29 April 2006

கல்லிலே கலை வண்ணம் -6

வரலாறு.காம் என்று பொன்னியின் செல்வன் யாஹ¤ குழுமத்திலிருந்து சிலர் தனியாக ஆரம்பித்து, அது இப்போது சரித்திரம் படிப்பவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழ் ரசிகர்கள், தமிழ்நாட்டுக் காதலர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது! நான் எழுதிய புள்ளமங்கைக் கோயில் சிற்பங்களை படித்த நண்பர் சேஷாத்ரி கோகுல், தான் வரலாறு.காமில் எழுதிய புள்ளமங்கை கட்டுரையை மீண்டும் உயிர்பித்து, எனது சில படங்களோடு சேர்த்து வெளியிடுள்ளார்! அவருக்கு நன்றி. நண்பரின் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கணினி வல்லுநர் எப்படி சரித்திரத் தேர்ச்சி கொண்டார் என்பதற்கு விடை :- இம்மாதிரியான சிற்பங்களை பார்க்கும் எந்த கலா ரசிகனுக்கும், நமது முன்னோரின் உயரிய கலை ரசனயும், திறமையும் வெளிப்படும்; அது நம்மை சரித்திரக் காதலன்/ காதலி ஆக்கிவிடும். (வரலாறு.காம் மா.லாவண்யா கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதால் )
ஒரே சிலை இருவரின் உள்ளங்களில் எப்படி வேறு வேறு உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளது என்பது பற்றியும் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவே, இந்த பதிவு.அந்த சுட்டிகளை மீண்டும் ஒரு முறை தருகிறேன்:-

http://varalaaru.com/Default.asp?articleid=325http://maraboorjc.blogspot.com/2006/01/1.html
http://maraboorjc.blogspot.com/2006/02/2.html
http://maraboorjc.blogspot.com/2006/02/3_06.html
http://maraboorjc.blogspot.com/2006/02/4_08.html
http://maraboorjc.blogspot.com/2006/02/5.html

12 April 2006

கோவில்களை யார் சீரமைப்பது?

கீதா சாம்பசிவம் கேட்ட ஒரு கேள்வி என்னை இந்த பதிவு எழுத வைத்து விட்டது! இந்து என்ற போர்வையை போர்த்திக்கொண்டுதான் நான் கோவில் பணி செய்யவேண்டுமா? ஒரு நாட்டுப் பற்று உள்ள இந்தியனாக இதை நான் செய்யக் கூடாதா? என நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால்,ஊரைச்சொன்னாலும் பேரைச்சொல்லக் கூடாது என்பார்கள். அதனால் அதை தவிர்ப்போம். அதற்கு அவர்களே கூறிய காரணம் என்ன தெரியுமா? "எங்காளுங்களுக்குத் தெரிஞ்சா விலக்கி வெச்சுடிவாங்க சார். எனக்கு மனசுல ஈரமுண்டு, செய்றேன், ஆனா ஆளுங்கள பகைச்சுக்க தைரியமில்ல," என்றுதான். அத்தகைய நல்லுள்ளங்கள் கையால் எத்தனையோ கோவில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

1) உப்பளம் நிறைந்த இடம். ஏறத்தாழ 20 ஏக்கர் நிலம் கோவிலுக்குச் சொந்த மானதை ஒரு கிருத்துவர் வைத்துள்ளார். அவர் அதில் சில இடங்களை போலி ஆவணங்கள் தயாரித்து, பெண்ணின் கல்யாணத்துக்கு விற்க முற்படுகிறார். அது, கோவிலுக்குண்டான இடம். அது பாழடைந்துள்ளது. குழு அவரிடம் மன்றாடுகிறது. கடைசியில் தானாடாவிடாலும் தன் சதையாடுமல்லவா? "ஏம்பா. இந்த நிலத்த வித்து உன் பொண்ண கட்டிக்கொடுக்க போற. சிவன் சொத்து குல நாசம்னு சொல்வாங்க; அப்படியும் பொண்ணின் வாழ்க்கையைப் பணயம் வைக்கிறேன்னு சொன்ன நிஜமாலுமே நீ மனுஷனே இல்லைய்யா," ன்னு ஒரு நண்பர் சத்தமாகவே வாதிட்டார்!
எதிரிலே இருந்தவர் அப்படியே ஆடிப்போய்விட்டார்!என்ன நினைத்தாரோ தெரியாது."சார், சரி சார்- என் பொண்ணு மட்டும் இந்த இடத்த விக்காம நல்ல எடத்துல செட்டிலாகட்டும், அந்த சாமி சத்தியமா சொல்றேன், அந்த சாமி கும்பாபிஷேகம், என்கைல தான்!" என்றார்!

குடும்ப சமேதராக, கோபுரம் மேல் ஏறி, அவர் கையாலே கும்பாபிஷேகம் நடந்தது என்பதையும் நான் சொல்லிதான் தெரிய வேண்டுமா?

2) சேரி - மிகுந்த மக்கள் எதிர்ப்புக்கிடையில், சேரியிலுள்ள அம்மன் கோவில் கட்டிமுடிக்கப் படுகிறது. அவர்களில் முதியவர் ஒருவர் பூசாரி ஆக, ருத்ராக்ஷம் கட்டிக்கொள்கிறார். வழக்கமாக கோவில் கட்டும் வேலை முடிந்தது, ஒரு வைதிகரை வைத்து, மந்திர கோஷம்முழங்க, பழைய கோவிலை புதுப்பித்ததற்காக பீடாபரிகாரங்கள் செய்து, பின்னர் ஊர் மக்களிடம் ஒப்படைப்பது எங்கள் வழக்கம். கும்பாபிஷேக நாள் - மாம்பலத்திலிருந்து வைதிகரும் தயார். அங்கே போனபின் தான் வைதிகருக்குத் தெரிந்தது, அது சேரி என்று. அவர் தயங்கியதைப் பார்த்த ராமமூர்த்தி, "ஏன் அங்கதான் கருமாரி அம்மன் இருக்கா, இருக்கக் கூடாதா? வாங்க," என்று அவரை இழுத்துக் கொண்டு போகாத குறை.

முணுமுணுத்துக் கொண்டே, பூஜை நடந்தது! (மந்திரமா, கவலை முணுகலா, யாருக்குத் தெரியும்?). எல்லாம் முடிந்தது. காலையிலிருந்து பூஜையிலேயே கண்ணாக இருந்து விட்டதால், நல்ல பசி! பிரசாதம் என வைத்த வெண்பொங்கல், சேரி மக்களிடையே விநியோகம் ஆகிவிட்டது! அந்தணருக்குப் பசி, ஆனால் வெளியே சொல்லமுடியவில்லை! அப்போது அங்கிருந்த ஒரு வயதான அம்மாள், தயங்கியபடி நின்றதைப் பார்த்து, என்ன என்று வினவுகையில், அவர் இவர்கள் பசியாக இருப்பார்களே என்று கடையிலிருந்து 'பன்'னும், தன் கையால் டீயும் போட்டு வைத்திருக்கிறார், ஆனால் மற்றவர்கள்,"அட, அவங்க ஐயருங்க.அதெல்லாம் சாப்பிட மாட்டாங்க," என்று சொல்லி கிழவியைத் தடுத்துவிட்டதாகத் தெரிகிறது! ராமமூர்த்தியோ, "அட, பசி கொல்லுது. என்னம்மா, அந்த மகமாயியே, பசி தீர்த்த மாதிரி,கொண்டாம்மா," என்றார். வைதிகருக்கும் , அவர் மறுக்க மறுக்க, கையில் டீயும் பன்னும் திணிக்கப்பட்டது! பூஞ்சை உடம்பு, வெயில், பசி தாங்கவில்லையென்றால்?

எல்லாரும் கிளம்ப எத்தனிக்கையில், "இருங்க, இருங்க" என்று இரண்டு மூன்று பெண்கள் கைகளில் கூடை ஏந்தி ஓடி வந்தார்கள்! என்ன என்று கேட்டால், "சாமி, எங்க ஊர்லேர்ந்துதான் கத்திரி, வெண்டையெல்லாம் மார்கெட்டுக்கு போகுது. அதான், நல்லபடியா கோவிலைக்கட்டி, எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தீங்கன்னு, ரெண்டு கூட கொண்டாந்தோம்; வேற நாங்க என்னத்த கைமாறா கொடுக்கறதாம்?" என்றார்கள். ராமமூர்த்தியோ," அய்யருதான் எல்லாம் செஞ்சு வெச்சாரு, ஒரு வாரம் ஓடும்; காய்கறிய அவருக்கே கொடுங்க." என்றதும், சந்தோஷமாய் இன்னும் மேலே புடலை, கீரை என்று கொண்டுவந்து கொடுத்ததைப் பார்த்து மனம் நெகிழ்ந்த வைதிகர்,கண்களில் நீர் மல்க, "ராமமூர்த்தி, இவங்க அன்புக்கு முன்ன காசு, பணம், இதெல்லாம் ஒண்ணுமேயில்ல.இனி இப்படி நீங்க எங்க கூப்பிட்டாலும் நான் வர்றேன்," என்றார்.!!

3) மிக அற்புதமான சுயம்பு லிங்கம்- காட்டில் விழுந்து கிடக்கிறது! பார்த்து, பதைபதைத்து, நேராக நிமிர்த்திவைத்து, ஊருக்குள் விசாரிக்கிறார். அது மிகவும் புராதன கோவில் இடிபாடுகளில் இருந்ததாகவும்,இப்போது கேட்பாரற்று இருப்பதாகவும் அறிகிறார். சரி, அடுத்த முறை வரும் போது,ஒரு ஓலைக் கூரையாவது ஏற்பாடு செய்யவேண்டும் என எண்ணிக் கொண்டே போகிறார்.
மாதம் முடிந்து அந்தப் பக்கமாய் போகையில், ஆச்சரியம் காத்திருக்கிறது! அழகாக fஐபர் க்ளாஸ் பச்சைக்கூறை வேய்ந்த, குளிர்ந்த நிழலுள்ள கோவிலாய் காட்சியளிக்கிறது அந்த இடம்! யார் செய்தது என விசாரித்தால், ஒரு முஸ்லிம் அன்பர் - என பதில் வருகிறது!! அருகிலேயே fஐபர் ஷீட்டுக்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்துபவர்; போய் பேசினால்,"சார், எப்படீன்னாலும், எங்க பாட்டன் முப்பாட்டன் கலத்து சாமி அது. அவங்க இருந்தா வெய்யில்ல காய வைப்போமா? அதான்; என்னால முடிஞ்சது!" என்றாராம்.உடன் சென்றிருந்த பத்திரிகையாளர் உடனே, செய்தி, புகைப்படம் சேகரிக்கத் தொடங்க, "சார், வேணாம் சார்; ஏதோ தோணிச்சு, செஞ்சேன். பேப்பர்லல்லாம் போட்டா, எங்க சமூகத்துக் காரங்க, என்னய தள்ளி வெச்சுடுவாங்க; அப்புறம் என் பொண்ணுக்கு யாரும் பையன் கொடுக்க மாட்டாங்க!," என்றாராம்.

இப்படி பலப் பல உதாரணங்கள். ஏன், கோவில் விழாக்கள் என்றால், ஷேக் சின்னமௌலானா நாகஸ்வரம் வாசிக்கவில்லையா, அவருக்கு கோவில்காரார்கள் மரியாதை செய்யவில்லையா?

காஞ்சிப் பெரியவரின் வாழ்க்கை உதாரணத்தை சொல்லி இந்தப் பதிவை முடிக்கிறேன்.

காஞ்சி மடத்தில் அருகிலேயே ஒரு மசூதி உள்ளது. அப்போது காஞ்சி பரமாச்சாரியாரிடம் (பரமாச்சாரியார்-100 வயதைத் தொட்டவர்; இப்பொழுது உள்ளவர்கள் இல்லை, அவர்களின் குரு) சிலர் போய், "அவங்க, காலைல 4 மணிக்கே பெரிசா மைக்க அலறவெக்கிறாங்க; பேசாம உபத்திரவ கேசுன்னு சொல்லி, போலீஸ்ல சொல்லலாமா? இல்ல அவங்கள வேற எங்கயாச்சும் போக வைக்கலாமா," என்று கேட்டதற்கு, அவர், "அட, அவா, கரெக்டா, டாண்னு, நேரத்துல ஓதுறத ஆரம்பிக்கறா. அந்த சப்தம்தான் எனக்கு அலாரம்! அதை ஏன் நிப்பாட்டறேள்? வேண்டாம், அவா அனுஷ்டானம் அவாளுக்கு, நம்ம வழி நமக்கு. அதை எப்படி இடைஞ்சல்னு சொல்றது?" என்றாராம்.!!

09 April 2006

நட்சத்திர வந்தனம்..! <|>

மங்களம் குலுங்கி என்றும் அன்பு மேவி இன்பமாக
வான்வளம் பெருகி வாழ்க பூமியெல்லாம்
சங்கடங்கள் இன்றி சண்டை சச்சரவும் இன்றி வாழ்க
சஞ்சலங்கள் இன்றி வாழ்க தேசமெல்லாம்!....

எனத் தொடங்கும் கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் வரிகளைக் கூறி எனது நட்சத்திர வாரத்தினை நிறைவு செய்கிறேன்.

எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்தந்த நாட்களில் பதிவுகள் (குறைந்தது ஒன்றேனும் பதிய முயற்சி செய்தேன்) தர முயற்சித்தேன்.

பல நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சித்ரான்னம் வைத்தேனா, எனக்குத் தெரியாது!! ஆனால், வயிற்றை , மனதைக் கெடுக்காத பத்தியச் சாப்பாடாவது போட்டேன் என நினைக்கிறேன்.

விவாதங்கள் என்ற பெயரில் ப்ரச்னைகளை வளர்க்கவும் விரும்பவில்லை.

என் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ள ப்ரச்னைகள், என் சொந்தப் ப்ரச்னை இல்லை. கோவில்களும், நமது சரித்திரமும் அழிந்துபோகும் அபாயத்தை மிக சிறிய நாட்களுக்குள் பார்த்து, மனம் நொந்து, பல பெரிய மனிதர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். தெளிவாகத் தெரியும் 2 விஷயங்கள்:-

1) தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகுந்த பொருள், அரசியல் நெருக்கடிகளில் தான் பழங்கால புதை பொருட்கள், கோவில்களை ஆராய முற்படுகின்றனர். ஆள் பலமும் குறைவு.

2) ஊர் மக்களிடையே, நம்பிக்கையின்மை - ஆண்டவனிடத்தில், ஆட்சியாளர்கள் இடத்தில், ஏன் சக மனிதர்களிடத்தில், தன்னிடத்தில் - இல்லாமலிருப்பது!

முதல் ப்ரச்னையை சில ஆர்வலர்கள் சரிகட்ட முற்பட்டிருக்கிறார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்களையும், கோவில் புனரமைப்புப் பணி செய்யும் சிலரையும், கோவில்களை சுத்தம் செய்யும் தன்னார்வக் குழுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு குழு அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் ப்ரச்னையை எல்லாரும் சேர்ந்துதான் சரி செய்ய வேண்டும். முதலில் அரசாங்கத்தையும், அரசியல் வாதிகளையும், அரசு அலுவர்கலையும் குற்றம் கூறிக் கொண்டே இருக்கும் மனப் பாங்கை நாம் கைவிடவேண்டும்! எம்.ஜி.ஆர் அவர்கள் அழகாகச் சொன்னது போல், "நாடென்ன செய்தது நமக்கு?" என எண்ணாமல், "நாமென்ன செய்தோம் நாட்டுக்கு?" என சீறிய சிந்தனை செய்ய வேண்டும்.

நாடு என்றால் என்ன? நாமும் நம்மை சுற்றியுள்ளதுதான், நமது முதல் நாடு, நாட்டின் பாகம். அதை சுகாதாரமாக வைக்க, நாம் முதலில் குப்பைகளை எறிவது, ரோட்டோரத்தைப் பார்த்தால் காலைத் தூக்குவது, எச்சில் துப்புவது, சுற்றியுள்ள மற்ற மக்களை பற்றிய ப்ரக்ஞை இல்லாமல் புகை விடுவது போன்ற செயலை நிறுத்தினாலே போதும்.(பிடிப்பது எனும் சொல் எனக்கு தவறாகப் படுகிறது!!- அவர் விடுகிறார், சுற்றியுள்ளவர்தனே, பிடிக்கின்றனர்?? Passive smokers) .

சிறுபிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித்தருதல், நடந்து போகும் தூரம் உள்ள வரலாற்றுசின்னங்களை பார்க்கக் கூட்டிச் செல்லுதல், தூய தமிழில் நல்ல குறள், பாசுரங்கள், சொல்லிக்குடுத்து அவர்களை தினமும் குளித்து உடை உடுத்தி சொல்லவைத்தல், இதெல்லாமே நல்ல சந்ததியை நாட்டுக்குத் தரும். மக்கள் தான் நாடு.

நான் முந்திய கட்டுரையில் குறிப்பிட்ட ராமமூர்த்தி அவர்கள், கோவில்களை சீரமைக்கப் போகுமிடமெல்லாம், அவருக்கு பல குறுக்கீடுகள். கோவில் நிலத்தை ஆக்ரமித்தவர்களின் கோபம், மற்றொரு மதத்தினர் இவர் இந்துயிஸம் பேச வருகிறார் என்று மத முத்திரை குத்தினாலும், ஆலயம் தொழுவது சாலவும் நன்று; எல்லா மதத்தினரும், சாதியினரும், ஒரே மண்ணின் மைந்தர்களே! அவர்கள் அனைவரும், அதை ஒரு பழைய கோவிலாக எண்ணாமல், "நம் மண்ணின் ஒரு வரலாற்று சின்னம், மக்கள், மன்னர் அமைதி தேடி வந்த இடம்", என்றெல்லாம் எண்ணிப்பார்த்து, அதை சீரமைக்க பொருளுதவி, செயலுதவி செய்து நிமிரவைத்தால் தான், அவ்வூர் சிறக்கும்! எல்லார் மனதிலும் உள்ள அழுக்குகள் போயி, சமத்துவம் மலரும்" என்கிறார். அவர் 20 ஆண்டுகளில், ஏறத்தாழ 100 கோவில்கள் சீரமைத்துக் கொடுத்திருப்பார்!!

குறைகளைக் கூவிப்பேசி, கூட்டம் சேர்ப்பதைவிட, களைகளைக் களைய என்ன செய்ய வெண்டும் எனும் சிந்திக்கும் நற்கூட்டம் வலுப்பெற வேண்டும்!! அதனை செயல் படுத்தக் காரியத்தில் உறுதி வேண்டும்!! அதற்கு என்னாலான எழுத்துப் பணியை நான் எத்தனை இடையூறுகள் வந்தாலும் தமிழும் தமிழ் சார்ந்த குலமும் மணக்க எழுதிக்கொண்டே இருப்பேன். நிறை, குறை இரண்டும் கூறி என்னை எழுதவைத்த உள்ளங்களுக்கு வணக்கம்!

அமைதி வேண்டும் நாடோடிகளே!

திரைகடலோடியும் திரவியம் தேடு - என்று சொன்னோர் முன்னோர்! அதைதான் தமிழ் தெரிந்த நம் கோடானுகோடி நண்பர்கள் இன்று செய்துவருகிறார்கள். வெவ்வேறு சூழ்நிலைகள், குடுமபங்கள், நிர்பந்தங்கள், வசதி முறை என்று வளர்ந்தாலும், எங்கெங்கோ, எத்துறையோ, வேலை செய்து வந்தாலும், "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா,' எனும் நிலைப்பாட்டே கொண்டுள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தால், இந்த நட்சத்திர வாரக் கடைசி நாட்கள் நான் சென்னையிலிருந்து மகாராஷ்ட்டிரத்திலிருக்கும் பூனே நகரத்துக்கு வரவேண்டி இருந்து. 2 நாட்களும் மென்பொருள் கணினி பொறியாளர்களுக்கான தேர்வை, எனது அமெரிக்க நிறுவனம், என்னை விட்டு எடுக்கச்சொல்லி, நியமனமும் செய்யச் சொன்னது. எங்கள் உழவாரப் பணிக்குழு மேற்கொண்டுள்ள ஒரு கோவிலை நிலத்தடியிலிருந்து வெளியே எடுக்கும் பணி பற்றிய செய்திகளை மொபைல் தொலைபேசி மூலம் கேட்டற்ந்து கொள்ளும் வேலை ஒரு புறம், தமிழ்மணத்துக்கான பதிவுகளை, சிந்தித்து (?) இரவு முழுதும் எழுதுவது ஒரு புறம், புதியவர்களை பகல் பூராவும் நேர்முகம் காணல் ஒரு புறம் என பரபரப்பாக எந்து வாரம் முடிவுக்கு வருகிறது.

ஆமாம், நிறுத்து! என்னவோ தலைப்பிட்டாய் என உள்ளே படித்தால், என்ன சொந்தக் கதை, சோகக் கதை எல்லாம் எடுத்து விடுகிறாய்? எனாதீர்கள்! முதலில் சொன்ன செய்திக்கும், நான் பூனாவில் அநுபவித்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு முகப் படுத்தப் பார்க்கிறேன்.

காலையில், சில பதிவுகளை Browsing centre க்கு (சரியான தமிழ் வார்த்தை உடனடியாக மனதில் தோன்றவில்லை, மன்னிக்கவும்) போய் அவசர பதிவு செய்துவிட்டு, நேரே, தாடி மழிக்க முடி சீர் திருத்தகத்துள் நுழைந்தேன். உடன் வந்த மற்றொரு அலுவலக நண்பரிடம், "பார், வெங்கடேஷ் சலூன்" என எழுதியிருக்கிறது. கட்டாயம் ஆந்திராவிலிருந்து வந்தவர் தான் இந்தக்கடையின் முதலாளியாக இருக்க வேண்டும்.", என்றேன். அவரும் "எப்படி, பார்க்கலாம், உள்ளே பேச்சு குடுத்து, கண்டுபிடிப்போம்," என்றார்.

மழித்தல் ஆரம்பமாயிற்று. எரிச்சல் அதிகமாக இருந்தது. அங்கு ஒரு மினி இந்தியாவே வேலை செய்து கொண்டிருந்த்து. 5 நாற்காலிகள். முதல் நாற்காலியில் மராத்திய சிறுவனுக்கு, மராத்தி ஒருவரே சவரம் செய்து கொண்டிருந்தார். அடுத்தது, ஒரு காஷ்மீரி பெரியவருக்கு, ஒரு ராஜஸ்தானியும், அடுத்து ஒரு மராத்தி, அந்தப் பெரியவரின் பேரனுக்கும் சவரம் செய்துகொண்டிருந்தனர். சேட்டை செய்யும் பேரனை கடைக்கண்ணால், பார்த்துக்கொண்டே காஷ்மிரியில் அவனை சரியாக உட்காரச்சொல்லி எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தார். அடுத்து நான். பார்த்தால், கிராமங்களைச் சேர்ந்த மராட்டியர் போன்ற நெடு நெடு தோற்றம், தாட்டியான முகவெட்டு கொண்டவர், முகச்சவரம் செய்துகொண்டிருந்தார். அடுத்து அந்த கடை முதலாளி போலும், அதிசயமாக, மிக சுத்தமாக, சfபாரி அணிந்திருந்தார். அவர் வேலை 'முடி'ந்த ஒரு வாடிக்கையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டார். பின்னர், உள்ளே சென்று, விளக்குமாறு எடுத்து தரை முழுதும் கூட்டி, முடிகளை ஓரம் கட்டி, சுத்தப்படுத்தினார். அவரது செய்கை எனக்குப் பிடித்தது. முதலாளி. நினைத்தால், அவர் ஆட்கள் யாரையாவது தரையை கூட்டச்சொல்லியிருக்கலாம்! ஆனால், அவர்கள் வேலையாக இருந்ததால், அவரே செய்தார். அதற்குள், எனது முகத்தில் கத்திவைத்த பணியாளர், முதலில் மராட்டியில், "சே, என்ன மழிக்க வரவே மாட்டேன் என்கிறது?" பின்னர் ராஜஸ்தானியிடம், ஹிந்தியில் அதே குறையையும், கூறினார். " நான் என்ன செய்வது? நான் என்ன செடி கொடியா வளர்த்து வெட்டசொல்கிறேன்?" என மனதுள் எண்ணிக்கொண்டேன். நானாக வீட்டில் செய்வதாலோ, என்னமோ, எனது முடிகணுக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது போலும். இதற்கும் தினசரி சவரம் செய்துகொள்பவன் நான்.
முதலாளி, மீண்டும் பக்கத்து நாற்காலி அருகே வந்ததும், தூய தமிழில், "ஒக்...., என் கீழ ஒக்கார்ந்துருக்கானே, ஒரு தா...., எந்த ஊர்காரன்னே தெரில, எதோ காட்டிலேர்ந்து வந்துருப்பான் போல்! ஷேவே பண்ண முடில," என்றான் கடுப்பாக!
தொன்று தொட்டு, சங்க காலத்திலிருந்தே, எந்த ஒரு வார்த்தையைச் சொன்னால், அது மிகவும் அவமானமாக கருதப்பட்டதோ, எந்த வார்த்தை காலம் காலமாக பல பெயர்கள் பெற்று, காலத்தில் அழியா கெட்ட வார்த்தையாக இருக்கிறதோ, அதை முகத்தில், கத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருவன் மிகவும் அருகே, மனதுக்குள் குண்டைப்புதைப்பதைச் சொன்னால், யாருக்கு சினம் வராது? பொங்கியெழ வேண்டாமா?
இருந்தாலும், "சினம் காக்க, சினம் காக்க," என மனத்துள் சொல்லிக்கொண்டு, "உங் ஊர் தா...தான்!" ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம். கத்தி நின்றது. அவன் இதனை எதிர்பார்க்கவில்லை போலும்!! மழித்தல் அதிசயமாக கத்திகொண்டு, ஆனால் ரத்தமின்றி சுமுகமாக முடிந்தது. அருகில் இதை கவனித்த முதலாளியும், எனக்கு மழித்தவரும், தமிழர்கள்!!! தந்தை, மகன்!
தந்தை எதோ கூற முற்பட்டார்.
"முன்ன ஒரு பத்து நாள் முன்ன என் கிட்ட பண்ணிகிட்டீங்களோ?"
"இல்ல, ரெண்டு நாளா தான் நான் பூனாலயே இருக்கேன்."
"இல்ல சார், எனக்கு நினைவு இருக்கே, இதே முகம், இதே ப்ராப்ளம்...."
"..இதே திட்டும் திட்டினீங்க போல? ஒருவேளை நீங்க்ச் தீர்க்கதரிசியோ, எனக்கு தெரியாத தம்பியோ? எங்க அம்மாவைத்தான் கேக்கணும்; எங்க குடும்ப விஷயமெல்லாம் நல்ல தம்பி பேசுனாரு," என்றேன் நக்கலாக, குரலின் ஒலியை உயர்த்தாமல்.
"தம்பி சொன்னத சார், மறக்கல போல...! " பேச்சை மாற்ற விரும்பி, "சார், செல்fப் ஷேவிங் செய்வீங்க போல?"
"ஆமாம்."
"அதான் சார், முடி இப்படி ஆச்சு. அதுவும் இந்த மூணு ப்ளேடு போட்டு புதுசு புதுசா வருதுல்ல, அது தாறுமாறா வெட்டும். க்ராஸ் ஷேவிங் செஞ்சாலும் இதே கதிதான். சாதாரண முழுப் ப்ளேடு இருக்கே, அத வெச்சு, ஒரு பத்து நால் ஒரே திசைல செய்ங்க, அப்புறம் சோப்பு போடறத தவிருங்க, தண்ணிதான். இப்படி பண்ணீங்கன்னா, சரி ஆயிடும். ஒண்ணு பண்ணுங்க சார். பேசாம இங்க வாங்க, ஒரே வாரத்துல நான் சரி செய்றேன்," என்றார்.

நான் அமைதியாக," என் முக சரியாக இல்லாததற்கும், முடி சரியாக இல்லாததும் என் தவறும் இல்லை, என் தாயின் தவறும் இல்லை. நாம், நாடோடிகள், வெறும் நாடோடிகள் கிடையாது; கலாச்சார நாடோடிகள். எங்கோ பிறந்து, எங்கோ, எண்சாண் வயிற்றை நிரப்ப ஓடிவந்து, இப்படி ஆண்டவன் அருளால், நிலைத்து நிற்கிறோம். அங்கே அவரவர் பாஷையையே பேசி, வந்த ஊரின் ஒரு அங்கமாகவே உங்கள் குடும்பம் மாறிவிட்டது அறிந்து மகிழ்ச்சி. கடையும் போட்டீர்கள்; மகனும் உதவியாக உள்ளார்; ஆனால், பணத்தை சொல்லிக் கொடுத்த நீங்கள் பண்பை சொல்லிக் கொடுக்கவில்லையே? மிக சில நொடிகள், மழிக்கும் வரை. முடிந்தால் செய்யப் போகிறீர்கள்; முடியவில்லையென்றால், "முடியல" என்று சொல்லப் போகிறீர்கள். அதற்கு எதற்கு கடுஞ்சொல்லை உபயோகப்படுத்த வேண்டும்? காரணமில்லாமல்? உங்களுக்கு இருக்கும் பதைப்பு, உங்கள் மகனுக்கு இல்லையே? நீங்கள் கூறும் சமாதானங்களை விட, அவர் ஒரு வார்த்தை, "மன்னியுங்க, தெரியாம சொல்லிட்டேன்," என்று சொன்னால், எனக்கு மனம் சற்று ஆறியிருக்கும். அவருக்கோ, நினைவேயில்லாமலிருப்பது போல் நிற்கிறார். நான் சொன்னது போல், நாம் நாடோடிகள், நமது செயல்கள், வார்த்தைகளிலிருந்து தான், எவரும், "ஓ, இவன் இந்த ப்ரதேசத்தைச் சேர்ந்தவன். இப்படி பேசுகிறான், இப்படி நடந்து கொள்கிறான்," என்று கவனித்து, அவனது இனத்தவரும், நாட்டினரும், அவனைப் போலவே இருப்பார்கள் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மலையாளிகள் மிகவும் ஒற்றுமையானவர்கள், பஞ்சாபிகள் உழைப்பாளிகள், தமிழர்கள் என்றாலே, "தமிழ் நாட்டை தாண்டி வர மாட்டான், வந்தால், இந்தி பேசத்தெரியாது, சாவல் (அரிசி) சாப்பிடாமல் அவனால் இருக்க முடியாது; இரண்டு தமிழன் பார்த்துக் கொண்டால், ஆங்கிலத்தில்தான் பேசிக் கொள்வார்கள், " என்றெல்லாம் கேலி பேசும் நிலைக்கு உள்ளதை நம் நன்னடத்தைதான் மாற்றும்.உங்களுக்கும் அதில் பங்குள்ளது. வருகிறேன் என்று சொல்லி நகர்ந்தேன்.

தந்தையோ மீண்டும், "உங்கள மாதிரி நல்லது சொல்றதுக்கு எந்த நாய்க்கும் தோணல சார். அப்பப்ப வந்து போங்க," என்றார்.

நான் மெதுவாக, "என்னங்க, பார்த்து, 'இந்த நாய்க்கு'ன்னு பையன திட்றீங்களா தெரியல. நீங்க சொன்னதப் பார்த்தா உங்கள நீங்களே திட்டிக்கிற மாதிரி எனக்கு தோணுது. எதுக்கு அப்படி இருக்கணும்? நல்ல அப்பாவா இருங்களேன்; சரி. என் கழுத்தில் கை வைத்தும் வெட்டாமல் விட்டதுக்கு நன்றி," என்றேன்.(அவர் - அந்த அப்பா என்ன சொன்னார் என்பதை மீண்டும் படித்துப் பாருங்கள்!)
அவரும் தூய தமிழில், "நன்றி" என்றார்...வழக்கமாக தேங்க்ஸ்.. என்பார்கள் - இரண்டு தமிழருள் வேற்று மொழி எதற்கு?

வி.வ.போ-2 - ப்ளாஸ்டிக் தேவை!

ப்ளாஸ்டிக் மரங்களைக் காக்கிறது!

"சரி, இவன் வயிற்றில் அடித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. அதனால்தான் சந்திரசேகரன் இதை எழுதுகிறான்," என்ற குரல்கள் கேட்டாலும், ப்ளாஸ்டிக் எனும் புரட்சிப் பொருள் வந்ததினால் எத்தனை சிக்கல்கள் தீர்ந்துள்ளன, எத்தனை நன்மைகள் நமக்கு கிடைத்துவருகிறது என்பதை முன் வைக்கிறேன். தவறிருந்தால் திருத்தவும்.

முதல் எதிர்ப்பு ப்ளாஸ்டிக் பைகளுக்கு. பைகள் பல்லாயிரக்கணக்கான பொருட்களை தூக்கிச்செல்ல உருவானவை. மிக குறைந்த எடை, கிழியாமலிருக்கும் பலம், உள்ளே இருக்கும் பொருள் இன்னதென்று பையை பிறிக்காமலே பார்க்க வாய்ப்பு - இவை தான் ப்ளாஸ்டிக்கை நமக்கு புகுத்தியது. இவ்வனைத்து பயனும் இருந்தாலும், "இது மக்கா பொருள் (காற்று, மண், நீர், நுண்கிருமிகள் எதிலும் கரைந்து போகக்கூடிய பொருள்) . எனவே இது நிலத்தை, நீர்நிலையை, மண்ணை கெடுத்துவிடும்; மாடுகள் பைகளைத் தின்றுவிடுகின்றன; அதனால், மலச்சிக்கல், உடல்கெடுதல் போன்ற பல ப்ரச்னைகள்" என்கிறார்கள்.

ஆனால், இப்போது, 20 மைக்ரானுக்குக் கீழ் உள்ள (1 மைக்ரான் என்பது 1 செண்டிமீட்டரில் 1000த்திலொரு பங்கு!) குறைந்து தடிமம் உள்ள பைகளை தயாரிக்கக்கூடாது என்றும், மறுசுழற்சியில் உபயோகிக்கக் கூடாதென்றும் அரசாங்கம் விதி செய்துள்ளது. மிகவும் அக்கறையுள்ள அரசாங்கம் என் நீங்கள் துள்ளிக்குதித்தால், அதற்குக் காரணம் வேறு. IPCL போன்ற நிறுவனங்கள் பாலிமர் (Poly Ethylene) தயாரித்து வந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் எல்லா பாலிமர் நிறுவனங்களையும் வளைத்துப் போட்டு தனதாக்கிக் கொண்டது. அவர்கள் தயாரித்த பாலிமர் குருணைகளைக் கொண்டு, எத்தனை முயற்சித்தாலும், 20 மைக்ரானுக்கு கீழே மெலிதான தடிமத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை!! என்ன செய்வது? பிடி, அரசாங்க வழி!! அங்கிங்கே அலைந்து டெல்லிவரை போய், அவர்கள் கையாலாகாத தனத்தையே சட்டமாக்கி விட்டார்கள்! அப்படியும் புழக்கத்தில் வரும் பைகளை, வீதிகளில் எறிகிறவர்களை தண்டியுங்கள், ப்ளாஸ்டிக்கை எதுக்கு எதிர்க்கவேண்டும்?

குப்பை பொறுக்கி, அதில் சீவனம் நடத்தும் மாபெரும் கூட்டம் நம் நாட்டில் உள்ளது தெரியுமா? அவர்களைப் போய் கேளுங்கள், "அட, 20 மைக்ரான் என்ன 2 மைக்ரான் இருந்தாக்கூட எங்களுக்கு கண்ல தப்பாது. எத்தன பேப்பர் பொறுக்கினாலும், 10 ப்ளாஸ்டிக் பைங்களல்ல கிடைக்கிற காசு எங்களுக்கு பெரிசு. அதை ஏன் சார் தடை செய்றாங்க?" என்று!! இவர்களுக்கென்ன பதில்?
மாட்டு உரிமையாளர்கள் ஏன் மாட்டை ரோட்டில் விடவேண்டும்? ஊரெல்லாம் மேய்ந்து தின்று, பாலை மட்டும் தான் எடுத்துக் கொ(ல்ல)ள்ளவேண்டும் என எண்ணும் சின்ன புத்திக்காரர்களைக் கண்டிக்காமல், பை தயாரிப்பை ஏன் நிறுத்த வேண்டும்?

துணிகள், உபயோகப் பொருட்கள் வாங்கும் பைகளை பல நிறுவனங்கள் பேப்பரிலும், சணலிலும் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆனால், பேப்பர் தயாரிக்க உதவும் கரும்புச் சக்கையும், சணல் நாணல் செடிகளும் திடீரென எப்படி பன்மடங்கு வளரும், பயிரிடப் பெறும்? supply-demand எனும் தருதல்-தேவை எப்படி ஈடுசெய்யமுடியும்? அல்லது மரச்சக்கைகளையும், காட்டுக் கொடிகளிலும்கூட மூலதனமாய் வைத்து, பேப்பர் செய்யமுடியும் என்று சொல்பவர்கள் மரத்தை அழிக்கக் கூடாது என்னும் எதிர் வாதத்துக்கு என்ன பதில் சொல்வார்கள்?

அதே போல், இந்த பைக்குப்பைகள், தாருடன் சேர்த்து உருக்கி போடப்படும் சாலைகள் 15- 20 ஆண்டுகள் னாலும், பழுதடைவதில்லை! என்வே, தமிழக தென்மாவட்டங்களில் பல இடங்களில் பரீட்சார்த்தமாக இவ்வகை சாலைகள் போடப்பட்டுள்ளன.

மக்கும் ப்ளாஸ்டிக்கும் இப்போது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள், கோல்fப் என விளையாடப்படும் 'T' க்கள் விளையாடும் களத்திலேயே விடப்படும்- அந்த டீக்கள், போன்ற சுற்றுப்புற சூழலை கெடுக்கலாம் என்று சந்தேகத்துக்கு உரிய பொருட்கள் செய்ய இந்த மக்கும் ப்ளாஸ்டிக்குகள் உபயோகப் படுகின்றன. சோளம், பருத்தி, விளக்கெண்ணை போன்ற எண்ணை வித்துக்கள் எண்ணையெடுக்கப்பட்டு பின் எறியப் படும் சக்கையிலிருந்து இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உருவாகின்றன. கெடும் பண்டங்களை வைக்கும் ஜாடி, பை போன்றவை செய்யவும் இந்த மக்கும் ப்ளாஸ்டிக் உதவுகின்றன. பண்டம் கெட்டால், அதிலுள்ள கிருமிகள், இந்த ப்ளாஸ்டிக்கையும் உண்டுவிடும்! மற்ற மக்கும் ப்ளாஸ்டிக்குகள் சூரிய ஒளியிலுள்ள நீல ஒளி கதிர்களால், மக்கிப் போகும்.

அடுத்தது - மிக சிறிய உதாரணம்- பல் துலக்கும் குச்சியிலிருந்து எல்லா ப்ளாஸ்டிக்கா? என்போர், சற்றே சிந்தியுங்கள். சராசரியாக ஒரு நகரத்தில், ஏறத்தாழ 50 லட்சம் பேர் தினமும் பல் துலக்குகிறார்கள். அதில் ஒரு நூறு பேராவது வேப்பங்குச்சி, ஆல்விழுது போன்றவற்றை உபயோகிப்பார்களா? சந்தேகமே. ப்ளாஸ்டிக் ப்ரஷ் மட்டும் இல்லாவிட்டால், இது எப்படி சாத்தியம்? விதண்டவாததுக்காக, நான் கையாலேயே தேய்ப்பேன் எனச் சிலரும், ஏன் நாமும் கிராமத்தவர் போல், வேப்பங்குச்சி வாங்கலாமே, உபயோகித்து எறிதல் (use and throw) கொள்கைக்கும், சுற்றுப்புர ச்சுழலுக்கும் நல்லதாயிற்றே என்று சொல்பவர்க்கும் ஒரு சிறிய விளக்கம்:சரி, குச்சிவாங்குகிறோம், முதல் நாள் சராசரியாக ஒரு 4 மரத்தை மொட்டையடித்து குச்சியெடுத்து, வெட்டி ஊருக்குள் அனுப்பிவைத்தால் ஒரு நாள் பல் துலக்கல் வைபவம் நடைபெறும். மறுநாள்,,மாதம் முழுதும்? அப்படியே, மரம் மேல் மரம் வெட்டிக்கொண்டே போனால், கொஞ்ச நாளில், வேப்ப மரம் என்பதை, படத்திலும், ஒளிப் பேழையிலும் தான் காணலாம். இது காடுகளை அழிக்கும் காரியமா? மத்த பிற உபயோகங்கள் உள்ள வேப்பமரம், வேறு எங்கு தேடுவது? அடுத்த ஊர்காரன், அவன் ஊருக்குள் பல் துலக்க அங்குள்ள மரங்களைக் காலி செய்துவிட்டதாகக் கேள்வி!!

அதேபோல், நாற்காலிகள். மரத்தால் அறுத்துச் செய்யும் நாற்காலிகள் வீடுகளுக்கு உதவுமே தவிர, பெரிய மாநாடு, கூட்டம், கல்யாண வைபவம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உதவாது. இரும்பில் வளைத்து வெல்டிங் செய்து தயாரிக்கப் படும் நாற்காலிகள், நகர்கையில் சப்தம் செய்யும், சுற்றி விளையாடும் குழந்தைகளுக்கு பத்தாகவும் இருக்கும். எடுத்துப் போட்டு, ஓரமய் அடுக்கி வைக்கும் வேலைக்கும் மரமோ, இரும்போ, உதவாது. கனமாக இருக்கும். மோல்டிங் செய்யப்பட்ட நாற்காலிகளால் எத்தனை நன்மை? லேசானது, பல நிறங்களில் வரும், பார்க்கவும் ஒரே மாதிரி வரிசைக்கு அழகு சேர்க்கும், இதன் வாழ்க்கை கட்டாயும் ஒரு 20 ஆண்டுகளாவது வரும், பழுதுபார்க்கும் சிரமம் கிடையாது, இப்படி அடுக்கிக் கொண்டேபோகலாம்.

மிக முக்கியமான மற்றொரு உபயோகம், வாகனங்கள். எத்தனைக்கெத்தனை லேசாக உள்ளதோ, அத்தனை எரிபொருள் மிச்சம். எந்த வடிவிலும் ப்ளாஸ்டிக்கையும், நாற்கண்ணாடி வைத்து ரெசின் பூசிய (fibreglass, carbon fibe etc.) ப்ளாஸ்டிக்கினால், எத்தனை குறைவான எண்ணிக்கையில் வேண்டுமானாலும் ஒரு பொருளைச் செய்யலாம். இன்று பறக்கும் விமானம், விரைவு ரயில்கள், புதிய ரக ஊர்திகள் (கார், ஸ்கூட்டர்) இத்தனையும் ப்ளாஸ்டிக் பாகங்கள் நிறைந்தனவே!

சட்டை பட்டம், சீப்பு, கண்ணாடி டப்பா, கைப்பிடி, பை க்ளிப், துணிகள் மாட்டும் ஹாங்கெர்கள், அழகழகான் தலைக்ளிப்புகள், மற்றும் எத்தனை தினசரி உபயோகத்துக்கான பொருட்கள். இத்தனைக்கும் மாற்று? ப்ளாஸ்டிக்குக்கு பதிலாக?

ஏரி, குளங்களில், நிலத்தடி நீர் உரிந்து போகாமலிருக்க, பல மாநிலங்களில், மண்ணுக்கடியில், 2 அடி ஆழத்தில் ப்ளாஸ்டிக் பிfலிம்களை விரித்து வைக்கின்றனர். பதப்படுத்த, உணவு பண்டங்கள் கெடாமலிருக்க, உரைகிடங்குகளில் தானியங்கள் கெடாமலிருக்க, சிமெண்ட போன்ற காற்றால் கெட்டித்துப் போகும் பயனுள்ள பொருட்கள் கெடாமலிருக்க, இப்படி, ப்ளாஸ்டிக்கிற்கு மாற்று இல்லாத உபயோகங்கள் ஆயிரமாயிரம்.

மற்றொரு அபத்தமான ஒரு வாதம்- CFC எனும் நச்சு பொருட்கள் வெளியேருவதால், refrigerator எனும் குளிர்பதனப் பெட்டி உபயோகிக்கக் கூடாது என்று! 2002ல் Montreal Protocol எனப்படும், ஒப்பந்தம், எல்லா வர்த்தக நாடுகளும் போட்டுக்கொண்டுள்ளன. அதன்படி, CFC உருவாகும் தொழில்நுட்பத்தை ஓரங்கட்டிவிட்டு, HCFC, நீரை வைத்து தயாரிக்கப்பட்ட காஸ் உள்ள தொழில்நுட்பத்தையும் நாடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் இந்தியா உட்பட, cfc ஐ நிறுத்தி பல ஆண்டுகளாகிவிட்டன. இந்த பாலிமர் தயாரிக்கும் தொழிலில், இந்தியாவுக்குக் கேடு செய்யும் பன்னாட்டு நிறுவங்களை வேண்டுமானாலும் நான் கண்டிக்கலாம். அங்கே, அமெரிக்காவில் காலாவதி ஆகிப்போன பல தொழிற்சாலைகள் கருவிகள், சாதனங்களை அப்படியே, அணு அணுவாகக் கழற்றி இந்தியாவில் நிறுவிய ஐ.சி.ஐ. டூபாண்ட், ஜீ.இ., டொவ், போன்றவர்களே ஓசோன் மண்டலத்தை பொத்தல் போட்டு, இப்போது விட்டது சனியென அவற்றை கடலில் தூக்கி எறியாமல், இங்கே தொழிற்சாலை போடுகிறேன் பேர்வழி என வந்து கடை விரித்துள்ளனர். ப்ளாஸ்டிக்கை கண்மூடித்தனமாக எதிர்க்காதீர்கள்.
தவறான சிந்தனையில் எந்த விஞ்ஞானத்தொழில் நுட்பத்தையும் உபயோகிப்பவர்களை எதிர்த்து நில்லுங்கள்!!

08 April 2006

தெரிந்த ஊர் தெரியாத செய்தி-3




குன்றத்தூர்!!

சென்னையின் அருகேயுள்ள குன்றத்தூர் முருகன் கோயில் எல்லாரும் அறிந்ததே! ஆனால், அதன் வரலாற்றுச் சிறப்பும், அவை சீரழியும் அவலமும் நமக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும்.!! முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது கைப்பக்கம் சேக்கிழாரின் கோவில் உள்ளது. இடப் பக்கம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன!
சேக்கிழார் அவதரித்த ஸ்தலம் இது. அவரது இல்லம் கோயிலாகியுள்ளது. ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டிய இடம் குன்றத்தூர்.
கற்காலத்தில் நாகிரீகம் முளைத்துவிட்டதை குறிப்பது போல், குமரனின் கோயிலுக்கு மேற்கே பரந்து கிடக்கும் ஏரியும், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கி.மு. 1000 ஆண்டு எனக் கணிக்கப் பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் களஞ்சியமே கிடைத்துள்ளது!! குழிகளில் ஸ்வஸ்திகா அமைப்பில் தளம், கத்தி, மணிகள், பானைகள், குவளைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இனி கோயில்களுக்கு வருவோம்.
எல்லாரும் அறிந்த நாகேஸ்வரர் கோவில், சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்டது. மலைமேலிருக்கும் குமரன் கோவிலும், திரைப்படங்களில் தோன்றியதால், நல்ல நிலையில் உள்ளது.
ஏறத்தாழ 900 ண்டுகள் முன், சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், விஜயநகரப்பேரரசு காலத்தில் ஆரம்பித்து, 16ம் நூற்றாண்டுவரை இக்கோயில்கள் நன்கு பேணியிருக்கக்கூடும். அதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம். மூன்றாம் குலோத்துங்கனின் மகளை மணந்த அழகிய சீலன், இக்கோயிலை நன்கு பேணினான். அவனே சிதம்பரம் நடராசர் ஆலயத் தெற்கு கோபுரத்தையும் கட்டினான். காஞ்சியைசுற்றியுள்ள பல கோவில்கள் சீரமைக்கப் பட்டதில், கந்தழீஸ்வரர் கோவிலும் ஒன்று.
மற்றொரு கோயில் ஊரகப்பெருமாள் கோயில். இங்கும் முன் கோபுரத்து இரண்டுநிலைகள் உடைந்து போய்விட்டன! பூசைக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தாலும், பக்க மண்டபங்கள் பழுதாகி விழுந்து கல்வெட்டுக்கள் காணமுடியாமல், மேலே மூடிக்கிடக்கின்றன!
ஆனால், 1990ல் லய உழவாரப்பணி குழுவினரால் சீரமைக்கப் பட்ட இக்கோயில்கள் சரியாகப் பராமரிக்கப் படாமலும், நேரத்தில் திறக்கப் படாமலும் உள்ளன! கோயில்களின் வளாகங்கள் பாழடைந்து காணப்படுகின்றன! கோபுரத்தில் சிருங்கார சிற்பங்கள் காணப்படுகின்றன. விஜய நகரக் கலைப்பாணி அழகாகத் தெரிகிறது. தூண்களில் கொடிசுற்றியதுபோன்ற அழகிய தூண்கள் அதில் கிழிகள் கொஞ்சுவது போன்ற சிற்பங்கள், அத்தனையும் அழகு மங்கி வருகின்றன!
மிகவும் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சி, ஒரேடியாய் ஒடுங்கிவிட்ட வாலீஸ்வரர் கோயில்! பெருமாள் கோவிலுக்கு மிக அருகில், பின்னாலேயே உள்ள கோவில் வட்டவடமாகிய கஜப்ருஷ்டம் பாணியில் அமைந்துள்ளது. கல்வெட்டுச்செய்தி சுவர் முழுதும் காணப்பட்டுள்ளது. ஆனால், முழுதும் சிதைந்து போய், முட்காடு சூழ, அருகருகில் வீட்டைக்கட்டிவிட்ட ஆக்கிரமிப்பாளர் மேலும் கோவிலை கண்ணிலிருந்து மறைக்கச் செய்ய, முழுதுமாய் சீரமைக்கவேண்டிய அவசரத்தில் உள்ளது.

கல்வெட்டாரய்ச்சியாளர்கள் படியெடுத்து விட்டதாக அறிகிறேன். கோவில்? சிவலிங்கம், அருகிலுள்ள தகரம் வேய்ந்த ஒரு அவசரக் கோவிலில் தஞ்சம் புகுந்து விட்டார்; அம்மன் கந்தழீஸ்வரர் ஆலயதுக்கு ஓடிவிட்டாள்! அதைவிடக் கொடுமை, சரிவர பாதுகாக்கப் படாத கல்வெட்டுக்கள். சாலை நடுவிலும், ப்ரகாரங்களிலும் இறைந்துகிடக்கும் கல்வெட்டுக்கள் காலம் போகப் போக, நம் சரித்திரத்தை அழித்துக் கொண்டு போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவில்களும்,சரித்திரங்களும் மறையும் அபாயம்!!





கோயில்களும், அதோடு சரித்திரங்களும் மறையும் அபாயம்!!

தென்னிந்திய சரித்திரம் என்று பாட புத்தகங்களில் இருப்பவை என்ன? "சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்டது, திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டது. இல்லை மிஞ்சிப் போனால், ராஜ ராஜன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான்.." இதைத் தவிர என்ன பெரிதாக இருக்கிறது? வெளியிலிருந்து வந்து நம்மை ஆண்ட முகலாய அரசர்களுக்கு சரித்திரம் தரும் முக்கியத்துவம், தென்னிந்திய, தமிழக வரலற்றுக்கு சரித்திர சிரியர்கள் தந்துள்ளனரா?

எங்கோ நடக்கும் அயோத்தி கோவில் ப்ரச்னை, பாகிஸ்தானிலும், பங்களாதேசத்திலும் அழியும் இந்து மதக் கோவில்களைப் பற்றி வாய் கிழியக் கூவும் பலருக்கு, நம் கண் முன்னே, ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து மக்கள் நடமாட்டம் போய், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்தும், கண்காணிக்கப் படாமல், அழியும் அவலம் இன்று நடந்தேறி வருகிறது. ஆலயங்களுக்கு சொந்தமான நிலத்தை அனுபவிக்கும் பெரும்பாலான குத்தகைதாரர்கள், பல தலைமுறையாய் கோவிலுக்குத் தரும் பணத்தைத் தராமலும், தட்டிக் கேட்டால் அதற்கு பதில் தராமல், அரசியல் ப்ரமுகர்கள், குண்டர்கள் போன்றோர் துணையுடன், சாமி, சாமி இருவருக்குமே கையை விரிக்கும் கூத்து, இதே தமிழகத்தில் தான் நடக்கிறது!

அறநிலையத்துறையில் அறமிருக்கிறதா என்று திருக்கோவில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள பலர் கூறுகின்றனர்- கொஞ்சம் பைசா புழங்கும் கோவில்களுக்குத் தான் மவுசு; உண்டியல் எண்ணும் நாளில், ஒரு பொது மக்கள் பிரதிநிதி, தர்மகர்த்தா, மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கண்காணிக்கவேண்டும், கணக்கு எழுத வேண்டும். நடப்பது என்ன?

அதிகமான் கோவில்களில், இவர்கள் ஒருதலைபட்சமான குழுவாகச் செயல் படுகின்றனர். முதலிலேயே பேசி வைத்துக் கொண்டு, உண்டியலெண்ணும் இடத்தைச் சுற்றி துண்டு விரித்து விடுவர்! ஒரு நூலை (கயிறு) பணமூட்டையின் குறுக்கே போட்டு, பாகங்கள் பிரிப்பர். அதை அப்படியே துண்டுகளில் தள்ளி விடுவர்; எண்ணுவது கிடையாது! மீதி (குரங்கு அப்பத்தைப் பூனைகளுக்கு பிரித்த கதைதான்!!) கடவுளுக்கு, கணக்குக்கு!! எப்படி இருக்கிறது? இதற்குப் பேசாமல், கோவிலையே விற்று காசு பண்ணிவிடலாம்!! மேலும் சில இடங்களில், நிலத்தை ஆக்ரமிப்பு செய்தவர்கள், பண, அரசியல், அதிகார பலத்துடன், குத்தகைப் பணம் கேட்கப்போனால் அடி உதை குடுத்து அதிகாரிகளை விரட்டி விடுவதுண்டாம்! பாக்கி சிறு சிறு புராதன கோவில்கள், சில இடங்களில் ஆறு கட்டுப் பிரகாரம் இருந்த கோவில்கள் போன்றவை கூட, சிதிலமடைந்து, பாம்புகளும் வவ்வால்களும் வசிக்கும் இடங்களாக மாறிவிட்ட அவலம் கண்ணிருந்தும் குருடர்களாய் நம்மை மாற்றிவிட்டது!

ஒரு சில கோவில்களை இந்த கட்டுரைகள் மூலம் நாம் பார்க்கலாம்! சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டுக்களை படியெடுத்து (அதிலுள்ள எழுத்துக்களை குறியெடுத்து, புத்தக வடிவிலும், ஒளிப் பேழைகளாகவும், நுண்சுருள் படங்களாகவும் பதிந்து வைப்பது) அதோடு, அந்தக் கோவில்களின் பராமரிப்பைக் கவனிக்கிறார்களா? இல்லை. நமது அரசியல் சட்டங்களும், ஒரு விஷயத்தில் பல துறைகள் மூக்கை நுழைப்பதும் சரித்திரத்தோடு, கோவில்களையும் மீட்கும் பணியில் இடைஞ்சலாக இருந்து வருகின்றன!! ஒரு சில கோவில்களில், படியெடுப்பு நடந்து விட்டது. ஆனால் கோயில்?

மீண்டும் பாழ்! படியெடுக்கும் பணி செய்வோர், ஏன் அறநிலையத் துறை, சமூக நலத்துறை, பொதுப் பணித்துறை போன்ற துறையினரையும் கலந்தாலோசித்து, ஏன் பணியில் இறங்கக் கூடாது? ஏன் ஆலயங்களை மீண்டும் உயிர்பிக்கக் கூடாது?

நில ஆக்ரமிக்கும் நோக்கத்துடன், பணம் பண்ணும் நோக்கத்துடன் புதுப் புது ஆலயங்கள் புற்றீசல் போல் எழுகின்றனவே? அதற்குத் தடை விதிக்கவும், அவ்வாறு கோயில் கட்டியே ஆகவேண்டும் எனும் நன்நோக்கத்தோடு முன்வரும் ஆர்வலர்களை அதே ஊரைச் சுற்றியுள்ள புராதனக் கோயிலை புதுப்பிக்க வேண்டும் எனச் சொல்லவும் சட்டங்கள் வருமா?

அவ்வாறு பராமரிப்பு செய்யும் கோவிலில் பொதுமக்களே ஒரு குழு அமைத்து, கோவில் நிர்வாகம், நில வருவாய், உண்டி வருவாய் போன்றவற்றை பேணி, கோவிலும், அதைச் சார்ந்த பணி செய்பவர்களையும் பாதுகாக்கும் ஒரு பொதுஜன அமைப்பு அமைக்கவும் சட்டங்கள் புதுப்பிக்கப்படுமா?

சாதி என்னும் பேயைக் கட்டிக்கொண்டும், பழைய கதை பேசிப் பேசி தர்க்கங்களில் வீழ்வதையும் விட, ஆக்கபூர்வமான் புதிய சிந்தனை எத்தனை பேருக்கு எழுந்துள்ளன? வெளியே நாத்திகம் பேசி, உள்ளே மனைவிமார்களை கோயில்களில் விளக்கு பூஜை செய்யவும், பால்குடம் சுமக்கவும் விடும் தலைவர்கள் பின், அடிவயிறு கிழிய பழஞ்சரித்திரம் பேசி, கொடுமை நடந்துவிட்டதே நடந்துவிட்டதே எனப் பேசி, படிக்காதவர்களையும், பேதைகளையும், அடிமட்டதொண்டர்களையும் தவறான மூளைச் சலவை செய்யும் பொய்யர்களிடமிருந்து நாம் எப்போது வெளியே வரப் போகிறோம்??
கோவில்களை முன்பு அரசர்கள் மக்கள் கூடும் சபையாக மாற்றி, ஆடல், பாடல், கல்வி, நீதி போன்றவை மிளிரச் செய்த காலம் எங்கே? இன்றும், அக்கோயில்களை வழிபாட்டுக்கு உரிய தலமாக மாற்றி, அங்கேதான் ஊரார் திருமணம் மற்றும் எந்த நற்காரியங்களை செய்யவேண்டும், கோவிலுக்கே அதற்குண்டான பணத்தை செலுத்த வேண்டும் எனவும் ஏன் சட்டங்கள் இயற்றக் கூடாது? கல்வெட்டுக்கள், சிலைகள் போன்றவற்றை சிதைக்கும் மக்கள், அல்லது அதை காலச்சுவடுகளிலிருந்து நீக்க முற்படுபவர்க்கு சட்டத்தில் கடுமையான தண்டனையை ஏன் செயல்படுத்தக்கூடாது?


சரித்திர ஆய்வாளர்களுக்கும், சரித்திர ஆசிரியர்களுக்கும் இதில் மாபெரும் பங்கு உள்ளது. ஊருக்குள் உள்ள சரித்திர பிரசித்தி பெற்ற இடங்கள், மக்கள், போன்றவற்றை, மாணாக்கர்களுக்கு சுவைபட சொல்ல வேண்டும். அதுபோல் ஏதேனும் அவர்கள் கண்ணில் பட்டால், அதை அரசின் கவனத்துக்கும், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் பார்வைக்கும் உடனே கொண்டுவரச்சொல்லவேண்டும்.

400 ஆண்டுகள் பல நாடுகளூக்குச் சென்று, வெற்றி, வாணிபம், ஆன்மீகம் புகுத்திய சோழர்கள் ஆட்சி, பேரரசு எனக்கூறப்படும் அக்பர் ஆட்சியை விட சாலச் சிறந்தது என்பதையும், கல்வெட்டுக்கள் படிப்பு, அகழ்வராய்ச்சி, போன்றவற்றைச் செய்ய நிஜத்தில் நமது தேசத்தில் மிகக் குறைவானவர்களே உள்ளதைப் பற்றியும் உண்ர்ச்சிபூர்வமாக இளைய சமுதாயத்துக்கும், மாணவர்களுக்கும் சொன்னால்தான், அவர்களுக்கு வரலாறு எத்தனை சுவைமிக்கது, என்பது புரியும். அது எப்படி சிதைந்தது வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள் இங்கே புகைப்படமாகத் தந்துள்ளேன்.


ஆலய உழவாரப் பணிக்கென தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு சிலருள், ராமமூர்த்தி எனும் 70 வயது இளைஞர்(!) செய்துவரும் பணி மகத்தானது!
அவர் கோயில்களைத் தேடிபோகிறார், தனது சொந்த பணத்திலும் நல்லார் சிலர் உதவியுடனும் முதலில் ஆலயத்தில் பூஜைகள் ஆரம்பிக்க வழி செய்கிறார்; பின்னர் கோவிலை புதுப்பிக்கிறார். அதனை பேணிகாக்கும் மக்கள் யாராயிருந்தாலும் சரி, அவரை சைவமாக இருக்கச் சொல்லி, மது, புகை பிடித்தலை நிறுத்தச் சொல்லி, கழுத்தில் உத்ராக்ஷம் அணியச் செய்து, பெண்களென்றால், அம்மன் டாலர் அணிவிக்கச்செய்டு, அவர்கள் கையாலேயே கும்பாபிஷேகமும் செய்வித்து இறையுணர்வை மக்களுக்குள் கொண்டுவருகிறார்! பல சேரிகள், பட்டி திட்டிகளில் இவரை புதுப் பாதை காட்டிய சாமிகும்பிடும் பெரியாராகவே, மக்கள் மதிக்கின்றனர்! இன்றும் அவருக்கு தினமும் ஒரு புது சிதிலமடைந்த கோவிலைப்பற்றி தகவல் வரும். இவர் நேரமொதுக்கி, பயணம் செய்து, திட்டமிட்டு, மக்களையும் ஒன்று சேர்த்து, அக்கோயிலை மீண்டும் உய்ர்விக்கிறார்!! இது போன்ற ராமமூர்த்திக்கள் நமக்கு இன்னமும் வேண்டும்!!

07 April 2006

அக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8 - ஊஞ்சல்.


அக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8

ஆல் விழுது, வண்டி டயர் பற்றிமெல்ல
காலூன்றக் கற்ற காலம் ஆட்டமாடி,
முட்டிதேய ரத்தம் வர காற்றெதிர்த்து
ஆடிய அவ்வாட்டம் மனம் மறக்குமோடீ?

மரப்பலகை நுனிகளிலே வளையம் வைத்து
நெட்டுயரும் சங்கிலிகள் கூரை பார்த்து
திரிசங்கு நான் தொங்கி உந்தனுக்கு
என்றென்றும் உடனிருந்து சாட்சியானேன்

கல்யாணம், பேர்வைத்தல்,காதுகுத்தல்
காதல் மொழி சலசலப்பு ஆட்டமாடல்
சண்டைகளில் எத்துவிழ முதுகுகாட்டி
சச்சரவு, சல்லாபம் அமைதி காத்து

கவிதைக்குக் கருகொடுத்து புரவியேற்றி
காலம் பல கடந்திடவே கருவியாகி
கடிதங்கள் வைத்து மனம் பாரமாகி
படிதங்கள் எத்தனை என் உள்ளினுள்ளே!

பாரம் என்று நான் உன்னை உதறவில்லை
சாரம் போயி சங்கிலிகள் மழுங்கவில்லை
ஆட்டிடினும் கூத்தாடிடினும் ஏற்றியேறி
ஆடும் மனம் சிறகடிக்க கைகொடுத்தேன்

காலங்கள் கடந்து மனை குறுகிப்போயி
கழற்றிவிட்ட பலகைகளாய் கழன்று போயி
துருபிடித்த சங்கிலிகள் விலங்கு பூட்டி
திருமறைந்து அருவங்களாய் ஆகிப்போனோம்

ஆட்டுவித்தால் ஆடும்வரை எங்கள் தேவை
ஆடாவிட்டால் இல்லையொரு கண்ணின் பார்வை
அடங்கிடுமென் சப்தம் இனி எண்ணைய் இல்லை
அண்டிவந்த உனக்குநல் லெண்ணமில்லை

காட்டிடுமே என்வாழ்வு உயர்வு தாழ்வு
பின்போனால் உள்தள்ளும் உலகமுன்னை
முன்போனால் உந்துதல் போல் உதறுமுன்னை
கண்முன்னே சுழலுதற்போல் போக்குகாட்டி
பின்சென்று புரங்கூறும் விந்தையுலகம்!

என்றென்றும் பாரம் மட்டும் சுமக்க பாரு
நன்றென்றும் தீதென்றும் பிரித்திடாது,
ஆடுகையில் மனமுவந்து கோஷம் போடு
அடங்குகையில் அர்த்தம் கண்டு அணையை போடு.

வி.வ.போ- 1 விளக்கெண்ணை!


இனி எவனையும் 'போடா விளக்கெண்ணை' ன்னு திட்டாதீங்க! பய சந்தோஷப் படுவான். பாட்டி வைத்தியத்துல பல உபயோகம் எல்லாருஞ்சொல்லி கேட்டுருப்பீங்க.

இப்ப ஆஹா, 'பத்திகிச்சு, பத்திகிச்சு...'ன்னு பத்திக்கிற மேட்டரு, 'ஜாத்ரோபா'ன்னு சொல்ற காட்டாமணக்குச் செடிதான்!! பயோடீசல்னு தாவரங்கள்லேர்ந்து எண்ணை எடுக்கற ப்ராஜக்ட்தான் இப்ப எல்லார் வாயிலயும்! எண்ண பத்திகிச்சுன்னா எப்படிய்யான்னு வெளாட்டுத்தனமா கேக்காம, இந்த விஷயம் ஏன் பத்திகிட்டு எரியுதுன்னு பாருங்க!

அரசாங்கமே, இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம், ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் மூலமா, இந்தச் செடிலேர்ந்து வர எண்ணைய 15 ரூபாய்க்கு வாங்கி, பதப் படுத்தி டீசலோட கலந்து விக்கலாம்னு சொல்லீருக்கு. பதப்படுத்தப்பட்ட எண்ணைய நாமளே சப்ளை பண்ணா, 25 ரூபாய் வரைக்கும் கூடக் கிடைக்கும்!

பயிரிடறதுக்கு தரிசு நிலம் இருந்தாலும் பரவாயில்லை; எப்படி, என்ன மாதிரி விதை கிடைக்கும், என்ன தூரத்துக்கு ஒரு விதை போடணும்னு எல்லாம் சொல்லித்தர ஆயிரம் கம்பெனிங்க ஊரெல்லாம் முளைச்சிடுச்சு! தனியாரான் ரிலயன்ஸ் எண்ணைக் கம்பனியே, ஜாம் நகர்ங்கிற இடத்துல லட்சக்கணக்கான் மரத்தை நட்டு வளர்க்கிறாங்கன்னா பார்த்துக்கோங்க!

சுமார் ஒரு ஏக்கர் விளைச்சலுக்கு, 650 லிட்டர் எண்ணை கிடைக்கும்னு சொல்றாங்க! நம்ம தஞ்சாவூர் ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்து இடத்துல ரெயில்வே கூட இந்த ஆமணக்குச் செடிய வளர்க்குது; ரயில் இஞ்சினுக்கு உபயோகப்படும்ல? ஆனா, விவசாயிங்க, இதப் பயிரிட சொல்லித்தர ஆளு யாரு, ஏஜன்சியாருன்னு தீர விசாரிச்சுட்டு எறங்குனா, நல்ல மகசூல பார்த்துடலாம்!! பதப்படுத்தற வேலைய நானே செய்றேன்னு கிளம்பினா, அதுக்குண்டான 'காலம்' (நேரத்தச் சொல்லல - distillation column) கருவிங்க எல்லாம் ஏற்பாடு பண்ண குறஞ்சது ஒரு 5-6 லட்சம் செலவாகும். ஆனா, விளச்சல விலை போட்டு வாங்க, பல நிறுவனங்கள் தயாரா இருக்கு!

சரி, இவ்வளவு சுலபமா, இதுக்கு ஏதும் போட்டி வந்துருச்சுன்னா?

இருக்கு!! மெக் டொனால்டு கம்பெனிக்காரங்க, அவங்க ஹோட்டல்ல பண்டங்கள் தயார் செஞ்சப்புறம் வீணாகுற சுட்ட எண்ணைய பதப்படுத்தி, வண்டியோட்ட உபயோகப்படுத்தறதா தகவல்! அம்மாமாருங்க அப்பளம் சுட்ட எண்ணைய திருப்பி திருப்பி உபயோகிச்சு அப்பளம் நார்றதவிட (அது உடல் நலத்துக்கும் கேடு!) பேசாம சுய வேலைத்திட்டத்துல இந்த எண்ணைய எல்லாம் ஒண்ணு சேர்த்து, பதப் படுத்தற வேலைல இறங்கலாம்!! இதுக்கும் நல்ல ஆலோசகர் தேவை! சும்மா இறங்கிட்டு, அப்புறம் எண்ணைல கைய விட்டுட்டு, 'கை சுட்டுறுச்சு' ன்னு சொல்லாதீங்க!

இதுக்கும் அப்பன் டெக்னாலஜி, வேற ஒண்ணு தம்மாதூண்டு சைசுல களமிறங்கியிருக்கு! Microalgae ன்னு சொல்ற நுண்ணுயிர் பாசிங்க! தரிசு நிலம், கூவம் மாதிரி தண்ணி, சாக்கடை இதுலகூட இந்த பாசிங்க, வளருது; தாவர எண்ணையத் தருது!கரிமல வாயு தயாரிக்குது! இத ரெண்டையும் வெச்சு, ஆராய்ச்சி பண்ணி, 'வெளக்கெண்ண வெளக்கெண்ண தாண்டா, இந்தப் பாசிலேர்ந்து தயாரிக்கிற எண்ணை, எல்லா எரிபொருளுக்கும் அல்வாகொடுக்குற அயிட்டம்' னு கூக்குரல் இடுறாங்க, இந்த பாசி ஆராய்ச்சியாளர்கள்! காரணம்?

காட்டாமணக்கு ஒரு ஏக்கருக்கு 650 லிட்டர் கொடுத்தா இந்த பாசிய வளர்த்தா,ஒரு ஏக்கர் பரப்புக்கு, 75,000 லிட்டர் எண்ணை தரும்னு சொல்றாங்க!! அம்மாடியோவ்! எதோ ஒண்ணு! பூமிக்கடிலேர்ந்து எண்ணை இருக்குற வரைக்கும் தான் எடுக்க முடியும்! அப்புறம் அமெரிக்கா எண்ணை வளநாடாப் பார்த்துப் பார்த்து குண்டு போட்டு, ஆக்கரமிப்பு பண்ணாக் கூட, எண்ணை வராது, மண்ணுதான் வரும்!

அதனால, மேலே சொன்ன மாதிரியோ, இல்ல, 'போடா காட்டான்' னோ யாரையும் திட்டாதீங்க! நாளக்கி உங்க பேராண்டி வண்டில ஸ்கூலுக்கோ, காலேஜுக்கோ போணும்னா, அந்த காட்டுல இருந்துதான், மரம், பாசிகள்லேர்ந்து தான், எரிபொருள் கிடைக்கும்!! :-)!!

சரி, யாரும் தலைப்பு என்னன்னு கொழப்பிக்கக் கூடாதுன்னு மொதல்லயே சொல்லீடறேன். பெரிய தலைப்பா போட்டா, blogger - blocker ஆயிடுது!! பதிவு சேமிக்க முடியாம போகுது.
அதனாலதான் இந்த சொல் சுருக்கம்!

விஞ்ஞானத்த வளர்க்க போறேண்டீ- அதான் வி.வ.போ !!
"விவகாரமான ஆளுதான் போ" ன்னு திட்ட மாட்டீங்கன்னு நம்பறேன்!!

06 April 2006

குறி!!

"நல்லா தண்ணியடிச்சுக் கழுவுடா, அத சரியா கவனிக்கல மவனே,உனக்கு சோறு சம்பளம் கிடையாது,சா..கிராக்கி!" சத்தமாய் சொல்லிட்டு உள்ள போனான் முத்தண்ணன்.

முன் மூக்கு வீங்கின குரங்காட்டம் பானட் உள்ள பழைய லேலண்ட் வண்டி. இந்த லாரிய ஓட்டி ஓட்டி பணம் பார்த்து, தம்பிய இந்த அளவுக்குப் படிக்க வெச்ச பெருமை முத்தண்ணனுக்கு.

உள்ளேர்ந்து ஓடியாந்த தனம், "ஏங்க, தம்பி இப்பதான் வந்து படுத்துச்சு!மெதுவா பேசுங்க! ராவெல்லாம் ஏதோ, சேரி பக்கம் போயி மக்களுக்கு ஏதோ ப்ரச்னைன்னு கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதி போட்டானாம். அதான்.."

"அட, நாங்க என்ன பார்க், பீச்னு சுத்திட்டா வர்றோம்? நாலு நா முன்ன எடுத்த வண்டி. இந்த லூசுப்பய கிளீனர் முருகேசு எதோ உடம்பு சுகமில்லைன்னு, வேற பையன கூட்டிகிட்டு போனேன். முருகேசா இருந்தா, என்னய வண்டி விட்டு இறங்க விட மாட்டான். போலீசு, செக் போஸ்ட் எல்லாம் அவன் சரிபண்ணி, லோடு போட மெட்ராஸ் போக வர, ரெண்டே நாள்; ஆனா, இந்த லூசுப்பய, சின்னப்பய; ஒரு எளவும் தெரியல! வண்டிய நல்லா தொடைக்கச் சொன்னாகூட, பேன்னு முழிக்கிறான்! அதான் எல்லம் முடிஞ்சு வர நாலு நா ஆயிப்போச்சு. லேட், அதோட செலவும் இழுத்து விட்ருச்சு! சரி, தம்பி, இன்னும் சமுக சேவ அது இதுன்னு ஏன் மூக்க விடறான்? படிச்ச படிப்புக்கு ஏதாச்சும் கவர்மண்ட் பரிட்சை இல்ல போலீஸ் வேலக்கி எழுதி, பெரியாளா வரலாம்ல?இவன வெச்சு, நாமளும் நல்லா வசதியாயிரலாம்னு பார்த்தா, சேவை உப்மான்னு வம்ப வெலக்கி வாங்கறான்"

"சரி, விடுங்க பரவாயில்ல, கொஞ்சம் விவரம் வந்தா எல்லாம் சரியாயிரும்! கை கால கழுவிகிட்டு வந்து ஒரு வா சாப்டு நீங்களும் கொஞ்சம் படுங்க!"

8 மணிக்கு நன்றாக விடிந்திருக்கையில் எழுந்த ராம், "அண்ணி, அண்ணன் எப்ப வந்தாரு, எப்ப படுத்தாரு? இன்னும் எழுந்திரிக்கலையா?""இல்லப்பா, ரெண்டு நா வேல நாலு நாள் இழுத்துருச்சுன்னு ஒரே கோவமா வந்தாரு. அதோட நீ வேற வேலையத்தேடாம சீர்திருத்தமெல்லாம் செய்றது அவருக்கு பிடிக்கல கண்ணா. அண்ணி சொல்றேன்னு பார்க்காத, வேலக்கி ஆள் எடுக்கற பரிட்சைக்கு ஏதும் பணம் கட்டணும்னா சொல்லுப்பா,தர்றேன். ஆனா, அண்ணன் வாய்ல விழாத!""சரி அண்ணி, உங்க யாருக்கும் என்னால ஒரு தொந்தரவும் வராது. சரி, 10 ரூபா கொடுங்க, கலெக்டர் ஆபீஸ் போயிட்டு மதியம் வந்துர்றேன்.""அண்ணன் எங்கேன்னு கேக்கறாப்ல வெச்சுக்காத""சரி"- ராம் வெளிய போய்ட்டான்.

2 மணின்னு சொன்னாலும், வரமுடியல. அவசர, அவசரமா, வீட்டுக்குள்ள நுழையறச்ச முத்தன்ணன் கோபமா ஏதோ அண்ணிகிட்ட சத்தம் போட்டுகிட்டிருந்தார்.

உள்ள போறப்ப, "வாய்யா, தருமதுர! ஊர்ல பாதின்னா.. பேர்ல.... ", ஏண்டா உனக்கு ஊர் வம்பு? சரி,சனிக்கிழம ஒரு லோடு அடிக்கணும்னு கூப்டாங்க, முருகேசன் மேலுக்கு முடியல, சரி ஆயிடுச்சான்னு கேக்கப் போனா, பையல ஆஸ்பத்திரில சேர்த்தோம்கிறாங்க! அட பாவி மக்கா, பார்க்கலாம்னு கவருமண்ட் ஆஸ்பத்திரி போறேன், வழில கலெக்டராபீஸ் முன்னாடி இந்த சண்டியர் தலமைல அந்த சேரிப் பயலுக, தர்ணா பண்றாங்களாம், தர்ணா!தொண்ட கிழிய சத்தம் போட்டா இவனுக்குப் பின் பாட்டு பாடறாங்க! ஏண்டா, லாரி ஓட்டி ஓட்டி உங்கண்ணன் செத்து சுண்ணாம்பாறான், நீ ஒரு வேலக் கழுத கெடைச்சு, எங்கள ஒக்கார வெச்சு காப்பாத்துவேன்னு பார்த்தா, தர்ணா பண்றானாம்! வயிரு எறியுது!சே!"

வாயில ஆயிரம் பதில் ஒரே நேரத்துல வந்தாலும், அண்ணன் கிட்ட எதிர் பேச்சு பேச முடியாது. நல்ல வேளை அண்ணி ஒரு கிளாஸ்மோரைக் குடுத்து, ரெண்டு பேர் மனசையும் 'கூல்'ஆக்கினாங்க!

"அண்ணா, நம்ம நாமக்கல் டவுனச்சுத்தி எத்தன கிராமம்?"

"என்னய்யா, கணக்கெடுக்கறயா, இது தெரியாதாக்கும்?"
"சரி, அத விடு. அனுமார் கோவிலத் தவிர, நம்ம ஊர் பேரச்சொன்னா, உனக்கு என்ன ஞாபகம் வரும்?லாரிங்கதான்! ஆல் இந்தியாவுக்கும் நம்ம பயலுவதான லாரி ஓட்டுறானுங்க! எல்லாம் எமப்பயலுக, பல பாஷை கத்துவெச்சுகிட்டு வடக்கத்திகாரன் கிட்டயே, ரிடர்ன் லாரி லோடுக்குக் கூட, ரெண்டு வெல பேசி சமாளிப்பாங்கன்னா பார்த்துக்கயேன்! அதுலயும் இந்த குஜராத்தி சேட்டுங்க, அடிமடியிலயே, கை வெச்சாங்கன்னா, நம்ம பயலுவ ஆடற மாட ஆடிக்கறக்கற மாதிரி, அவனுங்ககிட்டயே, ஏத்தியிறக்கிப் பேசி, ஜோலிய முடிச்சுறுவாங்க!"

அதுதான் அண்ணன்! லாரி, லாரித்தொழில், அவரு ஆளுங்க, இதெல்லாம் பேசினா, அவரு பாட்டுக்க பேசிகிட்டே இருப்பாரு. அண்ணி கண்ணாலேயே ராம் கிட்ட, "சரியான ஆளுப்பா, அண்ணன் மூடை மாத்த லாரி பத்தி லாரி லாரியா பேசுனா போதுமே, ஐயா மசிஞ்சுடுவாரு!" ன்னு சொன்னாங்க!

சரியண்ணே, முருகேசனுக்கு என்ன ஆச்சாம்?
உடம்புல திடீர்னு வலி, கழுத்துப்பக்கம் ஒரு வீக்கம், அப்பப்ப ஏறுற ஜூரம், அப்படீன்னு ஆளையே போட்டு அடிக்குதாம்! இதுல நல்லா சாப்பிடேண்டான்னு சொல்லி ஆப்பிள் ஆரஞ்சுன்னு வாங்கிக் கொடுத்தா, பசியே இல்லேன்னு சுருண்டு படுத்துட்டான்! அப்படி என்ன வியாதியோ தெரியல. டாக்டரக் கேட்டா, நீங்களும் லாரி வேல தானா? ன்னு கேட்டு, அதுக்கப்புறம் சைலண்ட் ஆயிர்றாரு!, அதாண்டா குழப்பமாயிருக்கு! சரி, ஒஞ்சமூக சேவைய எங்களுக்கெல்லாம் செய்யக்கூடாதாக்கும்? அந்தப் பைய மருந்து செலவே, லாரிய வித்தாதான் தர முடியற மாதிரி இருக்கும்னு அவன் சுத்தம்சொந்தம்லாம் பேசிக்கிறாங்க! இவனே க்ளீனர், இவனுக்கு எதுப்பா லாரி வித்துத் தர மாதிரி காசு! ரொம்ப நாளா என் கிட்டயே வேல பார்த்தானா, எனக்குதான் மனசு கேக்க மாட்டேங்குது! ஏதாச்சும் பணமேற்பாடு செஞ்சு தர முடியுமாடா?

அண்ணே, நான் கலெக்டர் ஆபீஸ்ல தர்ணாவுக்கு போனதும், நம்ம லாரிக்காரங்க வாழ்வுக்காகதான்!
அப்படியா, நெஜம்மாவா? என்னடா விஷயம்?

சுத்துப் பத்து கிராமம் முழுக்க ஒருத்தனில்லைன்னா ஒருத்தன் லாரி வேலைல இருக்கான்; டிரைவரா, கிளீனரா, சரக்கு போடறவனா, வண்டிக்கு fரேம், பாடி கட்டறவன், வண்டி ரிப்பேர் பார்க்கற மெக்கானிக், பெயிண்டர் இப்படி.பல ஆளுங்க! வேல செய்ற இடத்துல சுத்தபத்தமிருக்கா, சுகாதாரமிருக்கா? பெயிண்ட் தின்னர், லாரி ஆயில் இதுல கெடுற மூச்சுக்காத்து, தண்ணீ, எல்லாம் சேர்ந்து அவனுக்கு பல வியாதிங்க வருது! குடும்பத்துக்கு ஒரு நல்ல இருக்க இடம், பிள்ளைங்க படிக்க ஒரு நல்ல பள்ளிக்கூடம், அவனுங்க சுகாதார நல மையம் ஊரெல்லாம் வேணும்னுதாண்ணே தர்ணா!"

முதலாளிங்களுக்கோ வேல நடந்தா சரி, சுகாதாரம் அது இதுன்னு என்னடா பேச்சு? வேலசெய்றவனுக்கு, கல்ல கடிச்சு தின்னாகூட செரிக்கும்டா; உடம்புக்கு ஒண்ணும் வராது!

அப்ப முருகேசனுக்கு என்ன வியாதியாம்? உங்க லாரி ஓட்டற சங்கம், டிரைவர் சங்கம், கிளீனர் சங்கம், அது இதுன்னு ஆயிரம் சங்கம் வெச்சுருக்கேங்க; எதுக்கு, யாராச்சும் ஒரு கட்சிக்காரனோட சேர்ந்து, எலெக்ஷன் வந்தா மாரடிச்சு, ஒரு கவுன்சிலராவது ஆகி, தலைவர் உருப்பட்டுருவாரு, பசங்க எல்லாம் மறுபடியும், வெளியூருக்கு சரக்கு அடிக்க, வலி தெரியாம இருக்க, உள்ளயும் 'கொஞ்சம்' சரக்கு அடிக்க திரிவாங்க! அப்படித்தானே?

அண்ணனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல, கடைசியா, " ரொம்ப படிச்சுட்டீங்கடா, அதான் எங்க மேலயும், எங்க தொழில்காரங்க மேலயும் இப்படி பழி போடறேங்க!

இல்லண்ணே, அது வந்து...

சரி, இத்தோட முடிங்கப்பா உங்க பேச்ச; சண்டை ஆயிரப்போகுது" ன்னு, நல்ல வேளை அண்ணிதான் இத அத்தோட முடிச்சு வெச்சாங்க!!

இவனுக்கு சிநேகிதி, அம்மா, எல்லாம் அண்ணிதான்.
ஏன் அண்ணி அண்ணன் என்னோட எப்பவும் சண்ட போடறாரு? முருகேசனோட டாக்டரை நானும் போய் பார்த்தேன். அவனுக்கு வந்துருக்கறது ..."அண்ணி காதோரம் சொன்னான் ராம்.

அடப்பாவி! எப்படிடா, இவன்? வெடலப் பயலாச்சே; கல்யாணம் கூட இன்னும் கட்டலையே!

அதான் அண்ணி ப்ரச்னையே! எப்படி இவனுங்களுக்கு புரிய வெக்கிறது, யார் புரிய வெக்கிறது? பேசாத ஊர் முழுக்க தண்டோரா போட்டு, எல்லார்க்கும் இலவசமா ரெத்த சோதனை செய்யக் கூட நான் கலெக்டரு, டாக்டருங்க கிட்ட பேசிடுவேன், ஆனா இவனுங்க தப்பா நெனச்சு, விவகாரமாயிடுச்சுன்னா?

தெரியலயேப்பா! ஓ, மறந்தே போயிட்டேன். நாமக்கல் டவுனு அனுமார் கோவில்ல ரொம்ப வருஷமா ஒரு பெரியவர் பூக்கட வெச்சுருக்காரு, அவர் அண்ணன் கிட்ட ஏதோ ராம நவமின்னு பண வசூலுக்கு வந்து போனாரு! பாவம் வயசானவர், இத்தன தூரம் வந்து போறாரு. அண்ணன் கிட்ட சொல்ல மறந்துட்டேனே! அவருதான், நீ கைப்புள்ளயா இருக்கறச்ச, திருவிழாக்குப் போன வண்டி கொட சாஞ்சு அப்பனாத்தா சாகக்கிடக்கையில, உன்னை அந்தக் கஷ்டத்துலேர்ந்து மீட்டு, விசாரிச்சு, ஊரூராத் தேடி, உங்கண்ணன் கைல ஒப்படச்சாரு! எங்காத்தாவையும் நான் அந்த விபத்துல தான் பறி கொடுத்தேன்; எங்கய்யா கஷ்டப் படறத பார்த்து, என் சோகக்கதையும் தெரிஞ்சுதான் உங்கண்ணன் சல்லிகாசு செலவு வெக்காம, அந்த பெரியவர் முன்ன வெச்சு, கோயில்லயே என்ன கட்டிகிட்டாரு! கல்யாணத்தன்னிக்கீ கைப்புள்ள வெச்சுகிட்ட ஒரே பொண்ணு நானாத்தான் இருப்பேன்!

யாருக்கா அது?

அடக் கிறுக்கா, நீதாண்டா அது, என்ன படிச்சயோ போ! விடிய விடிய ஆட்டோகிராப் படம் ஓட்னேன், எப்ப வெளக்கு போடுவீகன்னு கேக்குற மாதிரி"- சொல்லிச்சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க அண்ணி.

மறுநாள்- அண்ணன் தந்த தொகையோட போயி, பெரியவர்கிட்ட அறிமுகப் படுத்திகிட்டு கால்ல விழுந்து கும்பிட்டான்.
என்னமோ, பெரிய நாமம் போட்டு, பொக்கையா சிரிக்கிற அந்த தொண்டு கிழத்தப் பார்த்தா, இவனுக்குள்ள என்னமோ ஒரு அமைதி, பரவசம் ரெண்டும் மோதியடிச்சு அடங்குது! என்னான்னு சொல்லத்தெரியல. ரொம்ம்ம்ப நேரம் பேசிகிட்டிருந்தான். கிராமத்துல எல்லாரோட பேரும் நல்லா நினவுபடுத்தி விசாரிச்சாரு! குமரேசன் பேச்சும் வந்தது! அவன் நிலமையக் கேட்டு, பெரியவரு ரொம்ப சங்கடப் பட்டு போனாரு! நல்ல பயலாச்சே? ராமருக்கு எப்படி லெச்சுமணனோ, அந்த மாதிரி நீ கூட அண்ணனோட போனதில்ல, ஆனா, அந்த குமரேசுக்கு உங்கண்ணன் தானேடா எல்லாம்?" னாரு, பெரியவரு!

கிளம்பறச்ச, அனுமார் வடையக் கொடுத்து, "எல்லார்க்கும் கொடு, பிரசாதம்" னு சொல்லி வழி அனுப்பிச்சாரு.

வாச வரைக்கும் வந்தவன திரும்பக் கூப்பிட்டு, "தம்பி, ஒரு உதவி செய்வயா? நீதான் சமூகத்துல நல்லா ஓடியாடி வேல செய்ற நற்பணிமன்றப் பசங்கல்லாம் தயார் பண்ணி வெச்சுருப்பயே? எட்டுபத்து கிராமத்துக்கும் ராம நவமி நோட்டீசு அனுப்பறது வழக்கம்; எப்பவும் குமரேசன் பயலுதான் உதவி செய்வான். அந்த ஒரு வாரம் மட்டும் உங்கண்ணன் அவன் ஒண்ணும் சொல்லமாட்டான்; கடைசி நாள் அனுமார் ஜயந்தி நடக்கறவரை, குமரேசன் என் வீட்லதான் கடப்பான்; நீதாம் முத்துக்கு நிஜ தம்பியாச்சே! இந்த தடவ நீ செய்! குமரேசன் பொழச்சு எந்திரிக்கட்டும்!

என்னய்யா, இதுகூட செய்ய மாட்டேனா!- வாங்கிகிட்டு போனான்!

இவன் வேல செஞ்ச முஹ¥ர்த்தம், பெட்டிஷன், அது இதுன்னு ஊர்பட்ட வேலையெல்லாம் செய்யிறதால, பெரிசு நினச்சத விட கூட்டம் அதிகமாவே, கூடியிருச்சு!

கடைசி நாள்.பெரியவரு பெரிய தொண்டைல உணர்ச்சிகரமா பாடிகிட்டு இருக்காரு; ஜனங்க தெரந்த வாயில டினாசரே நொழஞ்சாலும் வாய மூடமட்டாங்க போல! அப்படி பார்த்துகிட்ருக்காங்க! சுத்தி ஜால்ரா சத்தம், கோஷ்டி கானம் எல்லாம் சேர்த்து மனச கட்டிவெச்சுருக்கு ராம நாமம்!

திடீர்னு பெரியவருக்கு சாமி வந்துருச்சு! இதெல்லாம் முத தடவை பார்க்கற, நம்பாத ஜனம் கூட, பெரியவர் மேல உள்ள மரியாதைனால நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பத்துல இருந்தாங்க!

அடிமேல அடி வெச்சு நடக்கிற தாத்தாவா இது? அப்படியே பாஞ்சு பாஞ்சு அனுமாரே நேர்ல வந்த மாதிரி.!!ராம்தான் தைரியத்த வரவழைச்சுகிட்டு கேட்டான்!

சாமீ, என்ன வேணும்? பூசைல குறையா, இல்ல பானகம் நீர்மோர்லயா? வடையா இல்ல மாலைகளா?

ஜெய் ஸ்ரீராம்; அதெல்லாம் என் ராமனுக்கு முன்ன ஒண்ணுமில்ல! அவரு பேரச்சொல்லி பஜன செஞ்சாப் போதும்!

பின்ன?

உங்கள்லதான் சுத்த பத்து குறஞ்சு போச்சு! நான் பிரம்மசாரி, தெரியுந்தானே? பின்ன, என்னைய ஊர்ல பெரிசா நிக்கவெச்சுட்டு, ஊர்ல அவனவன் அநியாயம் பண்றேங்களே!

முத்து, தம்பிக்கு சாமீ ஏதும் சாபம் கீபம் போடுமோன்னு பயந்து, குறுக்கப் புகுந்து, " சாமீ, சொல்றது விளங்கல சாமி; சின்னப்பய அவன கண்டுக்காதீங்க; என்னன்னு விவரமாச் சொன்னா பயலுகள நான் சொல்லி சரி பண்ணீடுவேன்!"

இங்க நிறைய பேரு, லாரி ஓட்றவங்க, சரிதான? காடாறு மாசம், வீடாறு மாசம்னு போறவங்க! சரிதானே? அப்ப போற இடத்துல வேலயப் பார்த்தோமா, வந்தமான்னு இல்லாம வேத்து பொம்பள சகவாசம் எதுக்குடா? யாரோ,என்னவோ?
ஊர் பேரக் கெடுக்குற மாதிரி எங்க போனாலும், நம்ம பயலுவ வம்ப வெலக்கி வாங்கறீங்க! இதுல வெடலைப் பசங்க? கல்யாணமில்லாத ஆசை கேக்குதோ? அது கருமாதில தாண்டா முடியும்!!

நீ ஊர்ல இல்லாதப்ப, உன் பொண்டாட்டி வேற சகவாசம் வெச்சுகிட்டா, உனக்கு எப்படி கோபம் வரும்? அவங்க சீதையா இருக்கணும், ஆன நீங்க ராமனா இருக்க மாட்டேங்க, அப்படித்தானே!! டேய், அனுமாரு பலம் எல்லாத்துக்கும் தெரியும்!..... த்துடுவேன்!

ரொம்பப்பேரு ஒருத்தனுக்கொருத்தன், "டேய், நீதாண்டா அடுத்துங்கற மாதிரி பார்த்துக்குறாங்க!" அவனவனுக்கு அடி வயத்துல கலவரம் பண்ணீருச்சு! அனுமாருகிட்ட போயி இப்படி மாட்டிகிட்டமே''ன்னு!

பொண்டுகளுக்கோ, "அப்பா, இந்தாளுங்க பண்ற ரவுச அந்தச் சாமியாப் பார்த்து கண்டிச்சுருச்சு! இனி பயலுவ திருந்திடுவாங்கன்னு நம்பிக்கை வந்துருச்சு!

அனுமாரு தாத்தா தொடர்ந்தார், " ஏய், சின்னப் பையா, ராமு! ஊர்ல இருக்குற பெரிய ஆஸ்பத்திரில ராமானுஜம்னுதான் பெரிய வைத்தியர்! என்மீது அவருக்கு பக்தி அதிகம்! அவருகிட்ட நான் சொன்னேன்னு சொல்லு! 10 பேரக் கூட்டிகிட்டு, அடுத்த மாசம் முடியறதுக்கு முன்ன, சுத்துபத்து கிராமம், ஊரு ஒண்ணு விடாத போயி அவனவனுக்கு பெருநோய்ங்கிற எய்ட்ஸ் இருக்கான்னு பாரு! வைத்தியம், மருந்துக்கு ஏற்பாடு பண்ணு.
அடுத்த வருஷம் ராம நவமிக்குள்ள அவனவன் 'பொத்திகிட்டு' இருக்கல, அப்புறம் நடக்கறதேவேற!" ஜெய் ஸ்ரீராம்," ன்னு சொல்லி, பக்கத்துல இருந்த ஒரு பெரிய குண்டானா பானகத்த ஒரே வாயில எடுத்து கவுத்துகிட்டாரு!" அப்படியே கீழ விழுந்தவர்தான்!

கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிச்சார்!"ஏம்பா, முத்து, நான் கீழ விழுந்துட்டா இந்த கிழவனுக்கு கை கொடுக்கக் கூடாதா"ன்னார்!
அட, சாமி! வாங்க, வாங்க, இப்படி காத்து பட உட்காருங்க!நடந்ததையெல்லாம் ஒருத்தன் முந்தி ஒருத்தன் ஒப்பிச்சான். தாத்தா மெதுவா சிரிச்சுட்டு, "அனுமார் எலக்ஷன்ல நின்னா ஜெயிச்சுடுவார்"ன்னாரு!
அவ்வளவு பெரியவர், எடக்கா பேசினால்? ஆனா, அவருக்குத்தானே சாமி வந்துச்சு? ஒண்ணும் சொல்லமுடியாம ஊர்ஜெனம் மவுனமா இருந்தது!

பேச்ச மாத்த நினச்ச ராம், "அண்ண இருட்டிடுச்சுண்ணே, நான் தாத்தாவ வீட்ல விட்டுட்டு, சைக்கிள்ல ஊர்வந்து சேர்ந்துர்றேன்; நீங்கெல்லாம் கிளம்புங்க!" ன்னு சொல்லி, பிரசாதம் விநியோகத்தை முடிச்சிட்டு, தாத்தாவோட மெல்ல அவர் வீட்ட நோக்கி நடந்தான்.

தோணின சந்தேகத்த மெதுவாக் கேட்டான்! பெரியவரே, வழக்கமா, குறிதான் சொல்வீங்களாமே; இந்த தடவ என் மனச அரிச்சுகிட்டிருந்த ப்ர்ச்னைய அனுமாரு பேசிருச்சே! அது அதிசயம்தான்!

அட, நீங்க மட்டும்தான் சமூக சேவ செய்வீங்களோ? அனுமாரு கூடத்தான் செய்வாரு! இது அவரு மக்கள் இல்லையா?" ன்னு சொல்லி தாத்தா மெதுவா சிரிச்சார்!
"சட்"னு புரிஞ்சுபோன சந்தோஷத்துல ராம்,"தாத்தா, யு ஆர் க்ரேட்" ன்னு என்ன செய்றோம்னு தெரியாம, அவர அப்படியே அலக்கா தூக்கி தல மேல ரெண்டு சுத்து சுத்திட்டான்!!

சாதாரணமா எது சொன்னாலும் சண்டைக்கு வர்ற பக்குவம்; ஆனா சாமியோ, ஒரு சாமியாரோ சொன்னா அப்படியே நம்பீர்றாங்க; அது அவங்க பலவீனம்; நமக்கு பலம்; அதான்! விடுப்பா, நட வீட்டுக்குப்போற வழியப் பாரு!

ஆனாலும் ஒரு சந்தேகம், அம்புட்டு பானகத்த எப்படி ஒரேடியா குடிச்சீங்க?

"ஏதோ புத்தகத்துல பேர் வரணும்னு அவனவன் ப்ளேனு, பஸ்னு இழுக்கலயா? அந்த ஒரே 'குறி', வெறி, மக்கள் சூழ்நிலை, இது மனுஷன மலையக் கூட பேக்க வெச்சுடும்! பிள்ளையார் பால் குடிக்கலாம், அம்மன் வருஷம் பூராவும் பச்ச புடவ கேக்கலாம், அனுமாரு வைத்தியம் பார்க்ககூடாதா? வழக்கமான குறி வேற, இந்தக் குறி வேற!!"

பேசத்தோணாத, அந்த பெரிய மனுசனையே பார்த்தபடி நின்னான் ராம்! முத முறையா ராம் அனுமனுக்கு தாசனானான்!

05 April 2006

பாரதியும், பாரதியும்!!

'சந்திப்பு' எனும் தலைப்பில் தங்கம்மாள் பாரதி, 1946ஆம் ஆண்டு, ஒரு பொன்விழா மலரில் எழுதிய கட்டுரை:-
நான்கு புறமும் மரக் கூட்டம்; நடுவில் ஒரு கற்பாறை;எங்கிருந்தோ காற்று மஞ்சநாரத்தம்பூவின் மணத்தையும் இலுப்பைப் பூவின் மணத்தையும் கலந்து கொணர்ந்து வீசியது. சுற்றிலும் உள்ள பனை மரத்திலுள்ள ஓலைகள் சலசலத்தன. கள் இறக்கும் சாணரும் நுங்கு வெட்டும் பெண்களும் பனைமரத்தடியில் உட்கார்ந்து ரசமாக வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். தங்கள் செப்புக் குடத்தை டேய்க்கும் பிராமணச் சிறுமிகளும் அங்கு நின்றனர். புளியங்காயைப் பறித்துத் தின்ற இடைப்பையங்களும் உலக நினைப்பேயின்றி உல்லாசமாகத் திரிந்தனர். மணல் மேடுகளும் சிற்றாறும், இளவெயிலும், மலைக்கூட்டமும் மரச்செறிவும் மனிதர் மனத்தைப் பரவசப் படுத்தக் கூடியனவா யிருந்தன.

அப்போ எனது தந்தையுடன் `யோகி போன்ற' ஒரு நண்பர் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த நண்பர் ஏதோ பாடினார். பின்னர் இருவரும் தேசம், தமிழ், சுதந்தரம், யோகம் என்றெல்லாம் பேசினர்.
அவரைச் சுருக்கமாக வர்ணிக்கலாம். கண்ணிலே நல்ல குணம். தமிழார்வத்தினால் பரபரக்கும் மனம். இனியும் தாமதமுண்டோ! என்பதைப் போல், அவ்விருவரும் தழுவிக் கொண்டனர் - ஒரு தந்தையும் மகனும் போல. கற்றோரைக் கற்றாரே காமுறுவது இயல்பல்லவா? அவர்கள் தம் மனம் விட்டு உணர்ச்சி ததும்பப் பேசலாயினர். தங்கள் சொந்த விஷயங்களையா? அன்று. அகில உலகத்திற்கும் ஆக்க வேலை பற்றியே பேசினர்.

இரவு! - நல்ல நிலா; இன்னும் பேசினர்; எவ்வளவு நேரம் கழிந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. தமிழ்த்தாய் அந்தர்யாமியாக நின்று அவ்விருவரையும் ஆசிர்வதித்தாள். தந்தையார், "விட்டு விடுதலைப் பெற்றிடுவாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே - என்று பாடினார். பாட்டு முடிந்ததும் "காற்றைப் போலக் கட்டின்றி வாழ்வோம்," என்று கூறி அந்த நண்பர் தந்தையாரிடம் விடைபெற்றுக் கொண்டு குற்றாலத்தை நோக்கி விறுவிறுப்பாக நடந்தார்.


அதே கட்டுரையின் கீழ்:-

குறிப்பு: மேலே கூறப்பட்டவர்களே, கவி சுப்ரமணிய பாரதியும், கவியோகி சுத்தானந்த பாரதியும்! கடையம் ஆற்றங்கரைக்கு அடுத்த தோப்பில்தான் அவ்விருவரும் முதல் முதலாக சந்தித்து, தமிழ்த் தாயின் சேவைக்கும், நாட்டு சேவைக்கும் உபாயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவ்விரு கவிகளின் லட்சியங்களும் இந்நாளில் நிரைவேறி வருகின்றன.

பொன்விழா மலர்? கவியோகி சுத்தானந்தருக்கு 50ஆம் ஆண்டு முடிந்ததை ஒட்டி வெளியிடப் பட்ட நூல்.

புளிச்..!

சொந்தக் கார்ல போற மக்கள், ரோட்டுல நடக்கறப்ப, வெளி நாட்டுல இருக்குற மக்கள் கொஞ்சம் இந்தாண்டை வரச்ச, யோசிக்கவேண்டிய விஷயம். ஆனா திருவாளர் பொதுஜனதுக்கு, இது ரொம்ப அத்தியாவசியமான மேட்டர்!
மழைக்காலமில்லேன்னாலும் குடை எடுத்துகிட்டு போகணும். ஏன் , உச்சிவெய்யில் மண்டைக்குத் தாங்காதான்னு கேக்குறது காதில் விழுகுது. இல்லைய்யா, இல்லை. 'புளிச்' சுக்கு பயந்து தான். அதுல ரெண்டு வகை இருக்கு. வெத்தல வாய் புளிச், புளிச்ச வாய் புளிச்!!
பார்த்திருப்பீங்க! உம்முனு நரசிம்ம ராவ் கணக்கா ஒக்காந்திருப்பான்! பஸ்ல. இடமில்லைன்னாலும், அய்யா திருவாயப்பார்த்ததுமே, எல்லாம் எடம் விட்டுக்கொடுத்துடுவாங்க! ஓர சீட்டு! எதுக்கு? துப்பார்க்குத் துப்பாய... தூவும் மழை! இதுக்கு ஊர் பக்கத்துல அர்த்தமே, வேற சொல்லுவான்! வள்ளுவரு ரசிகருங்க மன்னிச்சுக்கோங்க! துப்புறவனுக்கு துப்புறதுனால ஒரு ப்ரச்னையோ, பயனோ இல்ல, கீழ அந்த 'சாரல'த் தாங்குறவனுக்குத்தான் அதன் கோரம் தெரியும். அதுலயும் வெள்ளயும் சொள்ளையும் போட்டு வர மகராசனுங்க, (முக்காவாசி விவசாயிங்க, எப்பவாச்சும் நகரத்துல வந்து, மோட்டார் ரிப்பேர் செய்யவோ, இல்ல வெத வாங்கவோ வரச்ச, நல்லா உடுத்திகிட்டு போணும்னு பாவம், வெள்ளைல வந்துருப்பாரு, பாவம். அதவிட படிக்க போற புள்ளைங்க, வேலக்கி போறவங்க, இண்டர்வ்யூவுக்கு போற அப்பாவிப்பசங்க நிலமைய யோசிச்சுப்பாருங்க. அவங்க சட்டைல செவப்பு ஸ்ப்ரே அடிக்க இந்த புளிச்சவாப்பயக யாரு? அப்படியே, துப்புன வாயில நாலு போடணும்னு கை துடிக்கும்! நிக்கிற வண்டில உள்ள ஆசாமியா இருந்தா சரி, பண்ண வேலைக்கு நல்லா நாலு கேள்வியாவது கேக்கலாம். அவன் திருந்தப் போறாங்கறீங்க? ஹ¤ம். ஆனா, ஓடுற வண்டிலேர்ந்து வர புளிச் தான், பளிச்னு சர்வ அங்கவியாபியா, தலை, மூஞ்சி, சட்டை, பான்ட், (வேட்டின்னா, இன்னும் கொடுமை) எல்லாத்துலயும் பரவியடிக்கும்! துப்ப்றவன் வாய என்னிகாவது பார்த்துருக்கீங்களா, 'ஊ'ன்னு லேசா ஊதி இருக்கும்; நாக்கு வெந்து நொந்து போயிருக்கும். சோத்துச் சுவை மறத்து, சும்மா உள்ள தள்ற மாதிரி நெலமை. வெத்தலையோட புகையில, கொட்டப்பாக்கு, எல்லாம் போட்டு குதப்பி, வினோதமா ஒரு 'கப்பு' அடிக்கும்! வாயத் திறந்தா, பக்கத்துல நின்னு பேச முடியாது!!
புகையில, வெத்தல! குஜராத்ல ஆனந்த்னு ஒரு ஊரு. அங்க, புகையில தோட்டமதிகம். நல்ல துட்டுஅடிக்கலாம்னு அத பயிரிட்ட NRI குஜராத்திங்க, அடிச்ச நோட்டெல்லாம், ஆஸ்பத்திரில கட்டிகிட்டு இருக்காங்க! காரணம்? இலைய பதப்படுத்தற மக்கள் இலைய அடிச்சு கட்றப்ப அந்த காத்துப் பட்டு, பட்டு, அதுபோக புகையிலைக்கும் அடிமையாகி, இப்ப வாயில் புத்து நோய் வந்து, பொதுநல கேசு ஒண்ணு போட்ட ஒரு சமூக சேவகராண்ட பயந்து போய், இப்ப ஆஸ்பத்திரிக்கும், கோர்ட்டுக்கும் நடையா நடக்குறாங்க!
மத்த ஒரு புளிச்! சாராயம்; அதுலயும் நேரம் காலம் தெரியாம காலைல பல்லு விளக்குறதுக்கு முன்னாடியே, தீர்த்தவாரி பண்ணிக்கிற கேசுங்க பண் லொள்ளு தாங்க முடியாது! பஸ்ல, பஸ் ஸ்டாண்ட்ல, டீக்கடைல, ஹோட்டல்ல, எல்லா இடத்துலயும் நிறஞ்சுரருக்குற 'சர்வலோக வ்யாதி'. ஒரு முறை அந்த திருவாய் மலர்ந்தருளிநாங்க, தண்ணி அடிக்காமலேயே, எதிராளி அம்பேல்! அப்படி ஒரு குமட்டு குமட்டும். இதோட சிகரெட்டையும் சேத்துப் பிடிச்சுகிட்டு, அந்த வாயாலயே போற வழி எல்லாம் பொன்மொழி உதுர்த்துகிட்டு போற ஜென்மங்கள என்ன செய்ய? அதவிட மகா புளிச், இந்த தண்ணிப் பார்ட்டிங்க, பஸ்ஸ¥லேர்ந்து எடுக்குற வாந்திதான்! அபிஷேகமான பாவப்பட்ட ஆள, பெனாயில் போட்டுக்குளிப்பாட்டினாலும், டெட்டால்லயே ஒரு நா முழுக்க ஊரவெச்சாலும், அந்த 'கப்பு போகாது'.! அதிசயமா, இந்த வழக்கத்த விட்ட எங்க ஆபிஸ் ப்யூனைக் கேட்டேன்! "எப்படிய்யா? சொல்லு, நாலு பேருக்கு சொன்னா திருந்து வாங்க"ன்னேன்.மெதுவா, "காதக் கொடுங்க சொல்றேன்- அதுவா, நான் வீட்டுக்கு ரிடர்ன் போறச்ச, பஸ்ல உட்கார்ந்துகிட்டு இருந்தேனா, வீட்டாண்ட கிட்டத்தட்ட போயி சேர்ந்தாச்சு. பஸ் ஒரு இடத்துல திடீர்னு ப்ரேக் போட்டுச்சு! எதில வர மொபெட்ட சமாளிக்க! அப்ப, கப்னு வயத்த பொரட்டி, வாந்தி வந்துடுச்சு. எப்படியோ, ஜென்ன வழியா மொகத்த கொடுத்து, வாந்தி எடுத்துட்டேன்! பஸ்ல இருக்குறவன்லாம் திட்டறான், மனசுல பதியல! ஆனா, வீட்டுக்கு போனா, வீடு பூட்டி இருந்துச்சு; ஒரு அர மணி நேரம் போனப்புறம் பொண்டாட்டி வந்தா!" எங்கடி போன? மவளே, வயத்த பொரட்டுது, கொல்லக்கி போணும்னா, பூட்டிட்டு போய்ட்டயே"ன்னேன். அவ, மெதுவா, அட, சாமான் வாங்கியாற கடைக்குப் போனேன். வழில, ரோட்டோரமா நடக்கறச்ச, பஸ் ஒண்ணு திடீர்னு ப்ரேக் போட்டுச்சு! அதுலேர்ந்து உன்ன மாதிரி கேடு கெட்ட குடிகாரன் ஒருத்தன் 'உவே; ன்னு என் மேல வாந்தி எடுத்துட்டான்! நாயி, அவன் மட்டும் என் கைல கெடச்சான், கைமா பண்ணியிருப்பேன்"னா! எனக்கு பனு ஆயிருச்சு!" "சரி, ஆனா எதுக்கு இம்புட்டு லேட்டு?"
"ஹ¥ம், அந்த கண்ராவியோட வீட்டுக்கு வர முடியல, பக்கத்துலயே இரூக்குற தனம் வீட்டுக்கு போயி, நல்ல கழுவிகிட்டு, சேல கூட அவகிட்ட கேட்டு மாத்திகிட்டு வர்றேன், கேள்வி கேகுறயே, போய்யா"ன்னா! சோத்த போடறப்ப மெதுவா, "ஏய், கோச்சுக்காத, ஏதோ போற வயசுக்கிழம்னு நெனச்சுக்கோ, நாந்தான் அந்த வாந்தி எடுத்த பாவி"ன்னு ஒத்துகிட்டேன். பார்த்தாளே ஒரு பார்வை! காளியாத்தாவாட்டம்! கைல கிடச்ச கரண்டியாலேயே புருசன்னு பார்க்காம, விட்டா பாருங்க, கன்னம் செவந்துருச்சு. நான் எங்க பழக்கத்த விட்டேன்? என் பொண்டாட்டி 'விட்ட'த நெனச்சுப்பார்த்தேன், அதா என்ன விடு போயிருச்சு! என் வயசுல எனனாச்சும் பொண்டாட்டி கையால அடி வாங்குவானா சார்?" அதான், விட்டேன் - அப்படீன்னான். எனக்கு சிரிப்பு வந்தாலும் ரொம்ம்ம்பக் கஷ்டப்பட்டு அடக்கிகிட்டேன்!
அதேமாதிரி, புகை பிடிக்கிறவங்க பத்தி சொல்லவே வேணாம்! ஆயிரம் முறை புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடுன்னு சொன்னாலும், புகை பிடிச்சவன் பிடிச்சது தான். சனி பிடிச்சாலும் விடும், ஆனா புகைபிடிச்சா அது இவன விடாது! யோவ், தம் பிடிக்கிற மவராசா, உன் உடல்நலத்துக்குக் கேடு இல்ல, பக்கத்துல இருக்குற உன் பொண்டாட்டி, பிள்ள குட்டி, வெளில நீ போறப்ப பக்கத்துல நிக்கிற ஆசாமி, மாமி, எல்லாத்துக்கும், Passive smoke தந்து சாவடிக்கிறயே! மருத்துவங்க, பத்திரிகைகாரங்க, பொது சேவகிங்க, எல்லாரும் என்ன சொல்றாங்க? புகைக்கிறவன விட, அத பக்கத்துல இருந்து உள்ள வாங்குறானே, அவனுக்கு 5 மடங்கு நச்சு உடம்புல சேரும்னு!
வெளிநாட்டுல புகைச்சா, இல்ல பொது எடத்துல துப்பனா, அபராதம் கட்டணுமாம்! அதே ஆளுங்க, இங்க வந்தா, துப்பறத நிறுத்திறாங்களா? எதோ, ரொம்ப நாளா விட்ட குறை தொட்ட குறைன்னு, சேர்த்து வெச்சு, பார்க், பீச், ஏர் போர்ட், ரெயில்வே ஸ்டேஷன் இப்படி எல்லா எடத்துலயும் ஸ்ப்ரே அடிச்சா என்ன அர்த்தம்? உன் நாட்ட நீயேஅழகா வெச்சுக்கலைன்னா, அடுத்தவன் எப்படி வெச்சுப்பான்? (அட, அப்படி செய்ற ஆளுகளத்தான் சொல்றேன், எல்லா மக்களையும் இல்லப்பா!)
ஆகையினால் இதுமூலமா நான் சொல்ல விரும்பறது என்னன்னா, ஒண்ணு புளிச்சவாயர்களை திருத்தப்பாருங்க, இல்ல தடுக்க பாருங்க, இல்ல தல தப்பிக்க குடை,கர்சீப் (மூக்கப் போத்திக்க) எல்லாம் எதுத்துகிட்டு வெளிய `தைரியமா' நடைய கட்டுங்க! என்ன நான் சொல்றது? சரிதானே?

04 April 2006

பூக்களைத் தான் பறிக்காதீங்க..!

கால வேளைல நான் ஏன் வாக்கிங் அது இதுன்னு கிளம்பரதில்லைன்னு ஒரு பதிவு போட்டேன். நாகரிகக் கோமளிகள்னு.[ http://sirichuvai.blogspot.com ] அதுல பணக்கார ரவுசுகளப் பத்தி முக்கியமாச் சொன்னேன்.

அதுல சொல்லவிட்ட ஒரு தினசரி நடக்கும் தப்பான விஷயத்த தனி பதிவா போட்டாதான், நமக்குள்ள இருக்குற சில பல பழக்கத்த நாம் மாத்திக்க முடியும்.!!

மரங்களப் பார்க்கறதே அபூர்வமாயிகிட்டு இருக்குற நகரங்கள்ல, அழகான கால நேரம், பூமரம், செடிங்கள்ல இருக்குற ஆயிரமாயிரம் பூக்கள், மெதுவா, சூரிய வளிச்சம் பட்டு, பனி வெலகி, வாய் திறந்து, காலக் காத்த உள் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா, நிறம் மாறி, பூக்கும். அது முழுசா, பூக்க, எப்படியும் 7-8 மணி ஆயிரும். ஆனா, அதுக்குள்ள அந்த பூக்களுக்கு வர்ற ஆபத்து இருக்கே, அது சொல்லி மாளாது!

செம்பருத்தி, நந்தியாவட்டை, பவள மல்லி (சீசன்லதான் பூக்கும்), மஞ்சள் ஆம்பல், மஞ்ச ஸ்பீக்கர் பூ (இதுக்கு தமிழ் பெயர் தெரியாதுங்க!), சுருள் நந்தியாவட்டை, கொன்னை, இன்னும் பல விதமான பூக்கள் பூக்கறதப் பாக்குறது, அழகு.இத எந்த கவிஞனாலும் வருணிக்க முடியாது, எந்த ஓவியனாலும் வரைய முடியாது. ஆனா, பச்ச பிள்ள கண் தெறக்கறதுக்கு முன்னமே, குரல்வளைய நெர்¢க்கிற மாதிரி, "பக் பக்" னு அத பறிச்சுகிட்டு போய்டுவானுங்க, சில பெருசுங்க.

வெள்ள வேஷ்டி மடிப்புக்குள்ள, கைல உள்ள மஞ்சப் பையி, விட்டா வாயிலயும் போட்டுகிட்டு போயிடுவாங்க போல! சூரியன் எந்திரிக்க லேட்டானாலும், இவனுங்க எந்திரிச்சு `அட்டாக்' பண்றத விடமாட்டாங்க! என்னங்கடா, இப்படி விடிகாலைல பறிக்கிறாங்களேன்னு பார்த்தா, கோவிலுக்கு, சாமிக்குன்னு சொல்லி பிடுங்குறாங்க! அட பாவிகளா, சாமி வாயத்திறந்து "எனக்கு பச்ச புள்ளயொத்த, கண்ணு தெறக்காத பூவப் பறிச்சு போட்டாதான், அருள்பாலிப்பேன்னு" சொன்னாரா? அதுக்குன்னு வேற பல பூ இருக்கே? முல்லை, மல்லிகை, துளசி இலை, வில்வ ன்னு பல தினுசு. ரெண்டு கோஷ்டிக்கும் ( குறுக்குக் கோடு கோஷ்டி, நெட்டுக் கோடு கோஷ்டி!! நான் இல்லைன்னாலும் மனுசப்பயலுவ விடுறாங்களா? கோடுல நிக்கிறவன் அதத் தாண்டி வரமாட்டேங்கிறான்கறத தனியா எழுதணும் போல; ஆனா, அது எழுதி, திருந்தற கோஷ்டியவிட, ஏன் எழுதினன்னு திட்டற கோஷ்டிதான் அதிகமாகும்கிறதால், அந்த மேட்டரை இப்ப டச் பண்ணல!)

ஆண்டவனே, துளசியையும், வில்வத்தையும் படைச்சு வெச்சுருக்கானே? ஒரு துளசியால பாமா, கிருஷ்ண்ன அடைஞ்சதும், ராத்திரி பூரா, வில்வ மரத்துல ஒதுங்குன திருடன், வில்வம்னு தெரியாம பறிச்சு,பறிச்சு கீழ எறிஞ்சுகிட்டேயிருந்ததுல, கீழே இருந்த சிவலிங்கம் சந்தோஷப்பட்டு, திருடனுக்கு காட்சியளிச்சு, அவனுக்கு நல்ல புத்தி தந்ததையும் நாம படிச்சதில்லையா? பின்ன, பிஞ்சுப் பூக்களை ஏன்யா பறிக்கிறீங்க??

அதுலயும், சில தாத்தாக்கள் பலே தாத்தாக்களாக இருப்பாங்க! கைல ஒரு நடை குச்சிய (walking stick க்கு தமிழாக்கம். 'டாக்டர் ஐயா' மன்னிப்பாராக!) கொண்டாந்து, அத விட்டு, மேலேயுள்ள கிளைய அப்படியே வளைச்சு, மத்த கையால இறுக்கிப் பிடிச்சு, சட சடன்னு,மேல உள்ள பூவையெல்லாம் பறிக்கிறப்ப, "அட, மேல தப்பிச்ச, கொஞ்ச நஞ்சப் பூவ, தல தப்ப விட மாட்டேங்கிறாங்களே"ன்னு, கோவமா வரும். ஆனா, பெருசுங்கள திட்ட முடியுமா? ஒரு பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, மொத்த மரமும் கைம்பெண் போல் நிக்கிறதப் பார்க்கும் மனசுள்ள மனுசனுக்கு 'பகீர்' னு இருக்கும்.

ஆனா, "பூ பறிக்கத்தான் செய்வேன்; சாமிக்குப் போடத்தான் போடுவேன்; பாட்டன், முப்பாட்டன் காலத்துலேர்ந்து பூ பறிச்சு போடறோம். பழக்கத்த விட முடியாதுன்னு" சொல்ற மக்களுக்கு ஒரு தலை சாய்ந்த விண்ணப்பம், வேண்டுகோள் :

பூவோட காலம், ஒரு நாள் தான்; ராத்திரில வாடிடும். ஆனா, சாயங்காலம் பார்த்தீங்கன்னா, நல்லா பூத்து, வரப்போகும் இரவின் வாடுதலைப் பற்றி கவலைப் படாத, மாலைக் காத்துல சிலுசிலுத்துகிட்டு நிக்கும். அப்ப அந்த பூ கிட்ட பேசுங்க; "ஏ,பூவே.காலைல கண்ணுக்கு குளிர்ச்சியா, மனதுக்கு இதமா காட்சி தந்த. இப்ப, வாடி எப்படியும் கீழ விழப்பொற. அதுக்கு நான் சொல்ற உபாயம் ரெண்டு பேருக்குமே நல்லது. என்னால பூ பறிச்சு போடாம இருக்க முடியாது. உன்னால் உதிர்றத தடுக்க முடியாது. அதனால நான் உன்ன பறிச்சு, இறைவனடில சேர்க்கறேன். சந்தோஷமா இரு!" ன்னு!

கட்டாயம் வாய் இருந்தா அந்த பூ காலைல பறிச்சா உங்கள சாபமிடும், ஆனா மாலைல இறைவனடி சேர்த்தா, வாழ்த்தும்! என்ன, சரிதானே? நீங்க அப்படி காலைல பூ பறிச்சா, அத மாலை வேளைக்கு மாத்திக்கங்க! ஓ, ஒரு வேளை அத மாலை வேளைன்னு சொல்ற காரணம், இதுவாக் கூட இருக்குமா? பூக்கள் பறிக்கபபட்டு, மாலையாக சேர்ந்து, இறைவனடி சேரும் நேரம்ங்கிறதால, 'மாலை' நேரமாச்சுதோ?

மத்தவங்க அப்படி பறிக்கறதப் பார்த்தா, இதமா எடுத்துச்சொல்லி, நேரத்த மாத்தச் சொல்லுங்க!
சரி, காலைலதான் போடணும்னு அடம் பிடிக்கிறவங்க, அதுக்குன்னே விற்குற அந்தந்த சீசன் பூவ (மல்லிகை, முல்லை ஒரு சீசந்தான், கனகாம்பரம், டிசம்பர் பூ, ஒரு சீசன், சவந்தி ஒரு சீசன்) - இப்படி சல்லிசாவும் வாங்கி, சாமிக்கு சாத்தலாம்ல? எதோ, பூவித்து பொழக்கிற ஆத்மாக்கள் சந்தோஷப் பட்டு போலாம்ல?

மல்லிகைன்னதும் ஞாபகம் வருது. சென்னைக்குப் பக்கத்துல நத்தம் கிராமம். அங்க பசங்களுக்கு என்.எஸ்,கே. மாதிரி, "விஞ்ஞானத்த வளர்க்கப் போறோம்" னு சொல்லி, IIT பசங்களோட சேர்ந்து சில நாட்கள் போனோம். அந்த ஊருக்கு முக்கிய வருமானம் வர்றதே, மல்லிகை வியாபாரம்தான். ஆனா, சீசன்ல, கையால அத அவசரமா, பறிக்க முடியாம, பல பூக்கள் வாடி கீழ விழுகறதாயும், பல பூக்கள் பறிக்க நேரமில்லாம, வாடி வீணாப் போறதாயும் சொன்னாங்க! IIT படிச்ச பசங்களுக்கு ஒரு சவால்! "மொத்த பூவையும் சுலபமா, சீக்கிரமா, கீழ சிந்தாம, வீணாகாம பறிக்க ஒரு சாதனம், மெஷின கண்டுபிடிச்சு கொடுங்க ராசா"ன்னு ஒரு கிழவி கேட்டுச்சு! யாராச்சும் அப்படி ஒண்ணை யோசிச்சு சொல்லுங்களேன்!!
சொன்னா, பல கிராமங்கள்ல இதயே பொழப்பா வெச்சு நடத்தறவங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரபிரசாதமா இருக்கும்! சரி, இது பறிக்கறதுக்கு மிஷன். ஆனா நான் இந்த பதிவ எழுதுனது, பூக்களப் பறிக்காதீங்கன்னு சொல்ற Mission! ரெண்டும் வேற; வேற!

நேர்முகத் தேர்வு!

பொன்ஸ் இதே தலைப்புல ஒரு கதை எழுதினதால தலைப்பை மட்டும் மாத்தினேன். தமிழ்ல!

எதிர்பார்க்கவில்லை யாரும்! இண்டெர்வியூவுக்கு இத்தனை பேர் சராசரி 100 பேர்! மிகவும் முக்கியமான பதவி! லையாசன் மானேஜர். 

பேப்பர் விளம்பரமே முழுப்பக்கத்துக்கு வந்திருந்தது! பொறியியல் மற்றும் எம்.பி.ஏ தகுதியுள்ள சுறுசுறுப்பான இளைஞர் தேவை! 
குறைந்தது 5 வருட அனுபம் தேவை. 
நேர்முகத்தில் தேர்வானால், பல நாடுகளுக்குப் போய், மிகவும் பரபரப்பாக வியாபாரம் செய்யப்படும் மென்பொருளின் (Software) வெளிநாட்டு டீலர்கள், ஏஜண்டுகள் நிர்ணயித்து, அவர்களது ப்ரச்னைகளை சமாளித்து, நல்ல முறையில் ஏற்றுமதி ஆக்கவேண்டிய பொறுப்பு! 

அதனால் ரிஷப்ஷனில் நிற்க இடமில்லை! 
எதோ Job Fair போல! சீரியசான முகத்திடன், பரபரப்பான முகத்துடன், களையான முகத்துடன், ஆண்களும், மெதுவாக மொபைலில் பேசியபடி பல பெண்கள், இப்படி பல பேர்..

 'ஹை டா, யூ டூ, வேணாண்டா, உனெக்கெல்லாம் I.I.T., I.I.Sc. இதெல்லாம் தெரந்துவெச்சுருக்கான் பாஸ்,எதுக்கு இந்த வேலைக்கெல்லாம் வர?''இல்லடா, அப்பா வேலக்கிப் போ, சிஸ்டர் மேரேஜுக்கு உதவியா இருக்கும்ங்கிறாரு!'
`நா வெணா உதவி பண்றேன்; ஐ வில் மாரி ஹேர் விதவுட் டவுரி!'
`ஹோ' சுற்றிலும் சிரிப்பலை! 
 'மாம்ஸ்!ஐ ஹாவ் எக்ஸ்பீரியன்ஸ், பட் ஸாப்ட்வேர் சேல்ஸ் இல்ல, வேர பேக்கேஜ்; என்ன கேள்வி கேப்பாங்க? 
தெரியல'
'எதுக்குடா புலம்பற? வர்றது வரட்டும்!' - (மச்சான்!?) 
 `யேய், ராஜி, என்னடி, கல்யாணம் செஞ்சுக்கப் போறன்னாங்க! நீ எப்படி இந்த இண்டர்வியூவுக்கு?'
'போடி, நல்லா ஊர் சுத்தலாம்; எவனாவது இளிச்சவாயன் அப்புறமா மாட்டமாட்டானா? அப்ப பார்த்துக்கலாம்' 

இப்படி பல குரல்களை அடக்கியது - ஒருவனின் வருகை! 
 இதுதாண்டா ஹேண்ட்சம்! - எனும்படி, உயரமாக, நல்ல நிறம், தீர்க்கமான பார்வை, உயரிய உடை,பாவனை- இத்யாதிகளுடன்! மெலிதான தங்க பிரேம் அணிந்த கண்ணாடி, கையில் சிறிய லேப்டாப் பை! தலை முதல் கால் வரை பணம் தெரிந்தது. ரிசப்ஷனிஸ்டிடம் அவன் பேசிய நுனிநாக்கு ஆங்கிலம் மற்ற எல்லார் வயிற்றிலும் புளியைக் கறைத்தது! மெதுவாக இருக்கையில் அமர்ந்தான். மற்றவர்கள் அவனையே பார்ப்பதும், தங்களுக்குள் பேசுவதுமாய் இருந்த அவன், அதனை சட்டை செய்வதாகத் தெரியவில்லை!

9.00 மணிக்கு அழைத்தவர்கள் மேற்கொண்டு என்ன செய்வார்கள், யாரை முதலில் அழைக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை!மெதுவாக ஒருவித சலிப்புப் பேச்சும், `சும்மா, ஏமாத்துறாங்கடா' என்ற எதிர்மறை ஏச்சுகளும் வர ஆரம்பித்தன!Mr.Handsome - அவன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் மெல்லிய குரலில் மொபைலில் யாருடனோ ரொம்ப நேரமாக பேசிக்கொண்டிருந்தான்!!

மணி 11.00! மெல்ல ஒருவர் M.D. ரூமிலிருந்து எட்டிப் பார்த்தார். 
கையில் ஒரு குறியேடு. ஒரு சில பேர்களை உரக்கப் படித்தார்; ``எல்லாரும் கான்·fபரன்ஸ் ஹாலில் வெயிட் பண்ணுங்க". (Mr.Handsome மும் அதில் ஒருவன்). மற்றவர்கள் போகலாம்! என்றார்!! 

பல பேருக்கு ஒரே ஷாக்! ஏன், எதற்கு என்றுகூட தெரியாமல் திருப்பி அனுப்பினால்?? 
திடீரென ஒரு குரல். `யோவ் என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு! இருக்குற கம்பெனில லீவ் போட்டு, இங்க வந்து காஞ்சுக் கிடந்தா இப்படி விரட்டியடிக்கிறீங்க?? 
யோவ், யாருய்யா H.R.D மானேஜர்? கூப்பிடுய்யா!! 
ஏ எதுக்கு மாம்ஸ்?? M.D.யக் கூப்பிடுடா..

 `ஆமாம், ஆமாம், வீ வாண்ட் தி M.D. டு ஆன்ஸர் அஸ்!" 

கோஷங்கள் அதிகமாயின! 

 Mr.Handsome முன் வந்தான். "லுக் மை டியர் ஜெண்டில்மென். நானும் உங்களைப் போல் தலைகால் புரியாமல்தான் இருக்கிறேன்; பட், சர்ப்ரைஸ் இஸ் என்னையும் உள்ளே அழைத்துள்ளார்கள்!! உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால், உங்களுக்காக நான் ஒரு கோரிக்கை இந்த கம்பெனி நிர்வாகத்திற்கு வைக்கிறேன்! அதை வெளியில் வந்து 10 நிமிடத்தில் எல்லோருக்கும் சொல்கிறேன். ஆனால் நீங்களெல்லாம் சரி என்றால்; ஓகே?"

 "எஸ், எஸ் கோ அஹெட்'' என்றார்கள் 
எல்லோரும்.மற்றவர்கள் இந்த கூத்தைப் பார்க்காமல் எப்பொழுதோ உள்ளே போய்விட Handsome முடன் மற்றொரு இளைஞனும் நின்று கொண்டிருந்தான். " ஹே, ஐ ஆம் ராகவ் ; வாட் இஸ் யுவர் நேம்? வை ஆர் யூ ஸ்டாண்டிங் ஹியர்?" - இது Handsome.( அப்பாடா ஒரு வழியா பேர் தெரிஞ்சது!!) 

இளைஞன் - " ஐ ஆம் ராகேஷ் ஜெயராம். என் பெயர் உள்ளே அழைக்கப் பட்டுவிட்டது. இருந்தாலும் இவர்களை இப்படியே விட்டுவிட மனதில்லை. அதான்..ஐ வாண்ட் டு ஹெல்ப் யூ டாகிங் fபார் தெம்." 
 "குட். சரி இருவருமாக உள்ளே போய் பேசுவோம்!" ராகவும், ராகேஷ¤ம் உள்ளே போனார்கள். எண்ணி பத்து நிமிடத்தில் ராகேஷ் வெளியில் வந்தான்.

" ஹி, நண்பர்களே, நல்ல செய்தி! 1/2 மணி நேரம் கழித்து எல்லாரையும் உள்ளே அழைக்க M.D. சம்மதித்துள்ளார்! 
யாருக்கு காத்திருப்பதால் பிரச்னை இல்லையோ, அவர்கள் நிற்கலாம். மற்றவர்களை யாரும் இருக்க வேண்டுமென்று நிர்பந்திக்கவில்லை!" 

சுமார் 10 பேர் இருக்க, மற்றவர்கள் அவசரமாக வெளியேறினர். 

1/2 மணி நேரம் கழித்து, முதலில் சென்ற எல்லோரும் வெளியே வந்தனர். வந்ததும் பேசாமல், வாசலை நோக்கிப் போய்விட்டனர்! காத்திருந்தவர்கள் உள்ளே அழைக்கப் பட்டனர். மாநாட்டு மேஜை, அதன் மேல் ப்ரொஜக்டர், கம்ப்யூட்டர் பொருத்தப்பட்ட நவீனங்கள். அவரவர் நாற்காலிகளில் அமர்த்தப் பட்டனர். 2 நிமிடத்திற்குக் கூட எல்லாருக்கும் பொறுமையில்லை! மெதுவாக முணுமுணுக்கத்தொடங்கினர்! 

சட்டென எல்லாரையும் வாயடைக்கச் செய்த அந்த மைக் ஓசை மட்டும் ஒலித்தது." நண்பர்களே, வணக்கம். நான் இந்த கம்பெனியின் M.D. பேசுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கும், நேரில் வந்தமைக்கும் நன்றி. எல்லா மென்பொருள் நிறுவனமும் வழக்கமாக பரிட்சை, பின்னர் நேர்முகம் எனத்தேர்வு செய்யும். நானும் அடைத்தான் இதுவரை செய்தேன்!

உங்களுக்கு நான் சொல்வது ஆச்சிரியமாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும். ஆனால், வரும் கூட்டத்தை எதிர்பார்த்ததனால் தான், நான் இப்படி ஒரு தேர்வு செய்தேன்!" தேர்வா? எங்க வெச்சீங்க?" என்றது ஒரு தைரியக் குரல்! 

"யெஸ். நீங்கள் கம்பெனிக்குள் கால் வைத்த நிமிடமே, தேர்வு ஆரம்பமாகிவிட்டது! எனது, செக்யூரிடியிலிருந்து, ரிசப்ஷனிஸ்ட், பியூன் ஆகியோரே தேர்வாளர்கள்! எப்படி, ஒருவர் உள்ளே வருகிறார், வரும் சற்று முன் தான் தலை சரிசெய்துகொள்கிறாரா, இல்லை இயற்கையாகவே, சுத்தமானவரா, காலணிகள் எவை? ஷ¥ அணிந்துள்ளாரா? 
விளையாட்டு ஷ¥வா, இல்லை சரியாக பாலிஷ் செய்த ஆபிஸ் ஷ¥வா? காஷ¤வல் வேரா, இல்லை ஆபிஸ¤க்கு வரும் உத்தேசத்தில் நல்ல சுத்தமான உடை அணிந்துள்ளாரா? வந்ததும், என்ன செய்கிறார்? அரட்டையா, இல்லை ரிஷப்ஷன் மேசைமேலுள்ள இந்தக் கம்பெனி பற்றிய பல நாளேட்டுச் செய்திகள், கம்பெனி ப்ராஸ்பெக்டஸ், முதலியவற்றை படிக்கிறாரா?

வரவேற்பறையின் மூலையில் நாங்கள் வேண்டுமென்றே, `இலவச போன்' எனக் குறிப்பிட்டு ஒரு போன் நிறுவியிருந்தோம்! அதை எத்தனை பேர் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், என்றெல்லாம் கண்காணித்து, காவலாளி முதல் பியூன் வரை, மதிப்பெண் இட்டு, எனக்கு தகவல் அனுப்பிக்கொண்டிருந்தார்கள்!! 

செக்யூரிட்டி கணேசன், பியூன் ராமு, ரிசப்ஷனிஸ்ட் ஆகியோருக்கோ, இதனால் ஒரு பெரிய பொறுப்பை தலையில் சுமக்கும் பெருமிதம்! எனவே, ஆட்களின் நடையுடை பாவனைகள், மற்றும் போன் செய்பவர்கள், சவடால் அடிப்பவர்கள், ஏன், பெண்களை கேலி பேசுபவர்கள் என்று சகல செய்திகளையும் திரம்பட சேகரித்து, எனக்கு மிக்க உருதுணையாக இருந்தார்கள். என் வேலையை சுலபமாகினார்கள். ய ஸ்பெஷல் தேங்க்ஸ் டு தெம்!" "தென் கேம் தெ க்ளைமாக்ஸ்! அப்படியும் 20 பேர் முதல்நிலை தேர்வில் தேறினார்கள். அவர்களுக்குத்தான், உள்ளே அழைக்கப்பட்டு நேர்முகக்காணல் நடைபெற்றது. 

ஆனால், அந்த நிலைக்கும் போவதற்கு முன்னாலேயே, என் கவனத்தைக் கவர்ந்தவர், திரு. ராகேஷ் ஜெயராம்! யெஸ், உங்களுக்காக வாதாட முன் வந்தவர்! தன் பெயர் வாசிக்கப் பட்டதும், எங்கே, மீண்டும் பெயர் வாசிக்கப் படாமல் போய்விடுமோ என்பதுபோல, மற்றவர்கள் உள்ளே அவசர அவசரமாக முண்டியடிக்க, இவர் மட்டும், ஒதுங்கி நின்றது ஏன் என் யோசித்தேன்! ஒருவேளை கூட்ட நெரிசலுக்கு பயந்தாரோ என்று கூட நினைத்தேன்! பட், ஹீ வாஸ் டிfபரன்ட்! மற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்கவேண்டுமென்று உள்ளேவந்து வாதிட்டார்! நான் கூட, " மிகவும் அதிகம் பேசினால், உன் தேர்வு கூட பின்னுக்குத் தள்ளப்படும்" என்று பயமுறுத்தினேன்! அசரவில்லை அவர்! பணிவாக, அதேசமயம் ஆணித்தரமாக, " உங்கள் பரிட்சை முறை புதுமையானதுதான், ஒத்துக்கொள்கிறேன்! ஆனால், பலருக்கு இதன் நிஜம் தெரியாது! ஏதோ, தில்லுமுல்லு என்றும், மேலிடத்து சிபாரிசு! என்றெல்லாம், தவறாக நம்மைபற்றி பேசுவார்கள்! எனவே, உள்ளே அழைத்து தன்னிலை விளக்கம் தர வேண்டியது நம் கடமை" என்று பேசினார்! 

நானும் விடாமல், " என்ன இது, நம் கம்பெனி என்று பேசுகிறாயே? இப்பொழுதுதான் தேர்வு செய்வதையே சொன்னேன், அதற்குள் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாயே?" என்றேன்!அதற்கு, ராகேஷ், " சார், மன்னிக்கவும். எந்த நிமிடம் நாம் இந்த கம்பெனியின் ஒரு அங்கம் ஆகிறோமோ, எப்பொழுதும், கம்பெனியின் நல்லது கெட்டது, அதன் நற்பெயர் போன்றவற்றுக்கு நாமுமொரு கருவி ஆகிறோம். மனதில் தோன்றியதை, நல்லவையாக இருப்பின், உடனே சொல்வதுதான், கம்பெனிக்கு நல்லது!" என்றாரே பார்க்கலாம்! 

நாங்கள் தேர்வு செய்ய இருப்பவர், தினம் பிரச்னைகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்! பல நாடு, பல மனிதர்கள்! எல்லாரையும் அனுசரித்து போகவேண்டும், அதே சமயம் கோபம் வரக்கூடாது! தெளிய சிந்தனை இருக்க வேண்டும். அதற்கு என் பரிட்சையில் ராகேஷ் தேறினார்! ஐ லைக்ட் ஹிஸ் ஸ்பிரிட்! ஸோ, தட்ஸ் இட்! இந்த தேர்வில் யாருக்கும் ஏமாற்றமிருந்தால், என்னை மன்னியுங்கள்! சரியான கோணத்தில் சிந்திப்பவர்க்கு, இந்த அனுபவம் ஒரு நல்ல தூண்டுகோலாகவும்,படிப்பினையாகவும் இருக்கும் என நம்புகிறேன்! குட் லக்!" நிசப்தம்! 

திடீரென ஒரு குரல்! "ராகேஷ் சரி! அந்த ராகவ்? அந்தாளும் தானே எங்களுக்காக பேசினான்?" 
"அவருக்கு இங்கு முன்னரே, வேலை தரப்பட்டுவிட்டது! யெஸ், ஐ ஆம் ராகவ், the M.D, myself!" திரைக்குப்பின்னால் இருந்து வெளியே வந்தார், ராகவ் பரத்வாஜ்,M.Tech. M.B.A(Harvard) - 28 வயது இளைஞர்!

03 April 2006

பாதரசக் கண்ணாடி- அ·றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-6

என் பின்னே பாதரச அரிதாரம்
நீ உன்னைப் பார்க்கவே
எனக்குப் பூசியது போகாது
நீ தினம் முகம் மாற்றுகிறாய்
காலை பல் தேய்க்கும்
கோணங்கிச் சேட்டைகள்
பின்னர் முடி மழித்து
அழகணிய ரத்த தானங்கள்
அவசர தலைசீவல்,
சீவி, பின் கலைத்திடுதல்!
கோபம் படர்கையில்
விசிறியடிக்கும் நீர்
மேலடித்ததும், வழிந்துவிடும்.
கோபமில்லை!!
உள்ளே உள்ள கருப்புக்கள்,
முகமறியாஅடித்து மறைக்கும்
வெண்பூச்சு!
தலை நரைத்தும், நிறையாத மதி
மறைக்க தடவப்படும் சாயம்
நாள் முழுதும் சிரிப்பு பூசி
இருளில் கரைந்து,
என் முன் கலையும்
கண்ணீர் பூச்சுகள்
ஒளிவட்டம் முன் அரிதாரம்
அவிழ்த்து அமர்கையில்
என்முன்ஆழமாய் உள்காணும்
உன்முகம்
முகம்கழுவ எடுத்து ஒட்டும்
வட்டப் பொட்டு.
உள்ளுக்குள் பொங்கிடும்
கள்ளமயக்கம் வெளிக்காட்டும்
உற்று நோக்கல்
இத்தனையும் கண்டும், காணாச்
சித்தர்போல், சித்தம் சிதறா, ஒரு
புத்தர் போல் நானிருக்க,
என்முகத்தைப் பார்க்கத்
தேடுகிறேன்ஒரு முகம்-
கண்ணாடிபோல்நிச்சலனமாய்!
எங்கேனும்-பார்த்தால்
சொல்லுங்கள்!!

விடாது சிகப்பு !!

3/4/2006;- காலைலேர்ந்து மீண்டும், மீண்டும் பதிந்தாலும், கீழ்கண்ட செய்தியே, வந்து கொண்டிருக்கிறது! அதுவும் பம்பரம் பற்றிய கவிதை. ஒரேடியா சுத்திட்டேன் போலிருக்கு! வலைல பதிய மாட்டேங்குது. "விடாது கருப்பு" ன்னு ஒருத்தர் இணையம் வெச்சுருக்காரு. அத மாதிரி, விடாது சிகப்புன்னு இதுக்கு பேரு வெச்சுடலாம்! சிகப்பு கலர்ல இந்த செய்தி வந்துகிட்டேயிருக்கு. பார்ப்போம். "இவன்லாம் நட்சத்திரமாயிட்டான்யா" ன்னு ப்ளாகர் காரங்களே, 'கைய' வெச்சுட்டாங்களோ? இதோ விடாது சிகப்பு இப்படித்தான் வருது:-

Your post was not saved due to a database error. An engineer has been notified. Please copy your post to your computer and try again later. You can check Blogger Status for information about known problems with Blogger.
இப்ப 3/5/2006 இந்திய நேரம் ராத்திரி 11:00 மணி. பார்க்கலாம்; ப்ளாக்கரா, நானான்னு! சிவராத்திரியா, சிவனேன்னு கடக்குற ராத்திரியான்னு!

பம்பரம் - அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்-3



பம்பரம் வலைல சரியா சுத்தமாட்டேங்குது! இதுவும் காணாமல் போயி, பின்னுட்டங்களும் வருகின்றன. ப்ளாகரில்தான் இதைக் காணோம்! மறுபடியும், மறுபடியும் பதிகிறேன்! பார்க்கலாம், எனக்கு, ப்ளாக்கருக்கும் ஒத்திக்கு, ஒத்தி!

கட்டை கடைந்து கடைந்து
பொட்டில் ஆணி அரைந்து
கயிற்றில் சுடக்கி சுழற்றி
ஆடும் பம்பரமே!

சுற்றும் வரை சுற்று.
சுழல் எழல் கழலுமுன்.
கோடுகள், புள்ளிகள், உடலின் நிறங்கள்
யாவும் மறைந்துவிடும்!

ஆடிடும் வேளையில் சுற்றும் முற்றும்
யாவும் மறந்துவிடும்!
உருவும் போயி மருவும் போயி
அருவம் ஆகிவிடும்!

சுழலும் நேரம் உன்னால் எதையும்
அளவாய் பார்க்க முடியாது
சுற்றம் சூழல் சுற்றி நின்றாலும்
சூழ்நிலை உனக்கு பழகாது!

ஆடிடும் ஆட்டம் ஈர்ப்பிலிணங்கி
அடங்கிடும் வரையில் சுற்றிவிடு
சுற்று(ம்)முன் பார்வை நிலைத்திட
கூர்வை,சீர்-வை,நேர்-வை!


3/4/2006 காலைல பதிச்சு, காணாமல் போன பம்பரம் :-

http://maraboorjc.blogspot.com/2006/04/3.html

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 2 -விளக்கு!


பஞ்சலோகம் அஞ்சு விரல் ஒன்று சேர்ந்து
சுட்டெரியும் எறிதணலில் கலவையாகி
கொட்டிவைத்த சுட்டுவைத்த மண்ணுக்குள்ளே
ஆவிபிரிந்தோடும் உடல் பிண்டமாகி
பட்டறையில் தட்டி தட்டிப் பொன்னுமாகி
மின்னுகிற விளக்கெனவே பிறவி பெற்றேன்
அழகாக அம்மணியர் வாங்கிப்போக
பூஜையறை மேடையிலே பதவி ஏற்றேன்
விட்டதடா பட்டபாடு - மூச்சுவிடுமுன்
பட்டுதிரி பொட்டுவைத்து எண்ணெய் குளித்தே
சுட்டெரியும் சுடர் கொண்டு தீபமேற்றி
படர்வெளிச்சம் பாரெங்கும் வீசக் கற்றேன்!
நித்தம் நித்தம் எண்ணெய்குடித்தாவி நீக்கி
நெருப்பு உண்டு நிர்மலனாய் இருளைப்போக்கி
வந்து வீழும் விட்டில்கள் விரகம் போக்கி
வெந்து கரம் வேகிடினும் வேள்வியாக்கி
விடியல் நம்பி நம்பிக்கையாம் ஜோதியேற்றி
சொல்லும் பாடம் அறியலையோ சின்னத்தம்பி!
இல்லாத ஒன்றையெண்ணிக் கனவில்வாழும்
இயலாமை மண்ணிறுக்கம் களைந்து நீயும்
ஐம்பொன்னாம் ஐம்புலன்கள் ஒன்று சேர்த்து
நம்பிக்கைக் கண்ணொளிற வெளிச்சம் காட்டி
விளக்கு எந்தன் வழிபழகப் பந்தம் காட்டி
வருமுலகு அறிந்திடும்நல் பாதை விளக்கு!

ப்ளாகர் வரிசையில் காணப்பட்டாலும், "முன்னெழுதியவை" யில் காணவில்லை. எனவே, மீண்டும் பதிகிறேன்.

முதலிலேயே நன்றி நவிலல்!

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள்! சரிதான்!அதாவது என் கணக்குப்படி, நான் ஐந்தாவது பிள்ளை. எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்ந்ததில்லை! எதற்கும் சாதாரணமாக வளைந்து கொடுக்க மாட்டேன்! அதனால், பதில், அதனோடு அடி இரண்டும் கலந்து கட்டி கிடைத்திருக்கின்றன! இன்னும், என்னுள் கேட்டு, உலகத்தைக் கேட்டு, பதிவுகளில் கேட்டு, என் தேடுதல் இன்றும் தொடர்கிறது. அதன் விழைவே, நான் எழுத முயல்வது.
எனக்குத் தமிழ் ஆர்வம் வரக் காரணம்?

மார்கழி மாதம், வீட்டிலும், கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்போனதாலா? இல்லை திருக்குறளை அழகாகப் பிரித்துக் கூறி தமிழைப் புரிய வைத்த கமலா டீச்சர் காரணமா?ஐந்தாம் வகுப்பு படிக்கையில் குழந்தைப் புத்தகம் கோகுலத்தில் வந்த ஒரு பாட்டைக் கண்டு லயித்து, அதை நான் எழுதியதாகச் சொல்லி பின்னர் குட்டு வெளிப்பட்டு எல்லாரும் சிரித்ததாலா?

வானொலியில் கம்பர் விழா கேட்கமட்டும் லீவு போட அனுமதித்த அம்மாவினாலா? இல்லை கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல், தாத்தாவின் தம்பி, கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் பாடல்களைக் கேட்டு, கேட்டுத் தெளிந்ததாலா? தெரியாது! ஆனால், கவிதை போட்டியாகட்டும், கல்லூரி நாட்களில் கட்டுரை ஆகட்டும், என்னை கொஞ்சம் தன்னம்பிக்கைக்குர்¢யவன் ஆக்கியது, தமிழ்!

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் ஆனந்த விகடன், ஜுனியர் விகடனுக்கான மதுரை மாவட்டத்து நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மூவருள் ஒருவனாக்கியதும், அதில் சிறப்பு நிருபர் விருது வாங்கச் செய்ததும், என்னுள் ஒளிந்திருந்த தமிழே! மற்ற இருவர், கல்பனா, மற்றும் இன்று சமீபத்தில் வெளிவரவிருக்கிற "திருட்டுப்பயலே" (திட்டலைங்க, அது திரைப்படத்து பேருங்க!) வின் இயக்குனர், சுகி.கணேசனான அன்றைய சு.கணேசன்!

வேலை நிமித்தம் 15 ஆண்டுகள் வடமாநிலங்களில் இருந்த என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தது, அவ்வப்போது கேட்ட அரட்டை அரங்கமும், தமிழ் சங்கத்தில் நடக்கும் விழாக்களுமே!

மீண்டும், தமிழகத்தில் வந்து வேலை செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!! அதுவும் அதோடு, மீண்டும் என்னுள் வசந்தம் வரும், தமிழில் தினமும் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!

நீண்ட நாட்களாக மனதில் ஓடிய கருவே, முதன் முதலில் நான் பதிவு செய்த அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! சக மனிதன் சொல்லி கேட்காததையா, பொருட்கள் சொல்லிக் கேட்கப்போகிறான் மனிதன்? இருந்தாலும், வாய் பேசா ஜடப்பொருட்களே நமக்கு பல வாழ்வியல் பாடத்தை சொல்கிறது என்றால், வாயுள்ள நாம் எத்தனை தேர்ச்சி பெறவேண்டும்? மனதில் தோன்றிய சில கவிதைகளை என் வீட்டிலேயே உள்ள கவிஞர் குழாம் (ஆமாம்; நிஜம்! என் தாய் மாமன் வெங்கடரெங்கன், எனது பெரிய மாமா பெண் பேராசிரியையும் பிரபல நவீன கவிதாயினியான் ரெங்கநாயகி, மற்றும் எனது சகோதரிகள், தாயார் போன்றோர்) முன் வைத்தேன். முதன் முதலில் அவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று அதிக ஓட்டு பெற்ற அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடல் - விளக்கு!!

http://maraboorjc.blogspot.com/2006/04/2.html

ஒரு வேளை ஒண்ணும் விளங்கவில்லையென்று, "விளக்கு" என்று சொல்லிவிட்டார்களோ?!நான் என் கவிதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்துவிட்டேனோ?) கவிதையை மூடிவைக்கப் போனேன்! ரெங்கநாயகிதான் என்னை அழைத்து, "டேய், நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது?" என்றார். தமிழிலா? அவரே எனக்கு "பதிவுகள்" இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் எனது கவிதைகளைப் போடச்சொன்னார். அவர்களுக்கு நன்றி.

எல்லாரும் முடிவில் நன்றி நவில்வார்கள். எழுந்து சென்றுவிடும் கூட்டத்துக்கு சொல்வதை விட, நட்சத்திர பேச்சாளர் பேச்சை கேட்க ஆவலாய் இருக்கும் கூட்டத்துக்கு தமிழ்மண அன்பர்களை ஒப்பிட்டு, எனது நன்றிகளை முதல் நட்சத்திரப் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன்.
திரு.மாலனுக்கு அவர் மதுரை திருநகரில், தனது தமக்கையாரின் வீட்டுக்கு வருவதைப் பற்றியும், அப்போது அவர் பேசும் செய்திகளை நான் கேட்டதாகவும் குறிப்பிட்டு, எப்படி இணையத்தில் எழுதவேண்டும் எனக் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்; அத்தனை வேலைகளுக்கும் நடுவே, தனது ஆரம்ப வாழ்க்கை நிகழ்வுகளை நான் எழுதியது கண்டு மகிழ்வதாகவும், கவிதைகள் நன்கு உள்ளதாகவும், அவரும், திண்ணை, பதிவுகள், போன்றவற்றில் எழுதலாம் என்றும் குறிப்பிட்டு எழுதினார். அதோடு, யுனிகோடில் தமிழ் பதித்தால், மேலும் பல இணையங்களில் எழுதலாம் என்று சொன்னார். யுனிகோடைப் பற்றி விளக்கம் கேட்டு, மறுபடியும் அவருக்கு எழுதினேன். அவர் மீண்டும் பொறுமையாக, தமிழ்மணத்தை பற்றி குறிப்பிட்டு, அதில், எப்படி யுனிக்கோடில் பதிவது என எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

முதலில் திருப்பதியில் மொட்டை தேடுவது போல் நுழைந்த நான், காசி ஆறுமுகம் அவர்களின் "உன்கோடு, தனிக்கோடு"- கண்டு தேன் குடித்த வண்டானேன்! எனக்கு தெரிந்த அத்தனை தமிழ் ஆர்வலர்களுக்கும் அந்த urlஐ அனுப்பி, படிக்கச் செய்தேன்! அந்த கடினமான விஷயத்தை, தேனில் தடவிக் கொடுக்கும் மருந்தைப் போல் அழகாக ஊட்டியிருந்தார் அவர். நேரில் பார்க்காமலே, அவரது அபரித ரசிகனானேன். என்னடா இவன் அடிக்கடி தேன் பற்றி சொல்கிறானே, என்று என்னை நரி ஆக்கிவிடாதீர்கள்!

பின்னர் மாலை நேரங்களில் சுரதா, முரசு அஞ்சல் போன்றவற்றின் உதவியோடு, தமிழ் எழுதிப்பழகி, மெல்ல மெல்ல தமிழ் மணத்துள் எட்டிப்பார்த்தேன்.

முதலில் பதித்த அத்தனையும் அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! ஆனால், அவற்றுக்கு மிக சில பின்னூட்டங்களே வந்தன. ஆனால், பின்னூட்டங்களை எப்படி பதிவுகளில் காணச்செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், காசி அவர்களுக்கு அஞ்சல் எழுதி, எப்படி, மட்டுறுத்தல் செய்வது என்று தெரிந்து கொண்டேன். காசி அவர்களுக்கு "கண்ணாயிரம்" (கைதி இல்லப்பா) எனச் செல்லப் பெயர் வைக்கலாம்! எப்படித்தான் அத்தனை பேருக்கும் கடிதம் வந்த வேகத்திலேயே, அவரால் சரியான பதிலை, உடனுக்குடன் அனுப்பி வைக்க முடிகிறதோ? அந்த அந்நியோன்னியம் நிறைந்த தகவல் செறிவுள்ள கடிதங்கள் எழுதி என்னைச் செம்மை படுத்திய காசி அவர்களுக்கு நன்றி.

பல அன்பர்கள் கூறுவது போல், எப்படி அதிகமான பின்னூட்டங்களைப் பெறுவது என மனம் தவித்தது உண்மை. ஆனால், சிலரது செய்திகள் படித்தபின், அந்த செய்திகள் மறுநாளே பழைய விஷயமாகிவிடுவதும், மீண்டும் படிக்கத் தூண்டுமா, அல்லது, மறக்கப்படுமா என்று ஒரு கேள்வி என்னும் எழுந்தது. SLANDEROUS, SCANDALOUS, SLEAZE என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப் பட்டதை எழுதக் கூடாது என்று உறுதி கொண்டேன். என்று படித்தாலும், யாருக்கேனும், ஒரு புதிய தகவலோ, ஒரு நெறியோ, ஒரு நல்ல விஷயமோ தருவதாக இருந்தால்தான், அச்செய்தி காலத்தால் அழியாததாகும்; அப்படிபட்ட விஷயங்களையே எழுதவேண்டும் என்று என்னுள் ஒரு கோட்பாடு வைத்துக்கொண்டேன். பின்னூட்டங்களை விட, என் மனம் எதைப்பற்றி என்னை எழுதவைக்கிறதோ, அதையே நான் எழுத விழைகிறேன்.
மற்றவர் பதிவுகளை முடிந்த மட்டும் படிப்பேன். ஒரு முறை சாதி குறித்து, தவறான செய்தி கண்டு, என்னுள் இருந்த பத்திரிகையாளன் விழித்துக்கொண்டான்!! அந்த பதிவை இட்டவர், தனது பெயரிலேயே சாதியை உடன் ஒட்டிவைத்துள்ளார்!! உடனே, தவறுகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு பதிவு இட்டேன். அதற்கு, ஏராளமான பின்னூட்டங்கள்!! எது நாட்டுக்குத் தேவை இல்லையோ, எதை நாம் மறக்க முயல்கிறோமோ, அது மீண்டும், மீண்டும் பேசப்படுவதைக் கண்டு நான் மிகவும் கவலை கொண்டு, சாதி(தீ) என ஒரு பதிவு பதித்தேன், நான் என்ன சாதி என்று பரிகசித்து ஒரு கவிதையும் பதித்தேன்.

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.html

http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.html

ஆரம்பித்துள்ளேன். பிற இணைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றி.

தமிழ்மணத்தால், எனக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் ஆயினர். ஒருவரை குறிப்பிட்டு, சிலரை மறந்திடலாகாது. எல்லாரது, பாராட்டுக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி.

கடைசியாக, எனது நன்றி, மதி அவர்களுக்கு. எல்லாரையும் 'மதி'க்கத் தெரிந்த நிறை'மதி' போன்ற 'மதி' கொண்டவர்! ஒரு மாதம் முன், அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைக் கண்டு, எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி,சந்தேகம்! நமது பதிவுகளையும் ஆசிரியக் குழு பார்க்கிறார்களா? என்று! நட்சத்திர வாரம், ஏப்ரல் முதல் தேதிக்குப்பின் வருவதால், தருமி போல் (பதிவர் தருமி இல்லை, திருவிளையாடல் தருமி!!) ஏகத்துக்கும் கேள்விகேட்டு, அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். பதில் :- "நீங்கள்தான்"- அவ்வளவே!!

எனது நன்றியுரை மிகவும் நீண்டுவிட்டது என்ன செய்ய? மதி அவர்கள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத நானும் இனி முயல்கிறேன். வரும் வார பதிவுகளை படித்து நிறை, குறை இருந்தால், சுட்டிக்காட்டி, என்னை இன்னும் மெருகேறச் செய்ய உதவப் போகும் ஆயிரமாயிரம் தமிழ்மண அன்பர்களுக்கு பணிவான நன்றி.