரங்கு அப்பத்தைப் பூனைகளுக்கு பிரித்த கதைதான்!!) கடவுளுக்கு, கணக்குக்கு!! எப்படி இருக்கிறது? இதற்குப் பேசாமல், கோவிலையே விற்று காசு பண்ணிவிடலாம்!! மேலும் சில இடங்களில், நிலத்தை ஆக்ரமிப்பு செய்தவர்கள், பண, அரசியல், அதிகார பலத்துடன், குத்தகைப் பணம் கேட்கப்போனால் அடி உதை குடுத்து அதிகாரிகளை விரட்டி விடுவதுண்டாம்! பாக்கி சிறு சிறு புராதன கோவில்கள், சில இடங்களில் ஆறு கட்டுப் பிரகாரம் இருந்த கோவில்கள் போன்றவை கூட, சிதிலமடைந்து, பாம்புகளும் வவ்வால்களும் வசிக்கும் இடங்களாக மாறிவிட்ட அவலம் கண்ணிருந்தும் குருடர்களாய் நம்மை மாற்றிவிட்டது!

ஒரு சில கோவில்களை இந்த கட்டுரைகள் மூலம் நாம் பார்க்கலாம்! சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டுக்களை படியெடுத்து (அதிலுள்ள எழுத்துக்களை குறியெடுத்து, புத்தக வடிவிலும், ஒளிப் பேழைகளாகவும், நுண்சுருள் படங்களாகவும் பதிந்து வைப்பது) அதோடு, அந்தக் கோவில்களின் பராமரிப்பைக் கவனிக்கிறார்களா? இல்லை. நமது அரசியல் சட்டங்களும், ஒரு விஷயத்தில் பல துறைகள் மூக்கை நுழைப்பதும் சரித்திரத்தோடு, கோவில்களையும் மீட்கும் பணியில் இடைஞ்சலாக இருந்து வருகின்றன!! ஒரு சில கோவில்களில், படியெடுப்பு நடந்து விட்டது. ஆனால் கோயில்?

மீண்டும் பாழ்! படியெடுக்கும் பணி செய்வோர், ஏன் அறநிலையத் துறை, சமூக நலத்துறை, பொதுப் பணித்துறை போன்ற துறையினரையும் கலந்தாலோசித்து, ஏன் பணியில் இறங்கக் கூடாது? ஏன் ஆலயங்களை மீண்டும் உயிர்பிக்கக் கூடாது?

நில ஆக்ரமிக்கும் நோக்கத்துடன், பணம் பண்ணும் நோக்கத்துடன் புதுப் புது ஆலயங்கள் புற்றீசல் போல் எழுகின்றனவே? அதற்குத் தடை விதிக்கவும், அவ்வாறு கோயில் கட்டியே ஆகவேண்டும் எனும் நன்நோக்கத்தோடு முன்வரும் ஆர்வலர்களை அதே ஊரைச் சுற்றியுள்ள புராதனக் கோயிலை புதுப்பிக்க வேண்டும் எனச் சொல்லவும் சட்டங்கள் வருமா?

அவ்வாறு பராமரிப்பு செய்யும் கோவிலில் பொதுமக்களே ஒரு குழு அமைத்து, கோவில் நிர்வாகம், நில வருவாய், உண்டி வருவாய் போன்றவற்றை பேணி, கோவிலும், அதைச் சார்ந்த பணி செய்பவர்களையும் பாதுகாக்கும் ஒரு பொதுஜன அமைப்பு அமைக்கவும் சட்டங்கள் புதுப்பிக்கப்படுமா?

சாதி என்னும் பேயைக் கட்டிக்கொண்டும், பழைய கதை பேசிப் பேசி தர்க்கங்களில் வீழ்வதையும் விட, ஆக்கபூர்வமான் புதிய சிந்தனை எத்தனை பேருக்கு எழுந்துள்ளன? வெளியே நாத்திகம் பேசி, உள்ளே மனைவிமார்களை கோயில்களில் விளக்கு பூஜை செய்யவும், பால்குடம் சுமக்கவும் விடும் தலைவர்கள் பின், அடிவயிறு கிழிய பழஞ்சரித்திரம் பேசி, கொடுமை நடந்துவிட்டதே நடந்துவிட்டதே எனப் பேசி, படிக்காதவர்களையும், பேதைகளையும், அடிமட்டதொண்டர்களையும் தவறான மூளைச் சலவை செய்யும் பொய்யர்களிடமிருந்து நாம் எப்போது வெளியே வரப் போகிறோம்??
கோவில்களை முன்பு அரசர்கள் மக்கள் கூடும் சபையாக மாற்றி, ஆடல், பாடல், கல்வி, நீதி போன்றவை மிளிரச் செய்த காலம் எங்கே? இன்றும், அக்கோயில்களை வழிபாட்டுக்கு உரிய தலமாக மாற்றி, அங்கேதான் ஊரார் திருமணம் மற்றும் எந்த நற்காரியங்களை செய்யவேண்டும், கோவிலுக்கே அதற்குண்டான பணத்தை செலுத்த வேண்டும் எனவும் ஏன் சட்டங்கள் இயற்றக் கூடாது? கல்வெட்டுக்கள், சிலைகள் போன்றவற்றை சிதைக்கும் மக்கள், அல்லது அதை காலச்சுவடுகளிலிருந்து நீக்க முற்படுபவர்க்கு சட்டத்தில் கடுமையான தண்டனையை ஏன் செயல்படுத்தக்கூடாது?


சரித்திர ஆய்வாளர்களுக்கும், சரித்திர ஆசிரியர்களுக்கும் இதில் மாபெரும் பங்கு உள்ளது. ஊருக்குள் உள்ள சரித்திர பிரசித்தி பெற்ற இடங்கள், மக்கள், போன்றவற்றை, மாணாக்கர்களுக்கு சுவைபட சொல்ல வேண்டும். அதுபோல் ஏதேனும் அவர்கள் கண்ணில் பட்டால், அதை அரசின் கவனத்துக்கும், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பார்வைக்கும் உடனே கொண்டுவரச்சொல்லவேண்டும்.

400 ஆண்டுகள் பல நாடுகளூக்குச் சென்று, வெற்றி, வாணிபம், ஆன்மீகம் புகுத்திய சோழர்கள் ஆட்சி, பேரரசு எனக்கூறப்படும் அக்பர் ஆட்சியை விட சாலச் சிறந்தது என்பதையும், கல்வெட்டுக்கள் படிப்பு, அகழ்வராய்ச்சி, போன்றவற்றைச் செய்ய நிஜத்தில் நமது தேசத்தில் மிகக் குறைவானவர்களே உள்ளதைப் பற்றியும் உண்ர்ச்சிபூர்வமாக இளைய சமுதாயத்துக்கும், மாணவர்களுக்கும் சொன்னால்தான், அவர்களுக்கு வரலாறு எத்தனை சுவைமிக்கது, என்பது புரியும். அது எப்படி சிதைந்தது வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள் இங்கே புகைப்படமாகத் தந்துள்ளேன்.


ஆலய உழவாரப் பணிக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு சிலருள், ராமமூர்த்தி எனும் 70 வயது இளைஞர்(!) செய்துவரும் பணி மகத்தானது!
அவர் கோயில்களைத் தேடிபோகிறார், தனது சொந்த பணத்திலும் நல்லார் சிலர் உதவியுடனும் முதலில் ஆலயத்தில் பூஜைகள் ஆரம்பிக்க வழி செய்கிறார்; பின்னர் கோவிலை புதுப்பிக்கிறார். அதனை பேணிகாக்கும் மக்கள் யாராயிருந்தாலும் சரி, அவரை சைவமாக இருக்கச் சொல்லி, மது, புகை பிடித்தலை நிறுத்தச் சொல்லி, கழுத்தில் உத்ராக்ஷம் அணியச் செய்து, பெண்களென்றால், அம்மன் டாலர் அணிவிக்கச்செய்டு, அவர்கள் கையாலேயே கும்பாபிஷேகமும் செய்வித்து இறையுணர்வை மக்களுக்குள் கொண்டுவருகிறார்! பல சேரிகள், பட்டி திட்டிகளில் இவரை புதுப் பாதை காட்டிய சாமிகும்பிடும் பெரியாராகவே, மக்கள் மதிக்கின்றனர்! இன்றும் அவருக்கு தினமும் ஒரு புது சிதிலமடைந்த கோவிலைப்பற்றி தகவல் வரும். இவர் நேரமொதுக்கி, பயணம் செய்து, திட்டமிட்டு, மக்களையும் ஒன்று சேர்த்து, அக்கோயிலை மீண்டும் உய்ர்விக்கிறார்!! இது போன்ற ராமமூர்த்திக்கள் நமக்கு இன்னமும் வேண்டும்!!

33 comments:

Sudhakar Kasturi said...

Very informative post! Great job. You are right in observing the hypocracies of the Theists and Atheists. The individual contribution is much powerful than the systemic functions.. the last para on the work done by that elderly gentleman is worth reading and disseminating among all our friends who want to contribute to preserving the tamil history. Cutting across their religious and non religious beliefs, people should come forward for this.
Pls keep up this good work.
regards
K.Sudhakar

Anonymous said...

இந்தக் கோயில், சேக்கிழார் வழிபட்ட கோயில்தான். கட்டிய கோயில் இல்லை. இது பல்லவருக்கு முந்தைய சோழப்பேரரசால் சுமார் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பக்கத்தில் கோவூர் கோயில் சிவாச்சாரியாரைப் போய் பாருங்கள். ஆதாரம் தருவார். மேலும் பல அதிசயமான தகவல்களும் அவரிடம் கிடைக்கும்.
குன்றத்தூரான்

துளசி கோபால் said...

மரபூராரே,

எப்படிங்க என் மனசுலெ பலகாலமாய் சுத்திக்கிட்டு இருந்ததை அப்படியே எழுதிட்டீங்க?

இங்கே பாருங்க ஒரு 166 வருச சரித்திரம்தான். அதுக்கு இவுங்க கொடுக்கற முக்கியத்துவம் இருக்கே, அப்பப்பா.
ச்சின்ன விஷயத்துக்கெல்லாம், 'இங்கே இருந்துதான் முதல் முதல் நிலத்தை அளந்தாங்க, இந்த ஊரை நிர்மாணிக்க'ன்னு
இதுக்கெல்லாம் கூட அறிவிப்பு, எழுதி வச்சுருக்காங்க.

ஆனா நம்ம ஊர்லே ஆயிரக்கணக்கான வருஷ சரித்திரம் அழிக்கப்பட்டுருச்சு. நம்ம பாழடைஞ்ச கோயில்களிலே இருக்கற
சிலைகள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய் கார்டனிலே அலங்காரப் பொருளா ஆயிருக்கு. ஒரு சமயம் இங்கே
ஒரு கடையிலே நம்மூர்லே சாமிக்கு வாகனம் இருக்கும் பாருங்க குதிரை, காளைன்னு அதுகூட விற்பனைக்கு
இருந்துச்சுங்க. மனசு கேக்காம நாமே வாங்கிக்கலாமுன்னா, அதோட விலையைக் கேட்டதும் மயக்கமே வந்துருச்சு.

அம்பது நூறு ரூபாய்க்கெல்லாம் அதுகளைப் பேத்துக் கொண்டாந்து வித்துடறாங்க. அதுக்கு ஏஜண்ட்கள் வேற.
கண்டெயினர்லே ஏத்தறதுக்கு முன்பு அது நாட்டை விட்டுப் போகலாமான்னு அனுமதி கொடுக்கற அதிகாரிங்களுக்கு
பணம் வெட்டுனாப் போதுமாம். அலக்கா வெளிநாடு போயிருது.

இந்த அநியாயத்தை எங்கே போய்ச் சொல்றது? நம்ம கலாச்சாரம் அழியுதுன்னு ஏன் மக்களுக்குத் தெரியலை?
இதெல்லாம் முக்கிய சரித்திரமில்லையா?

ஆத்தோரம் இருக்கற சாமி சிலை, சிலசமயம் துணிதுவைக்கிற கல்லா ஆயிருது பாருங்க.

அந்த இளைஞர் ராமமூர்த்திக்கு என் வந்தனங்கள்.

Muthu said...

மரபூராரே,

நல்ல பதிவு..முதலில் ஒரு காமெடி..சாமி உண்டியலையே நம்மாளுங்க திருடறப்ப சாமி என்ன பண்ணுது? ப

சீரியஸாக பார்ப்போம்.

கோயில்களை அரசாங்கம் சரியாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் அதை சரியாக செய்யவேண்டும் என்ற உங்கள் வாதமும் ரொம்ப சரி.

பொதுமக்களே ஒரு குழு அமைத்து என்றெல்லாம் சொல்லுவது சரியான தீர்வு அல்ல.வெட்டு குத்து வரும்.ஒரு சாரார் இன்னொரு சாராரை உள்ளேயே வரக்கூடாது என்பார்கள்.இதெல்லாம் தேவையா? அரசே ஏற்றுநடத்துவதில் தவறு இல்லை.

//வெளியே நாத்திகம் பேசி, உள்ளே மனைவிமார்களை கோயில்களில் விளக்கு பூஜை செய்யவும், பால்குடம் சுமக்கவும் விடும் தலைவர்கள் பின், அடிவயிறு கிழிய பழஞ்சரித்திரம் பேசி, கொடுமை நடந்துவிட்டதே நடந்துவிட்டதே எனப் பேசி, படிக்காதவர்களையும், பேதைகளையும், அடிமட்டதொண்டர்களையும் தவறான மூளைச் சலவை செய்யும் பொய்யர்களிடமிருந்து நாம் எப்போது வெளியே வரப் போகிறோம்??//

இதற்கு உங்களுக்கு பலமான பாராட்டுக்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள். இன்னும் இரண்டு வரியும் சேர்த்தீர்கள் என்றால் உங்கள நடுநிலைமை சமுதாயத்திற்கு நிரூபிக்கப்படும்.

சாமி கருவறைக்குள் யார் யார் நுழையலாம் என்றெலலாம் மூர்க்கமாக முடிவெடுக்கும் மூடர்களிடம் இருந்து எப்பொது விடுதலை அடைவோம்?
எந்த மொழி சாமிக்கு புரியும் என்பதை முடிவெடுக்கும் திருட்டு பசங்களிடம் இருந்து நாம் எப்பொது விடுதலை அடைவோம்?

//அக்கோயில்களை வழிபாட்டுக்கு உரிய தலமாக மாற்றி, அங்கேதான் ஊரார் திருமணம் மற்றும் எந்த நற்காரியங்களை செய்யவேண்டும், கோவிலுக்கே அதற்குண்டான பணத்தை செலுத்த வேண்டும் எனவும் ஏன் சட்டங்கள் இயற்றக் கூடாது? //

இது ஓ.கே என்றுதான் நினைக்கிறேன்.ஆனால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா?


//கல்வெட்டுக்கள், சிலைகள் போன்றவற்றை சிதைக்கும் மக்கள், அல்லது அதை காலச்சுவடுகளிலிருந்து நீக்க முற்படுபவர்க்கு சட்டத்தில் கடுமையான தண்டனையை ஏன் செயல்படுத்தக்கூடாது?//

வாஸதவம்தான்.

நமது வரலாறு சரியாக எழுதப்படவில்லை என்பது உண்மைதான்.ராமமூர்த்தி போன்றொரையும் ஊக்கப்படுத்துவது பக்திமான்களின் கடமை.

Geetha Sambasivam said...

நம் மதத்தைப்பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் இவ்வளவு அழகாக நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இன்றைய வலை உலகில் இந்து என்றும் இந்து மதம் என்று சொல்பவரும் தீண்டத்தகாதவர் ஆகி வருவது கண்கூடு. இந்த நிலையில் உங்கள் வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.யாருக்கும் பின்னூட்டம் போடக்கூட முடியவில்லை பாருங்கள்.நான் கோவிலை வெறுக்கிறேன் னெறு நீங்கள் எழுதி இருந்தால் பின்னூட்டம் பிய்த்துக் கொண்டு போகும்.

Maraboor J Chandrasekaran said...

குன்றத்தூரான்,

ஊர்காரரா இருந்துகிட்டு, இவ்வளவு அக்கரை எடுத்து, பதில் போட்டதுக்கு நன்றி. உங்கள்வரலாற்று செய்திகள் குறித்து நன்றி. அந்த செய்தியையும், பின்னுட்டத்திஉல் சேர்த்துவிட்டேன். ஆனால், பல தகவல்கள் சரியாக நீங்கள் தரவில்லை. சேக்கிழார் வழிபட்ட கோவிலைத்தான் நான் அவர் பெயரில் கோவில் என்று சொல்லிவிட்டேனா? தவறு என்றால், திருத்திக்கொள்கிறேன். கோவூர் சிவாச்சாரியார் எந்த கோவிலைப் பற்றி தகவல் தருவார்? நான் வாலீஸ்வரர் கோவில், சேக்கிழார் கோவில், நாகேஸ்வரர் கோவில், கந்தழீஸ்வரர் கோவில் என்று, பல சிவன் கோவில்களை பதிவில் குறிப்பிட்டுள்ளேன். சிவாச்சாரியார் எந்த கோவிலைப் பற்றி பல அதிசய தகவல்கள் தருவார்? விளக்கவும். மேலும், ஊர்காரராகிய நீங்கள், அங்கு ஒரு நல்ல சுமார் 200 பேர் கொண்ட இளைஞரணியை ஏற்பாடு செய்தால், மேலும் சில நல்லுள்ளங்களின் உதவியில், எல்லாக் கோயில்களையும் மீண்டும் பொலிவுறச் செய்யலாமா? நான் ரெடி, நீங்க ரெடியா? கோவுர் பற்றியும் நான் முந்திய பதிவுகளில் எழுதியுள்ளேன் பார்க்கவும். நன்றி.

Maraboor J Chandrasekaran said...

ஸ்ரீமங்கை @ சுதாகர்,
தங்கள் ஆங்கிலமும் அருமை. உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் கூறியது போல், எல்லாரும் ஒன்று கூடி நடக்கவேண்டிய சீர்திருத்தம்,இந்த கோவில்களைப் பாதுகாத்தல்.Kindly visit http://templesrevival.blogspot.com and join our yahoo group through the link given in this blog. Also make your friends, well wishers join this. What we want is massive support, most importantly, volunteers, who are ready to spend theri week ends on our mission - collecting information, inspire local villagers to get into the act, they themselves should be ready to cut bushes, if necessary, and also should have the fire in their bellies to see the day of the shrine! Money comes puring, with some like minded pople like you, but whatwe lack is the man power.

Maraboor J Chandrasekaran said...

துளசி கோபால்,
எப்போதும் போல், இப்போதும் அருமையான பதிலைத் தந்துள்ளீர்கள்.
எல்லார் மனசுலயும் இந்த பாரம் இருக்கு. ஆனா, நடைமுறைல இத எப்படி சரி செய்றது? சொன்ன போறாது, செய்யணும்; அதுக்கு தான் என் குழு முயல்கிறது.
நீங்க சொன்ன ஆத்தோர சாமி துணிதுவைக்க முதுகு காட்டுறாருன்னா அதை நம்ம குழுக்கு தகவல் சொல்ல அந்தூர் இளைஞரணி முன்னுக்கு வரணும்.
போன் சிலைகளை மீட்க சட்ட ஆலோசகர்கள் நம்ம குழுல சேரணும்; போராடி முடிஞ்ச வரை மீட்கணும்.
சாமி வாகனதுக்கு மேலே பூசுற வர்ணம் காலத்தால் அழியாது. அந்த செடி கொடி ரசாயன வேல ச்ய்ற ஆளுங்கள் நான் பார்த்தேன். patent, போன்றா விஷயம்லாம் அவங்களுக்குத் தெரியல. கலை அழிஞ்சு போய்டுமோன்னு பயப்படறாங்க. அதை எழுதி, பதிவிட்டு, patent செஞ்சு தர வல்லுநர்கள் நன் குழுவில் வேண்டும்.
'இளைஞர்' ராமமூர்த்தியின் அனுபவங்களை புத்தகமாகவே போடலாம்! போடுவேன்! அவருக்கு வாழ்த்தோட, உங்க சுத்து பத்து, நண்பர்கள், மேலே சொன்ன வல்லுநர்கள், வரலாற்று ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு எங்கள் லின்க் http://templesrevival.blogspot.com ஐ அனுப்பி, அதிலுள்ள யாஹ¤ குழுமத்தில் சேர்த்து, இம்மாபெரும் பணியில் பங்கு பெறச்செய்தால் கட்டாயம் விடிவு கிடைக்கும், என் மூச்சு முடியுமுன்! அதற்காகவே ஆண்டவனிடம் எதுவும் வேண்டாத நான், ஆயுள் வேண்டுகிறேன்!

Maraboor J Chandrasekaran said...

முத்து @ தமிழினி,

பொதுமக்களில் வெட்டு குத்து வரக் காரணாம்? சாதி(தீ) தானே? அதை தடுக்கமட்டும் அரசும், காவலும் இருந்தால் போது,ம். நான் சொன்ன ராமமூர்த்தி தன் கையாலேயே எத்தனையோ அரிஜனங்களுக்கு ருத்ராக்ஷம் கட்டி, பூசாரி ஆக்கி, கோவில் கும்பாபிஷேகம் செய்ய வைத்து, அவர்கள் அன்புக்குப் பாத்திரமாகி, அச்சத்தை போக்கியுள்ளார். அவர்களே, "இவர் உயர்ந்த மதத்தவர், என் கையால் காபி சாப்பிடுவாரா?' என் ஏன் எண்ண வேண்டும்? மதர் ஊர்காரனின் பேச்சுக்கு பயந்து தானே? வெளியாள் ஒருவன் தைரியமாக உள்ளே வந்து கோவிலையும் கட்டி, மக்களையும் ஒன்று சேர்க்கையில், எப்படிப்பட்ட மனிதனும், விழித்துக்கொள்ள மாட்டானா? அவனுக்கு நன்கு உறக்கம் வரவேண்டுமானால், ஊரோடு ஒத்திவாழவேண்டும்!! இது 100% இப்போது மாறாவிட்டாலும் எங்கள் குழு அதை என்றேனும் மாற்றுவோம். வெட்டு குத்துக்களுக்கு பயந்தால் மாற்றம் வருமா?

எங்கள் குழு போகும் இடத்தில் கடவுளை நம்பும், புலால் உண்ணா, புகை பிடிக்காத, பூசையை நித்தியம் விடாது செய்யும் நல்ல மனிதர்கள் தான் கடவுளுக்கு பூசாரி! இந்த பதிவில் நீங்கள் பார்க்கும் படத்தில் காவி உடை அணிந்து லிங்கத்துக்கு அபிஷேகம் செய்பவர் ராமமூர்த்தி! ஊர் குளாத்தூர். அவருக்கு அருகே இருப்பவர்தான் அவ்வப்போது அந்த லிஙத்துக்கு தன்னாலான பூஜைகளை செய்து வந்துள்ளார். அந்த சிவனின் மேல அவருக்கு இருக்கும் பக்தியே அவருக்கு பூசாரி பதவி தந்தது! ஊர் தலைவர் ஒரு கிறுஸ்துவர்! ஆனாலும் எல்லாராலும் ஒப்புக்கொள்ளபட்து, இப்போது திருப்பணி வேலைகள் ஆரம்பிக்க உள்ளன. ஜாதியாவது, கர்ப்பக்ருஹத்துக்கு உள்ளே வரவிடுவதாவது! எங்கள் சட்டத்தில் அதெல்லாம் இல்லை :-)
ஆனாலும், நீங்கள் சொன்ன இரு வரிகளும் முத்தாய்ப்பாக உள்ளது. பதிவை படிப்பவர்கள் உங்கள் பதிலையும் கட்டாயம் படிப்பார்கள். எங்கே நீங்கள் எங்கள் குழுவில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையா?


கோவிலில்தான் கல்யானம் போன்ற சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அரசு சட்டமாக்கத் தேவையில்லை, ஆனால்,கோவில் மிக அழகாக மீட்கப்பட்டு, கட்டப்பெற்று, குறைவான தொகையில் கல்யாணங்கள் செய்வித்தால், ஊரே இதைத்தானே விரும்பும். யாருக்கு பணத்தை வீணாக்க ஆசை. சட்டம் போட வேண்டும் என்று நான் சொன்னது கொஞ்சம் பேராசையாகப் படலாம்; ஆனால் மக்கள் எல்லாரும் கோவிலிலேதான் செய்யவேண்டும் என்று நான் நப்பாசையாவது படக்கூடாதா? :-)

ராமமூர்த்திகளை ஊக்கப் படுத்துவது பக்திமான்களின் கடமை மட்டுமல்ல நல்லுள்ளம் படைத்த தமிழகத்து வரலாற்றை மீட்கும் ஆசையுள்ள அத்தனை பேரும் செய்யவேண்டிய கடமை.

Maraboor J Chandrasekaran said...

கீதா சாம்பசிவம்,
நான் எந்து பதிவில் சாதி, மதங்களை என்றும் இழுப்பதில்லை என்று சபதமே எடுத்திருக்கிறேன். இந்த பதிவில், எங்கேனும் நான் இந்து என்றோ, இந்துக்களை சார்ந்தோ எழுதியுள்ளேனா? இல்லை. கோவில் என்பது என்ன? ஒரு காலச்சின்னம். அது அழியக் கூடாது என்று தான் நான் வாதிடுகிறேன். உதாரணங்கள் எழுத ஆரம்பித்தால், நீண்டுகொண்டே போனது. அதனால், அதற்கு தனி பதிவாகவே போடுகிறேன்.

Maraboor J Chandrasekaran said...

கீதா சாம்பசிவம்,
சொல்ல மறந்துவிட்டேன்; பிய்த்துக்கொண்டு போகும் பதிவுகள்போட ஆயிரம் நல்ல எழுத்தாளர்கள் உள்ளார்கள், எனக்கு அந்த தகுதி இல்லை. நல்ல பதிவுகளையே தர நான் முயல்கிறேன். ஆயிரம் மக்கள் எங்கள் உழவாரப் பணியில் சேரத் தயார் என்று சொல்லுங்கள், ஆயிரம் முறை அவர்களுக்கு கடிதம் எழுத, நேரில சந்திக்க ரெடி. நான் எந்த சாதியினன் என்று விளிக்கப்படுவதை விட, நல்ல இந்தியானாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

Muthu said...

கலக்கல்..மரபூராரே வாழ்த்துக்கள்...தெளிவான பதில்களுக்கு வாழ்த்துக்கள்

மலைநாடான் said...

நண்பரே!
உங்கள் நட்சத்திர வாரத்தின் முழுப்பதிவுகளையும் வாசிக்கவில்லையென்றாலும், முக்கியமான சில பதிவுகள் பார்த்தேன்.குறிப்பாக, இந்தப் பதிவும், பிளாஷ்டிக் பதிவும், உங்கள் மாறுபட்ட சிந்தனைக்கு நல்ல உதாரணங்கள்.
அழிந்துபோகும் கோவில்களை மீட்டெடுப்பது என்பது வெறுமனே சமயப்பணி மட்டுமல்ல சமுதாயபப்பணியும் கூட, கோவில்களை வெறுமனே சமயசாட்சியங்களாகப் பார்த்ததன் பலனை அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கின்றேன்.
உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
நன்றி!

Anonymous said...

அன்புள்ள சந்திரா,

மிக நல்ல பதிவு. தேவையானதும் கூட.

//சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டுக்களை படியெடுத்து (அதிலுள்ள எழுத்துக்களை குறியெடுத்து, புத்தக வடிவிலும், ஒளிப் பேழைகளாகவும், நுண்சுருள் படங்களாகவும் பதிந்து வைப்பது) அதோடு, அந்தக் கோவில்களின் பராமரிப்பைக் கவனிக்கிறார்களா? இல்லை. //

இதற்கு எங்கள் குழுவின் பதில் கீழ்க்கண்ட கட்டுரையில் இருக்கிறது.

http://www.varalaaru.com/default.asp?articleid=40

மேலும், கோயில்களை நோக்கி என்ற தொடரும் இது போன்ற கருத்துக்களை முன்வைக்கிறது.

நன்றி
கமல்

Anonymous said...

மரபூராரே,

சோழர் காலத்திய கோயில்களில் கஜப்ரஷ்ட (யானையின் பின்புறம் போன்ற) வடிவத்தில் கருவறை அமைந்திருக்கும். தொண்டை நாடு பல்லவர் ஆளுகைக்கு முன் சோழர் வசம் இருந்தபோது கட்டிய கோயில்கள் பல. அதில் சோழநாட்டில் இருப்பது போலவே சென்னையைச் சுற்றி நவக்கிரகத் தலங்களைக் கட்டியுள்ளார்கள்.

திருநாகேச்சுரம் - குன்றத்தூர் ராகுவுக்கானது.

மற்றவை:
ஞாயிறு - கெளப்பாக்கம்
திங்கள் - சோமங்கலம்
செவ்வாய் - பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில்
புதன் - கோவூர்
வியாழன் - போரூர் ராமநாதேஸ்வரர்
வெள்ளி - மாங்காடு வெள்ளீசர்
சனி - பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயில்
கேது - கிருவம்பாக்கம் திருநீலகண்டேசர்
இவை எல்லாமே சுமார் பத்து மைல் சுற்றளவில் இருக்கின்றன.

இங்கே சரியானபடி கல்வெட்டு ஆராய்ச்சி செய்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கும். செய்யத்தான் ஆளில்லை.

பெருவாரி மக்கள் உங்களைப் போல் இந்து என்று சொல்லிக் கொள்ளவே தயங்கும்போது என்ன உழவாரப்பணி செய்து என்ன பயன்!

குன்றத்தூரான்

Maraboor J Chandrasekaran said...

மலைநாடன்,
அழகான பெயர்! அப்பனையும் குறிக்கும், மகனையும் குறிக்கும் பெயர். மதர் பதிவுகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கும் நன்றி. ஒரு செய்தியை எழுதும் முன்னர், அதன் வாத ப்ரதிவாதங்கள் எப்படி வரும் என முன்கூட்டியே, விடை கண்டுபிடித்து, பின்னர்தான் நான் எதையும் எழுதுவது வழக்கம்.
"சமயசாட்சியங்களுடன் பார்த்ததன் பலனை அனுபவபூர்வமாக உணர்ந்து ... "- அந்த அனுபவங்களிப் பற்றி எழுதுங்களேன், மலைநாடன்! எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?

Maraboor J Chandrasekaran said...

கமல்,
சந்திரா.. என என்னை நெருங்கி அறிந்தவர்கள் தான் அழைப்பது வழக்கம். நீங்கள் இத்தனை பணியின் நடுவிலும், "கோவில்" என்றதும், நேரம் ஒதுக்கி என் பதிவை படித்து, பதிலெழுதியதற்கு நன்றி.

மற்ற நண்பர்களுக்கு கமல் அவர்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம்:-

சமீபத்தில் தான் ஜப்பானுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மென் பொருள் கணினி பொறியாளர். கல்வெட்டுக்கள் மேல் காதல் கொண்டவர். இவருடன், கிருபாசங்கர், ராம் மகாதேவன், லாவண்யா, சேஷாத்ரி கோகுல், இன்னும் பிற நண்பர்கள் சேர்ந்து துவக்கியது, "வரலாறு.காம்". அதன் வெற்றி மிக குறுகிய காலத்தது. இவர்களில் எல்லாரும் பெரிய பணிகளில் உள்ளவர்கள், யாரும் அத்தனை எளிதில் நேரம் ஒதுக்கக்கூடியவர்கள் அல்லர்! இக்குழு தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களில் பார்க்காத கோவில்கள் இல்லை எனலாம்! ஒவ்வொரு வார இறுதி நாட்களில் தஞ்சை பேருந்தில் கட்டாயம் இந்த கோஷ்டியை காண முடியும்! அத்தனை சிரத்தை.

மீண்டும், பதிலுக்கு வருவோம்.
கமல், உங்கள் பதிவிலும் ப்ரச்னைகள் அலசப்பட்டுள்ளதே தவிர, உபாயம் சொல்லப்படவில்லை. இதை எப்படி சரி செய்வது? உங்கள் ஆக்கபூர்வமான பதிலை எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். சிந்தித்து, ஒரு விடை, குழுமம், action plan போடலாம்.

Maraboor J Chandrasekaran said...

குன்றத்தூராரே, (இன்னும் பேர் சொல்லவில்லை - அநாமதேயக் கடிதம் தான் வருகிறது; பரவாயில்லை, பதில் சொல்வது என் கடமை).

நீங்களே ஒரு தகவல் களாஞ்சியம்! கோவூர் சிவாச்சாரியார் எதற்கு? சரி, கல்வெட்டுக்கள் இருக்கிறது. படிக்க ஆளில்லையென நீங்கள் எப்படி கூற முடியும்? நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால், அவர்கள் நேரம் விரையமாகாமல் இருக்க, நீங்களே எல்லாக் கோயிலகளுக்கும் அழைத்துச் செல்ல சனி, ஞாயிறுகளில் நேரம் ஒதுக்கி ஒரு கால அட்டவணை போடுங்கள், படி எடுக்கலாம், உலகுக்கு அறிவிக்கலாம். அக்கோயில்களை உழவாரப்பணி செய்து சரிசெய்யலாம். ஆனால் ஒன்று. ஊர்மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். நாங்கள் ஒரு முறை சீர் செய்து போய்விட்டால், மீண்டும் மறுமுறை போய் பார்க்கும் போது, அந்த கோயில் பழைய நிலைக்கே வந்த கதை பல இடங்களில் நடந்துள்ளன. அதை தவிர்க்கத்தான் இந்த வேண்டுகோள். எல்லா ஊர் இளைஞரையும் திரட்டுங்கள், ஒன்று சேருங்கள். இந்த கோயில் அவனுடையது, அவன் பாட்டம், முப்பாட்டன் கும்பிட்டது, என்று கூறி, அவர்களைப் பணியில் ஈடுபடச்செய்யுங்கள். பின்னர் எங்களை அணுகுங்கள். கட்டாயம் வழி பிறக்கும். எனது மின்னஞ்சல் : plasticschandra@gmail.com.
உங்கள் பெயர், தொலைபேசி எண், சந்திக்கும் கோவில்கள், இடங்கள் பற்றிய திட்டம் அத்தனையும் எழுதுங்கள். சேர்ந்து முயல்வோம்.

உங்கள் கடைசி வரிக்கான பதில்:- இந்துஸ்தானத்திலிருந்து, நான் இந்து, இந்து என கூவுவது, முட்டாள்தனமாகப் படவில்லை? அமெரிக்கன், நான் டெக்ஸாஸ்காரன், பிலடெல்பியாக்காரன், இப்படியா சொல்லிகொள்கிறான்? மற்ற நாட்டவரும் அப்படியே. நாம் மட்டும், இந்து, தமிழன், என்று ஏன் வேறுபடுத்தி, கூறு போடவேண்டும்? பால் தாக்கரே சொன்னது போல், இந்துக்களாய் இருப்பவர், இந்துக்களாக இருந்தவர் - இரு பிரிவுதான் இங்கு உள்ளனர்.

இதில் கூட சிறிது மதவாதம் ஒலிப்பதுபோல் படுவதால், அவர் கூற்றில் எனக்கு உடன் பாடிருந்தாலும், இந்தக் காலத்திற்கு ஏற்றதல்ல என்று நான் பறை சாற்றிக்கொண்டு அலைவதில்லை! மதம், இறைவன் எதற்கு? அவை என்ன சஒல்லித் தருகின்றன? மனிதனை மதி என்றுதானே? மிதி என்றா?

எல்லாரையும் ஒருங்கிணைக்கும் நேரத்தில், மீண்டும் ஜாதிச்சண்டைகளைக் கிளர நான் முற்படவில்லை. உழவாரப் பணி செய்யும் பெருவாரியான மக்கள் இந்துவாக இருக்க வேண்டுமா என்ன? நாட்டின் மீதும் நன் கலாசாரத்தின் மீதும் மதிப்பு இருக்கும் யாரும் இந்த பணியில் ஈடுபடலாம்.! அதற்கு பல உதாரணம் எனது அடுத்த பதிவில் போட்டுள்ளேன்,பார்க்கவும்.

ENNAR said...

நல்லதை நன்றாக விளக்கியுள்ளீர்கள்

Maraboor J Chandrasekaran said...

நன்றி,என்னார்.

மலைநாடான் said...

//அந்த அனுபவங்களிப் பற்றி எழுதுங்களேன், மலைநாடன்! எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்குமல்லவா?//

தற்போது நான் தொடராகப் பதிவு செய்து வரும், திருகோணமலை ஒருபார்வை தொடரில் ஒரு பகுதியில், அந்த அனுபவத்தை சிறிது தொட்டிருகின்றேன். விரிவாக அதுபற்றிய ஒரு பதிவு தரலாம் என்ற எண்ணத்தை, உங்கள் பதில் தந்திருக்கிறது. முயற்சிக்கின்றேன். நன்றி!

Maraboor J Chandrasekaran said...
This comment has been removed by a blog administrator.
Maraboor J Chandrasekaran said...

மலைநாடன்,
வாழ்த்துக்கள். உங்கள் பதிவை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். சுட்டியை என் மின்னஞ்சலுக்கு அனுப்பினால், தவறவிடாமல் படிக்க உதவும். (plasticschandra@gmail.com)

Maraboor J Chandrasekaran said...

pls visit http://maraboorjc.blogspot.com/2006/07/2_21.html through (pkblogs.com) to read all blogspots from India.

Anonymous said...

இங்கே பஞ்சைப் பரதேசிகளாய் அடுத்தவேளைக்கு உண்ண உணவில்லாமல் பாட்டாளி வர்க்கம் தவிக்கிறது.

அவர்களுக்காகப் போராட ஆட்கள் இல்லை.

பார்ப்பனர்களின் பேச்சைக்கேட்டு இல்லாத கடவுளுக்கு கட்டிய எட்டடுக்கு கோபுரம் இடிந்து போனது உங்களுக்கு வருத்தமாயிருக்கிறது.

தன் தொழிலை மற்றவர் காசில் பலப்படுத்தும் புத்தி பார்ப்பானுக்குத்தான் உண்டு.

கோயில் கட்டணும், குளத்தை வெட்டணும் என்று அலையும் நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் துயர் துடைக்க ஒரு கர்ச்சீப்பாவது வாங்கிக்கொடுக்கு இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு வக்கில்லை.

உழவர்களுக்கு உழுவதற்கு நிலம் இல்லாதபோது, உழவாரப்பணி செய்ய ஆட்கள் தேடும் இந்துத்துவ பாஸிஸ்ட்டுக்களே, உங்களுக்கு வெட்கமாயில்லை.

Unknown said...

அருமையான பதிவு.

வரலாற்றை மறக்கும் இனம் டைனசாரின் பாதையில் மறைந்துவிடும். புதிதாக கோயில்கள் கட்டுவதை விட இருக்கும் கோயில்களுக்கு உதவி செய்வது நன்று. மக்கள் சிந்திப்பார்களா?

மற்றபடி

திருக்கோயில்களின் மூலம் பிழைக்கும் ஏழைகளின் எண்ணிக்கையும், அதில் வரும் சுற்றுலா வருமானமும் சில அன்பர்களுக்கு தெரியாது . இந்தியாவின் 86% உள்ளூர் சுற்றுலாக்கள் ஆன்மிக சுற்றுலாக்கள்தான். அதுவும் தமிழகம், ஆந்திரா, உ.பி மாநிலங்கள் தான் இதில் முன்னிலையில் உள்ளன. பல திருக்கோயில் தேவஸ்தானங்கள் செய்யும் மக்கள் நலப்பணியும் அதிகம் விளம்பரப்படுத்தப் படுவதில்லை.அன்றாடம் ஏழைகள் பசியாற ஒரு வேளை உணவாவது உன்பது சத்துணவு கூடத்திலும் அடுத்ததாக கோயில்களிலும் தான்

Maraboor J Chandrasekaran said...

நமது பழங்கால சரித்திரம் கோவில்களில் புதையுண்டு போகும் நிலையிலிருந்து நம்மை மீட்பது இந்துக்கள்.
"இல்லாத கடவுளுக்கு" எனும் சொல்லுக்கு ஏற்கனவே நிறைய பேர் மறுத்து நற்வாதம் செய்துள்ளார்கள்.
அதேபோல் "பார்ப்பனர்கள்" இங்கே என்ன செய்தார்கள்? கழகத்தை உறுவாக்கி அண்ணா தனியாக தேர்தலில் நிற்க ராஜாஜி எனும் அந்தணர்தான் முதன் முதலில் கூட்டணி முறையைக் கொண்டு வந்தார். உ.வே.சாமிநாத அய்யர் இல்லையெனில் இன்று பல அறிய தமிழ் நூல்கள் நமக்கு கிடைக்காமல் போயிருக்கும். ஒரு சுப்ரமணிய பாரதி இல்லையெனில் "தலை நிமிர் தமிழா" வும், "கரும்புத் தோட்டத்திலே" வாடும் பாட்டாளியின் நிலையும் நமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவர்கள் சாதியப் போர்வையை உதறி, மனிதனாய், சக மனிதனையே நேசிக்கவும், அவனும் பிறரை மதிக்கவும் வைக்க சுயாராஜ்யமும், கழகமும் உருவாக்கினர். எனவே, பிராமண துவேசத்தை வளர்க்காதீர். மனிதனுக்குள் மனிதனை அறியவைக்கும் பணி இறைப்பணி. எத்தனை கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? அதில் விளைவதை அந்த பாட்டாளிக்கும் தராமல், கோவிலுக்கும் தராமல், "தண்ணி" யும், பிரியாணியும் தரும் லோக்கல் தலைவனுக்கு ஓட்டுப் போட்டு ஏமாறும் வழியை விடக்காணோம். இல்லாத சாதியப் பேயை ஓட்டி அதில் இந்த நற்பணியை களங்கப் பணியையும் கொச்சையாக்க தயவு செய்து முயலவேண்டாம். பாட்டாளிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்/ நான் கூறும் நலவர் கூட்டம், பல கிராமங்களில், ஓராசிரியர் பள்ளிகள் ஏற்படுத்தி, நடத்தி வருகிறது. கோவிலை நன்கு பராமரித்து, அந்த வளாகத்திலேயா, சுய வேலை வாய்ப்பு கூடம், பள்ளி என நல்வழிப்படுத்தும் பணிகள் தங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. தண்டோரா போட்டு தற்பெருமை பேச எங்களுக்கு நேரமில்லை. பிற சாதிப் பேசி, சண்டை போடவும் எங்களுக்கு நேறமில்லை. மக்கள் பணி, மகேசன் பணி அதிகமுள்ளது. எனக்கு வேண்டுமென்றால், இந்த பின்னூட்டத்தை மட்டுறுத்தல் மூலம் உதாசீனம் செய்திருக்கலாம், மறுத்திருக்கலாம். ஆனால், இம்மாதிரியான பாராபட்ச கேள்விகளுக்கும் பதில் கூற முற்படும் என் மனது, இதை அனுமதித்தது. உங்கள் ஊரிலுள்ள ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ள, கோவில், கோவில் நிலம், பாழான கோவில் நிலம் பற்றியும், அங்கே எம்மாதிரியான் சுயவேலை வாய்ப்பு ஆரம்பிக்கலாம் என்பது பற்றியும், படிப்பு எட்டியே பார்க்காத குழந்தைகள் எத்தனை என்பது பற்றியும் எங்களுக்கு தெரிவித்தால், ஆவன செய்ய முயலுகிறோம். துவேஷம் வளர்க்கும் கடிதங்கள் எழுத செலவு செய்யும் நேரத்தை விட, இம்மாதிரியான நற்காரியங்களை செய்ய முயலுங்கள். மனிதம் வளரும்!

Maraboor J Chandrasekaran said...

அடுத்த பின்னூட்டத்தை எழுதி மேலும் பல புதிய தகவல்கள் மூலம், "பாட்டாளி மகனுக்கு" மேலும் சில பதிலாக தந்த திரு. செல்வத்துக்கு நன்றி.

Anonymous said...

நீங்கள் நல்ல காரியங்களைச் செய்வது மகிழ்ச்சியே. ஆனால், அதை ஏன் கோயில்கள்மூலம் செய்யவேண்டும் என்கிறீர்கள்?

ஏனென்றால் நீங்கள் ஒரு இந்துத்துவவாதி.

கோயில்கள்மூலம் பிழைப்பை நடத்தும் அத்தனைபேரும் பார்ப்பனர்கள்தான்.

பாரதியானும், உவ்வே சாமிநாத ஐயனும், பார்ப்பனர்களுக்கு உதவியாகத்தான் வேலை செய்தார்கள். வேண்டுமென்றால் அசுரன் ஐயா அவர்களின் புரட்சி கருத்துக்களைப் படியுங்கள். தமிழ்குலத்தின் விடிவெள்ளி ராம.கி ஐயாவின் கட்டுரைகளைப் படியுங்கள்.

சுயமரியாதைச் சுடர் ஏற்றிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னதுபோல இருக்கிற கோயிலையெல்லாம் இடித்துவிட்டு அங்கே மருத்துவமனைகளும், விஞ்ஞானக்கூடங்களும், பள்ளிகளும் கட்டவேண்டும்.

முதலில் கோயில் வரும். அப்புறம் கோயிலில் திருவிழா வரும். திருழா என்றால் என்ன?

சிவனும் பார்வதியும் கல்யாணம் செய்கிறார்களாம். இங்கே எத்தனையோ கன்னிப்பெண்கள் திரும்ணம் ஆகாமல் தவிக்கும்போது கடவுளுக்கு விழாக்களும், அர்ச்சனைகளும், ஆராதனைகலும் தேவையா?

கோயில் நகைகளையெல்லாம் விற்று ஏழைப்பெண்களின் திருமணத்தை நடத்தவேண்டும்.

அர்ச்சனை என்றால் என்ன செய்வீர்கள்? சுயமரியாதையை இகழ்ந்து பாடுவீர்கள். கோவி. கண்ணன் சமீபத்தில் எழுதிய "தேவாரத்தையும், திருவாசகத்தையும் கொளுத்துவோம்" என்கிற கட்டுரைக்கு பதிலளிக்க இந்துத்துவவாதிகளால் முடியுமா?

எங்கள் தந்தை பெரியாரின் போதனையின்படி, மாவோ காட்டிய வழியில் நடக்க நீங்கள் தயாரா?

உங்களுக்கு நேர்மை இருந்தால் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டு பதில் சொல்லுங்கள்.

Maraboor J Chandrasekaran said...

பாட்டாளி மகன் ?! பகுத்தறிவு வர, தானாக கண்ட அனுபவங்களே போதும்.யாரையும் எதற்காகவும் பின்பற்றவோ, நம்பிக்கை இல்லாமலோ புகுத்த இயலாது. வற்புறுத்த இயலாது. இதுவே எனது கடைசி பதில். முதலில் தவறில்லாமல் தமிழ் எழுத பழகுங்கள். பின்னர் பகுத்தறிவு பற்றி யோசிக்கலாம். காலி குடங்களில் நான் நீர் நிறப்ப முயன்றது தவறுதான். மன்னிக்கவும். எனது சிந்தனை நீர் பாசனத்துக்கும், நாட்டின் வளத்துக்கும் தேவை. விழலுக்கு இரைத்ததற்கு வருந்துகிறேன்.

Siva Sutty - m of n said...

சந்துரு, அருமையானக் கட்டுரை. உங்களின் களப்பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

Maraboor J Chandrasekaran said...

வாங்க கால்கரி சிவா. ரொம்ப நாளாச்சு. நன்றி!

Unknown said...

அய்யா வணக்கம்... கட்டாயம் உணர வேண்டிய விஷயம் - நம் வரலாற்றை காக்க. அடியேனும் இதுபோல் சீதலமடைந்த கோவில்களை தற்சமயம் காணுகிறேன். தங்களிடம் ராமமூர்த்தி அய்யாவை தொடர்பு கொள்ளும் செய்தி இருந்தால் பகிரவும். நன்றி....