09 April 2006

அமைதி வேண்டும் நாடோடிகளே!

திரைகடலோடியும் திரவியம் தேடு - என்று சொன்னோர் முன்னோர்! அதைதான் தமிழ் தெரிந்த நம் கோடானுகோடி நண்பர்கள் இன்று செய்துவருகிறார்கள். வெவ்வேறு சூழ்நிலைகள், குடுமபங்கள், நிர்பந்தங்கள், வசதி முறை என்று வளர்ந்தாலும், எங்கெங்கோ, எத்துறையோ, வேலை செய்து வந்தாலும், "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா,' எனும் நிலைப்பாட்டே கொண்டுள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த நட்சத்திர வாரக் கடைசி நாட்கள் நான் சென்னையிலிருந்து மகாராஷ்ட்டிரத்திலிருக்கும் பூனே நகரத்துக்கு வரவேண்டி இருந்து. 2 நாட்களும் மென்பொருள் கணினி பொறியாளர்களுக்கான தேர்வை, எனது அமெரிக்க நிறுவனம், என்னை விட்டு எடுக்கச்சொல்லி, நியமனமும் செய்யச் சொன்னது. எங்கள் உழவாரப் பணிக்குழு மேற்கொண்டுள்ள ஒரு கோவிலை நிலத்தடியிலிருந்து வெளியே எடுக்கும் பணி பற்றிய செய்திகளை மொபைல் தொலைபேசி மூலம் கேட்டற்ந்து கொள்ளும் வேலை ஒரு புறம், தமிழ்மணத்துக்கான பதிவுகளை, சிந்தித்து (?) இரவு முழுதும் எழுதுவது ஒரு புறம், புதியவர்களை பகல் பூராவும் நேர்முகம் காணல் ஒரு புறம் என பரபரப்பாக எந்து வாரம் முடிவுக்கு வருகிறது.

ஆமாம், நிறுத்து! என்னவோ தலைப்பிட்டாய் என உள்ளே படித்தால், என்ன சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் எடுத்து விடுகிறாய்? எனாதீர்கள்! முதலில் சொன்ன செய்திக்கும், நான் பூனாவில் அநுபவித்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு முகப் படுத்தப் பார்க்கிறேன்.

காலையில், சில பதிவுகளை Browsing centre க்கு (சரியான தமிழ் வார்த்தை உடனடியாக மனதில் தோன்றவில்லை, மன்னிக்கவும்) போய் அவசர பதிவு செய்துவிட்டு, நேரே, தாடி மழிக்க முடி சீர் திருத்தகத்துள் நுழைந்தேன். உடன் வந்த மற்றொரு அலுவலக நண்பரிடம், "பார், வெங்கடேஷ் சலூன்" என எழுதியிருக்கிறது. கட்டாயம் ஆந்திராவிலிருந்து வந்தவர் தான் இந்தக்கடையின் முதலாளியாக இருக்க வேண்டும்.", என்றேன். அவரும் "எப்படி, பார்க்கலாம், உள்ளே பேச்சு குடுத்து, கண்டுபிடிப்போம்," என்றார்.

மழித்தல் ஆரம்பமாயிற்று. எரிச்சல் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு மினி இந்தியாவே வேலை செய்து கொண்டிருந்த்து. 5 நாற்காலிகள். முதல் நாற்காலியில் மராத்திய சிறுவனுக்கு, மராத்தி ஒருவரே சவரம் செய்து கொண்டிருந்தார். அடுத்தது, ஒரு காஷ்மீரி பெரியவருக்கு, ஒரு ராஜஸ்தானியும், அடுத்து ஒரு மராத்தி, அந்தப் பெரியவரின் பேரனுக்கும் சவரம் செய்துகொண்டிருந்தனர். சேட்டை செய்யும் பேரனை கடைக்கண்ணால், பார்த்துக்கொண்டே காஷ்மிரியில் அவனை சரியாக உட்காரச்சொல்லி எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார். அடுத்து நான். பார்த்தால், கிராமங்களைச் சேர்ந்த மராட்டியர் போன்ற நெடு நெடு தோற்றம், தாட்டியான முகவெட்டு கொண்டவர், முகச்சவரம் செய்துகொண்டிருந்தார். அடுத்து அந்த கடை முதலாளி போலும், அதிசயமாக, மிக சுத்தமாக, சfபாரி அணிந்திருந்தார். அவர் வேலை 'முடி'ந்த ஒரு வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டார். பின்னர், உள்ளே சென்று, விளக்குமாறு எடுத்து தரை முழுதும் கூட்டி, முடிகளை ஓரம் கட்டி, சுத்தப்படுத்தினார். அவரது செய்கை எனக்குப் பிடித்தது. முதலாளி. நினைத்தால், அவர் ஆட்கள் யாரையாவது தரையை கூட்டச்சொல்லியிருக்கலாம்! ஆனால், அவர்கள் வேலையாக இருந்ததால், அவரே செய்தார். அதற்குள், எனது முகத்தில் கத்திவைத்த பணியாளர், முதலில் மராட்டியில், "சே, என்ன மழிக்க வரவே மாட்டேன் என்கிறது?" பின்னர் ராஜஸ்தானியிடம், ஹிந்தியில் அதே குறையையும், கூறினார். " நான் என்ன செய்வது? நான் என்ன செடி கொடியா வளர்த்து வெட்டசொல்கிறேன்?" என மனதுள் எண்ணிக்கொண்டேன். நானாக வீட்டில் செய்வதாலோ, என்னமோ, எனது முடிகணுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது போலும். இதற்கும் தினசரி சவரம் செய்துகொள்பவன் நான்.
முதலாளி, மீண்டும் பக்கத்து நாற்காலி அருகே வந்ததும், தூய தமிழில், "ஒக்...., என் கீழ ஒக்கார்ந்துருக்கானே, ஒரு தா...., எந்த ஊர்காரன்னே தெரில, எதோ காட்டிலேர்ந்து வந்துருப்பான் போல்! ஷேவே பண்ண முடில," என்றான் கடுப்பாக!
தொன்று தொட்டு, சங்க காலத்திலிருந்தே, எந்த ஒரு வார்த்தையைச் சொன்னால், அது மிகவும் அவமானமாக கருதப்பட்டதோ, எந்த வார்த்தை காலம் காலமாக பல பெயர்கள் பெற்று, காலத்தில் அழியா கெட்ட வார்த்தையாக இருக்கிறதோ, அதை முகத்தில், கத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருவன் மிகவும் அருகே, மனதுக்குள் குண்டைப்புதைப்பதைச் சொன்னால், யாருக்கு சினம் வராது? பொங்கியெழ வேண்டாமா?
இருந்தாலும், "சினம் காக்க, சினம் காக்க," என மனத்துள் சொல்லிக்கொண்டு, "உங் ஊர் தா...தான்!" ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம். கத்தி நின்றது. அவன் இதனை எதிர்பார்க்கவில்லை போலும்!! மழித்தல் அதிசயமாக கத்திகொண்டு, ஆனால் ரத்தமின்றி சுமுகமாக முடிந்தது. அருகில் இதை கவனித்த முதலாளியும், எனக்கு மழித்தவரும், தமிழர்கள்!!! தந்தை, மகன்!
தந்தை எதோ கூற முற்பட்டார்.
"முன்ன ஒரு பத்து நாள் முன்ன என் கிட்ட பண்ணிகிட்டீங்களோ?"
"இல்ல, ரெண்டு நாளா தான் நான் பூனாலயே இருக்கேன்."
"இல்ல சார், எனக்கு நினைவு இருக்கே, இதே முகம், இதே ப்ராப்ளம்...."
"..இதே திட்டும் திட்டினீங்க போல? ஒருவேளை நீங்க்ச் தீர்க்கதரிசியோ, எனக்கு தெரியாத தம்பியோ? எங்க அம்மாவைத்தான் கேக்கணும்; எங்க குடும்ப விஷயமெல்லாம் நல்ல தம்பி பேசுனாரு," என்றேன் நக்கலாக, குரலின் ஒலியை உயர்த்தாமல்.
"தம்பி சொன்னத சார், மறக்கல போல...! " பேச்சை மாற்ற விரும்பி, "சார், செல்fப் ஷேவிங் செய்வீங்க போல?"
"ஆமாம்."
"அதான் சார், முடி இப்படி ஆச்சு. அதுவும் இந்த மூணு ப்ளேடு போட்டு புதுசு புதுசா வருதுல்ல, அது தாறுமாறா வெட்டும். க்ராஸ் ஷேவிங் செஞ்சாலும் இதே கதிதான். சாதாரண முழுப் ப்ளேடு இருக்கே, அத வெச்சு, ஒரு பத்து நால் ஒரே திசைல செய்ங்க, அப்புறம் சோப்பு போடறத தவிருங்க, தண்ணிதான். இப்படி பண்ணீங்கன்னா, சரி ஆயிடும். ஒண்ணு பண்ணுங்க சார். பேசாம இங்க வாங்க, ஒரே வாரத்துல நான் சரி செய்றேன்," என்றார்.

நான் அமைதியாக," என் முக சரியாக இல்லாததற்கும், முடி சரியாக இல்லாததும் என் தவறும் இல்லை, என் தாயின் தவறும் இல்லை. நாம், நாடோடிகள், வெறும் நாடோடிகள் கிடையாது; கலாச்சார நாடோடிகள். எங்கோ பிறந்து, எங்கோ, எண்சாண் வயிற்றை நிரப்ப ஓடிவந்து, இப்படி ஆண்டவன் அருளால், நிலைத்து நிற்கிறோம். அங்கே அவரவர் பாஷையையே பேசி, வந்த ஊரின் ஒரு அங்கமாகவே உங்கள் குடும்பம் மாறிவிட்டது அறிந்து மகிழ்ச்சி. கடையும் போட்டீர்கள்; மகனும் உதவியாக உள்ளார்; ஆனால், பணத்தை சொல்லிக் கொடுத்த நீங்கள் பண்பை சொல்லிக் கொடுக்கவில்லையே? மிக சில நொடிகள், மழிக்கும் வரை. முடிந்தால் செய்யப் போகிறீர்கள்; முடியவில்லையென்றால், "முடியல" என்று சொல்லப் போகிறீர்கள். அதற்கு எதற்கு கடுஞ்சொல்லை உபயோகப்படுத்த வேண்டும்? காரணமில்லாமல்? உங்களுக்கு இருக்கும் பதைப்பு, உங்கள் மகனுக்கு இல்லையே? நீங்கள் கூறும் சமாதானங்களை விட, அவர் ஒரு வார்த்தை, "மன்னியுங்க, தெரியாம சொல்லிட்டேன்," என்று சொன்னால், எனக்கு மனம் சற்று ஆறியிருக்கும். அவருக்கோ, நினைவேயில்லாமலிருப்பது போல் நிற்கிறார். நான் சொன்னது போல், நாம் நாடோடிகள், நமது செயல்கள், வார்த்தைகளிலிருந்து தான், எவரும், "ஓ, இவன் இந்த ப்ரதேசத்தைச் சேர்ந்தவன். இப்படி பேசுகிறான், இப்படி நடந்து கொள்கிறான்," என்று கவனித்து, அவனது இனத்தவரும், நாட்டினரும், அவனைப் போலவே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மலையாளிகள் மிகவும் ஒற்றுமையானவர்கள், பஞ்சாபிகள் உழைப்பாளிகள், தமிழர்கள் என்றாலே, "தமிழ் நாட்டை தாண்டி வர மாட்டான், வந்தால், இந்தி பேசத்தெரியாது, சாவல் (அரிசி) சாப்பிடாமல் அவனால் இருக்க முடியாது; இரண்டு தமிழன் பார்த்துக் கொண்டால், ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்வார்கள், " என்றெல்லாம் கேலி பேசும் நிலைக்கு உள்ளதை நம் நன்னடத்தைதான் மாற்றும்.உங்களுக்கும் அதில் பங்குள்ளது. வருகிறேன் என்று சொல்லி நகர்ந்தேன்.

தந்தையோ மீண்டும், "உங்கள மாதிரி நல்லது சொல்றதுக்கு எந்த நாய்க்கும் தோணல சார். அப்பப்ப வந்து போங்க," என்றார்.

நான் மெதுவாக, "என்னங்க, பார்த்து, 'இந்த நாய்க்கு'ன்னு பையன திட்றீங்களா தெரியல. நீங்க சொன்னதப் பார்த்தா உங்கள நீங்களே திட்டிக்கிற மாதிரி எனக்கு தோணுது. எதுக்கு அப்படி இருக்கணும்? நல்ல அப்பாவா இருங்களேன்; சரி. என் கழுத்தில் கை வைத்தும் வெட்டாமல் விட்டதுக்கு நன்றி," என்றேன்.(அவர் - அந்த அப்பா என்ன சொன்னார் என்பதை மீண்டும் படித்துப் பாருங்கள்!)
அவரும் தூய தமிழில், "நன்றி" என்றார்...வழக்கமாக தேங்க்ஸ்.. என்பார்கள் - இரண்டு தமிழருள் வேற்று மொழி எதற்கு?

2 comments:

பொன்ஸ்~~Poorna said...

நல்ல, ஒழுக்கமான விஷயங்களைத் தான் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது பல பெற்றோருக்குத் தெரிவதில்லை. அந்த தந்தையார் கடைசியாக சொன்னது கூட சரியில்லையே... அவர் பிள்ளையை எங்கிருந்து திருத்தப் போகிறார்... ?!!!

Maraboor J Chandrasekaran said...

பொன்ஸ்.,
அப்பனைப் போல பிள்ளை! நல்ல வேளை, "நீ என்னடா நாயே எனக்கு அட்வைஸ் பண்றது'ன்னு சொல்லாம விட்டார்! கைல வேற கத்தியிருந்துச்சா..ஹ¤ம்.