12 April 2006

கோவில்களை யார் சீரமைப்பது?

கீதா சாம்பசிவம் கேட்ட ஒரு கேள்வி என்னை இந்த பதிவு எழுத வைத்து விட்டது! இந்து என்ற போர்வையை போர்த்திக்கொண்டுதான் நான் கோவில் பணி செய்யவேண்டுமா? ஒரு நாட்டுப் பற்று உள்ள இந்தியனாக இதை நான் செய்யக் கூடாதா? என நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால்,ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லக் கூடாது என்பார்கள். அதனால் அதை தவிர்ப்போம். அதற்கு அவர்களே கூறிய காரணம் என்ன தெரியுமா? "எங்காளுங்களுக்குத் தெரிஞ்சா விலக்கி வெச்சுடிவாங்க சார். எனக்கு மனசுல ஈரமுண்டு, செய்றேன், ஆனா ஆளுங்கள பகைச்சுக்க தைரியமில்ல," என்றுதான். அத்தகைய நல்லுள்ளங்கள் கையால் எத்தனையோ கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1) உப்பளம் நிறைந்த இடம். ஏறத்தாழ 20 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்த மானதை ஒரு கிருத்துவர் வைத்துள்ளார். அவர் அதில் சில இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து, பெண்ணின் கல்யாணத்துக்கு விற்க முற்படுகிறார். அது, கோவிலுக்குண்டான இடம். அது பாழடைந்துள்ளது. குழு அவரிடம் மன்றாடுகிறது. கடைசியில் தானாடாவிடாலும் தன் சதையாடுமல்லவா? "ஏம்பா. இந்த நிலத்த வித்து உன் பொண்ண கட்டிக்கொடுக்க போற. சிவன் சொத்து குல நாசம்னு சொல்வாங்க; அப்படியும் பொண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறேன்னு சொன்ன நிஜமாலுமே நீ மனுஷனே இல்லைய்யா," ன்னு ஒரு நண்பர் சத்தமாகவே வாதிட்டார்!
எதிரிலே இருந்தவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்!என்ன நினைத்தாரோ தெரியாது."சார், சரி சார்- என் பொண்ணு மட்டும் இந்த இடத்த விக்காம நல்ல எடத்துல செட்டிலாகட்டும், அந்த சாமி சத்தியமா சொல்றேன், அந்த சாமி கும்பாபிஷேகம், என்கைல தான்!" என்றார்!

குடும்ப சமேதராக, கோபுரம் மேல் ஏறி, அவர் கையாலே கும்பாபிஷேகம் நடந்தது என்பதையும் நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா?

2) சேரி - மிகுந்த மக்கள் எதிர்ப்புக்கிடையில், சேரியிலுள்ள அம்மன் கோவில் கட்டிமுடிக்கப் படுகிறது. அவர்களில் முதியவர் ஒருவர் பூசாரி ஆக, ருத்ராக்ஷம் கட்டிக்கொள்கிறார். வழக்கமாக கோவில் கட்டும் வேலை முடிந்தது, ஒரு வைதிகரை வைத்து, மந்திர கோஷம்முழங்க, பழைய கோவிலை புதுப்பித்ததற்காக பீடாபரிகாரங்கள் செய்து, பின்னர் ஊர் மக்களிடம் ஒப்படைப்பது எங்கள் வழக்கம். கும்பாபிஷேக நாள் - மாம்பலத்திலிருந்து வைதிகரும் தயார். அங்கே போனபின் தான் வைதிகருக்குத் தெரிந்தது, அது சேரி என்று. அவர் தயங்கியதைப் பார்த்த ராமமூர்த்தி, "ஏன் அங்கதான் கருமாரி அம்மன் இருக்கா, இருக்கக் கூடாதா? வாங்க," என்று அவரை இழுத்துக் கொண்டு போகாத குறை.

முணுமுணுத்துக் கொண்டே, பூஜை நடந்தது! (மந்திரமா, கவலை முணுகலா, யாருக்குத் தெரியும்?). எல்லாம் முடிந்தது. காலையிலிருந்து பூஜையிலேயே கண்ணாக இருந்து விட்டதால், நல்ல பசி! பிரசாதம் என வைத்த வெண்பொங்கல், சேரி மக்களிடையே விநியோகம் ஆகிவிட்டது! அந்தணருக்குப் பசி, ஆனால் வெளியே சொல்லமுடியவில்லை! அப்போது அங்கிருந்த ஒரு வயதான அம்மாள், தயங்கியபடி நின்றதைப் பார்த்து, என்ன என்று வினவுகையில், அவர் இவர்கள் பசியாக இருப்பார்களே என்று கடையிலிருந்து 'பன்'னும், தன் கையால் டீயும் போட்டு வைத்திருக்கிறார், ஆனால் மற்றவர்கள்,"அட, அவங்க ஐயருங்க.அதெல்லாம் சாப்பிட மாட்டாங்க," என்று சொல்லி கிழவியைத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது! ராமமூர்த்தியோ, "அட, பசி கொல்லுது. என்னம்மா, அந்த மகமாயியே, பசி தீர்த்த மாதிரி,கொண்டாம்மா," என்றார். வைதிகருக்கும் , அவர் மறுக்க மறுக்க, கையில் டீயும் பன்னும் திணிக்கப்பட்டது! பூஞ்சை உடம்பு, வெயில், பசி தாங்கவில்லையென்றால்?

எல்லாரும் கிளம்ப எத்தனிக்கையில், "இருங்க, இருங்க" என்று இரண்டு மூன்று பெண்கள் கைகளில் கூடை ஏந்தி ஓடி வந்தார்கள்! என்ன என்று கேட்டால், "சாமி, எங்க ஊர்லேர்ந்துதான் கத்திரி, வெண்டையெல்லாம் மார்கெட்டுக்கு போகுது. அதான், நல்லபடியா கோவிலைக்கட்டி, எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தீங்கன்னு, ரெண்டு கூட கொண்டாந்தோம்; வேற நாங்க என்னத்த கைமாறா கொடுக்கறதாம்?" என்றார்கள். ராமமூர்த்தியோ," அய்யருதான் எல்லாம் செஞ்சு வெச்சாரு, ஒரு வாரம் ஓடும்; காய்கறிய அவருக்கே கொடுங்க." என்றதும், சந்தோஷமாய் இன்னும் மேலே புடலை, கீரை என்று கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்த வைதிகர்,கண்களில் நீர் மல்க, "ராமமூர்த்தி, இவங்க அன்புக்கு முன்ன காசு, பணம், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல.இனி இப்படி நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன்," என்றார்.!!

3) மிக அற்புதமான சுயம்பு லிங்கம்- காட்டில் விழுந்து கிடக்கிறது! பார்த்து, பதைபதைத்து, நேராக நிமிர்த்திவைத்து, ஊருக்குள் விசாரிக்கிறார். அது மிகவும் புராதன கோவில் இடிபாடுகளில் இருந்ததாகவும்,இப்போது கேட்பாரற்று இருப்பதாகவும் அறிகிறார். சரி, அடுத்த முறை வரும் போது,ஒரு ஓலைக் கூரையாவது ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணிக் கொண்டே போகிறார்.
மாதம் முடிந்து அந்தப் பக்கமாய் போகையில், ஆச்சரியம் காத்திருக்கிறது! அழகாக fஐபர் க்ளாஸ் பச்சைக்கூறை வேய்ந்த, குளிர்ந்த நிழலுள்ள கோவிலாய் காட்சியளிக்கிறது அந்த இடம்! யார் செய்தது என விசாரித்தால், ஒரு முஸ்லிம் அன்பர் - என பதில் வருகிறது!! அருகிலேயே fஐபர் ஷீட்டுக்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்; போய் பேசினால்,"சார், எப்படீன்னாலும், எங்க பாட்டன் முப்பாட்டன் கலத்து சாமி அது. அவங்க இருந்தா வெய்யில்ல காய வைப்போமா? அதான்; என்னால முடிஞ்சது!" என்றாராம்.உடன் சென்றிருந்த பத்திரிகையாளர் உடனே, செய்தி, புகைப்படம் சேகரிக்கத் தொடங்க, "சார், வேணாம் சார்; ஏதோ தோணிச்சு, செஞ்சேன். பேப்பர்லல்லாம் போட்டா, எங்க சமூகத்துக் காரங்க, என்னய தள்ளி வெச்சுடுவாங்க; அப்புறம் என் பொண்ணுக்கு யாரும் பையன் கொடுக்க மாட்டாங்க!," என்றாராம்.

இப்படி பலப் பல உதாரணங்கள். ஏன், கோவில் விழாக்கள் என்றால், ஷேக் சின்னமௌலானா நாகஸ்வரம் வாசிக்கவில்லையா, அவருக்கு கோவில்காரார்கள் மரியாதை செய்யவில்லையா?

காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை உதாரணத்தை சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.

காஞ்சி மடத்தில் அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. அப்போது காஞ்சி பரமாச்சாரியாரிடம் (பரமாச்சாரியார்-100 வயதைத் தொட்டவர்; இப்பொழுது உள்ளவர்கள் இல்லை, அவர்களின் குரு) சிலர் போய், "அவங்க, காலைல 4 மணிக்கே பெரிசா மைக்க அலறவெக்கிறாங்க; பேசாம உபத்திரவ கேசுன்னு சொல்லி, போலீஸ்ல சொல்லலாமா? இல்ல அவங்கள வேற எங்கயாச்சும் போக வைக்கலாமா," என்று கேட்டதற்கு, அவர், "அட, அவா, கரெக்டா, டாண்னு, நேரத்துல ஓதுறத ஆரம்பிக்கறா. அந்த சப்தம்தான் எனக்கு அலாரம்! அதை ஏன் நிப்பாட்டறேள்? வேண்டாம், அவா அனுஷ்டானம் அவாளுக்கு, நம்ம வழி நமக்கு. அதை எப்படி இடைஞ்சல்னு சொல்றது?" என்றாராம்.!!

13 comments:

meenamuthu said...

படித்து மனம் நெகிழ்ந்துவிட்டது சந்திர சேகரன்!

\\ அந்த சப்தம்தான் எனக்கு அலாரம்!\\

இங்கும் எங்கள் வீட்டிற்கு அடுத்தாற்போல் மசூதி இருக்கிறது எங்களுக்கும் அதுதான் அலாரம்!
அது மட்டுமல்ல மாலையில் சரியாக இங்கே நாம் விளக்கேற்றும் அதே நேரம் அவர்களின் ஓதும் சத்தம் மிக பொருத்தமாக! கோவிலில் பூஜை ஆரம்பிக்கும் போது மணி அடிப்பது போல் :)
என்னை பொருத்தவரை அதுதான் எனக்கு
மந்திரம் :)

Maraboor J Chandrasekaran said...

மீனா, படித்து பின்னூட்டியதற்கு நன்றி. உங்களுக்கு ஞானம் வந்துவிட்டது :-) மசூதியோ,கோயிலோ, சாமி ஒன்றுதானென்று!
சாதிச்சண்டை போட்டு நேரம் கிடத்தும் பலருக்கு இதை படிக்க நேரமிருந்தால், நல்லது :-(

arunagiri said...

மிக அருமையான பதிவு. ஒரு அவதானிப்பைச் சொல்லத்தான் வேண்டும்:

1. காஞ்சிபீடம் என்ற ஸ்தாபனத் தலைவர் பிற மத நம்பிக்கையை மதித்தது.

2. சேரிக்குச் செல்லும் வைதிகர், உண்மை அன்புக்கு முன்னால் மற்றவை பெரிதில்லை என reprisal பயமின்றி முடிவெடுத்தது.

3. நிபந்தனையின் அடிப்படையில் என்றாலும் கோவிலை ஒரு கிறித்துவர் புனரமைத்தது.

4. எங்காளுங்களுக்குத் தெரிஞ்சால் விலக்கி வச்சுருவாங்க என்று பயத்துடன், ஆனாலும் மனதில் ஈரத்துடன் கோவில் பணி செய்வது.

- நிபந்தனையோ பயமோ அற்றவை 1 மற்றும் 2.
- நிபந்தனையோடு கூடியது 3.
- நல்ல செயலைக்கூட ஒளிந்து செய்யவேண்டிய நிலை 4.

எல்லா சம்பவங்களும் மனித நேயத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், நிபந்தனையோ அதைவிடக்கொடியதான பயமோ புகுந்தது 3 மற்றும் 4-இல்தான். ஏன் என்பதற்கான பதில் மத சச்சரவுகளுக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கான விடையை நோக்கி இட்டுச்செல்லக்கூடும்.

சாதி/மதச்சண்டை இருப்பதனால்தான் இந்தப்பதிவின் சம்பவங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவை எந்த அளவு நிஜமோ சாதி/மதச்சண்டைகளும் அந்த அளவுக்கு நிஜம். You can not wish them away.

Maraboor J Chandrasekaran said...

அருணகிரி, நல்ல கோர்வையான பின்னூட்டம்; எந்த ஒரு கட்டுரைக்கும் ஒரு முடிவுரை அல்லது சுருக்கம் உண்டு. அதை உங்கள் பதில் தந்துவிட்டது! நான் 50 வரிகளில் நீங்கள் 10 வரிகளில் சுருங்கச் சொல்லிவிட்டீர்கள். நன்றி

sury siva said...

புவியில் வாழும் நமக்குத்தான் ஜாதி, மதம், எல்லாம். நம்மைப்படைத்த இறைவன் இதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவன்.
நீ எப்படி தொழுதாலும் எங்கே தொழுதாலும் அது என்னையே வ்ந்தடைகிறது என கண்ணன் கீதையிலே சொல்கிறான்.
முப்பது வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்னமும் நடந்த்து நினைவில் உள்ளது.
எனது மகள் வயது 5 நாகை ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கையில், எனக்கே தெரியாத பலர் எனது மகளுக்காக பிரார்த்தனை செய்தனர். அவர்களில் பலர் முஸ்லிம்கள், பலர் கிருஸ்தவர்கள்.
குணம் அடைந்து வீடு திரும்பும்போது, டாக்டர் சொல்லுகிறார்:
உங்கள் மகளை குணப்படுத்தியது, டாக்டரல்ல , உங்கள் நண்பர்களின் பிரார்த்தனைதான் என்று.
இறைவன், வேண்டுபவன் இன்ன மதத்தை சேர்ந்தவன் என்றா பார்த்து அருள் பாலிக்கிறார் ?
ஆக, மனிதர்கள் பல ...இறைவன் ஒருவனே. அவனை எப்படி வணங்குகிறோம் என்பதைவிட வணங்கவேண்டும், அவன் மலரடி தொழவேண்டும் என்பதே சிறந்த கருத்தாக முடியும்.
The font is Adhiyaman. download the font from www.higopi.com
Your Blog is very impressive and heartening. Enlarges the vision of readers. Be yourself. God Bless you.
If time permits, please visit
http://vazhvuneri.blogspot.com
http://menakasury.blogspot.com

Maraboor J Chandrasekaran said...

வருகைக்கு நன்றி, மேனகாசூரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த பதிவை படித்து நல்ல கருத்துக்களை தெரிவித்து, மீண்டும் வெளியிடச்செய்தமைக்கு நன்றி.

Geetha Sambasivam said...

அருமை ஜெ.ச. அவர்களே! ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பதிவைப் படிக்க முடிந்தது. என்னாலே உங்க அளவுக்குப் பாடுபட உடல்நிலை இடம் கொடுக்காது என்றாலும், உங்களைச் சிந்திக்க வைத்ததற்காவது ஒரு காரணமாய் இருந்ததற்குச் சந்தோஷப் பட வேண்டும்.

வடுவூர் குமார் said...

நான் சொல்ல நினைத்ததெல்லாம் பின்னூட்டத்தில் வந்துவிட்டது.அதனால்,
பல நிகழ்வுகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

Maraboor J Chandrasekaran said...

வாங்க கீதா சாம்பசிவம். நிறைய எழுதறீங்க, ஆனா எனக்குத்தான் படித்து பின்னூட்டம் போட முடியல. மன்னிச்சுக்குங்க. கேள்விகளில்தான் பல சிந்தனைகள் பிறக்கின்றன. கேட்பவர்கள் உள்ளதால்தான் பல விடைகள் கிடைக்கின்றன. உங்கள் கேள்வி கிரியாஊக்கியாய் உள்ள பலன் - பல அன்பர்கள் ஒன்று சேர்ந்து முன்னாள் ASI 9Archeological Survey of India) தலைவர். தியாக. சத்தியமூர்த்தியின் கீழ் R.E.A.C.H FOUNDATION என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கபட்டு விட்டது. கிராம கோவில்கள், புராதன சின்னங்கள் புதுப்பிக்கப்பட்டு, தமிழக மூலை முடுக்களுக்கு கல்வி, தொழில், அந்த சீரமைக்கப்பட்ட கோவில் வளாகத்துக்குள்ளேயே நடத்த யோசனை. விதை விதைக்கப்பட்டு விட்டது. அனேகமாக ஜூன் மாதம் தமிழக ஆளுநர் அவர்களால் இந்த தொண்டு துவக்கிவைக்கப்படும். இணைய தளமும் தயராகி வருகிறது. அன்பர்கள் எங்கெல்லாம் புராதன சின்னங்கள், வரலாற்று செய்திகள் கிடைக்கின்றதோ, அதைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அனுப்பலாம் : reach.foundation.india@gmail.com. To join our activities join yahoo group: temple_cleaners

Maraboor J Chandrasekaran said...

வடுவூர் குமார், சவுக்கியமா? வாழ்த்துக்களுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

என் கணவரின் பிறந்த ஊரான "பரவாக்கரை"யில் உள்ள ஸ்ரீவேங்கடநாதர் ஆலயத்தைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்ய நாங்கள் முடிந்தவரை முயன்றும் முடியவில்லை. என் கணவரின் பெரியப்பாவும், என் மாமனாரும் பழைய அறங்காவலர்கள். பின்னால் அரசு இதை எடுத்துக்கொண்டு விட்டது. தற்சமயம் நாங்கள் மிகவும் முயன்று வருகிறோம். உங்கள் குழுவும் இதற்கு இணைந்து தங்களால் ஆன உதவியைச் செய்து தர வேண்டுகோள் விடுக்கிறேன். விவரங்கள் தனி மெயிலில். நன்றிகள். உங்கள் மூத்த சகோதரிக்குச் செய்யும் உதவியாக நினைத்துக் கொண்டு செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

Geetha Sambasivam said...

நான் நிறைய எழுதினாலும் நீங்கள் விஷயத்தோடு எழுதுகிறீர்கள் என்பதை நான் மறக்கவில்லை. :D

Maraboor J Chandrasekaran said...

கீதா சாம்பசிவம். எல்லாரும் சகோதரர்களே! பரவாக்கரை கோவில் பற்றிய வழித்தடம், யாரை அங்கே சந்திக்கவேண்டும், தொலைபேசி எண் போன்றவை எனக்கு மின்னஞ்சல் செய்தால், ஆவன செய்ய எல்லா முயற்சிகளும் செய்கிறோம். மற்றவை ஆண்டவன் செயல்.